ரஷமோன் - பல பரிமாணம் கொண்ட ஒரு திரைப்படம். முதலில் அடித்து பிய்க்கும் மழை. படத்தின் இறுதிக் காட்சி வரை நம்மோடு அந்த மழையும் தொடர்ந்து வருகிறது. அதனூடே சில பார்வையாளர்களை சந்திக்கின்றோம். அவர்கள் மூலம் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகின்றது. சம்பந்தப் பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் சம்பவத்தை விவரிக்க பல்வேறு பார்வைகள் (perspectives) கிடைக்கின்றன.
ஒரு சாமுராய் வீரன். அவன் மனைவி. ஒரு கொள்ளைக்காரன். இவர்கள் மூவருக்கிடையே நடக்கும் ஒரு சம்பவத்தை காணும் ஒரு விறகுவெட்டி. அந்த சம்பவத்தில் சாமுராய் இறந்து விட கொள்ளைக்காரனும், சாமுராயின் மனைவியும் ஓடி விடுகிறார்கள்.
இந்தக் கொலை எப்படி நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரியாது. இந்த நால்வரும் அது எப்படி நிகழ்ந்தது என்று நமக்கு (போலீஸ் விசாரணை வழியாக) விவரிக்கிறார்கள். இறந்த சாமுராய் ஆவியாக ஒரு மீடியம் வழியாக பேசுகிறார். (எஸ்.வி.சேகர், சாருநிவேதிதா, ஆவி அமுதா போன்ற ஆவி விசுவாசிகள் ஞாபகம் வரலாம்). பல அடுக்குகளாக வரையப்பட்ட ஓவியத்தை தனித் தனியே பிரித்து பார்ப்பது போல் இருக்கிறது. எல்லா அடுக்குகளையும் ஒன்றிணைத்தால் நமக்கு பல்வேறு புரிதல்கள் ஏற்படுகிறது.
டஜோமரு (Tajōmaru, 多襄丸) என்ற கொள்ளையன் சொல்லும்பொழுது சாமுராயின் மனைவி மேல் தான் ஆசைப்பட்டதாகவும், அவள் கணவனைக் கொல்லாமல் அவளை அடைய திட்டம் தீட்டியதாகவும் கூறுகிறான். சாமுராயைக் வஞ்சித்து அவனைக் கட்டிப் போட்டு அவன் கண் முன்னால் அந்தப் பெண்ணை அடைய முயற்சிக்கின்றான். அந்தப் பெண்ணை தான் பலவந்தப் படுத்தாமலேயே மயக்கியதாக பெருமையுடன் சொல்கிறான். அந்த சம்பவத்தால் நாணம் அடைந்த சாமுராயின் மனைவி, அவர்கள் இருவரும் (சாமுராயும், டஜோமருவும்) உயிரோடு இருக்கும் வரரயில் தான் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியாது என்று சொல்கிறாள். டஜோமரு, சாமுராயோடு தனியாக சண்டை இட்டு அவனைக் கொன்றதாக கூறுகிறான். ஆனால் அந்தப் பெண் ஓடிவிடுகிறாள்.
அடுத்தடுத்து அந்தப் பெண்ணும், சாமுராயின் ஆவியும் சொல்லும் கதைகள் சில விஷயங்களில் ஒத்துப் போகின்றன. பல விஷயங்களில் மாறுபடுகின்றன. அந்தப் பெண் சொல்லும் கதையில் தன்னை சின்னாபின்னப்படுத்திய டஜோமரு ஓடிவிட்டதாகவும், தன் கணவனைத் தான்தான் விடுவித்ததாகவும் கூறுகிறாள். அவள் கணவன் அவளை வெறுப்போடு பார்த்ததால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். தொடர்ந்து தான் மயக்கமாகிவிட்தாகவும் கண் திறந்து பார்த்தால் தன் கணவன் குறுவாளால் (அழகான பிடியுடன் கூடிய விலை மதிப்பற்ற குறுவாள் - dagger) கொல்லப்பட்டிருந்ததை மட்டுமே காண நேர்ந்ததாகவும் கூறுகிறாள். அவளுடைய கதையில் பலவந்தப் படுத்துதல் மட்டுமே சொல்லப் படுகிறது. அவள் மனம் மயங்கி அந்தக் கொள்ளைக்காரனுடன் இணைந்தாளா என்று அவள் சொல்லவில்லை.
சாமுராயின் ஆவி முற்றிலும் வேறு விதமாக சொல்கிறது. தன்னை வஞ்சித்த டஜோமருவை விட தன் கண் முன்னால் சோரம் போன மனைவி மேல் அதிக ஆத்திரம் தெரிகிறது. அத்தோடு டஜோமரு அவளை தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும் சொல்கிறது. இருவரும் ஓட யத்தனிக்கும் போது அவள் டஜோமருவிடம் அந்த சாமுராயைக் கொன்று விடுமாறு சொல்ல, டஜோமருக்கு அது உவப்பானதாக தோன்றவில்லை. அதற்கு தண்டனையாக அவளை அங்கேயே கொல்லட்டுமா என்று சாமுராயையே கேட்கிறான் டஜோமரு. அந்தப் பெண் ஓடிவிடுகிறாள். டஜோமரு அவளைத் தேடி ஓடிச் செல்கிறான். சில மணிநேரம் கழித்து திரும்பி வரும் அவன், சாமுராயை விடுவித்து விட்டு தன் வழியே சென்று விடுகிறான். சாமுராய் அந்த குறுவாளால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான். இது சாமுராயின் ஆவி சொல்லும் சம்பவம்.
இந்த சம்பவம் நடந்தப் பிறகு, கொலை செய்யப்பட்ட சாமுராயின் சடலத்தை பார்த்த சாட்சிகள் இரண்டு பேர். அந்த விறகு வெட்டி. ஒரு துறவி. இவர்கள் இருவரும் ஒரு மழைநாளில் ஒரு பாழடைந்த சத்திரத்தில் இந்த வித்தியாசமான சம்பவத்தைப் பற்றி விவாதிக்க ஒரு வழிபோக்கன் அங்கே வருகிறான். அவனுக்கு (அதாவது நமக்கு) இந்த மூன்று பார்வைகளும் (perceptions) சொல்லப்படுகிறது. முதலில் தான் கொலையான சாமுராயின் சடலத்தை மட்டும் பார்த்ததாக சொல்லும் விறகுவெட்டி இறுதியில் தான் அந்த சம்பவத்தை முழுவதுமாக பார்த்ததாகவும் அதை போலிஸ் விசாரணையில் மறைத்து விட்டதாகவும் ஒத்துக் கொள்கிறான். அவனோடு பார்வையில் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறான். அவனுடைய கூற்றையும் அந்த இறுதிக் காட்சிகளையும் நீங்கள் படத்தில் காணலாம்.
ஒவ்வொருவர் பார்வையில் சில உண்மைகளும், சில பொய்களும் சொல்லப்படுகின்றன. சாமுராய் தான் கொல்லப்படவில்லை என்று சொல்கிறான். டஜோமரு அந்த பெண்ணை தன் கூட வர அழைத்தைப் பற்றி சொல்லவில்லை. அந்தப் பெண் தான் டஜோமரு-பாற் ஈர்க்கப்பட்டதை சொல்லவில்லை. விறகுவெட்டி அந்த விலைமதிப்பற்ற குறுவாளைப் பற்றி சொல்லவே இல்லை. ஒவ்வொருவரின் பார்வையில் சில விஷயங்கள் விட்டுப் போகின்றன. சில விஷயங்கள் அழுத்தமாக சொல்லப் படுகின்றன.
அந்தப் பெண் நமது சௌகார் ஜானகி மாதிரி அழுது கொண்டே இருக்கிறார். பல காட்சிகள் நுட்பமாக எடுக்கப் பட்டிருக்கின்றன. அந்த மழையும் அதைத் தொடர்ந்து அந்த சத்திரத்தில் அவர்கள் குளிர்காய்வதும் தொடர்ந்து அந்த துறவிக்கும், வழிபோக்கனுக்கும் நடக்கும் உரையாடலும் நுட்பமாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆவி இறங்கிப் பேசும் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன. 1950-ல் வெறும் 2 இலட்ச ரூபாய் பொருள் செலவில் எடுத்திருக்கிறார்கள். அடூர் கோபாலகிருஷணனின் சில படங்களை தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி படங்களில் 6 நிமிடக் காட்சிகள் 60 நிமிடங்களுக்கு காட்டப்படுகின்றன என்று ஒரு எண்ணம் உண்டு (தவறானதொரு எண்ணமாகவும் இருக்கலாம்).
ஆனால் வெறும் 6 முக்கிய பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டே இரண்டு இடங்களில் படப்பிடிக்கப்பட்ட இந்தப் படம் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. நடுவே டஜோமருவைப் பிடித்துக் கொடுக்கும் ஒரு வழிபோக்கனும் இறுதியில் ஒரு கைக்குழந்தையும் கொசுறாக வந்து போகிறார்கள். அவ்வளவே.
இந்தப் படம் வெளியான புதிதில் ஜப்பானில் அவ்வளவாக ஓடவில்லையாம். ரொம்ப குழப்பமான கதை என்று ஒரு கருத்து நிலவியது என்று விக்கிபீடியா சொல்கிறது. தற்போது சில தமிழ்ப்படங்கள் அங்கே நன்றாக ஓடுவதாக கேள்விப் படும்போது அகிராவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்க வேண்டியதுதான்.
கதையை இங்கே சென்று முழுவதுமாகப் படிக்கலாம். முழுத் திரைப்படமும் Google Video-ல் கிடைக்கின்றது.
note: In July 2006, a Japanese court ruled that all movies produced prior to 1953 were to be made available into the public domain [9], but this case as proved not applicable for Akira Kurosawa's works, after a Tokyo District Court judgment on September 14 2007 : [10], [11], ou [12] ; Akira Kurosawa's movies won't be public domain until 2036.
18 மறுமொழிகள்:
ரஷோமொன் ஏனைய நாடுகளில்தான் ஓடவில்லை. ஜப்பானில் ஹிட்தான் என்று படித்த ஞாபகம். Rashomonஐக் காட்டிலும் 7 சாமுராய்ஸ் நம்ம பேவரிட்.
நான் அதிகமும் திரைப்படங்கள் பார்ப்பவனில்லை. ஆனால் இவரின் இந்தப் படமும் வேறுசில படங்ககளும் (like read beard) பார்த்திருக்கிறேன்.
எனக்குப் பிடித்த இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
நீங்க நிறைய சினிமாவும் பாப்பீங்களா?
சூப்பர், கதையை ஒரு குழப்பமும் இல்லாம நீங்க விவரித்த விதம் அருமை.
எனக்கு ஏனோ விருமாண்டியும், கொத்தாள தேவரும் நினைவில் வந்து போனார்கள். :))
ஸ்ரீதர் நாராயணன்
சிவாஜி,ஜாவர் சீதாராமன் நடித்த "அந்த நாள் " படம் பார்த்திருக்கிறீர்களா ? ஒரு (சிவாஜியின்) கொலையை அனைவரும் அவரவர் கண்ணோட்டத்தில் சொல்லுவார்கள் (போலிஸ் விசாரணையில்).இந்தக் கதையைப் படிக்கும் போது அது மாதிரியான ஒரு படம் என்று தோன்றுகிறது. அம்பி சொன்ன மாதிரி ஒரு சம்பவத்தை வெவ்வேறு பார்வையில் காட்டுவது "விருமாண்டி"யில் கையாளப் பட்டிருந்தது.
ஒரு பொதுவான கேள்வி :)
"அந்த நாள்" மற்றும் "விருமாண்டி" இரண்டிற்கும் உள்ள டெக்னிகல் வித்தியாசம் என்ன ?
ரஷோமோன் பற்றி "செழியன்" ஏற்கனவே குமுதத்தில் உலக திரைப்படங்கள் என்ற பகுதியில் எழுதி இருந்ததாக ஞாபகம் .
வாங்க யுஎஸ் தமிழன்,
ஜப்பானில் ஹிட் இல்லை என்று விக்கிபீடியா சொல்கிறது :). டான்ஸிங் மகாராஜா எல்லாம் ஜப்பானில் சூப்பராக ஓடுகிறாராம். என்னத்த சொல்ல :-))
வாங்க சுந்தர்,
நான் கண்ட சினிமாவும் பாப்பேன் :-) தற்போது Netflix-ல் ஆன்லைன்லேயே நிறைய சினிமா தருகிறார்கள். பழையகால சாப்ளின்லேர்ந்து 'அமெரிக்கன் பை' ரக அச்சுபிச்சு காமெடிகள்வரை அதில் கிடைக்கிறது. நல்ல படங்களுக்கு கொஞ்சம் காத்திருந்தால் DVD அனுப்பிவிடுகிறார்கள்.
வாங்க அம்பி அப்பா!
விருமாண்டி பற்றி எனது எண்ணத்தை அடுத்த கமெண்டில் சொல்கிறேன். பாராட்டுகளுக்கு நன்றி :-)
வாங்க சங்கர்,
செழியன் நிறையப் படங்களை அறிமுகப் படுத்தியிருந்தார் என்று ஞாபகம்.
'அந்த நாள்' மற்றும் 'விருமாண்டி'யில் சில உத்திகள் கையாளப்பட்டன. ஆனால் அது எந்த வகையில் ரஷோமொன்-ஐ ஒத்திருந்தது என்பது முக்கியமான கேள்விதான்.
ரஷோமொன் முன் வைப்பது, எப்படி மனிதர்களின் பார்வைகள் வேறுபடுகின்றன என்பது.
'அந்த நாள்' ஒரே ஒரு சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அடுத்தவர்களை அந்த சந்தேகப் பட்டியலில் சேர்த்துக் கொண்டே போவார்கள். இறுதியில் ஒரு நாடகம் மூலமாக குற்றவாளியைக் கண்டுபிடிப்பார். அதில் பார்வை வித்தியாசம் (perspective differences) கிடையாது. ஒரே காட்சியை பலதடவை காட்டுவார்கள். ஆனால் அவை யாவும் அந்தப் பாத்திரங்கள் ஊகிக்கும் கற்பனைக் காட்சிகளே.
'விருமாண்டி'யில் என்ன பிரச்சினை என்றால், கொத்தாளத் தேவர் சொல்லும் பார்வையில் சில உண்மைகள் திரிக்கப்படுகின்றன. ஆனால் விருமாண்டி உண்மையின் சொரூபமாக வெளிப்படுகின்றான். அவனும் அந்த சம்பவத்தின் பகுதியாக இருக்கும் பட்சத்தில் இது நம்பகத்தன்மையை குறைக்கிறது. மற்றபடி விருமாண்டி 'மண் வாசனையில்' பருத்திவீரனுக்கு முன்னோடி.
ரஷோமொன்-ல் விறகுவெட்டி இறுதியாக சொல்லும்போது கூட நமக்கு முழு நம்பிக்கை ஏற்படுவதில்லை. அந்தக் குழந்தையை அவன் தூக்கிக் கொண்டு போகும்போது நாம் சற்று நம்பத் துவங்குகிறோம். மீண்டும் தொடக்கத்திலிருந்து படம் பார்த்தீர்களானால் மீண்டும் அந்த விறகுவெட்டியை நம்ப மாட்டீர்கள் :-)
அதுதான் வித்தியாசம் என்று நினைக்கின்றேன்.
Google video link kudu thalaiva
ஆனந்த்,
கூகுள் வீடியோதான் இடுகையிலேயே இருக்கே. அத்தோட விக்கிபீடியா லிங்க் பிடிச்சுப் போனாலும் உங்களுக்கு அந்த வீடியோ கிடைக்கும்.
உங்களுக்காக இங்கேயும் ஒரு முறை தர்றேன் - http://video.google.com/videoplay?docid=-3611257047604037409&q=public+domain
டஜோமரு - இவரு டோமருக்குத் தம்பியா என்ற கேள்வியோடு உலகத் திரைப்படம் பற்றிய எனது புரிதலை வெளிப்படுத்துவதை நிறுத்திக் கொள்கிறேன்.
நன்றி வணக்கம்.
//டஜோமரு - இவரு டோமருக்குத் தம்பியா என்ற கேள்வியோடு //
இப்படி சந்தேகம் வரும்னுதான், ஆங்கிலம் மட்டும் ஜப்பானீஸ் மொழியிலயும் இடுகைல எழுதியிருக்கேனே :-))
குரசோவா காராசேவுக்கு அண்ணனா? இப்படி ஒரு கேள்வி உங்களுக்கு தோன்றாததின் நுண்ணரசியலைப் பார்த்து பிரமித்து நிற்கின்றேன்.
நாலு வாக்கியத்துக்கொருதரம் நுண்ணரசியல்னு பேசும் உமக்கு விக்கிப்பீடியா அரசியல் புரியவில்லையே? ஜப்பான் விமர்சகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் புரியாமல் பெயிலியர் என்று சொன்னார்கள் என்று விக்கிப்பீடியால எழுதியிருக்கு. ஆனால் படம் நல்லா ஓடியதாக எப்போதோ ஒரு டாக்குமெண்டரில பார்த்த ஞாபகம் - லிங்க் கேட்காதீங்க, கிடைக்கும் போது சொல்கிறேன்! :))
//நாலு வாக்கியத்துக்கொருதரம் நுண்ணரசியல்னு பேசும் உமக்கு விக்கிப்பீடியா அரசியல் புரியவில்லையே?//
ஆஹா! இது என்ன இப்படி ஒண்ணு கொளுத்திப் போடறீங்க?
நாங்க எல்லாம் சும்மா பச்சா. The BOSS is Back - அவரை வேணா வந்து ஒரு crash course எடுக்க சொல்லலாம் :-)
ஆனால் விருமாண்டி உண்மையின் சொரூபமாக வெளிப்படுகின்றான். அவனும் அந்த சம்பவத்தின் பகுதியாக இருக்கும் பட்சத்தில் இது நம்பகத்தன்மையை குறைக்கிறது.////
எண்ணண்ணே இப்படி சொல்லீட்டீக, அப்போ இனிமே உண்மையா இருக்கிற வெள்ளந்தியான மனுசகள காட்டுனாலே அதோட(அவுங்களோட) நேர்மைய சந்தேகப்படுவீகளோ, ஆனா பாருங்க இன்னும் நிறைய பேரு, நல்லமநாயக்கனூர்ல்ல இல்லாட்டாலூம், தொட்டப்பநாயக்கனூர் மாதிரி (ம்ம்ம், சரி சரி, MKU ஆளூ, அவருக்கு தெரியும்) மாதிரி ஊர்லேயும் இருக்கலாமில்லியா, சும்மா எல்லோர் நேர்மையும் எல்லாத்தையும் கேள்வி கேட்டுதான் இருக்கணும்ன்னு அவசியமில்லியே, இனிமே யாரவது காந்தி மாதிரி நாட்டுக்கு பாடுபட்டாக்கூட அதேயும் (அதாவது நிஜமாவே காந்தி மாதிரி) சந்தேகப்படுவம் போலேயே, ஆனா காந்தியெல்லாம் இருக்காங்க, இருப்பாங்கன்னு நான் நம்புறேன். இத ஒத்துக்கல்ல, அப்புறம் திலகரா மாறிடுவேன், கொத்தனாரய்யா, காந்தியெல்லாம் வந்து சுதந்திரதினத்தன்னிக்கு கமெண்ட் போடுறாங்கன்னு வாராதீரும்
இயற்பியியலில் ஒரு அடிப்படை சொல்வார்கள். 'எதுவும் 100 சதவீதம் கிடையாது. 100 சதவீதத்திற்கு அருகே, பக்கத்தில் செல்லலாம்' என்பது. உதாரணத்திற்கு elasticity. There is no objects that have elasticity as perfect 1. Iron has the highest elasticty than anyother thing. It is close to 1.
அதைத்தான் சொல்ல வந்தேன் :-)
விருமாண்டியில் கையாளப்பட்ட உத்தியில் எந்தவித கோளாறுமில்லை. ரஷோமொனில் வெளிப்படுவது ஒரு யதார்த்த நிலை. விருமாண்டி சொல்வது ஒரு புனித நிலை. அவ்வளவுதான்.
சுந்தந்திரத்தன்று காந்தியடிகளை நினைவுகூர வைத்ததற்கு நன்றி சாரே.
இனிய சுதந்திர தின வாழ்த்துகள். :-)
இயற்பியியலில் ஒரு அடிப்படை சொல்வார்கள். 'எதுவும் 100 சதவீதம் கிடையாது. 100 சதவீதத்திற்கு அருகே, பக்கத்தில் செல்லலாம்' என்பது////
இங்கு மட்டுமில்லை, Mutational studies irrespective of bacterial system or plant or animial system also suggets the same, at this point of time this bacterium behaves in this way, may revert or may change to it's original state - this is a precise concept as far as I understood as a doctoral student. ஆனால் இன்னும் 10 அல்லது 100 வருசம் கழிச்சு இருக்கப்போற நிகழ்தகவினை யோசிச்சு (ஒரு புனிதநிலை மாற வாய்ப்பு இருக்குன்ன்னு சொல்வது), தற்போதைக்கு கிட்டும் அல்லது இருக்கும் சந்தோஷத்தையும் குறைக்கும். அதுபோல விருமாண்டி மாதிரியான நம்பிக்கையும் கேள்விகுள்ளாக்கி Subconscious mind and conscious mind யும் contradict பண்ணவிட வேண்டியதில்லையில்லையா, நீங்க சொன்ன புனிதநிலையும் புரியுது. ஆனால் சட்டுன்னூ சந்தேகப்படலாம்ன்னு சொன்னவுடனே சட்டுன்னு உணர்ச்சிவசப்பட்டுடனோ,,,
ஸ்ரீதர்
சில மறக்கவே முடியாத எப்போதும் பிடித்தமான எப்போது வேண்டுமானாலும் பார்க்கத் கூடிய படங்களில் rashomon ம் என் பட்டியலில் உண்டு...படம் பார்த்து முடித்த பின்பு ஏற்படும் பிரம்மிப்பு தவிர்க்க இயலாதது.உண்மை பன்முகத் தன்மை கொண்டது என்பதினை அழுத்தமாக சொன்ன திரைப்படமிது..அகிராவின் எல்லா படங்களுமே பிரம்மிப்பை ஏற்படுத்த தவறுவதில்லை.குறிப்பாக அவரின் காலகட்டத்தை கணக்கிலெடுக்கையில் பிரம்மிப்பு இரட்டிப்பாகிறது.இவரின் dreams திரைப்படங்களின் இன்னொரு பரிமாணம்.வான்கோவின் ஓவியங்கள் வழி பயணிக்கும் பார்வையாளனின் கனவு அற்புதமாய் பதிவு செய்யப்பட்டிருக்கும்..
நன்றி
//ஆனால் சட்டுன்னூ சந்தேகப்படலாம்ன்னு சொன்னவுடனே சட்டுன்னு உணர்ச்சிவசப்பட்டுடனோ,,,//
இன்னொன்றும் கவனத்தில் கொள்ள வேண்டியது, விருமாண்டி படம் எடுக்கப்பட்டப் பொழுது ரஷோமொனைப் பற்றி வெளிப்படையாக சொல்லப்படவில்லை. ஆனால் மறைமுகமாக ஊடகங்கள் எழுதிக் கொண்டிருந்தன. தவிர்த்திருக்கலாம் :))
அய்யனார்,
//அவரின் காலகட்டத்தை கணக்கிலெடுக்கையில் பிரம்மிப்பு இரட்டிப்பாகிறது//
மிகவும் உண்மை.
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
Post a Comment