உங்களின் கடின உழைப்பு எல்லாரும் அறிந்ததே. இந்த 'சுவர்க் கோழியின் சங்கீதம்' சிறுகதை தொகுப்பு பொறுக்கியெடுத்த முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுவர்க்கோழிகளின் 'க்ரீச்ச்' சத்தத்தின் இடையே ஒலிக்கும் அந்த மௌனத்தை சஙகீதம் என்று சொல்லாமல் எப்படி சொல்வதாம்? இழந்து கொண்டிருக்கும் சுயத்தை இந்த சுவர்கோழிகள் சத்தமாகவே சொல்கின்றன. உங்கள் நடை அப்படி இருந்தாற்ப்போல இருந்த சுழட்டி விட்டு விடுகிறது. தெளிவான நீரோடையில் திடீரென்று சுழித்து கொண்டு ஓடும் காட்டாறு போல், காலடியிலிருந்து கம்பளத்தை உருவி விட்டு விடுகிறீர்கள். உங்கள் பலமே சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்து படிப்பவனை புரட்டிப் போடுவதில்தான் இருக்கிறது. அந்த சம்பாஷணைகள் எல்லாம் என்னை எனது கல்லூரிக் காலத்திற்கு கொண்டு தள்ளுகிறது. ஒரு சமயம் நீங்கள் இன்னமும் விரிவாக விவாதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை வாசகன் அதை பூர்த்தி செய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களோ?
படித்தவுடன் கடிதம் எழுதத்தான் உட்கார்ந்தேன். அதற்குள் சில வேலை அழுத்தங்கள். இதோ உங்களது 'ரசவாத குறிப்புகள்' ஏழாம் முறை படித்தாகி விட்டது. படித்ததும் ஒரு பத்து நிமிடங்களுக்கு வேலையே ஓடவில்லை. சிவவாக்கியர் பாடலில் வரும் 'வில்லின் ஓசைக்கு' சம்பூர்ண சாமியாரின் விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது. இப்படி யாரும் இதுவரை யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையின் பேரில் ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணம் அந்த இறுதிக் குறிப்புகள்தான்.
எங்கேயிருந்து நீங்கள் அந்த குறிப்புகளை சேகரித்தீர்களோ தெரியாது, ஆனால் அவையத்தனையும் உண்மை என்பது திண்ணம். பொதுவாக ரசவாதம் என்றாலே இரும்பை தங்கமாக மாற்ற ஏழு படிகள் சொல்லப்படுகின்றன. சுத்தப்படுத்துதல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், கரைத்தல், பிரித்தல், விடுவித்தல் மற்றும் கெட்டிபடுத்துதல். இதைத் தவிர உபரி படிகளும் உண்டு. கதிரியமும், காந்தபடுத்துதலும் அப்படியான உபரிப் படிகளில் வரும். உங்கள் கதையில் என்னைக் கவர்ந்தது அந்த செய்முறையின் உபரிப் படிகளை பிரித்துக் கண்டறிந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில் தவறித்தான் போய் இருக்கின்றனர். இதை சொல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கும் இந்த ரசவாதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
பல தலைமுறையாக இந்த ரசவாதம் என்னும் பேய் எங்கள் பரம்பரையை பீடித்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒருவருக்கு இந்த கிறுக்கு பிடித்துவிடும் போல. இறுதியாக எங்கள் முத்து தாத்தா. குடும்பம் குட்டி என்று எதுவுமில்லாத தனிக்கட்டை அவர். அவருடைய சொத்தெல்லாம் ரசவாத ஆராய்ச்சி பற்றிய அவரது தனியாத ஆர்வமும், புரியாத குறிப்புகளும், அவருடைய யானைக்கால் வியாதியும்தான். இறுதிக் காலத்தில் போக்கிடம் எதுவும் இல்லாத முத்து தாத்தா, கிறிஸ்டோபராக மாறி ஆஸ்டின்பட்டியில் ஒரு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். எல்லா ஜீவன்களுக்கு ஏதோ ஒரு வழி வைத்துதான் இருக்கிறான் அந்த ஆண்டவன்.
எங்கள்து பெற்றோருக்கு நாங்கள் (எனக்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா) முத்து தாத்தாவோடு பழகுவது பிடிக்கவே பிடிக்காது. அவருடைய யானைக்கால் வியாதியினால்தான் இப்படி என்று நினைத்திருந்தோம். பிறகுதான் அம்மா சொன்னார்கள் 'ஏழு தலைமுறைக்கு சாபம் இருக்கு மகனே' என்று. அந்தக் கதை சுவாரசியமானது.
எங்கள் முப்பாட்டன்களில் ஒருவர் கடல்கடந்து கப்பலில் பிரயானம் எல்லாம் செய்திருக்கிறாராம். அப்பொழுது கடல்கடந்த சீமையில் ஒரு முனிவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அம்மா அப்படித்தான் சொன்னார்கள். பரசீல முனிவர் என்று பெயர்கூட சொன்ன மாதிரி ஞாபகம். அந்த முனிவர் நடத்திக் காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ரசவாதம். இரும்பை அப்படியே சொக்கத் தங்கமாக்கி காட்டும் அற்புதம். எங்கள் முப்பாட்டன் ஒரு நல்ல நேரமாகப் பார்த்து அந்த ரசவாத குறிப்புகளை திருடிக் கொண்டு பாரதம் ஓடி வந்துவிட்டார். கூடவே வந்தது ஏழு தலைமுறை சாபம். அந்த ரசவாத ஆராய்ச்சி ஒரு சைத்தான் போல எங்கள் குடும்பத்தை பீடித்தது. தலைமுறையில் யாராவது ஒருவரை அதற்கு தீனியாக கொடுக்க வேண்டும் போல. அந்த முப்பாட்டன் திருடிக் கொண்டு வந்த குறிப்புகள் ஏதோ புரியாத மொழியில்தான் இருக்கும். எங்கள் பரம்பரையில் ஒவ்வொருவரும் அந்த குறிப்புகளை தங்களுக்குத் தெரிந்த முறையில் ஆய்ந்து தோய்ந்து அரைப் பைத்தியமாகவே ஆகியிருந்தனர். நிறைய உபகுறிப்புகள் சேர்ந்து அது ஒரு பெரும் ஆராய்ச்சி புதினமாகவே மாறி விட்டிருந்தது. அம்மாவின் கணக்குப்படி முத்துத் தாத்தாவோடு தலைமுறை கணக்கு முடிந்து சாபம் விலகிவிட வேண்டும். தாத்தா எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி என்று ஒருவித பைத்தியமான நிலையில்தான் இருந்து வந்தார். எப்போதும் ஏதாவது மூலிகை, உலோகம், வடிகட்டுதல் என்று கிறுக்குப் பிடித்த மாதிரி. நாங்கள் (முக்கியமாக ஆண் வாரிசுகள்) அந்த ஆராய்ச்சியின் காற்றுப் படாமல் ஜாக்கிரதையாக வளர்க்கப் பட்டோம். இரண்டு மாதங்கள் முன்னர்தான் முத்து தாத்தாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஆஸ்டின்பட்டி ஆசிரமத்தின் நிர்வாகியாக புதிதாக் ஜெர்மனியிலிருந்து கிளெமெண்ட் என்று ஒரு பாதிரியார் வந்திருந்தார். அவர் ஆசிரமத்திற்கு நிலம் வாங்க எங்கள் நிறுவனத்தை அணுகியிருந்தார். அவரைப் பார்த்துப் பேச போகும்போதுதான் அந்த ஆசிரமத்தில் முத்து தாத்தாவை மீண்டும் சந்தித்தேன். அதே சிரிப்பும் சிரத்தையுமாகவே அவர் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம். அவருடைய யானைக்கால் வியாதி பூரணமாக குணம் ஆகியிருந்தது.
கிளெமெண்ட் பாதிரியார் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஜெர்மனியில் இருந்து மத சேவைக்காக தென்னிந்தியா வந்திருந்தார். எதேச்சையாக முத்து தாத்தாவின் குறிப்புகளைப் பார்த்த பொழுதுதான் அது ஜெர்மன் மொழியில் இருந்ததை கவனித்திருக்கிறார். அதில்தான் யானைக்கால் வியாதிக்கான மருத்துவ முறைகளும் குறிக்கப் பட்டிருந்தது என்றும் அது உடனேயே பலனளித்ததையும் சொன்னார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அவருக்கு ரசவாதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ரசவாத அதிசயங்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் ஃபிலிப் வோன் என்ற ஒரு ஜெர்மன் மருத்துவர் பதினைந்தாம் நூற்ற்றாண்டில் வாழ்ந்ததாகவும் இந்த குறிப்புகள் பெரும்பாலும் அவற்றை ஒத்திருந்ததாகவும் தனக்குப் தோன்றியதாகச் சொன்னார். முத்து தாத்தா அந்தக் குறிப்புகளை யாருக்கும் முழுவதுமாக கொடுக்கவில்லை. அதனால் கிளமெண்ட் பாதிரியாருக்கு ரசவாதத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், க்ளெமெண்ட் பாதிரியார் சொன்ன மருத்துவர் வாழ்ந்தது 1500-களில். உங்கள் கதையிலும் அதே காலகட்டத்தில் நடந்த ரசவாத அதிசயங்களைப் பற்றி சொல்கிறீர்கள். பாராசெல்ஸஸ் யானைக்கால் வைத்தியத்தில் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் சொல்கிறீர்கள். அம்மாவின் கதைகளில் வரும் 'பராசீல' முனிவரும் உங்களின் பாராசெல்லஸும் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறமாதிரி எனக்குத் தெரிகிறது. பாருங்கள் இந்த விஷயங்கள் எல்லாம் இந்த ரசவாதத்திற்கு எப்படி ஒரு நம்பகத்தன்மை கொடுக்கிறது என்று. நம்பிக்கையே இல்லாத என்னைப் போன்றவனையும் இப்படி ஒரு கடிதம் எழுத வைத்து விட்டது.
க்ளெமெண்ட் பாதிரியார் உதவியோடு முத்துத் தாத்தாவின் குறிப்புகள் ஓரளவு முழுமையடந்தது. இந்த வயதிலும் தாத்தா இந்த ஆராய்ச்சியின் மேல் வைத்திருக்கும் பாசம் மனிதன் தன் உயிர் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு சமானம். ஆனால் தாத்தாவின் வயது அவருடைய வெற்றிக்காக காத்திருக்குமா என்று தெரியவில்லை. இது தொடராமல் போனால் இன்னொரு தலைமுறை பிழைக்கும்.
அண்ணியாருக்கு எனது அன்பு வணக்கங்கள். அமுதா குட்டிக்கு அன்பு முத்தங்கள்.
உங்கள் அன்புக்குரிய
ரங்கநாதன்
'இன்னுமா இந்த ரசவாதம், குழம்புவாதம் எல்லாம் நம்பிட்டிருக்காங்க. என்னம்மோ கெமிக்கல் பார்முலா மாதிரி இருக்குப் பாருங்க' என்று சொல்லிக் கொண்டே கேவசனைப் பார்த்தேன்.
அவர் மையமாக சிரித்துக் கொண்டே அந்த கடிதத்தைப் பைலில் மீண்டும் அடுக்கினார்.
'அப்பைக்கப்போ பழைய கடுதாசியெல்லாம் எடுத்து பாத்துக்கிடறது. நல்ல தெம்பா இருக்கும். நிறைய எழுதிப்பிடனும்னு வேகம் வரும் பாருங்க.' என்றார்.
ஏதோ நினைவுக்கு வந்தவனாய 'சுவர்க்கோழி சங்கீதம் நானும் படிச்சேனே. அதுல இந்தக் கதை காணலியே. இருந்ததா என்ன?'
அவர் சிரிப்பு சட்டென நின்றுப் போனது.
'கதை எழுதினேன். ஆனா பதிப்பிக்கேல்லே. ரங்கநாதனுக்கு கையெழுத்துப் பிரதியோட காப்பியைத்தான் அனுப்பிச்சு இருந்தேன்'
'ஏன், பதிப்பிக்கல? என்ன ஆச்சு?'
அவர் சன்னலுக்கு வெளியே சுற்றி ஓடிக் கொண்டிருந்த அணிற்ப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டார்.
'இந்தக் கடிதம் வந்து ஒரு மாசத்துல ரங்கநாதனை கைது பண்ணிட்டாங்க' என்னைத் திரும்பிப் பார்த்து 'அவங்க தாத்தாவை அவர்தான் விஷம் வச்சு கொலை பண்ணிட்டாராம். மேலே எதுவும் கேக்காதீங்க. ப்ளீஸ்' என்றார்.
நான் ஒரு வித நப்பாசையுடன் 'அந்த கையெழுத்துப் பிரதி இன்னமும் இருக்கா? இந்த ரசவாத ஆராய்ச்சி முழுமையா தெரிஞ்சிக்கிறலாமேன்ட்டு...' அந்தக் கதையை படிக்க ரொம்பவும் ஆர்வமாக இருந்தது எனக்கு.
அவர் என்னை நிமிர்ந்துப் பார்க்காமலேயே
'அந்தக் கதையை அப்புறம் காணலை.' என்றவர் மீண்டும் என்னை அழுத்தமாகப் பார்த்து 'நான் தேடவும் போறதில்லை' என்றார்.
20 மறுமொழிகள்:
இந்த கதை புரியுது. இன்னும் கொஞ்சம் சுவாரசியம் சேர்த்திருக்கலாமோ? :)
லதானந்த் எழுதிய ரசவாதம் கதை படிச்சீங்களா? இருங்க சுட்டி தர முயற்சிக்கறேன்.
ஸ்ரீதர்,
புனைவின் வடிவம் வாசிக்க வைக்கிறது. ஆனால், சுருக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறது.
மற்றபடி இந்த புனைவில் மறைந்திருக்கும் ஆதிக்க மனோபாவம் தனி உரையாடலுக்கானது. அந்த உரையாடலில் முன் தீர்மானத்துடனேயே நாம் இருவரும் இருக்கிறோம் என்பது இருவருக்கும் தெரியும் :)
புனைவு முயற்சியை தொடருங்கள்.
நல்லாயிருக்குங்க...
எனக்கும் லதானந்தின் ரசவாத கதை ஞாபகத்துக்கு வந்துடுச்சு :)
சுவாரஸ்யம் கொஞ்சம் குறைவாக இருந்தாலும். கதை நன்றாகவே இருக்கிறது.
ஆமாம், அந்தக் கையெழுத்துப் பிரதி எந்த ஊரில் தொலைந்து போனது?!;-))
(இரண்டு, மூன்று எழுத்துப் பிழைகள் பார்த்தேன். சரி செய்யவும்.)
மறுபடியும் வித்தியாசமான கதை சொல்லல்.
ஜெயமோகன் ரசவாதத்தைப் பற்றி ஒரு கதை எழுதியிருப்பார். படிச்சிருக்கீங்களா.?
அம்பி,
வருகைக்கு நன்றி. நேர அழுத்தம் காரணமாக கொஞ்சம் சீர்படுத்தாமல் விட்டுட்டேன்.
லதானந்த் அவர்கள் குங்குமத்தில் எழுதியிருக்கார்னு அவருடைய ப்ளாக்கில் படிச்சேன். கதையை முழுவதும் படிக்கிறேன். :-)
பைத்தியக்காரன்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி. கதையில் சில இடங்களில் இழுவை தெரிகிறது. நேர அழுத்தம் காரணமாக சரி செய்ய முடியாமல் போய் விட்டது.
கதையில் எதையும் முன்கூட்டி தீர்மாணிக்கவில்லை சார். :-) சில பாத்திரங்களில் கொஞ்சம் நிஜ பாத்திர பாதிப்புகளை சேர்த்ததைத் தவிர நான் எதையும் வலிந்து செய்யவில்லை.
மற்றபடி இந்த 'ஆதிக்க' மனோபாவம் எல்லாம் நான் முற்றிலும் தவிர்க்க நினைப்பதே. சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன் :-)
சென்ஷி,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல :-)
யோசிப்பவர்,
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி. எழுத்துப் பிழைகளை சரி செய்து விடுகிறேன்.
சுந்தர்,
ஜெயமோகனின் கதை படித்திருக்கிறேன். அந்த வட்டார வழக்கு அருமையாக இருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
கானல் நீரை தண்ணிர் என்று நம்பி அதை நோக்கி ஒடும்.................
கதை அருமை.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
http://vinavu.wordpress.com
ஸ்ரீதர் நாராயணன்
உங்களது ஒவ்வொரு கதையிலும் வித்தியாசமாக கதை சொல்லும் முயற்சி படிக்கும் ஆர்வத்தை கூட்டுவது உண்மை.
எழுத்து நடை.கதைக்கட்டமைப்பு (இந்தக் கதையிலும்) நன்றாக இருக்கிறது.
இந்தக் கதை படிக்கும் போது "நிகொலாஸ் கேஜ்" நடித்த "நேஷனல் ட்ரஷர்" படம் ஞாபகத்துக்கு வந்ததை சொல்லாம இருக்கமுடியலை.:)
கோவை விஜய்,
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. :-)
வினவு,
உங்க பதிவுகள் தொடர்ந்து படிச்சிட்டுத்தான் இருக்கேன்.
சங்கர்,
உங்கள் தொடர் ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றி :-)
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷ்ரீதர். அறிவியல் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றதற்காக.
வாழ்த்துக்கள் ஸ்ரீதர்..!!!
வாழ்த்துக்கள் !!! வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியமைக்கு !
வாங்க வெண்பூ,
வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
வசந்த்,
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள் பல. உங்களின் அத்தனை கதைகளையும் படித்திருக்கிறேன்.
சேவியர்,
வாங்க உங்களின் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி. உங்களின் கதை வெற்றி பெற்றதற்கும் வாழ்த்துகள் பல.
எழுத்தாளர் ஸ்ரீதர் சமூகத்திற்கு, அடியேனின் நமஸ்காரங்கள். இப்பவும் தங்களுக்குப் பரிசு கிடைத்தது பற்றிய தகவல் அறிந்து மிகவும் சந்தோஷமுடையவனானேன். தங்களைப் போன்ற பெரும் எழுத்தாளர்களின் அறிமுகம் பெற தன்யனானேன். தாங்கள் மேலும் மேலும் பெயர் பெற்று விரைவில் பின்னூட்டப் பெட்டியை மூடி வைக்கவும், பதிவர்கள் என்ற ஜந்துக்களை வாய்க்கு வந்தபடி திட்டக்கூடிய அளவு உயரவும் அப்படிச் செய்தாலும் உங்களைக் கடவுள் போல பார்க்கக்கூடிய தொண்டரடிப்பொடிகளைப் பெறும் பாக்கியத்தை அடையவும் எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.
மீண்டும் நமஸ்காரங்கள்.
வேணும் வேங்கடவன் சகாயம்.
இப்படிக்கு
கொத்ஸ்
இ.கொ. தல,
ம்ம்ம்... ஏதோ பாராட்டுற மாதிரிதான் இருக்கு. இல்ல திட்டறீங்களா? ஒண்ணுமே புரியல... உங்க நுண்ணரசியல் உலகத்திலே :-)
அண்ணாச்சி
புடியுங்க மலர்க்கொத்துகள் + வாழ்த்துக்கள்!
அறிபுனைப் போட்டியின் வெற்றி, உங்களின் அடுத்த பரிமாணத்துக்கு எங்களை இட்டுச் செல்லட்டும்!
நீங்க பதிவு எழுத வந்தது எம்புட்டு நல்லது-ன்னு இப்போ நிரூபணம் ஆயிரிச்சி பாத்தீங்களா?
வேணும் வேங்கடவன் சகாயம்! :)))
எல்லாப் புகழும் ஃபட்டர்பிளைக்கே! :)
பாராட்டுக்கள் ஸ்ரீதர்.....
.ஊருக்கு போயிட்டு வரத்துக்குள்ள ப்லோக் ஆரம்பிச்சு,கதை எழுதி.பரிசு வாங்கி....அமர்க்களம் போங்க..இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா படிச்சுகிட்டு இருக்கேன் உங்க பதிவுகள( அதென்னமோ ஸ்டார் வார்ஸ் யோடா மாதிரியே என்னோட வாக்ய அமைப்பு வந்திருது!!!எல்லாம் விஸ்டம் போலருக்கு)
...கொத்ஸ் சொல்லரது ரொம்ப தூரத்துல இல்ல போல..:):)
//வேணும் வேங்கடவன் சகாயம்! :)))
எல்லாப் புகழும் ஃபட்டர்பிளைக்கே! :)//
வாங்க ரவிசங்கர்!
என் தந்தையார்தான் வேங்கடவன். நிச்சயமாக உங்களுக்கு சகாயம் புரிவார். பின்ன எனக்கா செய்யப் போறாரு? :-)
அது என்ன பட்டர்ஃபிளையை accent போட்டு ஃபட்டர்பிளையா ஆக்கிட்டீங்க :-)
வாங்க ராதாக்கா!
//ஊருக்கு போயிட்டு வரத்துக்குள்ள//
நீங்க அம்மாம் நாள் ஊருக்கு போயிருக்கறீங்க. நானே தம் பிடிச்சு 26 இடுகை போட்ட பிறகு வந்து விசாரிக்கறீங்க பாருங்க :-)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி:)
Post a Comment