திருத்தி எழுதியவன்

February 28, 2009

சுமதி அக்கா நல்ல நெகுநெகுவென்று உயரமாக செம்பு நிறத்தில் இருப்பார். சாட்டை போல் நீண்டிருக்கும் பின்னலை முன்னாடி எடுத்து விட்டு நீவிக் கொண்டே காதருகே குனிந்து ‘என்னதான் சொல்றார் உங்க சார்?’ என்று அவர் கேட்கும்போது கண்களில் குறும்பு மின்னும். பாலமுருகன் சார் கொடுக்கும் கடிதத்தை பாதுகாப்பாக அரைஞான் கொடியின் பக்கவாட்டில் சொருகி வைத்திருந்து வசுமதி அக்காவிடம் கொடுப்பதுதான் அப்போதைய எனது முக்கிய பணி. அதுவும் கூடத்து ஊஞ்சலில் ஹாண்டில் பார் மீசையோடு உட்கார்ந்திருக்கும் ரகோத்தமன் மாமாவிற்கு சந்தேகம் வராமல் கடிதத்தை அக்காவிடம் சேர்ப்பிக்க வேண்டும். ’போடா அந்தண்டை’ என்று என்னை துரத்தி விட்டு மொட்டை மாடி கைப்பிடிச் சுவரின் குறுகிய நிழலில் அமர்ந்து அக்கா அந்த கடிதத்தை திரும்பி திரும்பி படிப்பாள். அருகே எப்போதும் ரேடியோ பாடிக் கொண்டே இருக்கும். ரஙகநாயகி மாமி ‘ஏடி! எங்கடி தொலஞ்ச’ என்று குரல் கொடுக்கும் வரை ஒரே கடிதத்தை மாற்றி மாற்றி படிப்பாள்.

ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்திற்கு வெளியே அறிவியலின் சுவாரசியங்களை எங்களுக்கு சொல்லிக் கொடுத்தவர் பாலமுருகன் சார்தான். கரலைபாளையத்தின் வரலாற்றில் ஹாம் ரேடியோ வைத்திருந்த ஒரே ஜீவன் அவர்தான். பல நாட்டு சிற்றலைகளை அவர் வீட்டு ரேடியோவில் நான் கேட்டிருக்கிறேன். பாலமுருகன் சார் கரலைபாளையம் அரசு மேல்நிலை பள்ளிக்கு வரும்வரை வசுமதி அக்காவிற்கு சலங்கை ஒலியும், விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பும், எப்போதும் மடியிலேயே சுருண்டு படுத்திருக்கும் சோனியும்தான் தெரியும். சோனி ஒரு சோம்பேறி பூனைக்குட்டி. ரங்கநாயகி மாமி கரண்டியை வைத்து தாம்பாளத்தில் ‘நங்’கென ஓசை எழுப்பி சமிக்ஞை கொடுத்தவுடன் உடனே துள்ளி எழுந்து பால் குடிக்க ஓடிவிடும். அலாரிப்பு, தில்லானா என்றிருந்த வசுமதி அக்காவின் உலகம், பின்னர் பாலமுருகன் சாரின் காதல் கடிதங்களால் நிரம்பி வழிந்தது. எல்லாம் அந்த சனியன் பிடித்த செவ்வாய்கிழமைவரைதான்.

மொட்டை மாடியின் வெயிலை பொருட்படுத்தாமல் சாரின் கடிதத்தை அக்கா படித்துக் கொண்டிருக்க அருகில் இருந்த ரேடியோவில் அந்த அறிவிப்பு வெளியானது.

’நேயர்களே! இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம் இதோ இன்னமும் சில நொடிகளில். 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 90-ம் வருடம்... இதோ’

நான் வாசலில் சோனியை கொஞ்சிக் கொண்டு நின்றிருந்தேன். அதிவேகமான காற்று அக்காவின் மென்மையான விரல்களை வென்று அந்த கடித காகிதங்களை சுழற்றிக் கொண்டு போய் வீட்டு முன்னால் தெருவில் பரத்திவிட்டது. நான் பரபரத்து தெருவில் இறங்கி பொறுக்குவதற்குள் விரித்து பிடித்த குடையுடன் ரகோத்தமன் மாமா வெளியில் வந்துவிட்டார்.

’என்னடா பேப்பர் அது?’

ஹேண்டில் பார் மீசைக்கு பின்னாலிருந்து கரகரப்பான குரலில் கேள்வி கேட்டுக் கொண்டே அந்த காகிதங்களை கைப்பற்றினார் மாமா. பாலமுருகன் சாரின் காதலுக்கு அத்தோடு ஆயுசு முடிந்தது. மாமாவின் செல்வாக்கினால் வேலை இழந்த போது கூட அவர் இடிந்துவிடவில்லை. அடுத்த இரண்டாம் வெள்ளிகிழமையே அக்காவிற்கு அந்தியூரில் கல்யாணம் நிச்சயம் ஆன போதுதான் ஆடிப் போனார். மனசு ஒடிந்து போன நிலையில் தீரமான செயல் தற்கொலைதானா என்ன? சாரை சந்தித்தால் கட்டாயம் கேட்க வேண்டும்.

o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o


நோபல் பரிசு’ ஆராய்ச்சி தொகுப்பினை மூடி வைத்துக் கொண்டே ‘கண்டிப்பாக இது நோபல் பரிசை வெல்லக்கூடிய கூடிய ஆராய்ச்சி. வான்கூவர் ஸ்பேஸ் ஸயின்ஸ் காண்ஃப்ரன்ஸில் இந்த பேப்பர்தான் திருப்புமுனையாக இருக்கப் போகிறது. எனக்கு முழுத் திருப்தி!’ என்று புன்னகைத்தபடியே சொன்னார் க்ளென் வெஸ்ஸெல். எங்கள் ஆராய்ச்சி கூடத்தின் துணைத்தலைவர்.

‘மிக்க நன்றி சார்!’ இவர் இவ்வளவு தூரம் திருப்தியடைவார் என்று எதிர்பார்க்கவில்லை.

‘உனது கணித விளக்கங்களை முழுவதுமாக பார்க்கவில்லை. ஆனால் நீ சொல்வதை வைத்து பார்த்தால் கடந்த கால ரேடியோ அலைகளை தொடர்ந்து பின்னோக்கி போக முடியும் என்கிறாய். அதுதானே Adaptive Wave Tracing என்று சொல்லியிருந்தாய்?’ உதட்டை மடித்து ஈரப்படுத்திக் கொண்டே கேட்டார்.

‘யெஸ் ஸார்! என்னுடைய பள்ளி ஆசிரியர் பாலமுருகன் இதனைப் பற்றி அப்ஸ்ட்ராக்டாக பேசுவார். சிறு வயதிலேயே மனதில் பதிந்து போன விசயம். அவர் அதர்வன வேதம், எகிப்திய பழக்கங்கள், ஊடு மந்திரம் என்றெல்லாம் விளக்கம் சொல்லியிருந்தார்’

‘ஓ! தயவுசெய்து அந்த விஷயங்களை இந்த ஆராய்ச்சியில் கொண்டு வந்து விடாதே. நீ சொல்லியிருக்கும் பாய்ஸன் டிஸ்ட்ரிப்யூஷன் அணுகுமுறை மிகச் சரி. ப்ரிண்ஸ்டன் பல்கலைகழகத்தில் இது தொடர்பான ஒரு ஆய்வு கட்டுரை வாசிக்கப்பட்டது. ஆனால் நீ பல படிகள் மேலே சென்றிருக்கிறாய். விண்வெளி அறிவியலில் இது ஒரு மைல் கல்.’

அவருக்கு பக்கவாட்டிலிருந்த இருந்த அறையைக் காட்டி ‘நமது சிம்பிக்ப்ளூ (SIMBICBLUE) ஒரு பிரும்மராட்சசன். இவனால்தான் இந்த ஆராய்ச்சி சாத்தியமானது!’ என்றேன். சிம்பிக்ப்ளு என்பது ஒரு பிரும்மாண்டமான சூப்பர் கணிணி. சுருக்கமாக சிப்ளு என்று எங்கள் குழுவில் கூப்பிடுவோம்.

சிப்ளூவோடு விரலால் உரையாடிக் கொண்டே ’இதைக் கேளுங்களேன்’ என்றேன் க்ளென்னிடம்.

’நேயர்களே! இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம் இதோ இன்னமும் சில நொடிகளில். 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 90-ம் வருடம்... இதோ’ வசீகரமான குரலில் ஒரு தமிழ் அறிவிப்பு. 1990-களில் விவிதபாரதியில் பிரபலமான வானொலி அறிவிப்பாளர் செழியனின் குரல் அப்படியே அட்சரம் பிசகாமல் தமிழில் ஒலித்தது.

அந்த தமிழ் அறிவிப்பினை க்ளென்னுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவிட்டு ‘பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் இந்த பிரபஞ்சத்தில் செலுத்தப்பட்ட அந்த ரேடியோ அலைகளை சிப்ளு கவர்ந்து, தொகுத்து இப்பொழுது நமக்கு ஒலிக்க செய்திருக்கிறான். செழியன் அன்று விவிதபாரதியில் பேசியதை இன்று நேரடியாக நாம் கேட்கிறோம் சார். வேறு எங்கும் பதிவு செய்யப்பட்டதல்ல’ எனது குரல் நெகிழ்ந்து தழுதழுத்தது. எட்டு வருடம் இரவு பகலாக மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெற்றியை பகிரும்போது ஏற்படும் நெகிழ்ச்சி. பாலமுருகன் சார்... நீங்கள் இதையெல்லாம் பார்க்க கொடுத்துவைக்கவில்லையே.

‘அது மட்டுமல்ல க்ளென்! இரண்டாம் உலகப் போரின்போது பதியப்பட்ட சில ரேடியோ அறிவிப்புகளை சிப்ளூவிடம் கொடுத்தால்.. ‘ அவர் கண்கள் மின்ன என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். ‘அந்த ரேடியோ அலைகள் எந்த நாளில், எங்கிருந்து செலுத்தப்பட்டது என்பதை மிகச்சரியாக சிப்ளூ கணித்துவிடுவான். Adaptive Wave Tracing’

’பிரமாதம்! இதன் பயண்களின் எல்லை என்னை பிரமிக்க வைக்கிறது’ அவர் கண்களில் டாலர்கள் கோடிகளில் குவிகின்றன.

o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o


னது அடுத்த கட்ட சோதனைய க்ளென்னிடம் நான் சொல்லவில்லை. அதை நேரடியாக பாலமுருகன் சாரிடம் சொல்லிவிடப் போகிறேன். அதற்கு முன்னால் அவரிடம் கேட்டு விட வேண்டும்.

’ஏன் இப்படி கோழைத்தனமாக தற்கொலை செய்து கொண்டு செத்துப் போனீர்கள்?’

இரண்டாம் கட்ட சோதனை கொஞ்சம் சிக்கலானது. Grandfather Paradox என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். விளைவுகளை தீர்மானமாக சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த சோதனையின் சாத்தியமாக வசுமதி அக்காவின் காதல் வெற்றி பெறலாம். பாலமுருகன் சாரின் தற்கொலை தடுக்கப்படலாம். இந்த ஆராய்ச்சியின் வித்து அவரிடம் அன்றே இருந்தது. அவரின் வழிகாட்டுதலில் நான் தற்போது எட்டியிருக்கும் உயரங்களை விட அதிக உயரங்களை அடையலாம். எல்லாம் ‘லாம்’கள்தான் என்றாலும் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

பாலமுருகன் சாரின் பிரேதப்பரிசோதனை அறிக்கை, மற்றும் வசுமதி அக்கா, சோனி, ரகோத்தமன் மாமா, ரங்கநாயகி மாமி என்று எல்லோர் பற்றிய தகவல்களையும் சேர்த்து இந்த ஆராய்ச்சி தொகுப்போடு மிகவும் ஜாக்கிரதையாக எனது லைப்ரரியில் பத்திரப்படுத்தியிருக்கிறேன்.

நாளை இந்த ஆராய்ச்சியின் முழு வெற்றியையும் இந்த உலகம் உணரப் போவதற்கு நீங்கள்தான் சாட்சி.

o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o


தோ சிப்ளூ இரண்டாம்கட்ட சோதனையை தொடங்கிவிட்டான், செழியனின் அறிவிப்பை தொடர்ந்து...

சிப்ளூவால் ரேடியோ அலைகளை ட்ரேஸ் செய்து அது புறப்பட்ட இடத்தை கணிக்க மட்டுமல்ல, மேலும் சில ஜாலங்கள் செய்ய முடியும். சிப்ளூ தான் தொடரும் ரேடியோ அலைகளில் சில எல்லைகுட்பட்டு மாற்றங்கள் செய்ய முடியும். லாக்கர்ஹீட் ரேடியோ ஷிஃப்ட் என்று கேள்விப்பட்டிருப்பீர்களா? கேள்விபடாவிட்டாலும் கவலையில்லை. எளிமையாக சொல்வது என்றால் செழியனின் அறிவிப்பை ட்ரேஸ் செய்து விவிதபாரதியிலிருந்து அது ஒலிபரப்பும் முன்னர் ஒரு சின்ன மாற்றம் செய்துவிடப் போகிறான்.

ஆம்! 1990-ம் வருடம் இந்த உலகம் கேட்கப்போவது சிப்ளூவினால் மாற்றம் செய்யப்பட்ட செழியனின் அறிவிப்பு. ஒரு அழகிய ஓவியத்தில் சிறிய கரும்புள்ளி விழுந்துவிட்டது. கொஞ்சம் போல் வெண்மை வண்ணத்தை வைத்து அந்த கறையை துடைத்து விட்டால் படம் முழு சோபை பெற்று விடாது? இதோ சிப்ளூ திருத்தி எழுதப் போகிறான்.

வா! எனது நவீன பிரம்மாவே! இந்த பிரபஞ்சத்தில் பின்னோக்கி பயணித்து போ. நடந்த நிகழ்ச்சிகளில் ஒரு சின்ன பிழை திருத்தம். இப்பொழுதிலிருந்து நீங்களும் இந்த சோதனையில் ஒரு பாத்திரம். நாளைய பிரபஞ்சத்தில் இந்த ஆராய்ச்சி பேசப்படுவதில் உங்கள் பங்கும் இருக்கிறது நண்பரே.

o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o


மொட்டை மாடியின் வெயிலை பொருட்படுத்தாமல் சாரின் கடிதத்தை அக்கா படித்துக் கொண்டிருக்க அருகில் இருந்த ரேடியோவில் அந்த அறிவிப்பு வெளியானது.

’நேயர்களே! இந்த பிரபஞ்சத்தின் மிக முக்கியமான கணம் இதோ இன்னமும் சில நொடிகளில். 12 மணி 34 நிமிடம் 56 நொடி 7-ம் தேதி 8-ம் மாதம் 90-ம் வருடம்... இதோ’

நான் வாசலில் சோனியை கொஞ்சிக் கொண்டு நின்றிருந்தேன். அறிவிப்பின் முடிவில் ’நங்’ன்று ஒரு சத்தம். பித்தளை தாம்பாளத்தில் ஓங்கி அடித்தது போல். என் கையிலிருந்த சோனி எகிறி குதித்து ஓடியது. ’ஏய்!’ என்று நான் கூப்பிட்டுக் கொண்டே திரும்பினேன். திடீரென்று அதிவேகமான காற்று அக்காவின் மென்மையான விரல்களை வென்று அந்த கடித காகிதங்களை சுழற்றிக் கொண்டு போய் வீட்டு வாசலில் பரத்திவிட்டது. நான் பரபரத்து தெருவில் இறங்கி பொறுக்குவதற்குள்...

’சை! புறப்படும்போது இந்த சனியன் வேற குறுக்கே போறது. ரங்கநாயகி! கொஞ்சம் தேத்தம் எடுத்துண்டு வா’ விரித்து பிடித்த குடையுடன் ரகோத்தமன் மாமா வீட்டு வாசலில் திரும்பி படியேறி உள்ளே போனார்.

o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o


எனது தொண்டை ஏன் இப்படி எரிகிறது? கண்கள் வேறு காந்துகிறது ஏழெட்டு நாட்களாக தூங்காத மாதிரி ஏனிப்படி.. ’வசுக்கா’ என்று முனகுகிறேன்.

’முழிச்சிட்டியா?’ என்று பக்கத்திலிருந்து ஆதுரமான குரல்.

’ரொம்பத்தான் பயமுறுத்திட்டே ரெண்டு நாளா’ ஆமாம். பாலமுருகன் சார்தான். அவரேதான்.

’சார்! சார்!’ தழுதழுக்க... சட்டென எல்லாம் மறந்து போய் விட்ட மாதிரி... எங்கோ ஒரு சங்கிலி உடைந்து போன மாதிரி வெறுமையாய் உணர்கிறேன்.

அவருடைய வழக்கமான வசீகர புன்னகையோடு ‘என்ன திடீர்னு வசு நினப்பு? அவதான் அந்தியூர் ஐயர் பையனைக் கட்டிக்கிட்டு அமெரிக்கா போய் வருசம் பத்து பதினஞ்சு ஆயிருக்குமேப்பா. ம்ம்ம்... என்னாச்சு உனக்கு? இன்னமும் கெறக்கமாத்தான் இருக்கா? நல்லவேளை அதிகமா நெருப்பு காயம் இல்லை. ரெண்டு நாளா டிஸ்சார்ஜ் ஆயிடலாம்னு சொல்லிட்டாரு டாக்டர்.’

’நெருப்பா?’

’ம்ம்ம். எல்லாம் அந்த கெழட்டு பூனை சோனி வேலைதான். பிரஸ்ல எரிஞ்சிட்டிருந்த மெழுவர்த்தியை தட்டிவிட்டு எல்லாம் தீப்பிடிச்சிடுச்சு. ஆறுமுகம் பதறிப்போய் தண்ணி மண்ணுன்னு தத்தளிச்சு கொண்டாறதுக்குள்ள... எல்லா பொஸ்தகமும் எரிஞ்சுப் போச்சுப்பா. நீ தப்பினதே பெரிய புண்ணியம். ரொம்பவே பதறிப் போயிட்டோம்’

எனக்கு கிறுகிறுவென தலையை சுற்றியது. எரிந்து போயிற்றா? நான் எதையோ இழந்தது போல்... ’எல்லாம் போச்சா?’ என்கிறேன் முனகலாக.

’டென்த் ஸ்டாண்டேர்டு சைன்ஸ் கைட் மொத்தமும் போச்சுப்பா. ப்ரிண்டானது, பைண்ட்ல இருந்தது, மேனுஸ்க்ரிப்ட் எல்லாம் போச்சு. வேற என்னென்ன ஆர்டர் எடுத்து வச்சிருந்தியோ நீயு’ என்றார் உச்சுக்கொட்டிக்கொண்டே. தொடர்ந்து ’சரி. ஒன்னும் பிரச்சினையில்ல. கைட்-ஐ திரும்பி எழுதிடலாம். புது சிலபஸ்ங்கிறதுனால கொஞ்சம் லேட்டாவும்.’ என்கிறார்.

அய்யோ... அய்யோ... இல்ல. வேற ஏதோ தப்பாகிவிட்டது. நான்... நான்... இல்லை. வேறு ஏதோ எனக்கு குழப்பம்.

ஆ! சுறுசுறுவென நினைவுகள் சுழன்று அடிக்கின்றன. சாரோட குரல் தூரத்தில் கேட்கிறது. அறிவியல் பாட கைடா? அதுதானா? வேறேதோ ஒண்ணு மறந்து போன மாதிரி. என்னென்னமோ பிம்பங்கள் மனதில் மாறிமாறி மோதுகின்றன.

’சார்!’

’என்னா?’

’ஜூனுக்குள்ள ப்ரிண்டாகி கடைக்கு போவனும். உங்க ஸ்கூல்ல எதுனா பி எஃப் லோன் கிடைக்குதுன்னா பாருங்களேன்’ என்கிறேன் நான், என் குரலையே நம்ப முடியாமல்.

o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o


ஆழி பதிப்பகம் நடத்திய அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதைப் போட்டிக்காக எழுதியது. பரிசு பெறவில்லை எனினும் எனக்கு திருப்தியாக இருந்த படைப்பு. இதை எழுத ஊக்குவித்த ஜெயராதா, ஜ்யோவ்ராம் சுந்தர் போன்ற நண்பர்களுக்கும், படித்து கருத்து சொன்ன சுரேஷ், டைனோக்கும் நன்றிகள் பல. கருத்தே சொல்லாமல் ஓபி அடித்த இலவசனாருக்கு இங்கே எனது கண்டனங்களை பதிவு செய்து கொள்கிறேன்.

21 மறுமொழிகள்:

வெண்பூ said...

அருமையான கதை Sridhar Narayanan ... பரிசு கிடைக்காதது ஆச்சர்யமாக இருக்கிறது... பாராட்டுகள்...

Sridhar Narayanan said...

வெண்பூ,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிகள் :-)

நீங்களும் இந்தப் போட்டியில் பங்கு பெற்றிருந்தீர்களா? அந்த படைப்புகளையும் பதிவிடலாமே?

வெண்பூ said...

இந்த அளவுக்கு இல்லை.. கடைசி நிமிடத்தில் அனுப்பினேன். விரைவில் பதிவிடுகிறேன்..

Sridhar Narayanan said...

//இந்த அளவுக்கு இல்லை.. //

அவ்வளவு மோசமாவா நம்ம படைப்பு இருக்கு? போன கமெண்டை பாத்திட்டு நீங்க நெசமாவே பாராட்டறீங்களோன்னு நெனச்சிட்டேனே.

சீக்கிரம் பதிவேத்துங்க. படிக்க ஆர்வமா இருக்கோம் :-)

வெண்பூ said...

//
அவ்வளவு மோசமாவா நம்ம படைப்பு இருக்கு
//

ஆஹா.. தல.. உங்களோட கதை ரொம்ப நல்லா இருக்கு.. என்னோடது அவ்ளோ நல்லா இல்லைன்னு சொல்ல வந்தேன்.. வர்ற வாரத்துல போடுறேன். படிச்சி பாத்துட்டு சொல்லுங்க.. :)))

கோபிநாத் said...

தல

நல்லாயிருக்கு...;)

கே.ரவிஷங்கர் said...

கதை நல்லா இருக்கு.ஆனால் முடிவு
வேறு மாதிரி இருந்திருக்கலாம்.

கதாநாயகன் தன்னுடைய
plotயிலேயே misfire ஆகி மாட்டிக் கொள்வது வழ்க்கமான ஓன்று.

Sridhar Narayanan said...

சீக்கிரமா பதிவிடுங்க வெண்பூ :-)

உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி கோபி :-)

உங்களுக்கு கதை பிடித்திருப்பதில் மிகவும் சந்தோஷம் ரவிசங்கர் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :-)

சென்ஷி said...

அருமையான கதை Sridhar Narayanan ... :-)

Sridhar Narayanan said...

வாங்க காதலரே! உங்களுக்கு கதை பிடித்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி :-)

குமரன் (Kumaran) said...

நல்லா இருக்குங்க.

Paper N Pencil said...

Arumayana Azhagana kadhai:-).

Sujatha was a brilliant contemporary tamil writer, who can bring in science, social settings, family bonds, Vasant jokes (ha ha)thriller everything seemlessly in his stories!

I do see his traces in you.((in a positive sense))... I am sure there are many PRIZES and AWARDS in store for you!

Cheers...Viji

Sridhar Narayanan said...

வாங்க குமரன். உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி. :-)

வாங்க விஜி :-)

//I do see his traces in you.((in a positive sense))... //

ஏன் இந்த கொலை வெறி? அதுவும் அவர் நினைவு நாளும் அதுவுமா? :-)

உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.

Paper N Pencil said...

ha ha ha:-).

Idhellam kandukkama ezhudhunga!

Sridhar Narayanan said...

//Idhellam kandukkama ezhudhunga!//

உங்க ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி விஜி. தமிழ்ல எழுதறதுக்கு NHM Writer பயன்படுத்துங்களேன். மிகவும் சுலபம். மேலும் தகவல் வேண்டும் என்றால் எழுதுங்கள்.

தமிழன்-கறுப்பி... said...

கலக்கல்..!

Sridhar Narayanan said...

வாங்க தமிழன் - கறுப்பி,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள் பல

ambi said...

அருமையா இருக்கு. கடைசில தான் ராஜீவ் மேனன், லிங்குசாமி பட கிளைமாக்ஸ் மாதிரி ஆயி போச்சு. கொஞ்சம் தட்டி மெருகேத்தி இருக்கலாம். :))

பரிசு கிடைக்கலையா? சரி விடுங்க தல. ஆஸ்கார் நமக்கு தான். :))

முதல் பரிசு பெற்ற கதையின் சுட்டி தர முடியுங்களா?

அப்புறம் ஒரு விஷயம், உங்க கதைல பாய்ஸன் டிஸ்ட்ரிபியூசன் எனப்து தவறான மேற்கோள். ஏன்னா எனக்கு இன்னமும் பாய்ஸன் பார்முலா தெரியுமாக்கும்.


From Google:
Poisson distribution is a discrete probability distribution that expresses the probability of a number of events occurring in a fixed period of time if these events occur with a known average rate and independently of the time since the last event.

ஒரு மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சாலையில் நடைபெறும் சாலை விபத்து எத்தனை? என சொல்வது பாய்ஸன் விதிக்கு ஒரு உதாரணம்.

இங்க பிராபபிலிட்டி என்ற கான்செப்ட்டே இல்லையே? எல்லாம் உறுதியா நடக்கற மாதிரி இல்ல இருக்கு. :))

Sridhar Narayanan said...

அம்பி அண்ணா,

தாமதமான பதிலுக்கு மன்னியுங்கள்.


//அருமையா இருக்கு. கடைசில தான் ராஜீவ் மேனன், லிங்குசாமி பட கிளைமாக்ஸ் மாதிரி ஆயி போச்சு. கொஞ்சம் தட்டி மெருகேத்தி இருக்கலாம். :))//

முதல் வடிவம் கொஞ்சம் பாலா சாயலா அப்ஸ்டிராக்டா இருந்ததனாலதான் இப்படி விக்கிரமன் ஸ்டைலுக்கு மாறினேன் :-)

//பரிசு கிடைக்கலையா? சரி விடுங்க தல. ஆஸ்கார் நமக்கு தான். :))//

ஆஸ்கார்னாலும் சரி எந்தக்காரா இருந்தாலும் சரி... வாங்கி ஓட்டிர்ற்லாம்ணே. ப்ரீயா விடுங்க.

//முதல் பரிசு பெற்ற கதையின் சுட்டி தர முடியுங்களா?//

புத்தகமாத்தான் வருது போல. ஆழி பதிப்பகத்தாரோட இணையதளத்துல பாருங்களேன்.

//அப்புறம் ஒரு விஷயம், உங்க கதைல பாய்ஸன் டிஸ்ட்ரிபியூசன் எனப்து தவறான மேற்கோள். ஏன்னா எனக்கு இன்னமும் பாய்ஸன் பார்முலா தெரியுமாக்கும். //

உங்களுக்கு ‘பாய்’ஸன் பத்தியெல்லாம் கூட தெரியுமா? நான் நீங்க ‘கேர்ள்’ ஸ்பெஷலிஸ்ட்னு நினச்சிட்டேன்.

//ஒரு மணி நேரத்தில் ஒரு குறிப்பிட்ட சாலையில் நடைபெறும் சாலை விபத்து எத்தனை? என சொல்வது பாய்ஸன் விதிக்கு ஒரு உதாரணம்.

இங்க பிராபபிலிட்டி என்ற கான்செப்ட்டே இல்லையே? எல்லாம் உறுதியா நடக்கற மாதிரி இல்ல இருக்கு. :))//


அதாவது... ray tracing அப்படின்னு கேள்விப்பட்டிருப்பீங்க. ஒரு காட்சியை நீங்கள் எப்படி கண்களால் பார்க்கிறீர்கள்? அந்த காட்சி சம்பந்தபட்ட பொருட்களின் மேல் படும் ஒளியானது உங்கள் கண்களை வந்து அடையும் போது உங்களுக்கு அந்த காட்சி புலனாகிறது. உங்கள் கண்களை அடைந்த ஒளியானது தொட்ர்ந்து பயனித்துக் கொண்டேதான் இருக்கிறது. எதிர்காலத்தில் நீங்கள் அந்த ஒளிக்கீற்றை கண்டுபிடித்து அது எந்த வழியில் பயனித்து வந்திருக்கிறது என்று பின்னோக்கி பார்த்தால் உங்களுக்கு கடந்த கால காட்சிகள் புலனாகின்ற.... என்ன நம்ம புரானங்கள்ல வருகிற ரிஷிகள் ‘முக்காலமும் உணர்ந்தேன்’ அப்படின்னு சொல்ற மாதிரி இருக்கா?

அதையே deceased radio waves-க்கு மாற்றி யோசித்தால் நம்மால் கடந்த கால ரேடியோ அலைகளை பகுத்து பார்க்கும் திறன் கிடைக்கின்ற மாதிரி ஒரு கற்பனை.

இதில் ப்ராபப்ளிட்டி இல்லாமல் எப்படி? எத்தனை அலைகள் சுற்றி இருக்க... எத்தனை ஆய்வுகள் செய்து அந்த அலை கடந்து வந்த பாதையை தீர்மானித்து... பாவம் சிக்ப்ளூ மிகவும் கஷ்டபட்டு கண்டுபிடித்தால் நீங்கள் நம்ப மாட்டேன் என்றால் எப்படி?

மொத்தத்தில அறிவியல் புனைவுகள்னு சொன்னா அனுபவிக்கனும். ஆராயக் கூடாது :)))

ambi said...

இது இப்படித் தான்யான்னு சொன்ன கேட்டுக்க போறோம், அதுக்காக ஒரு நோபல் விஞ்ஞானி ரேஞ்சுக்கு இவ்ளோ நீள விளக்கமா?

வேணாம் அளுதுடுவேன். :))

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

நன்றாக வந்திருக்கின்றது. இன்னும் கொஞ்சம் Down to Earth கொண்டு வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது...!

அறிவியல் புனை கதையில் இன்னும் நிறைய பின்னியெடுக்க வாழ்த்துக்கள்...!!!