வாடிக்கையாளர் சேவை பிரிவில் அந்தப் பெண் உற்சாகமாக கையசைத்தாள். பார்பி பொம்மை போல் ஒரு தோற்றம். 'ப்ளீஸ்... உங்களூக்கு எப்படி உதவி செய்வது?' என்றாள். 'ஹி..ஹி... பாருங்கள்... இதை வாங்கி ஒரு வாரம் ஆகின்றது. ஆனால் காதில் செருகினால் வலி ஏற்படுகிறது. வேறு ஏதாவது மாற்றிக் கொள்ளலாம் என்று பார்க்கிறேன்' 'ஓ... ' என்றவள் நான் கொடுத்த ப்ளூடூத் காதணியை பார்த்தாள். செல்போனை காதில் வைத்து பேசுவதின் அபாயத்தைக் குறைக்க பயன்படும் கம்பியில்லா சாதனம். காதோடு மாட்டிக்கொண்டு காற்றோடு பேசுவது போல் பேசலாம். பொதுவாக இது மாதிரி வாங்கிய பொருளை மாற்றவோ / திரும்பி கொடுக்கவோ சென்றால் இந்த எலக்ட்ரானிக்ஸ் கடையில் அதிகம் கேள்வி கேட்க மாட்டார்கள். 'ஹ்ம்ம்.... கொஞ்சம் உங்கள் வலது காதை காட்டுங்கள்' 'ஆங்... என்னது? எதற்கு?' 'இந்த சாதனத்தில் ஏதும் பிரச்சினை இருப்பதாக தெரியவில்லை. உங்கள் காதையும் பார்த்துவிடுவோம். அதில் பிரச்சினை இருப்பின் நீங்கள் எந்த தயாரிப்பை வாங்கினாலும் உங்கள் காதுக்கு பொருந்தாது' என்று சிரித்தாள். அந்தக் கன்னத்தின் அழகான குழிகளும் சிரித்தன. 'எனக்கு காதை காண்பிக்க வேண்டுமென்றால் நான் மருத்துவரிடம் செல்வேன் மிஸ்.. மிஸ்... ' அவள் பெயர்ப் பலகையை கொஞ்சம் மெதுவாகப் படித்தேன். 'மிஸ். லிஸி. நீங்கள் இந்தப் பொருளை திருப்பி எடுத்துக் கொள்ளுங்கள்.' கொஞ்சம் அழுத்தமாகவே சொன்னேன். அவள் சுவாதீனமாக தன் குளிர்விரல்களால் என் மோவாயை திருப்பி நான் எதிர்பார்க்காத பொழுது ஒரு குறடு மாதிரியான சாதனத்தை காதில் விட்டு ஒரு திருப்பு திருப்பிவிட்டாள். 'ஆ.... ஓவ்! நீ என்ன டாக்டரா...? நீ பாட்டுக்கு காதுல விட்டு குடையுற' என்று நான் குரலை உயர்த்தி கத்தியதை பொருட்படுத்தாமல் அவள் வசீகரமாக முறுவலித்துக் கொண்டே 'இப்பொழுது போட்டுப் பாருங்கள். எல்லாம் சரியாக இருக்கும்.' என்றாள். உண்மைதான். ஏதோ ஒரு மாற்றம் இருக்கத்தான் செய்கிறது. பச்சக் என்று ஒட்டிக் கொண்டது. ஆச்சர்யம் என்னவென்றால், இவ்வளவு கத்து கத்துகிறேன், பக்கத்து கவுண்டரில் இருக்கிறவர்கள் அசைந்தபாடில்லை. பின்னால் க்யூவில் இருந்த மனிதர்களும் 'தேமே'வென்று நின்று கொண்டிருக்கிறார்கள். 'சந்தோஷம்தானே? பயப்படாதீர்கள். இந்த மாதிரி சேவைகள் வெகுசிலருக்கு மட்டுமே செய்வோம்.' 'எந்த மாதிரி சேவைகள்? யார் யாருக்கு செய்வீர்கள்? ' புரியாத மாதிரி கேட்டேன். 'இது பூமி 2.0 சேவைகள். தற்போது உங்களைப் போன்ற வெகு சிலரே இந்த மேம்படுத்தப் பட்ட சேவைகள் பெறுகிறீர்கள்.' என்னைப் பார்த்து கண்ணை சிமிட்டிக் கொண்டே, 'உங்களுக்குத்தான் இதில் எல்லாம் ஆர்வம் அதிகம் உண்டே. நிறைய கோக்குமாக்கான கதைகள் எழுதுகிறீர்களே' |
இப்படித்தான் டாக்டர். கண்டபடிக்கு எதையோ கிறுக்கித் தள்ளிக்கிட்டிருக்கார்' என்றான் ஜெகன். 'ஓ! அப்புறம் காது வலி வரவில்லையா?' டாக்டர் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார். 'தெரியல டாக்டர். எங்ககிட்ட எதுவும் சொல்லல. அன்னிக்கு அகில், அவன் ஃப்ரெண்ட்ஸ்களை கூட்டி வைத்துக் கொண்டு விலாவாரியா விளக்கிட்டு இருக்கார். இந்த பூமியை அப்கிரேட் பண்றாங்க 2.0., புதிய சேவைகள், என்னென்ன சம்பவங்கள் நடக்கப் போவுதுன்னு. என்னெனென்னமோ. அரைகுறையா கேட்டேன். ஏதோ தமாசு பண்றாருன்னு நினைச்சேன்.' 'இந்த பேப்பர்லாம் பாத்தப்போ பயமாயிட்டு' என்று அனுபமா சில பேப்பர்களை காண்பித்தாள். டாக்டர் அந்த பேப்பர்களை மேலெழுந்தவாரியா பாத்துவிட்டு. 'ஏதோ, டீவி நிகழ்ச்சி பத்தி எழுதின குறிப்புகள் மாதிரி இருக்கு' 'ஆமாம் டாக்டர். அவர் ரூமில ஒரு டீ.வி. இருக்கு. என்ன ப்ரோக்கிராம் பாக்குறார்னு தெரியல. ஆனாப் பாருங்க ஏதோ ரியாலிட்டி ஷோ மாதிரி குறிப்பெடுத்திருக்கார்' 'ஹ்ம்ம்... யாரிந்த ஜெனிஃபர் காமர்ஃபோர்ட்... ஏதோ சமைக்கிறதை பத்தின நிகழ்ச்சிப் போல' 'கேட்டா அமெரிக்க வெள்ளை மாளிகை தலைமை செஃப்ன்னு சொல்றார். வெள்ளை மாளிகையை நேரில பார்த்த மாதிரி குறிப்பு எழுதி வச்சிருக்கார். எல்லாம் டீவி பார்த்துததன்னு சொல்றார். நானும் ரிசர்ச் பண்ணிப் பார்த்தேன். பேரெல்லாம் கரெக்டா இருக்கு. ஆனா அது மாதிரி எந்த டீவி நிகழ்ச்சியும் கிடையாது' 'நோபல் பரிசைப் பத்திக் கூட எழுதியிருக்கார். ' என்றவர் பேப்பரிலிருந்து அவர்கள் பக்கம் கண்களைத் திருப்பி 'சரி. இதை வச்சு உங்கப்பா பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க? அதுதான் முக்கியம்.' என்றார் டாக்டர். |
'ராம்! இவர்தான் புரபஸர் கெர்ஷோன் விட்சர். நான் சொன்னேனே நோபல் பரிசு வாங்கப் போகிறவர்ன்னு' நெற்றியில் விழுந்த முடிக் கற்றைகளை ஒதுக்கியவாறே சிரித்தாள் லிஸி. அவளுடைய தலையில் இரண்டு கலைமான் கொம்புகள் சிறியதாக ஆனால் கவர்ச்சியாக. 'லிஸி! உனக்கென்ன வயசு?' கலைமான் கொம்புகள் வைத்து அதன் வயதைக் கணக்கிட முடியும் என்று படித்திருக்கிறேன். லிஸி எனது கேள்வியை கவனிக்காமல் தொடர்ந்து... 'கெர்ஷோன்தான் இயற்பியலின் அடுத்த பௌதீக அதிசயத்தை நிறுவப் போகிறவர். ரிலேட்டிவிட்டிப் போல பூமியை இன்னமும் ஒரு 1000 ஆண்டுகள் முன்னேற்றும் முக்கியமான தேற்றம் அது. உங்களை எல்லாம் இன்னமும் எத்தனை ஆயிரம் வருடங்கள் முன்னே நகர்த்த வேண்டியிருக்கிறது தெரியுமா? இந்த பூமி 2.0 அப்கிரேட் முடிக்க இன்னமும் 5 ஆண்டுகள்தான் நேரம். ஆனாலும் நீங்கள் ரொம்பவும்தான் பின்தங்கியிருக்கிறீர்கள். நிறைய வேலைகள் இருக்கிறது ராம். உனது குறிப்புகள் பத்திரம். சீக்கிரமே அறிக்கைகள் தயார் செய்ய வேண்டும். ' அவள் சென்று விட்டாலள். கூடவே கெர்ஷோன், மந்திரித்து விட்ட கோழி போல. லிஸி நமது மூதாதையர்களுக்கு எல்லாம் மூதாதையர். ஆண்ட்ரமீடா கேலக்ஸியிலிருந்து இந்த பூமியை கண்டுபிடித்த ஆதி மனித இனத்தை சேர்ந்தவள். அங்கிருந்து நுவா தலைமையில் புறப்பட்டு வந்த ஒரு சிறு குழுதான் (அடீம் குழு என்பாள் லிஸி) இந்த பூமி வாழ உகந்தது என்று தீர்மானித்து இங்கு சந்ததிகளை பரப்பினார்கள். இது அடுத்த குழு. பூமியை அடுத்த நிலைக்கு உயர்த்த வந்திருக்கிறார்கள். மனிதர்களைப் போலவே கலந்து விட்டார்கள். அதிசயமாக என்னைப் போல் சிலருக்கு உண்மை தரிசனம் தருகிறார்கள். |
இண்டிரெஸ்டிங்' என்றார் டாக்டர் சிரித்துக் கொண்டே. 'அவர் எழுதற கதைதான்னு நினச்சிகிட்டிருந்தோம். ஆனா இப்பல்லாம் அகில்கிட்ட ரொம்ப பேசுறார். தப்புதப்பா சொல்லி இவனையும் கெடுத்து வச்சிருக்கார். இவனும் இப்ப என்னல்லாமோ கதையெல்லாம் சொல்றான். அதான் ரொம்ப பயமா இருக்கு.' என்ற அனுபமா, பக்கத்தில் இருந்த பத்து வயது பையனைப் பார்த்து 'தாத்தா வானத்தைப் பத்தி என்ன சொன்னார்ன்னு அங்கிள்கிட்ட சொல்லு' என்று தூண்டினாள். அந்தப் பையன் கொஞ்சம் கூச்சத்துடன் நெளிந்தவன் பிறகு 'வானம் சுருங்கும். அப்புறம்... அப்புறம் வளி கனக்கும். நீரில் பிம்பம் தெரியாது... அப்புறம்..' என்று தொடர்ந்து ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க , டாக்டர் கெக்கெக்-ன்னு சிரித்தார். 'அது என்ன வானம் சுருங்கும்?' அகில் 'நிறைய சாட்டிலைட் வந்துட்டா வானமே தெரியாதே. அப்புறம் காத்துல கார்பனும், சல்பரும் கலந்துட்டா...' என்று மேலும் சொல்லிக் கொண்டு வர, 'அகில் போதும். இந்த உளறலை நிப்பாட்டு' என்றாள் அனுபமா. 'என்னமோ பழங்கால சித்தர் பாடல் மாதிரி... உங்க அப்பா நிறைய கதை எழுதியிருக்காரோ. சாரி நான் தமிழ்ல அவ்வளவா படிச்சது இல்லை. ஜூவி, ரிப்போர்டர், மாதிரிதான் படிப்பேன். நல்ல பொழுதுபோகும் பாருங்க' என்றார் ஜெகனிடம். 'நிறைய எழுதியிருக்கார் டாக்டர். ஆனா இந்த மாதிரி நிஜ வாழ்க்கையையும் கதையையும் குழப்பிகிட்டதில்ல.' என்றவன் கொஞ்சம் நிறுத்தி 'இதுவரைக்கும் குழப்பிக்கிட்டதில்ல!' டாக்டர் அந்த புத்தக அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டியவர் 'டெல்யூஷன்ஸ், ஹலுசினேஷன்ஸ் அசோசியேட்டட் வித் ஸைக்கோஸிஸ்' என்று சொல்லிவிட்டு அவர்களை நிமிர்ந்து பார்த்தார். 'புரியற மாதிரி சொல்றதுன்னா, ம்ம்ம்... இப்ப நம்ம எல்லாருக்கும் காட்சிகள் ஒரே மாதிரி தெரியுது. ஆனா சில பேருக்கு அதேக் காட்சிகள் வித்தியாசமாக தெரியும். உதாரணத்திற்கு நீங்க இப்ப என்னைப் பாக்குறீங்க... ஒரு சாதாரண மனுஷனுக்கு உண்டான இலட்சணங்களோடு இருக்கேன். கையில் இந்த புக் வச்சிருக்கேன். பாருங்க... இப்ப திடீர்னு உங்க அப்பா இங்க வந்து 'இவனுக்கு பின்னால நீளமா ப்ரௌன் கலரில் குதிரைவால் தொங்குதுன்னு' சொன்னா உங்களால நம்ப முடியுமா?' ஜெகனும் அனுபமாவும் குழப்பமாக பார்க்க, அகில் தீவிரமாக டாக்டரின் பின்புறத்தை எட்டிப் பார்த்தான். டாக்டர் சிரித்துக் கொண்டே அகில்-க்கு அருகில் வந்து அவன் கன்னத்தை தட்டினார். 'இதுதான் பிரச்சினை. சில பேருக்கு இந்த மாதிரி வித்தியாசமான தோற்றங்கள் தெரியும். குரல் கேட்கும். செய்திகள் கிடைக்கும். அவங்களுக்கு தெரியறது நமக்கு தெரியறது இல்ல. இது எல்லாம் அவங்க கறபனைன்னு அவங்களுக்குப் புரியாது. இது ஒரு வகை மனப் பிறழ்வு நோய். ஷிஸோப்ரினியா' என்றார். அனுபமா பதற்றமாக 'பைத்தியம்னு சொல்றீங்களா?' அவளைக் கொஞ்சம் விரோதத்துடன் பார்த்த ஜெகன் 'டாக்டர், ப்ளீஸ் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்களேன்' 'பண்றேன். பண்றேன். உங்கள் அப்பா வேறு ஒரு உலகத்தை சிருஷ்டித்துக் கொண்டிருக்கிறார். இந்த மாதிரி நிறைய கேஸ்கள் இருக்கின்றன. ஐ மீன்... நிறைய கதைகள் இருக்கின்றன. அயல் கிரகத்து மனிதர்கள்... கண்ணுக்கு தெரியாத மின் கலங்கள்...' என்றவர், அவர்களை தீர்க்கமாக பார்த்து 'நான் அவர்கிட்டப் பேசியே ஆகனும்'. ஜெகன் சங்கடமாக 'எப்படி கூட்டிட்டு வர்றதுன்னுதான் தெரியல' அனுபமா இப்பொழுது அவனை விரோதமாகப் பார்த்தாள். 'நோ... நீங்க கூட்டிட்டு வந்தா அவர் ஒத்துக்க மாட்டார். பாருங்க இப்பவே அகில்-ஐ நம்பற அளவுக்கு அவர் உங்களை நம்பறதில்லை. நான் சில மருந்துகள் தரேன். அவர் நார்மலா சாப்பிடற சக்கரை நோய் மருந்துகளோடு சேர்த்து கொடுங்க. அதிக வித்தியாசம் தெரியாது' என்றவர் மோவாயை தடவிக் கொண்டே 'இந்தக் கேஸை வேறு வகையில்தான் கையாள வேண்டும்' என்று அவர்களை நோக்கி சிரித்தார். |
'ராம்! வழக்கமான மதுபான விடுதிக்கு வந்துவிடு' என்று காலையில் லிஸி ப்ளாஷ் செய்தி அனுப்பியிருந்தாள். ஆண்டிரமீடா டிவி சேனலில் கிட்டத்தட்ட எல்லாவித தகவல் பரிமாறும் வசதிகளும் இருக்கின்றன. லிஸி சொல்வது சரிதான். பூமி செல்ல வேண்டிய தூரம் அதிகம்தான். பூமி 2.0 நிகழும் நாளை எதிர்பார்த்து எனக்கு மயிர்கூச்செறிகிறது இப்பொழுதே. அன்று கொஞ்சம் படபடப்போடு காணப்பட்டாள் லிஸி. எத்தனை வேலைகள் பார்க்கிறாள் அவள். இன்னமும் இரண்டு மாதங்களில் பீரியாடிக் டேபிளில் அதிரடி மாற்றங்கள் நிகழப் போகின்றனவாம். புதிய எலிமெண்ட்கள் 27 சேர்க்கப் போகிறார்கள். 'ராம்... நீ எங்கள் கேப்டனை சந்திக்க வேண்டும்.' என்றவள் கொஞ்சம் தயங்கியவாறு 'வெகு முக்கிய செய்தி இது' என்றாள் 'எங்கே இருக்கிறார் உங்கள் கேப்டன்?' ஷெல் பிரேம் கண்ணாடிப் போட்டுக்கொண்டு வாத்து நடை நடந்து வந்தார் கேப்டன். படிய வாரிய தலை. நான் முந்திரிக் கொட்டையாக 'சான் பிரான்ஸிஸ்கோ காண்பிரென்ஸிற்கு அட்வாண்ஸ்ட் வாழ்த்துகள்' என்றேன் அவர் லிஸியையும் என்னையும் மாறி மாறி பார்த்துவிட்டு 'லிஸி சொல்லவில்லையா உங்களிடம்?. புரோக்ராம் கான்ஸல்டு' என்றார். 'ஏன் என்ன ஆச்சு?' என்றேன் புரியாமல். 'நான் சொல்லவில்லை கேப்டன். ராம் நிறைய ஆர்வமோடு குறிப்புகள் எடுத்துக் கொண்டிருந்தார். இந்த துயரச் செய்தியை நீங்களே சொல்லிவிடுங்களேன்' 'ராம். கொஞ்சம் அமைதியாக இருங்கள். உங்களுக்கு இருதய நோய் எதுவும் இல்லைதானே?' 'கேப்டன். இந்தப் பீடிகைதான் பயமாக இருக்கிறது. 'பட்'டென்று சொல்லிவிடுங்களேன். பூமிக்கு ஏதும் ஆபத்தா? 'அதெல்லாம் ஒன்றும் இல்லை.' என்றவர் கொஞ்சம் பெருமூச்சு விட்டுவிட்டு, 'பூமிக்கு அதிர்ஷ்டம்தான் இல்லை' 'என்ன ஆச்சு?' 'பூமி 2.0 பிராஜெக்ட் ஒத்தி வைத்து விட்டார்கள். நாங்கள் எல்லாம் திரும்ப வேண்டியதுதான். கொஞ்சம் கொஞ்சமாக'. குரலில் நிறைய வருத்தம் இருந்தது. 'ஏன்? என்ன பிரச்சினை' எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எவ்வளவு சுபிட்சமான நிலை ஏற்பட்டிருக்கும். இப்படி கை நழுவிப் போகின்றதே. 'எல்லாம் அரசியல்தான். எங்கள் உலக அரசியல். எங்களை பார்போன் கேலக்ஸிக்குப் போகச் சொல்லி உத்தரவு. இந்த அப்கிரேடிற்கு எதிரான சில குழுக்களினால் இந்த நிலைமை. மேலும், உங்கள் பூமியில் வேலைகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன ராம்.' என்றார் ஆயாசத்துடன். 'இது அடாவடித்தனம். இதை நீங்க இப்படி விட்டுட்டுப் போயிட்டா, பூமிக்கு விமோசனமே கிடையாதா?' நான் பதட்டத்துடன் கேட்டேன். 'நீங்கள் வருத்தப் படாதீர்கள். பிறிதொரு நாள் இது நடைபெறத்தான் போகிறது. வேறு ஒரு காலம். வேறு ஒரு குழு. சில ஆயிரம் வருடங்களில் நடக்கலாம்' நம்பிக்கையாக சிரித்தார். என்னவென்று சொல்ல? ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு, இப்பொழுது பதக்கம் தர முடியாது என்று சொன்னால்... கேப்டன் தீவிரமாக 'ராம், உனது குறிப்புகளை அழித்துவிடு. எல்லாவற்றையும் மறந்து விடு. சகஜமாக இரு. நாங்கள் பார்போன் கேலக்ஸிக்கு செல்கிறோம். பை பை'. அவர்கள் திரும்பி நடந்தார்கள். அப்பொழுதுதான் கவனித்தேன். அந்த கேப்டனிற்கு பின்னால்... அது என்ன நீளமாக, ப்ரௌன் நிறத்தில... ஒரு குதிரைவால் மாதிரி தொங்கிக் கொண்டிருந்தது. |
'இப்ப ரொம்ப தேவலாம் டாக்டர்' என்றான் ஜெகன். அனுபமா கூட கொஞ்சம் சந்தோஷமாகவே இருந்தாள். 'எங்களோட இயல்பா பேசுறார். எங்க கூட உக்காந்து டிவி பாக்குறார். அகிலோட ஸ்கிராம்ப்ளர் எல்லாம் விளையாடுறார். அவர் நார்மலா ஆயிட்டார்னுதான் தோணுது. ரொம்ப தேங்க்ஸ்' 'நோ ப்ராப்ளம். ஆக்சுவலி நான் அதிகமா ஒண்ணும் செய்யல இந்த கேஸ்ல. மருந்து மட்டும் இன்னமும் ஒரு மாசம் தொடருங்க.' என்று டாக்டர் புன்னகைத்தார். 'ஒரு நாள் உங்கள சந்திக்க கூட்டிட்டு வரட்டுமா? அடிப்படையில அவர் ஒரு சுவாரஸ்யமான மனுஷன்' 'ஓ! உங்ககிட்ட இன்னமும் சொல்லலியா நான்... இந்தாங்க இவர் என்னோட நண்பர். இங்கதான் பக்கதில இருக்கார்.' என்று ஒரு விசிட்டிங் கார்டை நீட்டியவர் 'நீங்க இனிமேல் இவரையே உங்க பெர்சனல் டாக்டரா பாவிக்கலாம். நான் வேலை நிமித்தமாக வேற ஊருக்குப் போகிறேன்' என்ற டாக்டர் மெதுவாக தன் ஷெல் பிரேம் கண்ணாடியை துடைத்து மீண்டும் போட்டுக் கொண்டார் 'திரும்பி இங்க வருவேன்னு சொல்ல முடியாது. அகில்! ஐ வில் பி மிஸ்ஸிங் யூ ஆல்!' 'அப்ப அந்த குதிரைவால்? அதை எனக்கு கொடுப்பீங்களா டாக்டர்?' என்று கேட்டான் அகில். |
13 மறுமொழிகள்:
கதைக்கு 'குதிரைவால்' என்பது பொருத்தமான தலைப்பாக இருக்கும். ஆனால் அது கதையின் சுவாரஸ்யத்தை கெடுக்கும் அபாயம் இருந்ததால் கைவிட்டுவிட்டேன் :-)
ஏன்? ஏன் இப்படி? நம்மூர்கார குரளி வித்தை கணக்கா இருக்கு கதை. :)
சரி, எனக்கு உங்க பிளாக் ரெண்டு கலர்ல தெரியுதே. :p
எனக்கு மட்டும் தானா? இல்ல, எல்லாருக்கும் இப்படி தானா?னு யாரச்சும் சொன்னா புஷ்பக விமானத்தில் விஷ்ணு தூதர்கள் அழைத்து போக கடவீர்கள். (கோடி புண்யம் என்பதை தான் சுஜாதா ஸ்டையிலில் சொன்னேன்) :))
வழக்கம் போல கதையும், கற்பனையும் நன்றாயிருகிறது. இப்ப இதுதான் பிரச்சினை. உங்களுக்கு புரியறது, எனக்கு புரியறது இல்லை. டாக்டர் ஏன் ஜெகனிடமும், அனுபமாவிடமும் குதிரவால் தெரிகிறதா என்று கேட்கிறார்(அவ்வளவு மடையரா அவர்?). அகிலிடம் கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது.
குதிரை வால் கண்ணுக்குத் தெரியும்.
இந்தக் கதைதான் என் மிகச்சிறிய அறிவுக்கு எட்டவில்லை:)
வித்தியாசமாக் கதை சொல்கிறீர்கள். விறுவிறுப்பான நடையும்கூட.
லகுவான வாசிப்பிற்கென மட்டுமில்லாது கொஞ்சம் சீரியஸ் கதைகளும் முயற்சித்துப் பாருங்களேன்...
அம்பி, எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியறது போய் இப்போ ரெண்டு ரெண்டு கலரோட நிக்குதேன்னு சந்தோஷப்படுங்க!! :)
அம்பி,
:-) கோடி புண்ணியம் அவ்வளவு சுலபமா கிடைச்சிடுமா?
ஏதோ வித்தை இருக்குன்னு நம்பறீங்கப் பாருங்க. அதுவரைக்கும் வெற்றிதான் :-))
யோசிப்பவர்,
//உங்களுக்கு புரியறது, எனக்கு புரியறது இல்லை. //
ஆஹா... எனக்கே இப்ப என்னைப் பற்றி சந்தேகம் வந்துடும் போல :-))
டாக்டர் உதாரணம் மூலம் ஷிஸோப்ரினியாவை விளக்கத்தானே முயற்சிக்கிறார். :-)
வல்லியம்மா,
குதிரைவால் உங்களுக்கும் தெரியுதா? :-)) எளிமையா சொல்லனும்னுதான் முயற்சி பண்ணினேன். சரி வரலைப் போல. :-)
சுந்தர்,
உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.
//சீரியஸ் கதைகளும் முயற்சித்துப் பாருங்களேன்//
முயற்சிப் பண்றேன். எளிமையா ஆனால் காத்திரமா எழுதனும்னுதான் ஆசை. :-)
இ.கொ,
//எல்லாம் ரெண்டு ரெண்டா தெரியறது போய் இப்போ ரெண்டு ரெண்டு கலரோட நிக்குதேன்னு //
அவருக்கு எல்லாம் 'ரெண்டு'தான் போல :-))
இந்த மேட்டர் அவ்விடம் மேலிடதுக்கு தெரிஞ்சா 'துடைப்பக் கட்டையும்' ரெண்டுதானாம். :-)
பெருவாரியான (?!) வாசகர்களின் கருத்துக்கு ஏற்ப சிற்சில மாற்றங்கள் செய்திருக்கிறேன் கதையில். எல்லோரும் மீண்டும் படித்து களிப்படைய வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் :-))
உண்மையில கதைய முழுசா படிக்கலை. உங்க பதிவுங்கறதால், தலைய விட்டுப் பார்த்தேன். என்னடா சுஜாதா கத (நடை/கருத்து) போலிருக்கே, ஷீஸோஃபிரியாணியா;)ன்னு நினைச்சா பின்னூட்டத்தில் அது தான் போட்டிருக்கீங்க. அப்பாடி, எனக்கும் கதை புரிஞ்சிட்டுதே! நல்லா இருக்கு.
மாத்திச் சொல்றேன்: கதை மாற்றங்களோட வெற்றி இது;)
//உண்மையில கதைய முழுசா படிக்கலை. உங்க பதிவுங்கறதால், தலைய விட்டுப் பார்த்தேன். //
மாத்திச் சொல்றேன்: கதை மாற்றங்களோட வெற்றி இது;)//
அக்கா,
இப்பவாச்சும் கதையை முழுசாப் படிச்சீங்கன்னு நம்பறேன். :-))
சுஜாதாவோட சாயல் தெரியுதா? மாத்திக்க முயற்சி பண்றேன். எளிமையாத்தான் எழுதனும்னு முயற்சி பண்றேன்.
ஆமாம்... எங்கபிடிச்சீங்க இந்தப் பெயரை :-). ஏதோ 'கிழக்கு பக்கம் போற புத்த பிக்கு' மாதிரி இருக்கே :-)).
ஸ்ரீதர் நாராயணன்
கதை நல்லா இருந்தது ( மாற்றத்துக்கு முன்னாடி படிக்கலை :))
இதுவும் அறிபுனைக் கதை போட்டிக்கு போகுதா ? அப்படீன்னா வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பூமி அப்கிரேட் 2.0 - ஏனோ இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் ஞாபகத்துக்கு வருகிறது :) இல்லை என்னுடைய "ஹலுசினேஷன் அசோசியேட்டட் வித் ஸைக்கோஸிஸ்'ஆ இருக்குமோ :)
சங்கர் அண்ணா,
உங்க பாராட்டுக்கு நன்றிங்ணா. :-)
இந்திய அமெரிக்க ஒப்பந்தத்தைப் பத்தி என்ன தோணுதுங்கறதைப் பொறுத்து, நீங்க ஏகாதிபத்திய அடிவருடியா, மறுகாலனியாதிக்க ஆதரிப்பாளாரா, சீனாவோட கைத்தடியா, இந்துத்வ வெறியாளரா, இஸ்லாமிய மத அடிப்படையாளரா, இப்படியெல்லாம்தான் சொல்ல முடியும்.
மேலே சொல்லப்பட்ட நிலைகளுக்கும் ஸைக்கோஸிஸ் நிலைக்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்று நான் சொன்னாலும் நீங்க நம்பவா போறீங்க? :-))
Post a Comment