பார்த்ததில் பிடித்தது - 2

June 7, 2009

கடந்த சில மாதங்களாக பார்த்த திரைப்படங்களைப் பற்றி பதிய வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்து செயல்படுத்தாமல் விட்டதால் சற்றே பெரிய பட்டியலாக நீண்டுவிட்டது.

பார்த்ததில் பிடித்தது - 1

மலையாளம்

மம்மூக்காவின் கருத்த பக்ஷிகள் மற்றும் ஒரு வடக்கன் வீரகதா என்ற இரண்டு படங்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இரண்டு படங்களுக்கும் இடைவெளி சுமார் இருபது வருடங்களாவது இருக்கும். ஆனால் மம்மூக்கா அப்படியே அதே கம்பீரத்துடன் இருக்கிறார். கருத்த பக்ஷிகள் கொஞ்சம் டிரமாடைஸ் செய்யப்பட்ட படமாக இருந்தாலும், மிகவும் காத்திரமான படம். பத்மப்ரியா துணிச்சலான பெண்ணிற்கும் அரை பைத்தியத்திற்கும் வித்தியாசம் உணர்ந்து நடிக்க முயற்சிக்கலாம். இறுதியில் அந்த கண் தெரியாத குழந்தை ‘காற்றை பிடிக்கான்’ என்று சொல்லும்போது மனம் கனத்துதான் போகின்றது. வடக்கன் வீரகதாவிற்காக மம்மூக்காவிற்கு தேசிய விருது கிடைத்தது நினைவிருக்கிறது. எம்டிவி-யின் (M T Vasudevan Nair) கதைக்கு முன்பாக துரோகியாக மட்டுமே அறியப்பட்டிருந்த சந்துவின் பாத்திரத்திற்கு மம்மூக்கா நன்றாகவே உயிர் கொடுத்திருந்தார். களரி சண்டைகள் இயல்பாக நம்பமான முறையில் படமாக்கப்பட்டிருந்தன.

திலீப்பின் தென்காசி பட்டணம், கல்யாணராமன் போன்ற படங்களும் பார்த்தேன். மிகவும் எளிமையான முறையில் அழகாக கதை சொல்கிறார்கள். இயல்பான படம் பார்த்த திருப்தி கிடைத்தது.

தமிழ்

பசங்க ஒரு அறிமுக இயக்க்நரின் படத்திற்கே உரிய உணர்ச்சிகரமான கதை. ஆனால் அதைக் கொடுத்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்தது படத்தின் மண்வாசனை கமழும் வசனங்கள் மற்றும் நடிகர்களின் இயல்பான நடிப்பு. வகுப்பில் உறுதி மொழி எடுப்பது, ப்ராக்ரஸ் ரிப்போர்ட் கொடுக்கும்போது கைதட்டி உற்சாகப் படுத்துவது, ‘இங்கிட்டு மீனாட்சி, அங்கிட்டு யாரு’ என்று போன் பேச தொடங்குவது போன்ற இயல்பாக சிரிப்பை வரவழைக்கும் உரையாடல்கள், போதும் பொண்ணு, சோப்பி பொண்ணு போன்ற ரிஃப்ரெஷிங்கான பெயர்கள்... இப்படி ஒரு பெரிய பட்டியலே போடலாம். தவிர்த்திருக்க வேண்டியது பசங்களுக்கு கொடுக்கப்படும் சினிமாத்தனமான பில்டப். கூட்டமாக வருவது, வில்லத்தனமாக பேசுவது, பெரிய தாதா படங்களுக்கு கொடுக்கப்படும் பின்னனி இசை, ஆரம்ப போலிஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாம் ஒவ்வாமை ஏற்படுத்தி விடுகின்றன. இயக்குநர் பாண்டிராஜ் இப்பொழுது மதில் மேல் பூனையாக இருக்கிறார். அடுத்த படத்தில் எந்தப் பக்கம் தாவுகிறார் என்று தெரிந்து விடும்.

ஈரானி

The Cow பாரசீகத்தில் பசுவை ‘காவ்’ என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்திலும் / ஹிந்தியிலும் அப்படித்தான் என்பது ஒரு ஆச்சர்யமானது. பசுவை இவ்வளவு நேசிக்க முடியுமா என்பது போல் இருக்கிறது ஹாசனின் பாசம். அவர் பசுவை குளிப்பாட்டி துடைத்து விடுவது மிகவும் இயல்பான நடிப்பு. ஒரு நாள் அந்தப் பசு இறந்து போக அவர் என்னவாகிறார் என்பதும், அதனை அந்த கிராம மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதும்தான் கதை. மிகவும் நுண்ணிய உணர்வுகள் பிரதானபடுத்தி எடுக்கப்படும் படங்களை வேற்று மொழிகளில் பார்ப்பதில் ஒரு வசதி. இதெல்லாம் ஒரு படமா என்று நகைக்க அதிகம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள். விவாதம் செய்து நேர விரயம் செய்ய வேண்டாம்.

ரோமானியா

4 Months, 3 Weeks and 2 Days மிகவும் பாதித்த ஒரு படம். நேரம் இருப்பின் தனிப் பதிவாக இந்தப் படத்தை பற்றி எழுதலாம். கறுப்பு / வெள்ளையாக பாத்திரங்களின் படைக்காமல் பல்வேறு படிமங்களாக கொண்டு கதை சொல்வது மிகவும் சிரமமானது. ரோமேனியாவில் இரு கல்லூரிப் பெண்கள் கம்யூனிச ஆட்சியின் போது கருக்கலைப்பு செய்ய முயல்வதில் தொடங்குகிறது படம். இறுதியில் கருக்கலைப்பு முடிந்துவிடுகிறது, அங்கே சூழ்ந்து நிற்கும் வெறுமையோடு படம் முடிவடைகிறது. ஒடிலியா (Otilia) தனது நண்பிக்காக சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் டாக்டரின் இச்சைக்கு இணங்குவதும் தொடர்ந்து தனது காதலனை அவனது வீட்டில் சந்தித்து அவனோடு சண்டை போட்டு பிரிவதும் ஒரு மனித மனத்தின் இரு வேறு புள்ளிகளாக சித்திரிக்கப் படுகிறது. ஒடிலியாவின் போக்கில் கதை சொல்லப்பட்டாலும், கேப்ரியலாவின் பாத்திரம் அருமையாக சொல்லப்பட்டிருக்கும். படத்தில் பல காட்சிகள் ஒரே ஷாட்டாக, கேமரா எந்தப் பக்கமும் நகராத வகையில் எடுக்கப்பட்டிருக்கும். ஒடிலியாவின் காதலன் வீட்டில் நடக்கும் டின்னர் பார்டி ஒரு எடுத்துக் காட்டு.

ஜெர்மன்

Run Loila Run இது ஒரு பரீட்சார்த்த சினிமா ஆனால் பெரு வெற்றிப் பெற்ற முயற்சி என்று சொல்ல வேண்டும். திரைப்படங்களில் கதை சொல்லும் முயற்சியில் இந்தப் படம் ஒரு மைல் கல். லோலாவைச் சுற்றி நடக்கும் சம்பவங்களும் அவளுடைய ஓட்டம் அந்த சம்பவங்களில் ஏற்படுத்தும் பாதிப்பையும் காட்டுகிறது படம். அவள் காதலன் மானி ஒரு கள்ளக் கடத்தல் செய்யும்போது பணப்பையைத் தொலைத்துவிட சிக்கலில் மாட்டிக் கொள்கிறான். லோலா ஓடத் துவங்குகிறாள். படிகளில் ஒரு நாயை எதிர்கொள்கிறாள். அது குரைப்பதினால் வேகமாக ஓடுகிறாள். வழியில் பலரை சந்திக்கிறாள். அதாவது பலரின் செயல்களை அவளுடைய ஓட்டம் பாதிக்கிறது. ஒரு வீடில்லாத ஏழை மானி ட்ரெயினில் தவறவிட்ட பணப்பையுடன் லோலாவின் ஓட்டத்தின் நடுவில் வருகிறான். லோலா தனது தந்தையை வங்கியில் சந்தித்து பணம் கேட்கிறாள். அவர் முடியாது என்று சொல்வதோடு நில்லாமல் அவள் தன் பெண்ணே அல்ல என்றும் தான் அவளுடைய அம்மாவை விவாகரத்து செய்யப் போவதாகவும் சொல்கிறார். இப்படியாக தொடர்ந்து செல்லும் சம்பவங்கள் மானியுடன் லோல இணைந்து செய்யும் ஒரு கொள்ளை சம்பவத்தில் முடிகின்றன. போலிஸ் லோலாவை சுட்டு விடுகிறது. அவளது முதல் ஓட்டம் முடிய, இரண்டாவது ஓட்டம் துவங்குகிறது. இந்த ஓட்டத்தின் தொடக்கத்தில் லோலா ஓடும்போது மாடிப்படியில் எதிர்படும் நாய் அவளை தடுக்கி விட அவளுடைய கால் சுளுக்கிக் கொள்கிறது. சில நொடிகளை அவள் தவற விடுகிறாள். அதனால் தொடர்ச்சியாக வரும் சம்பவங்களில் ஏற்படும் மாற்றங்களும் புதிய கதையைக் கொண்டுச் செல்கின்றன. மூன்றாம் ஓட்டத்தில் லோலா வேகமாக நாயைத் தாண்டி விடுகிறாள். இந்தப் படத்தைப் பார்ப்பது விவரிக்க முடியாத அனுபவம். கட்டாயம் தவறவிடக் கூடாத திரைப்படம் இது.

ஆங்கிலம்

Basic Instinct - Series 1 & 2 - அபாயங்களுக்கு அடிமை என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. பணக்கார எழுத்தாளர் கேத்தரீன் ட்ராமல் ஒரு Risk Adict. அவர் எழுதும் கதைகள் போலவே அட்சரம் பிசகாமல் கொலைகள் நிகழ்கின்றன. அவரே செய்தாரா இல்லை அந்தக் கதையைப் படித்த மனநோயாளி யாரேனும் செய்த கொலைகளா என்பதுதான் இந்த இரு திரைப்படங்களின் அடிநாதம். முதல் படத்தில் இருந்த ஒரு மிஸ்டிக்கல்தன்மை இரண்டாம் படத்தில் க்ளினிக்கலி பெர்ஃபெக்ட் தன்மையாக மாறிப் போய்விட்டது. தொன்னூறுகளில் வெளியான முதல் படத்தின் மூலம் ஷாரன் ஸ்டோன் திரை ஆளுமை மிகப் பெரும் வரவேற்பு பெற்றது. கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்திலும் இளமை குன்றாமல் நடித்திருந்தார்.

Schindler's List ஸ்பீல்பெர்குக்கு இயக்குநருக்கான ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்த முதல் படம். இரண்டாம் உலகப் போரின் போது நாஜிகளினால் நடந்தேறிய யூத இனப் படுகொலையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஆஸ்கர் ஷிண்ட்லர என்னும் ஜெர்மானியர் தன்னுடைய அரவணைப்பில் நிறைய யூதர்களை ஜெர்மானிய இனவெறியர்களிடமிருந்து பாதுகாக்கிறார். இந்தப் படத்தில் அநேகமாக ஷிண்ட்லரின் பட்டியலில் இருந்த அனைத்து யூதர்களின் பெயரும் சொல்லப்பட்டு விடுகின்றன. ஒரு ஆவணப் படத்தின் தீர்க்கத்தோடு எடுக்கப்பட்ட சிறந்த திரைப்படம்.

Shrek - Series அனிமேஷன் படங்களில் முன்னோடியானப் படம். நான்கு பாகங்கள் இதுவரை வந்திருக்கின்றன. அனிமேஷன் படங்களில் வால்ட் டிஸ்னியின் மோனோபோலியை முடிவுக்கு கொண்டு வந்தப் படம் என்றும் சொல்லலாம். லாஸ் ஏஞ்சல்ஸ் யுனிவர்ஸல் ஸ்டுடியோவில் ஷ்ரேக் 4 பார்தத்து ஒரு சிறந்த அனுபவம். இனி வரும் காலங்களில் நிறைய 4-டி படங்கள் உருவாவதற்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.

Slumdog Millionnaire எட்டு ஆஸ்கர்களையும், கோல்டன் குளோப், பாஃப்டா விருதுகள் என்ற எதிர்பார்ப்பில் ஒரு பென்ஹர், காந்தி, டைட்டானிக் ரேஞ்சுக்கு எதிர்பார்த்துக் கொண்டு போனதில் மிகவும் ஏமாற்றம் கொடுத்தப் படம். திரைக்கதை அமைப்பும், எடிட்டிங்கும் மிகவும் அருமை என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஹிந்தி

A Wednesday நஸ்ருதீன் ஷா மணிக்கட்டை முறுக்கிக் கொண்டு காஃபி குடித்துக் கொண்டே செல்ஃபோன் மூலம் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்கிறார். வசனங்கள் மிகவும் கூர்மையானது. ஆம் ஆத்மி (பொது ஜனம்) பிரதிநிதியாக அவர் போடும் திட்டங்கள் பாதியிலேயே புரிந்து விடுகிறது. இந்தியத் திரைப்படங்களில் போலிஸும் தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் திறமைசாலிகள் என்று காண்பிக்கும் ஒரே படம் என்று நினைக்கிறேன். எனிமி ஆஃப் த ஸ்டேட் போன்ற படங்கள் வருவதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.

ஜாக்கிசானின் தீவிர ரசிகனாக சில படங்களும் பார்த்தேன். சான் ஒரு ரொமாண்டிக் ஹீரோவாக நடித்த கார்ஜியஸ் அவர் பாணி படங்களிலிருந்து விலகி புதுமையாக இருந்தது.

குறும்படம் - Signs

இதுவரை பொறுமையாகப் படித்தவர்களுக்கு ஒரு அருமையான குறும்படம் இங்கே.





அவ்வப்போது அச்சுபிச்சு காமெடி படங்களும் விரும்பிப் பார்ப்பதுண்டு. Policy Academy Series-ல் சில படங்களும், கல்லூரிக் காதல் / டேட்டிங் படங்கள் சிலவும் பார்த்து ரசித்தேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன் :)

இன்னமும் பல திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் அடுத்தப் பட்டியல்.

16 மறுமொழிகள்:

ஆ.ஞானசேகரன் said...

நல்ல பகிர்வு பாராட்டுகள்

யு.எஸ்.தமிழன் said...

Signs... A great example how music could enhance the thrills in the movie. Thanks for sharing.

>Documentary<

குறும்படம் -> Short film :)

அதென்ன காலம் போன கடசியில டேட்டிங் படம்? :))

Sridhar Narayanan said...

வாங்க ஞானசேகரன்!

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

யு எஸ் தமிழரே!

திருத்திவிட்டேன் :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சாரே!

சென்ஷி said...

ஒரே மூச்சுல படிச்சுட்டேன் :)

(சிறுகதை போட்டிக்கு கதை எழுதியாச்சா?)

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி!

கதை(கள்) எழுதியாச்சு. ஆனா இன்னமும் வெளியிடாமல் வச்சிட்டிருக்கேன் :) சீக்கிரமே வெளியிட்டுடலாம்.

உங்க மெயில்-ஐடி இருந்தாக் கொடுங்களேன்.

வெங்கிராஜா said...

வெட்னஸ்டே ஆங்கிலப்படமா?
ரன் லோலா ரன் ஜெர்மானியப் படமாச்சுங்களே!

மற்றபடிக்கு.. நல்ல பகிர்வு! விஷயங்களுக்கு நன்றி

சுரேஷ் கண்ணன் said...

sridar,

இப்படி கலந்துகட்டி எழுதுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் எந்தவொரு திரைப்படத்தையும் பற்றி முறையான அழுத்தமான அறிமுகம் கிடைக்க்வில்லையோ என்றும் தோன்றுகிறது. நானும் இது போல் ஒன்று முயற்சி செய்து பார்க்கிறேன்.

Sridhar Narayanan said...

வெங்கிராஜா,

:) தவறுதான். ரன் லோலா ரன் பாத்து பல மாதங்களாச்சு. இந்தப் பட்டியலும் ட்ராஃப்டிலேயே ரொம்ப நாளா இருந்ததினால தவறான தகவலை தந்துட்டேன். இப்போ திருத்திட்டேன்.

வெட்னஸ்டே - தலைப்பு கொடுக்காம விட்டுட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

சுரேஷ்,

நான் பார்த்த, ரசித்த படங்களை ஒரு பட்டியலாத்தான் பதிவு பண்ணனும்னு நினைத்தேன். விரிவா எழுதனும்னா ‘விக்கிபீடியா’வுல ஏற்கெனவே எல்லா தகவலும் இருக்கறதுனால தனியா என்ன எழுதறதுன்னு ஒரு சங்கோஜம். அதான் அதற்கு ஒரு தொடுப்பு கொடுத்து சிறு குறிப்பு மட்டும் எழுதிடறேன். இருந்தாலும் 4 Months, 3 weeks and 2 days போன்ற படங்களைப் பற்றி விரிவாக எழுதலாம். ரன் லோலா ரன் திரைக்கதை யுக்திக்கு பாடமாக வைக்கப்பட வேண்டிய படம். :)

உங்கள் பதிவுகளில் நீங்கள் எழுதும் தீவிர அலசல் எனக்கு மிகவும் பிடித்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

suresh said...

//The Cow பாரசீகத்தில் பசுவை ‘காவ்’ என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்திலும் / ஹிந்தியிலும் அப்படித்தான் என்பது ஒரு ஆச்சர்யமானது// -- இதில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை. நீங்கள் குறிபிட்டுள்ள எல்லாம் Indo-European மொழிக்குளுமத்தில் அடங்குவன.

http://en.wikipedia.org/wiki/Indo-European_languages
"Of the top 20 contemporary languages in terms of native speakers according to SIL Ethnologue, 12 are Indo-European: Spanish, English, Hindi, Portuguese, Bengali, Russian, German, Marathi, French, Italian, Punjabi and Urdu, accounting for over 1.6 billion native speakers."

வண்ணத்துபூச்சியார் said...

எளிமையான பதிவுகள். அருமை.

குறும்படம்.. Very nice... Super..

வெட்டிப்பயல் said...

குறும்படம் அருமை :)

கோபிநாத் said...

தல

அருமையான பதிவு - பகிர்வு ;)

மலையாளம்

கருத்த பக்ஷிகள் பார்த்தேன்...அந்த இயக்குனர் - கமல் அவர்களின் படங்கள் கிடைத்தால் பாருங்கள் எல்லாமே அருமையாக இருக்கும். 3 மணிநேரம் உங்களை உட்கார வச்சிடுவார். சொப்பனாகூடு, பெருமழக்கலாம்.

திலீப்ன் - அட்டகாசமான ஒரு நடிகர். அவரோட மலையாள படம் தான் சூர்யா நடிச்ச பேரகழன். மீசைமாதவன், சாந்துபொட்டு போன்ற படங்கள் கிடைத்தால் பாருங்கள்.

பசங்க - அருமையான படம். ;)

Basic Instinct - Series 1 & 2 -

\\கிட்டத்தட்ட பதினான்கு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகத்திலும் இளமை குன்றாமல் நடித்திருந்தார்.\\

ஒரு ரீப்பிட்டே ;)


Schindler's List -

இதுவும்...அட்டகாசமான படம் - கடையில் அவர்கள் பரிசாளிக்கும் அந்த மேதிரத்தை கூட வச்சி இன்னும் ரெண்டு மூணு பேரை காப்பாத்தமுடியும்லன்னு அவர் சொல்லும் காட்சி மிக அற்புதமானது.


ஹிந்தி

A Wednesday

இது ஒரு ஆங்கில படம் என்று நினைத்து தியோட்டாருக்கு போயி உட்காந்தால் இந்தியில பேசுறாங்க அட என்னடா மாட்டிக்கிட்டோம் போலன்னு நினைச்சிக்கிட்டே படத்தை பார்த்தேன். ஆனா சும்மா சொல்லக்கூடாது அசத்திட்டிங்க ஒரு பாட்டு இல்ல பெருச காமெடி இல்ல...ஆனா உட்கார வச்சிட்டாங்க ;)

கலக்கல் பதிவு தல ;)

Sridhar Narayanan said...

வாங்க Sureஷ்!

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி!

ஆம்! இந்தோ-ஐரோப்பிய மொழிகளில் பல்வேறு ஒற்றுமைகள் இருக்கத்தான் செய்கின்றன.

வாங்க வண்ணத்துபூச்சியாரே!

உங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி.

வாங்க கோபி!

ஆமாம்! திலீப் அருமையான நடிகர். அவரும் லாலும் இணைந்து சில அருமையான படங்கள் தந்திருக்கிறார்கள். தென்காசி பட்டினம் முதலில் தமிழில்தான் பார்த்தேன். ஆனால் மலையாள மூலம் மிகவும் சிறப்பாக இருந்தது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

தென்றல் said...

ஸ்ரீதர், பகிர்வுக்கு நன்றி!

சமீபத்தில்தான் நூலகத்தில் 'Run Loila Run' பார்த்துவிட்டு எடுக்காமல் வந்தேன். மறுபடியும் போய் தேடவேண்டும்!

குறும்படம் அருமை. நன்றி!

/இன்னமும் பல திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும். விரைவில் அடுத்தப் பட்டியல்./
ஆவலுடன்...

Sridhar Narayanan said...

வாங்க தென்றல்!

உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் மிக்க நன்றி!