முட்டாள் பெட்டி

November 9, 2008

'நீங்கள் ரெகுலராக டிவி பார்ப்பவரா?'

'ஆமாம்'.

'டிவியில் உங்களுக்கு பிடித்தது என்ன?'

'டிவியை அணைக்கும் சுவிட்ச்தான்'

மிகப் பழைய ஜோக். கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாக டிவி பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறேன். அதற்கு முன்னால் வாராந்திர விடுமுறையானாலும், இல்லை விநாயகர் பிறந்த விடுமுறை தினமானாலும், டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்தான். வாஸ்து பிரகாரம் டிவியை தென்மேற்கு மூலையில் வைக்காதீர்கள், அப்புறம் சொர்க்கம் தொடர் சீக்கிரம் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு டிவியின் ஆதிக்கம் பெருக ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டது. கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தவுடன் ஏதோ நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு டிவியே வாங்காமல் தவிர்த்து வருகிறேன். அதனால் நேரம் மிச்சம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். ஆனால் அதிக நேரம் வலை மேய்வதற்கும், நினைத்த திரைப்படங்களை பார்ப்பதற்கும் மிகவும் வசதியாக இருக்கிறது.

தூர்தர்ஷன் மட்டும் இருந்த காலத்தில், அதுவும் கொடைக்கானல் ரிலே ஸ்டேஷன் இயங்காத காலத்தில் எங்கள் தாத்தா டிவி வாங்க முடிவு செய்தார். கலர் டிவி என்பது அம்பானி வீட்டில் மட்டும் இருந்த காலம். ஒரு கருப்பு வெள்ளை டிவி வாங்கினார். கூடவே 25 அடி உயரத்திற்கு ஆண்டெனா தேவை என்று மெக்கானிக் சொல்லி அதையும் வாங்கினார். இலங்கை ரூபவாஹினி மட்டும் வந்தது என்று நினைக்கிறேன். கீழே ஒருவர் டிவி பார்த்து டைரக்ஷன்ஸ் கொடுக்க மேலே ஆண்டெனாவை 423 டிகிரிக்கு சுற்று என்று சுற்றும் போது ஏதோ ஒரு மைக்ரோ டிகிரியில் ரூபவாஹினியின் புறா படம் அலைஅலையாக வரும். பௌர்ணமி காலத்தில் துல்லியமாகவும் அமாவசை காலத்தில் புள்ளி புள்ளியாகவும் படம் தெரிகிறது என்றெல்லாம் லூனார் காலண்டர் வகுத்து வைத்திருந்தோம். புதன் கிழமை இரவு தமிழ் திரைப்படம் போடுவார்கள் என்பதினால் மாலையே எங்கள் வீட்டில் உணவு எல்லாம் முடித்துவிட்டு நடந்து தாத்தா வீட்டிற்கு போய் தேவுடு காத்துக் கொண்டிருப்போம். படம் வருமா வராதா என்பது பெரும் சஸ்பென்ஸ். 'மூன்று முடிச்சு' படத்தில் ரஜினியை ஸ்ரீதேவி 'டீக் ஹை' என்று நக்கலடிக்கும் காட்சிகள் எல்லாம் திரைச்சித்திரம் மாதிரி படம் இல்லாமல் வசனம் மட்டும் கேட்டு புளகாங்கிதப் பட்டுக் கொண்டிருந்தது ஒரு காலம்.

தூர்தர்ஷன் கொடைக்கானல் ரிலே ஸ்டேஷன் தொடங்க தமிழகத்திற்கு விடி வெள்ளி ஏற்பட்டது. மாலை 4:30 மணிக்கு தொடங்கி இரவு 9 மணிவரை தமிழ் நிகழ்ச்சிகள். செவ்வாய் கிழமை ஒரு மணி நேரம் நாடகம். வியாழக்கிழமை அரைமணி நேர ஸ்பான்ஸர்ஸ் ப்ரோர்கிராம் என்று அச்சுபிச்சு காமெடித்தொடர். வெள்ளிகிழமை சரித்திர புகழ்வாய்ந்த ஒளியும் ஒலியும், ஞாயிற்றுக் கிழமை மாலை திரைப்படம் என்று ஒரு கை விரலில் எண்ணிவிடக் கூடிய டிவி நிகழ்ச்சிகள். எஸ்வி சேகரும், கிரேசி மோகனும் 2 மணி நேரக் கதையை 13 வாரங்களுக்கு ஜவ்வ்வ்வ்வ்வாக இழுத்து காமெடி பண்ணிக் கொண்டிருக்க, ஒரே செட்டில் திரைச்சீலை வண்ணத்தை மட்டும் மாற்றி மாற்றி செவ்வாய்கிழமை டிராமாக்களை ஒப்பேற்றிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியாக இருந்த க்ரியேட்டிவிடி வறட்சியில் இந்திக்காரர்கள் மெகா சீரியல் என்னும் வெள்ளத்தை பாய்ச்சினார்கள். ஹம்லோக், புனியாத் போன்ற சீரியல்கள் இரவு 9 மணியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தன. அரைகுறை ஹிந்தி அறிவை வைத்துக் கொண்டு, லாலுவின் காமெடியையும், சீட்டியின் துடுக்குத்தனத்தையும் ரசித்துக் கொண்டிருப்போம். நடுவில் கிரன் ஜுனேஜாவின் ஆராதனா ஸ்டைல் காதல் காட்சிகளை கண்டு களித்து விட்டு மறுநாள் பள்ளியில் கிளுகிளுப்பாக விவாதித்தது உண்டு. பின்னாளில் இவர் மகாபாரதத்தில் கங்கையாக வந்து நம் வாயிலும் கங்கையை ஜொள்ளிட வைத்தவர். யே ஜோ ஹை ஜிந்தகி போன்ற Sitcom-களை பெரிதும் ரசித்ததுண்டு. அதில் வெரைட்டியாக வரும் சதீஷ் ஷா இன்னமும் ஹிந்திப் படங்களில் அதே தோற்றத்தில் வருகிறார். எல்லா ஹீரோக்களுக்கும் அப்பாவாக வரும் இப்போதைய அலோக்நாத்தான் புனியாத் கதாநாயகன். தாத்தாவிற்கு ஹிந்தி மீது நல்லபிப்ராயம் கிடையாது என்பதாலும், 9 மணிக்கு மேலாக தூங்காமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்று அவர் நம்பியதாலும் தமிழக கரெண்ட் கரெண்ட் நிலைமை மாதிரி எப்போ பார்ப்போம் எப்போ பார்க்க மாட்டோம் என்று எந்த நிச்சயமும் கிடையாது.

சன் டிவியின் தமிழ்மாலை தொடங்கி எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது. பாலசந்தர் தொடர்ந்து சீரியல் செய்து கொடுக்க, ரெகோ, சுரேஷ் சக்ரவர்த்தி, ஆனந்த கீதன், ரபி பெர்னார்ட், ரமேஷ் பிரபா என்று பலரும் வெரைட்டியாக வந்து கலக்கினார்கள். பெப்ஸி உமா அன்றிலிருந்து இன்று வரை 'அய்யோ... அப்படியா!' என்று வெட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார். உடையார் தொடங்கிய கோல்டன் ஈகிள் டிவி, ஜெயின் டிவி, ராஜ் டிவி என்று பலதும் இருந்தாலும் சன் டிவியின் நேர்த்தியை யாரும் தொடமுடியவில்லை. நாகாவின் ரமணி vs ரமணி (முதல் பாகம்) எனக்கு மிகவும் பிடித்த டிவி நிகழ்ச்சிகளில் ஒன்று. தூர்தர்ஷனின் வந்த எஸ்வி சேகரின் 'வண்ணக்கோலங்கள்' போலவே ஒவ்வொரு நாளும் ஒரு சிறுகதை போல் நகைச்சுவையாக நகரும் தொடர். இரண்டாம் பாகம் கொஞ்சம் அறுவைதான். பாலக்காட்டு பாஷையை வைத்து வந்த 'லூட்டி' சீரியல் கொஞ்சம் நன்றாக இருந்தது.

நாடெங்கும் கேபிள் புரட்சி நடக்கும் வரை DD-யின் மெட்ரோவும், அதில் புரட்சி செய்த 'மெட்ரோ' பிரியாவும் சென்னைவாசிகளுக்கு மட்டுமே கிடைத்த லக்ஸுரி. 'டிஸ்கவரி' சேனலை காரணம் காட்டி அப்பாவிடம் கேபிள் கனெக்ஷ்ன் வாங்கிவிட்டு ஸ்டார் மூவிஸும், எம் டிவியும் பார்த்து, பார்த்து பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போதுதான் ஸோனி டிவியில் சில அமெரிக்க நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தினார்கள். என்பதுகளில் அமெரிக்காவை கலக்கிய டிவி நிகழ்ச்சிகளை ஹிந்திப்படுத்தி தொன்னூறுகளில் தினசரி நிகழ்ச்சியாக ஒளிபரப்பினார்கள். தினசரி காலை 9 மணி முதல் 11:30 மணி வரை நான்கு தொடர்கள் தொடர்ந்து வரும். காலையில் அப்பா அலுவலகம் கிளம்பிப் போகும்போது எழுப்பிவிட்டுச் செல்ல, அம்மா கொடுக்கும் காப்பியை எடுத்துக் கொண்டு டிவியின் முன்னால் உட்கார்ந்துவிடுவேன். ஒரே நடிகர்களை வைத்துக் கொண்டு வருடகணக்காக எடுத்த நிகழ்ச்சிகள். இன்று குழந்தையாக பார்க்கும் Gary Colman ஒரு சில வாரங்களில் வளர்ந்து விடுவார். Silver Spoons, Who is the Boss, Different Strokes, Bewtiched என்று மராத்தான் பந்தயம் போல சிரிப்பு ஓட்டம். இப்பொழுதும் யு-ட்யூபில் நிறைய எபிசோடுகள் காணக் கிடைக்கின்றன. இந்த சீரியல்களைப் பற்றி தனியாக ஒரு இடுகையே போடலாம். நேர்த்தியான கதையமைப்பு. குடும்ப அமைப்புகளையும், காதலையும், தனி மனித வேல்யூக்களையும், உளவியல் சிக்கல்களையும் நகைச்சுவையோடு சொல்லும் கதைகள்.

Who is the Boss-ல் வரும் Tony Danza-க்கு பெரும் ரசிகனானேன். புரூக்ளினில் வளர்ந்த ஒரு இத்தாலியன் பின்னர் கனெக்டிகட்டில் உள்ள அமெரிக்க வீட்டில் ஹவுஸ்கீப்பராக வேலை செய்கிறார். மனைவியை இழந்த டோனி தனது சிறு பெண் குழந்தையோடு (Samantha) செல்வந்தரான Angelina Bower வீட்டிற்கு ஹவுஸ்கீப்பர் வேலை கேட்டு வருவதிலிருந்து துவங்குகிறது இந்த தொடர். ஆஞ்சலினா விவாகரத்தாகி தனது சிறு மகனோடும் (Jonathan) அருகாமையில் வசிக்கும் அம்மாவோடும் (Mona Robinson) விளம்பரத் துறையில் பெரிய பணியில் இருக்கிறார். வீட்டுத் தலைவராக ஆஞ்சலினாவும், வீட்டு வேலையாளாக டோனியும் இருக்க, அவர்களிடையே இருக்கும் நுண்ணிய உணர்வு போராட்டங்களை நகைச்சுவையாக சொல்லிச் செல்கிறது. டோனி டான்ஸா சமையல் செய்வது தவிர, பேஸ்பால் வீரனாக, பாக்ஸிங் வீரனாக, வாலிபால் / பாஸ்கெட்பால் விளையாட்டுகளிலும் சிறந்தவனாக, பெண்களின் கனவு நாயகனாக, பொறுப்பான தந்தையாக நகைச்சுவை கலந்த நடிப்பில் அடித்து ஆடுவார். இந்தத் தொடரின் பாடலையும் அவரேப் பாடியிருந்தார். கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் வெளியானது என்று நினைக்கிறேன். தொடரின் துவக்கத்தில் சிறு குழந்தையாக வரும் சமந்தா தொடர் முடியும் பொழுது திருமணம் செய்து கொண்டுவிடுகிறார்.

என்பதுகளில் அமெரிக்கர்களின் லிவிங் ரூமை ஆக்கிரமித்த இன்னொருவர் Gary Coleman என்ற குழந்தை நட்சத்திரம். Different Strokes-ல் இவர் நடித்த Arnold Jackson பாத்திரம் மிகவும் பிரசித்தி பெற்றது. ந்யூயார்க்கில் வசிக்கும் அமெரிக்கரான Philip Drummond என்ற வெள்ளையர் தனது வீட்டில் வேலை செய்யும் கறுப்பின பெண் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட அவரின் அநாதையான இரண்டு குழந்தைகளையும் (Willis Jackson & Arnold Jackson) தத்தெடுத்து வளர்க்கிறார். நகைச்சுவையோடு அக்காலத்தில் நிலவிய நிறவெறியையும் தொட்டு அருமையாக கதை பண்ணியிருப்பார்கள். தனது குழந்தை நடிப்பில் அமெரிக்கர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பின்னர் ஏனோ சோபிக்கவில்லை.

நமது டிவி தொடர்கள் இன்னமும் பாலைவனமாகவே கற்பனை வறட்சியோடு இருக்கின்றன. நேற்று ஒரு நண்பர் வீட்டில் பார்த்த தொடரில் ராதிகா இரட்டை வேடத்தில் மாற்றி மாற்றி டயலாக்குகள் பேசி இரண்டு வருடக் கதையையும் சொல்லிவிட்டார். நமது தமிழ் தாய்மார்கள்தான் எவ்வளவு சுலபமாக நேரத்தை தானம் கொடுத்து விடுகிறார்கள். முட்டாள் பெட்டி என்று சொல்வதை விட முட்டாள் 'பார்க்கும்' பெட்டி என்று சொல்ல வேண்டுமோ?

17 மறுமொழிகள்:

பினாத்தல் சுரேஷ் said...

நன்றாகத்தான் எழுதி இருக்கிறீர்கள்.

//கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் வெளியானது என்று நினைக்கிறேன். தொடரின் துவக்கத்தில் சிறு குழந்தையாக வரும் சமந்தா தொடர் முடியும் பொழுது திருமணம் செய்து கொண்டுவிடுகிறார்.// என்று நாம் பார்க்கும்போது வரிவரியாக சிலாகிக்கும் தொடர்களை, //மாற்றி மாற்றி டயலாக்குகள் பேசி இரண்டு வருடக் கதையையும் சொல்லிவிட்டார்.// என்று நாம் பார்க்காதபோது இடக்கையில் புறந்தள்ளுகிறோமே, (நானும் இப்போது பார்ப்பதில்லை).. இதற்கு என்ன உளவியல் என யோசிக்கிறேன் :-)

முட்டாள் பெட்டி எனச் சொல்லப்பட்டதே அது முட்டாள் பெட்டியாக நீடிக்கக் காரணமோ என்று நினைக்கிறேன். பார்ப்பதை வெளியே சொன்னால் - அட இவன் முட்டாள் பெட்டி பார்க்கறான்பா என மானம் போகுமோ என்று பிறத்தியாருக்குத் தெரியாமலே பார்க்க வைத்த அடைமொழி அது. பெரிய அளவில் விமர்சனங்கள் இல்லை, ஏறத்தாழ சினிமா அளவுக்கு பட்ஜெட், பேசப்படாவிட்டாலும் பார்வையாளர்கள் இருக்கிறார்கள் போன்ற காரணங்களால் சமரசங்களோடு தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகள் - முட்டாள்தனத்தை விடாமல் கட்டிக்காக்கின்றன.

உங்கள் பதிவில் ஒரே கேள்விதான் எனக்கு.. அது முட்டாள்கள் பார்க்கும் பெட்டியாக எப்போது ஆனது? யே ஜோ ஹை ஜிந்தகி காலத்திலா, செல்வி காலத்திலா?

Sridhar Narayanan said...

//என்று நாம் பார்க்காதபோது இடக்கையில் புறந்தள்ளுகிறோமே//

இப்படி யோசிக்கிறீங்களா? :) யூட்யூபில் போய் இப்பொழுதும் தேடிப் பிடித்துப் பார்க்கின்ற அளவிற்கு 'உள்ளடக்கம்' இருக்கிறது என்று சொல்ல வந்தேன்.

//யே ஜோ ஹை ஜிந்தகி காலத்திலா, செல்வி காலத்திலா?//

அது எப்பொழுதுமே Idiot Box-தான் :-)

நீங்கள் தொலைக்காட்சி பார்க்கும்பொழுது உங்கள் சிந்தனை முழுமையாக கவரப்பட்டு விடுகிறது. புத்தகம் படிக்கும்போது 'பிரேக்' எடுத்து வேறு செயல் செய்துவிட்டு வருவது போல் இங்கு முடியாதல்லவா? :-)

Sridhar Narayanan said...

//நன்றாகத்தான் எழுதி இருக்கிறீர்கள்.//

:-) நன்றாகத்'தான்'ன்னு ஏதோ இழுக்கற மாதிரி இருக்கே தல.

இப்பொழுதும் சூப்பர் சிங்கர், காமெடி நிகழ்ச்சிகள் எல்லாம் இணையத்தில் கிடைத்தால் விடாமல் பார்க்கத்தான் செய்கிறேன்.

நகைச்சுவையோடு கூடிய தொடர்களைவிட வெறும் உணர்வுகுவியலாக இருக்கும் தொடர்களே தமிழில் வெற்றி பெறுவது மிகவும் சோகமானது

ச.சங்கர் said...

///நகைச்சுவையோடு கூடிய தொடர்களைவிட வெறும் உணர்வுகுவியலாக இருக்கும் தொடர்களே தமிழில் வெற்றி பெறுவது மிகவும் சோகமானது///

தமிழன் உணர்வுபூர்வமானவன்:)

இந்த டிவி பிறந்து வளந்தது, அவங்கவங்க வீட்டுக்கு முதல் முதலா டிவி வந்தது இது போன்ற இன்னபிற டிவி தொடர்பு சமாச்சாரங்கள் பற்றி தொல்காப்பியர் காலத்துலேருந்து நிறையப்பேர் கொசுவத்தி சுத்தியாச்சு. இது போல கொசுவத்தி சுத்துறதை விட "செல்வி" பாக்குறதே தேவலை அப்படீன்னு நான் சொல்லலை..ஒரு டி வி ரசிகை சொல்லச் சொன்னார் :)

இலவசக்கொத்தனார் said...

திஸ் தி கொசுவர்த்தி? :))

Boston Bala said...

துவக்கம் தூள்!

மங்களூர் சிவா said...

நல்ல கட்டுரை.

சென்ஷி said...

//Boston Bala said...
துவக்கம் தூள்!
//

ரிப்பீட்டே :)

Sridhar Narayanan said...

//மங்களூர் சிவா said...
நல்ல கட்டுரை.
//

வாங்க சிவாண்ணே. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

//சென்ஷி said...

ரிப்பீட்டே :)//

சென்ஷி, நல்லவேளை சிவா வந்து போன பிறகு நீங்க வந்தீங்க. இல்லைன்னா உங்க ரிப்பீட்டுக்கு அவர் ஒரு 'ரிப்பீட்டேய்' போட்டுட்டுப் போயிருப்பார் :-)

வருகைக்கும் மறு பாராட்டுக்கும் நன்றி.

பாபா,

என்னோட உளறலையும் ஒரு உளறலா மதிச்சு 'உளறல்'ல தொடுப்பு கொடுத்ததற்கு மிக்க மகிழ்ச்சி :-)

Sridhar Narayanan said...

இ.கொ.,

:-) ஆமாங்க... ஆமாம். கொசுவர்த்தியேதான்.

சங்கர்ஜி,

//இது போல கொசுவத்தி சுத்துறதை விட "செல்வி" பாக்குறதே தேவலை //

வேற வழி இல்லைங்கோவ். நீங்களும் கொசுவர்த்தி சுத்திதான் ஆகனும். ஏன்னா 'செல்வி' எப்பவோ முடிஞ்சு போய் அதனோட தொடர்ச்சியா 'அரசி' ஓடிட்டு இருக்கு :))

கோபிநாத் said...

\\'டிஸ்கவரி' சேனலை காரணம் காட்டி அப்பாவிடம் கேபிள் கனெக்ஷ்ன் வாங்கிவிட்டு ஸ்டார் மூவிஸும், எம் டிவியும் பார்த்து, பார்த்து பொழுதை கழித்துக் கொண்டிருக்கும்போதுதான் \\

யப்பா..எங்க அண்ணாச்சி இதை எல்லாம் செய்யவில்லையேன்னு ஒரு நிமிஷம் பயந்துட்டேன்...நல்லவேளை வயிற்றில் பாலை வார்த்திங்க ;))

நல்ல கொசுவர்த்தி ;)))

Sridhar Narayanan said...

//நல்ல கொசுவர்த்தி ;)))//

வாங்க கோபி. M TV / F TV எல்லாம் ஒழுங்கா பாத்திடுவோமில்ல :)

உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் ரொம்ப நன்றி :)

ambi said...

கட்டுரை ஆரம்பம் ராக்கெட் மாதிரி வேகமெடுத்து கடைசில நமக்கு புரியாத தொடர் எல்லாம் சொல்லி சாட்லைட்டை லாஞ்ச் பண்ணின மாதிரி இருக்கு. :))


கோலங்களை வேணும்னே இருட்டடிப்பு செய்ததை கண்டிக்கிறேன். :p

Sridhar Narayanan said...

//கோலங்களை வேணும்னே இருட்டடிப்பு செய்ததை கண்டிக்கிறேன். :p//

கோலங்கள் விடுபட்டதை மட்டும் கண்டிக்கும் உங்களை நான் கண்டிக்கிறேன் :-)

தென்றல் said...

'அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே....'

/கலிபோர்னியாவிற்கு குடிபெயர்ந்தவுடன் ஏதோ நொண்டி சாக்கு சொல்லிக் கொண்டு டிவியே வாங்காமல் தவிர்த்து வருகிறேன். /

இன்னும்மா.. ம்ம்ம்..பெரிய விசயம்தான்!!

/என்பதுகளில் அமெரிக்காவை கலக்கிய டிவி நிகழ்ச்சிகளை... /

அதுபோல நம்ம ஊரு நிகழ்ச்சிகளைபத்தியும் கொசுவத்தி சுத்தியிருக்கலாம்....;)

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தொலைக்காட்சியை முட்டாள் பெட்டி என்பதால் புத்திசாலியாகிவிடுவோமா?அதில் பார்க்கும் நிகழ்ச்சி தான் முக்கியம் ' புல்லாங்குழலால் அடுப்பும் ஊதலாம், அதற்காக ஊதுவதா? நீங்கள் தொலைக்காட்சியென தமிழ்த் தொலைகாட்டியை மாத்திரமே குறிப்பிடுவதானால், நான் உங்களைவழி மொழிகிறேன்.நான் இங்கு எத்தனையோ தமிழ்த் தொலைக்காட்சி இணைப்புகள் இருந்தும் எதுவுமே எடுக்கவில்லை.காரணம் சினிமா,டிராமா...இது தவிர எதுவுமில்லை.(நண்பர் வீட்டில் கண்டது).பெரிதாக பிரஞ்சு புரியாவிடிலும் நான் விவரணச் சித்திரங்களுக்காக பிரஞ்சுத் தொலைக்காட்சி தவறாமல் பார்ப்பேன்.அதனால் நான் பெற்றது அதிகம்.அதனால் தமிழ் முட்டாள் பெட்டி எனக் கூறுங்கள்.

ஸ்ரீதர் நாராயணன் said...

//தமிழ் முட்டாள் பெட்டி எனக் கூறுங்கள்.//

வாங்க யோகன் ஐயா!

அது ஒரு பொதுவான வழக்கு - Idiot Box என்று சொல்வது. அதற்காக அப்படி குறிப்பிட்டிருந்தேன். அவ்வளவுதான் :)

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!