January 25, 2012

தில்லிக்கு ராஜான்னாலும்

கடந்த வாரம் அம்மாவோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது மிகவும் சந்தோஷமாக இருந்தார்.

'உன் ப்ளாகெல்லாம் படிச்சேண்டா. உம் பையன் வடிவேலுப் பத்தி சொல்றது, ஸ்கூல் பசங்களப் பத்தி பேசறது எல்லாம் ஒரே சிரிப்புதான். என்னா பண்றான் இப்ப?'

ஜூனியர் எப்போதும் அவரை யாரேனும் வலியக் கூப்பிட்டால் முறுக்கிக் கொண்டு போய்விடுவார். அவரைக் கண்டு கொள்ளாத 'பெரியண்ணன்களின்' பின்னாலேயே போவார். அது தெரிந்த கதை என்பதால் மெதுவாக அம்மாவிடம் பேச்சைத் திருப்பி...

'நான் எழுதின கதை ஒண்ணு.... நாஞ்சில்...'

சொல்லி முடிக்கு முன்னர், இன்னும் உற்சாகமான குரலில்...

'ஆமாமாம்... பாத்தேன் பாத்தேன். ஏதோ அன்புடன்னு பத்திரிகைக்காக சிறுகதை போட்டி நடத்தினீங்கப் போல. ப்ரியா கூட சொன்னா. புக்கெல்லாம் வருதாமா...'

இப்படி ஒரே அடியில் மட்டையாக்கிவிட்டாரே என்று பொறுமையாக சவால் சிறுகதைப் போட்டி, வம்சி, பண்புடன் எல்லாம் தனித்தனி நிகழ்வுகள் என்று விளக்க முற்பட்டேன்.

'அதான்... தெரியுமே. எல்லாம் படிச்சேண்டா. கமல்ஹாசன் பேட்டி பாக்கற மாதிரி ருப்பி ருப்பி என்னமோ எழுதியிருந்த. நல்லாத்தான்டா இருந்தது'.

என்னை ஓட்டுகிறாரா, பாராட்டுகிறாரா என்ற சந்தேகம் போயே போய்விட்டது.

'எல்லாம் விட, அந்த கமெண்ட்ல யாரு... இலவசகொத்தனாரா... Refrigeratorக்கு வொய்ஃப்கிட்ட ஸ்பெல்லிங் கேளுங்கன்னு கமெண்ட் போட்டிருந்தாரே... விழுந்து விழுந்து சிரிச்சோம் எல்லாரும். நல்லா எழுதியிருக்கடா'

ம்ஹ்ம்ம்ம்... மாங்கு மாங்குன்னு எழுதறது நாம. ஒரே வரியில கலாய்ச்சிட்டு கப்பு வாங்கிட்டு போயிடறாங்கப்பா.

அம்மா நிறுத்தாமல் யூ டர்ன் போட்டு ஜூனியருக்கு மீண்டும் வந்தார்.

'ஸ்கூல் ஃபோட்டோல்லாம் பாத்தோம். கிறிஸ்துமஸ்க்கு ஜோசப் ரோல், பொங்கலுக்கு பாரதியார் ரோல்னு பிச்சு வாங்கறான்டா உம் பையன்'

ஜூனியர் படிப்பது கத்தோலிக்க சர்ச் பள்ளி. சென்ற வருடம் டிசம்பர் சமயத்தில் திடீரென வந்து 'அப்பா, ஜீசஸ் பொறந்தது ஒரு பார்ன் (barn) தெரியுமா? அன்னிக்கு எங்கயும் ரூமே கிடைக்கலயாம்' என்று கதை சொல்லிக் கொண்டிருந்தார். என்னடா விஷயம் என்றால் கிறிஸ்துமஸ் டிராமாவில் ஜோசப்பாக இவரைப் போட்டிருந்தார்கள். எல்லா பெரியண்ணன்களுக்கும் நடுவில் இவர்தான், பொடிசான மேரிக்கு பொருத்தமான பொடிசாக இருந்தார் என செலக்ட் செய்துவிட்டார்கள் போல.

'ஏம்மா... நான் கூட சாண்ட்லர் ஸ்கூல்ல படிக்கும்போது ஜோசப் மாதிரி வேஷம் போட்டேனே... நினைவிருக்கா'

'அதானே... ஒரு கறுப்புப் போர்வையை சுத்திவிட்டு, சகிக்க முடியாத தாடியெல்லாம் ஒட்டி நிக்க வச்சிருந்தாங்களே. அந்த போட்டோக் கூட எங்கியோ வச்சிருந்தேண்டா. '

அந்த போட்டோவெல்லாம் என் அக்காவின் பெண்களான அனுகூல சத்ருக்களிடம் கிடைக்காமலே போக வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். பட்டினத்தார் போல 'ஓட்டப்பம் ஃபேஸ்புக்கை சுடட்டும்' என்று போட்டுத் தள்ளிவிடுவார்கள்.

அம்மா அடுத்து பொங்கல் விழா வீடியோவிற்கு தாவினார்.

'வரிசையா எல்லா குட்டீஸ்ஸும் வந்து நடிச்சிட்டு போனது கொள்ள அழகுடா. ஏண்டா... ஃபேண்ஸி ட்ரெஸ்னா ஒரு ப்ரைஸ் கிரைஸ் கொடுக்க மாட்டாங்களா? அந்த காந்தி வேஷம் போட்ட குட்டிக்கு முதல் பிரைஸ் கொடுக்கலாம். உம்பையனும் நல்லா முழிச்சு முழிச்சு பாத்தான் பாரதியார் மாதிரி'

இளையராஜாவின் இசையில் ஜேசுதாஸின் 'அக்கினி குஞ்சொன்று கண்டேன்' பாடலுக்கு, பாரதியார் வேடத்தில் நடித்திருந்தார் ஜூனியர். அவர் சக தோழர்கள் எல்லாம் ஷாருக்கான், சல்மான் கான் என்று டான்ஸ் ஆட இவரை 'பாரதியார் மாதிரி செய்யறயா' என்றுக் கேட்டபோது மிகவும் யோசித்தார். நல்ல முறுக்கு மீசை வரைஞ்சி விடறேண்டா என்று சொன்னதும் ஒத்துக் கொண்டுவிட்டார். விழாவிற்கு ஒரு வாரம் முன்னாலிலிருந்து மீசையை முறுக்கிக் கொண்டே அலைந்தார்.

இதுவரை நடந்த உரையாடலில் அம்மாவின் மூடு புரிந்துவிட்டதால் நான் என்னுடைய பள்ளிகாலத்து போட்டிகள், பரிசுகள் என்று ஆப்பு வாங்கிக் கொள்ளாமல் ஜாக்கிரதையாக...

'நேத்துதான் அவன் ஸ்கூல்ல 100வது நாள்னு கொண்டாடினாங்க. அதுக்கு எல்லாரும் 100 வர்ற மாதிரி எதுனா செஞ்சிட்டுப் போகனும்னு ப்ராஜெக்ட். இவனுக்குக் கூட.....'

இப்பொழுது ஜூனியர் உற்சாகமாகி ஃபோனில் எண்ட்ரி கொடுத்து பாட்டியிடம் தன் ப்ராஜெக்ட்டை விளக்க ஆரம்பித்து விட்டார்.

சினிமாவிற்கு 100வது நாள் போஸ்டர் ஒட்டுவது போல் இவர் பள்ளியிலும் ஒரு முக்கிய நிகழ்வாக 'இந்த ஆண்டின் 100வது நாள்' என்று பில்ட்-அப் எல்லாம் கொடுத்திருந்தார்கள். இதற்கு என்ன பிராஜெக்ட் செய்வது என்று மனைவி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தார். வழக்கம் போல் நான் இம்மாதிரி சில்லறை விஷயங்களில் தலையிடாமல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், ட்விட்டரில் எம்டிஎம் X மாமல்லன் குஸ்தி போன்ற அதிமுக்கிய விஷயங்களில் கவனத்தைக் குவித்திருந்தேன். எவ்வளவுதான் சீன் போட்டாலும், எந்தப் பருப்பை எப்படி மசிப்பது என்ற வித்தை தெரிந்தவரிடமிருந்து தப்பிக்க முடியுமா?

'நூறு Opposites தொகுத்து...' என்று பிராஜெக்ட்டை தொடங்கினார்.

'இதோ தொகுத்தாச்சு'

'அதை அப்படியே பெரிய பெரிய ஃபாண்ட்ல ப்ரிண்ட் அவுட் எடுத்து'

'....தாச்சு'

'தனித்தனியா வெட்டி....'

'... யாச்சு'

'ஒரு சார்ட் பேப்பர்ல வரிசையா ஒட்டி...'

'...யாச்சு'

'மேலே... கலர் ஸ்கெட்ச்ல பேரெழுதி...'\

'..யாச்சு'

'இப்ப சொல்லுடா. ஸ்கூல்ல டீச்சர் கேட்டா இந்த ப்ராஜெக்ட் பத்தி என்ன சொல்லுவே?'

ஜூனியர் தேர்ந்த டேமேஜர் போல, 'I did this project with the help of my Mom and Dad' என்று சொன்னார். பள்ளி ஆசிரியைகள் மிகவும் பாராட்டி, அந்த சார்ட் பேப்பர்களை சுவரில் ஒட்டி வைத்துக் கொண்டார்களாம். ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் பெற்றோனாக அம்மாவிடம் பெருமையடித்துக் கொண்டேன்.

'உம் பொண்டாட்டி ஐடியாவா இது... சூப்பரா இருக்கேடா. அந்த ஸ்கெட்ச் பேனால கோனாமானான்னு எழுதினது நீயாக்கும்? அதையும் ப்ரிண்ட் எடுத்து ஒட்ட வேண்டிதானே?'

இப்படி எந்தப் பக்கம் திரும்பினாலும் கேட் போட்டா ஒரு கைப்புள்ள என்னதான் செய்யறது?

January 13, 2012

எந்தரோ மஹானுபாவுலு

2012-ம் வருடம் புத்தாண்டு பிறந்த சமயம் ‘வம்சி சிறுகதை’ போட்டியில் என்னுடைய ‘அசரீரி’ கதை தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தி வந்தது. நாஞ்சில் நாடன், பிரபஞ்சன் மற்றும் தமிழ்நதி நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசு வென்ற நண்பர்கள் எம். ரிஷான் ஷெரீஃப், ரா.கிரிதரன் அப்பாதுரை, மற்றும் தொகுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிற அற்புதமான படைப்பாளிகளுக்கும் வாழ்த்துகள். சமூக ஆர்வலர், நண்பர் மாதவராஜ் அவர்களும் ‘வம்சி’ பதிப்பகத்தாரும் இணைந்து நடத்திய இந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள், புத்தகமாக இவ்வருட புத்தக கண்காட்சிக்கே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுப்பு பெருமளவில் வெற்றி பெற வம்சி பதிப்பகத்தாருக்கு வாழ்த்துகள். நடுவர் பெருந்தகைகளுக்கும், அமைப்பாளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பண்புடன் இணைய இதழுக்கு புத்தாண்டு சிறப்பிதழுக்கு பொறுப்பேற்றுக் கொண்டது மற்றுமொரு நிறைவான அனுபவம். இவ்வருடம் முழுவதும் மாதத்துக்கு ஒரு பொறுப்பாசிரியர் ‘பண்புடன்’ இதழை தொகுக்கப் போகிறார்களாம். பிப்ரவரி மாத இதழுக்கு பொறுப்பாசிரியராகப் போகும் நண்பர் பரிசல்காரனுக்கு வாழ்த்துகள்.

பண்புடன் சிறப்பிதழுக்கு பொறுப்பேற்று தொகுத்தளித்தது நிறைவான அனுபவமாக இருந்தது. பண்புடன் குழுமத்தினருக்கு என் வந்தனங்கள். உலகின் பல்வேறு மூலைகளிலிருந்து, முகமறியா பல நட்புகளோடு, மகிழ்ச்சியாக கை கோர்த்துக் கொண்டு உலா வந்தது மறக்க முடியாத அனுபவம். இந்த இதழில் இடம்பெற்ற அத்தனை படைப்பாளிகளும் என் தனிப்பட்ட கோரிக்கைக்கு மதிப்பளித்து தங்களுடைய விலைமதிப்பற்ற நேரத்தை செலவிட்டு படைப்புகளை அனுப்பியிருக்கிறார்கள். Its a humbling Experience! பிரிய நண்பர் கிரிதரன் அவர் பங்குக்கு பல நண்பர்களை தொடர்புகொண்டு படைப்புகள் திரட்டி அளித்தார்.

இதழின் உள்ளடக்கம் ஒரு பறவைப் பார்வை...



ஒரு முன்னோட்டம்...



இதழின் உள்ளடக்கமும், செறிவும் பெருவாரியான பாராட்டுகள் பெற்றிருக்கிறது. பண்புடன் இதழ் குழுவினரின் மகத்தான ஒத்துழைப்புதான் முக்கிய காரணம். இன்னும் நிறைய சாதித்திருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது. இந்த இதழை கூடிய சீக்கிரம் ஈ-புக் வடிவத்தில் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் உண்டு. நேரமும் காலமும் கூடி வரவேண்டும்.

நேசக்கரம் நீட்டி அரவணத்துக் கொண்ட நட்புகளுக்கும், உற்சாகபடுத்தி ஊக்கமளித்த நல்லிதயங்களுக்கும், கோரிக்கைக்கு மதிப்பளித்து பெருமைபடுத்திய பெருந்தகைகளுக்கும், தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைத்த தோழமைகளுக்கும்...

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிக்கி வந்தனமு!

November 16, 2011

சவாலே சமாளி!

'எல் ஐ சி பில்டிங்க்குக்கு பதினாலு மாடி'

என்று மெயில் வந்தது. இது என்னடா செய்தி என்று மண்டையை உடைத்துக் கொண்டு யோசித்ததில், 'கதாநாயகன்' எஸ்விசேகர் புண்ணியத்தில் இது ஒரு சங்கேத மொழி என்றுப் புரிந்தது. உடனே பதிலுக்கு

'வாழைப்பழத்தை உரிச்சுதான் சாப்பிடனும்'

என்று பதில் அனுப்பினேன்.

'சபாஷ். நீங்கதான் இந்தக் கதைப் போட்டிக்கு நடுவரா இருக்கனும். கூட இன்னும் இரண்டு பேர் நடுவர்கள். ஆனா அவஙக் யாருங்கறது சஸ்பென்ஸ். நீங்க கேட்டாலும் சொல்ல மாட்டோம்'

November 15, 2011

சுரையா



'The Stoning of Soraya' படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. இனி பார்ப்பதாக இருந்தால் இந்த கட்டுரையை தவிர்த்துவிடவும். வெகு காலம் முன்பு பார்த்த படம். எங்கோ அடி ஆழத்திலிருந்து முகிழ்த்துக் கொண்டு வரும் நினைவுகள் இன்று வார்த்தை வடிவில் வந்து விழுகின்றன. முக்காலும் நினைவிலிருந்து எழுதுகிறேன். மீதி கால் விக்கிபீடியா உதவியுடன்.

'சுரையாவை கல்லால் அடித்தல்' போன்ற படங்கள் ஒருவகை டாக்குமெண்ட்ரித்தனம் கொண்டது. ஆனால் இது டாக்குமெண்ட்ரி அல்ல. கொஞ்சம் தரவுகள், கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் மிகைபடுத்துதல் எல்லாம் கலந்துதான் இப்படிப்பட்ட படங்கள் உருவாகின்றன. இதன் அழகியல் சற்றே மாறுபட்டது. இராணிய கிராமத்தை, அதன் மக்களை, அவர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தினாலும், அதன் உள்ளுறையாக பெண்ணடிமைத்தனத்தை வெளிப்படையாக அதன் குரூரத்துடன் முன் வைக்கிறது.

November 9, 2011

ஆமிர்கானும், ஜாக்கிசானும், வயதான வைனும்


ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நதியா சொல்வார் 'அந்த காலத்தில தீபாவளின்னா சினிமாதான். அப்பாக்கு கமல், அம்மாக்கு ரஜினி. முதல் நாள் முதல் ஷோ போய்விடுவோம்'. அந்த காலத்தில் மட்டும் என்ன, எந்த காலத்திலும் தீபாவளியும் திரைப்படங்களும் பிரியாதுதான் இருக்கின்றன. இந்த தீபாவளியை ஒட்டி இணையத்தில் வாழ்த்துகளை விட ஏழாம் அறிவும், வேலாயுதமும்தான் அடித்து தூள் பரத்திக் கொண்டிருந்தது. தற்சமயம் வசிக்கும் அமெரிக்க கிழக்கு கடற்கரையோரம், இவ்வருடம் அக்டோபரிலேயே பனிப்புயல் வீசியதால் மரங்கள் சரிந்து மின்சாரம், இணைய வசதி எல்லாம் பாதிக்கப்பட்டு தீபாவளியை மினியேச்சரில் கொண்டாட வேண்டியிருந்ததால் இந்த திரைப்படங்களை எல்லாம் சாய்ஸில் விட்டுவிட்டேன்.

அதுவும் போதிதர்மர் பக்கமே போக முடியாதபடிக்கு ஏகப்பட்ட பதிவுகளை படித்துத் தொலைத்துவிட்டேன். போதிதர்மர் தமிழரா, அரசகுலத்தவரா, விக்கி பக்கத்தை திருத்தினார்களா, நோக்குவர்மம், வராஹ சம்ஹிதை என்று ஏகப்பட்ட சர்ச்சைகள். ஒரு நண்பர் போகிறபோக்கில் 'பல்லவர்கள் திராவிடர்களே இல்லை. அப்புறம் எப்படிய்யா அவர் தமிழர்?' என்று ஒரு வெடிகுண்டு கேள்வியை வீசிச் சென்றார். நட்பின் நலம் கருதி நாக்கை உள்ளடக்கி நாக்குவர்மம் பழகியதுதான் மிச்சம்.