July 24, 2008

அபர்ணா சென் - 15 Park Avenue

அபர்ணா சென் எனக்கு மிகவும் பிடித்த ஒரு திரைப்பட இயக்குநர். எனக்கு எளிமையான திரைப்படங்களில் ஈடுபாடு நிறையவே உண்டு. இந்தப் படங்கள் ஒரு புத்தகம் படிக்கும் உணர்வை தருகின்றன என்பது எனது எண்ணம்.

திரைப்படம் என்பது ஒரு புனைவுலகம் என்றாலும் அதில் நம்மை அடையாளப் படுத்திக் கொள்வதில்தான் அந்த திரைப்படத்தின் வெற்றி இருக்கிறது. 3 வருடங்களுக்கு முன்னர் வந்த படம் தான் 15, Park Avenue. கதையை விரிவாக விக்கிபீடியாவில் பார்த்துக் கொள்ளலாம்.

ராகுல் போஸ், கொங்கனா சென், வினய் பதக், ரன்வீர் ஷோரே, கேகே மேனன், ரஜத் கபூர் என்று ஒரு செட் இருக்கிறது. இம்மாதிரி பேரலல் படங்களுக்கு இவர்கள் ஒரு கட்டாயம் போலும். இந்தப் படத்தில் ராகுலும், அபர்ணாவின் மகள் கொங்கனா சென்னும் இருக்கிறார்கள்.

மீத்தி (கொங்கனா சென்) ஒரு ஷிஸோப்ரீனியா நோயாளி. Beautiful Mind பார்த்திருக்கிறீர்களா? அவர் தன் குடும்பம் பற்றி, குழந்தைகள் பற்றி அடிக்கடி பேசுகிறார். சிறுவர்கள் (சில சமயம் பெரியோர்கள்) எல்லாரும் கிண்டல் செய்கின்றனர். தொடர்பில்லாமல் பேசுகிறார். அவரை அறியாமல் சிறுநீர் கழிக்கிறார்.

அவருடைய குடும்ப பின்னனியை காட்டுகிறார்கள். மீத்தியின் தந்தை, அவருடைய தாயிற்கு (வஹீதா ரஹ்மான்) இரண்டாம் கணவர். தற்போது தாய் மட்டுமதான். அவருடைய அக்கா அஞ்சலி (ஷப்னா ஆஸ்மி) ஒரு புரபஸர். இயல்பாக, அழகாக, இனிமையாக, திறமையாக, காதலாக கொஞ்சம் சங்கோஜியாக இருக்கும் மீத்தி எப்படி இப்படி ஒரு மன நோயாளி ஆனார் என்று சொல்கிறது படம். மனதை பிசைகிறது.

ஜோஜோவை (ராகுல் போஸ்) அவர் காதலிக்கிறார். அவர்கள் பலவற்றையும் பற்றி இனிமையாக பேசுகிறார்கள். பிறக்கப் போகும் குழந்தைகள்ப் பற்றி. தங்களது எதிர்கால வாழ்க்கையைப் பற்றி எல்லாம். ஆனால் விதிவசத்தால் மீத்தி ஒரு வெறிக் கும்பலினால் கற்பழிக்கப் படுகிறாள். ஜோஜோவால் அதை ஜீரணிக்க முடியவில்லை. அவன் அவளைப் பிரிந்து வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளுடன் சந்தோஷ வாழ்க்கை வாழ்கிறான்.

மீத்தியின் இரண்டாம் வாழ்க்கை துவங்குகிறது. அவளது கற்பனை உலகம். அவள் ஜோஜோவுடன் பேசியது எல்லாம் இப்பொழுது அவளது வாழ்க்கையில் இருப்பதாக நம்புகிறாள். மும்பையில், 15, பார்க் அவென்யூ விலாசத்தில் தான், ஜோஜோ தன்னுடைய குழந்தைகள் எல்லாருடனும் அவள் வாழ்கிறாள். என்ன, மற்றவர்களுக்கு அந்த வாழ்க்கை புரியவில்லை. ஒருமுறை அவள் அம்மாவும், வீட்டு வேலைக்காரியும் பேயோட்டுபவனை அழைத்துக் கொண்டு வந்து அவளை துன்புறுத்துகிறார்கள். அஞ்சலியிடம் சொன்னால் அவள் நம்பவில்லை. இதுதான் ஷிஸோப்ரினியா. உண்மையும் கற்பனையும் நம்மை மட்டும் அல்ல நம்மை சார்ந்தவர்களையும் பாதிக்கிறது.

அஞ்சலி தன் சக புரபஸருடன் (கண்வல்ஜித் சிங்) நட்பாக இருக்கிறாள். அவர் ஸபாடிக்கல் எடுத்துக் கொண்டு வெளிநாடு போக திட்டமிடும் போது இவளால் அவருடன் போக முடிவதில்லை. ஆதரவில்லாத அன்னையும், தங்கையையும் விட்டுவிட்டு எப்படிப் போவது? அவரது புதிய நட்பான டாக்டர் குனால் பர்வா (த்ரிடிமண் சட்டர்ஜி) அஞ்சலிக்கு ஒரு புத்துணர்ச்சி தருகின்றார். அவர்கள் இருவரையும் இணைக்கும் சரடாக மீத்தியின் நோய். இந்த புதிய நட்பினால் அஞ்சலியின் பழைய நட்பில் விரிசல் விழுகிறது.

பின்னர் ஒரு நாள் மீத்தி, ஜோஜோவை நேரில் சந்திக்கும் போது அவளுக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவனை நம்புகிறாள். அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவர்களின் மும்பை வீட்டு விலாசம் '15, பார்க் அவென்யூ', அவளுடைய கனவுக் கணவன், குழந்தைகள்.

இறுதியில் ஜோஜோ மீத்தியை அவள் வீட்டை (15 பார்க் அவென்யூ) கண்டுபிடித்து தருவதாக உறுதி கூறி அழைத்து செல்கிறான். பின்னாலேயே அஞ்சலியும் குணாலும் தொடர்கிறார்கள். இப்படி ஒரு த்ரில்லிங்கான க்ளைமேக்ஸை எதிர்பார்த்திருக்கவே முடியாது.

அஞ்சலியும் குணாலும் ஓட்டலில் உரையாடும்போது ஷிஸோப்ரினியா பாதிப்புகளை அழகாக விவாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு அஞ்சலியின் பஞ்சாபி நண்பர்கள் தங்கள் குருஜி பாபாவைப் பற்றி பேசும்போது 'அவர் காதுகளில் குரல் ஒலிக்கும். அவர் எதிர்காலத்தைப் பற்றி சொல்வார்' என்று சொல்ல, டாக்டர் குணால் எதார்த்தமாக அது ஷிஸோப்ரினியா நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம் என்று சொல்கிறார்.

இப்படி நம்மை சம்பவங்கள் வாயிலாகவே அழைத்து செல்கின்றார் இயக்குநர். ஒரு ப்ரீச்சிங் டோன் இல்லாமல் இந்த விஷயத்தை கையாண்டு இருப்பது அருமை. முதல்முறை பார்த்தபிறகு மறுமுறை பார்க்கத் தூண்டும் படைப்பு. ஒரு இயக்குநரின் வெற்றி அதுதானே.

படம் பார்த்து முடித்தவுடன் அந்த முதல் காட்சியில் வரும் அந்த மனநலம் குன்றிய பிச்சைக்காரி மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியாது. மீத்தி பாவம்!

11 மறுமொழிகள்:

ஸ்ரீதர் நாராயணன் said...

அபர்ணா சென்னின் படைப்புகளில் Mr. & Mrs. Iyer மிகவும் பிரபலம். அந்தப் படத்தை விட, இந்த மாதிரியான Genre-களில் Black போன்ற படங்களை விட, "15, Park Avenue" மிகவும் நம்பக் கூடியதும், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமாக இருக்கின்றது.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா எழுதிருக்கீங்க.. ரெண்டு படமும் எனக்கும் பிடிச்சிருந்தது. முக்கியமா கொங்கணா சென்னின் நடிப்பு அபாரம். அவங்க படம் எல்லாம் கூடியவரை தேடிப் பார்க்கவே தொடங்கிட்டேன்..

ஸ்ரீதர் நாராயணன் said...

பொன்ஸ்,

வருகைக்கு நன்றி. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். Mixed Doubles பத்தி எழுதலாம்னு ஒரு யோசனை இருக்கு. அவருடைய Chai, phani கிடைக்கவே இல்லை. NetFlix-ல ஒருவேளை கிடைக்கலாம்.

இலவசக்கொத்தனார் said...

நான் இந்தப் பதிவை சாய்ஸில் விடுகிறேன். இந்த மாதிரி படங்கள் நமக்குப் புரியாது என்ற ஒரே காரணத்திற்காக.

ஸ்ரீதர் நாராயணன் said...

இ கொ,

இது ரொம்ப கஷ்டபடுத்தாத இயல்பான படம்தான். நீங்க ஒரு வாட்டி முயற்சி பண்ணிப் பாருங்களேன். உங்களுக்கு உத்தரவாதமாகப் பிடிக்கும்.

ச.சங்கர் said...

விவரணம் அருமை.

சென்ஷி said...

விரிவான அழகான விமர்சனம். படிக்கும் போதே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது.
குறித்து வைத்துக்கொண்டேன். கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்.

RVC said...

"15, park avenue" பற்றிக்கேள்விப் பட்டிருக்கிறேன். தங்களின் பதிவு அப்படத்தைக் காணும் ஆவலை அதிகரிக்க வைத்துவிட்டது.

ஸ்ரீதர் நாராயணன் said...

சங்கர்,

நன்றி :-)

சென்ஷி,

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி.

RVC,

நன்றி. படம் பாருங்க கண்டிப்பா.

வல்லிசிம்ஹன் said...

நெட்ஃப்ளிக்ஸ்ல கிடைத்ததும் பார்க்கிறேன். அபர்ணா சென்னுக்காக ஒருதடவையும் அவர் பெண்ணுக்காக ஒரு தடவையும்.
நன்றி ஸ்ரீதரன்.

ஜோஜோ அழைத்துப் போவதாகக் காண்பித்தால் முடிவுறவில்லை கதை... இல்லையா.

ஸ்ரீதர் நாராயணன் said...

//ஜோஜோ அழைத்துப் போவதாகக் காண்பித்தால் //

முடிவு சற்றும் எதிர்பாராதது. மீத்தியை மறக்கவே முடியாது அப்புறம்.