September 11, 2008

தொடர்ச்சியாக - ஞாநி, ஜெமோ மற்றும் பல

குமுதம் வெப் டீவிக்காக ஞாநி எடுக்கும் பேட்டிகள் சிலவற்றை தொடர்ந்து பார்த்து வந்திருக்கிறேன். இதில் கவர்ந்த அம்சம் என்னவென்றால், பேட்டி கொடுக்கிறவர்களுக்கு பேட்டி எடுப்பது ஞாநி என்று உணர்வு இருந்து கொண்டே இருந்தது. ஆனால் ஞாநி ஏனோ மேலோட்டமாகவே பேட்டிகள் எடுத்தமாதிரி இருந்தது. அமீர், பாலகுமாரன் பேட்டிகள் விதிவிலக்கு. அமீருக்கு விமர்சனத்தை எதிர்கொள்ளும் பக்குவம் இல்லை. 'வன்முறை அதிகம் இருக்குதுன்னா, அப்புறம் ஏன் ஜெர்மனியில அவார்ட் கொடுத்தாங்க' என்ற மனநிலையில் இருந்தார். பருத்திவீரன் நுணுக்கமாக எடுக்கப் பட்ட திரைப்படம் என்பதை மறுப்பதற்கேதுமில்லை. ஆனால் ஒரு படைப்பாளி விமர்சகரை எதிர்கொள்ளும் நிலைகள் அவருக்கு புரியவில்லை. சுப்புடு விமர்சனம் செய்வார் ஆனால் அவருக்கு சங்கீதம் தெரியாது போன்ற கருத்துகள் மூலம் அவருடைய அறியாமையை வெளிக்காட்டிக் கொண்டிருந்தார். முன்னர் மொழி திரைப்பட விழாவிலும் அவர் ஞாநியை கண்டிக்கும் தொனியில் சிவாஜி படத்திற்கு வக்காலத்து வாங்கி பேசியதும் நினைவில் தோன்றியது. பாலகுமாரன் பேட்டியில் அவரும் சிறிது கோபப்பட்டது தெரிந்தது. 'ஒரு ஆணுக்கு இரு மனைவியரை அனுமதிக்கும் இந்த சமூகம், ஒரு பெண்ணிற்கு அனுமதி கொடுக்குமா' என்ற தொனியில் கேட்ட கேள்விக்கு பாலகுமாரன் தடுமாறித்தான் போனார். 'ஒரே வீட்டிலேயே இரண்டு மனைவிகளோடு இருக்கிறேன்' என்று பெருமையாக வேறு சொல்லிக் கொண்டார். நமது இந்திய சமூகத்தில் இருக்கும் பலதார பிரச்சினையின் அடித்தளமே வேறு என்றுதான் தோன்றுகிறது. உலகில் உள்ள பசி, பட்டினி, பெட்ரோல் தட்டுப்பாடு, குளோபல் வார்மிங், மதச்சண்டைகள், தீவிரவாதம் போன்ற சகலப் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இந்த தனிமனித ஒழுக்கம் கொஞ்சம் அதிகமாகவே பேணப்படுகிறது போல் தெரிகிறது.

ஞாநியின் பிம்பத்திற்கு அவர் கரண் தப்பார் போல கூர்மையான பேட்டிகள் எடுக்க முயற்சிக்கலாம்.

மும்பையில் ஷபனா ஆஸ்மிக்கு வீடு கிடைக்கவில்லை. அவர் இஸ்லாமியர் என்பதால். இது ஒரு பெரிய பிரச்சினைதான். இன்னொரு பக்கம் ஏதாவது ஒரு கட்டிடத்தைக் காட்டி இது 'தாவூத்'க்கு சொந்தம் என்று சொன்னால் போதும், மக்கள் அம்பது அடி அந்தபக்கமாகவே உலாவுகிறார்கள். இப்பொழுது ராஜ் தாக்கரே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார். அமிதாப்பச்சன் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 'ராஜ் தாக்கரே என்னுடைய நல்ல நண்பர்' என்று சொல்லியிருக்கிறார். இல்லை, இல்லை. அது ஒரு ஜோக்காம். அமிதாப்பின் புனித பிம்பம் சரிந்து பல நாட்களாகிறது. அமர்சிங் போன்றோரின் அண்மை அவருடைய கடன்களை தீர்க்க உதவியிருக்கலாம். ஆனால் அதற்காக தான் ஒரு தொழில்முறை விவசாயி என்று சொல்வதின் அரசியலை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள். ஏதோ சொல்வார்களே 'நாயை அடிப்பானேன் ........ சுமப்பானேன்' என்று. அவர் மனைவி தீர்மானமாக 'நான் ஹிந்தியில்தான் பேசுவேன்' என்று ஒரு விழாவில் சொன்னது மீண்டும் பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறது. நமக்கு ஹைதரபாத், பெங்களூரு தாண்டினாலே வடநாடு வந்துவிடும். ஆனால் மராட்டியர்களுக்கு எப்பொழுதும் அவர்கள் மராட்டியர்தான். ஹிந்தி பேசுபவர்கள்தான் வடநாட்டினர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் புதிய மாதவி தாக்கரேக்களைப் பற்றி திண்ணையில் எழுதியிருக்கிறார். அவர்களும் மகராஷ்டிராவிற்கு பிழைப்புத் தேடி வந்தவர்கள்தானாம். ஆனால் மகராஷ்டிராவை சுவீகரித்துக் கொண்டுவிட்டார்கள். தசாவதார வசனம் நினைவிற்கு வருகிறது. 'தமிழன் நீ தமிழ் பேசலைன்னா, தமிழ் எப்படி வளரும்?' என்று தெலுங்கரான பல்ராம் நாயுடு கேட்க. 'உங்களை மாதிரி ஒரு தெலுங்கர் யாராவது தமிழ் வளப்பாங்க' என்று தமிழரான கோவிந்த் சொல்கிறார்.

ன்னைப் பொறுத்தவரை நீண்ட தூரப் பயனங்கள் எப்பொழுதுமே கடினமானவை. விடுமுறைகள் பொதுவாக வீட்டிலேயே ஏதாவது கதை புத்தகத்தில் ஆழ்ந்தோ, நல்ல திரைப்படங்கள் பார்த்தோ பொழுதுபோக்கப் படவேண்டியவை. ஐந்து வருடங்களுக்கு முன்னர் வரை அப்படித்தான் எனது விடுமுறைகள் இருந்தன. அதற்கப்புறம் என்னவா? ஹி..ஹி.. திருமணம் ஆகிவிட்டது. ஜெயமோகனின் பயனக்கட்டுரைகள் படிக்க மிகவும் சுவாரசியமானதாக இருக்கிறது. சுடச்சுட கட்டுரை எழுதி இணையத்தில் அளிப்பதால், நாமும் கூடவே பயனம் செய்கின்ற உணர்வு மேலிடுகிறது. அகோபிலத்தில் அவருடைய அனுபவங்களைப் படிக்கும் போது சிறு நெருடல். அஹோபிலத்தின் மிகப்பெரிய சிக்கலாக அதைச்சுற்றி உருவாகியிருக்கும் குடிசைப்ப்பகுதி என்று சொல்கிறார். சுத்தமென்பதையே அறியாதவர்கள் எந்தவிதமான பொறுப்பும் இல்லாமல் அந்தச் சூழலை சீரழிக்கிறார்கள் என்றும் எழுதுகிறார். இது அந்தக் குடிசைவாசிகளின் தவறு மட்டுமா? சுத்தமும், சுகாதாரமும் சொல்லிக் கொடுக்காமல் அவர்களை அப்படியே விட்டு வைத்திருப்பது யாருடைய தவறு என்ற கேள்வி எழுகிறது.

இந்தக் கட்டுரைகளை ஒரு வழிகாட்டியாக வைத்துக் கொண்டு பயனம் செய்ய ஆசை உண்டாகிறது.

R P ராஜநாயஹத்தின் எழுத்துக்களை சில வருடங்களுக்கு முன்னர் திண்ணையில் படித்தேன். அந்த நேரத்தில் ஊட்டியில் நடந்த தளைய சிங்கம் கருத்தரங்கத்தைப் பற்றிய செய்திகளில் அவர் பெயர் அடிபட ஆரம்பித்தது என்று நினைக்கின்றேன். பின்னர் ராயர் காபி கிளப் குழுமத்தில் மிகத் தீவிரமாக ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அவரே சொன்ன மாதிரி gibberish ஆங்கிலமாகத்தான் இருக்கும். இப்பொழுது வலைத்தளம் தொடங்கி பல அனுபவங்களைப் பதிகிறார். சுவாரசியமாக இருக்கிறது. 1985-ல் மு.க. அழகிரி மதுரையில் குடியேறியதைப் பற்றி எழுதியிருக்கிறார். மதுரைச் சாலையில் ஆட்டோவிற்கு பேரம் பேசும் அழகிரியைப் பற்றி படிக்கும்பொழுது காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. இம்மாதிரி பழைய சம்பவங்களை அசைபோடுவது மிகுந்த சுவாரசியமானதுதான். என்ன அடிக்கடி ஜெயமோகனைத் தொட்டு அவர் ஒரு மனநோயாளி என்று நையாண்டி செய்வதுதான் புரியவில்லை. மனநிலை தவறியவர்கள் திருந்தக் கூடாதா? இல்லை எழுதத்தான் கூடாதா? கனிமொழி கூட ஒரு விழாவில் இதையே ஆயுதமாக உபயோகித்தது நினைவிற்கு வருகிறது. அவரவர் நியாயம் அவரவர்க்கு.

கிறுக்குப் பிடித்த கடவுள்கள் (Gods must be crazy I & II). 80-களில் வெளிவந்த சிறந்த நகைசுவைப் படம். ஆப்பிரிக்க காடுகளில் உள்ளடங்கிய கலஹாரி பாலைவனத்தில் இருக்கும் பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருவர் நாகரீக உலகத்தை எப்படி எதிர்கொள்கிறார் என்பதை நகைசுவையோடு சொல்லிக் கொண்டு போகிறது. முதல் பகுதியில் கோகோகோலா பாட்டில் உண்டாக்கும் கலவரத்தைப் பற்றிய கதை. ஒரு டப்பாக் காருடன் காட்டிலே அந்த விஞ்ஞானி பயனிப்பதிலாகட்டும், புதிதாக வந்த பள்ளிக்கூட டீச்சரைப் பார்த்து உணர்ச்சிவசப்பட்டு தடுமாறுவதாகட்டும், நகரத்தின் பழக்க வழக்கங்களைப் பற்றிய அறிவில்லாமல் Xi (பழங்குடி மனிதன்) ஆட்டை வேட்டையாட தயாராவது போன்ற பல காட்சிகள் சிரிப்பிற்கு உத்தரவாதம். இரண்டாவது பகுதியில் வரும் பெண் ஆய்வாளர் அழகாகவும் கூர்மமயாகவும் நடித்திருந்தார். மிருகங்களைப் பற்றி நிறைய காட்சிகள் சுவையாக இருக்கும். கழுதைப்புலியிடமிருந்து தப்பிக்க தன் உயரத்தை கூட்டிக் கொள்ளும் சிறுவன் மனதைக் கொள்ளை கொள்கிறான். எனக்கு இரண்டாவது பகுதி மிகவும் பிடித்திருந்தது.

மெரிக்கவாழ் இந்தியர்களுக்கு என்னதான் வசதிகள் இருந்தாலும், அமெரிக்காவில் முடிவெட்டிக் கொள்வது ஒரு பிரச்சினைதான். நம்மூரில் 1, 2 அமெரிக்க டாலரில் 'முடி'கின்ற காரியம் இங்கே 10-12 அமெரிக்க டாலர் ஆகின்றதே என்ன்னும் எரிச்சல்தான். தானாகவே முடிவெட்டிக் கொள்கிற பிரஜைகளை அதிகம் பார்க்கலாம். மதுரையிலும் எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டுக்காரர் வீட்டிற்கு வெளியிலே ஒரு முக்காலியைப் போட்டுக் கொண்டு உட்கார அவர் மனைவி கடகடவென 'கட்' பண்ணி விடுவார். அமெரிக்கா வந்த புதிதில் முடிவெட்டும் கருவி வாங்கிவிடலாமா என்று மிகவும் யோசித்து விட்டு கடைசியில் ஒரு பார்பர் ஷாப்பைக் கண்டுபிடித்து துணிந்து 'தலை'யைக் கொடுத்துவிட்டேன். தன்னை பார்பர் என்று அறிமுகப் படுத்திக் கொண்ட அந்த கனவான் ஒரு வியட்நாம் நாட்டுக்ககரர். பெயர் 'கென்' என்றும், 12 வருடமாக முடிவெட்டுவதாகவும் தெரிவித்தார். 12 டாலர் ஆகும், அருகிலிருக்கும் அலங்கார சீமாட்டியிடம் வெட்டிக் கொண்டால் 10 டாலர்தான் என்றார். என்னய்யா வித்தியாசம் என்றால், தான் ஒரு பார்பர் என்றும் அந்த அம்மணி வெறுமே முடிவெட்டுபவர் மட்டுமே என்றார். அதாவது இவர் முடியழகு நிபுனராமாம். சரி ஒரு கலைஞனை ஊக்குவிப்போம் என்ற நல்லெண்ணத்திலும், அம்மினியை அடுத்த சேரிலிருந்துதான் நன்றாக பார்க்க முடியும் என்ற கெட்ட எண்ணத்திலும் கென்னிடமே முடி வெட்டிக் கொள்ள சம்மதித்தேன். சுவாரசியமான உரையாடல் தொடர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே 'நீங்கள் இந்தியரா' என்று கேட்டவர், ஹைதரபாத்திலிருந்தா வருகிறீர்கள் என்றார். எங்கு சென்றாலும் தெலுகு மக்கள் தங்கள் கொடியை நாட்டி வைத்திருக்கிறார்கள் பாருங்கள். அருகிலிருக்கும் இந்திய உணவகமான 'உடுப்பி ஹோட்டல்' அதிபருக்கு தாந்தான் முடிவெட்டுவதாக பறைசாற்றினார். நல்லது என்று வாழ்த்தினேன். எம்மாதிரி முடிதிருத்த வேண்டும் என்று கேட்டவரிடம், 'கொஞ்சமாக வெட்டுங்கள்' என்றேன். உடனே அவர் 'ரஜினிகாந்த் மாதிரி வெட்டிவிடவா?' என்று கேட்டாரே பார்க்கலாம். இதுதான் மார்கெட்டிங் சாகசமோ?

22 மறுமொழிகள்:

இலவசக்கொத்தனார் said...

நீரும் அவியல் போட ஆரம்பிச்சுட்டீராக்கும்.

ஆக மொத்தம் இப்போ ஹேர்ஸ்டைல் ரஜினி ஸ்டைல் எனச் சொல்லாமல் சொல்ல ஒரு பதிவு!! நடாத்துங்க! சிவாஜியில் கடைசியில் ஒரு ஸ்டைல் வருமே! அந்த ஸ்டைல்தானே!!

சென்ஷி said...

//இலவசக்கொத்தனார் said...
நீரும் அவியல் போட ஆரம்பிச்சுட்டீராக்கும்.

//

ரிப்பீட்டே :))

//கிறுக்குப் பிடித்த கடவுள்கள் (Gods must be crazy I & II). 80-களில் வெளிவந்த சிறந்த நகைசுவைப் படம். //

ஆறு மாசமா தேடுறேன். இன்னிய வரைக்கும் இந்த டிவிடி கிடைக்கலைங்க :(

வெட்டிப்பயல் said...

கொத்ஸ்,
ரஜினியோட ஹேர் ஸ்டைல் தான். ஆனா படத்துல நடிக்கிற ஹேர் ஸ்டைல் இல்லை :)

வெட்டிப்பயல் said...

வழக்கம் போல பதிவு சூப்பர் :)

அருண்மொழிவர்மன் said...

"ஞாநியின் பிம்பத்திற்கு அவர் கரண் தப்பார் போல கூர்மையான பேட்டிகள் எடுக்க முயற்சிக்கலாம்"

ஞாநியின் பேட்டிகளில் தன்னை ஒரு புத்திசாலியாக காட்டவேண்டும் என்ற துடிப்பே இருக்கின்றது.
அவரது ஓ பக்கங்கள், வீரபாண்டியனுக்கு எழுதிய கடிதம், தவிப்பு கதை போன்றவற்றை படித்தால் அவர்து சற்று விபரீதமான உள்நோக்கமும் புரியும்

SurveySan said...

நல்ல வாசிப்பு.

venkatramanan said...

ஸ்ரீதர்!
ராஜநாயஹம், ஞாநி, ஜெ.மோ ன்னு நான் சமீபமா ரசித்தவைகள் உங்களுக்கும் பிடிச்சிருங்கறது ரசனையை சரிபார்த்துக்க உதவுது!
டாக்டர்.ஷாலினி, நம்மாழ்வார் பேட்டிகளைப் பாருங்கள் நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்கும் ஆழம் அதில் இருக்குமென் நம்புகிறேன்!

அன்புடன்
வெங்கட்ரமணன்!

குரங்கு said...

நல்ல கலவை....

:)

Ram said...

நல்ல பதிவு!

அனுஜன்யா said...

ஸ்ரீதர்,

ஞானி நேர்முகம் இதுவரை பார்க்காததால் கருத்து சொல்ல முடியவில்லை. கரண் தப்பார் காலரி நோக்கி விளையாடுவார். விஷயம் அதிகம் இல்லாமல், எதிராளியை உணர்ச்சிவசப்பட வைப்பதில் மட்டும் கவனம் செலுத்துவார் என்று தோன்றும். அதனால் ஞானி, கரண் போல் நேர்காணல் செய்யவில்லை என்றால் சரிதான். In his long history of victories, karan ate the humble pie only agst Jayalalitha, PC.

தமிழ் நாட்டில் fav.punching bags பார்ப்பனியம், அமெரிக்கா மற்றும் ஜெமோ (பெரும்பாலும் இதே வரிசையில்). மும்பையில் அது அமிதாப் என்று மாறும்.

இந்த கான்செப்ட் நல்லா இருக்கு. பரிசலின் அவியல், வேலனின் கதம்பம். You sort of get to know the person and his/her perspective. உங்களுக்கும் தனி நடை இருக்கு.

அனுஜன்யா

பி.கு. : 'பைசல் ஆன கணக்கு' - அது நீங்கள் தானா? வயது...
'நிசப்தம் நிசப்தம்; அவ்வளவு நிசப்தம்; காதோரம் முதல் நரை' - தேவதச்சன் படித்திருப்பீர்கள்.

Sridhar Narayanan said...

இ.கொ,

வாங்க. நீங்கதான் இன்னிக்கும் முத போணி :-)

//சிவாஜியில் கடைசியில் ஒரு ஸ்டைல் வருமே! //

அடிக்கடி கண்ணாடியைப் பாக்காதீங்க. எல்லாரையும் மொட்டையடிக்கனும்னு ஆத்திரம் வரும் அப்புறம் :-))

சென்ஷி,

வாங்க வாங்க. :-)
//ஆறு மாசமா தேடுறேன். இன்னிய வரைக்கும் இந்த டிவிடி கிடைக்கலைங்க :(//

ஓஹ்... Netflix-ல ஆன்லைன்ல ஒரு பகுதியும், போஸ்ட்ல ஒரு டிவிடியும் கொடுத்தாங்க. வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாருங்க.

வெட்டி சார்,

//ஆனா படத்துல நடிக்கிற ஹேர் ஸ்டைல் இல்லை //

இதை ஏன் நீங்க கொத்தனாரைப் பாத்து சொல்றீங்கன்னு எனக்குப் புரிஞ்சிது. ஆனா அவருக்குப் புரியலையாமே. :-))

உங்க பாராட்டுகளுக்கு நன்றி.

Sridhar Narayanan said...

//அவர்து சற்று விபரீதமான உள்நோக்கமும் புரியும்//

வாங்க அருண்மொழிவர்மன்,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சொல்லப்போனா யாருக்க்த்தான் 'புத்திசாலியா' காட்டிக்கனும்னு துடிப்பு இல்லை. விபரீதமான உள்நோக்கம் எனக்கு சரியா புரியவில்லை.

வாங்க சர்வேஷ் - நன்றி.

வாங்க வெங்கட்ரமணன் - வருகைக்கு நன்றி. நேரம் கிடைக்கும்ப்போது கண்டிப்பாக பார்க்கிறேன். நன்றி :-)

வாங்க குரங்கு. உங்க கருத்துக்கு நன்றி!

ராம் - நன்றி :-)

Sridhar Narayanan said...

//karan ate the humble pie only agst Jayalalitha, PC. //

ஜெயலலிதா பேட்டியின் போது சீக்கிரமாகவே எரிச்சல் அடைந்து விட்டார் என்று கேள்விப்பட்டேனே.

உங்களுடைய கருத்துகளுக்கு மிக்க நன்றி. :-)

'பைசல் ஆன கணக்கு' சென்ஷி அவரோட பதிவுல சுட்டிக் கொடுத்திருந்தார். அப்படியே இங்க ஒருக்கா இறங்கிட்டீங்க :-))

வயது? எல்லாம் பதிவெழுதற வயசுதாங்க :-)

தேவதச்சன் அவ்வளவா படிச்சதில்லை. எஸ்ரா -வின் பதிவில் தேவதச்சன் பற்றி படித்திருக்கிறேன். அவர்களின் உரையாடல் மிகவும் சந்தோஷப் பட வைத்தது.

தென்றல் said...

/'வன்முறை அதிகம் இருக்குதுன்னா, அப்புறம் ஏன் ஜெர்மனியில அவார்ட் கொடுத்தாங்க' என்ற மனநிலையில் இருந்தார். /

ஸ்ரீதர்,

ஞாநியும் அமீருடம் கொஞ்சம் ஓவராகவே கேட்டதாகபட்டது. ஞாநியின் பார்வையிலேயே 100% நல்ல படம் எடுப்பது எப்படினு அவர்தான் சொல்லணும்.

அப்புறம், வக்கீல் சுமதியோட 'குசேலன்' விமர்சன 'கொடுமை'ய பார்த்தீங்களா! you too ஞாநி...னு கேக்க தோணிச்சி!

அவியல் .... நல்ல ருசி!!

கலையரசன் said...

வாசிக்க நன்றாக இருக்கின்றது. இருப்பினும் பல வேறுபட்ட விடயங்களை ஒரே கட்டுரையில் வருவதை குறைத்துக் கொண்டால் என நினைக்கிறேன்.

ச.சங்கர் said...

ஸ்ரீதர் நாராயணன்

கதம்பம் / கூட்டான்சோறு /அவியல் நல்லாவே இருக்கு.உங்கள் எழுத்து நடை அதை இன்னும் கொஞ்சம் சுவரஸ்யமாக்கியிருப்பதும் உண்மை.
"Gods must be crazy " பாகம் 1 &2 இரண்டும் எல்லோருமே ரசிக்கும் படியாக இருக்கும். :)

///உலகில் உள்ள பசி, பட்டினி, பெட்ரோல் தட்டுப்பாடு, குளோபல் வார்மிங், மதச்சண்டைகள், தீவிரவாதம் போன்ற சகலப் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இந்த தனிமனித ஒழுக்கம் கொஞ்சம் அதிகமாகவே பேணப்படுகிறது போல் தெரிகிறது.///

இதுக்கு என்னங்க அர்த்தம் :)

முகவை மைந்தன் said...

ஓ, எழுத வந்தாச்சா? மன்னிக்கணும் இப்பத் தான் வந்தேன். வாழ்த்துகளோடு ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன்.

Sridhar Narayanan said...

//தென்றல் said... //

வாங்க தென்றல் சார். உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//ஞாநியின் பார்வையிலேயே 100% நல்ல படம் எடுப்பது //

மொழியைப் பற்றி உயர்வாகவே சொல்லியிருக்கிறாரே.

//கலையரசன் said... //

வாங்க கலையரசன். வருகைக்கும் ஆலோசனைக்கும் நன்றி. கட்டாயம் கருத்துகளை குறைக்க முயற்சிக்கிறேன்.

//ச.சங்கர் said... //

வாங்க தல. உங்க பாராட்டுகளுக்கு நன்றி.

///உலகில் உள்ள பசி, பட்டினி, பெட்ரோல் தட்டுப்பாடு, குளோபல் வார்மிங், மதச்சண்டைகள், தீவிரவாதம் போன்ற சகலப் பிரச்சினைகளுக்கும் ஒரே காரணமான அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இந்த தனிமனித ஒழுக்கம் கொஞ்சம் அதிகமாகவே பேணப்படுகிறது போல் தெரிகிறது.///

இதுக்கு என்னங்க அர்த்தம் :)//

எல்லாம் அதே அர்த்தம்தாங்க :-))))

//முகவை மைந்தன் said...
ஓ, எழுத வந்தாச்சா? மன்னிக்கணும் இப்பத் தான் வந்தேன். வாழ்த்துகளோடு ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கிறேன்.
//

வாங்க முகவை மைந்தன். ஏற்கெனவே நம்ம பதிவுக்கு வந்து பாராட்டியிருந்தீங்கன்னு நினைப்பிருக்கு. :-)) அது நீங்க இல்லையா அப்ப?

வருகைக்கு நன்றி :-)

RVC said...

சென்ஷி பதிவுக்கு போய் சாம்பார் சாதம் சாப்பிட்டு வந்தா இங்கயும் அதே மாதிரி இன்னொரு கலவை..! நல்லா இருக்கு உங்க நடை. தொடருங்கள்.

பிரபு ராஜதுரை said...

முதலில் ராஜநாயகம் என்ற சுவராசியமான பதிவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

ஷபனா ஆஸ்மி கூறியது ஏதும் ரகசியமல்ல. மும்பையில் அனைவரும் அறிந்த பிரச்னைதான். இது குறித்து நான் சில வருடங்கள் முன்பு எழுதியது
http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_18.html

பொய்யன் said...

நாயை அடிப்பானேன். பிறகு டேஷ் டேஷ் என்று போட்டுவிட்டு சுமப்பானேன் என்று எழுதி உள்ளீர்கள். மறந்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு வரவேண்டியது பீயை சுமப்பானேன் என்பதாகும்.

எழுதவே அருவெறுப்பாக இருக்கிறது என்று நினைத்திருந்தீர்களானால் அதைச் சுமக்கிற ஆயிரக்கணக்கானோரின் நிலையை எண்ணிப் பாருங்கள்.

Sridhar Narayanan said...

வாங்க RVC,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

பிரபு,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. உங்கள் பதிவையும் படித்தேன். :-)

//அங்கு வரவேண்டியது பீயை சுமப்பானேன் என்பதாகும்.//

வாங்க பொய்யன். ஏதோ அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக மட்டும் பின்னூட்டம் இட்டிருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். முதலில், எனது பதிவின் மொழியை அதன் தொனிக்கு ஏற்றவாறே தீர்மானிக்கிறேன். மலம் அள்ளும் தொழிலாளர்களின் நிலைமையை எனது எழுத்தின் மூலம் மட்டும் சீர்படுத்த முடியும் என்ற மாயையை எல்லாம் கிடையாது.

மனிதர்கள் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் கொடுமையெல்லாம் இப்படி சொகுசு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எழுதியோ, கேள்வி கேட்டோ ஒன்றும் செய்ய முடியாது என்று உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

ஒரு சமையல் குறிப்பை எழுதும் போது இடையே உள் மூலத்தினால் மனிதர்கள் வெளிக்கும் போகும் போது படும் அவஸ்தையை எழுதுவது ஒத்து வராது என்பது எனது எண்ணம்.

கருத்துக்கு நன்றி.