முதல் காட்சி: ஒரு பேருந்தின் உட்புறம். வால்வோ பேருந்தில் உள்ளது போல அகலமான ஜன்னல் கண்ணாடியுடன் கூடிய, பேருந்தின் வலதுபுறத்தில் இருக்கும், இருவர் உட்கார்ந்து கொள்ளக்கூடிய முதல் வரிசை இருக்கை. இருக்கைக்கு இடது பக்கம் பேருந்தின் நடுவில் இருக்கக்கூடிய கம்பம் இருக்கிறது. காலை நேரத்து சூரிய வெளிச்சம் உள்ளே பரவியிருக்கிறது. பேருந்து நின்றிருப்பதால் எந்தவித அசைவும் தெரியாமல் இருக்கிறது.
ஜன்னலோர இருக்கையில் ஒரு இளைஞன் மடியில் ஒரு பிரயாணப் பையுடன் உட்கார்ந்திருக்கிறான். பக்கத்து இருக்கையில் ஒரு தண்ணீர் பாட்டில். அரைக்கண்ணாடி அணிந்து கொண்டு, வெயில்காலத்திற்கேற்ற பருத்தியில் கறுப்பு நிற வட்டககாலர் பனியனும் முக்கால்-கால்சட்டையும் அணிந்து தனது வலதுபக்கம் ஜன்னல் வழியே வெளியில் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரே திசையில் பார்க்காமல் அங்குமிங்குமாக பரபரப்பு இல்லாமல் பராக்கு பார்த்துக் கொண்டிருக்கிறான்.
வெள்ளை நிற அரைக்கை சட்டையும் சாதாரண கால்சராயும் (ஜீன்ஸ் கிடையாது) அணிந்த நடுத்தர வயதுக்காரர் நடுக்கம்பத்திற்கு அருகில் வந்து நிற்கிறார். கேமராவில் தெரிவது அவரது இடது பக்கவாட்டு தோற்றம். தாராளமான தொப்பையுடன், கைவிரல்களில் நிறைய மோதிரங்களோடு, தூக்கி விட்ட காலரில் கர்சீப் செருகிக் கொண்டு, நெற்றியில் சந்தனப் பொட்டோடு, வாயில் பான்பராக் அடக்கிக் கொண்டு, கொஞ்சம் முன்வழுக்கையோடு இருக்கிறார்.
நடுத்தரவயதுக்காரர்: A-2 இதானே?
இளைஞன்: (சின்ன திடுக்கிடலோடு ஜன்னலை விட்டு இடதுபக்கம் திரும்பி பார்த்து) யெஸ். இதுதான்.
நடு: (இளைஞன் மடியிலிருக்கும் பையைச் சுட்டிக் காட்டிக் கொண்டே) பையை வேணாக் கொடுங்க. மேல வச்சிடறேன்
இளை: (ஒரு கையால் பையை மேலும் நெருக்கமாக அணைத்துக் கொண்டு, புன்சிரிப்போடு) இட்ஸ் ஆல்ரைட்! லெட் இட் பி!
இளைஞனின் புன்னகையில் ஒருவித நெருக்கமின்மை இருக்கிறது. மீண்டும் ஜன்னல் வழியாக பராக்கு பார்க்க ஆரம்பித்துவிட்டான். நடுத்தரவயதுக்காரர் இளைஞனின் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு ‘துறுதுறு’வென சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு மூன்று செய்கைகளில் அவர் சௌகரியமாக உட்கார முயல்கிறார் என்று தெரிகிறது. பிறகு வலதுபக்கம் திரும்பி இளைஞனைப் அளவெடுப்பதுபோல பார்க்கிறார்.
நடு: இன்னிக்கு கூட்டமே இல்லைப் போல. டே டைம்ல அடிக்கடி நான் டிராவல் பண்றதில்லை
இளைஞனிடமிருந்து பதில் இல்லை.
நடு: நீங்க லெஃப்ட் ஹேண்டா?
பதில் இல்லை. நடுத்தரவயதுக்காரர் சுவாதீனமாக இளைஞனின் தோள்பட்டையை மெல்ல சுரண்டி
நடு: நீங்க லெஃப்ட் ஹேண்ட்தானே?
இளை: (இம்முறை சின்ன திடுக்கிடலோடு திரும்பிய இளைஞன்)ஹ! ஏன் கேக்கறீங்க?
நடு: இல்ல.. வாட்சை ரைட் ஹாண்ட்ல கட்டியிருக்கீங்களேன்னு கேட்டேன்
இளை: (அரைப் புன்னகையோடு) ஆமாம். சின்ன வயசுலேந்து அப்படியே பளகிடுச்சு
அவனுக்கு ‘ழ’கரம் அவ்வளவாக பழகவில்லைப் போல. அவனது தமிழ் கொஞ்சம் கொச்சையாக இருந்தாலும் அதிகம் இலக்கணம் சிதையாத உச்சரிப்பு.
நடு: சிலர் எழுதறது மட்டும் இடது கையா இருக்கும். செய்கையெல்லாம் வலது கை. (மீண்டும் அவன் பக்கம் திரும்பி) நீங்க டிரைவர்கிட்ட அட்ரஸ் எழுதி கொடுக்கும்போது கவனிச்சேன்.
நடுத்தர வயதுக்காரர் பெரிதாக புன்னகைக்கிறார். பெரியதாக ஏதோ கண்டுபிடித்துவிட்ட வெற்றிப் புன்னகை. பிறகு ஜன்னலுக்கு வெளியே கொஞ்சம் எக்கிப் பார்த்து
நடு: பஸ்ச எப்பக் கெளப்புவீங்க? சாயந்திரமா ஆறரை ஏழுக்கு சென்னைப் போயிரலாம்ல
வெளிக்குரல்: தோ! ஒம்பதரைக்கு பொறப்பட்டுர்ரலாம். செல்லாத்தா அருளோட சுருக்கவே சென்னைப் போயிரலாம். சவுரியமா உக்காந்துக்குங்க.
இளை: (அவரைத் திரும்பிப் பார்த்து கொஞ்சம் தயக்கமாக) எதுக்கு ஏஜ், அட்ரஸ் எல்லாம் எழுதச் சொல்றாங்க.
நடு: போன மாசம் சிறுகலாம்பட்டி பக்கம் ஒரு மோசமான ஆக்ஸிடண்ட ஆயி பஸ் அப்பளமா நொறுங்கிடுச்சி. இதே டிராவல்ஸ்தான். பேசஞ்சர்ஸ் பலபேரை காண்டாக்டே பண்ண முடியாம பிரச்சினையாப் போச்சி. அதான் புதுசா இந்த ரூல் போட்டிருக்காங்க. (சிரித்துக் கொண்டே) சும்மா ஒரு ரெண்டு மாசத்துகு ஷார்ப்பா இருப்பாங்க போகப் போக மறந்துருவாங்க. (மீண்டும் சிரிப்பு). சொல்றதுதான் ஏழு மணி. எப்படியும் ஒம்பதாவது ஆயிடும். ரெட்டைகுளம் செக்போஸ்ட்ல ஈவ்னிங் ட்ராஃபிக் வேற இருக்கும்.
இளை: ஓ... செக்போஸ்ட்ல ப்ராப்ளமா? (அவரை திரும்பிப் பார்த்து) எனக்கு இன்னிக்கு நைட் ஃப்ளைட் வேற இருக்கு. சீக்கிரமா போயிட்டா பெட்டர்.
நடு: எத்தனை மணிக்கு?
இளை: மிட்நைட் ஒன்றரை மணிக்கு.
நடு: அதுக்கென்ன. தாராளமாப் போயிடலாம். மீனம்பாக்கத்திலேயே இறங்கிட்டு டக்குனு ஒரு டாக்ஸி பிடிச்சி ஏர்போர்ட் போயிருங்க. கால் டாக்ஸி நம்பர் நம்மகிட்ட இருக்கு. லக்கேஜ் கம்மியா இருக்குன்னா ஆட்டோலயேப் போயிடலாம். டொமஸ்டிக்கா, இண்ட்ர ரேஷனலா? எந்தூருப் போறீங்க? (இண்டர்நேஷனல்தான் அப்படி சொல்கிறார்)
இளை: (மெதுவாக) சிகாகோ.
நடு: (புரியாமல் பார்க்க)
இளை: அமெரிக்கா. சிகாகோவுக்குப் போறேன்.
நடு: அமெரிக்காவா? யூ சாஃப்ட்வேர் இஞ்சினியர்?
இளை: நோ! நோ! நான் சிகாகோல ஜ்வெல்லரி பிஸினஸ் பாக்கிறேன். மை ஃபாதர் ஹஸ் அ ஜ்வெல்லரி ஷாப் தேர். பொறந்ததுலேந்து அங்கதான். அம்மா இங்க டாஞ்சூர் பக்கம். சும்மா சுத்திப் பாக்க வந்தேன்... இட்ஸ் வெரி ஹாட் ஓவர் ஹியர்’ (அரைப் புன்னகை) ‘ஹவ் எபவுட் யூ?
அவன் தன்னைப் பற்றி கேட்கிறான் என்பதை கொஞ்சம் தாமதமாக புரிந்து கொண்டு, அவனது கையைப் பிடித்து குலுக்கிக் கொண்டே
நடு: குட் மீட்டிங் யூ. ஐம் இன் சென்னை ஹியர். மி லக்ஷ்மிகாந்தன். ஃப்லிம் இண்டஸ்ட்ரி. ரைட்டர். ரைட்டர் ஃபார் சினிமா. மாயவலை சினிமா யூ நோ?
இளைஞன் சிரித்தவாறே அவரைக் கையமர்த்திவிட்டு
இளை: தமிழ் நல்லாவே புரியும். ஐ’ம் மனோ. சிகாகோல கூட அம்மா வீட்டுல தமிள்லதான் பேசுவாங்க. ஐ கேன் ஈவன் ரீட் தமிள். சொல்லுங்க
கொஞ்சம் இடைவெளி விட்டு
மனோ: ஆர் யு எ ஃப்லிம் டைரக்டர்?
லக்ஷ்: தமிழ் படிக்கவே தெரியுங்களா... ரொம்ப நல்லது. நான் டைரக்டர் எல்லாம் இல்லை. ரைட்டர் சினிமாவுக்கு கதை எழுதுவேன். சின்னச் சின்ன டிராக், டைரக்டருக்கு சீன் சொல்றது... இந்த மாதிரி. நீங்க தமிழ் சினிமா பாப்பீங்களா?
மனோ: இல்ல. நாட் மச். நான் சினிமாவே அவ்வளவா பாக்குறது இல்ல
லக்ஷ்: மாயவலைன்னு ஒரு த்ரில்லர் படம் லேட்டஸ்டா வந்திருக்கு பாருங்க. டைட்டில்ல என் பேர் கூட வரும். ரெண்டு மூணு க்ரௌட் சீன்ல கூட வருவேன். மொத்தம் முப்பத்தேழு செகண்ட் (கெக்கெக்கென என்ற சிரித்தவாறே) சின்ன வயசிலேந்து கதை கேட்டு, சொல்லி, எப்பவும் கதை நெனப்புதான் நமக்கு. (மனோவிடம் நெருங்கினாப்போல வந்து சத்தத்தை சற்றே குறைத்துக் கொண்டு) நம்மளத் தேடி கதைத் தானா வரும்.
மனோ: (அசுவாரசியமாக) ஓ!
லக்ஷ்: (இன்னமும் உற்சாகமாக) இப்பப் பாருங்க. இந்த பஸ்சோட டிரைவரை நீஙகளும் பாத்தீங்க. நானும் பாத்தேன். அவர நல்லா கவனிச்சீங்களா? அவருகிட்ட ஒரு கதை கிடைச்சுது. (கண்ணைச் சிமிட்டிக்கொண்டே) நாம பாக்க வேண்டிய இடத்துல சரியா பாத்தா... கெடச்சுரும்.
மனோ: ம்ம்ம்...
லக்ஷ்: என்ன கதைன்னு கேக்கறீங்களா? (இல்லைன்னு மனோ தலையாட்டினதை பொருட்படுத்தாமல்) அவர் வலது கையை கவனிச்சீங்களா? மோதிரம் போட்ட தடம் இருக்கு. ஆனா மோதிரம் இல்லை. சட்டைப் பையில பச்சக் கலர் நோட்டீஸ் மடிச்சி வச்சிருக்காரு. பேச்சுவாக்கில செல்லாத்தான்னு சொன்னாரில்ல. தூம்பரம்பாக்கம் செல்ல மாரியம்மன் கோவில் பக்கத்தவரா இருக்கும். அங்க அதிகமான கம்யூனிட்டி யாரு சொல்லுங்க பாப்பம்?
மனோ: (குழப்பபமாக பார்க்க)
லக்ஷ்: நீங்க அமெரிக்காவுல வளந்தவுங்க. உங்களுக்கு தெரிஞ்சிருக்க நாயமில்லை. அவங்க சாதியில எப்பவுமே வீட்டு விசேசத்துக்கு நோட்டிஸ் அடிச்சிருவாங்க. பத்திரிகை வைக்கறது தனி. ஒவ்வொரு சடங்குக்கும் ஒவ்வொரு கலர்ல அடிப்பாங்க. சந்தோசமான சடங்கு எல்லாம் பச்சக் கலர் நோட்டீஸா இருக்கும். முக்கியமா பொண்ணு சமஞ்சிடுச்சின்னு வச்சிக்குங்க கண்டிப்பா நோட்டீஸ் போட்டு பரிசம் போட்டு, சீர் வச்சு ஏகபட்ட செலவு செய்வாங்க. பசுமையா செழிப்பா குடும்பம் வளரனும்ல. இவரு வயசைப் பாத்தா பத்து பதிமூணு வயசுல பொண்ணு இருக்க சான்ஸ் இல்ல. இவரோட அக்கா மகளுக்கோ இல்ல நெருங்கிய சொந்தகாரவுக மகளுக்கோ சடங்கு. இவர் சீர் செய்ய மோதிரத்தை அடமானம் வச்சிருக்கார். (நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே வந்தவர், அவன் தோளில் தட்டி சிரித்துக் கொண்டே) கேட்டுப் பாருங்க. கிட்டத்தட்ட இந்த மாதிரிதான் ஏதாவது கதை இருக்கும் அவர்கிட்ட (மீண்டும் ஒரு சிரிப்பு)
மனோ: (ரசித்து சிரித்தவாறே) ‘ஓ! தட்ஸ் டூ மச். அமேஸிங் கெஸ்ஸிங்.
இளைஞன் நடுத்தரவயதுக்காரரை திரும்பி பார்க்க, அவர் அவனைப் பார்த்து மீண்டும் சிரிக்கிறார்.
முதல் காட்சி முடிவுற்றதற்கு அறிகுறியாக விளக்கணைகிறது.
தொடர்ந்து பஸ்சின் வெளிப்புறம் காட்டப்படுகிறது. பஸ் மெதுவாக புறப்பட்டு சாலயில் செல்கிறது. இரண்டு மூன்று காட்சிகளில் பஸ் சாலையில் இப்புறமிருந்து அப்புறம் செல்வது காட்டப்படுகிறது.
இரண்டாம் காட்சி: மீண்டும் பஸ்சின் உட்புறம். பஸ் பயனித்துக் கொண்டிருப்பது மெல்லிய அசைவுகளின் மூலம் தெரிகிறது. இளைஞன் கையில் பத்திரிகையில் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறான். நடுத்தரவயதுக்காரர் கையில் செல்போனை நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்.
லக்ஷ்: (மனோவையே பார்த்தவாறே) இந்தப் பக்கம் எந்தூருக்கு வந்தீங்க?
கேட்டவாறே மனோவின் முகத்தைப் பார்க்க, அவனும் பத்திரிகையிலிருந்து நிமிர்ந்து அவரைப் பார்த்து கொஞ்சம் நிதானித்துவிட்டு
மனோ: இங்க பள்மனூர்ன்னு ஒரு வில்லேஜ்
லக்ஷ்: எந்தூரு? ஏழுகல் ஜமீனா? (புரியாமல் பார்க்கும் மனோவிடம் விளக்கமாக) பழமனூர்னா... அது எரனைக்கல் பக்கம் வருமே. அங்கப் பாத்தீங்கன்னா எரனைக்கல் சுத்தி ஏழு ஊரு இருக்கும். கொக்கி மாதிரி வளஞ்சு வரும். நடுவுல எரனைக்கல். ஏழுகல் ஜமீன்னு கூட சொல்லுவோம் நாங்கள்லாம். அந்த ஏழூர்ல பழமனூர் கூட ஒண்ணு. நம்ம சொந்தகாரவுங்க நெறய இருக்காங்க அங்க. நீங்க எதுவும் ரிலேஷன்ஸ் பாக்க வந்தீங்களோ?
மனோ: ம்ம்.. இல்லல்ல. சும்மா. ஜஸ்ட் லைக் தட். (முன்னாடி இருந்த தண்ணீர் பாட்டில் எடுத்து குடிக்கிறான்)
லக்ஷ்: ஏஸி போட்டாலும் பாருங்க... வெயிலுக்கு தண்ணீர் நெறய எடுத்துக்கவேண்டியிருக்கும். குடிங்க குடிங்க (மனோ கையை உற்றுப் பார்த்து) உங்க மோதிரம் டிஸைன் நல்லா இருக்கு. ஆனா லேடிஸ் மாடல் போல
மனோ: ஆங்! (வாயைத் துடைத்துக் கொண்டே அனிச்சையாக விரலை பார்த்துக்கொண்டே) ஓ! இதுவா! திஸ் இஸ் நாட் மைன். இது... இது... அம்மாவோடது. (லக்ஷ்மிகாந்தனை திரும்பிப் பார்த்து) ஷி டைட் ஸிக்ஸ் மன்த்ஸ் எகோ. நான் சும்மா போட்டுட்டிருக்கேன் அவங்க நெனப்பா.
லக்ஷ்: (வருத்தம் தொனிக்க) ஓ!
ஓரிரு விநாடிகள் கழித்து
லக்ஷ்: என்ன விசயமா எரனைக்கல்லுக்கு வந்தீங்க? எதுவும் சொத்து வில்லங்கம் மேட்டரா? எரனைக்கல்லு ஜமீன் குடும்பம்தான் அங்கல்லாம் பஞ்சாயத்து பண்ணி வக்கிறது. ஆனா இப்ப அந்த ஜமீனே வாரிசு தகராறுல பத்து பண்ணிரெண்டு வருசமா கோர்ட் வாய்தான்னு இழுத்திட்டிருக்கு. ஒரு காலத்தில பெரிய ஜமீந்தான். எட்டூருக்கு கண்ணு விட்டெறியும் பாருங்க. சுத்துவட்டாரத்தில நெறய காலேஜ், ஆசுபத்திரின்னு ஏகப்பட்டது இருக்கு. நீங்க எதுவும் சொத்து பஞ்சாயத்துக்கு வந்தீங்களோ?
மனோ: நோ நோ.. சும்மா பள்மனூர் வந்துட்டுப் போலாம்னு. எங்க அம்மா படிச்சது அங்கதான்.
லக்ஷ்: பள்மனூர் டீச்சர்ஸ் ட்ரெய்னிங் காலேஜ்லயா படிச்சாங்க?
மனோ: ம்ம். ஆமாம். நெறய சொல்லியிருக்காங்க.
லக்ஷ்: நம்ம சகலைதான் அங்க கோவில் தர்மகர்த்தாவா இருக்காரு. ஊர்ல யாரும் சொந்தம் பந்தம், உங்க அம்மாவோட கூடப் படிச்சவுங்க, தெரிஞ்சவங்க யாரையும் பாக்கனும்னு வந்தீங்களா?
மனோ: இல்ல யாரையும் லொகேட் பண்ண முடியல (அவரைத் திரும்பிப் பார்த்து) இந்த காலேஜ் பத்தி, அவங்க ஃப்ரெண்ட்ஸ் பத்தியெல்லாம். நிறைய சொல்லியிருக்காங்க. ஷி ஹாட் லாட் ஆஃப் ஃபன். அதான் சுத்தி பாத்திட்டுப் போலாம்னு. இட்ஸ் எ லவ்லி ப்ளேஸ்
லக்ஷ்: அட.. சின்ன ஊர்தான் தம்பி. ஈஸியா பிடிச்சிறலாமே. என்ன பெயர்னு சொல்லுங்க. அப்பால நான் முடிஞ்சா தகவல் சொல்லி உட்டுர்றேன்
மனோ: நிறய ஞாபகம் இல்ல. ஹேமாவதி சொல்வாங்க. கிருஷ்ண... குமார், சென்பகவல்லி இப்படி சில ஃப்ரெண்ட்ஸ் சொல்வாங்க. வீ யூஸ்ட் டு டாக் எ லாட். (பிறகு மெதுவாக லக்ஷ்மிகாந்தனைப் பார்த்து) ஐ ரியல்லி மிஸ் ஹர் நௌ. அப்புறமாப் பேசலாமே.
சில நொடிகள் மௌனம். தொடர்ந்து மனோ கையிலிருந்த வார பத்திரிகையை முகத்தின் மீது மூடிக் கொண்டு தூங்க யத்தனிக்க. லக்ஷ்மிகாந்தன் அவன் கையில் இருந்த மோதிரத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார். காட்சி முடிவடைகிறது.
மூன்றாவது காட்சி:
தூங்கிக்கொண்டிருந்த மனோ திடுக்கிட்டவாறு எழுந்திருந்து ஜன்னல் வழியே வெளியே பார்க்கிறான். பேருந்தின் உள் விளக்குகள் எரிய வெளியில் இருட்டி விட்டது தெரிகிறது.
லக்ஷ்: (கையில் செல்போனில் பரபரப்பாக எதையோ அழுத்திக் கொண்டே)முழிச்சிட்டிங்களா? நானே எழுப்பனும்னு நெனச்சிட்டிருந்தேன்.
மனோ: வாட்ஸ் த டைம் நௌ? சென்னை வந்தாச்சா? (கொட்டாவியை விட்டுக் கொண்டே)
லக்ஷ்: அரை அவர்ல ஜிஎஸ்டி ரோட் வந்திரும். இங்க இதப் பாருங்க
அவர் செல்போனைக் மனோவின் முகத்திற்கு நேராக காட்டுகின்றார். அதில் ஒரு மத்திய வயது மனிதரின் படம். டை கட்டிக் கொண்டு, கோட் அணிந்திருந்த பாஸ்போர்ட் சைஸ் படம்.
மனோ: (கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டே) வாட்? என்னாதிது?
லக்ஷ்: இவர்தான் நீங்க தேடிட்டு வந்த கிருஷ்ணகுமார். சொன்னீங்களே உங்க அம்மாகூட படிச்சவர்ன்னு.
மனோ ஒரு திடுக்கிடலோடு அவரைத் திரும்பிப் பார்க்க
லக்ஷ்: அவர்தான் இவர். யாருன்னு தெரியுதா? உங்க அம்மா இவரோட முழுப்பெயரைச் சொல்லலப் போலிருக்கு. (சில நொடிகள் இடைவெளி விட்டு, அழுத்தமாக) கிருஷ்ணராஜ குமார பூபதி. இவர்தான் எரனைக்கல்லு ஜமீனோட கடைசி வாரிசு. இப்பத்தான் நம்ம ஃப்ரெண்ட் ஒருத்தர்கிட்ட பேசி ஜமீந்தார் எழுதின புத்தகத்துல இருந்து போட்டோவ எடுத்து மெசேஜ் போடச் சொன்னேன்.
மனோவின் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்
மனோ: ஓ! (கொஞ்சம் தடுமாறியவாறே) ஐ டோண்ட் நோ ஆக்சுவலி. அம்மா சொன்ன ஃப்ரெண்டு இவர்தானான்னு (செல்போனை அவர்கிட்ட திருப்பி கொடுத்துக் கொண்டே) பட் ஐ ஷுட் அட்மிட் தட்... நீங்க ரொம்ப ஃபாஸ்ட்தான். நிறைய கெஸ் பண்றீங்க
லக்ஷ்: இதுக்கே ஃபாஸ்ட்னா, உங்க முழுக் கதையும் எனக்கு வந்திடுச்சே. உங்களப் பத்திதான் ஃபோன் மேல ஃபோன் போயிட்டிருக்கு (செல்ஃபோனை காட்டி சிரிக்கிறார்). சரியான இடத்துல பாத்தா சரியான தகவல் கிடைக்கும். இதுல என்னாத்த கெஸ்ஸு.. (சில நொடிகள் இடைவெளிவிட்டு) பேசஞ்சர் லிஸ்ட்ல உங்க வயசு இருபத்தாறுன்னு எழுதியிருந்தீங்க. தம்பி எம்பத்தி மூணாம் வருசம் எந்த தேதில பொறந்தீங்க?
மனோ: (கொஞ்சம் குழப்பத்துடன்) என்ன எதுவும் ஜோசியம் சொல்லப் போறீங்களா?
லக்ஷ்மிகாந்தன் தொடர்ந்து புருவத்தில் கேள்விக்குறியோடு அவனையே பார்த்துக் கொண்டிருக்க ஜன்னல் பக்கமாக திரும்பி சில நொடிகள் நோட்டம் விட்டுவிட்டு மனோ அவரை மீண்டும் திரும்பிப் பார்க்கிறான்.
மனோ: (அவரைத் தவிர்க்க முடியாமல்) செப்டம்பர் பத்து. ஐ டோண்ட் அண்டர்ஸ்டாண்ட் யுர் கொஸ்டின்ஸ்.
லக்ஷ்: (கண்களை தாழ்த்தி விரல்களில் சில கணக்குப் போட்டவர், உற்சாகத்துடன் நிமிர்ந்து பார்த்து) கரெக்ட்டு. இது மட்டும் சொல்லுங்க. உங்க அம்மா பேரு நர்மதாவா? அவங்க பழமனூர்ல படிச்சது எம்பத்திரெண்டு, எம்பத்தி மூணாம் வருசமா? எப்பா... எவ்ளோ பெரிய மேட்டர் இது...
மனோ: (சிறிது திடுக்கிடலோடு) வொய்? எதுக்கு இதெல்லாம் கேக்கறீங்க?
லக்ஷ்: அட... எம்புட்டுப் பெரிய விஷயம் யோசிச்சிட்டிருக்கேன். சட்டுபுட்டுன்னு சொல்லுங்க தம்பி.
மனோ: பட்.. என்னப் பத்தி எதுக்கு இவ்ளோ கேக்கறீங்க?
மனோவின் இடதுகையைப் பற்றிக் கொண்டு மோதிரத்தை தொட்டுப் காண்பிக்கிறார்.
லக்ஷ்: எல்லாம் இந்த மோதிரத்துல தோணின ஸ்பார்க்தான். இந்த டிஸைன் பாத்தீங்களா.
மனோ: யா! வெரி ரிச் அண்ட் ஈஸ்த்தடிக்கலி டிஸைண்ட்.
லக்ஷ்: அந்த காலத்து ராணிங்க போடற மாடல் தம்பி. நடுவில பெரிய் சிவப்புக் கல். சுத்திவர சின்ன வைரக்கல்லு பதிச்சு... ஆனாப் பாருங்க... இந்த வைரக்கல்லு வரிசை... வட்டமா இல்லாம கொக்கி போல வளைஞ்சு இருக்கு. எத்தனை கல்லு எண்ணிப் பாருங்க. ஏழு இருக்குது. இதுதான் ஏழுகல்லு ஜமீனோட அமைப்பு. இது எரனைக்கல் ஜமீன் டிஸைன் நகை. (மனோவைப் பார்த்து) அவங்க சிம்பல் இதுதான். நிறைய பொருள்ல போட்டிருப்பாங்க. (கொஞ்சம இடைவெளிவிட்டு) இது உங்க அம்மாவோட மோதிரம், அவங்க டீச்சர் ட்ரெய்னிங் படிச்சதா சொன்னவுடனே எனக்கு பொறி தட்டிச்சு. ஜமீந்தார் புத்தகத்துல எல்லாம் எழுதியிருக்கார்.
மனோ: (அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டு) இல்ல.. நீங்க சொல்றது புரியல்ல. ப்ளீஸ் கையை விடுங்க.
லக்ஷ்: கிருஷ்ணகுமார் நர்மதாவை சந்திச்சது 82-ம் வருசம் பழமனூர் காலேஜ்ல. சிநேகமாயிட்டாங்க. புது வருசக் கொண்டாட்டதுல கல்யாணம் நிச்சயம் பண்ணிகிட்டு மோதிரம் எல்லாம் போட்டிருக்கார். ஆனா நர்மதா குடும்பத்தில ஒத்துக்கிலை. அவங்க தெலுங்கு செட்டி குடும்பம். (தொடராமல் நிறுத்தி மனோவின் முகத்தையே பார்த்தார்)
மனோ: (லேசான தடுமாற்றத்தோடு) இதெல்லாம்.. இதெல்லாம்... புக்ல இருக்கா
லக்ஷ்: ஆமாம்... ரொம்பவே லவ் பண்ணிட்டிருதிருக்காங்க. இன்னமும் டீடெய்லாவே எழுதியிருந்தார் அவங்க பழக்கத்தைப் பத்தி. நீங்க பொறந்த தேதியும் வச்சு பார்த்தா... ம்ம்ம்... (மீண்டும் செல்போன் படத்தையும் மனோவின் முகத்தையும் ஒப்பிட்டு பார்ப்பது போல் பார்க்கிறார்) இதையெல்லாம் விட பெரிய மேட்டர் ஒண்ணு இருக்கு. ஜமீந்தாரோட அப்பா பேரு தெரியுமா? விஸ்வநாதராஜ மனோகர பூபதி. மனோகர்ன்னுதான் கையெழுத்தெல்லாம் போடுவாராம்.
மனோ பதில் பேசாமல் ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
லக்ஷ்: தம்பி! இங்கதான் கிளைமேக்ஸ் வருது. கிட்டத்தட்ட நூறு கோடி ரூபா சொத்து. வாரிசு இல்லாம பதிமூணு வருசமா வழக்கு நடந்து வாய்தா போயிட்டிருக்கு. இன்னிக்கு அந்த வழக்குக்கு தீர்ப்பா (அழுத்தமாக) நீங்க வந்திருக்கீங்க...
சில விநாடிகள் பேச்சே இல்லாமல் இருக்கிறது. மனோவின் விரல்கள் மோதிரத்தை கழட்டுவதும் போடுவதுமாக இருக்க ஜன்னல் பக்கம் திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பிறகு பளபளத்த கண்களோடு லக்ஷ்மிகாந்தனை நோக்கி திரும்பி
மனோ: லக்ஷ்மிகாந்த். யு ஆர் சம்திங் அமேசிங் யார். என்ன சொல்றதின்னே தெரியல எனக்கு. பட்... ப்ளீஸ் இந்த கதையெல்லாம் இப்ப வேணாம். ஐ’ம் இன் எ ஹர்ரி (தனது பையை சரியாக மூடிக்கொண்டே) அந்த புத்தகத்தில நீங்க படிச்சதுக்கும் மேல நிறைய கதைகள் அம்மா சொல்லிருக்காங்க லக்ஷ்மிகாந்த். அதையெல்லாம் இப்ப டிஸ்கஸ் பண்ண முடியாது. ஆனா எனக்கும் சரி செத்துப் போன அம்மாக்கும் சரி. மை ஃபாதர் இஸ் வெரி இம்பார்டண்ட் ஃபர் அஸ். எங்க அம்மாக்கு முழு சப்போர்டா இருந்தவர் அவர்தான். ஐ டோண்ட் ஹவ் டு நோ எனி நியூ ஜமீந்தார். தயவுசெஞ்சு இந்தக் கதையெல்லாம் மறந்துடுங்க. நான் இறங்கனும் இப்ப (எழுகிறான்)
லக்ஷ்: (பரபரப்பாக அவனைப் பிடித்து அமர வைத்து) தம்பி! தப்பா எடுத்துக்காதீங்க! இது ரொம்ப பெரிய மேட்டர். நீங்க கொஞ்சம் டயம் கொடுங்க. ஒருவாரத்தில எல்லாத்தையும் க்ளியர் பண்ண்டலாம். அதென்னவோ டிஎன்ஏ டெஸ்ட் இருக்காமே... பயனத்தை கொஞ்சம் ஒத்தி வச்சீங்கன்னா... ஒரு வக்கீல் வச்சு பேசிக்கிடலாம்.
மனோ: (அவரின் கைகளை விடுவித்துக் கொண்டே) ப்ளீஸ். ப்ளீஸ். இதெல்லாம் முடிஞ்சி போன கதை எனக்கு. (அவர் கையைப் பிடித்து விரித்து எரனைக்கல் மோதிரத்தை அதில் வைத்தவாறே) இந்தக் மோதிரமும் எனக்கு இனி வேண்டாம். என் ஞாபகார்த்தமாவே உங்ககிட்டேயே இருக்கட்டும். (திட்டவட்டமான குரலில்) எல்லாத்தையும் மறந்திடுங்க.
இருக்கையை விட்டு எழுந்து லக்ஷ்மிகாந்தனை கடந்து இறங்கப் போகிறான். லக்ஷ்மிகாந்தன் அவன் கைகளைப் பற்றி இழுக்க முயற்சிக்க... விடுவித்துக் கொண்டு விலகுகிறான்.
லக்ஷ்மிகாந்தனின் வருத்தமான முகத்தோடு காட்சி முடிவடைகிறது.
நான்காம் காட்சி:
அது ஒரு அறையின் கட்டில். பின்னால் சின்னதாக ஜன்னல் இருக்க வெளியில் இருட்டிருக்க அறையினுள் விளக்கு வெளிச்சம். கட்டிலின் மேல் லக்ஷ்மிகாந்தன் கால்களை நீட்டி சாய்ந்து உட்கார்ந்து கொண்டு மாலை நாளிதழ் படித்துக் கொண்டிருக்கிறார். சினிமா செய்திகளை முதலில் படிக்கும் பழக்கத்தினால் பின்னாலிருந்து படித்துக் கொண்டே வருகிறார். முதல் பக்கம் இருக்கும் செய்தியை படித்துக் கொண்டிருக்கும்போதே பரபரப்பாக நிமிர்ந்து உட்கார்கிறார். வாய்விட்டு படித்துக் கொண்டே வருகிறார்.
லக்ஷ்: எரனைக்கல் ஜமீனில் துணிகர கொள்ளை. 50 லட்ச நகைகள் மற்றும் பணம் அபேஸ். ஐயோ... கறுப்பு கலர் குவாலிஸ் காரில் வந்த கொள்ளை கூட்டத்தினரை போலிஸார் மடக்கினர். நகைகளுடன் தலைமறைவாகிவிட்ட இளைஞரைத் தேடி வலைவீச்சு. தொடர்ந்து படிக்க செய்திகளுக்கு 6-ம் பக்கம் பார்க்க.
பரபரப்பாக பேப்பரை புரட்டுகிறார். சில நொடிகளில் மீண்டும் முதல் பக்கம். பிறகு மீண்டும் அடுத்த பக்கங்கள். அப்படியே காட்சி முடிகிறது.
இந்த சிறுகதை சங்கமம் குழு நடத்தும் பேருந்து சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது.
இலவச இணைப்பாக ஒரு குறும்படம் - கறுப்பு பொத்தான்
27 மறுமொழிகள்:
அற்புதம்! வர்ணிக்க வார்த்தை கிடைக்கல.
வாருங்கள் தமிழ் பிரியன். உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி :)
:-))
கிளைமேக்ஸ் ட்விஸ்ட் அசத்தல்! நல்லா இருந்தது..
மீள் வாசிப்புல இருவரில் யார் சிறந்த கதை சொல்லின்னு வாசகர்கள் யோசிக்கறத இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாமோன்னு தோண வைக்குது. :-))
அருமையான நடை!
வாங்க சென்ஷிண்ணா!
உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.
//இருவரில் யார் சிறந்த கதை சொல்லின்னு வாசகர்கள் யோசிக்கறத இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்திருக்கலாமோன்னு தோண வைக்குது.//
இதுவே ரொம்ப நாள் ஊறவச்சு அப்புறமா எழுதிட்டேன். இன்னமும் செம்மைபடுத்தியிருக்கலாம்னுதான் தோணுது. அடுத்த தடவை இன்னமும் நல்லா முயற்சி பண்ணிடறேன். :)
முழுசா புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா சில சந்தேகங்கள் இருக்கு... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
இப்படி நீங்க எழுதினா அடுத்து யாருமே போட்டியில கலந்துக்க மாட்டாங்க :-)
அட்டகாசம்.
நல்ல ஃப்ளோ இருக்கு.
முடிவு அபாரம்.
கடைசிவரை ஊகிக்க முடியலை!
//வெங்கிராஜா said...
முழுசா புரிஞ்ச மாதிரி இருக்கு, ஆனா சில சந்தேகங்கள் இருக்கு... போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
//
வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கிராஜா. என்ன சந்தேகங்கள்ன்னு சொல்லுங்களேன். என்னால முடியலன்னாலும் படிச்ச யாராவது விளக்கம் சொல்லுவாங்க இல்ல :)
//வெட்டிப்பயல் said...
இப்படி நீங்க எழுதினா அடுத்து யாருமே போட்டியில கலந்துக்க மாட்டாங்க :-)//
பாலாஜி! அவ்வளவு மோசமாவா இருக்கு?
கொத்தனாரோட ரொம்ப உறவாடாதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா... ஒரே வரியில ஒம்போது அர்த்தம் தர மாதிரி எழுதறீங்க. :)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//துளசி கோபால் said...
அட்டகாசம்.
நல்ல ஃப்ளோ இருக்கு.
முடிவு அபாரம்.
கடைசிவரை ஊகிக்க முடியலை!//
துளசி டீச்சர்!
வருகைக்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி டீச்சர். :)
வித்தியாசமான உத்தியுடன் கூடிய இந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது.
முதலில் செக் போஸ்ட் என்றவுடன் அவன் கொஞ்சம் திடுக்கிடுவது, கடைசியில் திருடன் என்பது மாதிரி முடித்திருப்பது...simply superb!
ரொம்ப நல்லா கதை சொல்றீங்க ஸ்ரீதர். தொடர்ந்து நிறைய எழுதுங்க...
எதிர்பார்க்காத முடிவு. நல்ல திருப்பம்.
நல்லா இருக்குங்க.
//வித்தியாசமான உத்தியுடன் கூடிய இந்தக் கதை எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது.//
உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி சுந்தர். :)
வாங்க விக்னேஷ்வரி. உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றி.
//பாலாஜி! அவ்வளவு மோசமாவா இருக்கு?
கொத்தனாரோட ரொம்ப உறவாடாதீங்கன்னு சொன்னா கேக்கறீங்களா... ஒரே வரியில ஒம்போது அர்த்தம் தர மாதிரி எழுதறீங்க. :)
//
Neenga kathaiyaiye appadi thaan ezhuthareenga. naanga pinootathai appadi poada koodathaa? :-)
Sari, 1000Rsku book select panniteengala? :-)
நல்ல விறுவிறுப்பான கதை....
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்....
-- Sundari
கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நல்லா இருந்ததுங்க..போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
இதுக்கு தான்யா உம்ம பிளாக்குக்கு வரது. :))
நீங்க எழுதினதுலயே அருமையான எளிமையான நடை இது தான்னு சொல்வேன். :)
ரெண்டாம் இடம் அந்த முத்தத்தை தொடர்ந்து கதைக்கு. :p
ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீதர்.
சரி, எப்போ சினிமாவுக்கு வர்றீங்க? கோலிவுட் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்
ஷெர்லக் ஹோம்ஸின் பாதிப்பு இருந்தாப்ல இருந்துச்சு.. ஒரு கதையில ஹோம்ஸின் தம்பி ஊகித்துக்கொண்டேயிருப்பது மாதிரி வரும். அந்த சாயல் இருந்தாலும் தொனியும், முடிவும் அசத்தல்!
//என்னால முடியலன்னாலும் படிச்ச யாராவது விளக்கம் சொல்லுவாங்க இல்ல :)//
கடைசி திருப்பம் லேசா புரியல. எனக்கு புரிஞ்ச (அரைகுறை முடிவே மண்ட காயுது) மாதிரியான்னு (இதைவிட இண்டலெக்ச்சுவலா?) தெரியல!
// alwaysdrmz said...
நல்ல விறுவிறுப்பான கதை....//
வாங்க சுந்தரி. உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி :)
//Nithi said...
கிளைமேக்ஸ் ட்விஸ்ட் நல்லா இருந்ததுங்க//
மிக்க நன்றி நிதி. வாழ்த்துகளுக்கும் நன்றி.
// ambi said...
இதுக்கு தான்யா உம்ம பிளாக்குக்கு வரது. :))//
வந்துட்டீங்களா? ஆணி ஜாஸ்தி போல? :)
//நீங்க எழுதினதுலயே அருமையான எளிமையான நடை இது தான்னு சொல்வேன். :)//
மிக்க நன்றி அம்பி :)
//ரெண்டாம் இடம் அந்த முத்தத்தை தொடர்ந்து கதைக்கு. :p//
:)) உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி அம்பி சார்.
//பைத்தியக்காரன் said...
ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீதர்.
சரி, எப்போ சினிமாவுக்கு வர்றீங்க? கோலிவுட் உங்களை அன்புடன் வரவேற்கிறது.
தோழமையுடன்
பைத்தியக்காரன்//
வாங்க சிவராமன் சார் :). உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. ‘தோழமையுடன்’ சொல்லிட்டே ‘ஆப்போடு’ வர்றீங்கப் போல. :))
//வெங்கிராஜா said...
ஷெர்லக் ஹோம்ஸின் பாதிப்பு இருந்தாப்ல இருந்துச்சு.. //
வாங்க வெங்கிராஜா. ஷெர்லக் ஹோம்ஸ் கதையில Observation மற்றும் Inference மிகவும் கச்சிதமாக இருக்கும். அந்த மாதிரியெல்லாம் நினச்சு எதுவும் எழுதல. :)
//கடைசி திருப்பம் லேசா புரியல. எனக்கு புரிஞ்ச (அரைகுறை முடிவே மண்ட காயுது) மாதிரியான்னு (இதைவிட இண்டலெக்ச்சுவலா?) தெரியல!//
இண்டலெக்சுவல் எல்லாம் ஒண்ணுமில்லிங்க. ஒரு வாசகனா எனக்கு தோணியது இதுதான். முதல்ல படிக்கும்போது லக்ஷ்மிகாந்தன் பக்கமிருந்து படிக்கிற மாதிரி இருக்கும். முடிவுல நகைக் கொள்ளை படிச்சபிறகு மீண்டும் படிச்சுப் பாத்தால், மனோ பக்கமிருந்து படிக்கிற மாதிரி இருக்கும். :))
ரெண்டு விஷயம் கவனிச்சீங்களா ஸ்ரீதர்? 1. உங்க கதையெல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, 2. இப்ப எல்லாம் நீங்க என்கூட முன் அளவுக்கு சாட்டறதில்லை.
//ரெண்டு விஷயம் கவனிச்சீங்களா ஸ்ரீதர்? 1. உங்க கதையெல்லாம் இப்போ ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு, 2. இப்ப எல்லாம் நீங்க என்கூட முன் அளவுக்கு சாட்டறதில்லை.//
வாங்க பெனாத்தல் சார்.
வேலை அழுத்தம் இன்னமும் குறையல. போதக்குறைக்கு ஒபாமா வேற அப்பப்ப குண்டை தூக்கிப் போட்டுட்டே இருக்கார். :) அதனால சாட்டறது எல்லாம் குறைஞ்சுப் போச்சு சார்.
நீங்க முதல்ல சொன்ன விஷயம் உண்மையா இருந்தா அதுக்கு முதல் காரணமும் நீங்கதான். ‘நானும் எழுதப் போறேன்’னு சும்மா உதார் விட்டிருந்தவனை ஊக்குவிச்சு எழுத வச்சது நீங்கதானே :)
அப்பாடி! நம்ம கதையைப் படிச்சிட்டு கோபமா இருக்கற கூட்டத்தை அப்படியே அந்தப் பக்கம் திருப்பி விட்டாச்சு...
nice climax
ஸ்ரீதர்,
ரொம்ப நல்லா வந்திருக்கு. உண்மையிலேயே யாராவது குறும் படமா எடுக்கலாம். Flow is just too good. Damned impressed.
அனுஜன்யா
வாழ்த்துக்கள் நண்பரே
வாங்க ரமேஷ், பாராட்டுகளுக்கு நன்றி!
அனுஜன்யா!
வாங்க தல!
//உண்மையிலேயே யாராவது குறும் படமா எடுக்கலாம்//
நன்றி! குறும்பட வடிவத்துல செட் ஆகும்னு நினச்சுதான் எழுதினேன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க நிலா!
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
அட்டகாசம் பண்ணியிருக்கிங்க தல ;))
Post a Comment