August 8, 2008

பைசல் ஆன பழைய கணக்கு!


"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீங்கதான் 9-ம் வகுப்புல நம்பர் தியரி பத்தி எனக்கு வகுப்பு எடுத்தீங்க. நீங்க சரியா பாடம் எடுத்திருந்தா எனக்குப் இப்ப இந்த புரிதல் பிரச்சினை வந்திருக்காது. அதனால நீங்கதான் இந்த ஆராய்ச்சி முடிய உதவி செய்யனும்" என்று தீர்மானமாக சொன்னான் விஷ்வா.

இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பாசோ.

'நான் சாதாரண ஹைஸ்கூல் கணக்கு வாத்தியாருப்பா. எனக்கு தெரிஞ்சது நாலு டெக்ஸ்ட் புக், ஏழு நோட்ஸ், இருவது வருசமா அதே முந்நூத்தம்பது கணக்கைத்தான் திருப்பி திருப்பி போட்டுக்கிட்டு வாரன். நீ என்னமோ பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டு வந்திருக்க. ரிங்க் தியரி, ஃபீல்ட் தியரின்னு புதுசு புதுசா சொல்ற. இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசுப்பா' பரிதாபமாக சொன்னார் பாசோ.

பாளளயங்கோட்டை சோமநாதன் என்றால் யாருக்கும் தெரியாது. "பாசோ" என்றால்தான் கண்டிப்பானா கணக்கு வாத்தியார். எப்பொழுதும் வெள்ளை முழுக்கை சட்டையும் அடர்த்தியான வண்ணத்தில் கால்சராயும் அணிந்திருப்பார். குள்ளமாக, கெச்சலாக, தொலைவில் இருந்து பார்த்தால் பள்ளி மாணவன் போலத்தான் இருப்பார். அவர் வீட்டு மொட்டை மாடியில் கீத்துக் கொட்டகைப் போட்டு 'ஙய்ய்' என்று ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் மங்கலான ட்யூப்லைட் வெளிச்சத்தில் ஒரு பத்து பதினைந்து பேர் கணக்கு போட்டு பழகிக் கொண்டிருப்பார்கள். எல்லாம் அவர் பள்ளிக்கூடத்து மாணவர்கள்தான். பொதுத் தேர்விற்காக தனி ட்யூஷன்.
மணி எட்டரை அடித்தவுடன் பாசோ கணக்கு புத்தகத்தை மூடி வைத்துவிடுவார். சொல்லி வைத்தாற்ப் போல பையன்களும் உடனே தத்தம் நோட்டுப் புத்தகங்களை ஏறக் கட்டி விட்டு கிளம்பிவிடுவார்கள். தொடர்ந்து டீவி சீரியல் பார்த்துக் கொண்டே இரவு உணவு முடித்துவிட்டு படுக்கையை தட்டிப் போட வேண்டியதுதான். அவர் விடாமல் பார்க்கும் டீவித் தொடரில் இன்றைக்கு நர்மதாவின் தகிடுதத்தங்கள் வேறு அம்பலமாகப் போகிறது. அந்த கண்கொள்ளாக் காட்சியை காண முடியாமல் இன்றைக்கு என்று வந்து சேர்ந்தது வில்லங்கம்.

"நான் விஷ்வா. உங்க ஓல்டு ஸ்டூடண்ட் சார். 98 பாட்ச். உங்ககிட்டதான் ட்யூஷனும் படிச்சேன். நாங்க மூணு பேர் செட்டா வருவோமே சார்" என்றான்.

அவருக்கு இந்த அடையாளத்தில் கிட்டத்தட்ட 10 பேர்கள் ஞாபகம் வந்தது. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் 'எப்படிப்பா இருக்கே, என்ன விஷயம்' என்று கேட்டு வைத்தார்.

"உங்களைப் பாக்கத்தான் காலையில சென்னையிலேந்து வந்தேன். ஒரு வாரம்தான் இந்தியாவுல இருக்கேன். திடீர்னு ஒரு யோசனை மின்னல் மாதிரி. உடனே கார் எடுத்திட்டு நேரா வர்றேன்".

அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது.

'உக்காருப்பா. காபி கீபி சாப்பிடறயா?' கார் எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருக்கானே என்று யோசனையாக இருந்தது.

'அமெரிக்காவில, மிக்சிகன் யூனிவர்சிடியில ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கேன் சார். நம்பர் தியரில அண்ட் கிளாஸ் ஃபீல்டு தியரி. இந்த வருசம் முடிஞ்சுரும்.' என்றான்

பாசோக்கு ஒரே உற்சாகமாக இருந்தது. ஒரு சர்வதேச பல்கலைகழக ஆராய்ச்சி மாணவன் தன்னைத் தேடி வந்திருப்பதா அல்லது தன்னிடம் படித்த மாணவன் இவ்வளவு தூரம் முன்னேறி இருப்பதா என்று திக்குமுக்காடிப் போனார்.

'இருப்பா காபி சாப்பிடு. டிபன் எதுவும் எடுத்துக்கறியா? சுலோ, இங்க வ்ந்து பாரேன். நம்ம ஓல்டு ஸ்டூடண்ட் வந்திருக்கார். பேரென்னப்பா சொன்னே?' நர்மதாவோட கதையை மனைவியிடம் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். பெரிய காரில் வந்து ஏதோ ஆராய்ச்சி என்றெல்லாம் சொல்கிறானே.

'கொஞ்ச நாளா ஒரு பிரச்சினை. கடைசியில ஞாபகம் வந்தது நீங்கதான். அதான் நேர வந்துட்டேன். ஒரு வாரத்துல ஊருக்கு வேற போகனும்.' என்று அவர் முகத்தைப் பார்த்

'சொல்லு. என்ன பிரச்சினை' என்றார். அப்பொழுதுதான் இந்த கதை தொடக்கத்தில் வரும் குற்றச்சாட்டை விஷ்வா அவர் மேல் வைத்தான்.

அவன் கையில் சில பேப்பர் கட்டுகளை வைத்துக் கொண்டு, 'எது புரியலன்னு சொல்லுங்க சார். நான் திரும்ப சொல்றேன். என்னோட பிரச்சினை இங்கதான் சார் இருக்கு.' விட மாட்டான் போல.

'இந்த தேற்றத்தை எப்படியாவது நிறுவனும். அப்பதான் இந்த ஆராய்ச்சி முழுசாவுது. இல்லைன்னா நான் பட்ட இத்தனை வருச உழைப்பும் வீண். ' என்றான் வருத்தமாக.

'ஏம்ப்பா, இண்டர்நெட் அது இதுன்னு ஏகத்துக்கு இருக்கே. உங்க யூனிவர்சிட்டில பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் இருப்பாங்களே. என்னால என்னப்பா செய்ய முடியும்? '

'பிரச்சினை என்னன்னா சார்... எனக்கு அடிப்படையில ஒரு தப்பு தெரியுது. நான் எண்களைப் பத்தி தெரிஞ்சிகிட்டதுல ஒரு குறை இருக்கு. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நீங்கதான் எனக்கு முதல்ல நம்பர் தியரி பத்தி வகுப்பு எடுத்தீங்க. அப்ப எனக்கு தெரியாம போனதுக்கு முக்கிய காரணம் நீங்கதான்' குரலில் தீவிரம் கூடி இருந்தது போல் இருந்தது.

பாசோவுக்கு இப்பொழுது ஒரு சம்சயம் வந்தது. இது ஏதோ டீவிக்காக பண்ணுகிற காமெடி நிகழ்ச்சிப் போலத் தோன்றியது. அதான் அடிக்கடி போடுகிறார்களே, தூரத்தில் காமெரா வைத்துக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்வார்கள். அப்புறம் ஒரு கோமாளி குல்லாவை தலையில் மாட்டி, தலையை சுற்றி வட்டம் போட்டு காண்பித்து எல்லாரும் சிரிப்பார்கள். நாளைப் பள்ளிக்கூடம் போனால் பையன்களும் சிரிப்பார்களோ? அந்த ஆர்எம்எஸ் வழிச்சிகிட்டு இல்ல சிரிப்பான். நைச்சியமா பேசி அனுப்பிடலாமா? காருக்குள்ளேயா காமெரா வைத்திருக்கிறான்? அட இந்த காலத்துலதான் சட்டை பட்டனுக்குள்ளக் கூட வைத்திருக்கிறார்களே.

கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பேப்பர் கட்டுகளை வாங்கி புரட்டிப் புரட்டிப் பார்த்தார்.

'சில அடிப்படைகளை நிறுவறதில தகராறு பண்ணுது. பாருங்க, இதுதான் தொடக்கம். Bateman-Horn Conjencture, இதுக்கு ஒரு பாலினாமியல் அனலாக் நிறுவனும். தொடர்ந்து...'

அவருக்கு ஏதோ கிரேக்க மொழியில் படிப்பது போலிருந்தது.

'இத பாருப்பா. என் மேல எதுவும் தப்பு இல்ல. நான் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் சொல்லித் தர்ரேன். ஆறு வருசமா தொடர்ச்சியா நூறு சதம் ரிசல்ட். உன் ஆராய்ச்சி தலையும் புரியல வாலும் புரியல. இதெல்லாம் ஆகிற காரியமா தெரியல. நீ காலாகாலத்தில கிளம்பி ஊர் போய்ச் சேரு தம்பி' என்றார் தீர்மானமாக.

அவன் எழுந்திருக்கற வழியாக இல்லை.

'இந்த ஆராய்ச்சி ஒரு வாரத்தில முடியலன்னா என்னோட எய்ட் எல்லாம் காலாவதியாயிடும். அப்புறமா நான் வெறுங்கையோடத்தான் திரும்பி வரனும். அதுக்கு முக்கிய காரணமா இருக்கப் போறதும் நீங்கதான்.' என்றான் விரக்தியாக. அவருக்கே இதென்னடா சோதனை என்றது போல் ஆகிவிட்டது. ரொம்பவும் முறுக்கிக்கிட்டா டீவியில எக்குதப்பா வந்திடுமோ?

"முதல் Conjencture இப்படி போட்டுப் பாக்கனும். இல்ல சார், அங்க தப்பா போடறீங்க. இட் இஸ் பௌண்டட் பை B.

இங்க பாருங்க... q பவர் n டெண்ட்ஸ் டு இன்பினிட்டி. அப்ப எப்படி கன்வர்ஜெண்ஸ் நிறுவ முடியும்? பாத்து சொல்லுங்க சார்"

அவன் சொல்லச் சொல்ல இரண்டு மூணு தேற்றங்களைப் போட்டுக் கொண்டே வந்தார்.

"சரி இப்ப q -வ அப்படியே வச்சிக்கங்க. n டெண்ட்ஸ் டு இன்பினிட்டி. போட்டுகிட்டே வாங்க"

விடாமல் இதைப் போடு, அதைப் போடு என்று மாற்றிக் கொண்டே வந்தான்.

அவர் மனைவி காபி, பிஸ்கெட் என்று என்னவெல்லாமோ எடுத்துக் கொண்டு வந்தாள். ஒரு நல்ல சேலையா கட்டிட்டு வந்திருக்கலாமோ என்று பட்டது பாசோவிற்கு. டீவியில் அவளும் வருவாளோ? கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து ஒரு வழியாக அவன் அமைதியடைந்தது போல் இருந்தது.

'பாருப்பா, இப்படி நிறுவிடலாம் - மோனிக் பாலிநாமியல்ஸ் ஆர் இர்ரெட்யூஸெபிள் ஆன் திஸ் ரேஞ்ச். டிபெண்டன்ஸ் பாத்தா கொஞ்ச தகராறு இருக்கு. இதுக்கு மேல இம்ப்ரூவ் பண்ண எனக்கு மண்டையில எதுவும் இல்லப்பா. முதுகு வேற வலிக்குது' என்று முனகினார் பரிதாபமாக. கோமாளிக் குல்லாயை எப்பொழுதடா எடுப்பான் என்று பார்த்துக் கொண்டே இருந்தார்.

'இது வரைக்கும் போதும் சார். முடிச்சிடுவேன். ரொம்ப தேங்க்ஸ் சார். உங்களை சிரமப் படுத்திட்டேன் ரொம்ப' என்றவாறே கிளம்பி விட்டான். அப்பொழுதுதான் கவனித்தார் அவன் வலது மணிக்கட்டில் நீளமான தையல் தழும்பு.

'என்னப்பா பெரிய தழும்பா இருக்கே'

'ஆமாம் சார். ஸ்கூல்ல கபடி மேட்சுல உடைச்சிகிட்டேன். அதான் சார் சிமன்லால் கப் பைனல்ஸ்ல, புளியங்குளம் ஹைஸ்கூலோட மேட்ச் நடந்துச்சே 98ல'

அவருக்கு சட்டென அந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.


பெரிய கட்டுப் போட்ட கையோடு அந்தப் பையன் வகுப்பின் பின்புற பெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றான். பொதுவாக அமைதியாக இருக்கும் வகுப்பில் அன்று ஏனோ ஒரு சலசலப்பு. சிமன்லால் கோப்பையை வென்ற ஹீரோ வகுப்பில் உட்கார்ந்திருக்க மற்ற மாணவர்கள் சும்மாவா இருப்பார்கள்? பாசோ பாதி கணக்கில் நிமிர்ந்து பார்த்தபோது அவன் நோட்டுப் புத்தகத்தில் எதுவும் எழுதாமல் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறான். பாசோவிற்கு சரியான எரிச்சல். அவன் ஏதோ வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்க கூட இருந்த சிலரும் கணக்கில் கவனம் இல்லாமல் அவனோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனைக் கூப்பிடுகிறார்.

'இந்தப் ஸ்டெப்பில் என்ன விடை வருகிறது, சொல்லு பாப்போம்' என்று போர்டை காட்டிக் கேட்கிறார்.

தன்னை கூப்பிட மாட்டார் என்று நினைத்தானோ என்னவோ ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மலங்க மலங்க நின்று கொண்டிருக்கிறான்.

'இந்த தேற்றத்தோடு முழு வழியையும் நூறு தடவை உக்காந்து இம்பொசிஷன் எழுது' என்று ஒரு தண்டனையை விதித்து விட்டு வகுப்பை தொடர்கிறார்.

வகுப்பு முடிந்த போதும் மறக்காமல் மானிட்டர் பையனிடம் 'இவன் தொடர்ந்து எழுதி முடிக்கவிட்டு என்னை வந்து பார்க்கட்டும்' என்று சொல்லிவிட்டு ஸ்டாஃப் அறைக்கு சென்று விடுகிறார்.

மாலை அவன் ஸ்டாஃப் ரூமில் கொண்டு வந்து கொடுத்த பேப்பர் கட்டுகளைப் பார்த்து விட்டு 'எவ்வளவு நேரம்டா ஆச்சு?' என்கிறார்.

'மூணு மணி நேரம் சார்' அவன் கண்களில் வேதனை நன்றாகவே தெரிகிறது. கை ரொம்ப வலித்திருக்கும் போல.

'விளையாட்டு க்ரௌண்டோட நிறுத்திக்கனும். வகுப்புல பாடம்தான் பர்ஸ்ட். புரிஞ்சுதா? சரி போ' என்று சொல்லி விடுகிறார். கொஞ்ச நாளில் அவன் பள்ளிக்கு வராமல் இருக்க மற்ற பையன்கள் ஏதோ மணிக்கட்டு எலும்பு சேராமல் போய்விட்டதால் ஆப்பரேஷன் பண்ண வேண்டியிருந்தது என்றும் அதனால் நீண்ட விடுப்பு என்றும் சொல்கிறார்கள். அப்புறம் அவர் வகுப்பு மாறி, அந்தப் பையன் வேறு ஊருக்கு மாறி இப்படி பல மாறுதல்களிடையே பாசோ அவனைப் பற்றி முழுவதும் மறந்து விடுகிறார்.


விஷ்வா கிளம்பிப் போய்விட்டான். அவனுக்காக அவர் போட்ட தேற்றங்கள் அங்கேயே மின்விசிறிக் காற்றில் படபடத்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. பக்கதிலேயே பாசோ வெகுநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

சிங்கப்பூர் செல்லும் 7J-376 விமானத்தின் இடது பக்கத்தில் J-3,J-2 இருக்கைகளில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.

'விஷ்வா, நீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்' என்றார் சந்திரபாபு சிரித்துக் கொண்டே.

'நேற்று சில பழைய நட்புகளை சந்தித்து உரையாடிக் கொண்டு இருந்தேன். வித்தியாசமான அனுபவமாக, கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தது. அதான் கொஞ்சம் டானிக் சாப்பிட்ட மாதிரி உற்சாகமா இருக்கு.' என்றான் விஷ்வா மலர்ச்சியான முகத்தோடு.

'எனக்கு இன்னமும் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்கிறது. நாம் இந்த டோர்ணமெண்டை கண்டிப்பாக வெல்ல வேண்டும் விஷ்வா' கொஞ்சம் படபடப்பாக சொன்னார் சந்திரபாபு.

'கவலையே வேணாம் கோச்! எப்படி ஆடுவது என்று பக்காவாக திட்டம் போட்டு வைத்திருக்கிறோம். உறுதியாக இந்த டோர்ணமெண்டை வெல்வோம்' என்று நம்பிக்கையோடு சொன்னான் இந்திய கபடி டீமின் காப்டன் விஷ்வா.

16 மறுமொழிகள்:

ஸ்ரீதர் நாராயணன் said...

கணக்கை பைசல் பண்ணினதில் குழப்பம் எதுவுமில்லை என்று நினைக்கின்றேன் :-)

யு.எஸ்.தமிழன் said...

எதிர் பார்க்காத் திருப்பம் நல்லா இருந்துச்சு! ஆனா ஏழை வாத்தியார இப்படி அல்லோகலப்படுத்தீட்டாரேன்னு பாவமாவும் இருக்கு!

ambi said...

கூட்டி கழிச்சு பாத்ததுல கணக்கு ரொம்ப சரியா வந்ருக்கு, இந்த தடவ. :)))

இருங்க, நானும் என் கணக்கு வாத்யாரை ஒரு வழி பண்ணிட்டு வறேன்.

பி.கு: நீங்க கபடி வீரரா?னு என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணபடாது. :p

ஸ்ரீதர் நாராயணன் said...

யு எஸ் தமிழரே,

வாத்தியாரோட மோனோடோனஸ் வாழ்க்கையில் ஒரு சுவாரசியம்தானே :-). உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தமிழரே.


அம்பி அப்பா,

//என்ன வெச்சு காமடி கீமடி எதுவும் பண்ணபடாது//

உங்கள வச்சு நானென்னங் காமெடி பண்றது. அதான் உங்க வீட்டு எசமான் அப்பைக்கு அப்ப காமெடி பண்ணிகிட்டு இருக்காரே. :-))

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

நல்லாயிருக்கு. அந்த வாத்தியார் கட்டாயம் பேப்பர் படிச்சு இந்திய கபடி டீம் காப்டன் பற்றி அறிந்திருக்க மாட்டார். எனக்கு நிறைய நல்ல வாத்தியார்களும் தெரியும்:-)

நானும் இப்பிடி எல்லாம் "வாங்கிடறது"ன்னு அப்ப அப்ப நினைச்சுப்பேன். இந்த "ஏணி, தோணி" நினைவுக்கு வந்து என் ஐடியா கந்தலாயிடும்:-)

சென்ஷி said...

கரெக்டா பைசல் செஞ்சுருக்கீங்க.. ஆனா நான் டியுசன் படிச்ச கணக்கு வாத்தியார் சொக்க தங்கம். ஸ்கூல்ல கணக்கும் படிச்சேன்னு சொல்லிக்கவேண்டியது மட்டும்தான்.

நானும் ஒரு பைசல் ஆன பழைய கதையோட வர்றேன் :)

ஸ்ரீதர் நாராயணன் said...

வாங்க புத்தபிக்கு அம்மா :-)

இவரும் நல்ல வாத்தியார்தான். பாருங்க ட்யூஷன் எடுத்திகிட்டு, டீவி சீரியல் பாத்துட்டு 'தேமே'ன்னுதானே இருக்கார் :-)


சென்ஷி அண்ணே,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. சீக்கிரமா கதையோட வாங்கண்ணே. உங்களோட நகைச்சுவை உணர்வுக்கு நாங்க எல்லாம் அடிமை :-)

அனுஜன்யா said...

எதிர் பார்க்கவில்லை இந்த திருப்பத்தை. நல்லா இருக்கு.

அனுஜன்யா

ஸ்ரீதர் நாராயணன் said...

//எதிர் பார்க்கவில்லை இந்த திருப்பத்தை. நல்லா இருக்கு.//

வாங்க அனுஜன்யா,

உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

Jayaradha said...

story is good. Flow and style is impressive. May be this is your personal experience with your math teacher...

ஸ்ரீதர் நாராயணன் said...

//story is good. Flow and style is impressive. May be this is your personal experience with your math teacher...//

ஜெயராதா,

வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

நீங்கள் ஏன் தொடர்ந்து எழுதுவதில்லை? உங்களைப் போன்ற தன்னார்வமுள்ள தொழில்நுட்பாளர்கள், நிறைய பங்களிக்கலாமே.

rangudu said...

முடிவு சூப்பர். கதையைப் படித்ததும் சுஜாதா ஞாபகம் வந்தது.

ஸ்ரீதர் நாராயணன் said...

ரெங்குடு,

வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

சுஜாதாவின் கதை சொல்லும் விதம் எளிமையாக இருப்பதால் அதன் பாதிப்பு நிறைய பேருக்கு இருக்கிறது போலும். :-)

Ramya Ramani said...

சற்றும் எதிர்பாராத திருப்பம் ..

ஆனா ஒரு ஆசிரியர் தவறை திருத்தினால் இப்படியா!!

வித்தியாசமான கதை களம் :)

ஸ்ரீதர் நாராயணன் said...

வாங்க ரம்யா,

மாணவனும் ஆசிரியரை பழி வாங்கற மாதிரி எதுவும் இல்லையே :-). சும்மா ஒரு வித்தியாசமான அனுபவம்தானே.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

யோசிப்பவர் said...

பைசலான பழைய கணக்கு மூன்று மணி நேரம், சரி. மாணவன் தண்டனை பெற்றபொழுது ஆசிரியர், அந்த தண்டனைக்கு சம்பந்தமில்லாத காரியங்களில் தன் நேரத்தை செலவழித்திருப்பார். ஆனால் ஆசிரியர் தண்டனை பெற்றபொழுது மாணவனுக்கும் அந்த மூன்று மணி நேரம் லாஸ்தானே?!:-))

ச்ச்சும்மா. லூலாக்காட்டிக்கு!!:-)