August 1, 2008

குசேலன் பற்றிய கதைகளும், விமர்சனங்களும்

முதல் கதை: பாகவத புராணத்தில் வருகிறது. கண்ணனும், குசேலர் (எ) சுதாமருக்கும் உள்ள நட்பு பற்றிய கதை. பத்தாவது காண்டத்தில் வரும் இந்தக் கதையில் குசேலர் கண்ணனின் ஆயர்பாடி தோழன். பின்னர் கண்ணன் அரசனானவுடன் அவனிடம் உதவி கேட்டுப் போகிறார். குருசேத்திரப் போர் முடிந்தவுடன் கண்ணனுடன் தத்துவ விசாரங்களிலும் ஈடுபடுகிறார்.

இரண்டாம் கதை: சுஜாதா எழுதியது. மத்யமர் தொடரிலா / தூண்டில் கதைகள் தொடரிலா என்று ஞாபகம் இல்லை. அதே குசேலன் / கிருஷ்ணன் நட்பை சம காலப் பின்னணியில் அமைத்த கதை. குசேலர் தன்னுடைய பால்ய நண்பனும் தற்போதைய தமிழக அமைச்சருமான (அப்படித்தான் நினைக்கின்றேன்) கிருஷ்ணனை பார்த்து உதவி கேட்கிறார். இறுதியில் ஒரு வரி சேர்த்திருப்பார். அதை இந்தப் பதிவில் எழுத முடியாது. கதை கிடைத்தால் படித்துப் பாருங்கள். நல்ல விறுவிறுப்பாக இருக்கும்.

மூன்றாம் கதை: கேரள ஸ்ரீனிவாசன் 'கத பறயும்போள்' திரைப்படத்திற்காக எழுதிய கதை. இதுவும் ஏழை பணக்கார நண்பர்களைப் பற்றிய கதைதான். இதில் சிறப்பு அம்சம் கிளைமேக்ஸில் அந்த பணக்கார நண்பன் சொல்லும் ஃப்ளாஷ்பேக். இந்த ஒரு 'நாட்'டை வைத்து அருமையான ஒரு கதை எழுதியிருக்கிறார். தமிழில் வெளியாகியுள்ள 'குசேலன்' படத்தை ஒரு விபத்து போல் பார்த்தாகிவிட்டது. ப்ளாக் எல்லாம் வைத்துக் கொண்டு ரெண்டு வரி எழுதவில்லையென்றால் எப்படி?

இந்தப் படத்தைப் பற்றிய சில +களும் -களும்...

+ கிளைமேக்ஸில் ரஜினி சொல்லும் ஃப்ளாஷ்பேக். ஒரிஜினல் (பாகவத புரரனம்) குசேலன் கதையிலிருந்து மாறுபட்ட ஒரு பேரலல் லைன் யோசிச்ச கதாசிரியருக்கு ஒரு பாராட்டு. இதுவே படத்தை ஓரளவிற்கு தாங்கிப் பிடிக்கிறது.

+ ரஜினி ச்சும்மா பற்ந்து பற்ந்து சண்டை போடாதது. நல்லவேளை.

+ பசுபதி. கொஞ்சமாவது இயல்பான நடிப்பிற்காக.

+ M S பாஸ்கரின் அதிரடி இங்க்லீஷ். காவல் நிலையத்தில் அவர் இன்ஸ்பெக்டரிடம் நன்றி கூறும்போது தியேட்டரே அதிர்கிறது.

+ ஆர். சுந்தராஜன் ரஜினியிடம் கேட்கும் கேள்விகள். 'என்ன பைத்தியக்காரத்தனம் சார்... ஒரு சின்னப் பெண் பின்னாடி போய் 'பழக வாங்க, பழக வாங்க'ன்னு கூப்பிட்டுகிட்டே இருக்கறது'

+ வடிவேலு சூப்பர்ஸ்டார் அசோக் குமாரை பார்த்துவிட்டு ஆடும் ஆட்டம்.

+ அவ்வப்போது லிவிங்க்ஸ்டன். அங்கங்கே சந்தானம் என்று வெகு சில காட்சிகள் சிரிப்பு வரவழைக்கின்றன.

+ சின்னி ஜெயந்த் டச் ஃபோனை எடுத்து சந்தானத்திடம் காட்டும் காட்சி.


ஸாரி இதுக்கு மேல வேற + ஒண்ணும் கண்ணுக்குத் தெரியல .

- உலகத்தரம் என்று எல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு உள்ளூர் தரத்துக்காகவது காட்சிகள் வைத்து இருக்கலாம். ரஜினியின் சம்பளத்தை தவிர்த்து மொத்தப் படமுமே 1-2 கோடிகளுக்குள் சுருட்டி விட்டார்கள்ப் போல. சொதப்பல் ஸெட்டிங்ஸ். விளம்பரப் படங்களிலேயே தரமான கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் இடம்பெறும் போது மீன்கள் துள்ளி விளையாடும் காட்சிகள் எல்லாம் ஏதோ கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் சேவர் போலத்தான் தெரிகிறது. காட்சிகளிலும், நடிகர்களிடம் இவ்வளவு நாடகத்தனமா? முதல் பாதி அவ்வளவு தொய்வு.

- வடிவேலு காமெடி. அதிலும் நயன்தாரா அறையில் அவர் மாட்டிக் கொள்ளும்போது.... ஹலோ இது ஏதும் டாக்டர் பிரகாஷ் எடுத்த படத்தோட 'பிட்'டா என்ன?

- லிவிங்க்ஸ்டன் காமெடியாம். சுத்தமாக சிரிப்பு வரவில்லை. அதுவும் அந்த ஒன்பதாவது அதிசயம் எல்லாம் ஓவருங்கண்ணாவ்...

- சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார்களாம். அமெச்சூர்தனமான காட்சிகள். ஷூட்டிங் எடுப்பதை படமா எடுப்பதற்காக இப்படியா? வேட்டையன் தலையை வெட்டிக் கொள்ளும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் வைத்து... ரொம்பவே கஷ்டபடுத்தறாங்க.

- பிரபு எதற்கு? ஒப்புக்கு சப்பாணியா ஓரமா நிற்கிறார். ஸாரி, ஸ்க்ரீன்ல முக்காப் பங்குக்கு நிற்கிறார்.

- கிராமத்தில் அடாவடி பண்ணும் பணக்காரப் பொண்ணும், விவசாயிகளின் நலனைக் காக்க ட்ராக்டரை ஓட்டிகிட்டு வருகின்ற ஹீரோவும்... அய்யோ... ஏன், ஏன் இந்த கொலைவெறி?

- பின்னனி இசை. ரஹ்மான் வீட்டு ராட்டினமும் (ஜி.வி. பிரகாஷ்) இசையமைக்கலாம். ஆனா போக வேண்டிய தூரம் அதிகம் தம்பி.

- அந்த கிராமம், அதன் நடுவில் இருக்கும் ஷாப்பிங் ஜங்க்ஷன், பாலுவின் குடும்பம் இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை சொதப்பலாக காட்சிபடுத்தியிருப்பது.

மேலும்...

விறுவிறுப்பான விமர்சனத்திற்கு இங்கே பாருங்கள்

விரிவான விமர்சனத்திற்கு இங்கே பாருங்கள்

வித்தியாசமான விமர்சனத்திற்கு இங்கே பாருங்கள்

4 மறுமொழிகள்:

கோவை விஜய் said...

விறுவிறுப்பான விமர்சனத்திற்கு-

விரிவான விமர்சனத்திற்கு-

வித்தியாசமான விமர்சனத்திற்கு-

மற்றவர்களையும் சேர்த்து கொடுத்தால்
நல்ல இருக்குமே.

சூடு இடுகையில் எல்லாம் குசேலா குஸெலா, குசெலா,குஷெலா, தான்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/

Vinavu said...

http://vinavu.wordpress.com

ambi said...

//விரிவான விமர்சனத்திற்கு //

குசும்பு. :)))

புள்ளி விவரத்துக்கு சர்வேசன் பதிவு. :)

ஸ்ரீதர் நாராயணன் said...

//புள்ளி விவரத்துக்கு சர்வேசன் பதிவு. :)//
:-))))
வாங்க அம்பி அப்பா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. :-)