November 26, 2008

7 திரைப்படங்கள்

அவ்வப்போது ஏதாவது ஒரு திரைப்படத்தை பின்னிரவில் பார்ப்பது சமீபத்திய வழக்கமாகி விட்டது. இந்த genre என்று இல்லாமல் ஏற்கெனவே பார்த்தவர்களின் சிபாரிசை மட்டும் வைத்துக் கொண்டு படங்களை தேடிப் பிடித்து பார்த்து கொண்டிருக்கிறேன். சமீபத்தில் பார்த்த ஏழு படங்களைப் பற்றி குட்டி விமர்சனங்கள். மற்ற தகவல்களுக்கு விக்கிபீடியாவை அணுகவும்.

The Lives of Others (German) சென்ற வருடத்தின் சிறந்த வெளிநாட்டுப் படமாக அகாடமி விருது வாங்கியப் படம். இதன் விருதுகள் பற்றி தெரியாமல் ஒரு த்ரில்லர் படம் என்றுதான் பார்க்க ஆரம்பித்தேன். பெர்லின் சுவர் வீழ்வதற்கு முன்னர் கிழக்கு ஜெர்மனியின் சோஷியலிச அரசாங்கத்தின் பின்புலத்தில் அருமையான ஒற்றர் / காதல் கதை. Gert Weisler என்னும் ரகசிய போலிசாக வருபவரின் உணர்ச்சி காட்டாத முகம் ஒற்றன் பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தம். வெகு நுணுக்கமாக காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். தான் பெரும் நம்பிக்கை வைத்திருக்கும் சோஷலிசம் ஆட்சியாளர்களால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று புரிந்து கொண்டாலும் தனது வேலையை தொடர்ந்து செய்கிறார். மிகமிக மெதுவாக தான் கண்காணிக்கிறவர்கள் மேல் பரிதாபம் கொண்டு சிற்ச்சில செய்திகளை அரசாங்கத்திடமிருந்து மறைக்கிறார். ஆனாலும் தனது சகா மற்றும் மேலாளரின் சந்தேகத்திற்கு இடமாகி உப்புசப்பில்லாத வேலைக்கு மாற்றப்பட்டு... மிகவும் அழகாக விரிந்து கொண்டே போகிறது கதை. இந்தப் படத்தைத் பார்த்துவிடு தொடர்ந்து பெர்லின் சுவர் வீழ்ந்ததை ஒரு முறை மனக்கண்ணில் நினைத்துப் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறது.

Manhattan Murder Mystery (ஆங்கிலம்) கச்சிதமான கதைக்கு ஒரு உதாரணம். Woodey Allen-ஐ பற்றி நிறைய படித்திருந்தாலும், இதுதான் அவர் நடித்ததில் நான் பார்த்த முதல் படம். மனிதர் காமெடியில் பின்னி பெடலெடுக்கிறார். பல்வேறு நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அவர் உளறுவது மிகவும் சிரிப்பாக இருக்கும். நடு இரவில் மனைவி பக்கத்து அபார்ட்மெண்டில் துப்பறிய போகும்போது மனைவியை தடுக்க முயலாமல் புலம்பிக் கொண்டே பின்னால் அவரும் வந்து அங்கு இருக்கும் பீங்கான் பொம்மையை உடைத்து, சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிறது. கமல்ஹாசன் நிறைய உடி ஆலன் படங்கள் பார்த்திருக்கிறார் என்பது ‘பஞ்ச தந்திரம்’ போன்ற படங்களில் தெரிகிறது. மண வாழ்க்கையில் போரடித்துப் போயிருக்கும் மனைவிக்கும், பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கொலைக்கும், நடுவில் ஊசலாடுவது தனது திருமண வாழ்க்கை என்று உணர்ந்து கொண்டு மனிதர் படாத பாடு படுகிறார். அவர் மனைவி கேரோலாக Diane Keaton. இருவரும் பேசும்போது கணவன் மனைவி உறவின் உரிமையையும்,அலுப்பையும் அழகாகவே காண்பிக்கிறார்கள். கடைசி காட்சி மிகவும் டிராமாத்தனமாக இருந்தாலும், சின்னச் சின்ன வசனங்களில் தொடர்ந்து சிரிப்பை வரவழைக்கிறார்கள்.

Indiana Jones and the Kingdom the Crystal Skull (ஆங்கிலம்) முந்தைய இண்டியானா படங்களான ரைடர்ஸ் ஆஃப் த லாஸ்ட் ஆர்க், லாஸ்ட் க்ருஸேட் போன்று நூறு சதவீத ஈர்ப்பு இல்லாவிட்டாலும், வேற்று கிரக வாசிகள், மர்ம கோவில்கள், அணுஆயுத சோதனை என்று அருமையாகவே கதை பண்ணியிருக்கிறார்கள். ஹாரிஸன் தாத்தா கொஞ்சம் சோகையாக சிரிக்கிறார். ஆனால் இந்த வயதிலும் விடாமல் சாட்டையை சுண்டி சண்டை போடுகிறார். முந்தைய படங்களில் போடும் சண்டையை விட இதில் கொஞ்சம் குடும்ப சண்டையும் போடுகிறார். ’என்ன பேரு இது’ என்று கிண்டலாக கேட்கும்போதும், Mutt தனது பையன்தான் என்று தெரிந்தது ‘ஏன் ஸ்கூல் படிப்பை பாதியில நிறுத்தின’ என்று கோபமாக கத்துவதும் இண்டியானா ஜோன்ஸின் பாத்திரத்தோடு ஒன்றிப் போக முடிகிறது. Mutt சீப்பை நீரில் நனைத்து தலை வாரும் மேனரிசம் 80-களில் இந்தியாவில் கூட இருந்தது என்று நினைக்கிறேன். இண்டியானா கதைகளில் எப்பொழுதும் அவருக்கு ஒரு ‘வாழ்வா / சாவா’ பிரச்சினை வந்து, அதிலிருந்து அவர் சாணக்கியத்தனமாக தப்பிக்கும் காட்சிகள் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் பல காட்சிகள் மம்மி போன்ற படங்களில் ஏற்கெனவே வந்துவிட்டது போலிருப்பதால் கொஞ்சம் பிரமிப்பு குறைவுதான்.

Monsoon Wedding (ஹிந்தி / ஆங்கிலம்) மீரா நாயரின் எல்லா படங்களையும் விடாமல் பார்த்திருக்கிறேன். Johnny Depp-ஐ வைத்து ‘சாந்தாராம்’ என்று ஒரு படம் தயாரிப்பில் இருக்கிறது. Monsoon Wedding படம் வெளியான போது வசுந்தரா தாஸின் திருமண அலங்காரம் மிகவும் பிரபலம். நான் இப்பொழுது பார்த்தது இரண்டாம் முறை. காஸ்மோபாலிட்டன் காதல் சிக்கல், தூபே - அலிஸின் வெகுளிக் காதல், உயர் மத்தியதர குடும்பத்து கொண்டாட்டங்கள், உறவு சிக்கல்கள், குழந்தைகளை தவறாக பயன்படுத்துவது (child abuse), விரிவான கல்யாண சடங்குகள் என்று என்று பெரிய கேன்வாஸை வைத்துக் கொண்டு அழகாக கதை புனைந்திருக்கிறார் என்று தெரிகிறது. நான் முதலில் பார்த்தபோது என்னைக் கவர்ந்தது நஸ்ருதீன் ஷா மற்றும் தூபேவாக வரும் விஜய் ராஸ் (Vijay Raaz). ஆனால் ரஜத் கபூரின் subtle நடிப்பு அப்பொழுது கவனம் பெற்றிருந்தாலும் அதிகமாக கவரவில்லை. 6-7 வருடங்களில் அவரின் மற்ற படங்களான ’தில் சாதா ஹை’,‘மிக்ஸட் டபுள்ஸ்’, ‘பேஜா ஃப்ரை’ போன்ற படங்களைப் பார்த்துவிட்டு இப்பொழுது மீண்டும் இந்தப் படத்தைப் பார்க்கும் ஒன்று புரிகிறது. அமெரிக்கையான உடல்மொழியும், ஊடே தெறிக்கும் ஒரு குள்ளநரித்தனமும், குழந்தை போன்ற முகபாவமும் வைத்துக் கொண்டு முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தை காட்டியிருக்கிறார். ஷெஃபாலி ஷெட்டியின் அகண்ட கண்கள் கவிதையாக நடிக்கின்றன. சில காட்சிகளின் இறுக்கம் நம்மையும் கட்டிப் போடுகிறது. நஸ்ருதீன் ஷா ’என்ன செய்வதென்றே தெரியவில்லை’ என்று சொல்லும்போது நாமும் அப்படியே உணருகிறோம். இறுதிக்காட்சியில் தூபேவும் அலிஸும் எல்லோரோடு நடனத்தில் சேர்ந்து ஆடும்போது நம்மையும் சந்தோஷம் பற்றிக் கொள்கிறது. திருமண வேலைகளினால் ஏற்படும் அழுத்தத்தையும் திருமண இரவில் குடும்ப உறுப்பினர்களோடு நடனமாடும் சந்தோஷத்திலும் நஸ்ருதின் ஒரு இம்மியளவு கூட மாறாமல் இயல்பாக இருக்கிறார். திருமண வீட்டைச் சுற்றி நடக்கின்ற கதையில் ஆங்காங்கே இடைச்செருகலாக மும்பையின் தெருக்களை பின்னனி இசையோடு வருவது அழகான ஹைக்கூ.

சஞ்சாரம் (மலையாளம்) யதேச்சையாக சிக்கிய படம், மிகப்பெரும் பிரமிப்பைத் தந்தது. Ligy J Pullapally இயக்கியிருக்கும் இந்தப் படம் இந்திய திரைப்படங்களிலே மிக தைரியமான படம் (bold film) என்று சொல்லலாம். கேரளத்தின் உள்ளடங்கிய ஒரு சிறு கிராமத்தில் சிறு வயது சிநேகதிகள் கிரணும், டிலைலாவும். இருவரும் ஒன்றாகவே விளையாடி, பழகி வளர்ந்து வருகின்றனர். பள்ளியில் படிக்கும்போது அவர்களை அறியாமலேயே ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படுகின்றனர். இது வெளியில் தெரிந்துவுடன் அந்த சிறு கிராமம் அதை எப்படி எதிர்கொள்கிறது என்பதை மிக இயல்பாக சொல்கின்றார் இயக்குநர். இந்த முன்னறிவிப்பை படித்தததும் ஒருவித அவநம்பிக்கையோடுதான் படத்தை பார்க்க துவங்கினேன். இம்மாதிரியான bold படங்கள் படைக்கப்படும்போது அமெச்சூர்தனமாக சிதைந்து போகும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஆச்சர்யமாக நன்றாகவே எடுத்திருந்தார். இத்தனைக்கும் லிஜி ஒரு பெண் என்று தெரிகிறது. விக்கிபீடியாவில் அவரைப் பற்றிய குறிப்புகள் இல்லை. கேரளத்தில் பிறந்து பின்னர் சிகாகோவில் வசிப்பதாக தெரிகிறது.

டிலைலா முதலில் கிரணோடு பழகும்போது பிரியவே மாட்டேன் என்று சத்தியம் செய்கிறார். ஆனால் அவருக்கு சமூகத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை. பிறகு தனது அம்மா நிச்சயிக்கும் கட்டாய திருமணத்திற்கு உடன்படுகிறார். டிலைலாவின் பாட்டி பாத்திரத்தின் வடிவமைப்பு மிகவும் ஈர்த்தது. அவரோடு டிலைலாவின் நேசம் அழகான ஒரு கவிதை. ஒரு பெண்ணான கிரண் இன்னொரு பெண்ணை காதலிக்கும் செய்தி கேள்விப்பட்டவுடன் கிரணின் அம்மா ‘யு ஆர் சோ அன்னேச்சுரல்’ என்கிறார் கோபமாக. கிரண் பதிலுக்கு ‘ஐ அம் நாட் அந்நேச்சுரல்’ என்கிறார். இந்த ஒரு வசனத்தில் படத்தின் சாராம்சம் அடங்கிவிடுகின்றது. கிரண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்கும் கோவிந்தன் மாமாவும் இப்படிப்பட்ட பாலின குழப்பத்தில் இருக்கிறார் என்று ஓரிரெண்டு வசனங்கள் மூலமாக தெரிகிறது. இறுதியில் கூட்டிலிருந்து பறக்கும் பட்டாம்பூச்சி போல் கிரண் நடந்து செல்வது போல் காண்பிக்கிறார்கள்.

ஆமிர் (ஹிந்தி) மும்பையின் தற்போதைய சூழலில் இந்தப் படம் மிகவும் முக்கியமானதாகி விடுகிறது. கோவிந்த் நிஹ்லானியின் தேவ் பேசப்பட அளவிற்கு இந்தப் படம் பேசப்பட்டதா என்று தெரியவில்லை. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது இசை. முடிவு ஊகிக்க கூடியதாக இருந்தாலும் நடித்தவர்கள் எல்லாரும் மிகவும் தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டியிருந்தார்கள். வசனங்கள் மிகவும் கூர்மை. தவறவிடாமல் பார்க்கப்பட வேண்டிய ஒரு படம்.

வாரணம் ஆயிரம் (தமிழ்) இந்தப் பட்டியலிலேயே, அதிக செலவு செய்து பார்த்ததும், அதிக நேரம் செலவழித்து பார்த்ததும், அதிக அளவில் ஏமாற்றம் அடைந்ததும், கொஞசம் சந்தோஷம் அடைந்ததுமான படம் இதுதான். பாஸ்டன் பாலா ஒரு நல்ல தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். எனக்கு கௌதம் மேனம் மேல் உள்ள ஒரு நம்பிக்கை அவர் சினிமாவிற்குண்டான தேய்வழக்குகளை (cliches) அதிகம் பயனபடுத்த மாட்டார் என்பது. ஆனால் பாருங்கள் அவரே சில தேய்வழக்குகள் உருவாக்கி விடுவார் போலிருக்கிறது. இன்னும் இரண்டு படங்களில் இவரும் நம்மை சலிப்படைய வைத்துவிடுவார்ப் போல. தந்தையை ஆராதிக்கும் மகனாகவும், மகனுக்கு நல்வழிகாட்டும் தந்தையாகவும் சூர்யா இரட்டை வேடத்தில் ஜொலிக்கிறார். கூட அன்பான அம்மாவாக சிம்ரன். அன்பான குடும்ப உறவுகளை அழகாகவே சொல்கிறார்கள். தேவையில்லாமல் எங்கெங்கோ ஜம்படித்து படம் இறுதியில் சிம்ரன் வாயால் ‘வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரணன் நம்பி’ போல சூர்யா வந்து திருமணம் செய்ததாக சொல்லி தலைப்பை நியாயப்படுத்துகிறார்கள். அவர் செய்த லைப்ரரியன் விடு தூதுவிற்கு எல்லாம் ஆண்டாளின் பாசுரம் பில்டப் கொடுப்பது கொஞ்சம் அதிகமாகத்தான் படுகிறது.

9 மறுமொழிகள்:

ambi said...

ரொம்ப அவசரமா எழுதின மாதிரி இருக்கு.

உங்க வழக்கமான ஆங்கில பட அலசல்கள் மாதிரி இல்லையே?

எனக்கு மட்டும் தான் இப்படி தோணுதா? ;))

Radha Sriram said...

நல்ல தொகுப்பு ஸ்ரீதர்.. ஆமிர் ல எனக்கும் இசை ரொம்ப பிடிச்சது.சுஃபி டைப் இசை இல்ல??...ஜோதா அக்பர்ல "க்வாஜா மேரெ க்வாஜா" மாதிரி.நீங்க சொல்லியிருக்கற வேற எந்த சினிமாவும் பார்த்தது இல்ல.குறிச்சு வச்சுக்கரேன்.:):)

கொத்ஸ் வந்து "என்ன வோய் உலக சினிம்மாவ பத்தியெல்லாம்ம் எழுதி தள்ளியிருக்கீரு?" அப்படீனுட்டு போவாரு பாருங்க...:)

Sridhar Narayanan said...

வாங்க அம்பி சார்!

மி த பர்ஸ்டு போட இன்னும் ‘ராப்’கிட்ட ட்ரெயினிங் எடுக்கலையா? :-)

அதான் விக்கிபீடியா லிங்கை கரெக்டா போட்டுட்டமில்ல :-)

சும்மா ஒரு தொகுப்பா போடத்தான்.

வாங்க ராதா,

அதுதான் சூஃபி இசையா? நல்லா இருந்தது. உருதுன்னு தெரிஞ்சது.

மத்தப் படங்கள் எதுவுமே பாக்கலையா? வாரணம் ஆயிரம் கூடவா? சூர்யா இங்க வந்தி ‘தென்றல்’ஓட சேந்து படம் பாத்தாராமே... தெரியாதா உங்களுக்கு? :-)

venkatramanan said...

//கமல்ஹாசன் நிறைய உடி ஆலன் படங்கள் பார்த்திருக்கிறார் என்பது ‘பஞ்ச தந்திரம்’ போன்ற படங்களில் தெரிகிறது//
'ரஜினி, கமல் காமெடியின் வித்தியாசம் என்ன?' என்பதான ஒரு கேள்விக்கு மதன் -
"கமல், உடி ஆலன், ... போன்றவர்களின் படங்களைப் நுணுக்கமாகப் பார்த்து ரசித்து, 'ஓ.கே.இந்த படத்துக்கு இப்படி பண்ணலாம்' என முடிவெடுத்துச் செய்வார். நாம் பிரமிப்போம்! ரஜினியின் கதையே வேறு! மெதுவாக 'கடவுளே' என்று முணுமுணுத்துக் கொண்டே பின்வாங்குவார்! தியேட்டரில் 'தலைவா!' என்று விசில் பறக்கும்!"
எனச் சொல்லியிருந்தார்!
பெரிதாக எதுவும் சொல்லவில்லையென்றாலும், அதை நினைவு படுத்தியதற்கு நன்றி!

அன்புடன்
வெங்கட்ரமணன்

பத்மா அர்விந்த் said...

Have you seen shoot on sight?

Sridhar Narayanan said...

//கமல், உடி ஆலன், ... போன்றவர்களின் படங்களைப் நுணுக்கமாகப் பார்த்து ரசித்து, 'ஓ.கே.இந்த படத்துக்கு இப்படி பண்ணலாம்' என முடிவெடுத்துச் செய்வார்.//

வாங்க வெங்கட்!

உடி ஆலன் மட்டுமில்லை. கமலிடம் நிறைய நடிகர்களின் சாயலை கண்டிருக்கிறேன். ஆனாலும் அவ்வப்போது சில ஸ்பாண்டேனியஸ் பர்ஃபார்மெண்ஸ் கொடுப்பார். மைமகா காமேஸ்வரன், சாகரசங்கமம் பாலகிருஷ்ணன், சுவாதி முத்யம் சிவசு, மீண்டும் கோகிலா யக்ஞராமன் மாதிரி :)

வாங்க பத்மா!

Shoot on Sight DVD இன்னமும் வரவில்லைப் போல. நீங்கள் பார்த்துவிட்டீர்களா?

யு.எஸ்.தமிழன் said...

ஸ்ரீதர்ஜி -

விமர்சனத்திற்கு இந்த ஃபார்மட் நல்லா இருக்கு. ஒரு படத்துக்கு ஒரு பாரா நல்லா இருக்கு, ஒரு நல்ல அறிமுகம் மாதிரி (ஆனாலும் சில இடங்கள்ல உணர்ச்சிவசப்பட்டு ஜவ்வீட்டீங்க :)).

சஞ்சாரம், Lives of Others பார்க்க முயற்சி செய்யறேன். வாரணம் டிவிடி வந்ததுக்கப்புறம்தான்.

Woody எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகர்.என் நண்பர்கள் சிலர் அவருடைய genre புரியறதில்லை அப்படின்னு குறைபடுவாங்க. என்னை பொறுத்தமட்டில் he is the genre என்பதை உள்வாங்கிக்கொண்டால் அவரை நன்றாக ரசிக்கமுடியும்.

அமிர் பற்றி எழுதியிருக்கீங்க - கூடவே Wednesday, Mumbai Mere Jaan பார்த்திடுங்க. இத மூன்றையும் ஒரே வாரத்தில் பார்த்தேன் - somehow these three movies got registered as a trilogy in my inner conscience and I do believe it is in fact a trilogy.

Rajat Kapoor - நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல இயக்குனர்கூட. Vinay Pathak, Ranvir Sheroy, Irfan Khan, Harsh Chhaya, Konkona sen என்று அடுத்த தலைமுறைக்கான நல்ல நடிகர்கள் வடக்கே உதயமாவது மகிழ்ச்சி அளிக்கிறது. Rajat Kapoor ஏனோ எனக்கு க்ரீஷ் கர்னாட்டை நினைவுறுத்துகிறார்.

Sridhar Narayanan said...

வாங்க‌ யுஎஸ் த‌மிழ‌ரே,

//ஒரு படத்துக்கு ஒரு பாரா நல்லா இருக்கு, ஒரு நல்ல அறிமுகம் மாதிரி//

ந‌ன்றி. விக்கிபீடியாவில் ஏற்கென‌வே நிறைய‌ த‌க‌வ‌ல்க‌ள் தொகுக்க‌ப் ப‌ட்டிருக்கு.

//சஞ்சாரம், Lives of Others பார்க்க முயற்சி செய்யறேன். வாரணம் டிவிடி வந்ததுக்கப்புறம்தான்.//

சஞ்சாரம் ஒரு ச‌ர்ப்ரைஸ் பேக்கேஜ். ந‌ல்ல‌தொரு முய‌ற்சி.

//he is the genre என்பதை உள்வாங்கிக்கொண்டால் அவரை நன்றாக ரசிக்கமுடியும். //

ந‌ல்லாச் சொன்னீங்க‌. :))

// I do believe it is in fact a trilogy.//

Wednesday பாக்க‌னும்னு ப்ளான் ப‌ண்ணியிருக்கேன். மும்பை மேரிஜானையும் குறிச்சுக்கிறேன்.

//Vinay Pathak, Ranvir Sheroy, Irfan Khan, Harsh Chhaya, Konkona sen //

கே கே மேன‌ன், ராகுல் போஸ், ர‌குவீர் யாத‌வ் விட்டுட்டிங்க‌. இவ‌ங்க‌ எல்லாம் அடுத்த‌ ஜென‌ரேஷ‌ன் இல்ல‌யே... வின‌ய் எல்லாம் ஏற்கென‌வே ஃபீல்டில் ப‌ல‌ வ‌ருஷ‌மா ப‌ல்வேறு அவ‌தார‌ம் எடுத்திட்டிருக்காரே. பேர‌ல‌ல் சினிமாவின் முக்கிய‌மான‌வ‌ர்க‌ள் என்று சொல்ல‌லாம். கிரீஷ் க‌ர்னாட் ஒரு ப‌டைப்பாளியாக‌ க‌வ‌ர்ந்த‌தை விட‌ ந‌டிக‌ரா அவ்வ‌ள‌வு சோபிக்க‌லையோன்னு ஒரு எண்ண‌ம் உண்டு. ர‌ஜ‌த் மிக‌த் திற‌மையான‌ ந‌டிக‌ர்.

வண்ணத்துபூச்சியார் said...

நல்ல படங்களின் அறிமுகத்திற்கு நன்றி ஸ்ரீதர்.

நம்ப லிஸ்டையும் பாருங்க.

நிறை / குறை இருந்தா சொல்லுங்க.