ஜாஸ், இண்டியானா ஜோன்ஸ், ஈ.டி, ஜுராசிக் பார்க், ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட், மைனாரிட்டி ரிப்போர்ட்... இப்படி எத்தனையோ பிரம்மாண்டமான திரைப்படங்களை சொல்லிக் கொண்டே போகலாம். உங்களுக்கு பிடித்த 10 படங்களில் கண்டிப்பாக ஸ்பீல்பர்கின் படங்கள் இல்லாமல் இருக்காது. இவரைப் பற்றி முழுமையாக படிக்க விக்கிப்பீடியா வாருங்கள். தொலைக்காட்சிப் படங்கள், திரைப்படங்கள், அனிமேஷன் படங்கள் என்று இவருடைய படைப்புகள் முழுவதும் தொகுத்து தந்திருக்கிறார்கள். What an amazing Career!!
60-களில் கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் (University of South California) நாடகத் துறைக்கு இவர் விண்ணப்பித்தபோது நிராகரிக்கப் பட்டார். 96-ல் அதே பல்கலைகழகத்திற்கு இவர் ஒரு காப்பாளர். (trustee).
இவருடைய படங்கள் இரண்டு சமீபத்தில் பார்த்தேன். ஒன்று அவருடைய 25 வயதில் இயக்கிய படம். இன்னொன்று 55 வயதில். நேர்த்தியான கதை சொல்லும் முறைக்கு இவரைவிட்டால் வேறு ஆளில்லை என்பதை இந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து நிரூபித்து வந்திருக்கிறார். இன்னமும் பல படைப்புகள் வர இருக்கின்றன.
Duel -
இந்தப் படத்தைப் பற்றி பள்ளிக் காலங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். பார்க்கும் ஆர்வம் இருந்ததில்லை. சமீபத்தில் Netflix-ல் உறுப்பினர் ஆனவுடன் இந்தப் படத்தைப் பற்றி விரிவாக படிக்க நேர்ந்தது. ஸ்பீல்பெர்க் என்ற பெயரும், திரைக்கதையும் ஆர்வத்தைக் கிளறி விட்டதால் முதல் படமாக எடுத்துக் கொண்டேன்.
ஒரு சாதாரண தினத்தில் டேவிட் மான் தனது பயனத்தை தன்னுடைய ப்ளிமௌத் காரில் துவக்குகிறான். அது ஒரு டூ-லேன் ஹைவே. முன்னால் செல்லும் ஒரு பெரிய ராட்சச ட்ரக் அவனுடைய வேகத்தை தடைபடுத்துகிறது. ஓரிடத்தில் அந்த ட்ரக்கை இவன் தாண்டி செல்ல முற்பட, பிடித்தது சனி. அந்த ட்ரக் இவனைத் துரத்தி வருகிறது. Bulleying என்று சொல்வார்களே அந்த மாதிரியான சீண்டல்கள். ஒரு இடத்தில் ரயில்வே கேட்டில், ரயில் கடப்பதற்காக டேவிட் காத்திருக்க அந்த ட்ரக் இவனுடைய காரைப் பின்னாலிலிருந்து நெட்டித் தள்ளிக் கொண்டே இருக்கும். அந்த ட்ரெயின் கடக்கும் வரை டேவிட் உயிரை கையிலும், பிரேக்கை காலிலும் பிடித்துக் கொண்டே இருக்க, நாமும் அந்த அவஸ்தையை அனுபவிக்கிறோம்.
மூன்று பகுதிகளாக இந்தப் படம் எடுக்கப் பட்டிருக்கும். முதலில் அந்த ராட்சச டிரக் டேவிட்டின் காரை சீண்டிக்கொண்டே வருகிறது. இவன் முன்னே சென்றால் பின்னால் வந்து முட்டுவது. இவன் பின்னே சென்றால் மெதுவாக ஓட்டுவது என்று மாறி மாறி சீண்டல்கள். ஒரு கட்டத்தில் டேவிட் ஒரு சின்ன மாற்றுப் பாதை மூலமாக அந்த ட்ரக்கை தாண்டி வேகமாக செல்ல, சூடு பிடிக்கிறது ஆட்டம். இவன் ஓடுகிறான், ஓடுகிறான்... ஒரு தெருவோர உணவகக்திற்கு வந்து சேர்கிறான். அந்த ஹைவேயில் பயனிப்பவர்கள் பலரும் அந்த உணவகத்திற்கு வந்து போகிறார்கள். உணவகத்தில் நுழைந்து, முகம் கழுவிவிட்டு சாப்பிடும் இடத்திற்கு வந்து பார்த்தால் அதே உணவகத்தின் வாசலில் அந்த ட்ரக்கும் நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது அவன் நினைத்துப் பார்க்கிறான், ஒரு வேளை அந்த ட்ரக் டிரைவர் இந்த உணவகத்திற்கு வருவதற்காக வேகமாக வந்திருக்கக் கூடும். சாப்பாடு வேளையாயிற்றே. அவந்தான் அதை தவறாக நினைத்து தன்னைக் கொல்ல வருகிறானோ என்று நினைத்து விட்டோம் என்று தேற்றிக் கொள்கிறான். இத்தனைக்கும் அந்த டிரக் ட்ரைவரின் கால் மட்டும்தான் அவன் பார்த்திருக்கிறான். அங்கே உணவகத்தில் 3-4 டிரக் டிரைவர்கள் காலில் அதே போன்ற ப்ரௌன் நிற ஷூ அணிந்திருக்கிறார்கள். அதில் ஒருவனை அணுகி இந்தப் பிரச்சினையைப் பற்றி பேச முற்படுகிறான். அது கைகலப்பில் முடிகிறது. அந்த ஆள் வேறு ஒரு வண்டியில் ஏறிப் போய்விடுகிறான். உடன் சில நிமிடங்களில் அந்த ராட்சச டிரக் புறப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் அந்த ட்ரக் மிக வெளிப்படையாகவே டேவிட்டை கொல்ல வருகிறது. டேவிட் தப்பிக்க முயலும் எல்லா செயல்களையும் புத்திசாலித்தனமாக முறியடிக்கின்றது. இவன் உதவி கேட்க முயல அந்த டிரக்கின் கோபம் அதிகரிக்கிறது. ஸ்பீல்பெர்க் அவரே குறிப்பிடும்படியாக 'இன்னதென்று தெரியாத பயம்' படம் முழுவதும் பரவுகிறது. இது மாதிரி நமது வாழ்க்கையிலும் நாம் பலவற்றை சந்திக்கின்றோம். என்ன காரணம் என்றே தெரியாமல் சிலர் துரத்தப் படுகிறார்கள். இறுதியாக இந்தத் துரத்தல் உச்சமடைகிறது. டேவிட் தப்பித்தானா? எப்படி? படத்தை பார்த்து தெரிந்து கொள்ளாம்.
மொத்தப் படமும் 13 நாட்களில் எடுத்து முடித்திருக்கிறார்கள். சிறப்பானதொரு படைப்பு. பின்னர் தியேட்டருக்கு எடுக்க 2 நாட்கள் அதிகப்படியாக படம் பிடித்தார்களாம்.
படம் முழுவதும் நாமும் டேவிட்டோடு ஓடிக்கொண்டே இருக்கிறோம். அந்த டிரக் டிரைவர் யாரென்று யாருக்கும் தெரியாது. அந்த டிரக்கே ஒரு முகமாக, ஒரு கொலை மிருகமாக (predator), ஒரு தந்திரசாலியாக தோற்றமளிக்கிறது. நேரம் கிடைத்தால் நீங்களும் டேவிட்டின் ஓட்டத்தில் பங்குபெற முடியுமா என்று பாருங்கள்.
Catch me if you can -
இதுவும் ஒரு எலி-பூனை கதை. ஆனால் இங்கே எலி ரொம்ப திறமைசாலி. பூனை கொஞ்சம் அசட்டுதனமாக இருக்கிறது. லினோர்டா டி காப்ரியோ (டைட்டானிக் புகழ் :) ஜாக்) மற்றும் டாம் ஹாங்க்ஸ் நடித்திருக்கும் இந்தப் படம் 2002ல் வெளிவந்தது. வெளிவந்த பொழுதே இதை ஒரு முறை பார்த்துவிட்டேன். ஸ்பீல்பெர்க் பேரைப் பார்த்து இது ஏதோ ஒரு Sci-fi என்ற எதிர்பார்ப்போடு பார்த்ததால் அப்பொழுது கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது. தற்போது பார்த்த பொழுது ஒரு அருமையான் த்ரில்லர் பார்த்த அனுபவம்.
ஃப்ராங்க் அபக்னேல் ஜூனியர் (டி காப்ரியோ) ஒரு பெரிய ஏமாற்றுக்காரன். எப்படிப்பட்ட திருடன் என்றால், ஒரு புகழ்பெற்ற மாடல் பெண்ணிடம் ஒரு இரவுக்கு ஆயிரம் டாலர் தருவதாக வாக்களித்துவிட்டு, அவளிடமே 1400 டாலருக்கான போலி செக்கை கொடுத்து, பாக்கி பணத்தையும் அவளுடைய இரவையும் திருடிச்செல்லும் பலே திருடன். 19 வயதுக்குள் கிட்டத்தட்ட 3 மில்லியன் டாலர்கள் ஏமாற்றி விடுகிறான். பான் அம் (Pan-Am) பைலட்டாக வேடமிட்டு பைலட் காக்பிட்டிலேயே கூட ஓசியில் பயனம் செய்கிறான். ஜார்ஜியா மாநிலத்தில் ஒரு டாக்டராக வேடமிட்டு வாழ்க்கை நடத்துகிறான். லூசியான மாநிலத்தில் ஒரு வக்கீல் போல வேடமிடுகிறான். இறுதியில் தன் காதலியின் தந்தையிடம் உண்மையை சொல்லும்பொழுது அவர் அதை ஒரு நகைச்சுவவயாக ஒதுக்கிவிட்டு அவனுடைய காதலை மெச்சுகிறார். எஎல்லாம் மிக நுணுக்கமாக நடத்தப்படும் ஏமாற்று வேலைகள்.
கார்ல் (டாம் ஹாங்க்ஸ்) FBI-ல் பணிபுரியும் செக் மோசடிகளை கண்டுபிடிக்கும் துப்பறிவாளன். ஃப்ராங்க்-ன் செக் மோசடிகளைப் பற்றி துப்பறியும் போது அவனை நேரில் சந்திக்கின்றான். வெகு சுலபமாக ஏமாற்றப் படுகிறான். FBI மேலிடம் ஒரு கட்டத்தில் கார்ல்-ஐ கை கழுவுகிறது. ஃப்ராங்க் கார்ல்-ஐ ஒவ்வொரு கிறிஸ்துமஸிலும் தொடர்பு கொள்கிறான். கார்ல் ஃப்ராங்கின் தாய், தந்தையரின் மூலம் துப்பு துலக்கி ஃப்ரான்ஸில் வைத்து அவனைக் கைது செய்கிறான். தொடர்ந்து ஒரு கிளைமேக்ஸ், ஆண்ட்டி-கிளைமேக்ஸ் என்று படம் விறுவிறுப்பாக செல்கிறது.
ஃப்ராங்கின் மோசடிக்களுக்கு பின்புலமாக சொல்லப் படும் கதை ஒரு கவிதை. அவனுடைய பெற்றோரின் காதல் வாழ்க்கையும், அவர்களின் பிரிவு அவன் மேல் ஏற்படுத்தும் பாதிப்பும், அதனைத் தொடர்ந்து அவன் தொடங்கும் ஓட்டமும் சஜஸ்டிவாக சொல்லப்படுகின்றன. அவன் தந்தையின் பல்வேறு நிறைவேறாத ஆசைகள் ஃப்ராங்கின் மூலம் நிஜமாகிறது. இறுதியில் ஃப்ராங்க் 'என்னை நீங்கள் ஏன் தடுத்து நிறுத்த மாட்டேன் என்கிறீர்கள்' என்று தந்தையைக் கேட்கிறான். அவன் தந்தைதான் அவனுடைய எல்லா ஆசைகளுக்கும் ஆதாரம். தந்தை இறந்தவுடன் தாயைத் தேடிப் போகிறான். இறுதியில் தன்னை துரத்தும் கார்ல்-யே சரணடைகிறான். கார்ல்-க்கு ஃப்ராங்கின் மேல் ஏற்படும் ஈர்ப்பையும், அவனால் அவருக்கு ஏற்படும் சங்கடங்களையும் டாம் ஹாங்க்ஸ் அருமையாக வெளிக் காட்டியிருக்கிறார். கார்ல் தன் நண்பர்களிடம் சொல்லும் 'knock knock' ஜோக் எங்கள் நண்பர்கள் வட்டத்தில் சிறிது காலம் பிரபலமாக இருந்தது. ஆனால் நீங்கள் அந்த ஜோக்கை ஒருவரிடம் ஒரு முறைதான் பயன்படுத்த முடியும் :)).
இறுதியாக ஃப்ராங்கின் திறமையை நல்லவழியில் பயன்படுத்தி மில்லியன் கணக்கில் சம்பாதிப்பதாக முடிக்கிறார்கள். அருமையான ஒரு துப்பறியும் கதை படித்த திருப்தி ஏறபடுகிறது நமக்கு.
கதை சொல்லும் நேரம்...
இதுவரை வெளியான சிறுகதைகள்
Steven Spielberg - அசத்தும் ஆளுமை
August 19, 2008எழுதியது Sridhar V at 8/19/2008 05:29:00 PM 25 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: catch me if you can, Duel, Stephen Spielberg, சினிமா
Roshomon - பார்வைகளால் ஆன உலகம்
August 13, 2008இரண்டு கண்களும் இணைந்து பார்க்கும் பொழுது முப்பரிமாண தோற்றம் கிடைக்கிறது. இந்த இரு கண்களும் மூளைக்கு செலுத்தும் செய்திகள் மாறுபட்டால் என்னவாகும்? காட்சிகள் பிழற்ந்து போகும். இந்த உலகத்தில் நாம் காணும் உண்மை, பொய், வலியது, இகழ்ந்தது எல்லாமே நாம் பார்க்கும் பார்வையினால்தானே (perspectives). Beauty is in the Beholder's eyes.
ரஷமோன் - பல பரிமாணம் கொண்ட ஒரு திரைப்படம். முதலில் அடித்து பிய்க்கும் மழை. படத்தின் இறுதிக் காட்சி வரை நம்மோடு அந்த மழையும் தொடர்ந்து வருகிறது. அதனூடே சில பார்வையாளர்களை சந்திக்கின்றோம். அவர்கள் மூலம் ஒரு சம்பவம் விவரிக்கப் படுகின்றது. சம்பந்தப் பட்டவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் சம்பவத்தை விவரிக்க பல்வேறு பார்வைகள் (perspectives) கிடைக்கின்றன.
ஒரு சாமுராய் வீரன். அவன் மனைவி. ஒரு கொள்ளைக்காரன். இவர்கள் மூவருக்கிடையே நடக்கும் ஒரு சம்பவத்தை காணும் ஒரு விறகுவெட்டி. அந்த சம்பவத்தில் சாமுராய் இறந்து விட கொள்ளைக்காரனும், சாமுராயின் மனைவியும் ஓடி விடுகிறார்கள்.
இந்தக் கொலை எப்படி நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரியாது. இந்த நால்வரும் அது எப்படி நிகழ்ந்தது என்று நமக்கு (போலீஸ் விசாரணை வழியாக) விவரிக்கிறார்கள். இறந்த சாமுராய் ஆவியாக ஒரு மீடியம் வழியாக பேசுகிறார். (எஸ்.வி.சேகர், சாருநிவேதிதா, ஆவி அமுதா போன்ற ஆவி விசுவாசிகள் ஞாபகம் வரலாம்). பல அடுக்குகளாக வரையப்பட்ட ஓவியத்தை தனித் தனியே பிரித்து பார்ப்பது போல் இருக்கிறது. எல்லா அடுக்குகளையும் ஒன்றிணைத்தால் நமக்கு பல்வேறு புரிதல்கள் ஏற்படுகிறது.
டஜோமரு (Tajōmaru, 多襄丸) என்ற கொள்ளையன் சொல்லும்பொழுது சாமுராயின் மனைவி மேல் தான் ஆசைப்பட்டதாகவும், அவள் கணவனைக் கொல்லாமல் அவளை அடைய திட்டம் தீட்டியதாகவும் கூறுகிறான். சாமுராயைக் வஞ்சித்து அவனைக் கட்டிப் போட்டு அவன் கண் முன்னால் அந்தப் பெண்ணை அடைய முயற்சிக்கின்றான். அந்தப் பெண்ணை தான் பலவந்தப் படுத்தாமலேயே மயக்கியதாக பெருமையுடன் சொல்கிறான். அந்த சம்பவத்தால் நாணம் அடைந்த சாமுராயின் மனைவி, அவர்கள் இருவரும் (சாமுராயும், டஜோமருவும்) உயிரோடு இருக்கும் வரரயில் தான் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட முடியாது என்று சொல்கிறாள். டஜோமரு, சாமுராயோடு தனியாக சண்டை இட்டு அவனைக் கொன்றதாக கூறுகிறான். ஆனால் அந்தப் பெண் ஓடிவிடுகிறாள்.
அடுத்தடுத்து அந்தப் பெண்ணும், சாமுராயின் ஆவியும் சொல்லும் கதைகள் சில விஷயங்களில் ஒத்துப் போகின்றன. பல விஷயங்களில் மாறுபடுகின்றன. அந்தப் பெண் சொல்லும் கதையில் தன்னை சின்னாபின்னப்படுத்திய டஜோமரு ஓடிவிட்டதாகவும், தன் கணவனைத் தான்தான் விடுவித்ததாகவும் கூறுகிறாள். அவள் கணவன் அவளை வெறுப்போடு பார்த்ததால் அவள் அதிர்ச்சி அடைகிறாள். தொடர்ந்து தான் மயக்கமாகிவிட்தாகவும் கண் திறந்து பார்த்தால் தன் கணவன் குறுவாளால் (அழகான பிடியுடன் கூடிய விலை மதிப்பற்ற குறுவாள் - dagger) கொல்லப்பட்டிருந்ததை மட்டுமே காண நேர்ந்ததாகவும் கூறுகிறாள். அவளுடைய கதையில் பலவந்தப் படுத்துதல் மட்டுமே சொல்லப் படுகிறது. அவள் மனம் மயங்கி அந்தக் கொள்ளைக்காரனுடன் இணைந்தாளா என்று அவள் சொல்லவில்லை.
சாமுராயின் ஆவி முற்றிலும் வேறு விதமாக சொல்கிறது. தன்னை வஞ்சித்த டஜோமருவை விட தன் கண் முன்னால் சோரம் போன மனைவி மேல் அதிக ஆத்திரம் தெரிகிறது. அத்தோடு டஜோமரு அவளை தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும் சொல்கிறது. இருவரும் ஓட யத்தனிக்கும் போது அவள் டஜோமருவிடம் அந்த சாமுராயைக் கொன்று விடுமாறு சொல்ல, டஜோமருக்கு அது உவப்பானதாக தோன்றவில்லை. அதற்கு தண்டனையாக அவளை அங்கேயே கொல்லட்டுமா என்று சாமுராயையே கேட்கிறான் டஜோமரு. அந்தப் பெண் ஓடிவிடுகிறாள். டஜோமரு அவளைத் தேடி ஓடிச் செல்கிறான். சில மணிநேரம் கழித்து திரும்பி வரும் அவன், சாமுராயை விடுவித்து விட்டு தன் வழியே சென்று விடுகிறான். சாமுராய் அந்த குறுவாளால் தன்னைத் தானே மாய்த்துக் கொள்கிறான். இது சாமுராயின் ஆவி சொல்லும் சம்பவம்.
இந்த சம்பவம் நடந்தப் பிறகு, கொலை செய்யப்பட்ட சாமுராயின் சடலத்தை பார்த்த சாட்சிகள் இரண்டு பேர். அந்த விறகு வெட்டி. ஒரு துறவி. இவர்கள் இருவரும் ஒரு மழைநாளில் ஒரு பாழடைந்த சத்திரத்தில் இந்த வித்தியாசமான சம்பவத்தைப் பற்றி விவாதிக்க ஒரு வழிபோக்கன் அங்கே வருகிறான். அவனுக்கு (அதாவது நமக்கு) இந்த மூன்று பார்வைகளும் (perceptions) சொல்லப்படுகிறது. முதலில் தான் கொலையான சாமுராயின் சடலத்தை மட்டும் பார்த்ததாக சொல்லும் விறகுவெட்டி இறுதியில் தான் அந்த சம்பவத்தை முழுவதுமாக பார்த்ததாகவும் அதை போலிஸ் விசாரணையில் மறைத்து விட்டதாகவும் ஒத்துக் கொள்கிறான். அவனோடு பார்வையில் நடந்த சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறான். அவனுடைய கூற்றையும் அந்த இறுதிக் காட்சிகளையும் நீங்கள் படத்தில் காணலாம்.
ஒவ்வொருவர் பார்வையில் சில உண்மைகளும், சில பொய்களும் சொல்லப்படுகின்றன. சாமுராய் தான் கொல்லப்படவில்லை என்று சொல்கிறான். டஜோமரு அந்த பெண்ணை தன் கூட வர அழைத்தைப் பற்றி சொல்லவில்லை. அந்தப் பெண் தான் டஜோமரு-பாற் ஈர்க்கப்பட்டதை சொல்லவில்லை. விறகுவெட்டி அந்த விலைமதிப்பற்ற குறுவாளைப் பற்றி சொல்லவே இல்லை. ஒவ்வொருவரின் பார்வையில் சில விஷயங்கள் விட்டுப் போகின்றன. சில விஷயங்கள் அழுத்தமாக சொல்லப் படுகின்றன.
அந்தப் பெண் நமது சௌகார் ஜானகி மாதிரி அழுது கொண்டே இருக்கிறார். பல காட்சிகள் நுட்பமாக எடுக்கப் பட்டிருக்கின்றன. அந்த மழையும் அதைத் தொடர்ந்து அந்த சத்திரத்தில் அவர்கள் குளிர்காய்வதும் தொடர்ந்து அந்த துறவிக்கும், வழிபோக்கனுக்கும் நடக்கும் உரையாடலும் நுட்பமாக பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆவி இறங்கிப் பேசும் அருமையாக எடுக்கப் பட்டிருக்கின்றன. 1950-ல் வெறும் 2 இலட்ச ரூபாய் பொருள் செலவில் எடுத்திருக்கிறார்கள். அடூர் கோபாலகிருஷணனின் சில படங்களை தூர்தர்ஷனில் பார்த்திருக்கிறேன். இந்த மாதிரி படங்களில் 6 நிமிடக் காட்சிகள் 60 நிமிடங்களுக்கு காட்டப்படுகின்றன என்று ஒரு எண்ணம் உண்டு (தவறானதொரு எண்ணமாகவும் இருக்கலாம்).
ஆனால் வெறும் 6 முக்கிய பாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டே இரண்டு இடங்களில் படப்பிடிக்கப்பட்ட இந்தப் படம் இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கவில்லை. நடுவே டஜோமருவைப் பிடித்துக் கொடுக்கும் ஒரு வழிபோக்கனும் இறுதியில் ஒரு கைக்குழந்தையும் கொசுறாக வந்து போகிறார்கள். அவ்வளவே.
இந்தப் படம் வெளியான புதிதில் ஜப்பானில் அவ்வளவாக ஓடவில்லையாம். ரொம்ப குழப்பமான கதை என்று ஒரு கருத்து நிலவியது என்று விக்கிபீடியா சொல்கிறது. தற்போது சில தமிழ்ப்படங்கள் அங்கே நன்றாக ஓடுவதாக கேள்விப் படும்போது அகிராவின் ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்க வேண்டியதுதான்.
கதையை இங்கே சென்று முழுவதுமாகப் படிக்கலாம். முழுத் திரைப்படமும் Google Video-ல் கிடைக்கின்றது.
note: In July 2006, a Japanese court ruled that all movies produced prior to 1953 were to be made available into the public domain [9], but this case as proved not applicable for Akira Kurosawa's works, after a Tokyo District Court judgment on September 14 2007 : [10], [11], ou [12] ; Akira Kurosawa's movies won't be public domain until 2036.
எழுதியது Sridhar V at 8/13/2008 09:51:00 PM 18 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: Roshomon, அகிரா குரசோவா, சினிமா, ரஷொமோன்
ரைஃபிளால் நான் சுட்டபொழுது...
August 11, 2008'யே ஹை ஃபையரிங் பின். அபி காலி ஹை. க்யோங் கி யே ப்ராக்டிஸ் கர்னேகா ரைஃபிள் ஹை' நாயக் (இரண்டுப் பட்டி) உண்ணி கிருஷ்ணன் NCC Cadets-களுக்கு .303 ரைஃபிளை பிரித்துப் போட்டு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார்.
மதுரை B4 போலீஸ் ஸ்டேஷன் போய் 11 ரைஃபிள் எடுத்துக் கொண்டு சேதுபதி ஸ்கூல் மைதானத்தில் நாங்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பத்தாம் வகுப்பு. அடுத்த மாதம் பரீட்சை. அதை B சர்டிபிகேட் பரீட்சை என்பார்கள். கல்லூரியில் C சர்டிபிகேட். பத்து விநாடிகளில் மேகஸினை லோட் பண்ணி சேஃப்டி லாக் போட்டு கீழே வைக்க வேண்டும். அடுத்த செட் அதே பத்து விநாடிகளில் மேகஸினை அன்லோட் செய்து கீழே வைக்க வேண்டும். 'பரேட்! ஜெனெரல் சல்யூட் சலாமே ஷஸ்த்ர' என்று சொன்னவுடன் வலது கையில் இருந்து ரைஃபிளை செங்குத்தாக தூக்கி இடது கையால் பேரலில் ஒரு அடி அடித்து பிடித்து, வலது காலை தூக்கி இடது காலுக்கு பின்னால் ஒரு 45 டிகிரியில் வைத்து வலது கையை ரைஃபிளின் கீழே 'பட்' பகுதியில் சல்யூட் அடிக்கும் நிலையில் வைக்க வேண்டும். நான்கு விரல்களும் ஒன்றாக விரித்து ஒரு பக்கமும், கட்டை விரலை இன்னொரு பக்கமும் பிடித்துக் கொண்டு விறைப்பாக நிற்க வேண்டும்.
இப்பொழுதும் ரைஃபிளை பார்க்கும்போது எங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ராணுவ வீரர்கள் அந்த ரைஃபிள் என்பது ரானுவ ஜவான்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று சொல்லித் தந்தது நன்றாக நினைவிலிருக்கிறது. திரைப்படங்களில் ராணுவ வீரர்கள் தொப்பியை எப்படி அணிவார்கள் என்று கூட தெரியாமல் காட்சிகள் வைக்கும் போது ஏற்படும் எரிச்சல் சொல்லி மாளாது.
மதுரை நாகமலை புதுக்கோட்டை பக்கத்தில் ஃபயரிங் ரேஞ்ச் இருக்கிறது. வடக்கே ரிஸர்வ் லைன் பக்கமும் உண்டு. அந்த ராணுவ ட்ரக்கில் ஏற்றிக் கூட்டிக் கொண்டு போவார்கள். ஆறு ஆறு கேடட்களாக வரிசையாக உட்கார்த்தி வைத்து... முன்னால் மணல் மூட்டையில் ரைஃபிள் படுக்க வைக்கப்பட்டு இருக்கும். 'நெக்ஸ்ட் லைன்' என்று சொன்னவுடன் எழுந்து சாவ்தானில் நிற்க வேண்டும். மொத்தம் மூன்று நிலைகளில் ஒரு ரைஃபிளை இயக்கலாம். படுத்துக் கொண்டு, முழங்காலிட்டு அல்லது நின்று கொண்டு. NCC மாணவர்களுக்கு எப்பொழுதும் படுத்துக் கொண்டுதான் ரைஃபிளை சுட பயிற்சி கொடுத்தார்கள். 'பொசிஷன்' என்றவுடன் தடாலென்று கீழே படுத்து இடது முழங்கையை ஊன்றி ரைஃபிளின் அடி பேரலை பிடித்துக் கொள்ள வேண்டும். பேரலின் முன் பகுதி மணல் மூட்டையின் மேல். பட் (butt) வலது தோளில் நன்றாக பொதிந்து கொள்ள, வலது உள்ளங்கை ஸ்மால் ஆஃப் த பட்-ல் வைத்து வலது ஆட்காட்டி விரலை டிரிக்கர் காஜில் வைத்துக் கொண்டு, அந்த போல்டின் மேல் இருக்கும் சிறிய 'U' வடிவ இடைவெளி வழியாக, பேரலின் முன்பகுதியில் மேல் நோக்கிக் கொண்டிருக்கும் சின்ன 'I' வடிவத்தை நடுவில் நிறுத்தி, அப்படியே அம்பது அடி தொலைவில் வைக்கப் பட்டிருக்கும் டார்கெட் பேப்பரின் நடு கருப்புப் புள்ளியில் பொருத்தினால் 'Bulls Eye'. ஐந்து ரவுண்ட் தருவார்கள். பள்ளியில் படிக்கும் பொழுது நடந்த பயிற்சியில் 2-3 குண்டுகள் டார்கெட் பேப்பரில் பட்டிருக்கும். அவ்வளவுதான்.
.22 ரைஃபிள் சுட்டால் 'ஷ்விங்ங்' என்று சத்தம் மட்டும் கேட்கும். .303-ல் சுட்டால் ஐசக் ந்யூட்டன் எல்லாம் நினைவிற்கு வருவார். rifle recoil சில சமயம் தோள்பட்டையில் சிவப்பு தடத்தை பதிக்க 'டுமீங்ங்' என்று சத்தத்துடன் வெடிக்கும். அந்த அதிர்விலே அடுத்த டார்கெட்டில் போய் வெடித்த எய்ம்களும் உண்டு.
கல்லூரிக் காலத்தில் RDC கேம்ப் என்ற ஒரு மாயமானை துரத்திக் கொண்டிருந்தேன். குடியரசு தின அணிவகுப்புக்கு NCC-ல் இருந்து ஒரு contingent அனுப்புவார்கள். அதற்காக கிட்டத்தட்ட ஒரு வருடமாக பல கேம்புகளில் ஆட்களை திரட்டுவார்கள். அதில் ஒரு பகுதி best cadets என்று சொல்லப்படும் ஆல்-இன்-ஆல் அழகுராஜா போட்டி. முதல் கேம்பில் வந்த ஒரு lt. Colonel "நீ நல்ல உயரமாக இருக்கிறாய் அதனால் பெஸ்ட் கேடட் தேர்விற்கு வா " என்று சொல்லிவிட அதற்கென்று ஸ்பெஷல் பயிற்சிகள் தொடங்கின. கம்பாஸ் வைத்து மேப்பில் இடம் கண்டு பிடிக்க வேண்டும். ஆர்மியின் ஆப்பரேஷன்கள் பற்றி உரைகள் நிகழ்த்த வேண்டும் (ஜெனெரல் குல்தீப் சிங்கின் ஆப்பரேஷன் ப்ளூஸ்டார் என்ன தவறுகள் செய்தார்?). 6 கிலோமீட்டர் கிராஸ் கண்ட்ரி ஓட்டம் ஓடி அதிலும் நல்ல ரேங்கில் வர வேண்டும். பல்வேறு தடைகளுக்கு இடையே 500 மீட்டர் ஓடி ஒரு 6 அடி சுவற்றை எகிறி குதித்து தாண்ட வேண்டும். ஓடினேன். ஓடினேன்... எல்லா அப்ஸ்டக்கில்ஸ்-ஐயும் கடந்து ஓடினேன். சுவற்றை தாண்டலாம் என்றால் ஒரு கையில் ரைஃபிள், பல பைகளில் கற்கள், காலில் கனமான ஆர்மி ஷூ என்று எக்குதப்பாக எக்யூப்மெண்ட் மாட்டிக் கொண்டு... மூச்சுவாங்கியது. மேப் ரீடிங்க் எல்லாம் போட்டுத் தாக்கியாகிவிட்டது.
இதன் நடுவே ரைஃபிளை வைத்து சுட வேண்டும். சும்மா இல்லை 5 ரவுண்ட்களும் பக்காவாக bulls eye-ல் பதிய வேண்டும். அங்கேதான் நாயக் சுபேதார் ராமன் நாயர் வந்தார். குமரித் தமிழில் அவர் பேசுவது அலாதியாக இருக்கும். நான்-கமிஷன்ட் ஆஃபிசராக சேர்ந்து நாயக் சுபேதார் வரை பிரமோஷன் வாங்கியவர், பின்னாளில் கமிஷன்ட் ஆபிசராக உயர்வு பெற்று கேப்டனாக ஓய்வுப் பெற்றார். ஒரே நாளில் அவர் சலாம் வைத்த நிறைய இளம் ஆஃபிசர்கள் அவருக்கு சலாம் வைக்கும் நிலைக்கு மாறியவர். அவர்தான் சொன்னார் 'மக்கா....நல்லா மூச்சை இழுத்துப் பிடிச்சிட்டு சுடு' என்று மூச்சின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்தவர். முதல் சுற்றில் 3-ரவுண்ட்கள் bulls eye. 2-ரவுண்ட்கள் பக்கத்தில் இருக்கும் உள்-வட்டத்தில். மொத்தம் 2 இன்ச்களுக்கு இடையே 5 ரவுண்ட்கள். Colonel அருகே வந்து சொன்னார். 'யு ஹாட் ஃபையர்ட் வித் 2 எய்ம்ஸ். நெக்ஸ்ட் டைம் ட்ரை வித் சிங்கிள் எய்ம்'. அந்த கேம்ப்பில் சக கல்லூரி நண்பர்கள் காதுகளில் புகை விட மதுரை அளவில் பெஸ்ட் கேடட்டாக தேர்வாகி விட்டேன். சந்தோஷம்தான். திடீர் என்று எப்படி இப்படி ரைஃபிள் ஷூட்டிங்கில் கலக்குகிறான் என்று நண்பர்களுக்கு ஆச்சர்யம்.
அடுத்த கட்டமாக 6 டீம்களுடன் போட்டி. சென்னை (இரண்டு டீம்கள்; சென்னை A மற்றும் சென்னை B), திருச்சி, கோவை, மற்றும் பாண்டிச்சேரியுடன் போட்டி. ஒவ்வொரு ஊரிலிருந்து நன்றாக பயிற்சி எடுத்துக் கொண்டு வந்தார்கள் பெஸ்ட் கேடட்டாக. அதிலும் சென்னைப் பசங்கள் எமகாதகர்களாக இருந்தார்க்ள். பெண்களுக்கு லைட் வெய்ட் ரைஃபிள். அவர்கள் பிரிவில் பெஸ்ட் கேடட் சுட்ட (தோசை இல்லீங்க்ணா) டார்கெட்டை பார்த்தால் ஒரே ஒரு குண்டுதான் பட்டிருந்தது போல் இருந்தது. பின்னர்தான் தெரிந்தது 5 ரவுண்ட்களும் ஒரே இடத்தில் நெருக்கமாக சுட்டிருந்தார். "இப்படியெல்லாம் சுட எப்படி ப்ராக்டிஸ் பண்ணீங்கன்னு" கேட்டு விடலாம் என்று பார்த்தால் அவர் ரைஃபிளை எப்பொழுதும் தோளோடு சேர்த்தே வைத்திருந்தார். எதற்கு வம்பு என்று வந்துவிட்டேன். இந்த முறை போட்டி நடந்ததோ மதுரை பசுமலையில். மதுரையின் விருந்தோம்பலுக்கு இலக்கணமாய் சென்னை-பி அணியின் பாலா என்ற கேடட் தமிழக அளவிற்கு பெஸ்ட் கேடட்டாக தேர்வாகி அடுத்த கட்டம் சென்று விட்டார். சென்னை பீச்சில் சிலமுறை பலூன் சுட்டது போக நமக்கும் ரைஃபிளுக்கும் உண்டான தொடர்பு அத்தோடு முடிந்து போனது.
இப்பொழுது ரைஃபிளில் சுடுவது எல்லாம் மிகவும் ஹை-டெக் சமாச்சாரம். ஏகப்பட்ட முன்னேற்றங்கள். சில வருடங்களாகவே இந்தியாவில் ரைஃபிள் ஷூட்டிங்க்க்கு பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. பல சாதனைகள் நிகழ்த்தப் பட்டு இருக்கின்றன. இம்முறை அபிநவ் பிந்த்ரா ஒரு புதிய அத்தியாயம் எழுதியிருக்கிறார். அவருக்கு வாழ்த்துகள் பல.
எழுதியது Sridhar V at 8/11/2008 03:00:00 PM 14 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: ஒலிம்பிக், சுயபுரானம், ரைஃபிள்
பைசல் ஆன பழைய கணக்கு!
August 8, 2008"எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. நீங்கதான் 9-ம் வகுப்புல நம்பர் தியரி பத்தி எனக்கு வகுப்பு எடுத்தீங்க. நீங்க சரியா பாடம் எடுத்திருந்தா எனக்குப் இப்ப இந்த புரிதல் பிரச்சினை வந்திருக்காது. அதனால நீங்கதான் இந்த ஆராய்ச்சி முடிய உதவி செய்யனும்" என்று தீர்மானமாக சொன்னான் விஷ்வா. இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை பாசோ. 'நான் சாதாரண ஹைஸ்கூல் கணக்கு வாத்தியாருப்பா. எனக்கு தெரிஞ்சது நாலு டெக்ஸ்ட் புக், ஏழு நோட்ஸ், இருவது வருசமா அதே முந்நூத்தம்பது கணக்கைத்தான் திருப்பி திருப்பி போட்டுக்கிட்டு வாரன். நீ என்னமோ பெரிய பெரிய ஆராய்ச்சி எல்லாம் பண்ணிட்டு வந்திருக்க. ரிங்க் தியரி, ஃபீல்ட் தியரின்னு புதுசு புதுசா சொல்ற. இதெல்லாம் எனக்கு ரொம்ப புதுசுப்பா' பரிதாபமாக சொன்னார் பாசோ. பாளளயங்கோட்டை சோமநாதன் என்றால் யாருக்கும் தெரியாது. "பாசோ" என்றால்தான் கண்டிப்பானா கணக்கு வாத்தியார். எப்பொழுதும் வெள்ளை முழுக்கை சட்டையும் அடர்த்தியான வண்ணத்தில் கால்சராயும் அணிந்திருப்பார். குள்ளமாக, கெச்சலாக, தொலைவில் இருந்து பார்த்தால் பள்ளி மாணவன் போலத்தான் இருப்பார். அவர் வீட்டு மொட்டை மாடியில் கீத்துக் கொட்டகைப் போட்டு 'ஙய்ய்' என்று ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் மங்கலான ட்யூப்லைட் வெளிச்சத்தில் ஒரு பத்து பதினைந்து பேர் கணக்கு போட்டு பழகிக் கொண்டிருப்பார்கள். எல்லாம் அவர் பள்ளிக்கூடத்து மாணவர்கள்தான். பொதுத் தேர்விற்காக தனி ட்யூஷன். |
| மணி எட்டரை அடித்தவுடன் பாசோ கணக்கு புத்தகத்தை மூடி வைத்துவிடுவார். சொல்லி வைத்தாற்ப் போல பையன்களும் உடனே தத்தம் நோட்டுப் புத்தகங்களை ஏறக் கட்டி விட்டு கிளம்பிவிடுவார்கள். தொடர்ந்து டீவி சீரியல் பார்த்துக் கொண்டே இரவு உணவு முடித்துவிட்டு படுக்கையை தட்டிப் போட வேண்டியதுதான். அவர் விடாமல் பார்க்கும் டீவித் தொடரில் இன்றைக்கு நர்மதாவின் தகிடுதத்தங்கள் வேறு அம்பலமாகப் போகிறது. அந்த கண்கொள்ளாக் காட்சியை காண முடியாமல் இன்றைக்கு என்று வந்து சேர்ந்தது வில்லங்கம். "நான் விஷ்வா. உங்க ஓல்டு ஸ்டூடண்ட் சார். 98 பாட்ச். உங்ககிட்டதான் ட்யூஷனும் படிச்சேன். நாங்க மூணு பேர் செட்டா வருவோமே சார்" என்றான். அவருக்கு இந்த அடையாளத்தில் கிட்டத்தட்ட 10 பேர்கள் ஞாபகம் வந்தது. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் 'எப்படிப்பா இருக்கே, என்ன விஷயம்' என்று கேட்டு வைத்தார். "உங்களைப் பாக்கத்தான் காலையில சென்னையிலேந்து வந்தேன். ஒரு வாரம்தான் இந்தியாவுல இருக்கேன். திடீர்னு ஒரு யோசனை மின்னல் மாதிரி. உடனே கார் எடுத்திட்டு நேரா வர்றேன்". அவருக்கு ஆச்சர்யமாக இருந்தது. 'உக்காருப்பா. காபி கீபி சாப்பிடறயா?' கார் எல்லாம் போட்டுக்கொண்டு வந்திருக்கானே என்று யோசனையாக இருந்தது. 'அமெரிக்காவில, மிக்சிகன் யூனிவர்சிடியில ஆராய்ச்சி பண்ணிகிட்டு இருக்கேன் சார். நம்பர் தியரில அண்ட் கிளாஸ் ஃபீல்டு தியரி. இந்த வருசம் முடிஞ்சுரும்.' என்றான் பாசோக்கு ஒரே உற்சாகமாக இருந்தது. ஒரு சர்வதேச பல்கலைகழக ஆராய்ச்சி மாணவன் தன்னைத் தேடி வந்திருப்பதா அல்லது தன்னிடம் படித்த மாணவன் இவ்வளவு தூரம் முன்னேறி இருப்பதா என்று திக்குமுக்காடிப் போனார். 'இருப்பா காபி சாப்பிடு. டிபன் எதுவும் எடுத்துக்கறியா? சுலோ, இங்க வ்ந்து பாரேன். நம்ம ஓல்டு ஸ்டூடண்ட் வந்திருக்கார். பேரென்னப்பா சொன்னே?' நர்மதாவோட கதையை மனைவியிடம் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். பெரிய காரில் வந்து ஏதோ ஆராய்ச்சி என்றெல்லாம் சொல்கிறானே. 'கொஞ்ச நாளா ஒரு பிரச்சினை. கடைசியில ஞாபகம் வந்தது நீங்கதான். அதான் நேர வந்துட்டேன். ஒரு வாரத்துல ஊருக்கு வேற போகனும்.' என்று அவர் முகத்தைப் பார்த் 'சொல்லு. என்ன பிரச்சினை' என்றார். அப்பொழுதுதான் இந்த கதை தொடக்கத்தில் வரும் குற்றச்சாட்டை விஷ்வா அவர் மேல் வைத்தான். அவன் கையில் சில பேப்பர் கட்டுகளை வைத்துக் கொண்டு, 'எது புரியலன்னு சொல்லுங்க சார். நான் திரும்ப சொல்றேன். என்னோட பிரச்சினை இங்கதான் சார் இருக்கு.' விட மாட்டான் போல. 'இந்த தேற்றத்தை எப்படியாவது நிறுவனும். அப்பதான் இந்த ஆராய்ச்சி முழுசாவுது. இல்லைன்னா நான் பட்ட இத்தனை வருச உழைப்பும் வீண். ' என்றான் வருத்தமாக. 'ஏம்ப்பா, இண்டர்நெட் அது இதுன்னு ஏகத்துக்கு இருக்கே. உங்க யூனிவர்சிட்டில பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் இருப்பாங்களே. என்னால என்னப்பா செய்ய முடியும்? ' 'பிரச்சினை என்னன்னா சார்... எனக்கு அடிப்படையில ஒரு தப்பு தெரியுது. நான் எண்களைப் பத்தி தெரிஞ்சிகிட்டதுல ஒரு குறை இருக்கு. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு நீங்கதான் எனக்கு முதல்ல நம்பர் தியரி பத்தி வகுப்பு எடுத்தீங்க. அப்ப எனக்கு தெரியாம போனதுக்கு முக்கிய காரணம் நீங்கதான்' குரலில் தீவிரம் கூடி இருந்தது போல் இருந்தது. பாசோவுக்கு இப்பொழுது ஒரு சம்சயம் வந்தது. இது ஏதோ டீவிக்காக பண்ணுகிற காமெடி நிகழ்ச்சிப் போலத் தோன்றியது. அதான் அடிக்கடி போடுகிறார்களே, தூரத்தில் காமெரா வைத்துக் கொண்டு ஏட்டிக்குப் போட்டியாக ஏதாவது செய்வார்கள். அப்புறம் ஒரு கோமாளி குல்லாவை தலையில் மாட்டி, தலையை சுற்றி வட்டம் போட்டு காண்பித்து எல்லாரும் சிரிப்பார்கள். நாளைப் பள்ளிக்கூடம் போனால் பையன்களும் சிரிப்பார்களோ? அந்த ஆர்எம்எஸ் வழிச்சிகிட்டு இல்ல சிரிப்பான். நைச்சியமா பேசி அனுப்பிடலாமா? காருக்குள்ளேயா காமெரா வைத்திருக்கிறான்? அட இந்த காலத்துலதான் சட்டை பட்டனுக்குள்ளக் கூட வைத்திருக்கிறார்களே. கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பேப்பர் கட்டுகளை வாங்கி புரட்டிப் புரட்டிப் பார்த்தார். 'சில அடிப்படைகளை நிறுவறதில தகராறு பண்ணுது. பாருங்க, இதுதான் தொடக்கம். Bateman-Horn Conjencture, இதுக்கு ஒரு பாலினாமியல் அனலாக் நிறுவனும். தொடர்ந்து...' அவருக்கு ஏதோ கிரேக்க மொழியில் படிப்பது போலிருந்தது. 'இத பாருப்பா. என் மேல எதுவும் தப்பு இல்ல. நான் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் சொல்லித் தர்ரேன். ஆறு வருசமா தொடர்ச்சியா நூறு சதம் ரிசல்ட். உன் ஆராய்ச்சி தலையும் புரியல வாலும் புரியல. இதெல்லாம் ஆகிற காரியமா தெரியல. நீ காலாகாலத்தில கிளம்பி ஊர் போய்ச் சேரு தம்பி' என்றார் தீர்மானமாக. அவன் எழுந்திருக்கற வழியாக இல்லை. 'இந்த ஆராய்ச்சி ஒரு வாரத்தில முடியலன்னா என்னோட எய்ட் எல்லாம் காலாவதியாயிடும். அப்புறமா நான் வெறுங்கையோடத்தான் திரும்பி வரனும். அதுக்கு முக்கிய காரணமா இருக்கப் போறதும் நீங்கதான்.' என்றான் விரக்தியாக. அவருக்கே இதென்னடா சோதனை என்றது போல் ஆகிவிட்டது. ரொம்பவும் முறுக்கிக்கிட்டா டீவியில எக்குதப்பா வந்திடுமோ? "முதல் Conjencture இப்படி போட்டுப் பாக்கனும். இல்ல சார், அங்க தப்பா போடறீங்க. இட் இஸ் பௌண்டட் பை B. இங்க பாருங்க... q பவர் n டெண்ட்ஸ் டு இன்பினிட்டி. அப்ப எப்படி கன்வர்ஜெண்ஸ் நிறுவ முடியும்? பாத்து சொல்லுங்க சார்" அவன் சொல்லச் சொல்ல இரண்டு மூணு தேற்றங்களைப் போட்டுக் கொண்டே வந்தார். "சரி இப்ப q -வ அப்படியே வச்சிக்கங்க. n டெண்ட்ஸ் டு இன்பினிட்டி. போட்டுகிட்டே வாங்க" விடாமல் இதைப் போடு, அதைப் போடு என்று மாற்றிக் கொண்டே வந்தான். அவர் மனைவி காபி, பிஸ்கெட் என்று என்னவெல்லாமோ எடுத்துக் கொண்டு வந்தாள். ஒரு நல்ல சேலையா கட்டிட்டு வந்திருக்கலாமோ என்று பட்டது பாசோவிற்கு. டீவியில் அவளும் வருவாளோ? கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கழித்து ஒரு வழியாக அவன் அமைதியடைந்தது போல் இருந்தது. 'பாருப்பா, இப்படி நிறுவிடலாம் - மோனிக் பாலிநாமியல்ஸ் ஆர் இர்ரெட்யூஸெபிள் ஆன் திஸ் ரேஞ்ச். டிபெண்டன்ஸ் பாத்தா கொஞ்ச தகராறு இருக்கு. இதுக்கு மேல இம்ப்ரூவ் பண்ண எனக்கு மண்டையில எதுவும் இல்லப்பா. முதுகு வேற வலிக்குது' என்று முனகினார் பரிதாபமாக. கோமாளிக் குல்லாயை எப்பொழுதடா எடுப்பான் என்று பார்த்துக் கொண்டே இருந்தார். 'இது வரைக்கும் போதும் சார். முடிச்சிடுவேன். ரொம்ப தேங்க்ஸ் சார். உங்களை சிரமப் படுத்திட்டேன் ரொம்ப' என்றவாறே கிளம்பி விட்டான். அப்பொழுதுதான் கவனித்தார் அவன் வலது மணிக்கட்டில் நீளமான தையல் தழும்பு. 'என்னப்பா பெரிய தழும்பா இருக்கே' 'ஆமாம் சார். ஸ்கூல்ல கபடி மேட்சுல உடைச்சிகிட்டேன். அதான் சார் சிமன்லால் கப் பைனல்ஸ்ல, புளியங்குளம் ஹைஸ்கூலோட மேட்ச் நடந்துச்சே 98ல' அவருக்கு சட்டென அந்த சம்பவம் நினைவிற்கு வந்தது. |
பெரிய கட்டுப் போட்ட கையோடு அந்தப் பையன் வகுப்பின் பின்புற பெஞ்சில் உட்கார்ந்திருக்கின்றான். பொதுவாக அமைதியாக இருக்கும் வகுப்பில் அன்று ஏனோ ஒரு சலசலப்பு. சிமன்லால் கோப்பையை வென்ற ஹீரோ வகுப்பில் உட்கார்ந்திருக்க மற்ற மாணவர்கள் சும்மாவா இருப்பார்கள்? பாசோ பாதி கணக்கில் நிமிர்ந்து பார்த்தபோது அவன் நோட்டுப் புத்தகத்தில் எதுவும் எழுதாமல் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறான். பாசோவிற்கு சரியான எரிச்சல். அவன் ஏதோ வெற்றிக் களிப்பில் மிதந்து கொண்டிருக்க கூட இருந்த சிலரும் கணக்கில் கவனம் இல்லாமல் அவனோடு சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவனைக் கூப்பிடுகிறார். 'இந்தப் ஸ்டெப்பில் என்ன விடை வருகிறது, சொல்லு பாப்போம்' என்று போர்டை காட்டிக் கேட்கிறார். தன்னை கூப்பிட மாட்டார் என்று நினைத்தானோ என்னவோ ஒன்றும் சொல்லத் தோன்றாமல் மலங்க மலங்க நின்று கொண்டிருக்கிறான். 'இந்த தேற்றத்தோடு முழு வழியையும் நூறு தடவை உக்காந்து இம்பொசிஷன் எழுது' என்று ஒரு தண்டனையை விதித்து விட்டு வகுப்பை தொடர்கிறார். வகுப்பு முடிந்த போதும் மறக்காமல் மானிட்டர் பையனிடம் 'இவன் தொடர்ந்து எழுதி முடிக்கவிட்டு என்னை வந்து பார்க்கட்டும்' என்று சொல்லிவிட்டு ஸ்டாஃப் அறைக்கு சென்று விடுகிறார். மாலை அவன் ஸ்டாஃப் ரூமில் கொண்டு வந்து கொடுத்த பேப்பர் கட்டுகளைப் பார்த்து விட்டு 'எவ்வளவு நேரம்டா ஆச்சு?' என்கிறார். 'மூணு மணி நேரம் சார்' அவன் கண்களில் வேதனை நன்றாகவே தெரிகிறது. கை ரொம்ப வலித்திருக்கும் போல. 'விளையாட்டு க்ரௌண்டோட நிறுத்திக்கனும். வகுப்புல பாடம்தான் பர்ஸ்ட். புரிஞ்சுதா? சரி போ' என்று சொல்லி விடுகிறார். கொஞ்ச நாளில் அவன் பள்ளிக்கு வராமல் இருக்க மற்ற பையன்கள் ஏதோ மணிக்கட்டு எலும்பு சேராமல் போய்விட்டதால் ஆப்பரேஷன் பண்ண வேண்டியிருந்தது என்றும் அதனால் நீண்ட விடுப்பு என்றும் சொல்கிறார்கள். அப்புறம் அவர் வகுப்பு மாறி, அந்தப் பையன் வேறு ஊருக்கு மாறி இப்படி பல மாறுதல்களிடையே பாசோ அவனைப் பற்றி முழுவதும் மறந்து விடுகிறார். |
விஷ்வா கிளம்பிப் போய்விட்டான். அவனுக்காக அவர் போட்ட தேற்றங்கள் அங்கேயே மின்விசிறிக் காற்றில் படபடத்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்தன. பக்கதிலேயே பாசோ வெகுநேரம் உட்கார்ந்து கொண்டிருந்தார். சிங்கப்பூர் செல்லும் 7J-376 விமானத்தின் இடது பக்கத்தில் J-3,J-2 இருக்கைகளில் அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 'விஷ்வா, நீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாய்' என்றார் சந்திரபாபு சிரித்துக் கொண்டே. 'நேற்று சில பழைய நட்புகளை சந்தித்து உரையாடிக் கொண்டு இருந்தேன். வித்தியாசமான அனுபவமாக, கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தது. அதான் கொஞ்சம் டானிக் சாப்பிட்ட மாதிரி உற்சாகமா இருக்கு.' என்றான் விஷ்வா மலர்ச்சியான முகத்தோடு. 'எனக்கு இன்னமும் கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்கிறது. நாம் இந்த டோர்ணமெண்டை கண்டிப்பாக வெல்ல வேண்டும் விஷ்வா' கொஞ்சம் படபடப்பாக சொன்னார் சந்திரபாபு. 'கவலையே வேணாம் கோச்! எப்படி ஆடுவது என்று பக்காவாக திட்டம் போட்டு வைத்திருக்கிறோம். உறுதியாக இந்த டோர்ணமெண்டை வெல்வோம்' என்று நம்பிக்கையோடு சொன்னான் இந்திய கபடி டீமின் காப்டன் விஷ்வா. |
எழுதியது Sridhar V at 8/08/2008 03:45:00 AM 16 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: கணக்கு வாத்தியார், சிறுகதை, பாசோ
பில் கேட்ஸை மிஞ்சிய கோயம்புத்தூர்காரர்
August 6, 2008உலகின் தலைசிறந்த தொழில் சிந்தனையாளர் - Business Guru - தர வரிசையில் முதல் இடத்தில் ஒரு தமிழர் கோயம்புத்தூர் கிருஷ்ணாராவ் பிரகலாத். இரண்டாம் இடத்தில் இருக்கறது போன மாசம் ஓய்வுப் பெற்ற பில் கேட்ஸ்.
முதல் 50 சிந்தனையாளர்கள்
இவரைப் பற்றி சில குறிப்புகள்:
பிறந்தது கோயம்புத்தூரில். படித்தது சென்னையில். மேற்படிப்பு ஹார்வேர்டு பல்கலைகழகம். தற்போது மிக்சிகன் பல்கலைகழகத்தில் பிஸினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் துறையின் தலைவராக பணிபுரிகிறார்.
இவர் எழுதிய புத்தகங்கள்:
Multinational Mission: Balancing Local Demands and Global Vision (1987)
Competing for the Future (1994)
The Future of Competition: Co-Creating Unique Value with Customers (2004)
இந்தியாவின் எதிர்காலம் பற்றி இவர் சொல்கையில் 1929-ல் ஏற்பட்ட 'பூர்ண சுயராஜ்ஜியம்' பற்றியும் அது ஒவ்வொரு இந்தியனிலும் ஏற்படுத்திய தாக்கத்தையும் நினைவு கூர்கிறார்.
சமூக அடித்தட்டு மக்களின் (bottom of the pyramid) சந்தையை உருவாக்குவதின் மூலம் அவர்கள் தங்களுகுண்டான அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்பது இவரது புதிய சித்தாந்தம்.
மைரோசாஃப்டின் பில் கேட்ஸோடு இவர் நடத்திய விவாதத்தை இங்கே சென்றுப் பார்க்கலாம்.
கிரியேடெடிவ் காபிடலஸித்தைப் பற்றி பில்கேட்ஸ் பேசுகையில் பிரகலாத்தின் தீர்வைப் பற்றி குறிப்பிடுகிறார்.
கென்யாவின் விவசாயிகளுக்கு செல்போன் சேவை குறைந்த செலவில் கிடைப்பதையும் அதனால் அடித்தட்டு மக்களுக்கு என்ன பிரயோசனம் என்பதையும் பிரகலாத் விளக்குகிறார்.
உலகமயமான நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் நிறுவனங்கள் அடித்தட்டு மக்களை குறித்து தங்கள் சேவையை குவிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.
இவரது கருத்துக்கள் இன்றைய தடைகளற்ற வாணிப உலகில் மிகவும் முக்கியமானவை.
எழுதியது Sridhar V at 8/06/2008 12:50:00 PM 11 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: 50 சிந்தனையாளர்கள், அடித்தட்டு மக்கள், பிரகலாத், மேலாண்மை
குசேலன் பற்றிய கதைகளும், விமர்சனங்களும்
August 1, 2008முதல் கதை: பாகவத புராணத்தில் வருகிறது. கண்ணனும், குசேலர் (எ) சுதாமருக்கும் உள்ள நட்பு பற்றிய கதை. பத்தாவது காண்டத்தில் வரும் இந்தக் கதையில் குசேலர் கண்ணனின் ஆயர்பாடி தோழன். பின்னர் கண்ணன் அரசனானவுடன் அவனிடம் உதவி கேட்டுப் போகிறார். குருசேத்திரப் போர் முடிந்தவுடன் கண்ணனுடன் தத்துவ விசாரங்களிலும் ஈடுபடுகிறார்.
இரண்டாம் கதை: சுஜாதா எழுதியது. மத்யமர் தொடரிலா / தூண்டில் கதைகள் தொடரிலா என்று ஞாபகம் இல்லை. அதே குசேலன் / கிருஷ்ணன் நட்பை சம காலப் பின்னணியில் அமைத்த கதை. குசேலர் தன்னுடைய பால்ய நண்பனும் தற்போதைய தமிழக அமைச்சருமான (அப்படித்தான் நினைக்கின்றேன்) கிருஷ்ணனை பார்த்து உதவி கேட்கிறார். இறுதியில் ஒரு வரி சேர்த்திருப்பார். அதை இந்தப் பதிவில் எழுத முடியாது. கதை கிடைத்தால் படித்துப் பாருங்கள். நல்ல விறுவிறுப்பாக இருக்கும்.
மூன்றாம் கதை: கேரள ஸ்ரீனிவாசன் 'கத பறயும்போள்' திரைப்படத்திற்காக எழுதிய கதை. இதுவும் ஏழை பணக்கார நண்பர்களைப் பற்றிய கதைதான். இதில் சிறப்பு அம்சம் கிளைமேக்ஸில் அந்த பணக்கார நண்பன் சொல்லும் ஃப்ளாஷ்பேக். இந்த ஒரு 'நாட்'டை வைத்து அருமையான ஒரு கதை எழுதியிருக்கிறார். தமிழில் வெளியாகியுள்ள 'குசேலன்' படத்தை ஒரு விபத்து போல் பார்த்தாகிவிட்டது. ப்ளாக் எல்லாம் வைத்துக் கொண்டு ரெண்டு வரி எழுதவில்லையென்றால் எப்படி?
இந்தப் படத்தைப் பற்றிய சில +களும் -களும்...
+ கிளைமேக்ஸில் ரஜினி சொல்லும் ஃப்ளாஷ்பேக். ஒரிஜினல் (பாகவத புரரனம்) குசேலன் கதையிலிருந்து மாறுபட்ட ஒரு பேரலல் லைன் யோசிச்ச கதாசிரியருக்கு ஒரு பாராட்டு. இதுவே படத்தை ஓரளவிற்கு தாங்கிப் பிடிக்கிறது.
+ ரஜினி ச்சும்மா பற்ந்து பற்ந்து சண்டை போடாதது. நல்லவேளை.
+ பசுபதி. கொஞ்சமாவது இயல்பான நடிப்பிற்காக.
+ M S பாஸ்கரின் அதிரடி இங்க்லீஷ். காவல் நிலையத்தில் அவர் இன்ஸ்பெக்டரிடம் நன்றி கூறும்போது தியேட்டரே அதிர்கிறது.
+ ஆர். சுந்தராஜன் ரஜினியிடம் கேட்கும் கேள்விகள். 'என்ன பைத்தியக்காரத்தனம் சார்... ஒரு சின்னப் பெண் பின்னாடி போய் 'பழக வாங்க, பழக வாங்க'ன்னு கூப்பிட்டுகிட்டே இருக்கறது'
+ வடிவேலு சூப்பர்ஸ்டார் அசோக் குமாரை பார்த்துவிட்டு ஆடும் ஆட்டம்.
+ அவ்வப்போது லிவிங்க்ஸ்டன். அங்கங்கே சந்தானம் என்று வெகு சில காட்சிகள் சிரிப்பு வரவழைக்கின்றன.
+ சின்னி ஜெயந்த் டச் ஃபோனை எடுத்து சந்தானத்திடம் காட்டும் காட்சி.
ஸாரி இதுக்கு மேல வேற + ஒண்ணும் கண்ணுக்குத் தெரியல .
- உலகத்தரம் என்று எல்லாம் ஜல்லியடிக்க வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு உள்ளூர் தரத்துக்காகவது காட்சிகள் வைத்து இருக்கலாம். ரஜினியின் சம்பளத்தை தவிர்த்து மொத்தப் படமுமே 1-2 கோடிகளுக்குள் சுருட்டி விட்டார்கள்ப் போல. சொதப்பல் ஸெட்டிங்ஸ். விளம்பரப் படங்களிலேயே தரமான கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் இடம்பெறும் போது மீன்கள் துள்ளி விளையாடும் காட்சிகள் எல்லாம் ஏதோ கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் சேவர் போலத்தான் தெரிகிறது. காட்சிகளிலும், நடிகர்களிடம் இவ்வளவு நாடகத்தனமா? முதல் பாதி அவ்வளவு தொய்வு.
- வடிவேலு காமெடி. அதிலும் நயன்தாரா அறையில் அவர் மாட்டிக் கொள்ளும்போது.... ஹலோ இது ஏதும் டாக்டர் பிரகாஷ் எடுத்த படத்தோட 'பிட்'டா என்ன?
- லிவிங்க்ஸ்டன் காமெடியாம். சுத்தமாக சிரிப்பு வரவில்லை. அதுவும் அந்த ஒன்பதாவது அதிசயம் எல்லாம் ஓவருங்கண்ணாவ்...
- சந்திரமுகி பார்ட் 2 எடுக்கிறார்களாம். அமெச்சூர்தனமான காட்சிகள். ஷூட்டிங் எடுப்பதை படமா எடுப்பதற்காக இப்படியா? வேட்டையன் தலையை வெட்டிக் கொள்ளும் கிராபிக்ஸ் காட்சிகள் எல்லாம் வைத்து... ரொம்பவே கஷ்டபடுத்தறாங்க.
- பிரபு எதற்கு? ஒப்புக்கு சப்பாணியா ஓரமா நிற்கிறார். ஸாரி, ஸ்க்ரீன்ல முக்காப் பங்குக்கு நிற்கிறார்.
- கிராமத்தில் அடாவடி பண்ணும் பணக்காரப் பொண்ணும், விவசாயிகளின் நலனைக் காக்க ட்ராக்டரை ஓட்டிகிட்டு வருகின்ற ஹீரோவும்... அய்யோ... ஏன், ஏன் இந்த கொலைவெறி?
- பின்னனி இசை. ரஹ்மான் வீட்டு ராட்டினமும் (ஜி.வி. பிரகாஷ்) இசையமைக்கலாம். ஆனா போக வேண்டிய தூரம் அதிகம் தம்பி.
- அந்த கிராமம், அதன் நடுவில் இருக்கும் ஷாப்பிங் ஜங்க்ஷன், பாலுவின் குடும்பம் இப்படி எத்தனையோ நல்ல விஷயங்களை சொதப்பலாக காட்சிபடுத்தியிருப்பது.
மேலும்...
விறுவிறுப்பான விமர்சனத்திற்கு இங்கே பாருங்கள்
விரிவான விமர்சனத்திற்கு இங்கே பாருங்கள்
வித்தியாசமான விமர்சனத்திற்கு இங்கே பாருங்கள்
எழுதியது Sridhar V at 8/01/2008 03:53:00 PM 4 மறுமொழிகள் இது தொடர்பாக...
ரசவாதம் - சில குறிப்புகள்
அன்பிற்குரிய ரா.கே,
உங்களின் கடின உழைப்பு எல்லாரும் அறிந்ததே. இந்த 'சுவர்க் கோழியின் சங்கீதம்' சிறுகதை தொகுப்பு பொறுக்கியெடுத்த முத்துக்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சுவர்க்கோழிகளின் 'க்ரீச்ச்' சத்தத்தின் இடையே ஒலிக்கும் அந்த மௌனத்தை சஙகீதம் என்று சொல்லாமல் எப்படி சொல்வதாம்? இழந்து கொண்டிருக்கும் சுயத்தை இந்த சுவர்கோழிகள் சத்தமாகவே சொல்கின்றன. உங்கள் நடை அப்படி இருந்தாற்ப்போல இருந்த சுழட்டி விட்டு விடுகிறது. தெளிவான நீரோடையில் திடீரென்று சுழித்து கொண்டு ஓடும் காட்டாறு போல், காலடியிலிருந்து கம்பளத்தை உருவி விட்டு விடுகிறீர்கள். உங்கள் பலமே சம்பவங்களை அடுக்கடுக்காக அமைத்து படிப்பவனை புரட்டிப் போடுவதில்தான் இருக்கிறது. அந்த சம்பாஷணைகள் எல்லாம் என்னை எனது கல்லூரிக் காலத்திற்கு கொண்டு தள்ளுகிறது. ஒரு சமயம் நீங்கள் இன்னமும் விரிவாக விவாதங்களை நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒருவேளை வாசகன் அதை பூர்த்தி செய்யட்டும் என்று விட்டுவிட்டீர்களோ?
படித்தவுடன் கடிதம் எழுதத்தான் உட்கார்ந்தேன். அதற்குள் சில வேலை அழுத்தங்கள். இதோ உங்களது 'ரசவாத குறிப்புகள்' ஏழாம் முறை படித்தாகி விட்டது. படித்ததும் ஒரு பத்து நிமிடங்களுக்கு வேலையே ஓடவில்லை. சிவவாக்கியர் பாடலில் வரும் 'வில்லின் ஓசைக்கு' சம்பூர்ண சாமியாரின் விளக்கம் சரியாகத்தான் இருக்கிறது. இப்படி யாரும் இதுவரை யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையின் பேரில் ஈர்ப்பு ஏற்பட முக்கிய காரணம் அந்த இறுதிக் குறிப்புகள்தான்.
எங்கேயிருந்து நீங்கள் அந்த குறிப்புகளை சேகரித்தீர்களோ தெரியாது, ஆனால் அவையத்தனையும் உண்மை என்பது திண்ணம். பொதுவாக ரசவாதம் என்றாலே இரும்பை தங்கமாக மாற்ற ஏழு படிகள் சொல்லப்படுகின்றன. சுத்தப்படுத்துதல், வடிகட்டுதல், ஆவியாக்குதல், கரைத்தல், பிரித்தல், விடுவித்தல் மற்றும் கெட்டிபடுத்துதல். இதைத் தவிர உபரி படிகளும் உண்டு. கதிரியமும், காந்தபடுத்துதலும் அப்படியான உபரிப் படிகளில் வரும். உங்கள் கதையில் என்னைக் கவர்ந்தது அந்த செய்முறையின் உபரிப் படிகளை பிரித்துக் கண்டறிந்தது. நிறைய ஆராய்ச்சியாளர்கள் இந்த இடத்தில் தவறித்தான் போய் இருக்கின்றனர். இதை சொல்லும் முன் ஒரு முக்கிய விஷயம் சொல்லி விடுகிறேன். எங்கள் குடும்பத்திற்கும் இந்த ரசவாதத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு.
பல தலைமுறையாக இந்த ரசவாதம் என்னும் பேய் எங்கள் பரம்பரையை பீடித்து வருகிறது. ஒவ்வொரு தலைமுறையிலும் யாராவது ஒருவருக்கு இந்த கிறுக்கு பிடித்துவிடும் போல. இறுதியாக எங்கள் முத்து தாத்தா. குடும்பம் குட்டி என்று எதுவுமில்லாத தனிக்கட்டை அவர். அவருடைய சொத்தெல்லாம் ரசவாத ஆராய்ச்சி பற்றிய அவரது தனியாத ஆர்வமும், புரியாத குறிப்புகளும், அவருடைய யானைக்கால் வியாதியும்தான். இறுதிக் காலத்தில் போக்கிடம் எதுவும் இல்லாத முத்து தாத்தா, கிறிஸ்டோபராக மாறி ஆஸ்டின்பட்டியில் ஒரு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். எல்லா ஜீவன்களுக்கு ஏதோ ஒரு வழி வைத்துதான் இருக்கிறான் அந்த ஆண்டவன்.
எங்கள்து பெற்றோருக்கு நாங்கள் (எனக்கு இரண்டு அண்ணன், ஒரு அக்கா) முத்து தாத்தாவோடு பழகுவது பிடிக்கவே பிடிக்காது. அவருடைய யானைக்கால் வியாதியினால்தான் இப்படி என்று நினைத்திருந்தோம். பிறகுதான் அம்மா சொன்னார்கள் 'ஏழு தலைமுறைக்கு சாபம் இருக்கு மகனே' என்று. அந்தக் கதை சுவாரசியமானது.
எங்கள் முப்பாட்டன்களில் ஒருவர் கடல்கடந்து கப்பலில் பிரயானம் எல்லாம் செய்திருக்கிறாராம். அப்பொழுது கடல்கடந்த சீமையில் ஒரு முனிவரோடு பழக்கம் ஏற்பட்டிருக்கிறதாம். அம்மா அப்படித்தான் சொன்னார்கள். பரசீல முனிவர் என்று பெயர்கூட சொன்ன மாதிரி ஞாபகம். அந்த முனிவர் நடத்திக் காட்டிய பல அற்புதங்களில் ஒன்றுதான் ரசவாதம். இரும்பை அப்படியே சொக்கத் தங்கமாக்கி காட்டும் அற்புதம். எங்கள் முப்பாட்டன் ஒரு நல்ல நேரமாகப் பார்த்து அந்த ரசவாத குறிப்புகளை திருடிக் கொண்டு பாரதம் ஓடி வந்துவிட்டார். கூடவே வந்தது ஏழு தலைமுறை சாபம். அந்த ரசவாத ஆராய்ச்சி ஒரு சைத்தான் போல எங்கள் குடும்பத்தை பீடித்தது. தலைமுறையில் யாராவது ஒருவரை அதற்கு தீனியாக கொடுக்க வேண்டும் போல. அந்த முப்பாட்டன் திருடிக் கொண்டு வந்த குறிப்புகள் ஏதோ புரியாத மொழியில்தான் இருக்கும். எங்கள் பரம்பரையில் ஒவ்வொருவரும் அந்த குறிப்புகளை தங்களுக்குத் தெரிந்த முறையில் ஆய்ந்து தோய்ந்து அரைப் பைத்தியமாகவே ஆகியிருந்தனர். நிறைய உபகுறிப்புகள் சேர்ந்து அது ஒரு பெரும் ஆராய்ச்சி புதினமாகவே மாறி விட்டிருந்தது. அம்மாவின் கணக்குப்படி முத்துத் தாத்தாவோடு தலைமுறை கணக்கு முடிந்து சாபம் விலகிவிட வேண்டும். தாத்தா எப்போதும் ஏதாவது ஆராய்ச்சி என்று ஒருவித பைத்தியமான நிலையில்தான் இருந்து வந்தார். எப்போதும் ஏதாவது மூலிகை, உலோகம், வடிகட்டுதல் என்று கிறுக்குப் பிடித்த மாதிரி. நாங்கள் (முக்கியமாக ஆண் வாரிசுகள்) அந்த ஆராய்ச்சியின் காற்றுப் படாமல் ஜாக்கிரதையாக வளர்க்கப் பட்டோம். இரண்டு மாதங்கள் முன்னர்தான் முத்து தாத்தாவை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது.
ஆஸ்டின்பட்டி ஆசிரமத்தின் நிர்வாகியாக புதிதாக் ஜெர்மனியிலிருந்து கிளெமெண்ட் என்று ஒரு பாதிரியார் வந்திருந்தார். அவர் ஆசிரமத்திற்கு நிலம் வாங்க எங்கள் நிறுவனத்தை அணுகியிருந்தார். அவரைப் பார்த்துப் பேச போகும்போதுதான் அந்த ஆசிரமத்தில் முத்து தாத்தாவை மீண்டும் சந்தித்தேன். அதே சிரிப்பும் சிரத்தையுமாகவே அவர் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு இருந்தார். ஆனால் ஒரு வித்தியாசம். அவருடைய யானைக்கால் வியாதி பூரணமாக குணம் ஆகியிருந்தது.
கிளெமெண்ட் பாதிரியார் அடிப்படையில் ஒரு மருத்துவர். ஜெர்மனியில் இருந்து மத சேவைக்காக தென்னிந்தியா வந்திருந்தார். எதேச்சையாக முத்து தாத்தாவின் குறிப்புகளைப் பார்த்த பொழுதுதான் அது ஜெர்மன் மொழியில் இருந்ததை கவனித்திருக்கிறார். அதில்தான் யானைக்கால் வியாதிக்கான மருத்துவ முறைகளும் குறிக்கப் பட்டிருந்தது என்றும் அது உடனேயே பலனளித்ததையும் சொன்னார். அது பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட குறிப்பாக இருக்க வேண்டும் என்றும் சொன்னார்.
அவருக்கு ரசவாதத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. ஆனால் ரசவாத அதிசயங்கள் நிகழ்த்தியதாக சொல்லப்படும் ஃபிலிப் வோன் என்ற ஒரு ஜெர்மன் மருத்துவர் பதினைந்தாம் நூற்ற்றாண்டில் வாழ்ந்ததாகவும் இந்த குறிப்புகள் பெரும்பாலும் அவற்றை ஒத்திருந்ததாகவும் தனக்குப் தோன்றியதாகச் சொன்னார். முத்து தாத்தா அந்தக் குறிப்புகளை யாருக்கும் முழுவதுமாக கொடுக்கவில்லை. அதனால் கிளமெண்ட் பாதிரியாருக்கு ரசவாதத்தைப் பற்றி அதிகம் தெரியவில்லை.
இதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால், க்ளெமெண்ட் பாதிரியார் சொன்ன மருத்துவர் வாழ்ந்தது 1500-களில். உங்கள் கதையிலும் அதே காலகட்டத்தில் நடந்த ரசவாத அதிசயங்களைப் பற்றி சொல்கிறீர்கள். பாராசெல்ஸஸ் யானைக்கால் வைத்தியத்தில் தேர்ச்சிப் பெற்றவர் என்றும் சொல்கிறீர்கள். அம்மாவின் கதைகளில் வரும் 'பராசீல' முனிவரும் உங்களின் பாராசெல்லஸும் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறமாதிரி எனக்குத் தெரிகிறது. பாருங்கள் இந்த விஷயங்கள் எல்லாம் இந்த ரசவாதத்திற்கு எப்படி ஒரு நம்பகத்தன்மை கொடுக்கிறது என்று. நம்பிக்கையே இல்லாத என்னைப் போன்றவனையும் இப்படி ஒரு கடிதம் எழுத வைத்து விட்டது.
க்ளெமெண்ட் பாதிரியார் உதவியோடு முத்துத் தாத்தாவின் குறிப்புகள் ஓரளவு முழுமையடந்தது. இந்த வயதிலும் தாத்தா இந்த ஆராய்ச்சியின் மேல் வைத்திருக்கும் பாசம் மனிதன் தன் உயிர் மேல் வைத்திருக்கும் பாசத்திற்கு சமானம். ஆனால் தாத்தாவின் வயது அவருடைய வெற்றிக்காக காத்திருக்குமா என்று தெரியவில்லை. இது தொடராமல் போனால் இன்னொரு தலைமுறை பிழைக்கும்.
அண்ணியாருக்கு எனது அன்பு வணக்கங்கள். அமுதா குட்டிக்கு அன்பு முத்தங்கள்.
உங்கள் அன்புக்குரிய
ரங்கநாதன்
'இன்னுமா இந்த ரசவாதம், குழம்புவாதம் எல்லாம் நம்பிட்டிருக்காங்க. என்னம்மோ கெமிக்கல் பார்முலா மாதிரி இருக்குப் பாருங்க' என்று சொல்லிக் கொண்டே கேவசனைப் பார்த்தேன்.
அவர் மையமாக சிரித்துக் கொண்டே அந்த கடிதத்தைப் பைலில் மீண்டும் அடுக்கினார்.
'அப்பைக்கப்போ பழைய கடுதாசியெல்லாம் எடுத்து பாத்துக்கிடறது. நல்ல தெம்பா இருக்கும். நிறைய எழுதிப்பிடனும்னு வேகம் வரும் பாருங்க.' என்றார்.
ஏதோ நினைவுக்கு வந்தவனாய 'சுவர்க்கோழி சங்கீதம் நானும் படிச்சேனே. அதுல இந்தக் கதை காணலியே. இருந்ததா என்ன?'
அவர் சிரிப்பு சட்டென நின்றுப் போனது.
'கதை எழுதினேன். ஆனா பதிப்பிக்கேல்லே. ரங்கநாதனுக்கு கையெழுத்துப் பிரதியோட காப்பியைத்தான் அனுப்பிச்சு இருந்தேன்'
'ஏன், பதிப்பிக்கல? என்ன ஆச்சு?'
அவர் சன்னலுக்கு வெளியே சுற்றி ஓடிக் கொண்டிருந்த அணிற்ப் பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சு விட்டார்.
'இந்தக் கடிதம் வந்து ஒரு மாசத்துல ரங்கநாதனை கைது பண்ணிட்டாங்க' என்னைத் திரும்பிப் பார்த்து 'அவங்க தாத்தாவை அவர்தான் விஷம் வச்சு கொலை பண்ணிட்டாராம். மேலே எதுவும் கேக்காதீங்க. ப்ளீஸ்' என்றார்.
நான் ஒரு வித நப்பாசையுடன் 'அந்த கையெழுத்துப் பிரதி இன்னமும் இருக்கா? இந்த ரசவாத ஆராய்ச்சி முழுமையா தெரிஞ்சிக்கிறலாமேன்ட்டு...' அந்தக் கதையை படிக்க ரொம்பவும் ஆர்வமாக இருந்தது எனக்கு.
அவர் என்னை நிமிர்ந்துப் பார்க்காமலேயே
'அந்தக் கதையை அப்புறம் காணலை.' என்றவர் மீண்டும் என்னை அழுத்தமாகப் பார்த்து 'நான் தேடவும் போறதில்லை' என்றார்.
எழுதியது Sridhar V at 8/01/2008 02:43:00 AM 20 மறுமொழிகள் இது தொடர்பாக...
வகைகள்: அறிவியல் புனைவு, சிறில் அலெக்ஸ் போட்டி, சிறுகதை, சிறுகதை போட்டி, ரசவாதம்