October 31, 2008

ஒரு முத்தத்தைத் தொடர்ந்து...

திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்...

இன்று காலை பத்தரை மணிக்குத்தான் இந்த ஓட்டல் அறைக்கு வந்தோம். கார்த்தி மிகவும் உற்சாகமாக இருந்தான். பசுமையான பூமியும் சுந்தரமான பெண்களும் குளிர்ந்த காற்றும் அவனுக்கு அதிக சந்தோஷத்தை தந்திருந்தன. நீளமான சுருட்டை முடியுடனும் பென்சில் மீசையுடனமிருந்த ஓட்டல் மானேஜர் மதிய உணவிற்கு ஓட்டல் பின்புறமிருந்த பரிமளா மெஸ்சை சிபாரிசு செய்தார். மோர் குழம்பை இரண்டு முறை விட்டு சாப்பிட்டுவிட்டு பரிசுப் பொருள் வாங்க சின்ன கடைத் தெருவின் சில அங்காடிகளில் சுற்றினோம். ராஜ்குமார் வழக்கம் போல் சிரிக்கும் புத்தரின் சிலையொன்றை பீங்கானில் வாங்கினான். அதிர்ஷ்டம் கொடுக்கும் பரிசுப் பொருளாம் அது. அறைக்குப் போய் முகம் கழுவி உடைமாற்றி திருமண மண்டபத்திற்கு போக சரியாக இருக்கும். வரவேற்பு நிகழ்ச்சியில் மெல்லிசை கச்சேரி இருக்கிறது.

பாத்ரூமில் ஷேவ் செய்யும்போது கவனித்தேன் ஜன்னலின் கண்ணாடி பட்டை ஒன்று தவறி இன்னொன்று கோணிக் கொண்டு இருந்தது. எம்பி நின்று சரி செய்யும்போது இரண்டாவது கண்ணாடி பட்டையும் கையோடு வந்துவிட்டது. இரண்டாம் மாடி ஜன்னலிலிருந்து பார்த்தால் பெருமாள் கோவில் கோபுரம் தெரிகிறதா என்று எட்டிப் பார்த்தேன். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அல்லவா? ஜன்னலுக்கு கீழே ஓட்டலின் பக்கவாட்டுப் பகுதியில் நடமாட்டமேயில்லாத சின்ன சந்து நிச்சலனமாக இருந்தது. ஓட்டலுக்கு அடுத்திருந்த அரைகுறையாக கட்டப்பட்டு அப்படியே விடப்பட்டிருந்த கட்டிடத்தின் நிழலில் அந்தப் பெண் நின்றிருந்தாள். இந்த உயரத்திலிருந்து பார்த்தால் உச்சந்தலைதான் பிரதானமாக தெரிந்தது. அதையும் மூடியவாறு மஞ்சள் நிறத்தில் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது சிவப்பு நிற ஸ்கார்ஃப் வேறு. திடுமென்று அந்தக் காட்சி உறைத்தது. பக்கத்தில் முழுக்கை சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டு நெருக்கமாக நின்று கொண்டிருந்தவரின் கழுத்தில் கைகளை மாலை போல் போட்டுக் கொண்டு அவள் முத்தமிட்டுக் கொண்டிருந்தாள். வெகு சுதந்திரமாக லஜ்ஜையில்லாமல் அவர்கள் இருவரும் மோன நிலையில் இருக்க, அறைக்குள் வந்து ராஜ்குமாருக்கும், கார்த்திக்கும் சமிக்ஞை செய்தேன். மூவருமாக மாறிமாறி அந்தக் காட்சியை பாத்ரூம் ஜன்னல் சதுரத்தில் வழியே எட்டிப் பார்க்க, ராஜ்குமார் அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்ய தொடங்கிவிட்டான்.

அநிச்சையாக அவள் கண்கள் எங்கள் அறை ஜன்னலில் நிலைகொள்ள சட்டென தவம் கலைந்து பரபரப்பாக பேசியவாறே அவர்கள் இருவரும் சந்து முனை திரும்பி வேகமாக சென்று விட்டார்கள். 'ஓவ்.. ஓவ்வ்...' என்று நாங்களும் உற்சாகமாக கூவி அவர்களை வழியனுப்பி வைத்துவிட்டு, குளியலறையை விட்டு வெளியேறினோம்.

திருமண வரவேற்புக்கு தயாராகி ஆட்டோ பிடிக்க நடக்கும்போது கார்த்தி சொன்னான்.

'மச்சி! அவ தலையில கட்டியிருந்த ஸ்கார்ஃப்... நான் அதை ஏற்கெனவே பாத்திருக்கேன்டா. இப்ப கிஃப்ட் வாங்கப் போனோமே அந்தக் கடையில் இருந்திச்சுன்னு நினக்கிறேன். ஐ ஹட் சீன் தட். நல்லா ஞாபகமிருக்கு' என்றான் அழுத்தமாக.

'எந்தக் கடை?'

'அந்த புறா, முயல் எல்லாம் படம் போட்டு வாசல்ல பெருசா கண்ணாடி இருந்திச்சே, அந்தக் கடைதான்'

'அதுவா? அடுத்த ரைட்ல வரும்ல. ஒரு எட்டு எட்டிப் போய் பாத்திறலாமா' என்றான் ராஜ்குமார்.

ஏதோ துப்பறியும் தீவிரத்தோடு அந்தக் கடையில் நுழைந்து கார்த்தி சொன்ன இடத்தில் பார்த்த பொழுது அங்கே எந்த ஸ்கார்ஃபும் இல்லை.

'எதுவும் கிஃப்ட ஐட்டம்ஸ் பாக்குறீங்களா சார்? இந்த டேபிள் லாம்ப் புது மாடல் சார்' என்ற சிப்பந்தியிடம் ஸ்கார்ஃபை பத்தி கேட்ட போது

'தெரியலையே சார். இங்கதான் பாத்தீங்களா? போயிடுச்சுப் போல. நெக்ஸ்ட் வீக் வாங்கி வைக்கிறேன் சார்' என்று சம்பிரதாயமாக சொன்னார். ஊசி குத்திய பலூனாக எங்கள் துப்பறியும் ஆர்வம் காலியாக, கண்ணாடி டால்ஃபினை பரிசுக் காகிதத்தில் சுற்றிக் கொண்டிருந்த பெண் மேஜைக்கு அந்தப் புறமிருந்து சொன்னாள்

'அந்த சேப்புக் கலர் உல்லன் ஸ்கார்ஃபா சார்? நம்ம செல்வா டீச்சர் இன்னிக்குத்தான் வாங்கிட்டு போனாங்க' என்றாள்.

'நல்லா இருந்திச்சே வாங்கலாம்னு நினச்சோம்.. ஹிஹி' என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தோம்.

கார்த்தி ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்ற வைத்துக் கொண்டே 'பொதுவா டீச்சர்னா லேடீஸ்தானே. செல்வா டீச்சர்ன்னு சொல்றாங்க' என்றான். நான் அழுத்தமாக,

'மச்சி, இதெல்லாம் ஆவறதில்லை. ஏதோ முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் கனெக்ஷன் கொடுக்க ட்ரை பண்ற. லேட்டாப் போனா ரிசப்ஷன்ல டிஃபன் கிடைக்காது. சீக்கிரம் போலாம்' என்றேன்.

'தேவி திருமண மகால், காஸாகான் ரோடு, சங்ககிரிபுரம்' என்று கல்யாண பத்திரிகையிலிருந்து விலாசத்தைப் படித்துவிட்டு 'போலாம் தம்பி. 150 ரூவா ஆகும். ஏறிக்குங்க' என்றார் ஆட்டோக்காரர்.

ஏறி உட்கார்ந்து சிறிது தூரம் சென்றவுடன் இடது பக்கம் பெட்ரோல் பங்கில் திரும்பி உள்ளே போகாமல் வெளியேவே நிறுத்திவிட்டு 'பெட்ரோல் போட்டுக்கறேன் தம்பி. ஒரு 10 நிமிசம்' என்றவர், கார்த்தி கையில் புகையும் சிகரெட்டைப் பார்த்தவாறே 'சிகரெட்டை தாட்டி உட்ருங்களேன். பெட்ரோல் பங்க்ல இருக்கோம்ல' என்றார். கார்த்தி கீழே இறங்கியவாறே 'நான் இங்கியே நின்னுகிட்டிருக்கேன். நீங்க முடிச்சிட்டு வாங்க' என்றான்.

ஆட்டோ ட்ரைவர் பில் போட கவுண்டருக்குப் போய்விட்டார். ராஜ்குமார் 'இவன் எங்கடா ரோட்டை கிராஸ் பண்ணி எங்கியோ போய்டிருக்கான்' என்று சொன்ன பிறகுதான் கவனித்தேன், கார்த்தி ரோடை குறுக்கே கடந்து எதிர்சாரிக்கு சென்று கொண்டிருந்தான். அங்கே பெரிய காம்பவுண்ட் கேட் போட்டு மேலே அரைவட்டமாக இரும்பு க்ரில்லில் பெயர் எழுதியிருந்தது. 'ஜோதி மெட்ரிகுலேஷன் பள்ளி'.

'டே! எதுக்குடா இவன் ஸ்கூலுக்கு போயிட்டிருக்கான்?' என்று நான் கேட்ட கேள்வி எனக்கே உறைப்பதற்குள் ராஜ்குமாரும் வேகமாக ரோட்டை கடக்க ஓடிக் கொண்டிருந்தான். வழக்கம் போல நானும் அவன் பின்னே ஓடினேன்.

அந்த ஸ்கூல் காம்பவுண்டு பெரிதாக இருந்தது. பெரிய கேட்டுக்கு பக்கத்திலேயே காவலாளிக் கூண்டும் உள்ளே இரண்டு தனியார் காவலாளிகளும் இருந்தார்கள்.

ஒட்ட முடி வெட்டியிருந்த நடுத்தர வயது காவலர் 'யாரை சார் பாக்கனும்? ஆபீஸ் டைம் முடிஞ்சுப் போச்சே சார். சாட்டர்டே ஹாஃப்டேதான்' என்றார் கூண்டின் ஜன்னல் வழியாக.

'செல்வா டீச்சர்' என்று தயக்கமான குரலில் சொன்னான் கார்த்தி.

'எந்த ஸ்கூல்?' என்றார்

'இந்த ஸ்கூல்தான். ஜோதி மெட்ரிகுலேஷன்' என்று தன்னிச்சையாக காம்பவுண்ட் கேட்டின் மேல் வளைவாக எழுதப் பட்டிருந்த பெயரைப் பார்த்துக் கொண்டான்.

'அது சரி சார். உள்ளே மூணு ஸ்கூல் இருக்கு. எலிமெண்டரி ஸ்கூல் இருக்கு. ம்யூசிக் ஸ்கூல் இருக்கு. எந்த ஸ்கூல் டீச்சரைக் கேக்கறீங்க? என்ன கிளாஸ் எடுக்கிறாங்க?' என்றார்.

பைத்தியக்காரத்தனத்திற்கும் ஒரு அளவு உண்டு. இப்படியா தானாக போய் உளறி மாட்டிக் கொள்வான், என்று நான் தவித்துக் கொண்டிருந்த போது, உள்ளே இருந்த இன்னொரு காவலர்,

'செல்வநாயகி டீச்சரா சார்? தாஸு, நம்ம ஸ்போர்ட்ஸ் டீச்சர்ப்பா. நீங்க யாரு? என்ன வேணும்?' என்றவாறே அவரும் ஜன்னல் நோக்கி வந்தார்.

கார்த்தி புன்னகைத்துக் கொண்டே 'ஆமாம் செல்வநாயகி டீச்சர்தான். நான் ரிலேஷன். கஸின் பிரதர்.' திரும்பி எங்களைப் பார்த்து கண்களை சிமிட்டினான்.

தாஸ் மேஜை மேலிருந்த பதிவேடுகளை பார்த்துக் கொண்டே 'செல்வநாயகி டீச்சர் மார்னிங் ஷிப்ட். அதுவும் முடிஞ்சிருச்சே. இந்நேரம் கெளம்பியிருப்பாங்க வீட்டுக்கு.' என்றார்

இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் நாங்கள் அவரையே பார்த்துக் கொண்டிருக்க.

'எதுனா அவசர செய்தியா சார்? நாங்க வேணா உள்ள போய் இருந்தா சொல்லிடறோம். இருக்க மாட்டாங்க. ஸ்கூல் பஸ் கிளம்பிப் போய் 15 நிமிஷத்துக்கு மேல ஆயிருச்சு.'

ஆட்டோவில் போய்க் கொண்டிருக்கும் போது கார்த்தி தன்னுடைய அனுமானங்களை சொல்லிக் கொண்டே வந்தான் 'லாஜிக்கலாப் பாரு. ஸ்கூல் பக்கத்தில் கடைத் தெரு, பக்கத்தில நம்ம ஓட்டல். செவப்பு கலர் ஸ்கார்ஃப். வாங்கிட்டுப் போனது செல்வா டீச்சர்ன்னு கடையில சொல்றாங்க'.

'ஸோ வாட்' என்றேன். அவன் அதுக்கப்புறம் ஒன்றும் சொல்லவில்லை. தேவையில்லாமல் இந்த சிறிய விசயத்தை கார்த்தி சிக்கலாக்க முயல்கிறான் என்று தோன்றியது. எதற்காக ஸ்கூலுக்கு எல்லாம் போய் துப்பறிகிற பிடிவாதம்?

ரோடு போடும் பணி நடந்து கொண்டிருந்ததால் ஒரு பாதி சாலை மூடப்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தன. மெதுவாக போகும் வண்டியில் காற்று இல்லாமல் புழுக்கமாக இருந்தது. ஆட்டோ டிரைவரிடம் 'வேற வழியில்லையாங்க? ரொம்ப ட்ராஃபிக்கா இருக்கும் போலிருக்கே.' என்றான் ராஜ்குமார்.

'கொஞ்சம் சுத்திப் போவனும் தம்பி. இப்படிக்கா ரைட்ல கட் பண்ணி இறக்கத்துல போனா இருவது நிமிசத்துல டீச்சர்ஸ் காலனி பிடிச்சிடலாம் அங்கிருந்து ஜான்சி பாலம் தாண்டினா கல்யாண மண்டபம் வந்திரும். தோ... போயிடலாம்' என்றார்.

கார்த்தி மெதுவாக 'டீச்சர்ஸ் காலனின்னா, டீச்சர்ஸுங்களுக்கு மட்டும் தனி காலனி இருக்கா என்ன?' மெதுவாக நூல் விட்டுப் பார்க்கிறான் என்று தெரிந்தது.

'அப்படி இல்ல தம்பி. பஸ்ஸ்டாண்ட் பக்கம் ஜோதி இசுகூலு இருக்குல்ல, அந்த டீச்சருங்களுக்காக வீடு கட்டி கொடுத்தாங்க. ஆனா இப்ப நெறய வெளி ஆளுங்க எல்லாம் சேந்து பெருசாயிடுச்சு தம்பி. ராசமுத்து ஐயா காலத்தப்ப வீடு கட்டி கொடுத்தாரு. எத்தினி இசுகூலு, காலேசு. அவரெல்லாம் மனுசனில்ல. தெய்வம்'

ரிசப்ஷனில் டிஃபனாக முந்திரி பகோடாவையும், கல்கண்டு சாதத்தையும் சாப்பிட்டுவிட்டு, மண்டபம் முழுவதும் நிரம்பியிருந்த சொந்தங்களின் களேபர சத்தங்களுக்கும், அவ்வப்போது இசைக்குழுவினரின் 'அலோலோ', 'கொய்ய்ங்' என்ற பூர்வாங்க தயாரிப்பு வேலைகளுக்கும் நடுவே தனியாக உட்கார்ந்து பராக்கு பார்த்துக் கொண்டிருந்தபோது மகாவின் தம்பி சகாதேவன் வந்தான்.

'ரொம்ப போரடிக்குதுங்களாண்ணா... மகா இப்பதான் கோவிலுக்கு பூக்கூடை எடுக்கப் போயிருக்கான். மாப்பிள்ளை பூக்கூடை எடுக்கிறது எங்க பக்கத்தில ஒரு சடங்கு. வர்ற நேரம்தான்.' என்று சொல்லிவிட்டு, அருகில் நின்றிருந்த இரட்டை நாடி மனிதரை அறிமுகபடுத்தி வைத்தான்.

'இவரு எங்க மாமா. மாப்பிள்ளை ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் இவர் பொறுப்புதான்.' கண்களை சிமிட்டியவாறே 'பாக்கத்தான் பெரிய மனுசன் மாதிரி இருப்பாரு. ஆனா பக்கா யூத்து' என்று கொஞ்சம் இடைவெளி விட்டு 'அப்படின்னு அவரே சொல்லிக்கிருவாரு' என்றான்.

அவர் சிரித்துக் கொண்டே அவன் முதுகில் ஓங்கி தட்டியவாறே 'நான் பாக்க டவுசரில ஒண்ணுகிருந்த பய, என்னையே லந்து பண்றியா நீயு' என்றவர் எங்களிடம் சம்பிரதாயமாக 'ஐ ஆம் வாகீசன். ரியல் எஸ்டேட் பண்றேன்.' என்றவாறே விசிட்டிங் கார்ட் விநியோகித்தார். 'எங்க பக்கம் கல்யாணம் எல்லாம் இப்படித்தான். ஏகப்பட்ட சடங்கா இருக்கும். எல்லாம் சடங்கையும் முடிக்கிறதுக்குள்ள கட்டிக்கப் போற பொண்ணு பேரு கூட மறந்து போயிரும் பாருங்க. அம்புட்டு கட்டுகோப்பாமாம். ஆமா... உங்களுக்கு எங்க ரூம் போட்டிருக்குது?' என்றவாறே சகஜமாக எங்களை ஜோதியில ஐக்கியமடைய வைத்தார்.

பரிசுப் பொருளை கொடுத்துவிட்டு வீடியோ வெளிச்சத்தில் நனைந்தவாறே மகாதேவனிடமும் மறுநாள் மிஸஸ் மகாதேவனாகப் போகும் தேன்மொழியிடமும் வாழ்த்துகள் பரிமாறிவிட்டு ஓரமாக உட்கார்ந்திருந்தோம். என்ன செய்வது என்று தெரியாமல் இரைச்சலான பாட்டுகளைக் கேட்டுக் கொண்டே கல்யாண மண்டபத்திற்கும் பக்கத்தில் இருந்த பெட்டிக் கடைக்கும் நடையாக நடந்து கொண்டிருந்த போது வாகீசன் மீண்டும் பிரசன்னமானார்.

'அட, ஒங்களத்தான் தேடி சுத்திட்டிருக்கேன். சாப்பாடு பந்தி போட்டிருக்காங்கன்னு மாடிக்கு போயிடாதீங்க. ஒங்களுக்கு சாப்பாடு இங்க இல்லன்ன்னுட்டான் மகா.' என்று சிரித்துவிட்டு, 'மாயர்ஸ் ஓட்டல் போயிடுவோம். அங்கதான் இன்னிக்கு எல்லா பார்ட்டியும்.' கிட்ட வந்து மெதுவான குரலில் 'ஸ்பெசல் பாட்டு எல்லாம் போடச் சொல்லியிருக்கேன். அரைமணியில கெளம்பிறலாம்' என்று சொல்லிவிட்டு கூட்டத்தில் கலந்துவிட்டார்.

வாகீசனின் கார் புதிதாக, பெரியதாக, வாசனையாக இருந்தது. சடசடவென்று பல விசயங்களைப் பற்றி கலகலப்பாகப் பேசிக் கொண்டே வந்தார். நியான் விளக்குகள் மின்ன 'மாரியர்ஸ்' ஓட்டல் உயரமாக வெளிச்சமாக இருக்க, சீருடை பணியாளர்கள் வாகீசனைப் பார்த்து சிநேகமான சிரிப்பை சிந்திவிட்டு சென்றார்கள்.

'வாரத்துக்கு எப்படியும் மூணு பார்ட்டி இருக்கும். நமக்கு வீடு இங்கதான், பக்கத்தில டீச்சர்ஸ் காலனி. எல்லாப் பசங்களும் நம்மப் பசங்கதான். இது நமக்கு நல்ல தோதான இடம்.' என்றவர் கொஞ்சம் அழுத்தமாக 'எல்லாத்துக்கும்' என்று சொல்லிவிட்டு பெரிதாக சிரித்தார்.

'டீச்சர்ஸ் காலனியா? அது ஜோதி ஸ்கூல் லே-அவுட்டுன்னு சொன்னாங்களே' என்று கார்த்தி கேட்க,

'அட! நம்ம ஏரியா பத்தியும் தெரிஞ்சு வச்சிருக்கீங்கப் போல. நம்ம வொய்ஃப்பும் அங்கதானே வொர்க் பண்றது. ஸ்கூல் ப்ராப்பர்டி எல்லாம் பாதிதான். இப்ப நிறைய எக்ஸ்டெண்ட் பண்ணிட்டோம்ல' என்று சொல்லிக் கொண்டே வந்தவர் செல்போன் சத்தம் போட எடுத்து பாத்தபடியே 'ஒரு நிமிசம்' என்றார்.

'சொல்லு செல்வா. இங்கதான் மாரியர்ஸ்ல இருக்கேன்' என்று பேசியவாறே விலகிப் போக நாங்கள் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்துக் கொண்ட்டோம். அரையிருட்டில் முகம் தெளிவாகத் தெரியவில்லையென்றாலும் கார்த்தி மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தான் என்பது அவன் கிள்ளிய கிள்ளலில் தெரிந்தது.

நடு இரவைத் தாண்டியும் பார்ட்டி நடந்து கொண்டிருக்க எல்லாரும் உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்தார்கள். ராஜ்குமார் கேட்ட ஐஸ்கிரீம் சண்டே (sundae) அங்கே இல்லை. ஓட்டலில் கிச்சனை மூடிவிட்டுப் போயிருந்தார்கள்.

'நடு ராத்திரில ஐஸ்க்ரீமா? நல்ல டேஸ்டுய்யா உனக்கு. நமக்கும் இப்படித்தான். நல்லா மழை பெய்யும்போது நட்ஸ் நிறையப் போட்டு குளிரக் குளிர ஃபட்ஜ் சாப்பிடனும். இவங்க கிட்ட முதல்லேயே சொல்லியிருந்தா எடுத்து வச்சிருப்பானுங்க. சரி வாங்க. வேற ஐடியா பண்ணுவோம்.' என்றார் அங்கிள் உற்சாகமாக.

எங்கள் மூவரை மட்டும் தனியே பார்ட்டியிலிருந்து பிரித்தெடுத்து அவரது வண்டியில் அள்ளிப் போட்டுக் கொண்டு அமைதியான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் கொண்டு நிறுத்தினார்.

'நம்ம வீடுதான். எப்பவும் ஐஸ்க்ரீம் ஸ்டாக் இருக்கும். மெல்ல வாங்க' என்றார்.

'அய்யோ அங்கிள்! எதுக்கு இந்த சிரமம்லாம்... இவன் கேட்டான்னு நீங்க எதுக்கு இந்நேரத்துக்கு வீட்டுல டிஸ்டர்ப் பண்ணிகிட்டு...' நான் பதட்டமாக சொல்ல, கார்த்தி இருட்டில் உறங்கும் வீட்டை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்.

'நம்ம கையில ஒரு சாவி இருக்கு கண்ணு.' என்று வீட்டுக் கதவை சாவி போட்டு திறந்துவிட்டு, 'வொய்ஃப் மார்னிங் ஷிஃப்ட்ங்கிறதுனால எப்பவும் சீக்கிரம் தூங்கிப் பழக்கம். இன்னிக்கு கல்யாண அலைச்சல் வேற ஜாஸ்தியாயிருக்கும். தூங்கியிருப்பா அப்பவே' என்றார் கிசுகிசுப்பாக.

டைனிங் ஹால்ல உக்காந்து கொண்டு பெரிய டீவியில் ஹாரிஸ் நார்டனின் பழையப் படத்தை பார்த்துக் கொண்டே ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். ஹாரிஸ் நார்டன் 'மெக்னோலியா'வில் எப்படி ஆஸ்கர் அவார்டை கோட்டை விட்டார் என்று பேச்சு திசை திரும்ப 'ஹாரிஸ் நார்டனோட புல் கலெக்ஷன் வச்சிருக்கேன். போன மாசம் வந்த 'ஒல்டு மெமரிஸ்'வரை' என்றார் புன்னகைத்துக் கொண்டே.

'நான் இன்னும் பாக்கலை' என்றேன் ஏக்கமாக.

'அடப்பாவி! செமைப் படம்யா அது. ரெண்டு நாள் தூங்க முடியல என்னால பாத்திட்டு. உங்க ஓட்டல் ரூம்ல டீவி இருக்குல்ல? டிவிடி ப்ளேயர் எடுத்திட்டுப் போய் இன்னிக்கேப் பாத்திருங்க. நாளைக்கு முகூர்த்தம் 11 மணிக்கப்புறம்தானே.' என்று சொன்னவர், வேண்டாம் என்று தடுக்க முற்படுவதற்குள் 'இருங்க டிவிடி பிளேயர் உள்ள பெட்ரூமில இருக்கு. எடுத்திட்டு வர்றேன்.' என்று உள்ளே போய்விட்டார்.

கார்த்தி அவர் அரைகுறையாக திறந்து வைத்துவிட்டு சென்ற பெட்ரூம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென உள்ளேப் புகுந்து 'எங்கே செல்வா டீச்சர்' என்று கேட்டு விடுவானோ என்று கொஞ்சம் பயமாக இருந்தது. உள்ளேயிருந்து தூக்க கலக்கத்துடன் ஒரு பெண் குரல் சன்னமாக 'சாப்பிட்டீங்களா?' என்று கேட்டது.

'ஆச்சும்மா. இந்த ஏவி கார்ட் இங்கதான் சுருட்டி வச்சிருந்தேன். தோ... கிடைச்சிடுச்சி.' என்றது அங்கிள் குரல்.

'எங்கியாச்சும் வெளில போறீங்களா என்ன?'

'இல்லம்மா... கெஸ்ட் வந்திருக்காங்க. நம்ம மாப்பிள்ள ஃப்ரெண்ட்ஸ். தோ அனுப்பிட்டு வந்திடறேன்'

'என்னா குளிரு. ஏஸியை கொஞ்சம் குறைச்சிருங்களேன். அப்படியே அந்த அயர்ன் போர்டு மேல இருக்கற ஸ்கார்ஃபை எடுத்து கொடுத்திட்டுப் போங்க. சீக்கிரம் வந்து தூங்குங்க'

'தோ... வந்துட்டேன்' என்றார் வாகீசன்.

எழுந்து எட்டிப் பார்க்க முயன்ற கார்த்தியை தோளைப் பிடித்து உட்கார வைக்க வேண்டியதாயிருந்தது.

ராஜ்குமார் மெதுவாக 'சாரி அங்கிள்! முதல்ல வீட்டுக்கு வர்றப்ப வெறுங்கையோட வந்திட்டோம். ஏதாவது பிஸ்கெட் பாக்கெட்டாவது வாங்கிட்டு வந்திருக்கலாம்.

'வீட்டுக்குதான் வர்றோம்னு தெரியாது. திடும்னு கூட்டிட்டு வந்திட்டீங்க. நெக்ஸ்ட் டைம் ப்ரிப்பேர்டா வரோம்' என்று நானும் ஒத்துப்பாட

'நல்லவேளை பிஸ்கெட் பாக்கெட் எதும் வாங்கிட்டு வரல நீங்க. எம்புட்டு பிஸ்கெட்டு நானும் என் பொண்டாட்டியும் மட்டும் திங்கறது.' என்றவர் 'அப்படியே கண்டிப்பா எதுனா வாங்கிட்டுத்தான் வருவேன்னா நல்ல சரக்கு பாட்டில் எதுனா பிடிச்சிட்டு வாங்க. யூஸ்புல்லா இருக்கும்' என்றார். கூடவே வெள்ளையாக, இனிமையாக, உற்சாகமாக அவரின் ட்ரேட் மார்க் சிரிப்பு. எங்களுக்கு இப்பொழுது பழகிவிட்டது.

ரூமிற்கு வந்தபிறகும் நாங்கள் அவ்வளவாக பேசிக் கொள்ளவில்லை. இன்று நடந்த சம்பவங்களுக்கிடையே எந்த தொடர்புமில்லை என்று தெளிவாகத் புத்திக்கு தெரிந்தாலும் ஏதோ இனம்புரியாத ஒரு உணர்வு... அதுவும் கார்த்தி மிகவும் தீவிரமாக ஏதோ உருவகம் பண்ணுவது அவனது மௌனத்திலிருந்தே தெரிகிறது.

அதிகாலையில் மௌனவிரதத்தை கலைத்தவன் என்னை தவிர்த்து ராஜ்குமாரிடம் பேசிக் கொண்டிருர்ந்தான்.

'மச்சி! ஐ ஸ்மெல்ட் இட் மச்சி.'

'கார்த்தி, இதெல்லாம் தற்செயலான சம்பவங்கள். தேவையில்லாம குழப்பிக்காதே. நேத்திக்கு அங்கிள் வீட்டுல பெட்ரூமையே அப்படி பாத்திட்டிருந்த? யுர் பிஹேவியர் வாஸ் அப்ஸொல்யூட்லி ப்ரிபோஸ்ட்ரஸ். முழு முட்டாள் நீ!'

'சுந்து, நீ பேசாம இரு. நான் குமார்கிட்ட பேசிட்டு இருக்கேன். உனக்கு இந்த லாஜிக் எல்லாம் புரியாது'

பேச்சு உரக்க வலுத்துக் கொண்டிருக்க ராஜ்குமார் சமாதானக் குரலில்,

'இருங்கப்பா. இருங்கப்பா. லெட்ஸ் டேக எ அப்ஜெக்டிவ் லுக். கார்த்தி நீ என்ன சொல்ல வர்ற'

கார்த்தி அழுத்தம்திருத்தமாக 'நேத்து காலையில நாம பாத்த பொண்ணும் அங்கிளோட ஒய்ஃபும் ஒரே ஆளுன்னு... ஆளுன்னு...' கொஞ்சம் தயங்கியபடி 'ஒண்ணா இருக்ககூடிய சாத்தியங்கள் மிக அதிகமா தெரியுது'

'சரி அதுக்கு என்ன இப்ப?'

'அங்கிளை நினச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கு. ஸச் எ ஸ்வீட் மேன்'

நான் குறுக்கிட்டு

'குமார்... நீயே சொல்லு இதுல என்ன மன்னாங்கட்டி லாஜிக் இருக்கு. அந்தப் பொண்ணை முதல்ல பாத்தது நான். இன்னொருவாட்டி பாத்தா எனக்கே அடையாளம் சொல்லத் தெரியாது. அவ்வளவு தூரத்தில பாத்திருக்கேன். அந்த ஸ்கார்ஃபை கார்த்தி தவிர யாரும் கடையில பாக்கல. செல்வா டீச்சர் யாரு? அவங்க வாங்கினது அதே ஸ்கார்ஃபா? அங்கிளோட வொஃய்ப் பேரும் செல்வநாயகிதானா? அவங்கதான் ஜோதி ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டீச்சரா? எவ்வளவு கேள்விகள். தேவையில்லாம யார் மேலயோ பழி போடறது நல்லால்ல.'

'அப்ப, அந்த பெண்ணுக்கும் அங்கிளுக்கு ஒரு சம்பந்தமுமில்லைன்னு சொல்றியா'

'டேய்... சுத்த பேத்தல்டா இது'

ராஜ்குமார் மெதுவாக சொன்னான். 'எனக்கும் சுந்து சொல்றது சரிதான்னு தோணுது. ஆனா அதே சமயம் அங்கிளை நெனச்சா பாவமா இருக்கு. அதனால...' என்று கொக்கி போட்டுவிட்டு நிறுத்தினான்.

'இது என்ன தீர்ப்பு சொல்ற டைம்மா? கிவ் மீ எ பிரேக்'

'இல்ல மச்சி! நான் என்ன சொல்ல வர்றேன்னா... ' என்று என்னை சமாதானமாக தோளைப் பிடித்து அழுத்திவிட்டு 'அந்த வீடியோவை அங்கிளுக்கு MMS பண்ணிட்டேன். அவருக்கு சம்பந்தமில்லைன்னா நோ ப்ராப்ளம். ஜஸ்ட் எ ஃப்ன் வீடியோ. இல்ல கார்த்தி சொல்ற மாதிரின்னா அங்கிளுக்கு தெரியபடுத்தின திருப்தி நமக்கு' என்றான்

மை காட்! எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

'டேய்... திஸ் இஸ் ஹைலி ரிடிகுலஸ். மொதல்ல நீ ரிகார்ட் பண்ணினதே தப்பு. அதை இப்படி MMS பண்றது ரொம்ப தப்பு.' கார்த்தியும் இதை எதிர்பார்க்கவில்லை.

'மச்சி, ஆர் யு இன்ஸேன். இன்னிக்கு கல்யாணத்தில் அங்கிளை எப்படிர்றா ஃபேஸ் பண்றது?'

அதற்கு அவசியம் இருக்கவில்லை.

'என்ன மிட் நைட்ல ஸ்பெஷல் ஐஸ்க்ரீம் எப்படி இருந்திச்சு?' என்று கேட்ட சகாதேவனிடம் 'சூப்பர்ப்பா. என்ன அங்கிள்ல காலைலேந்து காணோம்' என்று சாதாரணமாக கேட்பது போல் கேட்டேன்.

'ஆமாம். அவசர வேலையா ராமநகரம் போயிருக்கார். ஏதோ பிஸினெஸ் கால். ஆண்ட்டிதான் சொன்னாங்க நடுராத்திரில டிவிடி பாத்திட்டு இருந்தீங்களாம்? எதுனா சாமி படமாண்ணா? அங்கிள் நிறைய வச்சிருப்பாரே'

'ஆண்ட்டி வந்திருக்காங்களா என்ன? நேத்துக் கூட மீட் பண்ண முடியல' என்றான் கார்த்தி.

'இங்கதான இருந்தாங்க. மகா குரூப் போட்டோக்கு கூப்பிட்டிருக்கான். வாங்க'

மேடையில் பெரியவர்கள் எல்லாரும் மணமக்களுக்கு திருநீறு பூசிவிட்டு மொய்ப்பணம் அளிக்க பக்கத்திலேயே இரண்டு பேர் சேர் போட்டுக் கொண்டு உட்கார்ந்து பொறுப்பாக வரவு வைத்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு ஹாலில் வரிசையில் நின்று சாப்பிடும் அளவுக்கு அலைமோதும் கூட்டம். பாலம் கிச்சனின் ஸ்பெஷல் மட்டன் பிரியாணிதான் அன்றைய மெனுவின் முக்கிய ஐட்டம். மாலை பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்பதால் ஓட்டல் திரும்பியாகிவிட்டது. ஒரு குட்டி தூக்கம் போடும் முயற்சியில் இருக்கும்பொழுது போது ரூம் பெல் அடித்தது. திறந்தால் வாசலில் நரைத்த தாடியுடனும் காவிப் பல்லுடனும் 'நான் வாகீசன் சார் வூட்டு டிரைவர். சார் டிவிடி பிளேயர் எடுத்திட்டு வரச் சொன்னாரு' என்று சொல்லிக் கொண்டு ஒருவர் நின்றார்.

'ஓ! அங்கிள் வரலையா? நேத்து அவரே செல்ஃப்ல வந்தாரே' என்று நான் சற்று குழப்பத்துடன் கேட்க

'நேத்து கல்யாண வேலைக்காக வேற ஒரு வண்டில இருந்தேன் சார். இப்பத்தான் ராமநகரத்திலேந்து ரிடர்ன் ஆனோம். அய்யாவை வீட்டுல விட்டுட்டு வந்தேன்' என்றார்.

'உங்க பேரு?'

'சங்கராமன் சார்'

'இருங்க நானே எடுத்திட்டு வர்றேன்' அங்கிள் வராமல் டிரைவர் மட்டும் அனுப்பியது கொஞ்சம் சங்கடமாக இருந்தாலும், டிவிடி பிளேயரை பத்திரமாக திருப்பி கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் உறுத்தியது.

'இருக்கட்டும் சார். நானே எடுத்திக்கிறேன்' என்று அவரே டிவிடி பிளேயரை தூக்கிச் சென்றார். கூடவே கார் வரைச் சென்றேன். டிரைவரின் பக்கத்து சீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு, திறந்திருந்த கிளவ் பாக்ஸை மூடும்போது உள்ளே இருந்த வழவழப்பான வண்ணக் காகிதங்களில் 'ஜோதி மெட்ரிக்குலேஷன் பள்ளி'யின் பேம்ஃபிளட்டுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. நேர்த்தியான வடிவமைப்பில் மூன்றாக மடக்கி வைக்கப் பட்ட மார்க்கெட்டிங் தாள்கள். ஏதோ உந்துதலில் எடுத்துப் பார்க்க, சங்கராமன் சொன்னார் 'அம்மா ஸ்கூல் விளம்பரங்க. உள்ளாற அம்மா படம் போட்டிருக்கும் பாருங்க. பிரிச்சுப் பாருங்க' என்றார் பெருமையாக.

பேம்ஃப்ளட்டை பிரித்தால் உள்ளே பள்ளியின் விளையாட்டு வசதிகளைப் பற்றி விரிவாக பல புள்ளிவிவரங்களின் குறிக்கப் பட்டிருந்தது. அருகில் நான்கைந்து சிறுவர் சிறுமியர் ஓட்டப் பந்தயத்தின் தொடக்கத்தில் உட்கார்ந்திருக்கும் நிலையில் இருக்க, அருகில் கழுத்தில் தொங்கும் விசிலுடனும், கையில் ஸ்டாப் வாட்சுடன், கிராப் செய்த தலைமுடியுடனும், முழுக்கைச் சட்டையின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு செல்வநாயகி டீச்சர் நின்று கொண்டிருந்தார்.

59 மறுமொழிகள்:

nathas said...

Nice Twist @ the end :)

இலவசக்கொத்தனார் said...

செல்வநாயகி ஆம்பிளைப் பேரா? என்னய்யா குண்டு விடறீரு?

Sridhar Narayanan said...

வாங்க நாதாஸ் (நாதஸ்?),

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

இ.கொ.,

//செல்வநாயகி ஆமிபிளைப் பேரா?//

அப்படி எங்க சொல்லியிருக்கு கதையில? புதசெவி :-)

இலவசக்கொத்தனார் said...

என்ன எழவோ... வர வர உம்ம குட்டிக் கதைகளும் படிக்க முடியலை... :((

கோபிநாத் said...

ஒரு மாதிரி குழப்பமாக இருக்கு!..

கொத்ஸ் அண்ணாச்சி சொல்ற மாதிரி சொல்வநாயகி ஆணா!? பெண்ணா??

கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...

//என்ன எழவோ... வர வர உம்ம குட்டிக் கதைகளும் படிக்க முடியலை... :((// செம‌ உ. கு.! :-)

முன்னை விட உங்கள் கதை ஓட்டம் இதில் நன்றாக இருந்தது.

ஸ்போர்ட்ஸ் டீச்சர்களின் கண்டனங்கள் வரும்னு நினைக்கிறேன். ஈயம் நிறையன்னு மட்டும் சொல்லிக்கிறேன்.

பாலராஜன்கீதா said...

//அருகில் கழுத்தில் தொங்கும் விசிலுடனும், கையில் ஸ்டாப் வாட்சுடன், கிராப் செய்த தலைமுடியுடனும், முழுக்கைச் சட்டையின் கைகளை மடக்கி விட்டுக் கொண்டு செல்வநாயகி டீச்சர் நின்று கொண்டிருந்தார்.//
நெருப்பை இப்படியா பத்தவைப்பது ?
;-)

sanswas said...

Nice.. but its is not got convincing end.. why mr. vagesan not attend you people after that mms..?

கப்பி | Kappi said...

:)

//Nice Twist @ the end :)//

ரிப்பீட்டு!

பினாத்தல் சுரேஷ் said...

சொல்ல வந்த விஷயத்துக்கு நீளம் அதிகம், தேவையில்லாத சம்பவங்களும்.. இந்த வேலையில்லாத க்ரூப்புக்கு ஏன் துப்புஅறியும் ஆர்வம் வந்தது எனக் கோடி காட்டவே இல்லை. ( அந்த சிவப்பு ஸ்கார்ப் நம்ம ரகுவோட ஆள் மாதிரி இல்ல? ) தேவையில்லாத அதிக கேரக்டர்கள் ஒரு சிறுகதைக்கு..

ஆனால், ப்ளோ நன்றாக இருந்தது, ஒரே மூச்சில் படித்தேன் என்பதையும் பதிந்து வைத்து விடுகிறேன் :"-))

Sridhar Narayanan said...

வாங்க கோபிநாத்!

//கொத்ஸ் அண்ணாச்சி சொல்ற மாதிரி சொல்வநாயகி ஆணா!? பெண்ணா??//

கொத்ஸ் அண்ணாச்சி சொல்றதை எல்லாம் கண்டுக்காதீங்க. விட்டா இந்த டாபிக்கை வச்சு ஒரு பட்டிமன்றமே போட்டாலும் போட்டு விட்றுவார்.

கதைக்கு விளக்கம் சொல்றது கொஞ்சம் சங்கடம்தான் :-). இன்னமும் சில பேர் கருத்து சொல்லியிருக்காங்க பாருங்க. உங்களுக்கும் தெளிவாயிடும்னு நினைக்கிறேன். :-)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

கெபி அக்கா,

//செம‌ உ. கு.! :-)//

இதில 'உள்' குத்து எல்லாம் இல்லை. நேருக்கு 'நேரா'ன குத்துதான். :-)

உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!

//ஈயம் நிறையன்னு மட்டும் //

ஐயய்யோ... இது வேறயா. ஒரு யுட்யூப் வீடியோ பாக்கப் போய் விளையாட்டா உருவான கதைதாங்கோவ். மத்தபடி ஈயம், பித்தளை எல்லாம் நமக்கு அலர்ஜிங்க.

வாங்க பாலராஜன் கீதா!

உங்க கருத்துக்கு மிக்க நன்றி :))

வாங்க சன்ஸ்வாஸ்!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

//why mr. vagesan not attend you people after that mms..?//

கதைலேயே ஒரு இடத்தில சொல்றாங்களே, அவர் வெளியூர் போய்ட்டதா. வேறு ஏதாவது காரணம் இருந்தாலும் இருக்கலாம் :-)

வாங்க கப்பிண்ணா!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

வாங்க குரு!

//சொல்ல வந்த விஷயத்துக்கு நீளம் அதிகம், தேவையில்லாத சம்பவங்களும்.. //

நம்ம வீட்டுலேயும் இதே மாதிரியான விமர்சனம்தான் வந்தது :-)

சம்பவங்கள் இன்னமும் சுவாரசியமா இருந்திருக்கலாம்னு எனக்கும் தோன்றியது.

முழுவதுமாக படித்ததற்கும், உங்களுடைய க்ரிஸ்பான விமர்சனத்திற்கும் மிக்க நன்றிங்க :-) உங்கள் தொடர் ஊக்குவிப்புக்கு இன்னொரு ஸ்பெஷல் நன்றி தல.

வெண்பூ said...

கலக்கல் ஸ்ரீதர்.. எதிர்பார்க்காத முடிவு.. அற்புதம்.. யூகிக்க முடியாததற்கு முக்கிய காரணம் நம் பண்பாட்டுக்கு வெளியே இது இருப்பதுதான்.. நல்ல அவுட் ஆஃப் த பாக்ஸ் சிந்தனை.. பாராட்டுக்கள்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

செல்வநாயகி ஆணா பெண்ணா என்ற சந்தேகம் எனக்கில்லை :)

முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தது செல்வாதான் என்பதற்கு நீங்கள் சரியாகவே கோடிட்டுக் காட்டியுள்ளீர்கள் (கதையின் முதல் வரிகளில் முழுக்கை சட்டையின் கையை மடித்து விட்டுக் கொண்டு.. கதையின் கடைசியில் அதே மாதிரி முழுக்கை சட்டையை மடித்துக் கொண்டு என வருகிறது...)

கதையின் ஆரம்பப் பத்தி மறுபடியும் அப்படியே அடுத்து வருகிறது. சுஜாதா சொல்லும் கதை ஆரம்பத்திற்காக அப்படிச் செய்ததுபோல் இருக்கிறது (ஈர்க்கும்படியான ஆரம்பம்!). இதைத் தவிர்த்திருக்கலாம்.

அடுத்தவங்க ரகசியத்தைத் தெரிஞ்சுக்கத்தான் எவ்வளவு ஆர்வம்யா நம்ம மக்களுக்கு!

நிறைய characters, சம்பவங்கள் இருந்தாலும், கோர்வையா அழகா எழுதியிருக்கீங்க.

சுரேஷ் கண்ணன் said...

வாசகனை முழுவதுமாக படிக்க வைப்பதே ஒரு நல்ல சிறுகதையின் குறைந்தபட்ச அடிப்படைத் தேவை என்பதே என் பார்வை. அந்த அம்சத்தை உங்கள் கதை நிறைவேற்றியுள்ளது. வழக்கத்திற்கு மாறாக அலுவலக நேரத்தின் இடையே ஒரே மூச்சில் படித்தேன். :-)

செல்வநாயகி ஒரு லெஸ்பியன் என்பது நிச்சயம் யூகிக்க முடியாததாக இருந்தது. (அப்படித்தானே?) வெண்பூ சொன்னது போல் நம் பண்பாட்டுக்கு வெளியே இது இருப்பதுதான்.

நல்ல ப்ளோ இருந்தாலும் தேவையற்ற விவரணைகளைத் தவிர்த்து இன்னும் இறுக்கமாக்கியிருந்தால் நன்றாக அமைந்திருக்கும். உங்களுக்கு நன்றாக எழுத வருகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

ச.சங்கர் said...

///கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
//என்ன எழவோ... வர வர உம்ம குட்டிக் கதைகளும் படிக்க முடியலை... :((// செம‌ உ. கு.! :-)

முன்னை விட உங்கள் கதை ஓட்டம் இதில் நன்றாக இருந்தது./////

அதாகப் பட்டது, கதையைப் படிச்சுட்டு ஓடுரவங்க ஓட்டம் என்று இதை நான் எடுத்துக் கொள்கிறேன்.:)

Jokes apart

சிறுகதை மன்னன் சிரிதர் நாராயணன் அவர்களுக்கு,

வணக்கம்

தங்கள் வலைப்பூவில் மிகச் சமீபமாக பதியப்பட்டிருந்த "ஒரு முத்தத்தைத் தொடர்ந்து..." என்கின்ற சிறுகதை காணக்கிடைத்தது.

முதற்கண் கதை நன்றாக சிறப்புறவே அமைந்திருந்தற்கான பாராட்டுக்களை ஒரு வாசகன் என்ற முறையிலே தங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப் பட்டவனாகிறேன்.

ஆனாலும் ஒர் விமர்சகன் என்ற கோணத்தில் நோக்குங்கால் கதையில் சம்பவங்களின் நம்பகத் தன்மை சற்று குறைவாக இருந்தது என்பதை சொல்லிக் கொள்ளத் தலைப் படுகிறேன் .

இரு கதை மா(ந்)தர்களுக்கு நடுவில் நடை பெரும் இப்படியாகப் பட்ட ஒரு சம்பவம், பகல் பொழுதினிலே தெருவினில் (ஆளரவமற்ற சந்து என்று நீங்கள் சொல்ல முற்பட்டாலும் பகல் நேரத்தில் மற்றவர் வந்து அல்லது பார்த்து விடக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கிறது என்பதை அவர்கள அறியாமல் இருந்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை) நடந்தது என்பது கொஞ்சம் கேள்விக் கிடமானதாகவே தோன்றுகிறது.

யாரோ இருவர் முத்தமிட்டுக் கொண்ட ஒரு காட்சியினைக் கண் கொண்டு பார்க்க நேர்ந்த சில விடலைகள் அதைப் பார்த்த ஒரே காரணத்துக்காக, அந்தச் சம்பவத்தைப் பின்னொற்றி துப்புத் துலங்க முயன்றனர் என்பதுவும் நம்பும் அளவிலோ அல்லது நடை முறைக்கு சாத்தியப் பட்டதாகவோ தெரியவில்லை.

தங்களது கதை முயற்சிகள் மென்மேலும் தொடர இறைவனை வேண்டி, வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்கி அமைகிறேன்.

தங்கள் வாசகன்


:):):)

Sridhar Narayanan said...

வாங்க வெண்பூ!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க :-)

//நல்ல அவுட் ஆஃப் த பாக்ஸ் சிந்தனை//

இரண்டு நாட்களாக கதையைப் பற்றி யோசித்து கடைசியாக வெளியிடுவதற்கு அரை மணி முன்னதாகத்தான் இந்த முடிவு உதித்தது.

Sridhar Narayanan said...

வாங்க ஜ்யோவ்ராம்,

//கதையின் ஆரம்பப் பத்தி மறுபடியும் அப்படியே அடுத்து வருகிறது. சுஜாதா சொல்லும் கதை ஆரம்பத்திற்காக அப்படிச் செய்ததுபோல் இருக்கிறது (ஈர்க்கும்படியான ஆரம்பம்!). இதைத் தவிர்த்திருக்கலாம்.//

ஈர்க்கும்படியாக இருக்க வேண்டும் என்று நினைத்தது உண்மை. அதைவிட முதல் பத்தியிலேயே அந்த சம்பவத்தை சொல்லிவிட வேண்டும் என்று ஒரு தீர்மானம் இருந்தது. எவ்வளவு முடிந்தும் என்னால் அதை செய்ய முடியவில்லை. அதனால் நடுவில் இருந்து ஒரு பாராவை உருவி முதலில் வைத்தேன்.

//அடுத்தவங்க ரகசியத்தைத் தெரிஞ்சுக்கத்தான் எவ்வளவு ஆர்வம்யா நம்ம மக்களுக்கு!//

அதே! அதே! :-)

உங்க வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி தல :-)

Sridhar Narayanan said...

வாங்க சுரேஷ் கண்ணன்,

//வழக்கத்திற்கு மாறாக அலுவலக நேரத்தின் இடையே ஒரே மூச்சில் படித்தேன். :-)//

:-) கதை படித்தபின் உங்கள் வேலை தங்குதடையில்லாமல் வழக்கத்தை விட வேகமாக நடந்தது என்பதை நீங்கள் சொல்லாமல் இருந்தாலும், இனி அலுவலக வேலைகளுக்கு நடுவில் படிக்கப் போகும் வாசகர்களின் வசதியை முன்னிட்டு இங்கே பதிய வேண்டி எழுதுகிறேன் :-)).

//தேவையற்ற விவரணைகளைத் தவிர்த்து இன்னும் இறுக்கமாக்கியிருந்தால் நன்றாக அமைந்திருக்கும்.//

நன்றி சுரேஷ்! அடுத்தமுறை இன்னமும் கவனமாக செய்ய முயற்சிக்கிறேன்.

உங்கள் கருத்துக்கும், விமர்சனத்திற்கும் மிக்க நன்றி!

வாங்க சங்கர்ஜி!

//அதாகப் பட்டது, கதையைப் படிச்சுட்டு ஓடுரவங்க ஓட்டம் என்று இதை நான் எடுத்துக் கொள்கிறேன்.:)//

இந்தக் கதையைப் படிச்சவுடனே ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்தறதுனால, ஓடிப் போய் அந்த அந்த பேப்பரை எடுப்பாங்களாயிருக்கும். :-)

//முதற்கண் கதை நன்றாக சிறப்புறவே அமைந்திருந்தற்கான பாராட்டுக்களை //

நன்றி! நன்றி! முதற்'கண்' என்றால் அது வலது கண்ணா? இடது கண்ணா? அப்ப இரண்டு தடவை மேல் நீங்கள் எதையும் சொல்ல முடியாது இல்லையா? மூண்றாம்கண்-ன்னு சொன்னா நீங்க சிவபெருமான் ஆயிடுவீங்களா? புதசெவி!

//அவர்கள அறியாமல் இருந்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை//

இந்தக் கேள்வியை அவர்களிடம் கேட்கலாம். 'காதலுக்கு கண் மட்டும் இல்லை, சூடு சொரணை எதுவும் இல்லை' என்று உணர்த்தும் மெரீனா பீச் காதலர்களை இந்த வாசகர் பார்த்ததில்லையா என்று பதில் கேள்வி கேட்கிறார்கள் :-))

//சம்பவத்தைப் பின்னொற்றி துப்புத் துலங்க முயன்றனர்//

துப்பு துலங்க - நல்லா ரைமிங்கா இருக்கே. :-) கதையின் சம்பவங்கள் தானாக நடக்கின்றன என்றுதான் நினைக்கிறேன். ஓரிரெண்டு இடத்தில் இந்த வார்த்தையை உபயோகித்தன் விளைவு அப்படி ஒரு சாயம் ஏற்றப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன்.

//வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்கி அமைகிறேன்.//

ஆஹா! முழுசும் படிக்காம வெளியிட்டு பதிலும் எழுதிட்டேனே. இந்த வயசு மேட்டர் நமக்கு எப்பவும் அலர்ஜிங்கிறதனால நான் எப்பவும் 18-க்கு மேல எண்ணிக்கையை தொடருவதே இல்லை. அப்படியும் வம்படியா 'வாழ்த்த வயதில்லை'ன்னு நீங்க சொன்னீங்கன்னா நீங்க கடந்த 5 தேர்தலா போட்ட நல்ல ஓட்டுகள் மற்றும் கள்ள ஓட்டுகள் பற்றிய ஆதாரங்களை வெளியிடுவேன் என்று எச்சரிக்கிறேன் :-)

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

நல்ல ஃப்ளோ...! ஆனாலும் உங்க ரீடர்ஸை ரொம்ப நம்பறீங்க, நீங்க..!

Sridhar Narayanan said...

வாங்க வசந்த்குமார்,

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//ஆனாலும் உங்க ரீடர்ஸை ரொம்ப நம்பறீங்க, நீங்க..!//

:-))

கோபிநாத் said...

\\ Sridhar Narayanan said...
வாங்க கோபிநாத்!

//கொத்ஸ் அண்ணாச்சி சொல்ற மாதிரி சொல்வநாயகி ஆணா!? பெண்ணா??//

கொத்ஸ் அண்ணாச்சி சொல்றதை எல்லாம் கண்டுக்காதீங்க. விட்டா இந்த டாபிக்கை வச்சு ஒரு பட்டிமன்றமே போட்டாலும் போட்டு விட்றுவார்.

கதைக்கு விளக்கம் சொல்றது கொஞ்சம் சங்கடம்தான் :-). இன்னமும் சில பேர் கருத்து சொல்லியிருக்காங்க பாருங்க. உங்களுக்கும் தெளிவாயிடும்னு நினைக்கிறேன். :-)
\\

ஏன் அண்ணாச்சி சங்கடம்..!? மற்றவர் கருத்துக்களில் இருந்து புரிந்துக்கொண்டேன் ;)

வாழ்த்துக்கள்...;)

Sridhar Narayanan said...

வாங்க கோபிநாத்!

உங்கள் மீள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி!

//ஏன் அண்ணாச்சி சங்கடம்..//

நான் சங்கடம் என்று சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். கதைகள், கவிதைகள் போன்றவற்றில் வாசிக்கும் உங்கள் அனுபவம்தான் முக்கியம் என்பது எனது நினைப்பு. விளக்கவுரை எழுதுவது கதையை கொல்வது போல் ஆகிவிடும் என்பதுதான் நான் சொல்ல நினைத்தது. :)

யு.எஸ்.தமிழன் said...

அப்படி என்னங்ண்ணா கோபம் உங்களுக்கு வாத்தியார்க மேல? சின்ன வயசுல வாத்தியாருங்க ரொம்ப கொடும கிடும படுத்தீட்டாங்களா? ஏன் இப்படி கொல வெறியோட ஒவ்வொரு கதையிலும் வாத்தியார்களை கேரக்டர் அஸாஸினேஷன் செய்றிங்?

:)

ஹாரிஸ் நார்ட்டன், சண்டே இதெல்லாம் வலுக்கட்டாயமா நுழைச்ச மாதிரி ஒரு ஃபிலிங். இன்னும் சொல்லப்போனா இந்தக்கதையில மூணு நண்பர்களே தேவையில்லை, கதை சொல்லியே போதும் - இன்னும் crisp ஆக இருந்திருக்கும். அதேமாதிரி அவங்க மூணுபேரும் கல்யாணத்துல எப்ப இருக்கறாங்க, ’துப்பு’துலக்கும் போது எங்கிருக்கிறார்கள் போன்ற சூழல் குறித்த வர்ணனைகளை அதிகப்படுத்தினால் விறுவிறுப்பு அதிகரித்திருக்கும்.


நல்ல பாய்ண்டுகளையெல்லாம் மத்தவங்க தேவையான அளவுக்கு சொன்னதால - அப்பீட்!

Sridhar Narayanan said...

வாங்க மாமா சாமா தமிழன் ஐயா, (US - Uncle Sama :) )

உங்கள் வரவுக்கும், விமரிசனத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

இன்னமும் இரண்டு மூன்று முறைகள் வாசித்து மாற்றி இருக்கலாம். கண்டிப்பாக அடுத்த முறை கவனமாக இருக்கிறேன். :-)

ambi said...

//ஒரு யுட்யூப் வீடியோ பாக்கப் போய் விளையாட்டா உருவான கதைதாங்கோவ்//

இது வேறையா? :p

உங்க கதைபடி பாத்தா அதுவும் இந்தியாவுல முக்கு சந்துல எல்லாம் செல்வா டீச்சர்கள் உணர்ச்சி வச படமாட்டார்கள். :)

ஒரு வேளை அடுத்த ரூமில் இப்படி அஜால் குஜால் நடந்த மாதிரி நீங்க சம்பவத்தை பின்னி இருக்கலாம். :))

ambi said...

கதை ப்ளோ சூப்பர், கொஞ்சம் இழுத்தீட்டீங்க, பரவாயில்லை, ஆனா ஒரே மூச்சுல படிக்க வெச்சுட்டீங்க, அதான் உங்க வெற்றி. :)

பி.கு: செல்வா டீச்சரும் சில முத்தங்களும்னு டைட்டில் வெச்சிருந்தா சி சென்டர்ல படம் பிச்சுகிட்டு ஓடிருக்கும். :p

டிஸ்கி: சி சென்டர்னு நான் சொன்னது தமிழ் மணம் இல்லை. :)))

Sridhar Narayanan said...

வாங்க அம்பி அப்பா :-)

உங்க வருகைக்கும் மேலான கருத்து / விமர்சனம் / உ.குத்து / டிஸ்கிக்கும் மிக்க நன்றி :-)

//இப்படி அஜால் குஜால் நடந்த மாதிரி //
//ஒரே மூச்சுல படிக்க வெச்சுட்டீங்க, அதான் உங்க வெற்றி//

இது ரெண்டுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிற மாதிரி இருக்கே :-)


//செல்வா டீச்சரும் சில முத்தங்களும்னு //

:))

//டிஸ்கி: சி சென்டர்னு நான் சொன்னது தமிழ் மணம் இல்லை. :)))//

இந்த 'டிஸ்கி' பழக்கம் உங்களையும் தொத்திகிடுச்சா? :))

ramachandranusha(உஷா) said...

ஸ்ரீதர்! அருமையாய் வந்திருக்கு. கடைசி வரை ப்ளோ குறையவேயில்லை. ஒரு த்ரில்லர் படிக்கிறா மாதிரி இருந்தது. முடிவு எப்படி என்று என்னால் கடைசிவரை கண்டே பிடிக்க முடியவில்லை. இவை எல்லாம் கதைக்கு வெற்றி. வாழ்த்துக்கள்

Sridhar Narayanan said...

வாங்க உஷா! :-)

உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் மிக்க நன்றி.

mappla said...

Excellent story.
Unexpected end.
Keep it up.

Sridhar Narayanan said...

// mappla said...
Excellent story.
//

வாங்க மாப்ள. உங்க வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

வல்லிசிம்ஹன் said...

கதை திரில்லர் அளவில போய்விட்டது. டெம்போ குறையவில்லை. நேரில நடக்கிற மாதிரி நல்லா எழுதிட்டீங்க ஸ்ரீதர்.
இந்தக் கதை எனக்குப் புரிந்தது:)
பாவம் அந்த வாகீசர்.

Sridhar Narayanan said...

வாங்க வல்லியம்மா. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//இந்தக் கதை எனக்குப் புரிந்தது:)//

ஏதோ பாராட்டுகிறீர்கள் என்று நினைத்தால்... அப்படி தெரியவில்லையே :-))

துளசி கோபால் said...

வெறும் முத்தத்துக்கே இந்தப் பாடா.....

ஆனாலும் செல்ஃபோனில் படம்பிடிச்சு அனுப்பறதெல்லாம் ஃபோர் மச்.

கதை நல்லா வந்துருக்கு.

பத்திக்கிச்சுன்னு சொல்றார் நம்ம பாகீ:-)

Sridhar Narayanan said...

வாங்க துளசி ரீச்சர்!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

//ஆனாலும் செல்ஃபோனில் படம்பிடிச்சு அனுப்பறதெல்லாம் ஃபோர் மச்.//

ஆமாங்க. கதையிலேயே நான் அதை கண்டிச்சிட்டேனே :-))

//பத்திக்கிச்சுன்னு சொல்றார் நம்ம பாகீ:-)//

:))

ச.சங்கர் said...

/// ramachandranusha(உஷா)

ஒரு த்ரில்லர் படிக்கிறா மாதிரி இருந்தது. முடிவு எப்படி என்று என்னால் கடைசிவரை கண்டே பிடிக்க முடியவில்லை. இவை எல்லாம் கதைக்கு வெற்றி. வாழ்த்துக்கள்////

கதை என்னான்னே இலவசக் கொத்தனாருக்கு கடைசி வரைக்கும் புரியவே இல்லையே அதுக்கென்ன சொல்றீங்க :))

ச.சங்கர் said...

///இந்தக் கதையைப் படிச்சவுடனே ஒரு ப்ரிண்ட் அவுட் கொடுத்தறதுனால, ஓடிப் போய் அந்த அந்த பேப்பரை எடுப்பாங்களாயிருக்கும். :-)///

த்த்தோடா :)

ச.சங்கர் said...

///ஆஹா! முழுசும் படிக்காம வெளியிட்டு பதிலும் எழுதிட்டேனே.///

பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.

வாசகரது பின்னூட்டங்களை முழுவதும் படிக்காமல் வெளியிட்டு பதிலும் எழுதும் கதாசிரியரை கண்டிக்கிறேன்

Radha Sriram said...

ஏங்க ஸ்ரீதர் இப்படி கூக்ளி போடரீங்க........ஏதோ இப்படி அப்படி பின்னூட்டங்கள் மூலமாவும் அங்க இங்க கேட்டும் புரிஞ்சுகிட்டேன்.....அப்பாடி இன்னும் கொத்ஸுக்கு புரியலங்கரதுல ஒரு சின்ன சந்தோஷம்.:):)

இண்டெலிஜெண்ட் ஸ்டோரி டெல்லிங்னா இதானாமே??....செரி செரி இண்டெலிஜெண்டா நானும் ஒரு கேள்விய கேடுக்கரேன்...இது எந்த genre ரை சேர்ந்தது??:):)

dharshini said...

story supera irundhadhu.....mutham enbadhu avaravar eduthukaratha poruthu irrukku...for example, mother-child, husband-wife, sister-brother etc..,
ennaporuthavaikkum selva lesbian illa(mela sonna edhavadhu oru relationshippa irrukalam)gents paathathala oru vidha thayakkam(or)orumathiri aagiirukkalam...

Sridhar Narayanan said...

வாங்க சங்கர்ஜி,

//கதை என்னான்னே இலவசக் கொத்தனாருக்கு கடைசி வரைக்கும் புரியவே இல்லையே //

அட அவரோட அடுத்த பின்னூட்டத்தை நீங்க பாக்கலையா? நேராவே ஒரு 'குத்து' விட்டிருந்தாரே :-))

//பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.//

பூனைக்குட்டியா? கெபி அக்கா வேற ஈயம் இளிக்குதுன்னு சொல்லிட்டுப் போறாங்க. நாங்க எல்லாம் பச்ச மண்ணு ஐயா... இப்படி ஒண்ணுந்தெரியாத அப்பாவியை இம்சிக்கலாமா? :))

Sridhar Narayanan said...

வாங்க ராதாக்கா,

//இன்னும் கொத்ஸுக்கு புரியலங்கரதுல ஒரு சின்ன சந்தோஷம்.:):)//

இந்த சந்தோஷம்லாம் இருக்க வேண்டியதுதான் :-))

//இண்டெலிஜெண்ட் ஸ்டோரி டெல்லிங்னா இதானாமே??....செரி செரி இண்டெலிஜெண்டா நானும் ஒரு கேள்விய கேடுக்கரேன்...இது எந்த genre ரை சேர்ந்தது??:):)//

ஏன்? ஏன்? ஏனிந்த யுத்த வெறி? எதுவானாலும் பேசி தீத்துக்கலாம். பேசாமலேயே கூட மாப்பு கேட்டுக்கறேன் :-))

Sridhar Narayanan said...

வாங்க தர்ஷிணி,

//ennaporuthavaikkum selva lesbian illa(mela sonna edhavadhu oru relationshippa irrukalam)gents paathathala oru vidha thayakkam(or)orumathiri aagiirukkalam...//

இந்தக் கதைக்கு வந்த பின்னூட்டங்களில் உங்களுடையதுதான் வித்தியாசமாக இருந்தது. இன்னமும் கூர்ந்து பார்த்தீர்கள் என்றால் இந்தக் கதை எதையும் தீர்மானமாக சொல்லவில்லை. அந்த முதல் சம்பவத்திலிருந்து கடைசி சம்பவம் வரை எல்லாமே தனித்தனியானது. வாசகர்கள் அவர்களாக இட்டுக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான்.

உங்கள் வித்தியாசமான கருத்துகளுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து என்னுடைய மற்ற படைப்புகளையும் படித்துப் பாருங்களேன்.

K.Ravishankar said...

அன்புள்ள ஸ்ரீதர் நாராயணன்,

சத்தியமாக மறுமொழிகள் எதையும் படிக்காமல் இதை எழுதுகிறேன்.என் மறுமொழி போட்டவுடன் தான் படிக்கப் போகிறேன்.

தயவு செய்து கிழ் வருவதை ஆககபூவமாக எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி.

இனி என் எண்ணங்கள்:-

I don’t want to give any knee jerk reaction கதை சுமார்.Operation success but patient died.

ரொம்ப பொறுமையாக எழுதி உள்ளீர்கள். வாழுத்துக்கள்.

எனக்கு சிறு கதைகள் ப்டித்த/எழுதிய அனுபவம் நெறைய உண்டு . (என்னுடைய வாரணம் ஆயிரம் /முதல் முத்தம் கதை என் வலையில் படிக்கலாம்) ..

இது சிறுகதை இல்லை குறு நாவல் பத்துபக்கங்களுக்குமேல் போகிறது..You can try in putting this in word document. சிறுகதை நான்கு பக்கம்தான்.

சிறுகதைக்கும் SOP உண்டு.குக்கரில் சாதம்(சிறு குடும்பத்திற்க்கு=சிறு கதை ) செய்வது மாதிரி. உஸ் என்ற சத்தம் வந்த பிறகு,Weightபோடுவது,அப்புறம் முன்று விசில்.சின்னதாக்கி ஒரு விசில் .இறக்கிவிட வேண்டும்.

சிறுகதை யில் ஒரு எடுப்பு ,தொடுப்பு ,முடிப்பு இருக்க வேண்டும் (சினிமா மாதிரித்தான்) இது வணிக பத்திரிக்கை சிறுகதைகளுக்கு பொருந்தும்.

ஸ்கூல் கட்டுரை கூட் முன்னுரை/பொருளுரை/முடிவுரை. உண்டு. நோ வள... வள....

எடுப்பு என்பது கதாபாத்திரங்கள் அறிமுகம் .தொடுப்பு ஒரு முடிச்சு அல்லது முரண்பாடு விழ வேண்டும் .அதை முடிப்பில் விலக வேண்டும் .அதுதான் சுவாரசியம் . தொடுப்பு ரொம்ப வள வள வள .. அலுப்பு தட்டுகிறது. எல்லோருக்கும் (நானும் அடக்கம்) வரும் சுஜாதா நெடி.

கதையின் கரு யார் அந்த ஒருத்தி? இந்த முடிச்சை அவிழ்க்க முடிப்பு ஷார்ப்பாக இருக்க வேண்டும் ஷார்ப்பாக.இல்லை. முடிவு வாசகரின் யூகத்திர்க்கு? Lespian ? கதையில் நகைசுவை மிஸ்ஸிங்.

எதற்காக சேஸ் செய்கிறார்கள்?. யாரிடமுமிருந்து(மூன்று பேர்) எந்த உணர்ச்சியும் இல்லை .விட்டேத்தியாக இருக்கிறது .

பொதுவாகவே உணர்ச்சிகள் மிஸ்ஸிங். சம்பவங்களுக்கு propornate க உணர்ச்சிகள் இல்லை.

//மொதல்ல நீ ரிகார்ட் பண்ணினதே தப்பு. அதை இப்படி MMS பண்றது ரொம்ப தப்பு.// இந்த திடிர் நல்லவன் .ஏன்?

என்னுடைய வாரணம் ஆயிரம் /முதல் முத்தம் கதை என் வலையில் படிக்கலாம் கருத்து கண்டிப்பாக சொல்லுங்கள் சாத்தலாம் /வாழ்த்தலாம்

தயவு செய்து சுருக்கி எழுதுங்கள். SOP பின்பற்றுங்கள். இது என்னுடைய் தாழ்மையான் வேண்டுகோள்.

அன்புடன்
கே .ரவிஷங்கர்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ரவி ஷங்கரின் பின்னூட்டத்திற்கு :

தலை தலையாக அடித்துக் கொண்டாலும் தலையே தலை!

Sridhar Narayanan said...

கே ரவிஷங்கர்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எதுவும் இலக்கணத்திற்கு உட்பட்டு கதைகள் எழுத நினைப்பதில்லை. என்னாலேயே அப்படிப்பட்ட கதைகளை படிக்க முடியாது. ஒரு வாசிப்பனுபவதிற்குதான் ஏதோ எழுதுகிறேன். :)

ஒரே ஒரு விசயம். சிறுகதைகளுக்கு என்று அளவெல்லாம் வைத்து குறுக்கிக் கொள்ளாதீர்கள். நான் படித்து மகிழ்ந்த பல கதைகள் அளவில் பெரியவையே. ஜெஃப்ரி ஆர்ச்சர் போன்றவர்களின் கதைகளில் ஒரே கதைக்கு மூன்று விதமான முடிவுகள் உண்டு. 36 கதைகள் 700 பக்கத்திற்கும் மேலே.

முதன்மையாக நான் வாசகந்தான். எழுதுவது எல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

K.Ravishankar said...

ஜ்யோராம் சுந்தர்,
“தலை தலையாக அடித்துக் கொண்டாலும் தலையே தலை!”
இந்த ஒரு அடி குறளுக்கு கோனார் நோட்ஸ் போட முடியுமா?
எனக்கு என்னவோ “Bouquet” மாதிரிதான் தெரிகிறது.

K.Ravishankar said...

அன்புள்ள ஸ்ரீதர் நாராயணன்,


//கதைகள் அளவில் பெரியவையே. ஜெஃப்ரி ஆர்ச்ச//

நூறு சதவீதம் உண்மை. பெரிய சிறு கதை எழுத, இதற்கும் திறமை வேண்டும் .வாசகனை கட்டி இழுத்துக்கொண்டு போக வேண்டும்.. "The விறுவிறுப்பு " வேண்டும் கதையில் .

கட்டி இழுத்துக்கொண்டு……...உதாரணங்கள்.
1.கடவுளும் கந்தசாமி ...........புதுமை பித்தன் .(நகைசுவை )

2. இளைய ராஜாவின் நீண்ட பாடல்கள் ( amazing and brilliant orchestration from begin.. to end)

3.காந்தி பட்ம்( காட்சி அமைப்பு)


// சிறுகதைகளுக்கு என்று அளவெல்லாம் வைத்து குறுக்கிக் கொள்ளாதீர்கள்//

சிறு கதை எழுதுவது கஷ்டம் . நாவல். நிறைய பீலா விடலாம் . No target.

நீல படங்கள் ஏன் அலுப்பு தட்ட்கிறது .( குக்கரில் சாதம் .... SOP இல்லை)( (குக்கர்...... புரியாதவர்கள் என்னுடைய முதல் மறுமொழியை பார்க்க ) . எடுத்தவுடனேயே கதையின் "கரு"வுக்கு வந்து விடுகிறார்கள் .விசில் ஓவராகி அடி பிடித்து போகிறது. .நம்ம ஊர் சினிமா (பால் சொம்பு/பட்டு ப்புடவை /உள்ளே தள்ளி விடுதல்). சுவாரசியம் . .ஏன் சுவாரசியம்? கதையின் "கரு"வுக்கு வ்ராமல் ..... வாசகனின் யூகத்திற்கு...... விட்டு விடுவதால்.

வந்த ம்றுமொழிகளை சார்ட் செய்தால் ஒரு ஐடியா கிடைக்கும்.அதுவே
போதும்.

//ஒரு வாசிப்பனுபவதிற்குதான் ஏதோ எழுதுகிறேன்.//

Nothing wrong in it my dear friend. You will have lots of experience. But…. It is getting published . Readers are reading for the sake of entertainment.


நன்றி
அன்புடன்
கே.ரவிஷங்கர்

Sridhar Narayanan said...

//தலை தலையாக அடித்துக் கொண்டாலும் தலையே தலை!//

வாங்க ஜ்யோவ்ராம் :-) உங்கள் 'தலை' குரளில் 'தளை' தட்டுகிறதே என்று குரல் கொடுக்கலாமா? :-)

Sridhar Narayanan said...

ரவிஷங்கர்,

மீள் வருகைக்கு நன்றி.

உங்கள் விளக்கங்களிலிருந்து ஒன்று புரிகிறது. நீங்கள் எதிர்பார்க்கும் ஏதோ இந்தக் கதையில் இல்லை.

நீங்கள் இளையராஜாவை உதாரணம் சொல்லலாம். இன்னொருவர் பிரையன் ஆடம்ஸை உதாரணம் கொள்ளலாம்.

விட்டுவிடுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் கதையைப் படியுங்கள். வாசகரின் பிரதிதான் முக்கியம்.

மற்றபடி இதில் விவாதிக்க ஒன்றுமில்லை.

K.Ravishankar said...

நன்றி ஸ்ரீதர்!
Boss take it easy.
என் வலை தளத்திற்கு எப்போது வருகிறீர்கள்.

(ரொம்ப வெறிச்சோடி போய் பேய் உலவுகிறது)வந்து என் பதிவுகளை பற்றி கருத்து சொல்லலாமே!

என்னுடைய வலை லோகோ உங்கள் follower பட்டியலில் ரொம்ப நாளாக உள்ளது.

(ஒரு சின்ன ஜோக்: இந்த எல்லா வலைகளிலும் உள்ள follwer படங்களை பார்க்கும்போது எனக்கு டவுன் பஸ் ஸ்டாண்ட் நியாபகம் வரும்)

ஏன்?.

அங்குதான் "இந்த படத்தில் காணப்படும் ஜேப்படி திருடர்களை கண்டால் " என்று வரிசையாக post card சைசில் ................)

இது எப்படி இருக்கு?

நன்றி

K.R.அதியமான் said...

Dear Sridhar,

As i don't know your email id this is my mail to you. Pls see this thread for an excellent and lenghty debate with Nanbar Jamalan and others recently :

http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/a8fe1f37bbfb6912?pli=1

Sridhar Narayanan said...

//என் வலை தளத்திற்கு எப்போது வருகிறீர்கள்.//

வாங்க ரவி! உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

உங்கள் தளத்தில் வந்தேனே. உங்கள் கதைகளையும் படித்தேன்.

// என் பதிவுகளை பற்றி கருத்து சொல்லலாமே!//

:-) கருத்து சொல்லுமளவிற்கு எனக்கு தீர்மானமான நிலைப்பாடு எல்லாம் கிடையாது. நேரத்தின்பாற்பட்டு நண்பர்களின் தளங்களில் பின்னூட்டமிடுவேன். மற்றபடி எல்லாவற்றையும் படித்து விடுகிறேன் விடாமல்.

//என்னுடைய வலை லோகோ உங்கள் follower பட்டியலில் ரொம்ப நாளாக உள்ளது.//

பார்த்திருக்கிறேன் :-)) மிக்க நன்றி!

//எனக்கு டவுன் பஸ் ஸ்டாண்ட் நியாபகம் வரும்)//

ஆஹா! இது தெரியாமல் நானும் என் படத்தை பல இடங்களில் போட்டு வைத்து இருக்கிறேனே :-))

Sridhar Narayanan said...

// K.R.அதியமான் said... //

அதியமான் சுட்டிக்கு மிக்க நன்றி. அது ஒரு முடியாத விவாதம். இப்பொழுது நேரமின்மையால் பார்வையாளனாக மட்டும் :-)

சென்ஷி said...

முடிவு சற்றும் எதிர்பாராதது.. நல்ல திருப்பம்.. நான் சொல்றதுக்கு முன்னாடியே எல்லாரும் சொல்லிட்டாங்க.. இருந்தாலும் சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா...

பத்த வச்சியெ ஸ்ரீதரண்ணா :))

Sridhar Narayanan said...

//இருந்தாலும் சொல்ல வேண்டியது நம்ம கடமை இல்லையா...

பத்த வச்சியெ ஸ்ரீதரண்ணா :))
//

வாங்க சென்ஷி!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

பத்த வைக்கிறதிலேயே குறியா இருக்கீங்களே. :-)

உஷா sekar said...

கடைசியாய் பிரியா எனக்கு சொல்லி கொடுத்துட்டா நானும் உன் கதையை படிச்சுட்டு கமெண்ட் பண்ண முடியும் நன்னாயிருந்தது விமர்சனம் அப்புறம் எழுதறேன்