இந்த மாதிரிதான் நான் ஒன்றை நினைத்து எழுத வேறு ஒன்று வாசகர்களை சென்றடைந்து விடுகிறது. இதுவரை இந்த தளத்தில் நான் எழுதிய சில சிறுகதைகளைப் பற்றின சில குறிப்புகள் எழுதி வைக்கிறேன் இங்கே.
வெடிப்பு
நான்கைந்து வருடங்களுக்கு முன்னர் Ryze-ல் அங்கத்தினராக இருந்தேன். நண்பர்கள் சிலர் என் வலைப்பக்கத்தில் ஏதாவது எழுதி வைக்கக் கூடாதா என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது படித்துக் கொண்டிருந்த A brief history of the time-ன் தாக்கத்தில் எழுந்த சிறு பொறிதான் இது. மிகவும் சிறிய கதை. நண்பர் யோசிப்பவர் இதன் பாதிப்பில் எழுதியதாக ஒரு அருமையான கதை எழுதியிருந்தார்.
கடவுளும் கந்தசாமியும்
கண்ணபிரான் ரவிசங்கரின் மாதவி பந்தல் இடுகைகளுக்கு தொடர் வாசகன் நான். அவரின் இறைவனுக்கு மோட்சம் கிடைக்குமா? என்ற பதிவை ஒட்டி ஒரு நீண்ட பின்னூட்டம் இட்டு தனி மெயிலில் அனுப்பியிருந்தேன் அவருக்கு. அதை தொடர்ந்து 'இம்மை / மறுமை' தத்துவத்தின்பாற் எழுதப்பட்ட கதை. இந்த தலைப்பிற்காக கதையின் பாத்திரமும் கந்தசாமியாகிவிட்டார் :-)
சாயா சந்திரனின் பதிவுகள் சில...
சிறில் அலெக்ஸ் ஒரு அறி-புனை போட்டி அறிவித்திருந்த நேரம் நாமும் அதில் பங்கேற்கலாமே என்ற ஒரே நோக்கத்தில்தான் இந்த வலைத்தளமே துவங்கப் பட்டது. அந்த போட்டிக்காக எழுதப்பட்ட முதல் சிறுகதை இது. இதன் முதல் வடிவம் வேறு மாதிரி எழுதி நண்பர்கள் பெனாத்தல் சுரேஷ், இலவச கொத்தனார் இருவருக்கும் அனுப்பி, தொந்தரவு தாங்காமல் அவர்களும் 'பாவமே' என்று கருத்தெல்லாம் சொல்லியிருந்தார்கள். கடைசியில் கொஞ்சம் வடிவம் மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. சூரியனின் மனைவி பெயர் சாயா. அதாவது நிழல். அதே போல் இந்தக் கதையின் நாயகி சாயாவும் நிஜமல்ல. இந்தக் கதையில் இருக்கும் பதிவுகளுக்காக கொஞ்சம் மெனக்கெட்டு ப்ளாக் போன்று வடிவமைத்து லிங்க், டேக் (tag) எல்லாம் சரியாக கொடுத்திருந்தேன். கமெண்டுகள் எண்ணிக்கை ஒவ்வொரு பதிவிற்கும் கூடிக் கொண்டே போகும். இப்பொழுது படித்தாலும் இறுதியில் ஒரு 'திடுக்' ஏற்படுகிறது.
மீண்டும் ஒரு காதல் கதை
'கதாசிரியன் எழுதும் கதை அவனைத் தாண்டி தன்னைத்தானே எழுதிக் கொள்கிறது' இதுதான் நான் பெனாத்தல் சுரேஷிடம் முதலில் சொன்னது. அவர் 'எழுதுங்க! சூப்பரா வரும்' என்று ஊக்குவிக்க தொடர்ந்து இரண்டு மூன்று வரைவுகள் மாற்றி மாற்றி இந்தக் கதை எழுதப்பட்டது. இதைப் படித்து பலரும் புரியவில்லை என்று சொல்லிவிட்டார்கள். பஞ்சதந்திர கதைகள் போல ஒரு வடிவம். எழுத்தாளன் ஒரு தானியங்கி கதைசொல்லி நிரலி மூலம் கதை எழுதுகிறான். அந்த கதையின் பாத்திரங்கள் அந்த எழுத்தாளனையே அந்தக் கதைக்குள் இழுத்துவிடுகின்றன. எழுத்தாளன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நேரத்தில் கதை முடிந்துவிடுகிறது. இறுதியில் கதையின் கதையாக ஒரு சின்ன துக்கடா. கதாசிரியனின் உண்மை மனைவி கதையின் பாத்திரமாக தெரிகிறாள். இது வாசகரின் கற்பனையை பலவகையிலும் தூண்டி விடும் வகையில் எழுதப்பட்டது.
இந்தக் கதையை ஒரு வாசகனாக வாசித்த எனக்குத் தோன்றிய ஒரு விவரணை '7 வருட அலுப்பில் முறிந்து போக இருந்த திருமண உறவை புதுப்பிக்க கதாசிரியன் தன் கதையை தானே எழுதுகிறான். அதில் தனது மனைவியின் பழைய காதலனாக அவனே ஒரு புதிய வடிவமெடுக்கிறான்'. :-) இன்னமும் சில விவரணைகளும் சாத்தியமே என்று தோன்றுகிறது.
(இப்ப மட்டு என்ன புரிந்தது என்று கேட்கிறீர்களா? :-)))
ஆண்டிரமீடா ஆதி மனிதர்கள்
வழமையான பாணியில் எழுதப்பட்ட அறிவியல் புனைவு என்று சொல்லலாம். புதுமையாக யோசித்தது பூமி 2.0 மேம்படுத்துதல்:-). நண்பர் ஜ்யோவ்ராம் சுந்தர் கூகுள் ரீடரில் பாராட்டு குறிப்போடு பகிர்ந்தது (Share) மகிழ்ச்சியாக இருந்தது.
ரசவாதம் - சில குறிப்புகள்
ஜெயமோகன் தொடர்ச்சியாக எழுதிய அறிவியல் புனைவுகளை திண்ணையில் படித்திருக்கிறேன். அந்த பாதிப்பில் சிறில் அலெக்ஸின் சிறுகதை போட்டிக்கு நான்காவது கதையாக, இறுதி நாளன்று எழுதி அனுப்பியது இது. நடுவர் ஜெயமோகனேதான். மொத்தம் வந்த என்பத்தி நாலு கதைகளில் இரண்டாவதாக இந்தக் கதையை அவர் தேர்ந்தெடுத்ததது மிகவும் மகிழ்ச்சியான சம்பவம். பைத்தியக்காரன் போன்ற எழுத்தாளர்களும் பாராட்டியிருந்தார்கள். சில நண்பர்கள் சுவாரசியம் கம்மி என்று சொல்லிவிட்டார்கள்.
இரும்பை தங்கமாக்கும் வித்தையான ரசவாதத்தைப் பற்றிய பல்வேறு குறிப்புகள் சித்தர் பாடல்களில் காணக் கிடைக்கின்றன என்று சொல்பவர்கள் உண்டு. இப்பொழுதும் இதனை நம்புவர்கள் இருக்கிறார்கள். இதனைப் பற்றி சற்று ஆராய்ந்து பார்த்ததில் பதினைந்தாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஒரு மருத்துவர் ரசவாதத்தை நிகழ்த்தி காட்டியதாக கதைகள் கிடைத்தன. திரைகடலோடி திரவியம் தேடிய தமிழர்கள் ஜெர்மனி வரை போன மாதிரி கற்பனை செய்து கொண்டு ரசவாதம் பற்றிய சில முக்கிய குறிப்புகள் தமிழகத்திற்கு வந்ததாக அமைக்கப்பட்ட கதை. கதையை ஒரு கடித பாணியில் தொடங்கி முடிவில் ரசவாதம் போன்ற செப்பிடு வித்தைகளினால் மனிதன் மனம் எப்படியெல்லாம் அல்லல்படுகின்றது என்று சொல்லி முடிகிறது. 'எழுதப்படாத கதையைப் பற்றி ஒரு வாசகர் கடிதம்' என்றுதான் இந்தக் கதையை முதலில் அமைத்திருந்தேன்.
பைசல் ஆன பழைய கணக்கு
பள்ளியில் Non-detailed பாடமாக படித்த ஒரு கதை. பெயர் மறந்து போயிற்று. தான் சிறு வயதில் படித்த பள்ளிக்கு மீண்டும் ஒரு மாணவர் வருகிறார். தான் வாழ்க்கையில் தோலிவியுற்றதற்கு காரணம் தனக்கு பாடம் போதித்த ஆசிரியர்களே என்று குற்றஞ்சாட்டி தனது பள்ளிக் கட்டணத்தை திருப்பிக் கேட்கிறார். என்ன செய்வது என்று திகைத்த தலைமையாசிரியர் அந்த மாணவர் வஞ்சக திட்டத்தோடுதான் இப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார் என்று புரிந்து கொண்டு அவருடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்கிறார். அதாவது எல்லா ஆசிரியர்களும் அந்த பழைய மாணவருக்கு மீண்டும் ஒரு பரீட்சை வைக்க வேண்டும். அதில் அவர் தேர்ச்சி பெற்றால் கல்வி கட்டணம் திருப்பியளிக்கப் படமாட்டாது. அந்த தேர்வில் அவர் தோற்றுவிட்டால் பணம் திருப்பியளிக்கப்படும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு கேள்வி கேட்பார்கள். ஆசிரியர் கேட்கும் சுலபமான கேள்வியும், மாணவர் வேண்டுமென்றே முட்டாள்தனமாக சொல்லும் பதிலும், அந்த பதில்தான் சரியான பதில் என்று ஆசிரியர்கள் நிறுவுவதும் செம தமாஷாக இருக்கும். இறுதியில் கணித ஆசிரியர் மட்டும் தான் இரண்டு கேள்விகள் கேட்கப் போவதாக பீடிகை போட்டுவிட்டு ஒரு கனித புதிரை கேட்கிறார். மாணவர் வழக்கம் போல தவறான விடை சொல்ல எல்லா ஆசிரியரும் திகைக்கும் வண்ணம் கணித ஆசிரியரும் அந்த விடை தவறுதான் என்று ஒத்துக் கொள்கிறார். மாணவருக்கு பயங்கர சந்தோஷம். அடுத்து கணித ஆசிரியர் பள்ளி மாணவருக்கு திருப்பி செலுத்த வேண்டிய கல்வி கட்டணம் எவ்வளவு என்று வினவ, மாணவர் உற்சாகமாக கணக்குப் போட்டு துல்லியமான விடையைச் சொல்கிறார். இதைக் கேட்டவுடன் கணித ஆசிரியர் 'இந்த விடை மிகச் சரி. இரண்டு கேள்விகளில் இதுதான் கடினமான கேள்வி. அதை சரியாக சொன்ன மாணவர் தேர்வில் வெற்றி பெறுகிறார்' என்று அறிவித்து விடுகிறார். மூலக் கதை கிடைத்தால் முழுவதுமாக பதிவிடுகிறேன்.
அதே பாதிப்பில் எழுதப்பட்ட கதை. நண்பர் சென்ஷி பாராட்டி இதைப் போலவே ஒரு அனுபவத்தையும் தனது பதிவில் இட்டிருந்தார்.
சவரம் செய்த முகம்
இந்தக் கதையின் வடிவம் கொஞ்சம் வித்தியாசம். இறுதி பத்தியை எடுத்துவிட்டு பார்த்தால் சாதாரண அனுபவ குறிப்பு போலவே எழுதப்பட்டு இருக்கும். கதையை வெளியிட அரைமணி முன்னதாகத்தான் அந்த முடிவு உதித்தது. இந்தக் கதையைப் பற்றி ஒரு நண்பரிடம் 'படித்தியா' என்று கேட்டபோது 'அதில் என்ன படிக்க இருக்கிறது? ஷேவ் செய்யறதைப் பத்தி எழுதியிருக்க' என்று சொல்லிவிட்டு சென்று விட்டார். பல நண்பர்களுக்கு பிடித்து இருந்தது. சிலர் 'விறுவிறுப்பு' குறைவாக இருக்கிறது என்று அபிப்ராயபட்டிருந்தார்கள். நண்பர் யு எஸ் தமிழர் எல்லாரையும் இறுதியில் வில்லனாக ஆக்கிவிடுகிறேன் என்றும் வருத்தப் பட்டிருந்தார்.
ஒரு முத்தத்தைத் தொடர்ந்து...
இதை ஒரு துப்பறியும் கதையாக எழுத திட்டமிடவேயில்லை. ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்லும் நண்பர்கள் தற்செயலாக ஒரு முத்தமிடலை காண நேரிட அதனைத் தொடர்ந்து நடைபெறும் சில சம்பவங்கள். இந்தக் கதையில் நிகழ்பவை எல்லாம் தற்செயலான தொடர்பில்லாத சம்பவங்கள். ஆனால் படிக்கிறவரை தொடர்புபடுத்திக் கொள்ள வைக்கிறது.
i) நண்பர்கள் காலையில் கண்ட சம்பவத்தில் ஒரு பெண் தலையில் ஒரு ஸ்கார்ஃப் அணிந்திருக்கிறாள். அதிலிருந்துதான் பயனம் துவங்குகிறது. அதே ஸ்கார்ஃபைதான் செல்வா டீச்சர் வாங்கிருந்தார் என்பதற்கான தீர்மானமான ஆதாரம் இல்லை. கடையில் வேலை பார்க்கும் பெண் சொல்லும் வசனத்திலும் 'ரெட் உலன் ஸ்கார்ஃப்' என்றுதான் சொல்லப்படுகிறது. மஞ்சள் எம்பிராய்டரி என்றெல்லாம் விரிவான விளக்கம் சொல்லி அதே ஸ்கார்ஃப்தான் விற்பனை ஆனது என்று நிரூபிக்கப் படவில்லை. அதன் சாதகம் குறைவே. அப்படியே இருந்தாலும்...
ii) கடைக்கு பக்கத்தில் இருக்கும் பள்ளி என்பதினால் மட்டுமே ஜோதி ஸ்கூலில் வேலை பார்க்கும் செல்வநாயகி டீச்சர்தான் வாங்கியிருப்பார் என்று தீர்மானமாக சொல்ல முடியாது. வேறு செல்வா டீச்சர் சுற்றுவட்டாரத்தில் இருக்க சாத்தியங்கள் உண்டு.
iii) வாகீசனின் மனைவி செல்வா டீச்சர் என்று எங்கும் சொல்லப்படவில்லை. 'சொல்லு செல்வா' என்று ஒரு முறை போனில் பேசுகிறார். மனைவியோடுதான் பேசினார் என்று சொல்லப்படவில்லை. எங்குமே அவர் மனைவியை 'செல்வா' என்று விளிக்கவில்லை. மனைவி ஜோதி ஸ்கூலில் வேலை பார்க்கிறார் என்று சொல்கிறார். ஸ்போர்ட் டீச்சர் என்று சொல்லவே இல்லை.
iv) பேம்ஃபெல்டின் உள்ளே முதலாளி அம்மா படம் இருக்கிறது என்று டிரைவர் சொல்கிறார். ஆனால் உள்ளே இருப்பது செல்வநாயகி டீச்சரின் போட்டோ மட்டும்தான் என்று சொல்லப் படவில்லை. வேறு படங்களும் இருக்கலாம். அதில் ஒன்று வாகீசனின் மனைவியாக இருக்கலாம்.
v) பேஃபிள்ட்டிலுள்ள படத்தில் செல்வநாயகி டீச்சர் முழுக்கை சட்டை அணிந்து அதை மடித்து விட்டிருக்கிறார். இந்த ஒன்றை மட்டும் வைத்து அவர்தான் முதலில் இருந்த முத்தக் காட்சியிலும் இருந்தார் என்று எப்படி சொல்ல முடியும்?
இம்மாதிரி சம்பவங்களின் தொடர்ச்சியின்மையை கவனமாகவே எழுதியிருந்தேன். ஆனால் அவை தொடர்பாகவும் இருக்க சில சாத்தியங்கள் இருப்பது போலவும் அமைக்கப் பட்டிருந்தன. எல்லா சாத்தியங்களும் கூட்டிப் பார்த்தால் இலட்ச்சத்தில் ஒரு பங்கு கூட தேறாது. இந்தக் கதையை படித்த பெரும்பாலோனோர் அந்தப் பாதையிலேயே பயனம் செய்து முடிவை அணுகியிருந்தார்கள். அந்த வகையில் இது வாசகர்களுக்கு வெற்றிப் பெற்றுக் கொடுத்த கதை :-) பல நண்பர்கள் பாராட்டியிருந்தார்கள்.
இனியும் தொடர்ந்து சில கதை முயற்சிகளை செய்வதாக எண்ணம் இருக்கிறது. அதன் குறிப்புகளையும் பதிவு செய்ய நினைத்திருக்கிறேன்.
13 மறுமொழிகள்:
பதிவுக்கு மேட்டர் பஞ்சம் வரும்போது போட சூப்பர் ஐடியாவா இருக்கே இது!
நான் முன்பு படிக்காமல் விட்டதை படிக்க ஏதுவாய் இருக்கிறது
ஒரு முத்தத்தைத் தொடர்ந்து பற்றி மட்டும் இப்போது...
தொடர்பிருப்பதால்தான் அச்சம்பவங்கள் கதையில் வருகின்றன. இல்லாவிட்டால் வரவேண்டிய தேவையே இல்லையே :) ஆசிரியன் முக்கியமல்ல,பிரதியே முக்கியம் (எழுதப்பட்ட பிறகு).
இப்படில்லாம் கதையின் கதை என்ற பெயரில் பொழிப்புரை எல்லாம் வேண்டாமே மக்கா!
வாங்க சுரேஷ், சுந்தர், முரளிகண்ணன் - வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
சுந்தர்,
//இப்படில்லாம் கதையின் கதை என்ற பெயரில் பொழிப்புரை எல்லாம் வேண்டாமே மக்கா!//
இது எனது வசதிக்காக நானே எழுதிக் கொண்ட குறிப்புகள். அதனல்தான் கதைகளோடு சேர்க்கவில்லை.
//தொடர்பிருப்பதால்தான் அச்சம்பவங்கள் கதையில் வருகின்றன//
அவை ஒரு வெளியூர் பயன அனுபவங்களாக தொடர்பு இருக்கத்தான் செய்கிறது.
//பிரதியே முக்கியம் (எழுதப்பட்ட பிறகு).//
முற்றிலும் சரியே :-)
நல்லா கதை விடறாருப்பா!!
ஸ்ரீதர் சமூகத்துக்கு மீண்டும் என் வந்தனங்கள். :))
அண்ணாச்சி அனைத்து கதைகளையும் படிக்க வைக்கும் முயற்சியா!!? ;))
சூப்பர்....மீதி இருக்கு அது நாளைக்கு வந்து படிக்கிறேன் ;))
//பள்ளியில் Non-detailed பாடமாக படித்த ஒரு கதை. பெயர் மறந்து போயிற்று. தான் சிறு வயதில் படித்த பள்ளிக்கு மீண்டும் ஒரு மாணவர் வருகிறார். தான் வாழ்க்கையில் தோலிவியுற்றதற்கு காரணம் தனக்கு பாடம் போதித்த ஆசிரியர்களே என்று குற்றஞ்சாட்டி தனது பள்ளிக் கட்டணத்தை திருப்பிக் கேட்கிறார். //
REFUND by Fritz Karinthy!
தலைவரே! அருமையா இருக்கு இந்தத் தொகுப்பு! எளிமையாகவே... உங்க வலைப்பதிவினாலேயே இந்த சொல் ரொம்ப பிடிச்சிருச்சு! அடிக்கடி சொல்றேன்!
ஸ்ரீதர்! Refund (Six one act plays புத்தகம்) படிச்ச டென்த் செட் தானா நீங்க? அவ்வளவு இளமையா?! பாஸ்! உங்க வயசென்ன உண்மையை சொல்லுங்க! ஏன்னா நான் ஏதோ உங்களை ஒரு முப்பத்தஞ்சு வயசுக்காரரா கற்பனை பண்ணி வச்சிருந்தேன்! நீங்க என்னடான்னா என்னை பொறாமைப் பட வச்சிருவீங்க போலிருக்கே!
அன்புடன்
வெங்கட்ரமணன்
(selections.wordpress.com)
வாங்க இகொ, அம்பி, கோபி :-)
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//ஸ்ரீதர்! Refund (Six one act plays புத்தகம்) படிச்ச டென்த் செட் தானா நீங்க? //
வெங்கட்ராமன்... கேள்வி கேக்கறதை பாத்தா என்னமோ விவகாரமா கேக்கறீங்கப் போல. நான் படிச்சது பள்ளியா கல்லூரிலயான்னு ஞாபகம் இல்ல. ஆனா எல்லாம் 90-க்கு அப்புறம்தான். போதுமா :-)
அட வெவகாரம்லாம் ஒண்ணுமில்லீங் பாஸ்!
இந்தக் கதை எனக்கு பத்தாவது படிக்கும்போது ஆங்கிலத் துணைப்பாடம்! அதைத்தான் கேட்டேன்! (நீங்களும் அந்த Age group தானாங்கறதை!) அப்புறம் உங்களோட பதிவிலயேயே பார்த்துட்டேன் நீங்க காமராஜர் பல்கலையில் படித்த விவரத்தை! கொள்கை விளக்கம் ஓகேவா?!
அன்புடன்
வெங்கட்ரமணன் (ரமணன்! ராமன் இல்லை!!!)
//கொள்கை விளக்கம் ஓகேவா?!//
:-) நல்லாவே புரிஞ்சுதுங்!
'இந்த மாதிரிதான் நான் ஒன்றை நினைத்து எழுத வேறு ஒன்று வாசகர்களை சென்றடைந்து விடுகிறது. '
How nice it would be if the readers too get money for doing
nothing :).Btb dont you know that
the author is dead, according to post-modernist theory.
//the author is dead//
வாங்க அனானி நண்பரே,
இந்த குறிப்புகள் எனக்காக நான் பதிந்தவையே. :-)
Post a Comment