அரைகுறை கடவுள்

February 11, 2009

அகோரி, பிச்சைக்காரர்களின் உலகம், pirates of the caribeean sea போன்ற photo-shoot, இளையராஜாவின் இசை, ஜெமோவின் கதை-வசனம் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வந்த படம் பாலாவின் ‘நான் கடவுள்’. வணிகரீதியாக ஓரளவிற்கு வெற்றியடைந்திருக்கிறது என்று சொல்லப்பட்டாலும், ஒரு படைப்பாக தோல்விதான்.

பொதுவாக நான் பாலாவின் படங்களில் எனக்கு சில அம்சஙகள் பிடித்திருந்தாலும், பல விமர்சஙகளும் இருந்ததுண்டு. விளிம்பு நிலை மனிதர்களை பாத்திரமாக அமைப்பதை தவிர, அவர் படங்கள் பெரும்பாலும் ‘தட்டையான’ போக்கையே கொண்டிருக்கும். அந்த பாத்திரங்களின் குணாதிசயங்கள் கதை போக்கிற்கு எந்தவித மாறுபட்ட பங்காற்றலும் செய்யாது ஒட்டாமல் இருப்பது போல் இருக்கும். படம் பார்ப்பவரின் கற்பனையை தூண்டாமல் நேரிடையான காட்சிபடுத்துதல் பிரதானமாக இருக்கும். அதுவே அவருடைய படங்களின் பெருவாரியான வெற்றிக்கு ஒரு காரணம். ஒருவகையில் எம்ஜியார் படங்களின் சூத்திரமும் அதுதான். இந்தப் படத்தில் வரும் அகோரி பாத்திரம் அப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறது. அகோரிகளுக்கு நல்லவர்கள், கெட்டவர்கள் யாரென்று தெரியும். அவர்கள் மோட்சம் அளிக்கும் அருள் பெற்றவர்கள் என்று வசனங்கள் முதலிலேயே சொல்லப்பட்டுவிடுகின்றன. பிற்பகுதியில் பார்வையாளனுக்கு எந்த வித சந்தேகமும் எழாவண்ணம் அவை காட்சியமைக்கப்படுகின்றன. ஆனால் அகோரிகள் பற்றி இப்படியா ‘கருப்பு / வெள்ளை’யாக சொல்ல முடியும்? கஞ்சா குடிப்பது எந்த வகையில் அகோரிகளை சிவனுக்கு அருகில் கொண்டு செல்கிறது? சுடுகாட்டில் யோகம் செய்யும் அகோரிகள் இறந்த உடல்களை புசிக்கின்றார்களா? அது யோகமா இல்லை மனப்பிறழ்வா? போன்ற கேள்விகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு சராசரி தமிழ்படத்தில் தவறில்லாமல் தீர்ப்பு சொல்லும் நாட்டாமைக்கு நிகராக ஒரு அகோரி சாமியார்.

ஜெமோவின் கதைகளில் கதாபாத்திரங்கள் பல குறியீடுகளால் கட்டமைக்கப்பட்டிருக்கும். ‘மத்தகம்’ கதையைப் பற்றி அவரிடம் உரையாடிய சந்தர்ப்பத்தில் அவர் எழுதியதை விட வாசகனால் பல மடங்கு விஸ்தீரிக்க முடிந்தது புரிந்தது. ஜெமோவின் ’ஏழாம் உலகம்’ சொல்லும் பிச்சைக்கார உலகத்தை ஓரளவிற்கு கண் முன்னே நிறுத்துகிறார் பாலா. ‘அம்பானின்னா யாருப்பா?’ ‘செல்போன் விக்கிறவங்க. உனக்கு அதெல்லாம் புரியாது’ போன்ற வசனங்கள் மிகவும் ரசமான நுட்பமான கிண்டல். ஆனால் நீதிமன்ற காட்சிகளின் முழுப் பரிமானமும் புரியவில்லை. நீதிமன்ற / அரசு இயந்திரங்களில் இரண்டற கலந்துவிட்ட சாதி, மத அரசியலை எள்ளல் செய்வது போல் இருந்தாலும் அழுத்தம் இல்லை. இராமர் பால விவகாரத்தில் வேதாந்தி செய்த கோமாளிதனத்தை உதாரணம் காட்டுவது ஒட்டவில்லை.

‘நம்மளைப் போன்ற நாதியத்தவங்களுக்கு ஏதய்யா சாமி’ என்று வயதான பிச்சைக்காரர் புலம்பும்போதும் ‘எங்களைப் போன்ற நிர்கதியான பிச்சைக்காரர்களால் கடவுளுக்கு என்ன புகழ்?’ என்று பாதிக்கப்பட்ட குருட்டு பிச்சைக்காரி கேள்வி கேட்கும்போதும் நிதர்சனம் பளீரென்று அறைகிறது. ஆனால், இந்தக் கேள்விகளுக்கு பதிலாக ஒரு சூப்பர் மேன் சாமியார் வந்து மசாலாத்தனமாக சண்டையிட்டு கெட்டவர்களை போட்டுத் தள்ளிவிட்டு, நிராதரவான பிச்சைகாரிக்கு மோட்சம் அளிக்கிறார். மிகவும் ஏமாற்றமளிக்கும் திரைக்கதை. இதற்கு மேல் படத்தைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

ஆனால் இந்த ‘சூப்பர் சாமியார்’ அடிதடி கதைக்கு ‘அஹம் பிரம்மாஸ்மி’ போன்ற tagline எல்லாம் அதிகப்படி. பர பிரும்மம் ஜகன்நாதம்.

41 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

உங்களது நேர்மையான விமர்சனமாக இதைப் பார்க்கிறேன். நல்ல இடுகை!

சரி, படம் பார்க்கலாமா, கூடாதா? யெஸ் அல்லது நோ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லவும் :-)

எ.அ.பாலா

enRenRum-anbudan.BALA said...

உங்களது நேர்மையான விமர்சனமாக இதைப் பார்க்கிறேன். நல்ல இடுகை!

சரி, படம் பார்க்கலாமா, கூடாதா? யெஸ் அல்லது நோ என்று ஒற்றை வார்த்தையில் சொல்லவும் :-)

எ.அ.பாலா

கோபிநாத் said...

கொடுத்துவச்சாவுங்க நீங்க அரைகுறை கடவுளாச்சும் பார்த்துட்டிங்க..இங்க அதுவும் இல்ல ;)

ச.சங்கர் said...

"காணவில்லை" அப்படீன்னு பதிவு போடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்குள் "கடவுள்" கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார் :)

அப்பப்ப பதிவு போடுங்க. இல்லைனா கடவுள் கோச்சுக்குவார்

G.Ragavan said...

நான் கடவுள் படத்தை நானும் பார்த்தேன். வித்யாசமான படம் என்பது மறுப்பிற்கு இடமின்றி ஒப்புக்கொள்கிறேன்.

Aham Brahma asked meங்குறது கதையோட மையக்கருத்து மாதிரி தோணலை. ஏன்னா... ஆர்யா வர்ர காட்சிகள் மிரட்டுற மாதிரி இருந்தாலும்... ஏத்துக்குற மாதிரி இல்லை.

ஆனா அந்த விளிம்புநிலை மனிதர்கள்...அப்பப்பா....ரொம்ப நல்லா எடுத்திருக்காங்க. அதுலயும்...அந்தச் சின்னப் பையன்....நாங்களும் முதலாளியாயிருவோம்ல..அப்படியே...தொழிலதிபராகி நடிகையக் கல்யாணம் பண்ணி வெச்சிருவோம்னு சொல்றப்போ சிரிப்பை அடக்க முடியலை.

அதே மாதிரி... இந்தக் கருமத்த ஊத்துடான்னு அந்தக் குள்ளமான பொண்ணு சொல்லி வாங்கிக் குடிச்சிட்டு அடிக்கிற லூட்டியும் அருமை. கிட்டத்தட்ட சுந்தர்.சி படத்துல வரும் பணக்காரப் பெரிய குடும்பத்தை நினைவு படுத்தும். ஆனா.... பிச்சைக்காரங்க.

அன்னக்கிளி படத்துல உண்மையிலேயே மிகச்சிறந்த பாட்டுன்னா சொந்தமில்லை பந்தமில்லை பாட்டுதான். அந்தப் பாட்டு வர்ர காட்சியில கண்ணுல தண்ணி வந்துருது. அதே மாதிரி இதோ எந்தன் தெய்வம் முன்னாலே பாட்டுக்கும்.

படத்தை ரசித்தேன். படைக்கப்பட்ட விதத்துக்காக.

ஆனா அந்தக் கஞ்சா கசக்கியைச் சாமியார்னு கூட ஏத்துக்க முடியலை. சாமீன்னு எப்படி ஏத்துக்கிறது. குப்பைத்தொட்டி மாதிரி இருக்கன்னு அம்மாவைச் சொல்ற பாத்திரம்...குப்பைத் தொட்டிக்குக் கூடப் போகக் கூடாத பொருளை உண்பது எந்த விதம்?

அந்தச் சாமி பாத்திரத்தை விட அம்சவல்லியின் பாத்திரம் தீர்க்கமாக யோசிக்கிறது. கை விட்டுக் கை மாறும் பொழுதும்.... கவுரதியா பாடிச் சம்பாதிச்சிட்டு. இப்ப பிச்சை எடுக்க வந்துட்டோமேன்னு வருத்தப்படுறியான்னு கேட்கப் படும் பொழுதும்... அம்மாகிட்ட அப்படிப் பேசலாமான்னு புத்திமதி சொல்றப்பவும்... காப்பத்துங்க சாமின்னு கெஞ்சுற போதும்... சர்ச் வாசல்ல உபதேசம் கேட்ட்டுட்டு.. அத்தனையை சாமிகளையும் சந்திக்கு இழுத்து.... நாக்கை பிடுங்கிக் கொள்ள வைக்கும் பொழுதும்... ரொம்பவும் அறிவுத்திறமையோடு யோசிக்கின்ற பாத்திரம்.

இது எதுவுமில்லாம... ஆர்யாவோட பாத்திரம்...நுண்ணிய படைப்பு என்பதைத் தவிர வெற்றுக்கூச்சல்.

இலவசக்கொத்தனார் said...

உள்ளேன் ஐயா!

கறுப்பி said...

அகோரி தன்னைக் கடவுளென அகங்காரத்துடன் கூறுகின்றான். கஞ்சா புகையின் மயக்கத்தில் தியானித்திருக்கும் அவனை தடங்கல்கள் செய்யும் எவரையும் எட்டி உதைக்கும் சுபாவம் கொண்டவன். அவன் கடவுளா இல்லை முற்றும் துறந்து மனித உறவுகளை வெறுக்கும் ஒருவனா?
அகோரிகளுக்கு நல்லவர்கள் கெட்டவர்களைத் தெரியும். அவர்கள் மோட்சம் அளிக்கும் அருள் பெற்றவர்கள் என்று நம்பப்படுகின்றது. இதை ஏற்றுக்கொள்வது அவரவரின் அறிவு நிலையைப் பொறுத்தது.

இரண்டு கெட்டவர்களை அகோரி போட்டுத் தள்ளுகின்றான். இருவரையும் அவன் கெட்டவன் என்று தன் ஞானத்தால் அடையாளம் கண்டு போட்டுத் தள்ளினானா? அல்லது தன் தனிமையை தியானத்தை அவர்கள் கெடுத்;ததால் எழுந்த சினங்கொண்டெழுந்து போட்டுத் தள்ளினானா? குருடியின் இறப்பையும் அப்படியே பார்க்கலாம். அகோரியின் தியானத்தை அடிக்கடி வந்து குழப்பும் ஒரு இடஞ்சலாக அவள் இருக்கையில் எழுந்த சினம் அவளை இறப்பிற்குக் கொண்டு செல்கின்றது. அவள் வேண்டியது அதைத்தான் என்று பார்வையாளர்கள் புரிந்து கொண்டாலும் அவளுக்கு மோட்சத்தைக் கொடுக்கும் அருள் கொண்டு அகோரி செய்து முடித்தான் என்று சொல்லி விட்டுப் போக முடியாது.

தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் உயர்த்தியிருக்கும் ஒரு தரமான படத்திற்கு கிடைத்திருக்கும் தரமற்ற விமர்சனம் இது

சென்ஷி said...

//ஆனால் இந்த ‘சூப்பர் சாமியார்’ அடிதடி கதைக்கு ‘அஹம் பிரம்மாஸ்மி’ போன்ற tagline எல்லாம் அதிகப்படி. பர பிரும்மம் ஜகன்நாதம்.//

:-)))

Sridhar Narayanan said...

வாங்க எ.எ.அ. பாலா :-)

ஒற்றை வார்த்தையில் நான் சொன்னால் படம் பார்ப்பீர்கள் என்றால், கண்டிப்பாக பாருங்கள். பார்த்த பிறகு ஏதேனும் கேள்வி எழுந்தால் கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளுங்கள். :-))

வாங்க கோபி,

இணையத்துலயே கிடைக்குது போல :-)

Sridhar Narayanan said...

வாங்க இராகவன்,

//அம்சவல்லியின் பாத்திரம் தீர்க்கமாக யோசிக்கிறது.//

அம்சவல்லி மட்டுமில்லை. வடுகபட்டி செந்தில் ஏற்றிருக்கும் பாத்திரம் மிகவும் ரசனையானது. முருகன் சொல்லும் ‘தொழில் நடக்கிற இடத்தில சிரிச்சு வச்சு வியாபாரத்தை கெடுத்திடாதீங்கடா. பரிதாபமா வச்சிக்குங்க’ வசனமும், பதிலுக்கு செந்தில் ‘பிச்சைக்காரங்கிட்டேயே பிச்ச எடுக்கறீயேய்யா’ என்று சொல்வதும் அருமையான காட்சிகள்தான்.

அம்சவல்லி ருத்ரனுக்கு அம்மாவின் சிறப்பை பற்றி எடுத்து சொல்வது ஏனோ பள்ளிக்கூட டீச்சரைத்தான் ஞாபகபடுத்தியது.

//இது எதுவுமில்லாம... ஆர்யாவோட பாத்திரம்...நுண்ணிய படைப்பு என்பதைத் தவிர வெற்றுக்கூச்சல்//

அகோரிகள் போன்ற பாத்திரங்கள் இன்னமும் நுணுக்கமாக செய்திருக்கலாம்.

வாங்க கொத்தனாரைய்யா. :-)

அய்யனார் said...

ஸ்ரீதர்

/அவர் படங்கள் பெரும்பாலும் ‘தட்டையான’ போக்கையே கொண்டிருக்கும்./

தட்டையான போக்கு என்றால் என்ன?
தமிழ்சினிமாக்கள் படம் பார்ப்பவரின் கற்பனையை தூண்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றனவா?பன்முகத் தன்மை கொண்ட படங்களை நமது சூழலில் அடையாளம் காட்ட இயலுமா?

அஹம் பிரம்மாஸ்மியில் என்ன பிரச்சினை?தலைப்புக்கு ஏற்ற கேப்ஷனாகத்தானே இருக்கிறது..

தமிழில் இருண்மைப் படங்கள் என்றொரு காலியான இடத்தை நிரப்பும் முயற்சியாகவே பாலா படங்கள் இருக்கின்றன.

ஆழமான துல்லியமான விமர்சனங்களை உங்களிடம் இருந்து எதிர்பார்த்தேன்...

Sridhar Narayanan said...

வாங்க கறுப்பி,

//அகோரிகளுக்கு நல்லவர்கள் கெட்டவர்களைத் தெரியும். அவர்கள் மோட்சம் அளிக்கும் அருள் பெற்றவர்கள் என்று நம்பப்படுகின்றது. இதை ஏற்றுக்கொள்வது அவரவரின் அறிவு நிலையைப் பொறுத்தது.//

சரிதான். இம்மாதிரியான ‘நம்பப்படும்’ சமாச்சாரங்களை எப்படி காட்சிபடுத்துவது? இராம நாராயணன் படத்தில் வரும் பாம்பு கடிதம் படிப்பது போலவா?

அகோரிகள் பற்றி காசியில் ஒரு கதாபாத்திரம் சொல்கிறது. தொடர்ந்து தேனிக்கு வரும் ருத்ரன் மலையாளத்து தரகரையும், தாண்டவனையும் பார்த்தவுடனே ‘துஷ்ட நிக்ரஹ’ என்று வசனம் ஆரம்பிக்கிறார். அதாவது அகோரிகள் பற்றி சொல்லப்படுவதை இயக்குநர் கதாபாத்திரம் வாயிலாக சொல்வது மட்டுமல்லாமல் காட்சியாகவும் அமைக்கிறார். இதில் என்ன அறிவு நிலை பாகுபாடு இருக்கிறது? படம் பார்க்கும் நாம் அறிவியல் பூர்வமாக ஏதாவது சிந்திக்கும் வாய்ப்பு தரப்படுகிறதா? :((

//அல்லது தன் தனிமையை தியானத்தை அவர்கள் கெடுத்;ததால் எழுந்த சினங்கொண்டெழுந்து போட்டுத் தள்ளினானா? குருடியின் இறப்பையும் அப்படியே பார்க்கலாம். அகோரியின் தியானத்தை அடிக்கடி வந்து குழப்பும் ஒரு இடஞ்சலாக அவள் இருக்கையில் எழுந்த சினம் அவளை இறப்பிற்குக் கொண்டு செல்கின்றது//

இம்மாதிரியான கேள்விகளுக்கு இடமேயளிக்காமல் தெளிவாகவே ருத்ரன் துஷ்டர்களை அடையாளம் காண்கிறார்.

தாயிடம் அவர் சொல்லும் சித்தர் பாடலுக்கு என்ன அர்த்தம்? அதனால் தாய்க்கு என்ன புரிந்தது?

எனது வருத்தம் எல்லாம், அகோரிகள் போன்ற புதிரான பாத்திரங்களை இப்படி சூப்பர் ஹீரோவாக காட்சிபடுத்துவது ஜீரணிக்க முடியாதது.

//தமிழ் சினிமாவின் தரத்தை பல படிகள் உயர்த்தியிருக்கும் ஒரு தரமான படத்திற்கு கிடைத்திருக்கும் தரமற்ற விமர்சனம் இது//

இது விமர்சனம் அல்ல. பார்வையாளனின் கருத்துகள்.

தரமான தமிழ்சினிமாவிற்கு நீங்கள் பாலாவின் குருவான பாலு மகேந்திராவின் ’அழியாத கோலங்கள்’, ‘மூன்றாம் பிறை’ போன்ற சில படங்களைக் கொள்ளலாம்.

ஒரு படைப்பின் வெற்றி அது உங்களுக்கு அளிக்கும் அனுபவங்களின் பன்முகத்தன்மையை பொறுத்தது.

மற்றபடி அவரவர் பார்வை அவரவர்க்கு. :-)

உங்கள் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

//:-)))//

வாங்க சென்ஷி அண்ணா,

காதலர் தினத்தில பிஸியா இருப்பீங்கன்னு நினச்சேன் :) உங்க வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

//தட்டையான போக்கு என்றால் என்ன? தமிழ்சினிமாக்கள் படம் பார்ப்பவரின் கற்பனையை தூண்டும் விதத்தில் படமாக்கப்பட்டிருக்கின்றனவா?பன்முகத் தன்மை கொண்ட படங்களை நமது சூழலில் அடையாளம் காட்ட இயலுமா?//

விரிவான விமர்சனமாக அமையவில்லை என்பதில் உடன்படுகிறேன். இந்தப் படத்தை தாண்டி பல்வேறு தளங்களில் சிந்திக்க தொடங்கியதால் குழப்பம் வேண்டாமென்று சுருக்கமாக எழுதிவிட்டேன்.

தமிழ்சினிமாவில் பன்முகத்தன்மையான படங்களுக்கு வணிகரீதியில் வெற்றி இருப்பதில்லை. அப்படியே வெற்றி பெற்றாலும் அவை வேறு சில காரணங்களுக்காக வெற்றி பெற்றிருக்கலாம். வெற்றி பெறாத படங்களுக்கு உதா: அவள் அப்படித்தான், அழியாத கோலங்கள் போன்ற படங்கள். வெற்றி பெற்ற படங்கள் உதா: மூன்றாம் பிறை என்று கொள்ளாம்.

தத்துவங்களை கொண்டமைக்கபடும் படங்களுக்கு ஜீவி அய்யரின் படங்களை உதாரணமாக கொள்ளலாம். சங்கரரின் விளையாட்டு தோழனாக ‘மரணம்’ தொடர்வதும், சங்கரன் சன்யாசம் ஏற்பதும் சிறந்த குறியீடுகள்.

எளிய முறையில் கதை சொல்லி அதில் நமது கற்பனையை தூண்டிச்செல்லும் படங்களுக்கு சிறந்த உதாரணம் ‘Children of Heaven', 'Roshomon' போன்றவை. அலிக்கும் சாராவிற்கும் பாடபுத்தகங்கள் வழியே நடக்கும் உரையாடல்கள் சிறந்த காட்சியமைப்பு. அதில் நமக்கு பல கேள்விகள் எழுகின்றன. அதிலேயே விடைகளும் கிடைக்கின்றன. ஏன் அந்த குழந்தகைள் காலணியைப் பற்றி கவலை கொள்கின்றனர்? தாய் தந்தையரிடம் ஏன் சொல்ல முடிவதில்லை? ஒரே காலணியை பங்கிட்டுத்தான் கொள்ள வேண்டுமா? இப்படி நாமே கேள்வி கேட்டு நாமே விடைபெற்றுக் கொள்கிறோம். இம்மாதிரியான திரைக்கதைகள் நமக்கு ஒரு முழுமை உணர்வை அளிக்கின்றன.

அவள் அப்படித்தானில் சில காட்சிகள் மிகவும் முக்கியமானவை. Freak out-ஆக இருக்கும் முதலாளிக்கு மஞ்சு அளிக்கும் பதிலும், பெண்ணியம் பற்றி டாக்குமெண்ட்ரி எடுக்கும் குழப்பவாதியான ஹிப்போகிரெடிக் இளைஞன் மேல் ஏற்படும் ஏமாற்றமும், காதலியை ‘தங்கை’ என்று சொல்லி தப்பிக்கும் இளைஞன் மேல் ஏற்படும் அசூயையுமாக விரிந்து கொண்டே போகிறது.

இருண்மை படங்களுக்கு அவர் முயற்சிப்பது தெரிகிறது. அமீர், இராம் போன்ற பலரும் அந்த முயற்சியில் இருக்கின்றனர். ஆனால் இன்னமும் முதிர்ச்சியடையவில்லை என்பதுதான் எனது எண்ணம்.

வண்ணத்துபூச்சியார் said...

Thanx for the review. Nandri.

அது சரி said...

//
விளிம்பு நிலை மனிதர்களை பாத்திரமாக அமைப்பதை தவிர, அவர் படங்கள் பெரும்பாலும் ‘தட்டையான’ போக்கையே கொண்டிருக்கும். அந்த பாத்திரங்களின் குணாதிசயங்கள் கதை போக்கிற்கு எந்தவித மாறுபட்ட பங்காற்றலும் செய்யாது ஒட்டாமல் இருப்பது போல் இருக்கும். படம் பார்ப்பவரின் கற்பனையை தூண்டாமல் நேரிடையான காட்சிபடுத்துதல் பிரதானமாக இருக்கும்
//

நீங்கள் எழுதுவத் விசித்திரமாக இருக்கிறது...தட்டையான போக்கு என்றால்?? மனிதர்களை அவரவர் போக்கில் வருவது உங்களுக்கு தட்டையாக தெரிகிறதா?? அப்படியானால் எது தட்டை இல்லை??

பாத்திரங்கள் கதையில் ஒட்டாமல் இருக்கிறது...அடுத்த வரி, பார்ப்பவரின் கற்பனையை தூண்டாமல்.....

கொஞ்சம் கற்பனையை உபயோகித்தால் அந்த பாத்திரம் எங்கு ஒட்டுகிறது என்பது புரியும்....இதை பாலா ஒரு சப் டைட்டில் போட்டு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா??

எது எப்படியோ....விமர்சனத்திற்கு நன்றி!

அனுஜன்யா said...

Welcome back Sridhar. எங்க போயிட்டீங்க இவ்வளவு நாட்கள்?

இன்னும் படம் பார்க்கவில்லை. நிறைய விமர்சனங்கள் வலையில் படித்து விட்டேன். Opinions polarized. அதுவே ஒரு விதத்தில் படத்துக்கு வெற்றி என்று சொல்லவேண்டும். குறைந்தபட்சம் கவனத்தையாவது ஈர்க்கிறதே!

உங்கள் அளவு நுட்பமான சினிமா பற்றிய அறிவு, ரசனை எனக்கு இல்லை (No jokes). நீங்கள் விமர்சனம் இல்லை என்று டிஸ்கி போட்டாலும், உங்களிடம் இன்னும் ஆழமான கருத்தை எதிர்பார்த்தேன். ஒரு முன்முடிவுடன் மேலோட்டமாக எழுதிய உணர்வு வருகிறது இந்தப் பதிவில். என் பார்வை முற்றிலும் தவறாக இருக்கலாம்.

அவகாசம் இருந்தால் நர்சிம் பதிவையும், அதில் பைத்தியக்காரனின் விளக்கங்களையும் படியுங்கள். ஒரு வேலை சில அம்சங்கள் உங்களுக்கு புதிய கோணத்தில் கிட்டலாம் :)

இவ்வளவு இடைவெளி விடாதீர்கள் :)

அனுஜன்யா

மதுரையம்பதி said...

படம் பார்க்கவில்லை....வேறு விமர்சனமும் ஏதும் படிக்கல்ல..ஆனா நீங்க எழுதியிருக்கறத பார்த்தா பார்க்கல்லைன்னா தப்பில்லைன்னு தோணுது... :-)

[இந்த பின்னூட்டத்தை விட கொத்ஸ் சொன்ன 'உள்ளேன் ஐயா! பெட்டரோ?] :-)

Sridhar Narayanan said...

வாருங்கள் அனுஜன்யா!

//ஒரு முன்முடிவுடன் மேலோட்டமாக எழுதிய உணர்வு வருகிறது இந்தப் பதிவில். //

:-)) இருக்கலாம். எதிர்பார்ப்பு ஏகத்துக்கு ஏறி பின்னர் ஏமாந்ததினால் இருக்கலாம்.

//அவகாசம் இருந்தால் நர்சிம் பதிவையும், அதில் பைத்தியக்காரனின் விளக்கங்களையும் படியுங்கள்.//

நர்சிம்மின் பதிவை ஏற்கெனவே படித்திருந்தேன். பைத்தியக்காரனின் கமெண்ட்களை படிக்கிறேன்.

//இவ்வளவு இடைவெளி விடாதீர்கள் :)//

எழுதிப் பழக வேண்டாமா? :-) எழுதும் பழக்கத்தை இன்னமும் இலகுவாக்கிக் கொள்ள பழகிக் கொண்டிருக்கிறேன்.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

//மனிதர்களை அவரவர் போக்கில் வருவது உங்களுக்கு தட்டையாக தெரிகிறதா?? அப்படியானால் எது தட்டை இல்லை??//

தட்டை என்று நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கின்றேன்.

ஒரு பாத்திரத்தை ‘இவன் நல்லவன்’ என்று சொல்லிக் கொண்டே நம் முன் நிறுத்தும்போக்குத்தான் தட்டை என்று சொல்ல வந்தேன். ருத்ரன் குடும்ப உறவில் நாட்டமில்லாதவன். கஞ்சா குடிக்கும் ஒரு பரதேசி. பினம் தின்னும் ஒரு அகோரி என்றெல்லாம் சொன்னாலும் படம் முழுவதும் அவர் ஒரு நல்லவராக, அதிபராக்கிரமசாலியாக அடையாளப்படுத்தப் படுகிறார். வெகுஜன ரசனையை மையப்படுத்தி கையாளப்படும் யுக்திதான் இது.

அம்சவல்லி அகோரிக்கு தாய்ப்பாசத்தைப் பற்றி போதிக்கும் காட்சி ஒட்டாமல் இருப்பதாகத்தான் தோன்றியது. அம்சவல்லியை ருத்ரன் சந்திக்கும் (அல்லது விரட்டும்) நிகழ்வாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், ஒண்ணாம் கிளாஸ் டீச்சர் பாணியில் அந்தக் காட்சியை அமைத்தது கொஞ்சம் சறுக்கலாகவே இருந்தது. போதாதற்கு அவர் பாடும் பழைய பாடல்கள் காட்சியில் பெரும் நெருடலாக இசையுடன் தனியாக சேர்க்கப்பட்டிருந்தது.

//கொஞ்சம் கற்பனையை உபயோகித்தால் அந்த பாத்திரம் எங்கு ஒட்டுகிறது என்பது புரியும்....இதை பாலா ஒரு சப் டைட்டில் போட்டு சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா??//

சரியாக படியுங்கள். பாத்திரங்களின் குணாதிசயங்கள் படத்தின் கதை போக்கிற்கு எந்த அளவு பங்காற்றுகிறது என்பதே கேள்வி. ‘நான் கடவுள்’ தாண்டவனுக்கும் ‘ஏழாம் உலக’த்தின் பண்டாரத்திற்கும் எவ்வளவு வித்தியாசங்கள். பிச்சைக்காரர்களை உருவாக்கி விற்கும் பாத்திரத்தின் வெளிப்பாடாக வெறும் வன்முறையும், ரௌத்ரமும் மட்டுமே அந்த பாத்திரபடைப்பில் இருக்கிறது. இதே பாத்திரம் ஒரு பேட்டை ரௌடியாகவோ, ஒரு ஆதிக்க ஜமீந்தாராகவோ இருந்தாலும் இப்படித்தானே நடந்து கொண்டிருக்கும்?

அதாவது ‘ஹீரோ / வில்லன்’ என்கின்ற ‘Black / white' கேரக்ட்ரைசேஷன் ஏமாற்றம் தருகிறது இல்லையா?

மாறாக, முருகன் பாத்திரம் ‘பாவப்பட்ட பொழப்பு’ என்று மருகுவதும் ‘நீங்கள்லாம் குடும்பம்டா’ என்று உருகுவதும் நன்றாக அமைந்திருந்தது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Sridhar Narayanan said...

வாங்க மௌலி சார்,

மசாலாத்தனங்களை தாண்டியும் சில இடங்கள் நன்றாகவே எடுக்கப்பட்டிருக்கின்றன. நீங்களும் பார்த்து உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

Cable Sankar said...

ஸ்ரீதர் சார்.. நீங்கள் சொன்ன மாதிரி நான்கடவுள் ஒன்றும் கமர்ஷியல் ஹிட் இல்லை இதுவரை.. மிக நல்ல ஓப்பனிங் மட்டுமே.. நீங்கள் விமர்சனம் இல்லை என்றதினால் உங்கள் கருத்துக்கள் அருமை...http://cablesankar.blogspot.com/2009/02/blog-post_06.html நன்றி.. சார்.

Sridhar Narayanan said...

வாங்க சங்கர்,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வணிக ரீதியாக ‘தாண்டிவிட்டது’ என்று ஜெமோ பதிவிட்டிருந்தார். அதிகப் பிரதிகளுடன் ஓரிரு வாரம் ஓடினாலே படங்கள் தப்பித்துவிடும் என்று நினைத்தேன்.

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

விமர்சனம் கூட அரை குறையா இருக்கே அண்ணாச்சி?
அம்சவல்லி-ன்னு ஒரு சொல்லு கூட இல்லாத இந்த விமர்சனத்தை என்னன்னு சொல்லுறது! :))

//அஹம் பிரம்மாஸ்மி’ போன்ற tagline எல்லாம் அதிகப்படி. பர பிரும்மம் ஜகன்நாதம்//

இதுக்கெல்லாம் பொருள் சொல்லலைன்னா எப்படிப் புரியும்?
அஹம் பிரம்மாஸ்மி = ஏதோ ஷ்பனா ஆஸ்மி மாதிரி இருக்கு!
பர பிரும்மம் ஜகன்நாதம்-ன்னா என்ன? ஏன் அப்படி முடிச்சீங்க? மனசுக்குள்ளாற பெரிய பாலா-ன்னு நினைப்போ? :))

Krish said...

நல்ல விமர்சனம்! முடிய வளத்துக்கிட்டு, தல கீழா நின்னா நல்ல நடிப்பா? என்ன சொல்ல வராரு பாலா சார். கஷ்ட படரவங்களை கொலை செய்திடலாம்! அப்டினா, இந்தியாவுல யாரும் இருக்க முடியாது. பாதி பேரு சுரண்டரவங்க, மீதி பேர் வறுமை கோட்டுக்கு கீழே கஷ்டபடுரவங்க.
சராசரியான தமிழ் படங்களிலிருந்து சற்று விலகி, நல்ல படமாக வர முயற்சித்திருக்கிறது. ஆனால், தமிழ் சினிமாவின் மை கல் என்று எல்லாம் சொல்ல முடியாது. இதை விட எளிமையான, நல்ல திரைக்கதையோடு, பல ப்படங்கள் வந்துள்ளன, வந்துகொண்டு இருக்கிறது. காதல், மொழி, அன்பே சிவம், பருத்தி வீரன் போன்றவைக லெல்லாம், இதை விட பெட்டெர்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அண்ணாச்சி

படத்தில் இரு வேறு உலகங்கள் காட்டப்படுகின்றன!
ஒன்னு அகோரிகளின் உலகம், இன்னொன்னு "அகோரிகள்-ன்னா ஒரு மாதிரியானவர்கள்" என்னும் "இயல்பான" உலகம்!
படத்தை எந்த உலகத்தில் இருந்து நீங்க பார்த்தீங்க? பார்த்து விமர்சனம் எழுதனீங்க? :)

சங்கரர் படத்தில் நீங்க சொன்ன குறியீட்டுக் கதைப்பாத்திரம் போல இங்கே கொடுக்க முடியாது! ஏனென்றால் அகோரி ருத்ரன் தான் தான் எல்லாம்-ன்னு இருக்கானே! அது வரை பாலா செய்தது சரி தான்!

ஆனால், ஆனால், ஆனால்

ஆரம்பம் முதலே ருத்ரனை அகோரியாகக் காட்டப் படாதபாடு படும் பாலா...தாயைக் குப்பைத் தொட்டி, பிணம் தின்னல் என்றெல்லாம் சொல்லி விட்டு, கஞ்சா கசக்கல் எல்லாம் காட்டி விட்டு...

அந்த "மோட்சம்" வழங்கும் ருத்ரனைக் காட்டும் போதும் அகோரியாகவே காட்டாமல், ராபின்ஹூட் போன்று ஆக்க முயலும் போது தான் சறுக்கி விடுகிறார்!

மற்றபடி படக் காட்சிகள், அம்பானி நகைச்சுவை, பாடல்கள் (பிச்சைப் பாத்திரம்) எல்லாம் நன்றாகத் தான் இருக்கு! ஆர்யாவை விட பூஜா சூப்பரா பண்ணி இருக்காங்க!

இந்தக் கதைக் களன் தமிழ் சினிமா இதுவரை அறியாதது! விளிம்பு நிலையிலும் கூட சற்று வித்தியாச நிலை மனிதர்கள் அகோரிகள்! இதன் கருவாக்கம் ஒரு நல்ல வாய்ப்பு!

வித்யாசமாக ஆரம்பித்ததோடு, வித்யாசமாகவே முடித்திருந்தால் வித்தியாசமாக இருந்திருக்கும்! பாலா ஒரு நல்ல வாய்ப்பைத் தவற விட்டுட்டார்-ன்னு தான் சொல்வேன்!

மை டூ ருபீஸ்:
1. அகோரம் என்பது சிவபெருமானின் ஐந்து வெளிப்படையான முகங்களில் ஒன்று! அது அழிவாக்க சக்தி! நெருப்பு போல, உணவை உருவாக்கி, உணவை எரிக்கவும் செய்யும் சக்தி!
அந்த அகோர முக வழித் தத்துவத்தில் வந்தவர்கள் அகோரிகள்!

2. அஹம் பிரம்மாஸ்மி-ன்னா நான் கடவுள் அல்ல!
அஹம் பிரம்மாஸ்மி-ன்னா என்னுள் கடவுள்!

ambi said...

ஒரு வழியா போஸ்ட் போட்டாச்சா? படம் இன்னும் பாக்கலை.

கற்றது தமிழ்ன்னு ஒரு படம் வந்ததே, அதுல வந்த கதாபாத்திரத்தின் சாயல் கொஞ்சம் இங்கயும் இருக்கோ? :)

ambi said...

//அஹம் பிரம்மாஸ்மி-ன்னா என்னுள் கடவுள்!
//

:))

Anonymous said...

வேறு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்தீர்கள். பாலாவின் பலவீனம்
திரைக்கதை. முந்தைய படங்களிலும்
லாஜிக் பல இடங்களில் சறுக்கும்.
அவரால் ஜெயமோகன் நாவலையும், தான் சொல்ல நினைத்ததையும் கோர்வையாக
திரைக்கதை மூலம் சொல்ல முடியவில்லையோ?
hype என்பது இப்போது மிகவும் சாதரணமாகிவிட்டது.அது நான் கடவுளாக இருந்தாலும் சரி,
ஸ்லம்டாக் மில்லியனராக
இருந்தாலும் சரி.இந்த hype
தரும் எரிச்சலினால் இரண்டையும்
பார்க்க வேண்டாம் என்று நினைக்கிறேன். இந்த படங்களை பார்க்க கொடுக்கிற காசிற்கு
barnes&noble or amazon ல் ஒரு
நல்ல புனைவிலக்கியம் வாங்கி
விடலாம்.

Sridhar Narayanan said...

//அம்சவல்லி-ன்னு ஒரு சொல்லு கூட இல்லாத இந்த விமர்சனத்தை என்னன்னு சொல்லுறது! :))//

வயசானாலும் உங்க குறும்புக்கும் அழும்புக்கும் குறைச்சலே இல்ல அண்ணாச்சி :-)

நான் பொதுவாக விமர்சனம் எல்லாம் எழுதுவது இல்லை. விமர்சனம் என்பது எல்லா வகையிலும் அலசி விரித்து எழுதுவது. நான் ஒரு பார்வையாளனாக எனது பார்வையை வெளிப்படுத்தினேன்.

//அஹம் பிரம்மாஸ்மி’ போன்ற tagline எல்லாம் அதிகப்படி. பர பிரும்மம் ஜகன்நாதம்//

எழுத ஆரம்பிச்சேன். அப்புறம் மாதவிப் பந்தல் ஞாபகத்தில வந்து பயமுறுத்தினதினால வெட்டி சுருக்கிட்டேன் :-))

இங்கே நீங்க விரிவாகவே சொல்லிட்டிங்களே. மிக்க நன்றி. :))

Sridhar Narayanan said...

ரவி,

உங்க டூ ருபீஸ்-க்கு நம்ம டூ அணாஸ்.

//1. அகோரம் என்பது சிவபெருமானின் ஐந்து வெளிப்படையான முகங்களில் ஒன்று! அது அழிவாக்க சக்தி! நெருப்பு போல, உணவை உருவாக்கி, உணவை எரிக்கவும் செய்யும் சக்தி!
அந்த அகோர முக வழித் தத்துவத்தில் வந்தவர்கள் அகோரிகள்!//

இந்த தத்துவார்த்த விளக்கம் எல்லாம் சரிதான். சிவனை நாம் சுடலை மாடச் சாமியாக கொண்டாடுகிறோம். ஆனால் பிண வழிபாடு என்பதோ பிணங்களை உண்பதோ எனக்குத் தெரிந்து தாந்த்ரீகங்களில் கூட சொல்லப்படவில்லை. அகோரிகள் cannibals-ஆ என்பது விவாதத்துகுண்டான ஒன்று.

//அஹம் பிரம்மாஸ்மி-ன்னா நான் கடவுள் அல்ல!
அஹம் பிரம்மாஸ்மி-ன்னா என்னுள் கடவுள்!//

அஹம் ப்ரஹ்ம + அஸ்மி = ’நான் ப்ரும்மமாக இருக்கிறேன்’ என்பதுதான் நேரடி அர்த்தம்.

இதற்கு ஒரு தெளிவான விளக்கம் ஜீவி அய்யரின் ஆதிசங்கரரில் இருக்கும். பின்ண்ணி இசையாக ‘ஆகாசாத் பதிதம் தோயம்’ என்ற பாட்டு வந்து கொண்டே இருக்கும்.

அதாவது ஆகாயத்திலிருந்து விழும் ஒவ்வொரு துளி நீரும் கடலில் போய்ச் சேர்வது போல்...

எல்லா துளிகளுமா கடலில் போய்ச் சேர்கின்றது? பாலைவனத்தில் விழும் மழைத்துளிகல் எப்படி கடலில் போய்ச் சேர்கிறது? நமது வீட்டு கிணற்றில் விழும் நீர்த்துளிகள்? செடி கொடிகள் மேல் விழும் நீர்த்துளிகள்? சாகப் பறவையின் தொண்டையில் நேரடியாக விழும் நீர்த்துளி? ஆற்றில் விழும் எல்லா நீர்த்துளிகளுமா கடலில் போய்ச் சேர்கிறது? பாசப்பிடிப்பாக கரையில் இருக்கின்ற நீர்த்திவலைகள் எப்பொழுது கடலுக்குப் போய்ச் சேரும்?

ஆம். விரித்துப் பார்த்தால் ஒருவகையில் எல்லாத் துளிகளும்... ஏதோ ஒரு வழியில், உருவில், வகையில் கடலில் போய்ச் சேர்ந்து விடுகின்றன. பின்னர் அங்கிருந்து ஆவியாகி மேகமாகி மீண்டும் நீர்த்துளிகளாக மாறுகின்றன.

நீர்த்துளிகள் சேரச்சேர பெரிய நீர்த்துளியாகி... ஆறாகி... கடலாகி... அடிப்படையில் அந்தக் கடல் ஒரு நீர்த்துளிதானே?

ஸர்வவியாபியாக இருக்கிறது ப்ரும்மம். நானே ப்ரும்மத்தின் ஒரு துளியாக. நானே ப்ரும்மமாக...

Fractal Geometry என்ற அடிப்படையில் நாம் எல்லாருமே அடிப்படையில் கடவுள்தான் என்பது ஒரு அர்த்தம்.

அதற்கு அர்த்தம் கெட்டவர்களை பார்த்தவுடன் தாவி ஏறி அடித்து துவைத்து கொன்று சுட்டு சாப்பிடுபவன் என்ற மாதிரி இந்தப் படத்தில் காண்பிக்கிறார்கள்.

பர ப்ரும்மம் என்றால் - ‘அது ப்ரும்மம்’. தன்னை ப்ரும்மத்திலிருந்து தனியாக பிரித்து அறிவது. ஜகன்நாதனை ப்ரும்மாக அறிவது :-) ஒரு வேடிக்கைக்காக ‘பரப்ரும்மம் ஜகன்நாதம்’ என்று முடித்தேன். இந்தப் படத்தை பார்த்ததால் நான் கடவுளாக அறியாமல், கடவுள் வேறாக அறிந்து கொண்டேன் :-))

Sridhar Narayanan said...

///ஆனால், தமிழ் சினிமாவின் மை கல் என்று எல்லாம் சொல்ல முடியாது.//

வாங்க க்ருஷ்,

மைல் கல்லாக வந்திருக்க வேண்டிய படம்தான். அரைகுறையாக தவறிவிட்டது.

அம்பி சார்,

ஞாபகம் வச்சிகிட்டு வருகை தந்ததுக்கு மிக்க நன்றி :-))

கற்றது தமிழ் வகைப் படமல்ல. ஆனால் இராம், பாலா எல்லோரும் பாலுமகேந்திரா பள்ளிதான். :-)

Sridhar Narayanan said...

அம்பி,

//அஹம் பிரம்மாஸ்மி-ன்னா என்னுள் கடவுள்!
//

:))//

இந்த சிரிப்புக்கு என்னய்யா பொருள்? தப்புன்னு சொல்ல வர்றியா? என்ன அர்த்தமா இருந்த என்னன்னு சொல்ல வர்றியா? ஒரு சிரிப்பிலேயே நுண்ணரசியல் செய்யும் உன்னை கண்டு பி. நி. :-))

வெட்டிப்பயல் said...

//அரைகுறை கடவுள்//

:))

SurveySan said...

தூள் & same pinch ;)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//அஹம் ப்ரஹ்ம + அஸ்மி = ’நான் ப்ரும்மமாக இருக்கிறேன்’ என்பதுதான் நேரடி அர்த்தம்//

மாம் பிரம்மம் (நான் கடவுள்) என்று சொல்லி இருக்கலாமே! மாம் ஏகம் சரணம் என்பதைப் போல!
எதற்கு அஹம் பிரம்மம்-ன்னு சொல்லணும்? அஹத்துள் பிரம்மம் உறைவதால், அதன் சாயலைப் பெறுகிறேன்! பிரம்மம் ஆகிறேன் என்பது பொருள்!

அபேத சுருதி என்று இதைச் சொல்லுவார்கள்! அதாச்சும் பேதமில்லை என்னும் சுருதி!
ஜீவனும் பிரம்மமும் ஒன்றே என்று சொல்ல வரும் போது, இந்த அபேத ஸ்ருதியைக் கடக ஸ்ருதி கொண்டு விளக்க முற்படுவார்கள்!

என் ஆன்மாவின் ஆன்மா பிரம்மம்! அதனால் நானு"ம்" பிரம்மமாக இருக்கிறேன்!
ஆனால் நா"னே" பிரம்மம் அல்ல!
நானு"ம்" பிரம்மம்!

H2O மாலிக்யூல் போலத் தான்!
ஒவ்வொரு அணுவும் H2O-இன் அணுக்கள் தான்! ஆனால் அணு மாத்திரமே H2O மாலிக்யூல் ஆகி விடாது! :)

//நானே ப்ரும்மத்தின் ஒரு துளியாக. நானே ப்ரும்மமாக...//

பிரம்மத்தின் ஒரு துளி என்பதால் துளியே பிரம்மம் ஆகாது!
பிரம்மத்தின் துளி, துளி தான்!
ஒவ்வொரு துளி(யில்-உம்) பிரம்மம் இருக்கிறது!

இந்த அபேத சுருதியைக் கடக சுருதி கொண்டு படிக்கணும்!
அப்போ மாம் பிரம்மாஸ்மி இல்லை! அஹம் பிரம்மாஸ்மி என்று புரிந்து விடும்!

அத்வைத-விசிஷ்ட அத்வைத பதிவு போடும் போது உங்களைச் சிறப்பு விருந்தினராக் கூப்புடறேன்! :))
சிரிக்க மட்டுமே தெரிந்த அம்பியைச் சியர் லீடராக் கூப்புடறேன்! :)))

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//பிணங்களை உண்பதோ எனக்குத் தெரிந்து தாந்த்ரீகங்களில் கூட சொல்லப்படவில்லை//

காரைக்கால் அம்மையார் பேய் உருப் பெற்ற பின், அங்குள்ள பேயுருக்கள் பிணம் தின்பதைத் தேவாரப் பாடலில் சொல்லுவார்!

//அகோரிகள் cannibals-ஆ என்பது விவாதத்துகுண்டான ஒன்று//

அகோரிகள் தங்களை மனிதரையும் தாண்டி, தாங்களே பிரம்மமாக நினைத்துக் கொண்டு, அதுவும் இல்லாமல், பேயுருவில் வந்து நிற்கிறார்கள்! :)

அஹம் பிரம்மா ஆஸ்மி!
அஹம் ஷப்னா ஆஸ்மி!
மாம் ஆஸ்மியின் தோஸ்த்மி! :))

Sridhar Narayanan said...

Ravi (Sorry for the English),

Thanks for the interesting and detailed response. Just a quick response now and will discuss in detail later.

//மாம் பிரம்மம் (நான் கடவுள்) என்று சொல்லி இருக்கலாமே! மாம் ஏகம் சரணம் என்பதைப் போல!
//

Aham - I; Aavaam - We Two; Vayam - We all;
Maam - Me (Tamil - ennai); Aavam - us (Tamil - engal iruvarai); Asmaan - Us (Tamil - engalai);

'Maam Saranam Vraja - Allow 'me' in your Saranam.

Hence, 'Aham Brahma Asmi' means 'I am Brahma'. Right?

Once again thanks for the detailed discussion. Would like to continue later.

Hi Balaji & Surveysan,

Thanks for your comments :-)

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

he he
Anne (Sorry for the English),

From a grammatical context you are absolutely right!
Aham = I, Maam = Me
Asmi = I am
So Aham-Brahma-Asmi = I, Brahma, I am! :)

Now the question comes to Naan...
What is Naan?
"Naan" cholgiren = "I" am telling
"Naan" thaan chonnen = It was "me" who told him!
So Naan connotes both I & Me :)

If it was withou asmi...then
Aham Brahma = Naan Kadavul
But with asmi,
Aham Brahma asmi = Naan Kaduval(-aai irukkiren).
Asmi-Irukkiren is very significant bcoz, brahmam uLLe irupathal irukkiren. illeenaa irukka matten :))

Ayyo, ithai panthal-la continue pannikkilaam; Cinema vimarsana pathivai pollute panna paavam enakku vara venam...:))))

கே.ரவிஷங்கர் said...

ஸ்ரீதர்,
குறை நிறை இரண்டும் உள்ள் விமர்சனம்.ஆர்யாவின் பாத்திரம் மெயின் கதையோடு ஒட்டவில்லை என்பதில் ஒத்துப் போகிறேன்.

//கஞ்சா குடிப்பது எந்த வகையில் அகோரிகளை சிவனுக்கு அருகில் கொண்டு செல்கிறது? சுடுகாட்டில் யோகம் செய்யும் அகோரிகள் இறந்த உடல்களை புசிக்கின்றார்களா?//

இதில் பார்வை வித்தியாசப்படும்.Nike ஷுவும்,crocodile "T"ஷர்டும்,denim
jeans,romantic தாடியும் மடியில் பூனைக்குட்டி வைத்திருக்கும் ஜக்கி வாசுதேவ் போல் trendy ஆக இருந்தால்தான் யோகத்திற்கு வழி காட்ட முடியுமா?

கஞ்சா,உடை கடந்துதான் பார்க்க வேண்டும்.

சிவனுக்கு மூன்று முகங்கள் என்று சொல்வதுண்டு. 1.மென்மையான பெண் முகம் (வலது)-படைத்தல் 2. சாந்தமான முகம்(நடு) -ஞானம் 3. உக்கிரமான முகம்(இடது) ருத்ரன். இது அழித்தல் .இந்த முகத்தை வணங்குபவர்கள் “அகோரிகள்” என்னும் பிணம் தின்பவர்கள்.


ஆரியா, நானே கடவுள் நிலைக்கு(அஹம் பிரம்மாஸ்மி) வந்து விட்டதாக உக்கிரமாக இருக்கிறார். அஹம் பிரம்மாஸ்மி என்பதை “நான் கடவுள்” என்று சொல்வது பாமரத்தனம். கடவுள் நிலையை கடந்து பல படிகள் போய் “நானே பிரம்மம்” என்னும் நிலை. இந்த நிலை எதுவும் இல்லாத நிலை.இது ”அதை” உணர்ந்த நிலை.
"தத்வமஸி” அதுதான் இது.

ஜீவத்மா மாயைக் கடந்து பரமாத்மாவை உணரும் நிலை.இந்த நிலைக்கு வருவது சாத்தியமா? பல் கோடியில் ஒருத்தருக்குச் சாத்தியமாகலாம். அகோரிகள் நீங்கள் சொல்வது மாதிரி “மனபிறழ்வு” இருக்கலாம்.

முடிந்தால் என் வலையில் “நான் கடவுள்”விமர்சனம் படிக்கலாம்.

Sridhar Narayanan said...

வாங்க KRS,

ஒன்னுக்கு ரெண்டா விருது வாங்கி அசத்திட்டிங்க. வாழ்த்துகள். அப்படியே அத்வைதமும் அகோரி தத்துவங்களும் வைத்து சீக்கிரமா பதிவு போடுங்க. காத்திட்டிருக்கோம். நன்றி! :)

Sridhar Narayanan said...

வாங்க ரவிஷங்கர் சார்,

நீங்கள் சொல்வது போல் சில காட்சிகள் ஒட்டாமல் போவதுதான் இந்த திரைப்படத்தின் தோல்வி. எனக்கு இந்தப்படத்தில் காண்பிக்கப்பட்ட ஏழாம் உலகம் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் அகோரிகள் உலகம்தான் ஏனோ முழுமையடையாமல் போய்விட்டது என்று தோன்றியது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் விமர்சனமும் படிக்கிறேன்.