1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
சிறு வயதில் நிறைய படங்களுக்கு பெற்றோருடன் சென்ற ஞாபகம் இருக்கிறது. எது முதல் படம் என்று சொல்ல முடியவில்லை. சிவப்பு ரோஜாக்களின் தேசலான ஞாபகங்கள் இருப்பதாக அம்மாவிடம் சொன்னதிற்கு ஆச்சர்யபட்டார். நான்கு வயது அப்பொழுது எனக்கு. கொஞ்சம் விவரம் தெரிந்த பிறகு மீண்டும் கோகிலாவிற்கு சைக்கிள் ரிக்ஷாவில் போனது ஞாபகம் இருந்தது. படத்தின் காட்சிகள் எதுவும் ஞாபகமில்லை. சித்தப்பாவின் திருமண கொண்டாட்டமாக மதுரை செண்டிரலில் சவால் என்றொரு படம் குடும்பம் குழந்தைகளோடு இரவுக் காட்சி சென்றோம். டைட்டில் மட்டும் பார்த்துவிட்டு தூங்கிவிட்டேன். பின்னர் அண்ணன் சீன்-பை-சீன் கதை சொல்ல மனம் ஆறுதல் அடைந்தது. இந்தப் படங்கள் எல்லாம் டிவிக்களில் 3-4 முறை முழுவதும் பார்த்துவிட்டதால், என் குழந்தைக் கால ஞாபக சக்தியை உறுதியாக சொல்ல முடியவில்லை. நன்றாக விவரம் தெரிந்தவுடன் வீட்டில் சொல்லிவிட்டு தனியாக சென்று பார்த்த முதல் படம் 'சின்னத்தம்பி பெரியதம்பி'. மதுரை தேவி டாக்கீஸில் மதிய காட்சி. பிறகு 10-ம் வகுப்பு முழுப்பரீட்சை விடுமுறையில் வரிசையாக தனியாக சென்று திரைப்படங்களாக பார்த்து தள்ளினேன். அது என்னமோ தனியாக சினிமா பார்ப்பது எனக்கு சௌகரியமாகவே இருக்கிறது.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா. வெளியான இரண்டாம் நாள் பார்த்த படம். எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கவில்லை. அந்த அனுபவம் இங்கே.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
வீட்டில் பார்த்தப் படம் 'பொய் சொல்லப் போறோம்'. Khosla ka Ghosla பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்ததால் ஆர்வமாகவே பார்த்தேன். நன்றாகவே இருந்தது. சில பல கிள்ஷேக்களை தவிர்த்திருந்தால் முதல்தரமாக வந்திருக்க வேண்டிய படம். மௌலியை இவ்வளவு காலமாக மிஸ் செய்திருக்கிறோம். அமெரிக்கா வீசா பற்றிய ஒரு சில அடிப்படை அறிவோடு சில காட்சிகளை அமைத்திருக்கலாம். என்னமோ ட்ரைவிங் லைசன்ஸ் ரேஞ்சுக்கு இடைத்தரகர் பாஸ்கி கேட்கும் இடங்களிலெல்லாம் கையெழுத்துப் போட்டவுடன் வீஸா கிடைத்துவிடுகிறது.
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
எந்த படத்தையும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் விடாமல் பார்க்கும் வழக்கமுள்ளவன். ஒரு சில காட்சிகள் பாதித்தாலும் ஏதாவது நொட்டை, நொள்ளை சொல்லிக் கொண்டிருப்பவந்தான். சலங்கை ஒலி ரீ-ரிலிஸ் பொழுது மாமா சர்பிரைஸாக கூட்டிக் கொண்டு போனார். படம் பார்த்த சில மணி நேரங்கள் பேச முடியாமல் பாலகிருஷ்ணனுக்காக மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தேன். சிப்பிக்குள் முத்து பார்த்து உருகினாலும், எஸ்பிபியின் இரவல் குரல் ஏனோ நெருடலாக இருந்தது. டிவியில் அவள் அப்படித்தான் பார்த்த பொழுது இதுதான்டா திரைப்படம் என்று தீர்மானமாக சொல்ல முடிந்தது. இந்த பட்டியலில் உச்சத்தில் இருப்பது 'மகாநதி'. மசாலாத்தனங்கள் இருந்தாலும், தஞ்சாவூரிலிருந்து கொல்கத்தா வரை அலைக்கழிக்கப்பட்டு தூக்கத்தில் பெனாத்தும் காவேரி உலுக்கி விட்டாள் மனதை.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நடிகை ஷோபா தற்கொலையைப் பற்றி பாலகுமாரன் சாவியில் (திசைகள்?) எழுதினார். பின்னர் ஒரு பேட்டியில், பாலுமகேந்திரா அந்த செய்தியை எழுதிய விதத்தில் காயப்பட்டதாக பாலகுமாரனிடம் சொன்னதாக பாலகுமாரனே எழுதினார். என்னவென்று புரியாமல் படித்துக் கொண்டிருந்தேன் இந்த செய்திகளை எல்லாம். சமீபத்தில் அனுஹாசனின் நிகழ்ச்சியில் பாலுமகேந்திரா சொன்னது 'மூன்றாம் பிறை கதை என்பது நானும் ஷோபாவும்தான்'. சினிமாவின் ஃப்ரேமிற்குள்ளும் வெளியேயும் மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியவர் 'பூந்தேனில் கலந்து, பொன்வண்டு எழுந்து' என்று கள்ளம் கபடமில்லாமல் சிரிக்கும் ஷோபா. என்ன நடந்தது ஷோபா?
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
இயக்குநர் ஸ்ரீதர், கர்ணன் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவின் தொழில்நுட்ப சமாச்சாரங்களைப் பற்றி தமிழ் சினிமா நிருபர்கள் கொஞ்சம் அதிகப்படியாகவே (exaggeration) எழுதி வந்திருக்கிறார்கள். நாயகன், அபூர்வ சகோதரர்கள், இதயத்தை திருடாதே, தொடங்கி நேற்றைய பில்லா, தசாவதாரம் வரை தொழில்நுட்பத்தின் மூலம் சினிமாவின் வீச்சை அதிக படுத்திய படங்கள் என்று ஒரு பட்டியல் இருக்கிறது. ஆனால் இது நிறைவான பட்டியல் இல்லை. இந்தப் படங்களில் எல்லாம் ஏதோ ஒரு இடத்தில் சமரசம் செய்து கொண்டுவிடுகிறார்கள். இந்த ஆடியன்ஸ்க்கு இது போதும் என்ற எண்ணமா என்று தெரியவில்லை. நாம் போகவேண்டிய தூரம் இன்னமும் நிறைய இருக்கிறது என்பதுதான் உண்மை.
6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
தமிழ் சினிமா பற்றிய செய்திகளில் முக்கால்வாசி கிசுகிசுக்கள்தானே. இது பெரும்பாலும் சினிமா செய்திகளை ரிப்போர்ட் செய்யும் நிருபர்களின் அரசியல் என்றுதான் நினைக்கிறேன். தியோடர் பாஸ்கரன் போன்றவர்கள் எழுதிய உபயோகமான புத்தகங்கள் பற்றிய அறிமுகம் உண்டு. பெரும்பாலும் வெற்றி பெற்ற இயக்குநர்கள், நடிகர்கள் தாங்கள் கடந்து வந்த பாதையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். தமிழ் சினிமாவிற்கென ஆய்வு நூல்கள் எதுவும் எனக்கு தெரிந்து அதிகம் இல்லை. நிறைய துணுக்கு (trivia) செய்திகள் படிப்பேன். அதனால் ஒரு உபயோகம் இல்லையென்றாலும், நண்பர்கள் வட்டாரத்தில் out-of-touch-ஆக உணராமல் இருக்க முடிகிறது.
7.தமிழ்ச்சினிமா இசை?
நான் பெரிய இசை ஆர்வலன் இல்லை. ஆஹா சிற்றலையில் வைரமுத்து போன்றவர்களின் விளக்கங்களுடன் பாடல்கள் கேட்க பிடிக்கும். கண்ணதாசனின் பாடல்களின் எளிமை மிகவும் ஆச்சரியகரமானது. மற்றபடி 'இளையராஜா அவ்வளவுதான் காலி. ரஹ்மான் சுட்டுப் போட்ட பாடல்' போன்ற விவாதங்களை முற்றிலும் தவிர்த்து விடுவேன்.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
இந்தியப் படங்கள் என்றால் தமிழைத் தவிர பெரும்பாலும் மலையாளமும், இந்தியும்தான் நான் பார்த்த பிற மொழி திரைப்படங்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய வங்காளப் படங்கள் பார்த்திருக்கிறேன். மற்ற இந்திய மொழிப் படங்களில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. இந்தியாவிற்கு வெளியே பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள்தான். ஒரு சில இரானியப் படங்களை குறித்து வைத்திருக்கிறேன். சமீபத்தில் பார்த்த படங்களில் அதிகம் தாக்கம் ஏற்படுத்திய படங்கள் என்றால் Taare Zameen par என்ற இந்திப் படமும், Roshomon என்ற ஜப்பானிய படமும், Lust, Caution என்ற சீனப் படமும் சொல்லலாம். பெரும்பாலும் Fish called Wanda போன்ற காமெடிப் படங்களையே விரும்புகிறேன்.
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நேரடித் தொடர்பு கண்டிப்பாக கிடையாது. ஒரு காலத்தில் சினிமா பார்ப்பதினால் நேர விரயம் அதிகம் என்று வைராக்கியமாக சினிமா பார்க்காமல் இருந்ததுண்டு. ஆனால் இப்பொழுதும் விஷுவல் மீடியம் மேல் உள்ள தீவிர ஈடுபாட்டால் நாகேஷ் குக்குனூர் மாதிரி ஏதாவது முயற்சி செய்யும் ஆசை இருக்கிறது. அட ஆசைப்பட கூடவா வெட்கப் படுவது?
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தமிழ்சினிமா பெரும்பாலும் விடலைப் பருவத்து இளைஞர்களையும், பெண்களையும் மட்டுமே நம்பியிருக்கிறது. வெகு சில படங்களே எல்லாருக்கும் விருந்தாக அமைகிறது. வணிக எதிர்காலம் பிரகாசமாகத்தான் இருக்கிறது. கலாபூர்வமான முயற்சிகளின் நிலைதான் கேள்விக்குரியதாக இருக்கிறது. மண்வாசனையோடு வரும் படங்களும் கூட வன்முறையை பெருமளவிற்கு நம்பியிருப்பது கவலைக்குரியது.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
ஓராண்டு என்பது குறுகிய இடைவெளிதான். டிவிக்கள் கொஞ்சம் திணறினாலும் சமாளித்து விடுவார்கள். சினிமா பற்றி படிக்காமல் கொஞ்சம் போரடித்தாலும் ஓராண்டு கழித்து சேர்த்து வைத்து குமுறி குமுறி எடுத்து விட மாட்டார்களா என்ன... மெள்ளப் படித்துக் கொள்ளலாம்.
இந்தத் தொடர் விளையாட்டில் இன்னமும் 5 பேரை அழைக்க வேண்டுமாம். இப்பொழுது பதிவுலகில் பெருந்தலைகள் பலரும் பங்கேற்பதால் இரா முருகன், ஞாநி, ஜெமோ, சாரு, எஸ் ரா , பாரா போன்றோரையும் கோர்த்து விட ஆசைதான். அதிகம் ஆசைப்படாமல், நாம் கூப்பிட்டால் குறைந்தபட்சம் அழைப்பை படித்து பார்க்கும் நெருக்கத்தில் இருக்கும் ஐந்து பேர் இதோ.
முதலில் கப்பிப் பயலைக் கூப்பிடலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தம்பி ஏற்கெனவே கூப்பிட்டு விட்டார்ப் போல.
தருமி - நமக்கு முந்தைய தலைமுறை. நல்லதொரு சினிமா ரசனையாளர்.
வளர்மதி - இவர் எழுத்து, சினிமா, டாக்குமெண்டரி, கருத்தரங்குகள் என்று பலதரப்பட்ட தளங்களில் இயங்கும் மனிதர். நாம் அழைத்தால் தொடர்விளையாட்டில் பங்கேற்பார் என்ற ஒரு நம்பிக்கைதான்.
இலவசக் கொத்தனார் - நகைச்சுவைப் படங்களின் ரசனனயாளர். அவ்வப்பொழுது சில ஃப்ரெஞ்சுப் படங்களைப் பற்றி குறிப்பிட்டு ஆச்சர்யப் படுத்துவார்.
உஷா - இணையத்தில் பிரபலமான மற்றுமொரு எழுத்தாளர். இவருடைய சித்தப்பா ஒருவர் திரைத்துறையில் பிரபலமாக இருப்பதால் நேரடி பங்களிப்பு அனுபவம் இருக்கலாம். :-)
ஜி இராகவன் - சினிமா, திரை இசைப் பற்றிய ஏகப்பட்ட செய்திகள் பதிந்திருக்கிறார். இவர் இயக்குநராக சில சமயம் கனவு கூட கண்டு கொண்டிருந்தார்.
9 மறுமொழிகள்:
சினிமாப் பத்தி நானா? சரியான ஜோக்தான்!
இப்போ குறுக்கெழுத்து டயமாச்சே. அதுக்கு அப்புறம்தான் இது. ஒக்கேவா?
//இப்போ குறுக்கெழுத்து டயமாச்சே. அதுக்கு அப்புறம்தான் இது. ஒக்கேவா?//
குறுக்கெழுத்து அளவிற்கு கஷ்டமா என்ன? சட்டுன்னு போட்டாத்தானே அடுத்தவங்களும் உற்சாகமா தொடருவாங்க :-)
சினிமாவுக்கும் எனக்கு உள்ள தூரம் வெகு அதிகம். இன்னும் நாக்க முக்க பாட்டு கேளாத ஜென்மம் நான் :-)
//நாக்க முக்க பாட்டு கேளாத//
இலந்தை பழம் கேட்டிருப்பீங்களே? :-))
நேரம் இருக்கும்போது உங்கள் அனுபவங்களை எழுதி சங்கிலியை தொடருமாறு விண்ணபித்துக் கொள்கிறேன்.
//இப்பொழுதும் விஷுவல் மீடியம் மேல் உள்ள தீவிர ஈடுபாட்டால் நாகேஷ் குக்குனூர் மாதிரி ஏதாவது முயற்சி செய்யும் ஆசை இருக்கிறது. அட ஆசைப்பட கூடவா வெட்கப் படுவது?//
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.. எனக்கு நினைவில் தெரிந்து யாரும் நாகேஷ் குக்குனூர் பற்றி பதிவுகளில் எழுதியதாக ஞாபகம் இல்லை. படிக்காமலும் இருந்திருக்கலாம். அவரைப்பற்றி நீங்கள் எழுதுங்கள்.
அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்தாச்சுல்ல :)
தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் குறித்து உங்கள் கருத்தும் ஆதங்கமும் நியாயமானதுதான். ஆனால் அதுதான் விதியாக இருக்க முடியுமா.மக்களின் ரசனையை உயர்த்துவதோ, பக்குவப்படுத்துவதோ சினிமாக்காரர்களின் காரியம மட்டுமல்ல. உங்களைப் போன்றோரின் சிந்தனைகள் கூட எதோ ஒரு பங்கு செய்யலாம். சிறுதுளிதானே பெருவெள்ளம். நம்பிக்கைதான் முக்கியமாகிறது. ரொஷாமான் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.
தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் குறித்து உங்கள் கருத்தும் ஆதங்கமும் நியாயமானதுதான். ஆனால் அதுதான் விதியாக இருக்க முடியுமா.மக்களின் ரசனையை உயர்த்துவதோ, பக்குவப்படுத்துவதோ சினிமாக்காரர்களின் காரியம மட்டுமல்ல. உங்களைப் போன்றோரின் சிந்தனைகள் கூட எதோ ஒரு பங்கு செய்யலாம். சிறுதுளிதானே பெருவெள்ளம். நம்பிக்கைதான் முக்கியமாகிறது. ரொஷாமான் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்.
இந்த சினிமா சங்கிலி நாகார்ஜுன் துவங்கி வைக்க, காட்டுத்தீ போல் பதிவுலகில் பற்றிக்கொண்டு விட்டது. நாகர்ஜுன் சொல்வதையும் கேட்க இவ்வளவு பெருங்கூட்டம்; Thats cinema and Tamils for you. நிற்க.
நிறைய பதிவுகள் இந்த சங்கிலியில் படித்தாலும், இதுவரை உங்கள் பதிவு மிக நேர்த்தியாக இருக்கிறது. வளர் நிச்சயம் எழுதவேண்டும் என்பது ஆசை. அய்யனாரும் இன்னொரு முக்கியமான, படிக்கவேண்டிய பதிவர். யாராவது அழைத்தார்களா தெரியவில்லை. நானெல்லாம் இதில் ஜ்யோவ்ராம் கட்சி. Outside the off stump and leave it alone.
அனுஜன்யா
அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி ஸ்ரீதர்!!
//இந்த பட்டியலில் உச்சத்தில் இருப்பது 'மகாநதி'. மசாலாத்தனங்கள் இருந்தாலும், தஞ்சாவூரிலிருந்து கொல்கத்தா வரை அலைக்கழிக்கப்பட்டு தூக்கத்தில் பெனாத்தும் காவேரி உலுக்கி விட்டாள் மனதை.//
Repeettu !!
//நாகேஷ் குக்குனூர் மாதிரி ஏதாவது முயற்சி செய்யும் ஆசை இருக்கிறது. அட ஆசைப்பட கூடவா வெட்கப் படுவது?//
இயக்குநர் ஸ்ரீதர்!! all the best
அனுஜன்யா,
ஸ்ரீதரை அழைத்த அதே பதிவில் அய்யனாரையும் அழைத்துவிட்டேனே!
Post a Comment