குழந்தைக் கதைகள் - 1

October 22, 2008

நீங்கள் சிறு வயதில் கேட்ட, பகிர்ந்த, மகிழ்ந்த கதைகளை மீண்டும் ஒரு முறை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? எனது ஒன்றரை வயது மகனின் கதை கேட்கும் ஆசைக்காக நான் தேடியபோது எனது நினைவலைகளில் சிக்கி மீண்ட சில கதைகளை இங்கே பதிவு செய்கிறேன். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சில கதைகள் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் முழுவதுமாக நினைவில் அப்படியே நிற்கின்றன.

இந்தக் கதையின் கட்டமைப்பும், அது குழந்தைகளுக்கு மறைமுகமாக சொல்லித்தரும் விசயங்களும் (ஆடு மேய்ப்பது இடையன். மீன் பிடிப்பது வலைஞன். சட்டி செய்வது குயவன்) போன்ற விசயங்கள் மிகவும் வியப்பானவை. இந்தக் கதையை சொல்வதற்கு என்று தனி முறை வேறு வைத்து இருக்கிறார்கள். சொல்கிற விதமாக சொன்னால் உத்தரவாதமாக குழந்தைகள் தூங்கிவிடுகின்றன. முடிந்தவரையில் நான் கேட்ட கதைகளை அப்படியேதான் கொடுத்திருக்கிறேன். இறுதியில் மட்டும் சில பிற்சேர்க்கைகள் இருக்கலாம். எல்லாம் 'மத்தியதட்டு' பொதுபுத்தியின் விளைவுதான் :)

சந்தோஷமா சிரிச்சுப் பறந்துகிட்டிருந்த 'ஈ'க்கு ஒரு சோகம். திடீர்ன்னு அதோட பேரு அதுக்கு மறந்து போச்சு. சுத்துமுத்தும் பாத்த ஈ அங்கே மேய்ஞ்சிகிட்டிருந்த ஒரு ஆட்டுகுட்டியப் பாத்து கேட்டதாம்:

ஈ: கொழு கொழு கண்ணே! என் பெயர் என்ன?

ஆகு: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
எங்க அம்மாகிட்டப் போய் கேளு.

உடனே அந்த ஈ அந்த குட்டியோட அம்மாகிட்டப் போய் கேட்டுதாம்.

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
என் பெயர் என்ன?

ஆகு அம்மா: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை மேய்க்கும் இடையன்கிட்ட போய் கேளு!

சரிதான்னுட்டு... அங்க பக்கத்திலேயே இருந்த ஆடு மேய்க்கிற இடையன்கிட்டப் போய்,

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! என் பெயர் என்ன?

இடை: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கும் கோல்கிட்டக் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
என் பெயர் என்ன?

கோல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் வளர்ந்த கொடிமரத்துகிட்டப் போய்க் கேளு!

அந்த கொடிமரத்தை தேடிப் போய்க் கேட்டுதாம்....

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே!
என் பெயர் என்ன?

கொடி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேலிருக்கிற கொக்குகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
என் பெயர் என்ன?

கொக்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
நான் தண்ணி குடிக்கிற குளத்துகிட்டேப் போய்க் கேளு!

அந்த கொக்கு தண்ணி குடிக்கும் குளத்துக்குப் போய்

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே!
என் பெயர் என்ன?

குள: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்கிட்டே இருக்கற மீன்கிட்டப் போய்க் கேளு!

உடனே அந்த ஈ மீன்களைத் தேடிப் பிடிச்சுக் கேட்டுச்சாம்...

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
என் பெயர் என்ன?

மீன்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைப் பிடிக்கும் வலைஞன்கிட்டப் போய்க் கேளு!

உடனே அந்த ஈ வலைஞனை தேடிப் போய் கேட்டுச்சாம்.

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா!
என் பெயர் என்ன?

வலை: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற சட்டிகிட்டப் போய்க் கேளு!

: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
என் பெயர் என்ன?

சட்டி: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னை செய்யும் குயவன்கிட்டப் போய்க் கேளு!

சரிதான். இன்னைக்கு பேரைக் கண்டுபிடிக்காம விட்டுர்றதில்லைன்னுட்டு அந்த குயவனைத் தேடிப் போச்சாம்.

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா!
என் பெயர் என்ன?

குய: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் கையிலிருக்கிற மண்ணுகிட்டப் போய்க் கேளு!

: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
என் பெயர் என்ன?

மண்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என் மேல் வளந்திருக்கிற புல்கிட்டேப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே!
என் பெயர் என்ன?

புல்: எனக்குத் தெரியாது! எனக்குத் தெரியாது!
என்னைத் திங்குற குதிரைகிட்டப் போய்க் கேளு!

ஈ: கொழு கொழு கண்ணே! கன்றின் தாயே!
தாயை மேய்க்கும் இடையா! இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் குடிக்கும் குளமே! குளத்தில் இருக்கும் மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா! வலைஞன் கைச் சட்டி!
சட்டி பண்ணும் குயவா! குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே! புல் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?

குதி: ஹீஈஈஈஈஈ! ஹீஈஈஈஈ

அப்படின்னு குதிரை சிரிச்சிச்சாம். உடனே ஈ-க்கு தன்னோட பெயர் 'ஈ'ன்னு ஞாபகம் வந்திடுச்சு. குதிரைக்கு ஒரு நன்றி சொல்லிட்டு சந்தோசமா புறப்பிட்டுச்சாம்.

குதி: ஏ! ஈ.... தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்கனும். இல்லைன்னா இந்த மாதிரிதான் பெயர் மறந்து போய் ஒவ்வொருத்தரா கேட்டுட்டு இருக்கனும்.

அப்படின்னு சொல்லிச்சாம். அதனால எல்லா குழந்தைகளும் தினமும் ஒரு டம்ளர் பால் கட்டாயம் குடிச்சிடுங்க :-))

11 மறுமொழிகள்:

பொன்ஸ்~~Poorna said...

ஸ்ரீதர்,
நானும் இந்தக் கதை கத்திருக்கேனே.. கேட்க.. @ http://pookri.com/?p=185

இலவசக்கொத்தனார் said...

கொழு கொழு கண்ணே!
கன்றின் தாயே!
(தாயை) மேய்க்கும் இடையா!
இடையன் கைக் கோலே!
கோல் வளர்ந்த கொடிமரமே! கொடிமரத்தின் மேலிருக்கும் கொக்கே!
கொக்கும் நீராடும் குளமே!
குளத்தில் இருக்கும் (பிடிக்கும்)
மீனே!
மீன் பிடிக்கும் வலைஞா!
வலைஞன் கைச் சட்டியே!
சட்டி செய்யும் (பண்ணும்) குயவா!
குயவன் கை மண்ணே!
மண் மேலிருக்கும் புல்லே!
புல்லைத் தின்னும் குதிரை!
என் பெயர் என்ன?

இதை பொன்ஸ் அக்கா என்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு முன்னமே சொல்லி இருக்காங்களே! :)

Sridhar Narayanan said...

வாங்க பொன்ஸ்,

சாவுக்கோட்டுக்கு (deadline) அருகே இருக்கும்போதும் கதை படிக்க வந்த உங்க குழந்தை மனசுக்கு ஒரு நன்றி :-)

வாங்க இகொ,

வருகைக்கும் திருத்தங்களுக்கும் நன்றி :) நம்ம ஞாபகசக்தி கொஞ்சம் பைபாஸ் பண்ணி கொக்குலேந்து மீன்-க்கு டைரக்டா போயிடுச்சிப் போல.

அடுத்த கதையில தப்பு வராம பாத்துகிடறேன். :)

த.அகிலன் said...

இது எங்கூர்ல(இலங்கையில்) முதலாம்ப்பு பாடப்பொத்தகத்துல இருக்கு.. நேக்கு நினைவும் இருக்கு... :)

Sridhar Narayanan said...

வாங்க அகில்!

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி.

இதையே நான் படக்கதையாக படித்த ஞாபகம். பொன்ஸ் நன்றாக விரிவாகவே சொல்லியிருக்கிறார்.

பத்மா அர்விந்த் said...

பரஞ்சோதியின் பதிவுல இதே போல குழந்தைகளுக்கான பழைய பாடல்களும் இருக்கும். குழந்தைகள் கதை, பாடல்கள் தொகுப்பா கூட போடலாம்.

Sridhar Narayanan said...

வாங்க பத்மா!

குழந்தை பாடல்களும் கதைகளும் பல இணையத் தளங்களில் பார்த்திருக்கிறேன். இங்கும் சிலது பதிவு செய்யலாம் என்ற ஆசைதான் :-)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

SurveySan said...

:)

//ஆகு://
டைப்போ or குழந்தை பாஷைல ஆடு?

Sridhar Narayanan said...

வாங்க சர்வேசன் :-)

ஆகு - ஆட்டுக் குட்டி.

அது கன்றுக்குட்டியா இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பரவாயில்லை ஆட்டுக் குட்டின்னாலும் நல்லாத்தான் இருக்கு.

கோபிநாத் said...

இலவசக்கொத்தனார் said...

\\\இதை பொன்ஸ் அக்கா என்னை மாதிரி சின்னப் பசங்களுக்கு முன்னமே சொல்லி இருக்காங்களே! :)\\

ரீப்பிட்டே ;))

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

இம்மாதிரிப் பல கதைகளைக் கேட்டிருக்கிறேன்... அந்த நினைவலைகளைக் கிளறிவிட்டது. கடந்து போன சிறுவயதிற்கான ஏக்கம் எல்லாருக்குமானது போலும்!

இன்னும் சில கதைகளையாவது பதியுங்கள்...