September 17, 2008

சவரம் செய்த முகம்

தாத்தாவிற்கு நல்ல கருகருவென முடியிருக்கும். அந்த வயதிற்கு நரைமுடியைத் தேடித்தான் பிடிக்க வேண்டும். பக்கவாட்டிலும், பின்னாலும் ஒட்ட வெட்டியிருக்க, மேல் மண்டையில் வகிடு எடுத்து இரண்டு பக்கமும் தள்ளிவிட்டாற்ப் போல சற்றே சரிந்து அழகாக சிகை அலங்காரம் செய்திருப்பார். அவர் பாப்பாவை தூக்கிக் கொண்டு தெருவில் நடந்து போகும்போது தலையில் தேங்காய் எண்ணெய் வாசத்தோடு கலந்து ஒரு நறுமனம் பாப்பாவின் நாசியில் சுற்ற, கைகளைக் கட்டிக்கொண்டு உதட்டை 'ப்'என மூடிக்கொண்டு போவாள்.

தாத்தாவின் அடர்ந்த தலைமுடியை சீர்படுத்தும் பொறுப்பு ரொம்பக் காலமாகவே வேலுவிடம்தான் இருந்தது. முக்கால் கைகளை மறைக்கும் தொளதொள சட்டையும், பஞ்சு போல் வெளுத்த தலையும், ஒழுங்கில்லாத நரைத்த தாடியும் தடிமனான கண்ணாடிக்குப் பின்னால் சாம்பல் நிறக் கண்களுமாய் வாசக்கதவுக்கு அருகே இருக்கும் கதவில்லாத கம்பி ஜன்னலுக்கு வெளியே வந்து நிற்பார். தாத்தாவின் மனதறிந்தது போல் சரியான காலக்கட்டதில்தான் வருவார். 'பாப்பா, ஐயா இருக்காஹளா' என்று கேட்பார். தாத்தா கூடத்தில் டைரி எழுதிக் கொண்டோ, பின்கட்டில் பேசிக் கொண்டோ, உள் ரூமில் கடன் சிட்டைகளைச் சரி பார்த்துக் கொண்டோ, உள் திண்ணையில் தினமணி படித்துக் கொண்டோ இருப்பார். 'அமாவாசை கழிஞ்சு ஞாயித்துக் கிழமை வரச்சொல்லு' என்பார்.

வாரம் ஒரு முறை முகச் சவரம். மாதம் ஒரு முறை முடி வெட்டுதல் மற்றும் உடல் சவரம். அட்டவணை எல்லாம் போடாமல் அவர்களிருவருக்குமிடையே ஒரு ஒத்திசைவோடு கிரமப்படி நடந்து கொண்டிருந்தது. வேலு வெள்ளை நிற லுங்கியை தொடை வரை வழித்துவிட்டுக் கொண்டு குத்துக் காலிட்டு உட்கார்ந்துக் கொண்டு, சின்னதான ஒரு பெட்டியிலிருந்து தனது சவர உபகரணங்களை எடுத்து தயார் படுத்திக் கொண்டு காத்திருப்பார். அந்த காலத்தில் பெரும்பாலும் ஆண்களின் உடைகள் வெண்மை நிறத்திலேயே இருந்தன. பூப்போட்ட சிங்கப்பூர் லுங்கிகள் பின்னர்தான் பிரபலம் ஆனது.

தாத்தாவிற்கும் வேலுவிற்கும் இடையே சம்பாஷனைகள் எப்பொழுதும் நடப்பதில்லை. தாத்தா வெள்ளை நிறத் துண்டு மட்டும் கட்டிக் கொண்டு சப்பனமிட்டு உட்கார்ந்து கொள்வார். ஒரு மக்கிப்போன பிரஷ்ஷினால் அந்த் சோப்புக் கட்டியை சுழற்றி சுழற்றி நுரையை அவர் முகத்தில் பூச சவரம் தொடங்கிவிடும். சின்ன வயதில் வேலுவின் முழு சம்ரக்ஷணையையும் பார்ப்பது பாப்பாவிற்கு ஒரு பொழுதுபோக்கு. எல்லாம் முடிந்தவுடன் தாத்தா எழுந்து குளிக்க உள்ளே சென்றுவிட, பணப் பட்டுவாடா செய்வது பாப்பாவின் வேலை. பாட்டி கொடுத்தாலும் சரி பாப்பா கொடுத்தாலும் சரி வேலு இரண்டு கைகளாலும் வாங்கிக் கொண்டு ஒரு கும்பிடு போட்டுவிட்டுத்தான் இறங்கிப் போவார். எப்பவாவது வாசத் திண்ணையில் தனது கருவிகளை கழுவி துடைத்துக் கொண்டிருக்கையில் 'என்ன படிக்கிறே பாப்பா?' என்று கேட்பார். 'தேர்ட் ஸ்டாண்டர்டு' என்று சொன்னால் தலையை அசைத்துக் கொண்டே போய்விடுவார். வேலுவிற்கு நல்ல பழுத்த வயது. சமயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் சவரக் கத்தியை எப்படி சரியான இடத்தில் வைக்கிறார் என்பதே அதிசயமாக இருக்கும்.

சிலசமயம் 'பாட்டி இருக்காஹளா? எதுனா பழைய துணி இருக்கா?' யாசகம் கேட்கும் சங்கடத்தை மறைக்கும் வகையில் ஒரு அசட்டு சிரிப்புடன் கேட்பார். பாட்டி எப்பொழுதுமே ஆற்றில் போட்டால் அளந்து போடு என்ற கறாரான கொள்கையுடன் இருப்பவர். 'நவராத்திரி கழிஞ்சு பாக்கலாம்' என்பார். அப்பொழுதுதான் சித்திரை வெய்யில் போடு போடென்று போட்டுக் கொண்டிருக்கும். பாப்பா கல்லூரியில் சேரும்வரை கிரமமாக வேலு வந்து போய்க் கொண்டிருந்தார். ஏதோ ஒரு நாள் அதிகாலையில் மொட்டை மாடிக்குப் படிக்கப் போகும்போது தட்டுமுட்டு சாமான் போட்டு வைத்திருக்கும் சேந்திக்கு அருகே தாத்தா கண்ணாடி வைத்து தானே சவரம் செய்து கொண்டிருந்ததை பார்த்தாள். வேலுக்கு வயதானபடியால் வரத்து குறைந்து போய்விட்டதாம்.

வேலுவிடம் தாத்தா எப்போதும் நேரடியாகப் பேசினது இல்லை. பாப்பா திருமணம் ஆகிப் போகிறவரை பெரும்பாலும் அவள்தான் தாத்தாவிற்கு காரியதரிசி மாதிரி. சரியான கூட்டணிதான் இருவரும். தாத்தாவின் பேரப் பிள்ளைகளில் முதல் பேத்தி என்பதினால் பாப்பாவிற்கு எப்பொழுதும் ஸ்பெஷல் மரியாதை உண்டு. தாத்தா என்றுமே வெள்ளையில்தான் சட்டை போடுவார். அரைக்கை சட்டை என்றால் 'ஸ்லாக்', முழுக்கை என்றால் 'ஷர்ட்', என்று வகைப் படுத்தி வைத்திருப்பார். பித்தான்கள் பித்தளையில் தனியாக நூலில் கோர்க்கப்பட்டு சட்டையில் சேர்த்துக் கொள்கிற மாதிரி இருக்கும். நல்ல நெடிய மாநிற மேனியில் ஆங்காங்கே விபூதி அடையாளத்தோடு எப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருப்பார். எண்ணெய் வைத்து இழைத்துப் பின்னி விட்ட இரட்டை ஜடையும், சீட்டிப் பாவாடையும் சட்டையுமாக பாப்பாவைத் தூக்கிக் கொண்டே கோவிலுக்கு போவார். ஐந்து வயதுவரை இப்படி தூக்கிக் கொண்டேதான் போனார். பின்னர் அவர்கள் கூட்டணியில் மற்ற பேரப்பிள்ளைகள் சங்கரன், சண்முகம் என்று தொடர்ந்து சேர பாப்பாவிற்கு மேற்பார்வையாளராக பிரமோஷன் ஆகிவிட்டிருந்தது.

கிழக்கு கோபுரவாயில் வழியாக உள்ளே சென்று தரிசனம் முடித்துவிட்டு வடக்கு கோபுரவாயில் வழியாக நாச்சிமுத்துவின் கடைக்கு போவார்கள். 'பாப்பாக்கு ஒரு ஃப்ரூட்மிக்சர்?' என்று எப்பொழுது போனாலும் கேட்பார் நாச்சிமுத்து. அவர் கைகளில் பரபரவென கண்ணாடி தம்ளர்கள் சுழன்று கொண்டே இருக்க பெரிய தெர்மக்கோல் தொட்டியிலிருந்து ஃப்ரூட் மிக்சரை ஊற்றிக் கொண்டே இருப்பார். ஆனால் பாப்பாவிற்கு சாப்பிட்டதாக நினவில்லை. தாத்தா வெளியில் எதுவும் சாப்பிடுவதில்லை. கோவில் பட்சணக் கடையில் சிலசமயம் லட்டு, அதிரசம் என்று ஏதாவது வாங்குவது உண்டு. தாத்தா ஒரு முறை வார்டு கவுன்சிலராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். அதற்கு சர்பத் கடை நாச்சிமுத்துதான் முழுமுதற்க் காரணமாக இருந்ததால் அவர் கடையில் எப்பொழுதும் ஒரு இரண்டு நிமிடம் தங்கல் உண்டு. அடுத்த முறை தேர்தலில் நிற்கவில்லை. புதுப் பஸ்ஸ்டாண்டிற்கு நில ஆர்ஜிதம் செய்யும் விஷயத்தில் மனோகரன் போன்றவர்கள் 'வட்டிக் கடை நடத்திப் பொழைக்கிறவ்ன் எல்லாம் மக்கள் சேவை செய்யறேன்னு நாடகம் போடறாங்க' என்று நக்கலடித்ததில் காயம்பட்டு விட்டார்ப் போல. நாச்சிமுத்துவோடு பேசும்போது 'கெடக்குறான் அந்த பொறம்போக்குப் பய.' என்று அவ்வப்போது ஆறுதல் சொல்வார்.

கல்லூரி படிப்ப்பை முடிக்கு முன்னரே 'குத்த வச்ச பொட்டப் புள்ளையை எம்புட்டு நாள் வூட்டுலே வச்சிருப்பிய' என்று சாமிநாத மாமா ஜரூராக வரன் பார்த்து முடித்து வைத்தார். திருமணம் ஆனபிறகு சுந்தரேசனுக்கு ஊர் ஊராக சுற்றும் விற்பனைப் பிரதிநிதி வேலையாதலால் பெரும்பாலும் தாத்தாவோடு கடித தொடர்புதான் இருந்தது. அவ்வப்போது பண்டிகை விடுமுறைகளுக்கு மட்டும் தாத்தாவை நேரில் பார்க்கும் வாய்ப்பு இருந்தது. சென்ற புரட்டாசி மாதத்தின் மத்தியில்தான் பாட்டி தவறிப் போனார். தாத்தா வெளியில் கலங்காமல் இருந்தாலும் மனதில் நொறுங்கிப் போய்விட்டார்ப் போல. அவ்வப்போது வந்து கொண்டிருந்த கடிதங்கள் மொத்தமாக நின்று போய் மூன்று மாதம் ஆகிவிட்டது.

போன வியாழக்கிழமை அதிகாலையில் திருநா மாமா போன் பண்ணியிருந்தார். தாத்தாவிற்கு இரண்டு கிட்னியும் செயலிழந்துவிட்டது என்று ஆஸ்பத்திரியில் சேர்த்து இருப்பதாக. சனி, ஞாயிறாக பார்த்துக் கொண்டு சுந்தரேசனோடு பாப்பா ஊருக்கு வந்தாள். இரண்டு கிட்னிகளும் சுத்தமாக் பிரயோஜனப்படாது என்று சொல்லிவிட்டார்களாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்த இரத்த அழுத்த மாத்திரையின் பக்க விளைவாக இருக்கலாம் என்று டாக்டர் சொன்னார். வீட்டில் வைத்துப் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டார்கள். வாரம் இருமுறை டயாலிஸஸ் செய்ய வேண்டுமாம். திருநா மாமாவிற்கு இப்பொழுதே ஆயாசமாக ஆகிவிட்டிருந்தது. கிட்னி மாற்று சிகிச்சையைப் பற்றி அங்கே யாரும் பேச்செடுக்கிற மனநிலையில் இல்லை. டாக்டர்களும் ஒரு குறைந்தபட்ச வாய்ப்பினைத்தான் கொடுத்திருந்தார்கள்.

பாப்பாவிற்கு நம்பவே முடியவில்லை. தாத்தா எப்படி இப்படி கெழண்டு போனார். பாட்டியின் இழப்பிற்கு அப்புறம் தாத்தா சுத்தமாக வாழும் ஆசையை தொலைத்தவராக இருந்தார். ஒரு குழந்தையைப் போல நினைவு தப்பி தொடர்பில்லாமல் செய்கைகள் இருந்தன. வெளுத்துப் போன தலைமுடியும், மழிக்காத முகமுமாய் பேச்சு வெகுவாக குறைந்து போய் விட்டிருந்தது. தலைமுடி பராமரிக்காமல் விடப்பட்டு சிக்குப் பிடித்து இருந்தது. இவளைப் பார்த்தபோது அவர் விழிகள் மேலும் கீழுமாய் உருண்டது மட்டும்தான் தெரிந்தது. சிரித்தாரோ அல்லது சிரிக்க முயற்சித்தாரோ.

திருநா மாமாவிடம் கேட்டு பாப்பாவும் சன்முகமும் தாத்தாவிற்கு முகச்சவரம் செய்துவிட ஆரம்பித்தார்கள். சண்முகத்தின் ஷேவிங் ரேஸர் இரண்டாம் மனிதருக்கு சவரம் செய்ய சரிவரவில்லை. அதுவும் அடர்ந்த சிக்கலாகிப் போன தாடியில் அடிக்கடி மாட்டிக் கொண்டு திணறடித்தது. சண்முகம் உள் ரூமில் தேடிக் பிடித்து சவரக் கத்தி ஒன்று கொண்டு வந்தான். பாப்பாதான் தைரியமாக அதை வைத்து முழுச் சவரமும் செய்துவிட்டாள். கன்னத்தின் சுருக்கங்கள் பளிச்செனத் தெரிய பொக்கைவாயோடு சோகையாக சிரித்தார். மறுநாள் திருநா மாமா தாத்தாவின் தலை முழுவதும் மழித்து விட்டார். சிக்குப் பிடித்த தலையில் பேன்கள் தொல்லை வேறு. 'எங்கடா பிடிச்ச இந்த கத்தி. நல்ல கூர்மையா இருக்கே' என்று சண்முகத்திடம் கேட்க அவன் அந்தப் பெட்டியைக் காட்டினான். அந்தப் பெட்டியில் ஓரிரண்டு சீப்புகள், கத்திரிக்கோல், கையால் இயக்கப்படும் முடிவெட்டும் மெஷின் எல்லாம் இருந்தன. கூடவே ஒரு கடன் சிட்டை. பாப்பாவிற்கு பழக்கமான தாத்தாவின் கையெழுத்தில் 'வேலு - அ. ரூ 30/- வ. ரூ 12/- ' என்று வரிசையாக வட்டிக் கணக்கு குறிக்கப்பட்டு '27/06/1987' அன்று சிட்டை முறியடிக்கப் பட்டிருந்தது.

மொட்டைத் தலையோடு தாத்தாவின் சவரம் செய்த முகம் ரொம்பச் சின்னதாக ஆகிவிட்ட மாதிரி இருந்தது பாப்பாவிற்கு.

18 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

மிகவும் அருமையாக இருக்கிறது ஸ்ரீதர்.

அழகான வர்ணனைகளோடு சம்பவங்களை நம்பாமல் பாத்திரப்படைப்பை நம்பும் இந்த ஸ்டைல்.. உங்களுக்கு நிச்ச்யம் ஒத்துவரும்.. கலக்குங்க!

Sridhar Narayanan said...

வாங்க குரு! :-)

கதையே இல்லாமத்தான் எழுத ஆரம்பிச்சது. எப்படியோ அதுவா ஒரு வடிவத்துக்கு வந்திடிச்சின்னு நினைக்கிறேன்.

பாராட்டுதலுக்கு நன்றி தல :-)

இலவசக்கொத்தனார் said...

அழகா எழுதி இருக்கீங்க ஸ்ரீதர். ஆர்பாட்டமில்லாமல் அமைதியாகச் செல்லும் நதியைக் கரையில் உட்கார்ந்து ரசித்த மாதிரி இருந்தது!!

யு.எஸ்.தமிழன் said...

இதற்கு முந்தைய கதைகளைக்காட்டிலும் வர்ணனைகள் கொஞ்சம் நன்றாக இருப்பதாகப்படுகிறது. ஆனால் நோய்பற்றிய வர்ணனைகளை குறைத்திருக்கலாம். கதைக்கு அவை அவசியமில்லாததாகப்பட்டது ஒரு hint கொடுந்து அதையே knot ஆக பயன்படுத்தி முடித்திருந்தது நன்றாக இருந்தது. ஆனால் போன கதைல வாத்தியார வில்லன் ஆக்கினதைப்போல இப்ப தாத்தா. Am I seeing a pattern here? :)

Naana said...

Å÷½¨½¸û Á¢¸ ¿ýÈ¡¸ þÕ츢ÈÐ! ¦¾¡¼ÃðÎõ ¯ñ¸û ÓÂüº¢!!

அனுஜன்யா said...

ஸ்ரீதர்,

நல்லா வந்துருக்கு. சுரேஷ் சொன்னதுதான் என் கமெண்டும். எஸ்ராவின் ஆரம்ப காலக் கதை படித்த மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்க வழக்கமான சிறுகதைகள் மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குங்க.

நல்லாவும் வந்திருக்கு கதை.

G.Ragavan said...

நன்றாக இருக்கிறது ஸ்ரீதர். கிட்டத்தட்ட தாத்தாவின் வரலாறையே சொல்லி விட்டீர்கள். அத்தோடு தாத்தாவைச் சுற்றியுள்ள அனைவரையும் தொட்டு விட்டு...வேலுவிடம் முடித்தது அருமை.

Sridhar Narayanan said...

//இலவசக்கொத்தனார் said... //

வாங்க தல. உங்க பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.

வாங்க டைனோ :-)

//Am I seeing a pattern here? :)//

ஆஹா. அதுக்குள்ள profiling எல்லாம் பண்றீங்களே. :-)

வில்லனா காமிக்கனும்னு நினைக்கலை. ஒரு முரண் இருக்கனும்னு நினைச்சேன். அவ்வளவுதான்.

உங்க கருத்துக்கு மிக்க நன்றி.

வாங்க நாநா,

//வர்ணணைகள் மிக நன்றாக இருக்கிறது! தொடரட்டும் உண்கள் முயற்சி!!//

உங்க ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி! நீங்க இ-கலப்பை அல்லது NHM எழுதியை வைத்து unicode-லேயே மறுமொழியலாமே. :-)

Sridhar Narayanan said...

வாங்க அனுஜன்யா,

உங்க பாராட்டுதலுக்கு நன்றி. எஸ் ரா எனக்குப் பிடித்த எழுத்தாளர்தான். பாசாங்கில்லாத தெளிவான எழுத்து.

வாங்க சுந்தர்,

உங்க கருத்துக்கு நன்றி. நல்லா வந்திருக்குன்னு நீங்க சொன்னா சரியாத்தானே இருக்கனும் :-)

ஜி ரா,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ச.சங்கர் said...

ஸ்ரீதர் நாராயணன்

கதை நல்லா சொல்லியிருக்கீங்க.

சொல்ல வந்த மேட்டருக்கு நீளம் கொஞ்சம் அதிகம் போல தோன்றியது ?

Sridhar Narayanan said...

வாங்க சங்கர்,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

:-( கொஞ்சம் இழுவையாகப் போயிட்டுதா? இன்னும் கொஞ்சம் காத்திரமா எழுதலாம்தான். முயற்சிக்கிறேன். :-)

மீண்டும் நன்றி.

இலவசக்கொத்தனார் said...

//ஜ்யோவ்ராம் சுந்தர் said...

உங்க வழக்கமான சிறுகதைகள் மாதிரி இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக இருக்குங்க.

நல்லாவும் வந்திருக்கு கதை.
//

மத்த கதை எல்லாத்தையும் ஒரே வரியில் விமர்சனம் செஞ்சாச்சு போல!! :))

இலவசக்கொத்தனார் said...

பாபா Sridharஐ Srithar எனக் குறிப்பிட்டு இருக்கும் நுண்ணரசியலை விளக்கவும்.

Sridhar Narayanan said...

//மத்த கதை எல்லாத்தையும் ஒரே வரியில் விமர்சனம் செஞ்சாச்சு போல!! :))//

வாங்க நாரதரே! :-)

இதில ஒரு நல்ல விஷயம் என்னன்னா... மத்தது சிலதையும் 'கதை'ன்னு ஒத்துகிட்டீங்களே நீங்க ரெண்டு பேரும். :-) அதுக்கு ஒரு நன்னிங்கோ.


//பாபா Sridharஐ Srithar எனக் குறிப்பிட்டு //

அவர் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறதா சொன்னாரா என்ன?

தூக்கக் கலக்கத்தில SnapJudge-ல போட்டிருப்பார்ப் போல. வேறு யாரோடப் பெயரையோ இங்க கொடுத்திட்டார்ன்னு நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இயல்பான கதை. இயல்பான முடிவு. :-)

SurveySan said...

kalakkiputteenga.

யோசிப்பவர் said...

முடிவு அருமை,
என்னடா கதை, ஒரு ரூட்ல போயிட்டிருந்தது, சம்பந்தமே இல்லாமே திடீர்னு வேற ரூட்டுக்கு ட்ராக் மாறுதேன்னு யோசித்தவாறே படித்துக் கொண்டிருந்தபொழுது முடிவு அசத்தியது.