நேரத்தின் வரலாறும், புதிர்பிரதேசமும், கவுண்டமணியும்

September 28, 2008

னித இனத்தின் மகத்தான அறிவியலாளர்களாக சொல்லப்படுபவர்கள் மூன்று பேர். கலிலியோ, ஐசக் நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டீன். நமது காலகட்டத்தில் இவர்களுக்கு இணையான ஒரு அறிவியலாளராக சொல்லப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். உடல் முழுவதும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஹாக்கிங் தற்போது வாழ்வதும் பேசுவதும் தொழில்நுட்ப சாதனங்களின் மூலமாகத்தான். இருபத்தியோரு வயதில் 'இன்னமும் 2-3 வருடங்களே வாழ்நாள் என்று கணிக்கப்பட்டவர் ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்கும் மேலாக அறிவியலுக்கு அரிய பங்காற்றி வருகிறார். ஹாக்கிங் எழுதிய புத்தகம்தான் 'நேரத்தின் ஒரு சுருக்க வரலாறு' (A brief history of Time).. என்னை மாதிரியான அறிவியல் பாடங்களை வெறுக்கும் சாதாரணர்களுக்கு பல சிக்கலான விசயங்களை எளிதாக சொல்லிக் கொடுக்கும் புத்தகம். இந்த புத்தகம் முழுவதிலும் ஒரே ஒரு இடத்தில்தான் அறிவியல் சூத்திரம் காணப்படும். e = mc^2. மற்றபடி கருந்துளைகள், பெருவெடிப்பு, வெளிச்ச கூம்பு போன்ற பல விசயங்களையும் எளிதாக சொல்லிக் கொடுக்கின்றது. இந்தப் புத்தகத்தைப் படித்தவுடன் நான் எழுதிய ஒரு சின்னக் கதை -"வெடிப்பு".

எல்லையில்லா இந்தப் பிரபஞ்சம் ஒரு பலூனைப் போல விரிவடைந்து கொண்டே போகிறது என்கிறார் ஹாக்கிங். அதாவது புள்ளிகள் இடப்பட்ட பலூனை ஊதிப்பாருங்கள். புள்ளிகள் விரிவடைந்து கொண்டே அதனூடே இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறதா? அப்படித்தான் கிரகங்களும், நட்சத்திரங்களும், கேலக்ஸிகளும் நகர்ந்து கொண்டே போய்க் கொண்டிருக்கின்றன. இதை எப்படி நிரூபிப்பது? என்னுடைய நண்பர் சுவேக் ஒரு அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார். அவருடைய அனுமதியோடு அதிலிருந்து ஒரு பகுதி கீழே:

_/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\_

மொத்த பிரபஞ்சமும் அதன் அளவில் விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பதனை சிவப்பு இடமாற்றம் (Red Shift) என்ற ஒரு பரிசோதனை முடிவின் முலம் விளக்குகிறார்கள். எப்போது இந்த விரிவடைதல் முடிவுக்கு வரும், வெடிப்பதற்கு முன்பு எப்படி இருந்தது என்ற மற்ற இரு கேள்விகளுக்கும் விடை காணும் பொறுப்பை தாங்களாகவே எடுத்து கோண்ட ஹாலிவுட் இயக்குநர்கள் இக்கணத்தில் காசு பண்ணுகிறார்கள். சிவப்பு இடமாற்றம் எவ்வாறெல்லாம் பிரபஞ்சம் விரிவடைதலை நிருப்பிக்க உதவுகின்றது ??

சிவப்பு:
இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களும் ஏதாவதொரு (கருந்துளைகள் தவிர) ஒளி அலைகளை உமிழவோ அல்லது கிரகித்து கொள்ளவோ செய்கின்றன. இதில் நம் கண்ணுக்கு புலனாகும் கண்ணுறு ஒளியானது சிவப்பு முதல் ஊதா வரையிலான அலைநீளத்தை (Wavelength) கொண்டது. அதனிலும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அலைநீளம் உள்ள ஒளிகளை நம் கண்ணால் காண இயலாது. சிவப்பின் அலைநீளமானது ஊதாவை விட அதிகம்.

பூமியை விட்டு விலகி நகரும் ஒரு கிரகத்திலிருந்து வரும் கண்ணுறு ஒளியின் அலைநீளமானது சிவப்பை நோக்கி அதிகப்படியாக விலக்கம் அடைந்து காணப்படுகின்றது. இதனை டாப்ளர் விளைவினை (Doppler's effect) கொண்டு கணக்கிடமுடியும். நம்மிடமிருந்து விலகிச் செல்லும் ஒர் அவசர ஊர்தியின் ஒலி அளவானது குறைந்து கொண்டே செல்வது போல பூமியை விட்டு விலகி நகரும் கிரகத்திலிருந்து வரும் ஒளியின் அலைநீளமானது அதிகப்படியாக சிவப்பை நோக்கி இடம் மாறுவதுதான் சிவப்பு இடமாற்றம். இன்று கணக்கிடப்படும் ஒர் கிரகத்தின் சிவப்பு இடமாற்றம், நாளை மீண்டும் அளவிடப்படும் பொழுது சிறிது அதிகமாகின்றது. தூரம் அதிகமாகும் பொழுது இந்த சிவப்பு இடமாற்றம் அதிகமாகும். அதனால்தான், சூரியன் பூமியிலிருந்து அதிகபடியான தொலைவில் உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் சூரிய ஒளியானது இளஞ்சிவப்பு நிறமாக அமைகின்றது.

Hubble விதி:
இதன் முலம்தான் விலகி நகரும் பொருட்களின் ஒளி அலையில் இடமாற்றம் ஏற்படுவதனை நிருபிக்கின்றார்கள். இதனால் இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் தன்னுடைய நிலையிலிருந்து பூமியை விட்டு விலகி விரிவடைந்து கொண்டெ செல்வதாக கூறுகிறார்கள். இவ்வாறுதான் ஒருமித்த கணத்திலிருந்து வெடித்து விரிவடைந்து கொண்டே செல்வதாக நம்பப்படுகின்றது.

_/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\__/`-o0O0o-'\_

இப்படியாக விரிவடைந்து கொண்டிருக்கும் இந்த பிரபஞ்சத்தின் ஆயுளை குத்து மதிப்பாக பதிமூன்றரை பில்லியன் ஆண்டுகள் (1370 கோடி ஆண்டுகள்) என்று கணக்கிடுகிறார்கள். அதில் பூமி உண்டாகி ஒரு நான்கரை பில்லியன் ஆண்டுகள் (450 கோடி ஆண்டுகள்) ஆகிவிட்டன. அற்ப ஆயுள்காரனான மனிதன் இந்த பூவுலகை நாசமாக்கிவிட்டான் என்று சொன்னால் சிரிப்புதான் வருகிறது. இந்த பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருக்கும் மனிதனின் செய்கைகளும் இயற்கையின் அங்கமே. மனிதன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் இத்தனை பிரயத்தனமும். தற்கால மனிதன் பிரபஞ்சத்தின் ஒரு துளியினைக் கூட முழுவதும் உணரவில்லை. எதிர்கால மனிதன் பிரபஞ்சத்தில் வேறு சில துளிகளை கண்டறியலாம். தன் மூதாதையர்கள் எப்படித்தான் இந்த பூமியில் காலம் தள்ளினார்களோ என்று நமது எதிர்கால சந்ததியினர் வியப்படைவதற்கான சாத்தியங்கள் அதிகமே.


புதிர்பிரதேசம் என்பது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் சாண்டா க்ரூஸ் என்னும் ஊரில் இருக்கிறது. இது ஒரு முக்கிய சுற்றுலாத்தலமாக இருக்கிறது. சிறிய குன்றை காட்டி இதுதான் புதிர்பிரதேசம் என்று சொல்கிறார்கள். தேர்ச்சிப் பெற்ற வழிகாட்டிகள் பார்வையாளர்களை குழுக்களாக பிரித்து குன்றை சுற்றிக் காட்டிக் கொண்டே பல புதிர்களான செயல்களை செய்து காட்டுகிறார்கள். உதாரணமாக ஒரு பலகையில் பந்தை வைத்து சரிவான பாதையில் உருட்டிவிட்டால் பந்து உருள மறுக்கிறது. எதிர்திசையில் ஏற்றத்தை நோக்கி உருளுகிறது. படத்தைப் பாருங்கள்.
பெரியவர் எப்படி கோனலாக சுவற்றில் ஏறி நிற்கிறார் என்று. இம்மாதிரியான புதிரான முறையில் புவியீர்ப்பு விசையை பொய்யாக்கி பல அனுபவங்களைத் தருகிறது இந்த புதிர்பிரதேசம். எங்கள் கூட வந்த இளம்பெண் வழிகாட்டி பார்வையாளர்களை வரிசையாக நிற்க வைத்து இருப்பதிலேயே குள்ளமானவரை எல்லாரையும் விட உயரமானவராகக் காட்டினார். இது ஒருவகை Forced Illusion என்று சொல்லப்படும் 'தோற்றப் பிழை'யால் தோன்றும் மாயபிம்பம்தான். குன்றில் மேல் கட்டப்பட்டிருக்கும் கோனல் வீட்டின் பின்புலத்தில் நமக்கு எல்லாமே ஒருமாதிரி Skewed-ஆக தெரிகிறது. கானலின் நீரோ? வெறும் காட்சி பிழைதானோ? நானும் ஓர் கனவோ? இந்த ஞாலமும் பொய்தானோ?

சிங்கங்களும், சிறுத்தைகளுமாய் ட்விட்டரில் நிறைய தகவல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிறு எலியாய் நானும் ஆங்காங்கே உலவி சில பயனுள்ள தகவல்கள் பெற்றுக் கொண்டிருக்கிறேன். திடீரென்று இந்த வாரம் கவுண்டமணியைப் பற்றிய பல விவாதங்கள். மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன என்று தெரிகிறது. ஒரு பதிவில் சார்லி சாப்ளினோடு கவுண்டமணியை ஒப்பீடு செய்து எழுதிய பொழுது கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். உணர்ச்சி வசப்படுதலுக்கும் ஒரு எல்லையில்லையா என்ன? நிற்க!

பதினாறு வயதினிலே போன்ற படங்களிலே நடுத்தர வயது பாத்திரமேற்றி நடித்தவர், பின்னர் சில பத்து ஆண்டுகள் கதாநாயகனுக்கு துணைப் பாத்திரமாக இளமையான நகைசுவை நாயகனாக நிலைத்து நின்றது அவருடைய பெரும் சாதனைதான். கிட்டத்தட்ட அறுபத்தைந்து வயதுவரை கல்லூரி வளாகத்தில் இளமை லூட்டி அடித்துக் கொண்டிருந்தார். மற்றபடி அவரளவிற்கு சக பாத்திரங்களை மிகக் கேவலமாக நையாண்டி செய்தவர் (முக்கியமாக கருப்பு நிறத்தை) யாருமே கிடையாது. முக்கியமாக கவுண்டரின் நடிப்பில் லிமிட்டேஷன்ஸ் அதிகம். சத்தமாக திட்டினால் நகைச்சுவை என்று அர்த்தமா என்ன? சந்திரபாபுவை விட ஒரு திரை ஆளுமைமிக்க காமெடியன் யாரும் இருக்கிறார்களா என்ன? "சபாஷ் மீனா" என்றொரு படம். ரிக்ஷாக்காரனாக வரும் சந்திரபாபு சிவாஜி கனேசனோடு நடிக்கும் ஒரு காட்சி. தள்ளு முள்ளு என்று நடந்துகொண்டிருக்கும் காட்சியில் 'உன் மூஞ்சில என் பீச்சாங்கையை வக்க' என்று பேசிக்கொண்டே எதிர்பாராத நேரத்தில் சிவாஜியின் முகத்தில் நிஜமாகவே அடித்து விடுவார். அது ஒத்திகை பார்க்கப்படாமல் நடித்தது என்று சொல்வார்கள். சிவாஜியின் ரியாக்ஷன் அப்படித்தான் இருக்கும். ஏன், தற்காலத்தில் நச்சு இல்லாத சிறந்த நகைச்சுவைக்கு வடிவேலுவே சிறந்த உதாரணம். அவருடைய பல வசனங்களின் வீச்சு மிக அதிகம். சரி விடுங்கள். அவரவர் அரசியல் அவரவர்க்கு.

32 மறுமொழிகள்:

யு.எஸ்.தமிழன் said...

>>>> மகத்தான கண்டுபிடிப்பாளர்களாக

மகத்தான அறிவியலாளர்களாக அவர்களைக் கொள்ளலாம். கண்டுபிடிப்பாளர்கள் என்றால் எடிசன் et al.

>>>> முக்கியமாக கருப்பு நிறத்தை

Wasn't that reflective of our society and culture?

மற்றபடி கவுண்டரின் தீவிர ரசிகன் என்ற வகையில் - அவரவர் அரசியலுடன் ஒத்துப்போகிறேன்!

dyno

இலவசக்கொத்தனார் said...

ஏம்ப்பா உம்ம லிஸ்ட்டில் லியனர்டோ டி காப்ரியோ, ச்சீ, டா வின்ச்சிக்கு இடம் இல்லையா?

அப்புறம் எழுதினது எதுவும் புரியலை.

போன தபா உங்க ஊர்ப் பக்கம் வந்த பொழுது இந்த மிஸ்டரி ஸ்பாடுக்குப் போக ஆசைப்பட்டேன். ஆனா மத்தவங்க வீட்டோ பண்ணிட்டாங்க. நீங்க போனீங்களா?

இந்த மூணாவது விஷயத்தில் வாயைத் திறக்கலை. நன்னி!

அஜினோமோட்டோ said...

அவங்கவங்க அரசியல் அவங்களோட :-))

கவுண்டமணி தமிழ் சினிமா முக்கிய நிகழ்வுகிங்கிறத அவர் நடிப்பு & நடிப்பை மட்டும் சொல்லலாமே தவிர.. படத்தில் வரும் சிந்தனைகள் மற்றவை எல்லாம் வசனகர்த்தா மற்றும் இயக்குநர் கவுண்டமணிக்கு கட்டிய எழுப்பிய பிம்பம் சார்ந்தது (எப்படி இரஜினியின் ஆளுமையும் அவருக்கு எழுப்பப்பட்ட பிம்பம் இருக்கிறதோ அதே மாதிரி)

கவுண்டமணியை ஆராய்ச்சி செய்வது என்னமோ வீணாண நேரம் என தோன்றுகிறது. வேண்டுமானால் கவுண்டமணியின் நடிப்பு ஆளுமை மற்றும் அவருக்காக மற்றவர்கள் எழுப்பிய கருத்துப்பிம்பம் மற்றும் நுண்ணரசியலை ஆராயலாமே தவிர கவுண்டமணியை மட்டும் சிரிப்பு அரிஸ்டாட்டில் அளவுக்கு ஏற்றி வைத்து பேசுவது எவ்வளவு ஏற்புடையதென தெரியவில்லை.

Anonymous said...

//>>>> முக்கியமாக கருப்பு நிறத்தை

Wasn't that reflective of our society and culture?
//

யோவ் யூ.எஏஸ் I agree. Is it goundamani's own thought? இல்ல கவுண்டமணி தான் சமூகத்தை நான் பிரதிபலிக்கிறேன் என்ற பிரக்ஞையோட அதை செய்திருப்பாரா??? எவனோ எழுதிக்கொடுத்தை இயக்குநர் கவுண்டமணியை வைத்து மெருகு கூட்டியிருக்கிறார் அவ்வளவே.கவுண்டமணி நடிப்பு இல்லாவிட்டால் அது ரீச் ஆகியிருக்காது என்பது அப்பட்டாமான உண்மை என்பது வேறு

ஜாலிஜம்பர் said...

brief history of time வாசித்திருந்தாலும் புரிந்து கொண்டது 10% தான் இருக்கும்.இதைப் போன்ற நூல்களை யாரும் மொழிபெயர்க்கவில்லையே என்று நினைத்தால் 2002லேயே தமிழ்ப்பதிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.எங்கு கிடைக்கும் எனத்தெரியவில்லை.இந்நூலைப்பற்றிய அறிமுகக்கட்டுரை கீழேயுள்ள சுட்டியில் இருக்கிறது.
http://www.muthamilmantram.com/viewtopic.php?f=164&t=11400

enRenRum-anbudan.BALA said...

//இந்த மூணாவது விஷயத்தில் வாயைத் திறக்கலை. நன்னி!
//
நான் திறப்பேன். கவுண்டமணி ஒரு நல்ல காமடியன், அவர் நகைச்சுவையில் நுண்ணிய உள்ளரசியல் இருப்பதாகக் கூறுவதும், திரையில் (on screen) அவர் ஒருவரே "தன்மானச்" செம்மல் என்பதும், கடைந்தெடுத்த பேத்தல் !!! அறிவுஜீவித்தனத்தை காட்டுவதாக நினைத்துக் கொண்டு உளறுவதற்கும் ஒரு அளவு வேண்டும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ள "சந்திரபாபு" காட்சி மறக்க முடியாதது.
எ.அ.பாலா

Sridhar Narayanan said...

// யு.எஸ்.தமிழன் said...
மகத்தான அறிவியலாளர்களாக அவர்களைக் கொள்ளலாம். //

வாங்க ட்விட்டர் சிங்கம். உண்மை. அப்படித்தான் எழுத நினைத்தேன். தற்போது மாற்றிவிட்டேன்.

//Wasn't that reflective of our society and culture? //

நிறத்தின் பாதிப்பு நிறையவே இருக்கிறது. இதனால் கருப்பு நிறத்தவரை கிண்டலடிக்கும் காட்சிகள் தவறில்லை என்று சொல்ல வருகிறீர்களா? புதசெவி :-)

Sridhar Narayanan said...

//இலவசக்கொத்தனார் said...
ஏம்ப்பா உம்ம லிஸ்ட்டில் லியனர்டோ டி காப்ரியோ, ச்சீ, டா வின்ச்சிக்கு இடம் இல்லையா? //

வாங்க இ.கொ. டா வின்சியின் கனித சாத்திர பங்கேற்புகள் அதிகம் என்றாலும், கலிலியோவின் ஹீலியோ சென்ட்ரிக், ந்யூட்டனின் புவியீர்ப்பு தத்துவங்கள் மற்றும் ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிடி - இம்மூன்று நிரூபணங்களும் அறிவியலில் ஒரு paradigm shift கொண்டு வந்தது என்று சொல்கிறார்கள்.

//அப்புறம் எழுதினது எதுவும் புரியலை.//

புரியற மாதிரி எழுதலைன்னு சொல்றது நல்லாவே புரியுது. :-)

Sridhar Narayanan said...

வாங்க அஜினோமோட்டோ :-))

//கவுண்டமணியின் நடிப்பு ஆளுமை மற்றும் அவருக்காக மற்றவர்கள் எழுப்பிய கருத்துப்பிம்பம் மற்றும் நுண்ணரசியலை ஆராயலாமே //

அவருடைய நடிப்பு ஆளுமை என்றெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவர் நடித்ததெல்லாம் ஸ்டீரியோ டைப்பான வேசங்கள்தான். கதையை ஒட்டிவராத காமெடி காட்சிகள்தான் பெரும்பாலும். ஒரு சில காட்சிகள் சிரிப்பு வரவைத்தாலும் பெரும்பாலான காட்சிகள் எரிச்சலை வரவழைத்தன என்பது உண்மை. அந்த ஒருசில காட்சிகளை நமது டிவி புண்ணீயவான்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

மலையாளப் படத்தில் வரும் யதார்த்த காமெடி காட்சிகள் ஒரு நல்ல உதாரணமாக கொள்ளலாம்.

G.Ragavan said...

நீங்க சொன்னப்புறம் அந்தப் புத்தகத்தைப் படிக்கனும்னு தோணுது. அடுத்து கடைக்குப் போறப்போ தேடிப் பாக்குறேன்.

கவுண்டமணி லொள்ளுதான். ஆனா அந்த லொள்ளெல்லாம் நல்லாத்தான் இருக்குது. ஏன்னா வெட்டி ஆதிக்கக்காரங்க மேலதான் அவரோட லொள்ளு இருக்கும். அந்த வகைல ஓக்கேதானோன்னு தோணுது. ஆனா அவருக்கு இருக்குற டைமிங் சென்ஸ் சூப்பரு.

Sridhar Narayanan said...

//எவனோ எழுதிக்கொடுத்தை இயக்குநர் கவுண்டமணியை வைத்து மெருகு கூட்டியிருக்கிறார் //

வாங்க அனானி நண்பரே.

இருக்கலாம். ஆனாலும் ஒரே மாதிரியான நகைச்சுவையை மீண்டும் மீண்டும் செய்து அதை கவுண்டரிஸம் என்று ஆக்கிவைத்திருப்பதும் உண்மைதான்.

வாங்க ஜாலிஜம்பர்.

இது ஒரு முக்கியமான நூல் என்பது எனது தீர்மானம். பல கல்லூரி மாணவர்களுக்கு சிபாரிசு செய்திருக்கிறேன். நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இந்த மாதிரி பல ரஷ்ய புத்தகங்கள் எளிய முறையில் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. இம்மாதிரி புத்தகங்கள் அளித்த அறிவியல் அறிவு பள்ளிப் பாடங்களை விட பலமடங்கு பெரியது.

Sridhar Narayanan said...

வாங்க பாலா,

//நீங்கள் குறிப்பிட்டுள்ள "சந்திரபாபு" காட்சி மறக்க முடியாதது.//

ஆமாம் :-) அந்தக் காட்சியை தொடர்ந்து சந்திரபாபுவை பைத்தியம் என்று சிவாஜியிடம் சொல்வார்கள். அதை அரைகுறையாக கேட்டுவிட்டு சிவாஜிதான் பைத்தியம் என்று நினைத்துக் கொண்டே சந்திரபாபு சொல்வார் 'அவன் பைத்தியமா பிரதர்... அது தெரியாமா கை வச்சிட்டேன்பா. பிரதர் மன்னிச்சுக்க பிரதர். பைத்தியம்னு தெரியாம அடிச்சிட்டேன்பா' :-))))

கவுண்டமணி காட்சிக்கு சம்பந்தமேயில்லாமல் கத்தத்தான் செய்வார். நாம்தான் அதை wisecrack என்று நினைத்துக் கொண்டு சிரித்து தொலைய வேண்டியிருக்கிறது.

SurveySan said...

முதல் 25% ஒன்னியும் பிரீல. என் படிப்பு அப்படி ;)

//அற்ப ஆயுள்காரனான மனிதன் இந்த பூவுலகை நாசமாக்கிவிட்டான் என்று சொன்னால் சிரிப்புதான் வருகிறது.///

அப்ப இந்த க்ளோபல் வார்மிங் பத்தியும், கடல்ல மீனெல்லாம் காலி ஆயிடும் பத்தியும், கவலை வேணாமா? எல்லாம் உடான்ஸா?


எனக்கென்னமோ, வடிவேலுவை விட அதிகம் சிரிக்க வச்சது, கவுண்டமணின்னுதான் தோணுது.

"டேய்ய்ய்ய்ய்"னு அவரு பேச ஆரம்பிக்கரதே ஒரு கலக்கல். குறிப்பா, நடிகன் மாதிரி படங்கள், அப்பரம் ஆல்-இன்-ஆல் அழகுராஜா, இதெல்லாம், ப்ரில்லியண்ட்.

நம்மூரு சார்லி-சாப்லின், நாகேஷ்தான். :)

SurveySan said...

சொல்ல மறந்துட்டேன், கோல்டன் கேட்டுக்கு அடுத்ததா, எல்லாரையும் கூட்டிக்கிட்டு போய் காட்ரது, இந்த மிஸ்டரி ஸ்பாட் தான். இப்பெல்லாம், எல்லாரையும் உள்ள் போக சொல்லிட்டு,நான் வெளீல நின்னுடுவேன்.
போர் அடிக்க ஆரம்பிச்சிட்டது.

அந்த இடத்தை மூடப் போரதா சொன்னாங்களே? புரளியா?


'மிஸ்டரி' இருப்பது என்னமோ உண்மைதான். ஆனா, அதை ஓவர்-ட்ரமாட்டிக் பண்ணி, காசு பண்றாங்க. குறிப்பா, அந்த மரக் கட்டடம், நேரா கட்டாம, எக்ஸ்ட்ரா சாய்வா கட்டி, இன்னும் illusionஐ அதிகப் படுத்தராங்க. பொழைக்கத் தெரிஞ்சவங்க.

Sridhar Narayanan said...

சர்வேசன்,

வாங்க 'உங்கள் நண்பன்'.

குளோபல் வார்மிங் போன்ற பிரச்சினைகளினால் பூமிக்கு ஆபத்து என்பதைவிட, மனிதன் பூமியில் வாழும் சூழலுக்கு ஆபத்து என்று புரிந்து கொள்ள வேண்டும். நமக்கு முந்தி ஜுராஸிக் ஏஜில் இருந்த மிருகங்கள் எல்லாம் ஒரு காலத்தில் முற்றிலும் அழிந்து விட்டன. ஏனென்றால் பூமியின் சூழல் மாற்றம். அதாவது ந்மது சுற்றுசூழல் ஆர்வலர்களின் சிந்தனையெல்லாம் சுயநலமானதுதான்.

பிரபஞ்சத்தின் இயக்கங்களில் எதையும் நீங்கள் இயற்கையிலிருந்து பிரித்து பார்க்க முடியாது அல்லவா. மனிதனின் முயற்சிகள், சோதனைகள், சாதனைகள் எல்லாமே பிரபஞ்ச இயற்கை விதிகளுக்குட்ப்பட்டே நடக்கின்றன என்பதுதான் சரியாகும்?

மிஸ்ட்ரி ஸ்பாட் பற்றி நீங்கள் சொன்னது சரிதான். அங்கே புதிர் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. Forced Illussions தான் எல்லாம். அதைப் புரிந்து கொள்ள கொஞ்சம் இயற்பியல் ஞானம் தேவைப்படுகிறது.

எனக்குத் தெரிந்து வடிவேலு சொல்லும் பல வசனங்கள் பார்வையாளரை எளிதாக் கவர்ந்துவிடுகிறது. வலைப்பதிவர்கள் பலரும் வடிவேலு மொழியில் உரையாடுவதை நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன். காயப்படுத்தாத நகைசுவைக்கு உத்தரவாதம்.

ஆனால் கவுண்டமணி அப்படியல்ல. செந்தில் மாதிரியான ஒரு வாயில்லா பூச்சி அவருக்கு எப்பொழுதும் தேவையாக இருக்கிறது.

வெட்டிப்பயல் said...

//எனக்குத் தெரிந்து வடிவேலு சொல்லும் பல வசனங்கள் பார்வையாளரை எளிதாக் கவர்ந்துவிடுகிறது. வலைப்பதிவர்கள் பலரும் வடிவேலு மொழியில் உரையாடுவதை நிறைய இடத்தில் பார்த்திருக்கிறேன். காயப்படுத்தாத நகைசுவைக்கு உத்தரவாதம்.
//
இது எல்லாம் இன்னும் கொஞ்ச வருஷம். அப்பறம் அடுத்த ஆள் வந்தவுடன் அவருக்கு தாவிடுவோம். கவுண்டர் யூஸ் பண்ண நிறைய டயலாக்ஸும் இன்னும் நிறைய பேர் பயன்படுத்திட்டு தான் இருக்காங்க.

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல நாராயணா.

ஹூ இஸ் தீ டிஸ்டர்பன்ஸ்...

கூடை வெச்சிருக்கறவங்களுக்கு எல்லாம் நாங்க பெட்ரமாக்ஸ் கொடுக்கறதில்லை...

நாங்க சாமியையும் கிண்டல் பண்ணுவோம் மாமியையும் கிண்டல் பண்ணுவோம்...

நாட்டாமை டூ பங்காளி... பங்காளி டூ நாட்டாமை...

இந்த மாதிரி நிறைய இருக்கு கவுண்டரோட டயலாக்ஸ்...

//
ஆனால் கவுண்டமணி அப்படியல்ல. செந்தில் மாதிரியான ஒரு வாயில்லா பூச்சி அவருக்கு எப்பொழுதும் தேவையாக இருக்கிறது.//

இது எல்லாம் டூ மச்...

செந்தில் இல்லாம அவர் கலக்கன படங்கள் எக்கச்சக்கம்..

உள்ளத்தை அள்ளி தா (செந்தில் இருந்தாலும் அவருக்கும் கவுண்டருக்கும் பெருசா டயலாக்கே கிடையாது), மேட்டுக்குடி, டாட்டா பிர்லா, கர்ணா, மாமன் மகள், பங்காளி, தேடினேன் வந்தது, மலபார் போலிஸ், சிங்கார வேலன், மன்னன், உழைப்பாளி, பாபா, சின்ன தம்பி, உனக்காக எல்லாம் உனக்காக, நடிகன், புது மனிதன், வால்டர் வெற்றிவேல், பெரிய இடத்து மாப்பிள்ளை

இன்னும் சொல்லிட்டே போகலாம்...

உங்களுக்கு பிடிக்கலைங்கற ஒரே காரணத்துக்காக கவுண்டருக்கு காமெடி வராதுங்கறது சிவாஜிக்கு நடிக்க தெரியாது வெறும் ஓவர் ஆக்டிங் கேஸுனு என் ரூமெட் சொல்ற மாதிரி தான்...

Sridhar Narayanan said...

//உங்களுக்கு பிடிக்கலைங்கற ஒரே காரணத்துக்காக கவுண்டருக்கு காமெடி வராதுங்கறது //

வாருங்கள் பாலாஜி. எனக்கு பிடிக்காது என்றெல்லாம் சொல்லவில்லை. கவுண்டமணியின் காமெடி நடிப்பில் சில லிமிட்டேஷன்ஸ் இருக்கத்தான் செய்கிறது. He is not versatile like many of the early comedians. For that matter Vadivelu had exhibited more varieties. இதுதான் நான் சொல்ல நினைத்தது.

அவரிடம் உள்ள பெரும் குறை சக பாத்திரங்களை கன்னாபின்னாவென்று இழிவுபடுத்துவார். வடிவேலு காமெடி அபபடி இல்லை என்பதைத்தான் சொல்ல நினைத்தேன்.

திரை ஆளுமைக்கு, கவுண்டமணியையும் எம்.ஆர். ராதாவையும் எல்லாம் கம்பேர் செய்து கொண்டிருந்தார்கள். எம்.ஆர். ராதா போன்ற நடிப்பு தீர்க்கம் கவுண்டமணியிடம் கிடையாது என்பது எனது சிறு அபிப்ராயம். ஏதோ ஒரு இடத்தில் சார்லி சாப்ளினுடன் ஒப்பிட்டவுடன் எனது பொறுமை எல்லை கடந்துவிட்டது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாலாஜி. :-)

ROSAVASANTH said...

இன்னும் படிக்கவில்லை, ஆனால்

//நமது காலகட்டத்தில் இவர்களுக்கு இணையான ஒரு அறிவியலாளராக சொல்லப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்.//

எதை வைத்து அப்படி சொல்கிறீர்கள்; சில பாப்புலர் புத்தகம் எழுதி பிபலமாவதற்கும், தலை சிறந்த விஞ்ஞானி யாவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஹாக்கிங்கை விட பெரிய கைகள் இந்தியாவிலேயே உண்டு.

Sridhar Narayanan said...

ரோசா வசந்த்,

உங்கள் வருகைக்கு நன்றி.

இந்தப் புத்தகம் நான் படித்தது 6 வருடங்களுக்கு முன்னர். நண்பர் சுவேக்கின் ரெட் ஷிஃப்ட் பற்றிய சில தகவல்களைப் பதிய நினைத்தபோது balloon effect பற்றியும் மனதில் நிழலாடியதில் ஹாக்கிங் பற்றியும் எழுதினேன்.

மில்லினியம் (2000 வருடம்) போது நடத்திய சிறந்த அறிவியலாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற ஒரே வாழும் அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்று படித்ததாக நினைவு. இப்பொழுது அவசரமாக தேடிப் பார்த்ததில் கிடைத்த சுட்டி இதுதான். சாவகாசமாக பிறிதொரு நேரம் தேடி விளக்கத்தை இங்கே பதிகிறேன்.

மற்றபடி எனது அறிவியல் அறிவு அவ்வளவு தீர்க்கமானதல்ல என்பதையும் தெளிவாகவே சொல்லிவிடுகிறேன்.

வளர்மதி said...

நல்லதொரு பதிவு ஸ்ரீதர் நாராயணன்.

கவுண்டமணியின் நகைச்சுவையில் அடுத்தவர்களைக் காயப்படுத்தும் ஒரு கொடூரம் எப்போதும் இழையோடும் என்பதை சரியாகவே தொட்டிருக்கிறீர்கள்.

பின்னூட்ட உரையாடல்களில் அவரது ஆளுமைக்கும் அவர் மீது கட்டி எழுப்பப்பட்ட பிம்பபத்திற்குமான இடைவெளி தொட்டுக்காட்டப்பட்டிருப்பதும் ஒரு முக்கிய விஷயம்.

சந்திரபாபு பற்றிய குறிப்பு மிக முக்கியமானது.

கவுண்டமனியின் பிம்ப உருவாக்கம் ஒரு கட்டத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு இட்டுச் சென்றது. தமிழில் பல கதாநாயகர்களுக்கு இது நிகழ்ந்திருக்கிறது என்றாலும் கவுண்டமனியிடம் வெளிப்பட்ட மிகத் தெளிவான பிம்ப உருவாக்கம் கண்டு அஞ்சப்பட்டு அவர் ‘தட்டி' வைக்கப்பட்டார்.

கவுண்டமனி பற்றிய அந்தக் குறிப்பிட்ட அபத்தப் பதிவிற்கு நான் பதில் பதிவு எழுதியிருந்தால் விஷயம் வேறு திசையில் திரும்பியிருக்கும். ஆகையால் அமைதியாக இருந்துவிட்டேன்.

ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ் மீதான ஒரு குரூர நகைச்சுவை "SUPER HERO MOVIE" படத்தில் உண்டு.

சாத்தியமானால் அப்பகுதிகளை “பனித்திரை” பக்கத்தில் பதிவிலேற்றுகிறேன்.

Sridhar Narayanan said...

ரோசா வசந்த்,

இப்பொழுதுதான் கவனித்தேன். முந்திய பின்னூட்டத்தில் சுட்டியை சரியாகத் தரவில்லை. மன்னிக்கவும்.

பிபிசியின் இணையதளத்தில் இருக்கிறது

Sridhar Narayanan said...

வாருங்கள் வளர்,

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

//கவுண்டமனியின் பிம்ப உருவாக்கம் ஒரு கட்டத்தில் அவர் கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு இட்டுச் சென்றது. தமிழில் பல கதாநாயகர்களுக்கு இது நிகழ்ந்திருக்கிறது//

ஆம். 'தட்டி' வைக்கப்பட்டாரா என்று தெரியாது. ஆனால் அந்த முயற்சி தோற்றுப் போனதில் மீண்டும் அவர் மார்கெட் ஸ்திரமாக சிறிது காலம் பிடித்தது என்று தெரியும்.

//ஸ்டீஃபன் ஹாகிங்க்ஸ் மீதான ஒரு குரூர நகைச்சுவை "SUPER HERO MOVIE" படத்தில் உண்டு.

சாத்தியமானால் அப்பகுதிகளை “பனித்திரை” பக்கத்தில் பதிவிலேற்றுகிறேன்.//

கண்டிப்பாக செய்யுங்கள். காத்திருக்கிறோம்.

வளர்மதி said...

கவுண்டமனி ‘தட்டி' வைக்கப்பட்டதற்கு காரணமாக அமைந்த படம் “பணம் பத்தும் செய்யும்”.

அதற்கு முன்னமே அவர் ஓரிரு படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் இப்படமே கமர்ஷியல் ஹிட்டாகவும் அரசு ஊழியர்களின் ஊழலைக் குறித்த கடுமையான விமர்சனமாகவும் இருந்ததாலுமே அவர் ‘தட்டி' வைக்கப்பட்டதாக நினைவு.

ச.சங்கர் said...

நகைச்சுவையில் அடுத்தவரை ஏளனம் செய்து நகைச்சுவை பண்ணுவது ஒரு ரகம்.(கவுண்டமணி)

தன்னை நகைச்சுவைப் பொருளாக்கிக் கொண்டு /கொள்ளப்பட்டு நகைச்சுவை செய்வது இன்னொரு ரகம்.(செந்தில், வடிவேலு)

சிலர் இரண்டு வகையிலும் வெர்சடைலாக இருப்பார்கள் (விவேக்-ஓரளவிற்கு)

இதில் யாருக்கு எந்த வகை பிடிக்கும் என்பதைப் பொருத்து ரசிப்பார்கள்/ஆதரிப்பார்கள் என்பது என் கணிப்பு :)

Sridhar Narayanan said...

வாங்க வளர்,

பணம் பத்தும் செய்யும் படம் டிவியில் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். எம்ஜிஆர் ஃபாமுலாவோடு கவுண்டரின் ட்ரேட்மாக் நடிப்பும் உண்டு என்று நினைக்கிறேன்.

உங்கள் கருத்துக்கு நன்றி.

Sridhar Narayanan said...

//இதில் யாருக்கு எந்த வகை பிடிக்கும் என்பதைப் பொருத்து ரசிப்பார்கள்/ஆதரிப்பார்கள் என்பது என் கணிப்பு :)//

வாங்க சங்கர். மிகச் சரியாகச் சொன்னீகள். கவுண்டரின் லொள்ளு நகைச்சுவை பிரமாதமாகத்தான் இருக்கும்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழிஷ் பட்டையை மேலும், கீழும் மட்டும் போட்டிருக்கிறீர்கள். அப்படியே இரண்டு பக்கவாட்டிலும் போட்டுவிடுங்கள். முடிந்தால் ஒவ்வொரு பத்தி நடுவிலும் போடுங்கள் :)

போரடிச்சது. அதான் இந்தப் பின்னூட்டம். :))

rapp said...

நான் ஒரு அதிபயங்கர கவுண்டமணி ரசிகை:):):)
நம்ம தமிழ்நாட்டு காமடியை பொறுத்தவரை, இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் படங்கள் தவிர அனைத்துப் படங்களிலும் அறுபதுகளின் இறுதியிலிருந்து அனைத்து காமடி நடிகர்களும் ரெட்டை அர்த்த வசனத்தில் இருந்து கவுண்டர் செய்த அனைத்தையும் செய்துள்ளனர் என்பது என் கருத்து.

rapp said...

//நமது காலகட்டத்தில் இவர்களுக்கு இணையான ஒரு அறிவியலாளராக சொல்லப்படுபவர் ஸ்டீஃபன் ஹாக்கிங். //

:):):)

Sridhar Narayanan said...

//போரடிச்சது. அதான் இந்தப் பின்னூட்டம். //

நீங்க விளையாடிட்டு இருக்கிறது ஒரு 'பச்சபுள்ள'கிட்டங்கிறது மட்டும் நியாபகம் இருக்கட்டும். :-))

Sridhar Narayanan said...

வாங்க ராப்!

//நான் ஒரு அதிபயங்கர கவுண்டமணி ரசிகை:):):)//

நானும் ஒரு ரசிகந்தான். அதி பயங்கரம் எல்லாம் இல்லை. :-)

பொதுவாக எல்லா காமெடியன்களையும் ரசிப்பேன். பழைய காளி என். ரத்தினம்லேர்ந்து, ஃப்ரெண்ட் ராமசாமி, சாரங்கபாணி.... இன்றைய சந்தானம் வரை நிறைய வெரைட்டி உண்டு.

//ரெட்டை அர்த்த வசனத்தில் இருந்து கவுண்டர் செய்த அனைத்தையும் செய்துள்ளனர் என்பது என் கருத்து.//

காமெடியென்றால் எல்லாம்தான் இருக்கிறது. வெ.ஆ. மூர்த்தி என்று ஒரு நடிகர். இப்பொழுது டிவியில் பிரபலமாக இருக்கிறார். அவர் பேசும்போது 'திக்திக்' என்றுதான் இருக்கும். மனுசன் அநியாயத்திற்கு 'ரெட்டை அர்த்த' வசனங்களை உபயோகப் படுத்துவார்.

//ஸ்டீஃபன் ஹாக்கிங்//

ஆம்! பிபிசியின் கருத்து கணிப்பில் டாப் 20-ல் நமது சமகால அறிவியலாளர் இவர் ஒருவர்தான். மேலே ரோசா வசந்திற்கு போட்ட பதிலில் தொடுப்பு இருக்கிறது பாருங்கள்.

அனுஜன்யா said...

பிரபஞ்சம் ஒரு பெரிதாகும் பலூன் என்பதாகவே இருக்கட்டும். அந்த பலூன் சிறிதாக இருந்ததிலிருந்து, தற்போது பெரிதாக ஊதிக்கொண்டுள்ள நிலை வரை - அந்த பலூனுக்கு வெளியே உள்ள சமாச்சாரத்திற்கு என்ன பெயர்? என்னளவில் பிரபஞ்சம் என்பது எல்லையிலாத ஒன்று. எப்போது ஒன்று விரிவாகிறது என்கிறோமோ, அதற்கு முன்பு ஒரு எல்லை இருந்தது. தற்போது அஃது விரிவாகிறது; ஆயினும் தற்போதும் ஒரு புது எல்லையில் அது முடிவடைகிறது என்ற பொருளாகிறது. அதற்குப் பின்னால், இருப்பதன் பெயர் என்ன?

கவுண்டமணி பற்றி உங்கள் கருத்தும் மற்றவர் எண்ணங்களும் சுவை. நானும் அவர் இரசிகன் என்றாலும், உங்களுடன் ஒத்துப் போகிறேன் - சாப்ளின், சந்திரபாபு விடயங்களில். இத்தருணத்தில், யாராவது (நீங்கள், முரளி கண்ணன் போன்றோர்), தமிழில் மட்டும் எப்படி நல்ல காமெடி நிறைய நாட்களாக வருகிறது (மற்ற இந்திய மொழித் திரைப்படங்களுடன் ஒப்பிடுகையில்) என்று ஆய்ந்தால் சுவையாக இருக்கும். Like Pakistan produces pacers, India produces batters. இதற்கு நமக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம் என்று அவசரப்பட்டு பெருமை கொள்ளலாமா?

அனுஜன்யா