கடவுளின் பத்து கட்டளைகள்

October 4, 2008

இந்த வாரம் Netflix-ல் Ten Commandments அனிமேஷன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். இது பைபிளின் (பழைய ஏற்பாடு) அடிப்படையாக கொண்ட கதை. உயர்தர அனிமேஷன். ஆபிரகாமிய மதங்களின் இறைதூதர்களில் மிகவும் அடக்கமானவர் மோசஸ் என்னும் மூசா. புகழ்பெற்ற நடிகர் கிறிஸ்டியன் ஸ்லேட்டர் இறைத்தூதர் மோசஸ் பாத்திரத்திற்கு குரல் கொடுத்திருந்தார். சிறு வயதில் கிறிஸ்துவ பள்ளிக்கூடத்தில் படித்தபொழுது பைபிளும் (புதிய ஏற்பாடு) ஒரு பாடம். அப்பொழுது சுவாரசியமான கதைகள் பல படித்த அனுபவம் உண்டு. அது கிளறி விட்ட சில எண்ணங்கள் சில இங்கே.

மோசஸ் எகிப்தில் ஹீப்ரு (யூத) இனத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறக்கிறார். ஹீப்ரு இனத்தையே வெறுக்கும் ஃபேரோ (Pharaoh என்பது எகிப்தின் அரசருக்கான பெயர்) ஹீப்ரு குழந்தைகள் அத்தனையும் அழிக்க சொல்ல மோசஸின் தாய் அவரை ஒரு கூடையில் வைத்து நைல் ஆற்றில் விட்டுவிடுகிறாள். அதிர்ஷ்டவசமாக அந்தக் குழந்தை அரச குடும்பத்தைச் சேர்ந்து அரச குடும்பத்தில் வளர்கிறது. அடுத்த ஃபேரோ-ஆகப் போகும் ராம்ஸீஸ்-வுடன் (Ramseyes) ஒன்றாக வளர்ந்து கல்வி கேள்விகளில் தேர்ச்சிப் பெறுகிறார். இளைஞரான பின்னர் தனது பூர்விகம் தெரிந்ததும் ஹீப்ரு இனத்தில் கலந்து அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ்கிறார். கடவுளின் கட்டளைக்கு கீழ்படிந்து எகிப்திலிருந்து ஹீப்ரு இனத்தை விடுவிக்க ஃபேரோ-உடன் (Pharoah) பேச்சுவார்த்தை நடத்துகிறார். முதலில் மறுக்கும் அரசன், எகிப்தியர்கள் மேல் தொடர்ச்சியாக பத்து பேரழிவுகள் தாக்க மோசஸின் வேண்டுகோளை ஏற்று ஹீப்ரு இனத்தை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கிறார். மோசஸ் ஹீப்ரு இனத்தினரை அழைத்துக் கொண்டு 40 ஆண்டுக் காலம் அலைந்து திரிகிறார். இஸ்ரேலினர் எப்படி வாழ வேண்டும் என்ற வழிமுறைகளை கடவுளிடமிருந்து பெறுகிறார். அவைகளில் முதன்மையானது இந்த 'பத்து கட்டளைகள்'. இறுதியில் கடவுள் ஜெஹோவாவினால் அவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட இஸ்ரேலை வந்து சேர்கிறார். இஸ்ரேலினுள் நுழையுமுன்னர் தன்னுடைய 120-வது வயதில் மரிக்கிறார். விரிவாக பல சுவையான தகவல்கள் விக்கிபீடியாவில் கிடைக்கிறது.

எனக்கு பளிச்சென தெரிந்தது மோசஸின் வரலாற்றுக்கும் இந்தியாவின் பாகவத புரானத்திற்கும் உள்ள சில ஒற்றுமைகள். பாகவதப் புரானப்படி கிருஷ்ணர் பிறக்கும் முன்னர் கம்ஸன் தேவகிக்குப் பிறக்கும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல உத்தரவிடுகிறான். எட்டாம் குழந்தையான கிருஷ்ணர் ஒரு கூடையில் வைக்கப்பட்டு வசுதேவர் சுமந்து செல்ல பிருந்தாவனத்திற்கு வந்து சேர்கிறார். நடுவே கரைபுரண்டோடும் ஆறு பிரிந்து வழிவிடுகிறது. அரச குடும்பத்தில் பிறந்து இடையர் குடும்பத்தில் வளர்கிறார். பின்னர் பூர்விகம் தெரிந்து கம்ஸனை சந்தித்து வதம் செய்கிறார். இரண்டிலும் அசரீரியாக எதிர்கால உண்மைகள் உரைக்கப்படுகின்றன.

இதில் இன்னொரு கவனிக்கதக்க விசயம் என்னவென்றால், யேசு கிறிஸ்துவின் வரலாறுக்கும் மோசஸின் வரலாற்றுக்கும் இதேபோல் ஒற்றுமைகள் இருக்கின்றன.

இதை சற்றே நீட்டித்துப் பார்த்தால், எகிப்திய வரலாறு, யூத வரலாறு, கிரேக்கப் புரானங்கள், இவற்றுடன் இந்திய இதிகாசங்களுக்கு உள்ள ஒற்றுமைகள் மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கின்றன. இவை எனது அனுபவமும், படிப்பும் சார்ந்த விசயங்களே. விரிவான ஆராய்ச்சியெல்லாம் செய்யவில்லை என்று இங்கே குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

கிரேக்க காவியமான ஒடிஸியில், பெனிலோப் (penelope) ஒரு வில்லை காண்பித்து 'இதன் நாண் பூட்டி, பண்ணிரெண்டு கோடாலிகளின் வளையத்தின் வழியே அம்பை செலுத்தும் ஆண்மகனை நான் மணப்பேன்' என்கிறாள். யூலிஸஸ் அவ்வாறே செய்து தன்னை நிரூபிக்கிறான். இராமாயணத்திலும் இதே போன்ற ஒரு போட்டியினால் திருமணம் நடக்கிறது. பின்னர் வாலி வதத்திற்கு முன்னால் இராமன் ஒரே அம்பினால் ஏழு மரத்தை துளைத்து தனது பராக்கிரமத்தை சுக்ரீவனுக்கு நிரூபிக்கிறார். இதைப் போன்ற ஒற்றுமை மகாபாரதத்திலும் வருகின்றது. அங்கே அர்ஜுனன் தன்னுடைய வில் பராக்கிரமத்தை காட்டி திரௌபதியை மணக்கிறான்.

இன்னொரு கிரேக்க காவியமான இலியாத்தில் ட்ராய் நகர இளவரசன் பாரிஸ், கிரேக்க அரசனின் மனைவி ஹெலன் மேல் காதல் கொண்டு அவள் சம்மதத்துடன் அவளை ட்ராய்க்கு கூட்டிச் சென்று விடுகிறான். இதே அடிப்படை இராமாயணத்திலும் காணக்கிடைக்கிறது. இங்கே ஒரு வித்தியாசம் சீதை இராவணனின் காதலுக்கு சம்மதிக்கவில்லை. இராமனும், அர்ஜுனனும் (பாண்டவர்களும்) வனவாசம் ஏகுகிறார்கள். யுலிஸஸ் வனவாசம் போகவில்லையென்றாலும் காலிப்ஸோவின் பிடியில் சிக்கி பல வருடங்கள் கிரேக்கத்திற்கு திரும்ப முடியாமல் இருக்கிறான். மகாபாரதத்தில் அஞ்ஞாதவாசம் சமயத்தில் பாண்டவர்கள் உருமாறி வசிக்கிறார்கள். யுலிஸஸுக்கும் வயாதானவனாக உருமாறும் சாபம் கிடைக்கிறது.

இந்தக் காவியங்களின் காலத்தை கணிப்பது மிகவும் சிரமமானது. கி.மு எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை பல்வேறு தகவல்களின் அடிப்படையில் காலத்தை கணிக்கின்றார்கள். ஆனால் இவைகளில் உள்ள ஒரு செய்தி மிகவும் முக்கியமானது. மனிதன் இறைவனைப் பற்றி தீவிரமாக உணரத் துவங்கி 8000 முதல் 10,000 ஆண்டுகள்தான் (?!) ஆகின்றன. மனித இனத்தின் வயதாக குத்துமதிப்பாக 25,000 முதல் 30,000 ஆண்டுகள்வரை சொல்கிறார்கள். அப்படியானால் நமது மூதாதையரில் பெரும்பான்மையோருக்கு கடவுள் இருந்ததில்லை. இதற்கு முந்தைய காலகட்டதில் மனிதனின் வழிபாடுகள் பெரும்பாலும் இயற்கையை சார்ந்தே இருந்திருக்க வேண்டும். இயற்கை பேரழிவுகளையும், கொடிய மிருகங்களையும், கொள்ளை நோய்களையும் தாண்டி உயிர் வாழ்வதற்கு அவனுக்கு தேவையான நம்பிக்கையை கொடுத்தது கடவுள்தான் என்று தோன்றுகிறது. தற்போது அறிவியல் வளர்ச்சி அதைப் பெருமளவில் செய்து விடுகிறது.

இதையெல்லாம் வைத்துப் பார்க்கிற பொழுது ஒன்று நிச்சயமாக தெரிகிறது. ஆதியிலிருந்து மனிதனுக்கு சர்வ நிச்சயமாக தெரிந்திருப்பது ஒன்றே ஒன்றுதான். மரணம். இந்த டெஸ்ட்யூப் குழந்தை காலத்தில் கூட பிறப்பை 100 சதவீதம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் இவ்வுலகில் ஜனிக்கும் எல்லா உயிரும் மரிப்பது உறுதி.

இந்த வட்டத்தை இரண்டு விதமாக பிரிக்கலாம்.

இறப்பிலிருந்து பிறப்புவரை (அ) இறந்ததற்குப் பின்னால் இருக்கும் நிலை. இந்த நிலையைப் பற்றி பல்வேறு ஹேஷ்யங்கள் சொல்லப்படுகின்றன. சொர்க்கம், சுவனம், நரகம், மோட்சம், முக்தி என்று பல்வேறு நிலைகள் சொல்லப்படுகின்றன. இறந்த பின்னால் என்ன? இந்தக் கேள்வியும், பயமும்தான் மனிதனை பிறப்பிலிருந்து இறப்பு வரையிலான மறுபாதி வட்டத்தில் நாகரீகமானவனாக வாழ வைத்திருக்கிறது. இதனைப் பற்றிய தாக்கத்தில் ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். கடவுளும் கந்தசாமியும்.

மதங்கள் மனிதனுக்கு போதிப்பது சிறந்த வாழ்க்கைமுறையைதான். எப்படியும் இறக்கப் போகிற மனிதன் வாழும்வரை சிறந்த முறையில் வாழவேண்டும் என்பதுதான் மதங்களின் அடிப்படையாக இருக்கிறது. இருக்கவும் வேண்டும். வாழும் முறை என்பது வெறும் சடங்குகள் நிறைந்த நிறுவனமாக மாறியதுதான் மனித இனத்திற்கான பேரிழப்பு.

14 மறுமொழிகள்:

யோசிப்பவர் said...

request you to read http://kathaiezuthukiren.blogspot.com/2008/10/blog-post.html

ambi said...

எகிப்தியர்களுக்கும் இந்தியர்களுக்கும் குறிப்பா தமிழர்களுக்கும் பல தொடர்புகள் இருந்து வந்ததுள்ளது பல ஆராய்ச்சிகளில் தெரிய வருகிறது.

பிரமீடுகளின் உருவம், குணாதிசயம் எல்லாம் மஹா மேருவை ஒட்டி இருக்குன்னு படிச்சு இருக்கேன்.

உங்களுக்கு தெரிஞ்சா ஒரு அப்திவு போடுங்க (பதிவுக்கு ஒரு மேட்டர் குடுத்து இருக்கேன்) :)

சரி நீங்க படிச்சது seventh Day ஸ்கூலா? :))

ச.சங்கர் said...

ஸ்ரீதர் நாராயனன்

உங்களது இந்தப் பதிவுக்கு எப்படிப் பின்னூட்டம் இடுவது என்று "என்னையும் சேர்த்தே" நிறையப்பேர் திணறி இருப்பது வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிகிறது :)

Sridhar Narayanan said...

யோசிப்பவர்,

வாங்க. இப்பதான் உங்க கதையை படிச்சு பின்னூட்டமும் போட்டுட்டு வந்தேன் :-)

வாங்க அம்பி அப்பா,

//பிரமீடுகளின் உருவம், குணாதிசயம் எல்லாம் மஹா மேருவை ஒட்டி இருக்குன்னு படிச்சு இருக்கேன்.//

:-)) நல்லா கெள்ப்புறாங்கைய்யா பீதியை...

//சரி நீங்க படிச்சது seventh Day ஸ்கூலா? :))//

இல்லப்பா. Chandler Matriculation பள்ளி. நான் படிக்கும்போது மெட்ரிக் எல்லாம் இல்லை :(

//உங்களது இந்தப் பதிவுக்கு எப்படிப் பின்னூட்டம் இடுவது//

:-) அட 3 நாளா யாருமே பின்னூட்டம் போடலை. ரெண்டு பேரு தனியா சாட்ல கூப்பிட்டு திட்டினாங்க வேற.

இதுக்கெல்லாம் அசந்திருவோமா என்ன. அடுத்து வருது பாருங்க இன்னொரு அலசல் ரிப்போர்ட் :-))

சென்ஷி said...

//வாழும் முறை என்பது வெறும் சடங்குகள் நிறைந்த நிறுவனமாக மாறியதுதான் மனித இனத்திற்கான பேரிழப்பு.//

அசத்தல் வரிகள் :)) மிக ரசித்தேன்..

சென்ஷி said...

//ச.சங்கர் said...
ஸ்ரீதர் நாராயனன்

உங்களது இந்தப் பதிவுக்கு எப்படிப் பின்னூட்டம் இடுவது என்று "என்னையும் சேர்த்தே" நிறையப்பேர் திணறி இருப்பது வந்திருக்கும் பின்னூட்டங்களைப் பார்த்தாலே தெரிகிறது :)
//

உண்மைதான். சில விவரங்களை துவைத்து அலசியெடுத்து பிழிந்து காயவைக்கும் போது அறிவுசீவித்தனமாய் எதையாவது உளறிவிடக்கூடாதே என்ற பயத்திலேயே உங்களது சில பதிவுகளில் பின்னூட்டம் போடாமலேயே பதிவை படித்துவிட்டு ஓடிவிடுகிறேன் :))

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி,

உங்க பாராட்டுகளுக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!

//சில விவரங்களை துவைத்து அலசியெடுத்து பிழிந்து காயவைக்கும் போது //

என்னமோ கிண்டல் பண்ற மாதிரியே இருக்கே...

//அறிவுசீவித்தனமாய் எதையாவது உளறிவிடக்கூடாதே //

ஆஹா... கன்பர்ம்டா நம்மளை ஓட்டிகிட்டுத்தான் இருக்கீங்க :-) இப்படியெல்லாம் சொன்னா நாங்க அடங்கிடுவோம்னு பாக்குறீங்க. உங்க பாணியிலேயே ஒரு மேஜிக்கல் ரியலிஸத்தில் ஒரு கதை எழுதி உங்களை பதிலுக்கு இம்சை செய்யலாம்னு ஒரு தீராத ஆசை இருக்கு. :-))))

//பின்னூட்டம் போடாமலேயே பதிவை படித்துவிட்டு ஓடிவிடுகிறேன் :))//

சரி சரி. நம்பிட்டேன். நீங்க எல்லா பதிவுகளையும் படிக்கறீங்கன்னு நம்பிட்டேன்னேன் :-)

மிக்க நன்றி காதலன் அவர்களே! உங்க தொடர் ஆதரவுக்கு மிக்க நன்றி! :-)

G.Ragavan said...

டென் காமேண்ட்மெண்ட்ஸ் படத்தைப் பார்த்திருக்கீங்களா? அருமையா பிரம்மாண்டமா இருக்கும்.

பொதுவாவே பாத்தீங்கன்னா... எல்லாப் புராணங்களும் ஒரு குறிப்பிட்ட formulaக்குள்ள அமைஞ்சிரும்.

ஒரு நாயகன். ஒரு எதிர்நாயகன். ஒரு கடவுள். இதுதான் கதை. இதுல அந்தந்த நாட்டுப் பிரச்சனையைத் தூவிக்கனும்.

தமிழ்நாடுன்னா...சாதிப் பிரச்சனை. ஆப்பிரிக்காவுல அரசியல் பிரச்சனை.

அப்புறம் சூழ்நிலைக் காரணி மாயாஜாலம். மலையா இருக்குற ஊருன்னா.. மலை உடையனும். கடலு..தண்ணின்னா..அது வழி விடனும். இதுவே பாலைவனம்னு வெச்சுக்கோங்க.... தண்ணி வரும். பந்தல் வரும். இந்தப் பச்சடியையும் சேத்துக்கனும்.

அப்பப்ப வளமான வாழ்வு ஊறுகாயும் சொர்க்கப் பாயாசமும் சேத்துக்கிட்டா புராண விருந்து கலக்கலா இருக்கும். :)

Sridhar Narayanan said...

வாங்க ஜிரா

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

உலகின் பழம்பெரும் இதிகாசங்கள்ல இருக்கிற ஒற்றுமை ஆராய்ச்சிக்குரியதுதானே. :-)

G.Ragavan said...

// Sridhar Narayanan said...

வாங்க ஜிரா

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

உலகின் பழம்பெரும் இதிகாசங்கள்ல இருக்கிற ஒற்றுமை ஆராய்ச்சிக்குரியதுதானே. :-) //

நிச்சயமா இல்லைன்னுதான் சொல்வேன். :) எல்லா மனுசங்களோட மனசும் ஒடம்பும் ஒரே அச்சுதான். திங்குறதுக்கு ஏத்தாப்புல உடம்பும்...தங்குறதுக்கு ஏத்தாப்புல மனசும் கூட்டிக் கொறச்சிக்குது. அவ்ளோதான். வரலாறுன்னு பாத்தாலே... பிறந்தான் வளர்ந்தான் இறந்தான்தானே. இதுக்குள்ள முன்னப்பின்ன இருக்குறதுதானே. அதேதான் புராணத்துலயும். இதுல ஆச்சரியப் படுறதுக்கோ...பெருமிதப் படுறதுக்கோ ஒன்னுமில்லைங்குறது என்னோட கருத்து. :)

Sridhar Narayanan said...

//வரலாறுன்னு பாத்தாலே... பிறந்தான் வளர்ந்தான் இறந்தான்தானே.//

அப்படி ஒரேயடியாக சுருக்கிவிட முடியாது. கலாச்சாரம் நாகரீகம் எல்லாவற்றிலும் நிறைய மாற்றம் இருக்கத்தான் இருக்கிறது.

உதாரணமாக கிரேக்கர்கள், பாரசீகர்கள் ஒரே காலகட்டத்தில் இருந்தாலும் இவர்களுடைய கலாச்சாரம் மிகவும் மாறி இருக்கும். கலாச்சாரத்தின் பிரதிபலிப்பே இலக்கியம். :-)

இலவசக்கொத்தனார் said...

எல்லாம் பார்முலா மேட்டர்தான். நம்ம ஊர் சினிமாவுக்கு ஒரு பார்முலா ஆங்கில சினிமாவுக்கு ஒரு பார்முலா. ஒரு காமெடியன் சொன்னதுதான் ஞாபகம் வருது - There are no new jokes, your success is measured on how you deliver it.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/கலாச்சாரத்தின் பிரதிபலிப்பே இலக்கியம். :-)/

அப்படியா?? நல்லாத்தான் அடிச்சு விடறீங்க :)

Sridhar Narayanan said...

வாங்க இ.கொ.

எப்பவும் நீங்கதான் போணி ஆரம்பிச்சு வைப்பீங்க. இப்போ புதுசா கட்சி கிட்சி எல்லாம் ஆரம்பிச்சு பிஸியாயிட்டீங்கப் போல. அதான் லேட்டா?

//There are no new jokes, your success is measured on how you deliver it.//

இருப்பதிலேயே சிறந்த ஜோக்கு இதுவரை சொல்லாத ஜோக்குதான். :-))

வாங்க சுந்தர்,

//நல்லாத்தான் அடிச்சு விடறீங்க :)//

நிசமாவே நல்லா இருக்கா? நல்லாத்தானே இருக்கு? :-???