October 11, 2008

மந்தையாட்டுக் கலாச்சாரம்

நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் மிகவும் தீவிரமாக இந்தியாவில் அமல்படுத்தப் பட்டிருக்கும் புகைத்தடை சட்டம் பற்றி தொடர் பதிவுகளாக எழுதிக் கொண்டிருக்கிறார் :). அதில் ஒரு பதிவில் நண்பர் வளர்மதி மந்தையாட்டு கலாச்சார நோய்க்குறி பற்றி குறிப்பிட அது சில நினைவுகளை கிளறி விட்டது.

கல்லூரியில் NCC-ல் தீவிரமாக இருந்த போது சில கேம்ப்களில் (camp) பங்கேற்றிருக்கிறேன். என்னுடைய முதல் அனுபவமாக ஒரு பேஸிக் லீடர்ஷிப் கேம்ப் ஒன்று மதுரை பசுமலையில் நடந்தது. கேம்ப் நடந்த பள்ளியின் பெயர் தற்சமயம் நினைவில்லை. பன்னிரெண்டு நாட்கள் நடந்த கேம்ப். நல்ல மார்கழி மாதக் குளிரில் காலை 5 மணிக்கு எழுந்து கிராஸ் கண்ட்ரி என்னும் சொல்லப்படும் நீண்ட தூர (6 கிமி) ஓட்டம். பிறகு உப்புசப்பில்லாத ஒரு டிபன். தினப்படி பரேடு மற்றும் ட்ரில் என்று பிழிந்து எடுத்துவிடுவார்கள். சனி, ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது. மாலை வேளை எப்பொழுதும் கொண்டாட்டமாக இருக்கும். எல்லா மாணவர்களையும் வரிசையாக பக்கத்தில் இருக்கும் திருப்பரங்குன்றம் கண்மாய்க்கு இட்டுச் செல்வார்கள். நல்ல பெரிய குளம். செம்மண் பூமி என்பதால் கலங்கலாக இருக்கும். நீச்சல் தெரியாதென்றாலும் உள்ளே விழுந்தெழுந்து அடித்துப் புரண்டு விளையாடுவோம். ஒரு மணி நேரமாவது கொண்டாட்டம் தொடரும். பின்னர் பள்ளிக்குப் போய் நல்ல உடை உடுத்தி ரோல் கால் பரேடு. அங்கே ஏதாவது பாட்டு, டான்ஸ், நகைச்சுவை, மிமிக்ரி என்று கலாய்த்தலாக பொழுது போக, எட்டு எட்டரை மணிக்கு இரவு உணவு. இரண்டு மூன்று நாட்களில் கவனித்தால் நமது நண்பரொருவர் இந்த கண்மாய் குளியலில் கலக்காமல் பம்புசெட் பக்கமாக குளிக்கப் போய்க் கொண்டிருந்தார். எனக்கு மிகவும் சிரிப்பாக இருந்தது. 'ஏன்யா கம்மாயில குளிக்க என்ன பயமா? நீச்சல் தெரியாதுன்னா பரவாயில்லைய்யா.... நான்லாம் இப்பத்தான் தண்ணிக்குள்ள விழுந்து எழுந்துகிட்டு இருக்கேன். வாய்யா சும்மா.' என்றேன். அதற்கு அவர் 'யோவ்! அது எருமைங்க குளிப்பாட்டுற கம்மாய்னு தெரியாதா உனக்கு. அந்த குட்டையில என்னத்தை போய் முங்கி குளிச்சு சுத்தமாவுறதுன்னு'ன்னார். அட உண்மைதான். நாங்கள் ஒரு பக்கம் குதித்து கும்மாளம் போட்டுக்கொண்டிருக்க, நூறடிக்கு அந்தப் பக்கம் எருமைகளை உள்ளே அமிழ்த்தி தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் உணர்ந்தேன். நான் எதை குளியல் என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது குளியல் இல்லை வெறும் களியாட்டம் மட்டும்தான். பிரச்சினை கண்மாயின் கலங்கலான நீரிலோ, எருமைகள் குளிப்பதிலோ இல்லை. நாம் எதை செய்கிறோமோ அதை உணர்ந்து செய்வதில்தான். மறுநாள் மந்தையிலிருந்து ஒரு ஆடு பிரிந்து பம்புசெட்டிற்கு போய்விட்டது.

போனவருடம் அமெரிக்கா வருமுன்னர் இந்தியாவில் சில மாதங்கள் சொந்தமாக கார் வைத்து ஓட்டிக் பழகிக் கொண்டிருந்தேன். இந்தியாவில் எங்கே போக வேண்டுமென்றாலும் 'ஆட்டோ' என்று கைதட்டி அழைத்து பழகிவிட்டதால், அமெரிக்கா வந்த புதிதில் மிகவும் சிரமமாக போய்விட்டது. எங்கு போவதென்றாலும் யாரையாவது, அவர்களின் காரையாவது நம்பி இருக்க வேண்டிய நிலைமை. அருகில் நண்பர்களே இல்லாத ஊரில் ஓரிரு வாரங்களில் வெறுத்தே போய்விட்டது. நிறைய இடங்களில் கார்கள் வாடகைக்கு கிடைக்கும். புதிய கார்கள் கூட சகாயமான ரேட்டில் ஒரு நாள், இரு நாட்கள், வார இறுதி என்று வாடகைக்கு தருவார்கள். சரி நாமும் ஒரு காரை வாடகைக்கு எடுத்து 20 மைல் தொலைவில் இருக்கும் ஒரு நண்பரின் வீட்டுக்கு போய் வரலாமென்று முடிவு செய்து ஒரு காரையும் வாடகைக்கு எடுத்துவிட்டேன். நம்புங்கள் அந்த காரில் ஏறி அமர்ந்த பிறகுதான் User Manual பிரித்து படித்துக் கொண்டிருந்தேன். இந்திய கார்களுக்கும் இங்குள்ள சாதாரண கார்களுக்குமே நிறைய மாற்றங்கள். ஒரு வழியாக வீட்டிற்கு எடுத்து வந்தாகிவிட்டது. மறுநாள் அதிகாலையிலே கிளம்பிவிட்டேன். அது ஒரு உள் சாலை என்பதாலும், நேரமும் அதிகாலை என்பதாலும் போக்குவரத்தே இல்லை. என்னமோ வித்தியாசமாக இருக்கிறது என்று தெரிகிறது ஆனால் என்ன வித்தியாசம் என்று புரியவில்லல. ஓரிரெண்டு நிமிடங்கள் ஆனப்புறம்தான் உறைத்தது நான் இந்திய ஞாபகத்தில் இடது பக்கமாக ஓட்டிக் கொண்டிருக்கிறேன் என்று. நல்லவேளை போலிஸ் யாரும் அந்நேரத்தில் சாலையில் இருக்கவில்லை. அப்படியே ஏதாவது போலிஸ்காரர் பிடித்தாலும் வாதிட்டு பார்க்கலாம். ஆனால் பருப்பு வேகாது என்பதுதான் உண்மை. மந்தையிலிருந்து விலகி ஓட்டிக் கொண்டிருந்தவன் மீண்டும் மந்தைக்குள் சேர்ந்தது மற்ற ஆடுகளுடன் வண்டி ஓட்ட ஆரம்பித்தேன்.

இப்படி நிறைய தடவை இந்த ஆடு மந்தைக்குள் போவதும் வருவதுமாகவே இருந்திருக்கிறது. ஆடு மந்தையில் இருப்பதில் தவறில்லை. ஆனால் மந்தையில் இருக்கிறோமா இல்லையா என்று தெரியாமல் இருப்பதுதான் பிரச்சினையே.

ஜ்யோவ்ராம் சுந்தர் புகைபிடிக்கும் சட்டம் தவறான முறையில் செயல்படுத்தப் பட்டிருப்பதாக சொல்வதற்கு முக்கியமாக இரண்டு வாதங்கள் வைக்கின்றார்:

1. வெளிப்படையாக புகையிலை / சிகரெட் விற்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் புகைபிடித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாக சொல்கிறார்கள். இது முரணானது.

எந்தவொரு பொருளுக்குமே பயன்பாட்டு முறை என்று இருக்கிறது. புகையிலை நுரையீறலை பாதிக்கும் வஸ்து என்பதே சமீப கண்டுபிடிப்புதான். அதன் பிறகுதான் எச்சரிக்கையோடு (statutory warning) சிகரெட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. இப்பொழுது அடுத்த படி சென்றிருக்கிறார்கள்.

2. மதுக்கூடங்களில், பேருந்து நிலையங்களில் தடை ஆனால் விமான நிலையங்களில், நட்சத்திர விடுதிகளில் அனுமதி என்பது எப்படி சமமான சட்டமாக இருக்க முடியும்? பணக்காரகளுக்கு ஒரு சட்டம் ஏழைகளுக்கு ஒரு சட்டமா?

நன்றாக பாருங்கள். விமான நிலையம் என்பதினால் மட்டும் அங்கே புகைக்க அனுமதி கிடையாது. புகைக்கும் அறை என்று தனியாக ஒன்று இருப்பதினால் அங்கே மட்டும் புகைக்க அனுமதி உண்டு. நட்சத்திர விடுதியோ உங்கள் அலுவலகமோ, புகைப்பாளர்கள் மற்றவர்களை பாதிக்காத அளவில் புகைக்கும் விழிப்புணர்வைத்தான் வலியுறுத்துகிறது. உங்கள் அலுவலகத்தில் நீங்கள் smoking zone வைத்துக் கொள்ள தடை கிடையாது. அதற்கென்று வரைமுறையும் இருக்கிறது.

அறிவியல் முன்னேற்றத்தினால் பல தெளிவுகள் கிடைக்கின்றது. அதில் ஒன்றுதான் சிகரெட் புகையினால் சுற்று சூழல் மாசுபடுவதும், புகைக்காதவர்களின் உடல்நிலை பாதிப்படைவதும். 'நான் இப்படி உபயோகித்து பழகிவிட்டேன். அறிவியல் தரவுகளை எல்லாம் நம்ப முடியாது' என்று சொல்வது மந்தையாட்டு கலாச்சாரம்தானே.

When you realise you are a sheep, you no longer belong in the herd.

14 மறுமொழிகள்:

Sridhar Narayanan said...

நண்பர் வளர்மதி இட்ட ஒரு பின்னூட்டம்...
--------
அடங்கொய்யால நண்பா... மந்தைக் கலாச்சாரம் அப்படீங்கறத நா எப்படிப்பா விளக்க ...

தயவு செஞ்சு மன்னிச்சிடுப்பா ... இப்பத்திக்கு எனக்கு விளக்குறதுக்கு திறானியில்ல [மீண்டும் ஹெகல் (கூகிள் அல்ல) ... நீட்ஷேவா!]

அதுனல ... இந்தக் கழிசடையெல்லாம் விட்டுட்டு, நீங்களும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க ...

நான் சொல்ல வந்தது ஒரு elitist பார்வையிலிருந்தல்ல ... நிறைய நுட்பமான விஷயங்கள் இருக்கு ...

ஒழுக்கம், உடல்நலம், பிறர்நலம், ஆரோக்கியம், cancer, passive smoking, welfare state, இவையல்லாம் தாண்டி நிறைய விசயங்கள் இருக்கு நண்பா :)

இதில் அன்புக்குரிய நண்பர் சுந்தர் குறிப்பிட விரும்புவதைத் தாண்டி ... அதாவது ”எதேச்சதிகார சட்டம்” ”புகைப்பவர்கள் தம்மைத்தாமே குற்றவாளிகளாக கருதக்கூடிய சூழலை உருவாக்குவது தாண்டி” இது ஒரு முதலாளியக் கலாச்சாரம் - பொருளாதாரம் - “culture of waste" "culture of shit" "culture of over - production" என்பதை விவாதிக்க - உடல் நலப் பிரச்சினை என்பதைத் தாண்டி யொசிக்க எத்தனை பேர் முன்வரத் தயாராக இருக்கிறீர்கள்?

ஒழுக்கம் (morals), சட்டம் (law), உடல் நலம் (health) இன்னும் இது போன்ற தீர்ப்புகள்(judgment) சொல்ல விழையாத நோக்குகளிலிருந்து கருத்துக்களைப் பகிந்துகொள்ள எவரேனும் தாயாராயிருப்பின் ...

வளர் ...

Sridhar Narayanan said...

வாங்க வளர்,

:-) உங்க கருத்து பகிர்வுக்கு நன்றி.

//நான் சொல்ல வந்தது ஒரு elitist பார்வையிலிருந்தல்ல ... நிறைய நுட்பமான விஷயங்கள் இருக்கு ...

ஒழுக்கம், உடல்நலம், பிறர்நலம், ஆரோக்கியம், cancer, passive smoking, welfare state, இவையல்லாம் தாண்டி நிறைய விசயங்கள் இருக்கு நண்பா :)
//

வளர்! கண்டிப்பாக ஒத்துக் கொள்கிறேன். நீங்களோ ஜ்யோவ்ராம் சுந்தரோ இந்தப் பிரச்சினையை அணுகும் புள்ளிகள் வேறு. என்னால அந்த அளவிற்கு புரிந்து கொண்டு பதிலளிக்க முடியுமா என்பது பெரிய சந்தேகமே.

ஆனால் அவர் பதிவில் நடந்த விவாதங்களும், வைக்கின்ற வாதங்களும் என் அளவில் பொருத்தமில்லாமல் இருப்பதாகவே படுகிறது.

- இருமைகளில் இருந்து புகைபிடிப்பது கெட்ட பழக்கம் என்று சொல்லவில்லை. காற்று மாசுபடுத்துதலைப் பற்றி பேசுகிறோம். கோக் நிலத்தடி உறிஞ்சுகிறது என்னும் குற்றச்சாட்டைவிட தன்னால் சுற்று சூழல் மாசுபடுகிறது என்ற எண்ணம் சிறிது இல்லாமல் ஒரு பெரும் கூட்டமே இருப்பது கவலலைக்குரியதாக இருக்கிறது.

//புகைப்பவர்கள் தம்மைத்தாமே குற்றவாளிகளாக கருதக்கூடிய சூழலை உருவாக்குவது தாண்டி” இது ஒரு முதலாளியக் கலாச்சாரம் - பொருளாதாரம் - “culture of waste" "culture of shit" "culture of over - production" என்பதை விவாதிக்க - உடல் நலப் பிரச்சினை என்பதைத் தாண்டி யொசிக்க எத்தனை பேர் முன்வரத் தயாராக இருக்கிறீர்கள்?//

வளர்! உங்கள் வாதத்தில் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு சின்ன கருத்து வேறுபாடு.

ஒரு எழுபது எண்பது ஆண்டுகளுக்கு திருடுவது சில கிராமங்களின் தனித் தொழில். உங்களுக்குத் தெரிந்திருக்கும். கி ரா கதைகளில் அருமையாக எழுதியிருப்பார். அவர்களை பொறுத்தவரை அது ஒரு 'சம்பாதிக்கும்' தொழில்தான். ஏன் கடுமையான சட்டங்களை இயற்றி அவர்களை குற்ற மனப்பாண்மையோடு வாழச் செய்கிறீர்கள்? தற்சமயம் அப்படி ஒரு சமூகமே இல்லாமல் போய்விட்டது.

culture of shit, culture of waste பற்றி நிச்சயமாக விவாதிக்கலாம். என்னுடைய கருத்தின் அடிநாதமே 'உடல்நலப் பிரச்சினை' அல்ல என்பதையும் இங்கே அழுத்தமாக சொல்லிக் கொள்கிறேன்.

//ஒழுக்கம் (morals), சட்டம் (law), உடல் நலம் (health) இன்னும் இது போன்ற தீர்ப்புகள்(judgment) சொல்ல விழையாத நோக்குகளிலிருந்து கருத்துக்களைப் பகிந்துகொள்ள எவரேனும் தாயாராயிருப்பின் ...//

கட்டாயமாக பதிவு செய்யுங்கள். ஆனால் இந்த ஒரு விசயத்தை பொறுத்தவரை 'தனி மனித சுதந்திரம்' என்பது காலாவதியாகிப் போன வாதம்தான்.

புகைபிடிக்க சில வரைமுறை கொண்டு வந்ததற்கு 'எங்களை குற்றவாளிகளாக' ஆக்குகிறீர்கள் என்று வாதம் செய்பவர்கள்... வரைமுறையே இல்லாமல் புகைபிடிப்பதினால் புகை மறுப்பாளர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?

ச.சங்கர் said...

பொதுப்புத்தியும் மந்தையாட்டுக் கலாச்சாரமும் ஒன்றேதானா இல்லை வேற வேறயா? :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/உங்கள் அலுவலகத்தில் நீங்கள் smoking zone வைத்துக் கொள்ள தடை கிடையாது. அதற்கென்று வரைமுறையும் இருக்கி/

no. this is factually wrong. தனியார் அலுவலகங்களில் தனியாகக்கூட smoking zone வைத்துக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால், சிகரெட் லைட்டரோ அல்லது சாம்பல் கிண்ணமோ இருந்தால்கூட அபராதம் விதிக்கலாம். இதுதான் சட்டம்!

மற்ற விஷயங்கள், பிறகு.

Sridhar Narayanan said...

//பொதுப்புத்தியும் மந்தையாட்டுக் கலாச்சாரமும் ஒன்றேதானா இல்லை வேற வேறயா? :)//

வாங்க சங்கர்,

நல்ல ஆளப் பாத்து கேள்வி கேட்டீங்கப் போங்க :-). ஏதாவது அகராதி இருக்கான்னு தேடிப்பாக்குறேன். நான் எல்லாம் அகராதி பிடிக்காத ஆளுங்கோவ்.

வாங்க சுந்தர்,

இப்பொழுத்தான் படித்தேன். தனியார் அலுவலகங்களில் ஸ்மோக்கிங் ஜோன் கிடையாதான். இது சட்டத்தைப் பொறுத்த வரையில் இது இரு பின்னடைவே. :(

இலவசக்கொத்தனார் said...

சங்கரு, பதிவை எல்லாம் விடும். உம்ம கமெண்டுதான் சூப்பர்!!

Sridhar Narayanan said...

//சங்கரு, பதிவை எல்லாம் விடும். உம்ம கமெண்டுதான் சூப்பர்!!//

வாங்க இ.கொ.

அவரோட கமெண்டுக்கே தனியா ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். விடறதா இல்லை :-))

கயல்விழி said...

ஒரு முக்கியமான விஷயம், சட்டத்தினால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் சாமான்ய மனிதர்களே(Lower socio economic status). இதை காரணமாக வைத்து அனைத்து சட்டங்களையும் இதே லாஜிக்கோடு தாக்கலாம். அதற்காக சட்டமே வேண்டாம் என நினைப்பது தவறான கண்ணோட்டம் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

தலைப்பை பார்த்தவுடன், இளவஞ்சியின் பதிவில் பார்த்த

//ஆடுகள் தங்களை ஆடுகள் என உணரும் பொழுது மந்தையை விட்டு விலகுவதில்லை. மாறாக ஆடுகளுக்குரிய வாழ்க்கையை எவ்வித குற்ற உணர்வுமின்றி சந்தோசமாக வாழத் துவங்குகின்றன.//

என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தன.

ambi said...

ஒரு மந்தையிலிருந்து இரண்டு ஆடுகள் தனிதனியே சென்றன. அவை இரண்டும் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையேயேயே!

நீங்க பசுமலை கண்மாய்ல குளிச்சீங்க, நான் கேரளா-கன்யாகுமரி பார்டர் (தூத்தூர்) கண்மாய்ல குளிச்சேனாக்கும். :)))

ச.சங்கர் said...

////இலவசக்கொத்தனார் said...
சங்கரு, பதிவை எல்லாம் விடும். உம்ம கமெண்டுதான் சூப்பர்!!
/////

நன்றி கொத்ஸ் :)வவாபிரி..யா ?:)

///Sridhar Narayanan said... அவரோட கமெண்டுக்கே தனியா ஒரு பதிவு போடலாம்னு இருக்கேன். விடறதா இல்லை :-))///

ஒரு ரேஞ்சாத்தான் அலையுராங்கப்பா:)

அனுஜன்யா said...

ஸ்ரீதர்,

வளர் வந்தாலே 'கார் முன்னால் மருளும் மான்' போல மிரளும் என்போன்ற பலர் இருக்கையில், நீங்கள் சமாளிப்பது சுவாரஸ்யம்.

//வரைமுறையே இல்லாமல் புகைபிடிப்பதினால் புகை மறுப்பாளர்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்?//

நிறைய மிகைப்படுத்திய வாக்கியமாகப் படவில்லை? புகைப் பிடிப்பது தீங்கு என்பது ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயம். ஆனால் the perils of passive smoking appears exagerated. அதாவது நான் சொல்ல வருவது, உங்களை வலுக்கட்டாயமாக யாரும் இன்னொருவரின் புகையை சுவாசிக்கச் செய்யும் நிலை பெரும்பான்மையாக இல்லவே இல்லை என்று சொல்ல வேண்டும் (ஏதாவது புரிகிறதா? எனக்கு புரியவில்லை) Then why make such a big fuss? உங்களுக்கு சிகரட் விற்பனைக்கு எளிதில் கிடைக்கும். ஆனால் புகைப்பதற்கான enabling factors கிட்டத்ததட்ட ஒரு சதி அளவில் முறியடிக்கப்படும் என்பது நிச்சயம் (அறிவிக்கப்படாத, ஒப்புக்கொள்ளப்படாத) தனிமனித சுதந்திரத்தில் அத்துமீறல் தான். சுந்தர் சொல்வது போல் why not totally ban them? why this half measures if the powers that be are convinced of its perils. Dont do lip service to individual rights.

ஆயினும் வளரின் 'culture of shit, culture of waste, culture of over production' என்பதெல்லாம் கண்களில் பூச்சி பறக்கும் சமாசாரங்களாய் உள்ளதால், அவரே விளக்கினால் நல்லா இருக்கும். வளர் ப்ளீஸ்.

அனுஜன்யா
டிஸ்கி: நான் புகை பிடிப்பவன் அல்ல. அதாவது, மது அருந்தாமல் இருக்கும் போது. ஹி, ஹி.

பத்மா அர்விந்த் said...

தனிமனித சுதந்திரம் உண்மையிலேயே உலகத்தில் எங்காவது இருக்கிறதா? இருக்கவும் கூடுமா?
சுயநலமாக இருப்பது கடினமாக இருக்கும் வரை, சுதந்திரம் என்ற ஒன்றும் இருப்பதும் கடினம்.

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html