| கவிதையாக நான்... July 22, 2058 நேற்றைய எனது கவிதைக்கு ஏகப்பட்ட ரெஸ்பான்ஸ். இவ்வளவு பேர் என் உணர்வுகளை பகிர்ந்து கொண்டது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தக் கவிதைகளை செல்பேசிகள் மூலம் உங்கள் காதலரிடையே பரிமாறிக் கொள்ளுங்கள். செம எஃபக்ட் இருக்கும் :-) என்ன எஃபகடா? சாரி. 40 வயதுக்கு மேலானவர்கள் இந்தப் பதிவை படிக்க வேண்டாம். :-) பலர் கேட்கும் கேள்வி 'உங்களால் எப்படி இவ்வளவு வேகமாக பதிவிட முடிகிறது'? எல்லாம் அப்பா சொல்லிக் கொடுத்த தொழில்நுட்பம்தான். தமிழில் மட்டுமல்ல, நான் ஜெர்மனியிலும், ப்ரெஞ்சிலும் கூட பதிவுகள் போடுகிறேன். அவை எல்லாம் ஆராய்ச்சி கட்டுரைகள் அது தொடர்பான விவாதங்களும்தான். காதலுக்கும் கவிதைக்கும் எப்பொழுதும் தமிழ் :-). நான் குறிப்பெடுக்கும் வேகத்திலேயே பதிந்து விடுவேன். நீங்களும் பதியலாம். PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/22/2058: 8:30 AM 24 COMMENTS Links to this Post... TAGS: கவிதை, காதல், சாயா |
| என் இனிய பொறுக்கியே! July 23, 2058 கவிதைகளுக்காக மட்டுமே இந்தப் பதிவு. இந்த கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணே இவன்தான். பாருங்கள். அவன் என்னைக் கண்ணே, மணியே என்று கொஞ்ச வேண்டும். நான் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன். இதுவரை அப்பாவிற்கு இந்த பதிவு பற்றி தெரியாது. அவருக்கு தெரியாமல் நான் செய்யும் முதல் வேலை. காதல் வந்தபின் கள்ளத்தனம் வராமல் இருக்குமா? என்னில் இந்த கள்ளத்தனத்தை விதைத்தவன் இவன்தான். ஆதி! என் இனிய பொறுக்கியே! உன்னை விடுவதாக இல்லை. PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/23/2058: 12:00 PM 45 COMMENTS Links to this Post... TAGS: பொறுக்கி, காதல், சாயா |
| முதன்முதலாய் காதல்... July 24, 2058 ஆதியை சந்தித்த தினம் நன்றாக ஞாபகம் இருக்கிறது. அப்பாவின் JITTU-க்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நேரம் அது. அவரால் ஆராய்ச்சிகளையும், பிஸினஸையும் சமாளிக்க முடியாமல் திணறிய பொழுதுதான் ஆதி வந்தான். 'குட்டி! இது ஆதவன். Operations & Sales பூரா இவன்தான் பாத்துக்கப் போறான். நான் வெறும் R & D மட்டும்தான். ஆதி! இது சாயா. ஷி இஸ் மை ட்ரெஷர்' என்று அறிமுகப் படுத்தி வைத்தார். ஆதி வெண்மையான பற்கள் பளிச்சிட பளீரென்று சிரித்தான். அவன் ஆண்மை என்னை வசீகரித்ததை நான் அப்பொழுதே உணர்ந்தேன். அப்பா ஒரு JK சிஷ்யர். அதனால்தான் எங்கள் தயாரிப்புகளுக்கு JITTU என்று பெயர். அதற்கு ஒரு டெக்னிகல் விரிவாக்கம் இருந்தாலும், இதுதான் முதல் காரணம் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார். நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஷாப்பிங் மால்களின் வெளியே, வங்கிகளில் டெல்லர் ஸ்தானத்தில், போலிஸ் ஸ்டேஷனில் கேஸ் பதிவு செய்ய என்று அழகான பேசும் பொம்மைகள். ஆம். அவையாவும் அப்பாவின் தயாரிப்பான ஜிட்டுகள்தான். பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. முன் காலத்தில் பெரும்பாலும் ஸ்டீலிலும் இரும்பிலும் இருக்கும் இந்த பொம்மைகளை தற்போது உருகா மெழுகில். துஸாட்ஸ் ம்யூஸியம் பார்த்திருக்கிறீர்களா? ஆதிதான் இப்பொழுது அப்பாவிற்கு சகலமும். அப்பாவும், ஆதியும் இணைந்து பெரும் புரட்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இன்னமும் நிறைய... நிறைய... இருக்கிறது. இன்றைக்கு அடர்நீல சூட்டில் அழகாகவே இருக்கிறான். அந்த கோட்டில் ஒரு சிவப்பு வண்ண ரோஜாவாக... நான் இருக்க வேண்டும். ஆதீ!!! PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/24/2058: 11:22 AM 58 COMMENTS Links to this Post... TAGS: ஆதி, காதல், சாயா |
| வெட்கத்துடன் நான் July 25, 2058 நிறைய வேலைகள் வந்து விட்டன். இரு வாரங்களில் IROS - 2058 சர்வதேச சந்திப்பு. எங்களுடைய புதிய ஜிட்டுகள் அறிமுகம். ஆதியுடன் அருகில் இருந்து செய்ய வேண்டிய பணிகள் நிறைய. அவன் ஒரு இனிமையான இயந்திரம்தான். என்னை திரும்பிப் பார்க்க வைக்க மிகவும் பிரயத்தனப் படுகிறேன். அப்பா மேல் அவ்வளவு மரியாதை. அந்த மரியாதைதான் என்னுடைய காதலுக்கு தூண்டுகோலா? தெரியவில்லை. 'அமெரிக்கன் ஏர்லைன்ஸில் டிக்கட் போட்டாச்சு. கான்ஃபிரண்ஸுக்கு ரெண்டு நாள் முன்னாடி போய்டறோம். அப்பாகிட்ட சொல்லிடு சாயா' 'இப்ப அங்க வெதர் எப்படி ஆதி' 'நார்மலதான் சாயா. குளிர் ஆடை ஒரு செட் போதும்' 'குளிரினால்தான் என்ன. நீதான் இருக்கிறாயே' இதைக் கேட்டு அவன் ரோஜாக் கன்னம் சிவந்திருக்க வேண்டும். பாவி. மூஞ்சியை அந்தப் பக்கம் திருப்பிக் கொண்டு போகிறான். இவன் வெக்கப்படுவதை நான் பார்க்கக் கூடாதா என்ன? :-) இப்பொழுது எழுதும்போது எனக்கும் வெட்கமாக இருக்கிறது. PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/25/2058: 10:02 AM 80 COMMENTS Links to this Post... TAGS: வெட்கம், காதல், சாயா, ஆதி |
| பைரனின் முதல் முத்தம் July 26, 2058 பைரனின் 'முதல் முத்தம்' கவிதை படித்திருக்கிறீர்களா? இன்றைக்கு அந்த அனுபவம் வாய்த்தது. ஆம். ஒரு அசந்தர்ப்பமான சந்தர்ப்பம் அது. இரண்டு நாட்களில் பயனம் என்று மாய்ந்து மாய்ந்து எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருந்த பொழுதுதான் அது நடந்தது. என் அருகில் ஆதியின் முகம். இதை எழுதுவது சிரமம் :-) பைரனைப் படித்து கொள்ளுங்களேன் ப்ளீஸ்! PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/26/2058: 2:45 PM 97 COMMENTS Links to this Post... TAGS: முத்தம், காதல், சாயா, ஆதி |
| மேலும் மேலும் காதல் July 27, 2058 ஆதி இன்று சோகமாக இருக்கிறான். ஷேவ் செய்யவில்லை. இனிமையான பொறுக்கியே, இன்று என்னடா திட்டம் என்று கேட்கப் போனால் நனைந்து போன கோழிக் குஞ்சு போல உட்கார்ந்திருக்கிறான். 'சாயா! ஐ ஹாவ் டு கன்பஸ் டு யூ' 'என்னாச்சு ஆதி?' 'நீ மனதில் நினைத்திருப்பது எனக்குத் தெரியும். உன்னைப் போல் ஒரு பெண் காதலிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நான்... நான்... உனக்கு ஏற்றவனல்ல.' 'என்ன ஆயிற்று? ஏன் இப்படி உளறுகிறாய்?' 'அது சாயா... நான் முழுமையானவன் அல்ல என்று நினைக்கின்றேன். நேற்று நாம் நெருக்கமாக இருந்த வேளை... எனக்கு இந்த சந்தேகம் வந்து விட்டது' எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. இந்த பயாலஜிக்கல் பிரச்சினைகள் பற்றி கூட தெரியாமல், இவன் என்ன குழந்தையா? இப்பொழுது எனக்கு உன் மேல் காதல் இன்னமும் அதிகமாகிறதே... PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/27/2058: 1:10 PM 105 COMMENTS Links to this Post... TAGS: ஆதி, காதல், சாயா |
| முட்டாள் காதலா! July 28, 2058 இரண்டு நாட்களாக ஆதியை பார்க்கவே சகிக்கவில்லை. வேலையில் ஏகப்பட்ட குளறுபடிகள். நானும் முடிந்த வரையில் அவனுக்கு அனுசரனையாகத்தான் இருக்க முயற்சிக்கிறேன். ஒரு பெண்ணால் இந்த விஷயத்தில் எவ்வளவு உதவி செய்ய முடியும்? முட்டாள் காதலனே. ஒரு மருத்துவரை பார்த்து தொலைய வேண்டியதுதானே? PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/28/2058: 3:20 PM 116 COMMENTS Links to this Post... TAGS: முட்டாள், காதல், சாயா |
| இப்படியே நான் July 29, 2058 அப்பாவின் அறையில் ஆதி. எனது வாழ்க்கையின் இரு முக்கிய நபர்கள். இவர்களை இணைக்கும் சங்கிலியாக நான். இப்படியே நான்... இப்படியே வாழ்க்கை சந்தோஷமாக இருக்கக் கூடாதா? அப்பா கையில் சில பேப்பர்களை. அருகில் பார்த்தால் எனது காதல் கவிதைகள். ஓஹ்ஹ்... அப்பா. உங்களுக்கு தெரியாமல் நான் செய்த, செய்யும் ஒரே தவறு. 'குட்டி! இது என்ன. இவ்வளவு எமோஷனலா எழுதியிருக்கே.' என்னை நிமிர்ந்து பார்த்து 'உன்னில் இவ்வளவு தீவிரமான காதல் தோன்றும் என நான் எதிர்பார்க்கவேயில்லை.' குரலில் பெருமை. அவருக்கு எப்பொழுதும் என் மேல் பெருமைதான். ஆதியைப் பார்த்தவர் 'ஆதி! இப்படிப்பட்ட சூழ்நிலை இப்பொழுது வந்திருக்க வேண்டாம். அடுத்த வாரம் காண்பிரண்ஸ். எவ்வளவு முக்கியம்? எனக்கு, நம் நிறுவனத்திற்கு, நம் எல்லாருக்கும். எனக்கு தேவை ப்ரொடக்டிவிட்டி. பிரச்சினைகள் அல்ல' 'அதில்லை புரபசர். எனக்கு... எனக்கு... ஓய்வு வேண்டும். உங்களிடம் சொன்னேனே' சங்கடமாக என்னைப் பார்த்தான். பரவாயில்லை. அப்பாவிடமே வந்து விட்டானே. அப்பா எல்லாவற்றையும் தீர்த்து வைப்பார். அப்பா தீவிரமாக 'ஆதி! நீ ஒரு நார்மல் பெர்சன் எனப்தில் எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.' சற்றே நிறுத்தி, மோவாயை தேய்த்தவாறே 'சாயாவின் மீது உனக்கு சரீர இச்சை தோன்றாததற்கு காரணம் இருக்கிறது' நானும் ஆதியும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். 'என் பெண்... ஷி இஸ் நாட் எ ஹ்யூமன்பீயிங். அவள் ஒரு ஜிட்டு. பரிசோதனையில் இருக்கும் அட்வாண்ஸ்ட் மாடல்.' PUBLISHED BY சாயா சந்திரன் AT 7/29/2058: 11:35 AM 345 COMMENTS Links to this Post... TAGS: காதல், காதல், காதல் |
இதற்கு மேல் பதிவுகள் காணப்படவில்லை. அதற்கு அடுத்த வாரம் அலபாமாவின், மேடிசன் நகரில் நடந்த IROS 2058 (International Conference on RObots and Systems) அரங்கில் JITTU 13.0 அறிமுகமாகியது. மனிதரைப் போலவே பேசும், எழுதும், ஓரளவிற்கு சுயமாக சிந்திக்கும் ஜிட்டுகள். நினைவுகளை அவ்வப்போது மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ரோபோக்களின் உலகில் புதிய புரட்சி.
சாயாவின் கவிதைகள் இன்னமும் பல்வேறு வடிவங்களில் வலம் வந்து கொண்டுதானிருக்கின்றன.
18 மறுமொழிகள்:
இந்த சிறுகதையை எழுத தூண்டுகோலாக இருந்த சுரேஷ் மற்றும் இலவச கொத்தனாருக்கும் நன்றிகள் பல.
கலக்கல்... :)
கலக்கல்ஸ் :))
தமிழ்ப் பிரியன், ரம்யா,
நன்றிகள் பல :-)
மிக வித்தியாசமான முயற்சி / வடிவம்.
அருமையான கதை ஸ்ரீதர். புதுமையான வடிவம்.
வாழ்த்தூஸ்..
சுந்தர்,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி :-). கதை இன்னமும் சிறப்பாக வந்திருக்கலாமோ?
சுரேஷ்,
நான் இவ்வளவு நேரம் உட்கார்ந்து செய்யுறதுக்கு (சோம்பேறித்தனம் தவிர்த்து) உங்களோட தொடர் ஊக்குவிப்பும் ஒரு முக்கிய காரணம் :-)
You have a very good flair for writing. The story is just excellent.
- Ramya.
Ramya,
வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.
தொடர்ந்து வாங்க
நல்லா இருக்குங்க.. ஒரு கவிதை கூட எழுதாம கவுத்துட்டீங்களே! :(
2058ல வேற ஒரு ஜிட்டுவின் இடத்தில் வேற ஒரு பிட்டு வந்திருக்க மாட்டாரா? அப்பவும் JK தானா? :)
பொன்ஸ்,
கவுஜ எழுதலையான்னு வருத்தப்பட்ட முத ஆளு நீங்கதான். :-)) நீங்க இன்னும் பழைய பதிவுகளைப் படிக்கல போலிருக்கு.
JITTU-க்கு ஒரு எக்ஸ்ப்ளனேஷன் யோசிச்சு வச்சிருந்தேன். ஓவர் டெக்னிகல் டீடெய்ல்ஸ் உடம்புக்கு நல்லது இல்லைன்னு சொல்லிட்டாங்க :-))
மத்தபடி JK சும்மா ஃபில்லரா வந்து கைகொடுத்தார். :-)
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Nice one! Great!!;-)
புது வடிவம். செமத்தியாக ஒர்க் அவுட் ஆகி இருக்கின்றது. வாழ்த்துக்கள்.
யோசிப்பவர்,
தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
வசந்த் குமார்,
வாழ்த்துகளுக்கு நன்றி. உங்களுடைய 10 கதைகளையும் படித்துவிட்டேன். எல்லா கதைகளுமே நன்றாக இருக்கின்றன. உங்களுக்கு இந்த பாணி கதைகள் வெகு சுலபமாக வருகிறது. வாழ்த்துகள் :-).
இன்னமும் 4 நாட்களில் எத்தனை கதைகள் எழுதுவதாக உத்தேசம்? :-))
அண்ணாச்சி
வித்தியாசத்திலும் வித்தியாசமான கதையும், நடையும்!
வாழ்த்துக்கள்
சரி..எனக்கு சில ஜந்தேகம்ஸ்
1. ஜிட்டு தினம் ஒரு பதிவு போடுமா?
2. ஜிட்டுக்கு கமென்ட் போடுபவர்கள் எல்லாம் ஜிட்டுக்களா?
3. 305 comments-nnu பார்த்தேன்! சரி ஏதோ இலவச ஜிட்டு-ன்னு நினைச்சி வுட்டுட்டேன்!....ஹா ஹா ஹா!
அருமையான ஃபார்மெட்ல எழுதியிருக்கீங்க... சூப்பர்...
கண்ணன் அண்ணா,
ஜிட்டு 'இலவசமா' பதிவும் போடும். 'பந்தல்'ல பாட்டும் பாடும். :-))
அண்ணாவின் அருமைத் தம்பி பாலாஜி,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றிங்க்ணா. :-)
அருமையாக இருந்தது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Post a Comment