July 24, 2008

மீண்டும் ஒரு காதல் கதை!

தானியங்கி கதைசொல்லி சேவை

"தை எழுதுவது எவ்வளவு சுலபம் பாருங்கள். மிகவும் இலகுவான வேலை. எங்கள் சேவை தளத்தில் பதிந்து கொள்ளுங்கள். நீங்கள் வெறும் குறிப்புகளை மட்டும் கொடுத்தால் போதும். முழுக் கதையையும் நிமிடங்களில் தயார். எழுத்தாளர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். "

"இந்த தானியங்கி கதை சொல்லியின் மூலம் நீங்கள் எவ்வளவு பெரிய புதினம் கூட எழுதலாம். 'போரும் அமைதியும்' போன்ற படைப்பை வெகு எளிதாக, விரைவாக உருவாக்க முடியும். "

இப்பொழுதுதான் சுரேஷ் அந்த கேள்வியை எழுப்பினான்.

"இந்த சேவை தளத்தின் முக்கிய அம்சமாக சொல்லப்படுவது, இந்தக் கதைகள் மனித வாழ்க்கையை உண்மையாக பிரதிபலிக்கிறது என்பதுதான். ஒரு தானியங்கி நிரலியால் எந்த அளவிற்கு உண்மையை கதைகளில் கொண்டு வர முடியும்? இது எப்படி சாத்தியமாகும்?""

அந்த கதைசொல்லி தள நிர்வாகிகள் அதற்கு பதில் சொல்கிறார்கள்

'நல்லதொரு கேள்வி. எங்கள் விரிவான ஆராய்ச்சியில் நாங்கள் நிறைய மனிதர்களைப் பற்றிய தகவல்களை தொகுத்து வைத்திருக்கோம். அவர்கள் வாழ்க்கையின் முழுப் பிரதியே எங்களிடம் இருக்கிறது. ஏகப்பட்ட தகவல்கள் கோர்க்கப்பட்டு பல்வேறு கோணங்களில் அலசப்பட்டு உங்கள் கதைகளுக்கு ஏற்ப தயாராக இருக்கின்றன. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கதைக் கருவை மட்டுமே உருவாக்க வேண்டியது. மற்ற எல்லாவற்றையும் இந்தக் கதைசொல்லிப் பார்த்துக் கொள்ளும்.'

'நிஜ வாழ்க்கையின் பிரதிபலிப்புகளை கதைக்குள் கொண்டு வருவதில் உள்ள உளவியல் சிக்கல்களை நீங்கள் ஆராய்ந்தீர்களா? இதற்கு சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஒப்புதல் பெறப்பட்டதா?' சுரேஷ் விடாமல் தொடர்ந்து கொண்டிருந்தான்.


ஒருவகையில் எனக்கும் சங்கடமாகத்தான் இருந்தது.

கதை எழுதுவது என்பது எவ்வளவு கலாபூர்வமான விஷயம். அதையும் இப்படி இயந்திரத்தனமாக்கி விட்டிருக்க வேண்டாம். இதை என்னவென்று சொல்ல? ஆனாலும் அடிமனதில் ஒரு ஆசை. இந்த சேவைத்தளத்தில் நாம் ஒரு கதை எழுதிப் பார்த்தால் என்ன? இதோ பாருங்கள் ஒரு கூப்பன் இருக்கிறது. "எங்கள் சேவைதளத்திற்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்களுக்கான தனிச்சலுகையாக நீங்கள் இலவசமாகவே கதை எழுதலாம். உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்."

இதுவரை நன்றாகவே இருக்கிறது. ஒரு காதல் சிறுகதை எழுத கொஞ்ச நாட்களாகவே திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். இந்த கதைசொல்லியிடம் கொடுத்துப் பார்ப்போம்.

கதை உருவான கதை

முனா!!! கதையின் நாயகியைத்தான் முதலில் உருவாக்கினேன். ரவிவர்மாவின் வாட்டர் கலர் ஓவியம் உயிர்பெற்று வந்தது போல ஒரு அழகு. எப்படி விவரிப்பது அவளை? கண்களில் ஒரு மின்னல், செயலில் ஒரு நறுவிசு. தென்றல் போல தவழ்ந்து ஆனால் சூறாவளியாய் சுற்றி வருவாள். அவளைப் பார்த்தால் மருண்டு ஓடும் மான் போல. ஆனால் அந்த மருளலுக்கு மாண்டவர்களே அதிகம். சும்மாவா சொன்னார்கள் பெண்களின் மனது புரிந்து கொள்ள முடியாத புதிர் என்று. அவளுடைய பதின்ம வயதில் அவள் ஒரு மாயச் சுழலாக இருந்தாள். அவள் அருகில் செல்லவே நிறைய தைரியம் வேண்டும்.

செல்வன் அடுத்து. பளீரென்ற சிரிப்பில் பச்சைக் குழந்தை போல் இருப்பான். ஆனால் செயலில் புயல். அவன் விரும்பியதை அடையாமல் விட்டதில்லை. எதையும் வென்று விடும் தன்னம்பிக்கை. காட்டாறு போல் அவன் கரைபுரண்டு ஓடிக் கொண்டே இருந்தான்.

7 வருடங்களுக்கு முன்னர்... செல்வன் யமுனாவை ஒரு திருமண விழாவில் சந்தித்தான். அதே நொடியில் தீர்மானித்தான். செல்வன் யமுனாவிடம் முதன்முதலில் கேட்டது 'ஷல் ஐ கெட் யூ எ ட்ரிங்க்?' அறிமுகமில்லாத அவனைப் பார்த்து மையமாக சிரித்து கொண்டே பதிலுக்கு அவள் கேட்டாள் 'நீங்கள் என்ன அருந்துகிறீர்கள்?' செல்வன் அவளைப் நோக்கி கை நீட்டினான். 'நீ!'. அவ்வளவு தன்னம்பிக்கை. பலரும் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்க அன்று செல்வன் யமுனாவுடன் நடனமாடினான்.

மூன்று மாதங்களுக்கு பின்னால் யமுனா தன் வாயாலேயே அவனைத் தான் காதலிப்பதாக சொன்னாள். ஆனல் அப்பொழுது அவர்களுக்குள் திருமணமாகி 65 நாட்கள் ஆகிவிட்டிருந்தன!



இதுதான் நான் சொன்ன கதைக் கரு. 7 வருடங்களுக்கு அப்புறம் அவர்கள் குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று இறுதியில் சொல்லலாம் என்று திட்டம். "7 Years Itch" பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே?

சும்மா சொல்லக் கூடாது. அந்த நிரலி எழுதிய கதை அற்புதமாக வந்திருந்தது. கதாபாத்திரங்கள் அசலாக தோன்றின. காதல் சம்பவங்கள் உயிர்ப்புடன் சொல்லப் பட்டிருந்தன. பிறகுதான் தெரிந்தது அந்தக் கதைக்கு எவ்வளவு வரவேற்பு கிடைத்தது என்று. குறுகிய காலத்தில் அதிகம் படிக்கப்பட்ட கதையாம். காதல் அத்தியாயம் பெரும் வெற்றி.

இவர்களின் குடும்ப வாழ்க்கையை தொடரலாம் என்று கதையை திறந்தால்.... எனக்கு தெரியாமல் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டிருந்தது.

நான் யமுனா பேசுகிறேன்

னது கதையை எழுதிவரும் எழுத்தாளருக்கு முதலில் நனறி. இந்தக் கதையை படிக்கும்பொழுது எனக்கு இந்த 7 வருடங்களையும் கடந்து பின்னோக்கி சென்று வந்தாற் போலவே இருக்கிறது. அந்த நினைவுகள் மீண்டும் மனதில் அலைமோதுகின்றன. சிற்சில சம்பவங்களில் மாற்றங்கள் தெரிந்தாலும் கதைக்கு தேவைப்பட்டிருக்கலாம் என்பதால் நான் பொருட்படுத்தவில்லை. (உ-ம்: செல்வன் அனிந்திருந்தது Rolex. கதையில் சொல்லப்பட்டது போல Tag Heur இல்லை).

உண்மைதான். செல்வன் ஒரு காட்டாறு போல்தான் என்னை அடித்து இழுத்து சென்றுவிட்டார். 7 வருடங்கள் கழித்து, இப்பொழுது ஓரமாக ஒதுங்கியிருக்கும் ஒரு ஊறிப்போன மட்டையாகவே என்னை உணர்கிறேன். என்னத்தான் பாவம் செய்தேனோ... என்னால் எல்லாரும் ஈர்க்கப் பட்டார்கள். இருந்தாலும் நான் என்னுடைய எல்லைகளை உணர்ந்தே இருந்தேன். ஒரு சராசரிப் பெண்ணாக இருந்த, இருக்க நினைத்த என்னை, ஒரு அசாதாரணப் பெண்ணாக உருவகித்து, காதலித்து, ஆராதித்து, என்னை எனது மனதுக்கு தெரியாமேலேயே ஆட்கொண்டு... எதற்காக இவ்வளவும் செய்தீர்கள் செல்வன்?

இன்று நீங்கள் பெரும் சாதனையாளர். ஆனால் நானோ சுயத்தை இழந்து, இளமையை இழந்து எனது தகுதிகளை இழந்து, ஒரு துருப்பிடித்த உபயோகமற்ற இயந்திரமாக. யார் காரணம் செல்வன்?

எழுத்தாளருக்கு - என்னை நான் மீட்டெடுக்க உதவி புரிவீரா?



இது என்னடா புது குழப்பம். நமது கதையில் யாரோ எதையோ சேர்த்திருக்கிறார்களே. தளத்தின் பொறுப்பாளர்களைத் தொடர்பு கொண்டால் அவர்கள் -

'அன்புடையீர், நீங்கள் எங்கள் தானியங்கி கதை சேவையை பயன்படுத்துவது மிக்க மகிழ்ச்சி. உங்கள் கதையில் நீங்கள் எழுதாத பகுதி அந்த பாத்திரங்களே எழுதிக் கொண்டது. இது ஒரு சிறப்பு வசதி. நிஜவாழ்வின் பிரதிபலிப்புகளாக பாத்திரங்கள் அமையும்பொழுது சிலசமயம் அது நிஜ பாத்திரமாகவே அமைகின்றன. அந்த பகுதிகள் கதைக்கு சிறப்பும், நம்பகத்தன்மையும் கொண்டு வருகின்றன. தொடர்ந்து எழுதுங்கள்'

ஏதோ விளையாட்டு செய்கிறார்கள்ப் போல. சொல்லிவிட்டு செய்திருக்கலாம். இது எப்படி சாத்தியப்படும்? என் கதையில் அவள் எப்படி பங்கேற்றாள்? இந்த நிரலி சரியாகத்தான் வேலை செய்கிறதா? என்று பல கேள்விகள் எனக்குள். பிறகு அந்த நிரலி பற்றிய விவரணையில் இது எப்படி தகவல்களை தொகுக்கிறது, மனிதர்களின் நடத்தை உளவியல் மூலம் எப்படி அந்த தகவல்களை முழுமையாக்குகிறது, கேம் தியரியின் அடிப்படையில் அந்த தகவல்களை உள்ளீட்டு எப்படி கதாபாத்திரங்களை உருவாக்குகிறது என்றும் விளக்கமாக 1471 பக்கங்களில் சொல்லியிருந்தார்கள். சிலசமயம் நிஜ பாத்திரங்களே கதையில் பங்கேற்கும் வசதியையும் பற்றி குறிப்பிட்டிருந்தார்கள்.

ஒரு எழவும் புரியவில்லை. ஆனால் அந்தக் கதையை படிக்கும் போது யமுனா நம்மிடையே வாழ்வது மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த பாத்திரங்கள் விரும்பினால் கதையில் சில ஃபீட்பேக், விளக்கங்கள் கொடுக்கலாம். நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசலாம். ஆனால் கதைக்குள் புதிய சம்பவங்கள் எதுவும் நிகழ்த்திவிட முடியாது. அது எழுத்தாளருக்கு மட்டுமே உள்ள வாய்ப்பு. இது சரியான போங்கு ஆட்டம் என்பதால் நான் அந்தக் கதையை அங்கேயே கைவிட்டுவிட்டேன்.

ஆனால் யமுனாவின் வாதம் அந்தக் கதையை மேலும் பிரபலபடுத்தியது. நிறையப் பேர் அவளுக்காக பரிதாபப் பட்டனர். கதைசொல்லி தளத்தில் உடனே ஒரு ஓட்டெடுப்பு நடத்தி அதை விளம்பரப் படுத்தி, யமுனாவை ஒரு ஆதர்ச பாத்திரமாக ஆக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். கூடிய சீக்கிரம் ப்ராண்டிங் செய்து விடுவார்கள்ப் போல.

தொடர்ந்து இன்னொரு அத்தியாயம் எழுதப்பட்டது.

தொலைந்து போனேன் நான்

ந்தக் கதையை இப்பொழுதுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது. என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி யமுனா உன்னால் இப்படி பொதுவில் குற்றம் சொல்ல மனசு வந்தது?

இந்த தொழிலில் சாதனை செய்த பொழுது, அடங்கா செல்வத்தை ஈட்டிய போதெல்லாம் இல்லாமல், உன்னுடன் இருந்த அந்த கணங்கள்தானே என்னை முழுமையடைய செய்தது. முதன்முதலாக உன்னுடன் நடனமாடிய போது... முதன்முதலாக உன் காதலை என்னிடம் தெரிவித்த பொழுது.. அந்த தருணங்களிதானே நான் பூரணமானேன்.

நானெங்கே உன்னை ஒதுக்கினேன்? நானல்லவா ஒதுங்கி நிற்கிறேன். உன்னைத் திருடிவிட்டேன் என்கிறாய். ஆனால் தொலைத்தது நான்தான். உன் மனதில் ஒருவன் இருக்கிறான் என்று சொன்ன போது நான்தான் தொலைந்து போனேன். தீப்பிழம்பாக நான் செயல்படுவதற்கு தீப்பொறியே நீதானே யமுனா. நீயில்லா விட்டால் அணைந்து விட மாட்டேனா? இந்த 300 கோடிகளும் உன் முழுமதி முகத்தின் முன் எம்மாத்திரம்?

பி.கு. எழுத்தாளர் சொன்னது சரிதான். நான் எப்பொழுதும் அணிவது டாக் ஹ்யூர்தான். இந்த 7 வருடங்களில் நீ எவ்வளவு உண்மையாக இருந்தாய் என்பதற்கு இதுவே ஓர் அத்தாட்சி.



புருஷன் பொண்டாட்டி சண்டையை நிகழ்த்த என் கதைதான் கிடைத்ததா?

தள நிர்வாகிகள் இரண்டு நினவூட்டல்கள் அனுப்பியிருந்தார்கள். 'இந்தக் கதை பெருவாரியான வரவேற்பு பெற்றிருப்பதால், தாங்கள் இதை கண்டிப்பாக தொடர வேண்டும். இதை திரைப்படமாக்க, டிவி நிகழ்ச்சியாக ஆக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருக்கிறோம்.' அவர்கள் தளத்தில் இலவச சேவையில் எழுதியிருந்தாலும் எனக்கு ராயல்டி தர தயாராக இருந்தார்கள்.

நான் தெளிவாகவே சொல்லிவிட நினைத்தேன் இந்தக் கதையை தொடர தயாராக இல்லை என்று... யமுனாவின் அடுத்த அத்தியாயத்தைப் பார்க்கும் வரை.

என் மன வானில்...

ப்புதல் வாக்குமூலத்திற்கு நன்றி. டாக் ஹ்யூர் அணியும் நீங்கள் ஏன் போன மாதம் புதிய ரோலக்ஸ் வாங்கினீர்களாம்? நீங்கள் சமாளிப்பதற்கு முன்னால் இன்னொன்றையும் சொல்லிவிடுகிறேன். நான் அந்த பில்லிலிருந்த மாடல் எண்ணை வைத்து அது ஒரு லேடீஸ் மாடல் என்பதையும் இப்பொழுது தெரிந்து கொண்டேன். இந்த மாதிரி எத்தனையோ ஏமாற்றங்களை சந்தித்தாகிவிட்டது உங்களோடு இந்த 7 வருடங்களில்.

நான்தான் சொன்னேனே நான் ஒரு சாதாரணள் என்று. எனக்கும் சாதாரண ஆசாபாசங்கள் இருந்ததென்னவோ உண்மைதான். எல்லோரையும் ஈர்த்த நான் அவர் ஒருவரால் மட்டுமே ஈர்க்கபட்டேன். ஆனால் ஏனோ வெளியிட முடியவில்லை. அவரிடமிருந்தும் எந்த சமிக்ஞையும் இல்லை. இந்த ஏழாண்டுகளில் எனக்கு நன்றாகவே புரிந்தது நான் அவரை எவ்வளவு மிஸ் பண்ணுகிறேனென்று. செல்வனின் சந்திப்பு ஒரு விபத்து. தொடர் விபத்து. நான் செல்வனிடம் என் காதலை சொன்னேனாம். அவர் பூரணமானாராம். திருமணம் ஆகி 3 மாதங்கள் கழித்துதான் எனது காதலைப் பற்றி தெரிந்து கொள்ளவே அவருக்கு நேரம் கிடைத்தது. காதல் என்பது கேட்டுப் பெறுவதல்ல செல்வன்!

இனி சொல்ல ஏதுமில்லை...




கொஞ்சம் உருக்கமாகவே இருந்தது. பேசாமல் கதையை முடித்துவிட்டதாக அறிவித்து விடலாம். அவர்கள் வேறு கதையில் சண்டை போட்டுக் கொள்ளட்டும். அல்லது இந்த குடும்ப உறவை பாதுக்காக்க ஏதாவது செய்யலாம். செல்வன்கள் திருந்துவார்களா?

ஏன்... இப்படிக் கூட செய்யலாமே. யமுனாவின் பழைய காதலனை இந்தக் கதையில் கொண்டு வந்தால் என்ன? அன்று அவள் சொல்ல தயங்கியதை இன்றாவது சொல்வது அவளுடைய தூய்மையான காதலுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் இல்லையா...

சரி அவள் மனதிற்கு ஒரு ஆறுதலாக இருக்கட்டும் என்று யமுனா தனது பழைய காதலனுக்கு ஒரு நட்பு வாழ்த்து அனுப்புகிறாள் என்று ஒரு சம்பவம் சேர்த்தேன்.

உடன் செல்வனின் எதிர்வினை.

இது கதையல்ல. மோசடி!

து மிகப் பெரிய மோசடி. எனது குடும்ப வாழ்வை காப்பாற்ற வேண்டிய தார்மீக பொறுப்பை இந்த எழுத்தாளர் தவற விட்டுவிட்டார்.

இப்பொழுது எனக்கு ஒரு வாய்ப்பு. இவ்வளவு நாட்களாக யமுனா வெளியிடாமல் வைத்திருந்த காதலனின் பெயர், விலாசம் கிடைத்துவிட்டது. அவனை விலாசமேயில்லாமல் ஆக்கிவிடுகிறேன். இது எனக்கு ஒரு சவால். இதனால் நான் கதையின் விதிகளை மீற வேண்டியிருந்தாலும் கவலையில்லை. இந்தக் கதை அதன் தர்மத்தை விட்டு விலகிவிட்டது எல்லாருக்குமே தெரியும்.



அன்று தபாலில் ஒரு ஆச்சர்யம். அழகான ஒரு நட்பு வாழ்த்து வந்திருந்தது. அட... இது என்ன! என கதையிலிருந்து யமுனா தன் காதலனுக்கு அனுப்பியது. யாருக்கோ அனுப்பபட்டு எனக்கு மாறி வந்துவிட்டதா? இல்லை. எனக்குத்தான் அனுப்பபட்டிருக்கிறது. ஓ!

அப்பொழுது செல்வன்? யாரது இப்படி கதவை தட்டுவது? தட்டுகிறார்களா அல்லது உடைக்கிறார்களா?

முற்றும்


''த்தோடு முடித்துவிடு ' என்று சொன்னான் சுரேஷ்

'இனிமேலாவது ஜாக்கிரதையாக கதை எழுது. இப்படி எக்குதப்பாக மாட்டிக் கொள்ளாமல்'

'சுரேஷ்! உன்னிடம் மட்டும் உண்மையை சொல்லிவிடுகிறேனே. அதோ பார்! அவள்தான் யமுனா.'

'அவளா? நிஜமாகவா? என்னால் நம்பவே முடியவில்லை. கதையில் சொன்ன மாதிரி ஒன்னும் இல்லையேப்பா' என்றவன் நாக்கைக் கடித்து சுதாரித்துக் கொண்டான்.

அவளேதான் யமுனா. என் மனைவி.

23 மறுமொழிகள்:

ஸ்ரீதர் நாராயணன் said...

பினாத்தலார் இந்தக் தலைப்பு நல்லால்லைன்னு சொல்லிட்டார். நல்லவேளை கதை பிடிக்கலைன்னு சொல்லலை. :-)

மீண்டும், உங்கள் தொடர் ஊக்குவிப்பிற்கும், கதையை மேம்படுத்த சொன்ன கருத்துகளுக்கும், நேரத்திற்கும் நன்றி பினாத்தல் சுரேஷ் :-)

பினாத்தல் சுரேஷ் said...

ஸ்ரீதர், கதை நல்லா இருக்கு. உளவியல், நிரலி இதெல்லாம் அறிவியல்தான்னு சொல்றதுக்கு ரெந்து மூணு லிங்க் தேடி வச்சுக்கங்க, பிரயோஜனப்படும்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இதே மாதிரி ஒரு கதை / கவிதை தயாரித்துக் கொடுக்கும் இயந்திரம் ஒன்று சுஜாதாவின் கதையில் வரும்.

வரலாறு 50% காமம் 50% எனக் கேட்க அது ஒரு கவிதை அடித்துத் தரும், அதன் கடைசி வரிகள் (ஞாபகத்திலிருந்து) :

அன்று விதவைக்கு முத்தம் இருநூறு தந்த ராஜராஜ சோழன்.

படிச்சிருக்கீங்களா அந்தக் கதையை??

ambi said...

ஸ்ரீதர், ஒரு வித்யாசமான வாசிப்பனுபவத்தை உண்டாக்கி விட்டீங்க. :)

ஒரு தரம் தான் படிச்சு இருக்கேன். புரியுது, ஆனா ஏதோ புரியலை. நல்லா இருங்கடே!

இதை மாதிரி புது முயற்சிகளை தொடருங்க. கந்தசாமி படிச்சுட்டேன், பின்னூட்ட நேரமில்லை.

Note: ஏதோ ஒரு டெலி சீரியலில் அந்த கதாபாத்ரங்கள் உயிர்ப்பித்து வந்து ஆசிரியரை சதாய்க்கும். தூர்தர்ஷன் தான். பேர் நினைவில் இல்லை.

ambi said...

செவன் இயர் இட்ச்னு வெச்சு இருக்கலாமோ?

வரி விலக்கு கிடைக்காதோ? :p

இட்ச்னா வேற நினைச்சு **ச் ஆக்கிடுவாங்களோ? :))

Anonymous said...

தல இந்த கதை எழுதிவிட்டு, உங்களுக்கு வந்த கெட்ட கனவுகள் எத்தனையோ !!! படிச்சுட்டு 3 காபி குடிச்சுருக்கேன். சுதாஜாவோட 'ஒரு கதையில் இரு கதைகள்' மாதிரி நச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச். Anyway I'm from Biology dept

ஸ்ரீதர் நாராயணன் said...

//அன்று விதவைக்கு முத்தம் இருநூறு தந்த ராஜராஜ சோழன்.//

படிச்சிருக்கலாம். இப்பொழுது நினைவில் இல்லை. சுஜாதாவின் சரித்திரக் கதைகளில் சட்டென நினைவுக்கு வருவது ராஜேந்திரசோழனின் பெண்ணான குந்தவை தமிழ்பால் பெரும் காதலுடன் இருக்க, அவள் மணமுடிக்கும் விமலாதித்தன் (மேலை சாளுக்கிய மன்னன்) முதலிரவன்னிக்கு தெலுங்கில் பேசுவான். :-)

ஸ்ரீதர் நாராயணன் said...

அம்பி அப்பா,

//புரியுது, ஆனா ஏதோ புரியலை. நல்லா இருங்கடே!//

எஸ். ஜே. சூர்யா மாதிரி ஆயிட்டீங்களே இப்படி :-) உங்கள இப்படி ஆக்கின பாவத்தை எப்படி போக்கப் போறேனோ...

நீங்க சொல்றது 'phaticher'ன்ற ஸீரியல். பங்கஜ் கபூர் நடிச்சிருப்பார். :-)

அப்படியே 'சாயாவோட பதிவுகளையும்' படிச்சிடுங்க.

அனானி அண்ணா,

உங்க தொடர் வருகைக்கு நன்றிங்ணா. :-)

பினாத்தல் சுரேஷ் said...

ஜ்யோவ்ராம் சுந்தர் - அந்தக்கதையின் தலைப்பு - கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - சில்லு வெடித்து கதை முடியும்:-)

அம்பி - அந்த தொலைக்காட்சித் தொடர் - சரஸ்வதியின் செல்வன் - சோவுடையது. நல்ல காமெடி - ஒரு ஆர்ட் பிலிமுக்கு கதை சொல்வார் பாருங்க!!!

வரவர டாட்டாபேஸ் மாதிரி ஆய்கிட்டு வரேன்!

ஸ்ரீதர் நாராயணன் said...

//சரஸ்வதியின் செல்வன் - //

அதுல சீரியல் எடுக்கத்தானே செய்வாங்க. சரியா ஞாபகம் இல்லை. 'கொத்து மல்லி ஆத்தா' பாட்டும் 'இஸு, இஸுன்னு நான் இஸுக்கறேன்' பாட்டும் ஞாபகம் இருக்கு. கன்னா பின்னான்னு லந்து விட்டிருப்பாங்க :-))

Phaticher-ல கதையிலிருந்து ஃபட்டீச்சர் தப்பிச்சு ஓடிருவார்ன்னு நினைக்கிறேன். அவரை பிடிக்கிற டிடெக்டிவ்-உம் பங்கஜ் கபூர்தான்.

G.Ragavan said...

ஒரேயொரு கேள்வி மட்டும் கேட்டுட்டு எஸ்சாகிக்கிறேன். ஏன்னா.. கதையில ரொம்பப் பெரிய சமாச்சாரமெல்லாம் இருக்கு.

கதை முடியிறப்போ சுரேஷ்னு ஒருத்தர் வர்ராரே... அவரு பெனாத்தலார்தானே?

ஸ்ரீதர் நாராயணன் said...

//கதை முடியிறப்போ சுரேஷ்னு ஒருத்தர் வர்ராரே... அவரு பெனாத்தலார்தானே//

:-)) கதையில 2 சுரேஷ் வர்றாங்கப் பாருங்க. ஆனா 2 பேருமே பினாத்தவே இல்லை. அவங்க 2 பேரும் ஒண்ணா அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன்.

G.Ragavan said...

// ஸ்ரீதர் நாராயணன் said...

//கதை முடியிறப்போ சுரேஷ்னு ஒருத்தர் வர்ராரே... அவரு பெனாத்தலார்தானே//

:-)) கதையில 2 சுரேஷ் வர்றாங்கப் பாருங்க. ஆனா 2 பேருமே பினாத்தவே இல்லை. அவங்க 2 பேரும் ஒண்ணா அப்படின்னு யோசிச்சிட்டு இருக்கேன். //

அப்ப பெனாத்தலார் உண்மையிலேயே பெனாத்துறார்னு சொல்றீங்களா? இத அவர் கிட்ட நேரடியாச் சொல்ற துணிச்சல் இருக்குதா?

இன்னொரு கேள்வி. அந்த ரெண்டு சுரேஷும் ஒரே சுரேஷா? இல்ல ஒருத்தர் சுர். இன்னொருத்தர் ஏஷாவா??

ஸ்ரீதர் நாராயணன் said...

//அப்ப பெனாத்தலார் உண்மையிலேயே பெனாத்துறார்னு சொல்றீங்களா? இத அவர் கிட்ட நேரடியாச் சொல்ற துணிச்சல் இருக்குதா?//

ஏன் பயப்புடனும்? அப்ப 'பினாத்தல்கள்' நடத்தறது அவர் இல்லையா? அப்ப அது போலியா? போலி எல்லாம் முடிஞ்சிப் போச்சுன்னு சொன்னாங்களே? அட இப்ப நானே பெனாத்த ஆரம்பிச்சுட்டேனே...

//இன்னொரு கேள்வி. அந்த ரெண்டு சுரேஷும் ஒரே சுரேஷா? இல்ல ஒருத்தர் சுர். இன்னொருத்தர் ஏஷாவா??//

இதுக்கு கதையை ஒரு மறு-வாசிப்பு செஞ்சு ஒரு 'கறாரான' விமர்ச்னம் எழுதனும்.(ஹி...ஹி... இந்த வியாதி முத்திடுச்சி).

யோசிப்பவர் said...

தலைப்பு சுமாராயிருந்தாலும். கதை, சொல்லும் வடிவம் எல்லாமே மிக நன்றாயிருக்கிறது. ரொம்ப சிரமம் எடுத்துக் கொண்டுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!!;-)

ஸ்ரீதர் நாராயணன் said...

யோசிப்பவர்,

:-) வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

பிரதாப் போத்தனின் படத்தின் பாதிப்புதான் தலைப்பு. எனக்குப் பிடித்த படம் அது.

இலவசக்கொத்தனார் said...

தலைப்பு - போர் (பெனாத்தல் சொல்லச் சொன்னாரு)

கதை - நல்லாத்தான் இருக்கு. ஆனா முழுசும் புரியாத மாதிரி இருக்கு. (அம்பி சொல்லச் சொன்னாரு)

பின்னூட்டங்கள் அமர்க்களம் - இது நானே சொல்லறது!! :))

ஸ்ரீதர் நாராயணன் said...

இ.கொ.,

தலைப்பு பத்தி அம்பிகிட்டேயும், கதையைப் பத்தி பெனாத்தலார்கிட்டேயும் கேட்டிருக்கனும். :-))

பின்னூட்டங்கள் பத்தி உங்ககிட்டேயே கேட்டுக்கறேன் இனிமேல். :-)

இரா. வசந்த குமார். said...

புது வடிவம். கொஞ்சம் கொஞ்சம் ஆங்காங்கே கிர்ரடித்தாலும்...!

வாழ்த்துக்கள்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

இந்தக் கதைக்கு தானியங்கி விமர்சனம் எழுதித் தருபவர்க்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என்று சுரேஷ் பினாத்தியுள்ளார்!

அந்த ஆயிரம் பொற்காசுகளை அடைய செல்வன் களத்தில் இறங்கி விட்டான்!

யமுனா இன்றும் ஓடுகிறாள்...
காதல் சின்னத்தின் அருகினிலே...

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

மேற்கண்ட அடியேன் பின்னூட்டம், sridharblogs.blogspot.com படிப்பதால் வந்த வினை என்றும் யாரும் தப்புக் கணக்கு போட வேண்டாம்!

அந்தப் பின்னூட்டம்
தானியங்கிப் பின்னூட்டி என்பவள் போட்ட பின்னூட்டம் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்! :)))

சிறில்
சீக்கிரம் ரிசல்ட் சொல்லிருங்க...ப்ளீஸ்! :))

ஸ்ரீதர் நாராயணன் said...

//sridharblogs.blogspot.com படிப்பதால் //

www.sridharblogs.com படிக்காம வேற எங்கியோ போய் படிச்சிட்டு வந்திருக்கீங்கப் போல :-)). அதான் பிரச்சினை.

தானியங்கி பின்னூட்டப் பெட்டி எல்லாம் வச்சுப் கமெண்ட் போட்ட word verification enable பண்ணிட வேண்டிதான் போல :-)

ஸ்ரீதர் நாராயணன் said...

//தானியங்கி விமர்சனம் எழுதித் தருபவர்க்கு//

'தான்' 'எனது' என்பதை விட்டொழித்து தன்னை 'இயக்கும்' பரபொருளோடு ஒன்றிணையும் விஷிஷ்ட அதவைத தத்துவ மரபில் 'விமர்சனம்' என்பது எப்படிக் கொள்ளப்படும்? :-)