’சாரா’ (எ) சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த வெளி ஆதரவாளரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்றாலும் அதனை ஊடகங்கள் சரியாக அங்கீகரிக்காமல் விட்டுவிட்டன என்று ரெங்கராமன் வருத்தப்பட்டு எழுதியிருக்கிறார். சரஸ்வதியின் நண்பர் பொயட்ரீயும் இதனை ஊடகங்களுக்கு முறையாக எடுத்து செல்வதில் உள்ள கசப்பான அனுபவங்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.
சரஸ்வதி காமேஸ்வரன் வட துருவத்திற்கும், தென் துருவத்திற்கும் சென்ற செய்திகளின் தொகுப்பு இணையத்தில் கீழிருக்கும் சுட்டிகளில் பதியப்பட்டிருக்கின்றன. ரெங்கராமனின் பதிவுகளில் மேலும் பல தகவல்கள் இருக்கிறது.
Expedition Tracker
Icetrek Expeditions
சாதனையாளர்களை ஊடகங்கள் சரியானபடி அங்கீகரிக்காதது வருத்தம் அளித்தாலும், ஊடகங்களிடம் நாம் எதை எதிர்பார்க்கிறோம் என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது. NDTV-லோ நாளிதழ்களிலோ வெளிவரும் செய்திகளை அங்கீகாரம் என்று எண்ணுவதை விட முறையான வகையில் சாதனைகளை பதிவு செய்து இணையத்தின் மூலம் அதிக பேரைச் சென்றடைவதால் அதிகமாக பிரபலமடைய முடியும். இன்றைய இணைய உலகில் அதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாக இருக்கின்றன. ஒரு நாள் டீவியில் வெளியிடப்படும் செய்திகளை காட்டிலும் இணையத்தில் முறையாக பதிவிடப்படும் செய்திகள் அதிகமானவர்களை அதிக நாட்களுக்கு சென்றடையும் என்பது எனது கருத்து.
அது என்ன ‘முறையாக’ பதியப்படும் விஷயங்கள்? இணையத்தின் பலமே அது பல்கிப் பெருகி பரவும் தன்மையைக் கொண்டது - Geometrical Progression போல. முறையாக பதியப்பட்டால் அதன் பலன்களும் பல மடங்குகள் அதிகமே. இன்றைய காலகட்டத்தில் Social Networking எனப்படும் சமூக தொடர்பு வலை உங்களையும் உங்கள் சாதனைகளையும் பிரபலமாக்க ஏராளமான வழிவகைகள் செய்து தருகின்றது.
Wikipedia - இது ஒரு இணைய ஆவணக் களஞ்சியம். இங்கு யாரும் தங்களைப் பற்றியோ அல்லது தங்களுக்கு தெரிந்த சாதனையாளர்கள் / சாதனைகள் / நிகழ்வுகள் / செய்திகள் எதைப் பற்றி வேண்டுமானாலும் இலவசமாக பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும்போது எல்லாவித தகவல்களும் கொடுத்து விடுவது நல்லது. நாளை யாராவது ஒருவர் ‘தமிழர், வட துருவம்’ என்று தமிழிலோ, ஆங்கிலத்திலோ கூகுளில் தேடினால் இது சரியாக விக்கிபீடியாவின் சம்பந்தபட்ட பக்கத்தை கொண்டு வரும் வகையில் எல்லா தகவல்களும் பதியப்பட வேண்டும். உதாரணத்திற்கு மேலே தரப்பட்டுள்ள trekking பற்றிய பதிவுகளில் சரஸ்வதி காமேஸ்வரன் ‘சாரா’ என்றே குறிப்பிடப்படுகிறார். அதனால் விக்கி பக்கத்தில அவரது பொதுப் பெயரான ‘சாரா’ என்பதையும் சரியாக குறிப்பிட வேண்டியது அவசியம்.
உதாரணத்திற்கு முதலில் வட துருவத்தை சென்றடைந்தவர்களைப் பற்றிய பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டிருக்கிறது. இது போல சாராவிற்கு பல பக்கங்கள் தொகுக்கப்பட்டு ஆவணப் படுத்தலாம். தமிழிலும் ஆவணப்படுத்துவது முக்கியம்.
சொந்த தளம்: என்னதான் விக்கிபீடியாவில் தொகுக்கப்பட்டு ஆவணபடுத்தப்பட்டாலும், பயனக் கட்டுரைகள், புகைப்படங்கள், வீடியோக்கள், நண்பர்களின் தளங்களில் இணைக்கப்பட்ட விவரங்கள் இவை எல்லாவற்றையும் தொகுத்து வைக்க சிறந்த இடம் சொந்த தளம்தான். மிகவும் எளிமையான முறையில், சிக்கனமாக, தனது பயனத்தை சுவாரசியமான கட்டுரைகளாக தொகுத்து வைக்கலாம்.
Facebook: சொந்த தளம் இருந்தாலும் அதை பலருக்கும் அறிமுகப்படுத்த பலரையும் தொடர்பு கொள்ள வேண்டும். பைசா செலவில்லாத, ஆனால் மிகப்பெரிய நெட்வொர்க்கிங் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய தளம் இது. உங்கள் நண்பர்களும், நண்பர்களின் தொடர்புகளும், இணையத்தை புழங்கக் கூடிய யாரும் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவிகரமான இடம்.
Orkut: Facebook உங்களுக்கு ஒரு முகவரி என்றால் Orkut இன்னொரு வகையில் அதே சாத்தியங்களை ஏற்படுத்திக் கொடுக்கும். இதில் பெரிதும் குழுமங்களாக மக்கள் பங்கு பெறுகிறார்கள். நிறைய விவாதங்களும் நடைபெறும். உங்களைப் பற்றிய விபரங்களை இணையத்தில் மக்கள் தேடக்கூடிய முக்கிய இடமாக இன்றும் இருக்கிறது ஆர்க்குட்.
பதிவு (Blog) சொந்த தளம் எல்லாம் அதிகப்படி என்று நினைக்கிறவர்கள் Blogs-ல் இலவச சேவை வழங்கிகள் மூலமாக தங்களைப் பற்றிய விவரங்களைப் பதியலாம். திரட்டிகள் மூலமாக, கூகுள் ரீடர் மூலமாக, இன்னமும் பல சாதனங்கள் மூலமாக இந்தப் பதிவுகளின் விஸ்தீரணம் மிகவும் அதிகம்.
அதிக பக்கங்களில், அதிக நெட்வொர்க்கில் பதிவதின் மூலம் கூகுள் போன்ற தேடு பொறியில் முதல் பக்கத்திலேயே உங்களுடைய தகவல்கள் தெரியப்படுவதற்கு சாத்தியங்கள் அதிகம்.
மேலும் LinkedIn, மின்னஞ்சல் குழுமங்கள், ட்விட்டர் போன்ற பல தகவல் தொடர்புகள் மூலம் உங்களைப் பற்றிய செய்திகள், சாதனைகள் எல்லாவற்றையும் பதியலாம். தற்போதைய இந்திய தொலைகாட்சிகள் மற்றும் செய்திதாள்கள் இந்த இணையப் புரட்சியில் பின்தங்கியே இருக்கின்றன. இணையத்தில் நீங்கள் அதிகப்படியான மக்களை சென்றடைந்தால் ஊடகங்கள் உங்கள் பின்னே தானாக வரும்.
இணையம் அல்லாத சில வழிகளிலும் ஊடகங்களைச் சென்றடையலாம். ஆனால் அதற்கு தேவையான அளவில் செய்தியை வடிவமைப்பது முக்கியம். இலவச மென்பொருட்களைக் கொண்டே சிறப்பான முறையில் செய்தியை வடிவமைத்து ஒரு Flier போன்று ஊடகங்களுக்கு மின்னஞ்சல் செய்வதனால் உடனடி கவனம் பெறும். அந்தந்த துறைக்கென்று நிறைய குழுமங்கள் இருக்கின்றன. அந்த குழுமங்களுக்கு சரியான முறையில் செய்தியை சேர்ப்பித்து அந்த குழுமங்களின் வாயிலாக பத்திரிகை ஊடகங்களுக்கு செய்தியை கொண்டு செல்லலாம். Event Management வல்லுனர்கள் இம்மாதிரியான நிகழ்ச்சிகளை ஊடகப் பார்வைக்கு கொண்டு செல்வதில் தேர்ச்சி பெற்றவர்கள். என்ன கொஞ்சம் செலவாகலாம்.
ஒன்றுமே செய்யாமலேயே இணையத்தினால் புகழ் பெற்றவர்கள் பலர் இருக்கிறார்கள். நீங்கள் ஒரு சாதனையாளர் என்றால் இணையத்தின் மூலமாக முறையாக சந்தைபடுத்தி உங்களுக்கு உரிய அங்கீகாரம் கட்டாயம் பெறலாம்.
8 மறுமொழிகள்:
சன் டிவி வணக்கம் தமிழகத்தில் 'சாதனையாளர்களை சந்திப்போம்' நிகழ்ச்சி இருக்கிறது. இதில் எவ்வாறு கலந்து கொள்வது என்பது தெளிவாக இல்லை.
---NDTV-லோ நாளிதழ்களிலோ வெளிவரும் செய்திகளை அங்கீகாரம் என்று எண்ணுவதை விட முறையான வகையில் சாதனைகளை பதிவு செய்து இணையத்தின் மூலம் அதிக பேரைச் சென்றடைவதால் அதிகமாக பிரபலமடைய முடியும்.---மேற்குலகில் ட்விட்டரும் டிஃக்கும் இளைஞர்களை ஓரளவு கவர்ந்திருக்கலாம். இந்தியாவிலும் இணையம் அந்த அளவு நீக்கமற செய்திகளைக் கொண்டு செல்கிறதா?
அமெரிக்க ஊடகமும் சமூக வலையில் நீஞ்சும்; அதே மாந்தர் மாலையில் டிவியில் தோன்றி வலைச்சமூகத்தில் அன்று அளவளாவிக் கொண்டதை அகஸ்மாத்தாக எடுத்தும் வைப்பர்.
இந்தியாவில் இது ஒரு வழிச்சாலை. சமூகவலை பின்னுபவர் டிவி பார்ப்பார்; நாளிதழ் வாசிப்பார்; அதைப் பற்றியெல்லாம் பத்தி எழுதி பதிவாக்குவார்.
மேற்குலகில் இதை வாசிக்க கூட்டம் எளிதில் சேர்க்க முடியும். அவர்களுக்கு ஐபிஎல் கவலை கிடையாது; மின்ரத்து இல்லாத சமூகம்.
ஆனால், ஆனானப்பட்ட அமெரிக்க இணையம் கொண்டு தான் செய்த விஷயங்களை பரப்பலாம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கினால், அதுவே முழுநேர வேலை ஆக வைத்துக் கொண்டால் மட்டுமே இன்ச் அளவு இணையத்தை ஆகர்ஷிக்கலாம். அப்புறம் ஆராய்ச்சி, பயணம், களப்பணி என்றெல்லாம் உருப்படியாக நேரம் செலவழிக்க இயலாது.
---என்ன கொஞ்சம் செலவாகலாம்.---
:)
இது மட்டும் இருந்தால் அனுபவமே இல்லாமல் அரசியல்வாதி முத்திரை முதல் அன்டார்டிகா வரை வாங்கலாம்.
//ஆனால், ஆனானப்பட்ட அமெரிக்க இணையம் கொண்டு தான் செய்த விஷயங்களை பரப்பலாம் என்று முடிவெடுத்து காரியத்தில் இறங்கினால், அதுவே முழுநேர வேலை ஆக வைத்துக் கொண்டால் மட்டுமே இன்ச் அளவு இணையத்தை ஆகர்ஷிக்கலாம். அப்புறம் ஆராய்ச்சி, பயணம், களப்பணி என்றெல்லாம் உருப்படியாக நேரம் செலவழிக்க இயலாது.//
பாபா,
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி. அதென்ன ‘அமெரிக்க இணையம்’? :) இணையத்தையும் முதலாளித்துவ சாதனமாக வர்ணம் பூசும் உமது நுண் அரசியல் கண்டு இலவசம் வந்து பிரமித்து நிற்கப் போகிறார்.
இஞ்ச் எல்லாம் இல்லை பாலா. நிறையவே ஆக்ரமிக்கலாம். துருவ பயனங்கள் அதிகம் பேர் செய்வது கிடையாது. அதனால் சரியான தகவல்களுடன் சொந்த தளத்தில் ஒரு பதிவு (ஆங்கிலம், தமிழ், சாதனையாளர் தேவை என்று கருதும் இன்ன பிற மொழிகள்) போடுவதன் மூலம் கூகுளில் முதல் பேஜ் ரேங்க வாங்க முடியும். பிறகு விக்கிபீடியா, ஃபேஸ்புக், ஆர்குட் என்று அதே பக்கத்தை தொடர்புபடுத்தி நெட்வொர்க்கை பெரிது படுத்தினால் பின்னர் யாரும் நாக்கில் மேல் பல்லு போட்டு வேறு ஒருவரை அதே சாதனைக்கு சொல்லிவிட முடியாது.
இந்த சாதனை உலக சாதனையாக இருக்கும் பட்சத்தில், மேற்குலகு, கீழுலகு எல்லாம் பாகுபாடு தேவையில்லை என்று நினைத்தேன்.
அது மட்டுமல்லாமல் பிரனாய் ராய், சர்தேசாய், போன்றோரோ அவரது நண்பர்களோ நிச்சயம் ஆர்குட் / ஃபேஸ்புக்கில் இருப்பார்கள். இம்மாதிரியான ஸ்டோரிகள் அங்கே சுலபமாக அவர்களை கவரும் என்று நினைக்கின்றேன்.
தினமலர் போன்ற பெரிய பத்திரிகைகளே... அலெக்ஸா ரேங்கிங் வைத்துக் கொண்டு ஃப்லிம் காட்ட ஆரம்பித்திருப்பது இந்தியாவில் இணையத்தின் வீச்சை ஊடகங்கள் உணர ஆரம்பித்திருக்கின்றன என்று தெரிகிறது.
டிவி மீடியாக்களை அணுகுவதில் தவறில்லை. ஆனால் இது போன்ற இலவச சேவைகளை பயன்படுத்தாமல் டிவி ஊடகங்களை மட்டும் நம்பியிருப்பது சரியானதல்ல.
Thank you. We are working on creating an article on Wikipedia. Sara already has it on Facebook too. We'll try more. I really appreciate your time and valuable suggestion. Thanks a lot.
நன்றி பொயட்ரீ.
ஃபேஸ்புக் பக்கம் மற்றும் விக்கிபீடியாவை தொடர்பு படுத்திக் கொள்ளுங்கள். மேலும் ஆர்குட், மைஸ்பேஸ் போன்றவற்றிலும் பிரபலபடுத்துங்கள். கண்டிப்பாக தொலைகாட்சி ஊடக நிகழ்ச்சி தயாரிப்பாளர்களிடம் தொடர்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
இது தொடர்பான எல்லா இடுகைகளையும் இப்ப தான் பாத்தேன்.
ஒரு சின்ன(பெரிய) திருத்தம்:
டுபுக்கு என இணையத்தில் எழுதுபவர் பெயர் ரங்கராஜன் இல்லை, ரெங்கராமன்! என துண்டை போட்டு தாண்டாமல், சூடன் அடித்து (உம்ம கைல தான்) சத்தியம் செய்யாமல் சொல்கிறேன்.
ஏன்னா அது தான் என் பெயரும். :)ஆனா நான் அவரில்லை. :p
மகேஷ் இல்லை மாத்தேஷ்னு ராஜு சுந்தரம் மாதிரி நானும் போற இடமெல்லாம் சொல்லி பாத்தாச்சு! கர்ர்ர். :))
//டுபுக்கு என இணையத்தில் எழுதுபவர் பெயர் ரங்கராஜன் இல்லை, ரெங்கராமன்! //
அம்பி! சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி. திருத்திவிட்டேன்.
//மகேஷ் இல்லை மாத்தேஷ்னு ராஜு சுந்தரம் மாதிரி நானும் போற இடமெல்லாம் சொல்லி பாத்தாச்சு! கர்ர்ர். :))//
ரொம்பவும் கஷ்டமா இருந்தா பேசாமப் பெயரை ரங்கராஜன்-னு மாத்திகிட்டு ‘ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜந்தான்’ன்னு பாட்டுப் பாடிட்டே போகலாமில்ல? நல்ல பிரபலமான பேருங்க அது... :))
//ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜந்தான்’ன்னு பாட்டுப் பாடிட்டே //
ஆமா, படம் வந்தப்ப இந்த பாட்டை பாடி ஆபிஸ்ல என்னை கலாய்ச்சிட்டாங்க. :))
//நல்ல பிரபலமான பேருங்க அது... //
ரெங்கராமனும் பிரபலமான பெயர் தானுங்கோ! :))
Post a Comment