June 12, 2009

32 கேள்விகளும் முந்திரிக்கொட்டை பதில்களும்

பதிவுலகில் இடம்பெறும் சங்கிலித்தொடர் இடுகைகள் சுவாரசியமானவை. சமீபத்தில் சுற்றி வரும் 32 கேள்விகள் ஒரு பேட்டிக்குரிய அம்சங்களுடன் இருப்பதால் நிறைய பிரபலங்கள் பங்குபெற்று வெளுத்து வாங்குகிறார்கள். அப்படியான இரு பிரபலங்கள் நம்மையும் கோர்த்து விட்டிருப்பதால் கொலைவெறியுடன் குதித்து விட்டேன். பதில்களை விட இதில் நான் இழுத்து விடப்போகும் பதிவர்கள் பட்டியல் சுவாரசியமானது. மேலும் விவரங்களுக்கு மேலும் படிக்கவும்.

எசகுபிசகான விளையாட்டை எளிதான மொழியிலும், வாக்கியங்களை கலைத்துப் போட்டாலே கவிதைதான் என்றில்லாமல் கவிதையையே கலைத்துப் போட்டு அ-கவிதை என்றும் வாசகர்களின் மனதில் ஆக்கர் போடும் அன்பர் ஜ்யோவ்ராம் சுந்தரும்

புத்தக சுனாமி, கிழக்கின் விடிவெள்ளி, தொய்வில்லாத தொடர்கதைகளின் துருவ நட்சத்திரமும், கன்னடிய நாட்டில் மையம் கொண்டு தமிழ் வெகுஜன ஊடகத்தை புயலென ஊடுருவிய ’இளைய பாரா’ என்றழைக்கப்படும் என்.சொக்கனும்

அழைத்ததால் விளைந்த விபரீதத்தைதான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெற்றோர் வைத்த பெயர்தான். பிடிக்கிறதோ பிடிக்கலையோ, பெயரை மாற்றிக் கொள்வதாக உத்தேசம் இல்லை.

2) கடைசியா அழுதது எப்போது?

ஆண்கள் அழுதாலும் வெளியில் சொல்லிக் கொள்ளக் கூடாதாம். திரைப்படங்களில் உணர்ச்சிகரமான காட்சிகளை கண்டால் கண்கள் கரைகட்டிவிடும் சாதாரணந்தான் நான்.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

கையால் எழுதுவதை கிட்டத்தட்ட மறந்தே விட்டேன். எழுதினாலும் அவ்வளவு அழகாக இருக்காது. விண்ணப்பங்களிலும், செக் புக்கிலும் போடுவதற்கென்றே தனியாக கையெழுத்து பழகினேன். இதுவரை அந்தக் கையெழுத்தை மாற்றியதே இல்லை. பிடிக்கும்.

4) பிடித்த மதிய உணவு?

புளிப்பு அதிமான குழம்பும், உருளைக் கிழங்கும், அப்பளமும், தயிர்சாதமும் எப்போதும் ஃபேவரைட். கிடைக்காத பட்சத்தில் எல்லா வகை உணவும் சம்மதமே.

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?

கண்டிப்பாக. சந்தித்த முதலில் தானாக பேச முன்வரத் தயங்கினாலும், நல்ல நண்பனாகவே இருந்திருக்கிறேன் எப்பொழுதும்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

அருவிதான் எப்பொழுதும். கடலில் குளித்தால் உப்பு அரிக்கும். பின்னர் நல்ல தண்ணீரில் மீண்டும் குளிக்க வேண்டும்.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

உடல்மொழி மற்றும் சிரிப்பு.

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பிடித்தது - சகஜமாக பழகும் சுபாவம். சிரித்த முகம்.
பிடிக்காதது - அப்படி எதுவும் இருக்கிறதா என்ன? (தப்பிச்சிட்டோம்ல!)

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

அப்படி எதுவும் இல்லை.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

சாம்பல் நிற மேலாடையும், அரைக்கால் சட்டையும்.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

கந்தசாமி பாட்டு. இதெல்லாம் டூப்பு.

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கறுப்பு மை.

14) பிடித்த மணம்?

முகர்வதற்காக உள்ள எல்லா மணமும்.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?

இடுகையின் இறுதியில் பெரிய பட்டியலே இருக்கிறது.

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

படிக்கும் அனுபவத்திற்காகவே படிப்பவன் நான். சுந்தரின் பிரபல எழுத்துகளை பரவலாக்கும் பதிவுகள் பிடிக்கும். சொக்கனின் அனுபவச் சிதறல்களை படிக்க பிடிக்கும்.

17) பிடித்த விளையாட்டு?

எல்லா விளையாட்டுகளும். கல்லூரிக்காலத்தில் கூடைப்பந்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தேன்.

18) கண்ணாடி அணிபவரா?

இல்லை.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

ஃபார்முலா, க்ளிஷேக்கள் இல்லாத எந்த திரைப்படமும் பிடிக்கும்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

Vantage Point

21) பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம். அதுவும் பனிவிழும் மலர்வனமாக இருந்தால்...

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

புதுமைபித்தனின் சிறுகதைகள் இணையத்தில் கிடைத்தது. மற்றபடி இணையத்தில் ‘கண்ட’தையும் மேய்ந்து கொண்டே...

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

படம் எதுவும் இல்லை. இருந்தாலும் அடிக்கடி மாற்றுவதில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

சத்தமாக பேசும் சத்தம் மட்டும் பிடிக்காது.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

அதிக தூர பிரயாணம் என்றால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இருமுறை பிரயாணம் செய்திருக்கிறேன்.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

தனித்திறமை என்று பட்டியல் போடும் தனித்திறமை கிடையாது. பல வருடங்கள் கழித்தாலும் ஒருமுறை படித்ததிலேயே சிலவற்றை நினைவுகூர முடிவது வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னால் ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? அவரவர்க்கு அவரவர் நியாயம்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

சோம்பல்

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

நிறைய சுற்றுவது இல்லை. நானொரு வீட்டுப் (இணையப்) பறவை :)

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்படியே.

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

அப்படி ‘முக்கி’ய காரியம் ஒன்றும் பெரிதாக இல்லை.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க

வாழ்க்கை - விடை தெரியாத புதிர். கிடைக்காத விடையை தேடிக் கொண்டே இருப்பதுதான் சுவாரசியமான வாழ்க்கை.

நான் அறிந்த, வாசிக்கும் பலரும் ஏற்கெனவே இந்தத் தொடரில் பங்கேற்று விட்டாலும் இந்தத் தொடரை தொடரும் உத்வேகத்தோடு நான் அழைக்கும் பதிவர்கள்:

பிரபு ராஜதுரை - மிகவும் தீர்க்கமாகவும் முழுமையாகவும் எழுதக்கூடிய மிகச் சிலப் பதிவர்களில் ஒருவர். வக்கீல் தொழிலில் இருக்கும் இவரின் அனுபவங்களும், கருத்துகளும், சினிமா பற்றிய பதிவுகளும் மிகவும் சுவாரசியமானவை. இப்பொழுதெல்லாம் அதிகம் எழுதுவதில்லை. வேலை அழுத்தமாக இருக்கலாம். ஆனாலும் இந்தக் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளிப்பார் என்று நினைக்கிறேன்.

இலவச கொத்தனார் - வெண்பா, குறுக்கெழுத்து, விக்கி பதிவுகள், புதசெவி என்று சுவாரசியமாக எழுதிக் கொண்டிருந்தவருக்கு அநியாயமாக அலுவலக வேலைகள் எல்லாம் செய்யச் சொல்கிறார்களாம். இந்த மீம்-ஐ முன்னிட்டாவது ஒரு புதசெவி பதிவு போடுவார் என்று எதிர்பார்க்கலாம். தொடர்ந்து விக்கி பசங்களையும் (பெருசுகளையும்) இந்த மீம்-க்குள் கோர்த்து விடுவார் என்று நம்புகிறேன்.

இராதா ஸ்ரீராம் - நடைபாதையில் அதிகம் நடமாட்டமில்லை என்றாலும் தொடர்ந்து மற்ற பதிவர்களை வாசித்து ஊக்குவிப்பவர். சென்ற வருடம் சந்தித்த காட்டு தீ அனுபவத்தின் பாதிப்பு இன்னமும் இருக்கலாம். இந்தத் தொடரை தொடர்ந்து அதிக பதிவுகளிடுவார் என்று நம்பப்படுகிறது.

சென்ஷி - இவரின் உண்மைப் பெயர் தெரியாது. ஆனால் தமிழ் பதிவுலகின் ரொமாண்டிக் காதலர் என்று மட்டும் தெரியும் :) திடீர் திடீரென்று பின் நவீனத்துவ பாய்ச்சல், மாய-யதார்தத மயக்கம் எல்லாம் காட்டுவார். இவருடைய ஒரு பதிவைப் பற்றி பரிசல்காரன் செய்த ஆய்வு பதிவுலகில் ஒரு மைல் கல் என்று சொல்லலாம்.

பினாத்தல் சுரேஷ் - தமிழ் பதிவுலகின் முதுபெரும் எழுத்தாளர். இவரின் அங்கத நடைக்கு அநேக வாசகர்கள் உண்டு. அவ்வப்போது ஃப்ளாஷ் அடித்து பதிவுலகை பிரகாசமாக்கிவிடுவார். ’என்ன எழுதுவது’ என்று யோசித்துக் கொண்டிருப்பதாக தகவல். இதைப் பற்றியும் எழுதுங்களேன் சுரேஷ்.

வெங்கிராஜா நல்ல புனைக்கதை எழுத்தாளர். நிறைய திரைப்படங்களைப் பற்றிய முழுமையான விமர்சனம் எழுதியிருக்கிறார். கடந்த சங்கமம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பாளி.

அம்பி திருமணம், குடும்பம் எல்லா பொறுப்புகள் கூடிய போதும் பொறுப்பாக கோபிகா, நயந்தாரா என்று பதிவுகள் போட்டுக்கொண்டிருந்த தம்பியை இப்படி அநியாய ஆபீசரா ஆக்கி ஆப்பு வைத்துவிட்டார்களே என்று வருத்தமாக இருக்கிறது. உங்களின் 32 நண்பிகளின் பெயரோடு இந்த 32 கேள்விகளையும் சிறப்பிக்க வேண்டுகிறேன்.

சுரேஷ் கண்ணன் இலக்கியம், புத்தகம், சினிமா என்று பல தளங்களில் தீர்க்கமாக எழுதக் கூடியவர். திரைப்படங்கள் பார்ப்பதற்கு சில நல்ல யோசனைகள் தந்திருக்கிறார்.

விஜி இவர் ஒரு ஆங்கிலப் பதிவர். ஆனால் தமிழ் பதிவுகளை ஆர்வமாக படிக்கிறவர். இவரால் இந்தத் தொடர் ஆங்கிலப் பதிவுகளுக்கும் சென்றால் நல்லதே.

தென்றல் - ஒரே மாநிலத்தில்தான் (கலிபோர்னியா) இருவரும் இருக்கிறோம். ஆனால் சந்திக்கும் வாய்ப்புகள் அமையவில்லை. நல்ல தகவல் செறிந்த பதிவுகள் இடுபவர். இப்பொழுதுதான் இந்திய பயனத்திலிருந்து திரும்பியிருக்கிறார். தொடர்ந்து எழுதுவார் என்று நம்புகிறேன்.

பரத் - சக ட்விட்டரர். நிறைய வாசிப்பவர். படம் பார்ப்பவர். எல்லாம் தாண்டி ட்விட்டரில் சிநேகமாக உரையாடுபவர். முந்தைய ஒரு மீம் ஆட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொண்டவர். இந்த ஆட்டத்தில் இவருக்கும் ஒரு துண்டை போட்டு வைக்கிறேன் :). வாங்க பரத். வந்து கலக்குங்க!

22 மறுமொழிகள்:

சுரேஷ் கண்ணன் said...

அழைப்பிற்கு நன்றி. நிச்சயம் எழுதுகிறேன்.

SurveySan said...

///31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

அப்படி ‘முக்கி’ய காரியம் ஒன்றும் பெரிதாக இல்லை.
////

hee hee hee. very touching.

i can guess, the other half was standing right beside you, when you typed this :)

Sridhar Narayanan said...

வாங்க சுரேஷ்!

உங்கள் வருகைக்கும், அழைப்பை ஏற்றுக் கொண்டமைக்கும் மிக்க நன்றி :)

சர்வேசன்!

இருக்கீங்களாய்யா... ஆளையேக் காணோமேன்னு தேடிட்டுருந்தேனே. நீங்களும் இந்த மீம்-ல கலந்துக்கலாமே. வாங்க.. வாங்க.. வந்து கலக்குங்க. :)

சென்ஷி said...

என்னண்ணே என்னையும் இழுத்து விட்டுட்டீக :-(

வெங்கிராஜா said...

//நல்ல புனைக்கதை எழுத்தாளர். நிறைய திரைப்படங்களைப் பற்றிய முழுமையான விமர்சனம் எழுதியிருக்கிறார். கடந்த சங்கமம் போட்டியில் முதல் பரிசு பெற்ற படைப்பாளி. //

http://paathasaari.blogspot.com/2009/06/32.html
ஏற்கனவே எழுதிட்டேனே தோழர்...
விமர்சனமா? அட.. விளையாடாதீங்கபு! இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு... அதுக்குள்ளேயே நம்மள வச்சு காமெடி கீமெடி பண்ணுறது...?!

nchokkan said...

ஐயா, கேள்வி பதிலெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனா, உசுப்பேத்தறதுன்னு முடிவு பண்ணிட்டா நீங்க கணக்கு, வழக்கெல்லாம் பார்க்கறதில்லைபோல, நான் பாவம், என்னை வுட்றுங்க :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Sridhar Narayanan said...

வாங்க காதலரே... உங்களுக்கு 32 கேள்வியெல்லாம் பத்தாதே... ஏதோ முடிஞ்சதை எழுதுங்க தல.

வெங்கிராஜா!

இப்பதான் ஆரம்பிச்சாலும் ஒரு போட்டியில் ஜெயித்து சூடா ஆரம்பிச்சிருக்கீங்க. நடத்துங்க. நடத்துங்க. :)

Viji said...

Thank You So Much, Sridhar for the invite. Quite a fun:-). I liked all your candid (??!!) responses!

I am game too!!

Just give me some time, since i am getting into a new job...and relocating too!

Hey, probably i should try it out in Tamil, but not so confident with my "Chennai Sendhamizh"!

கோபிநாத் said...

ரைட்டு...நீங்களும் போட்டுட்டிங்க..;))

பரத் said...

//பதில்களை விட இதில் நான் இழுத்து விடப்போகும் பதிவர்கள் பட்டியல் சுவாரசியமானது//
ஏஇகொவெ??!! :))
அழைப்பிற்கு நன்றி ஸ்ரீதர்!!
விரைவில் பதிகிறேன்

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

Good :) :) )

பினாத்தல் சுரேஷ் said...

முதுபெரும் எழுத்தாளர் - இது libel ல வருமான்னு பிரபு ராஜதுரைகிட்ட கேக்கணும், எவ்வளவு உங்ககிட்ட இருந்து பேரும்னு பாக்கணும்.. அப்புறம்தான் 32க்கு பதில் சொல்றதப்பத்தி யோசிக்கணும்!

Sridhar Narayanan said...

வாங்க சொக்கன்!

//கேள்வி பதிலெல்லாம் நல்லாதான் இருக்கு//

ஏனோதானோன்னு இருக்குன்னு ஏனோ தானாகாவே சொல்றீங்க. அதுதான் ஏன்னு தானப் புரியல எனக்கு. :)

//ஆனா, உசுப்பேத்தறதுன்னு முடிவு பண்ணிட்டா நீங்க //

யாரு ‘ஆனா’? அவர் ஏன் என்னை உசுப்பேத்தறார்?

//கணக்கு, வழக்கெல்லாம் பார்க்கறதில்லைபோல, நான் //

கணக்கு பார்க்காம இருக்கறது சரி. ஆனா வழக்கு கண்டிப்பா பாக்கனுங்க. அப்புறம் நீதிமன்ற அவமதிப்புன்னு சொல்லிட மாட்டாங்க?

//பாவம், என்னை வுட்றுங்க :)//

உங்களை விடறதுக்காக என்னை ‘பாவம்’னு கூப்பிட்டு கலாய்க்கறீங்களா? :)

இரண்டு வரியில இவ்வளவு நுண்ணரசியல் செய்ய முடியுமா? கொத்தனார்லாம் உங்ககிட்ட ட்யூஷன் எடுத்துக்கனும் போல.

பிரபு ராஜதுரை said...

என்னைப் பற்றிய தங்களது மதிப்பீட்டிற்கு நன்றி! ஆயினும் முடிந்தால்தான் எழுதுவேன். நான் இன்னாரென்று வாய் வார்த்தைகளில் கூறலாம்...எழுதி வைத்தால் பின்னர் மாற்றிக் கூற முடியாதே!

அதனால் ஒரு தயக்கம்...அவ்வளவுதான்.

Sridhar Narayanan said...

வாஙக் விஜி!

சென்னை செந்தமிழா? அசத்துங்க. அப்படியே உங்க நண்பர்களையும் கோத்து விடுங்க. விளையாட்டு நல்லா சூடுபிடிக்கும் :)

கோபி! :)) நான் போட்டதை ரைட்டுங்கறீங்களா? டாங்க்ஸ்ங்க!

பரத்!

//விரைவில் பதிகிறேன்// சீக்கிரமா. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி :)

Sridhar Narayanan said...

வாங்க ராஜி!

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

பினாத்தல் சார்!

மு - முனைப்பு. து - துடிப்பு ‘பெரும்’ இளமையான எழுத்தாளர்னு சொன்னா ஏன் வழக்கு போடுவேன்னு பயமுறுத்தறீங்க. இந்தப் ‘பேரு’ பத்தாம எவ்ளோ பேரு வேணுங்கறீங்க?

32-க்கு மட்டும் பதில் சொன்னா பத்தாது... மற்ற 31-க்கும் பதில் சொல்லனும். ஆமாம்.

Sridhar Narayanan said...

வாங்க பிரபு சார்!

//என்னைப் பற்றிய தங்களது மதிப்பீட்டிற்கு நன்றி!//

இரண்டு வரியில ‘மதிப்பா’ சொன்னேனே தவிர, அதை மதிப்பீடுன்னு சொல்லி நன்றி சொல்றதெல்லாம் ரொம்பவே ஓவர் :)

//எழுதி வைத்தால் பின்னர் மாற்றிக் கூற முடியாதே//

இன்னிக்கு வெள்ளை சட்டை போட்டிருக்கேன்னு எழுதிட்டு நாளைக்கு கறுப்பு சட்டை போட்டிருந்தா கேஸ் போட்ருவோம்ல! :))

சீக்கிரம் எழுதுங்க. அப்படியே உங்க நண்பர்களையும் எழுத அழையுங்க.

Radha Sriram said...

ஸ்ரீதர் அழைப்பிற்கு நன்றி..:):)

கொஞ்சம் அவகாசம் தேவை......ஆனாலும் 32 கேள்விகள் ம்ஹூம்..:):)

ஒகே ஒகே.நண்பர்கள அழைச்சிடறேன்..:):)

தென்றல் said...

அட...நமக்கும் அழைப்பா..
ஜோதியில ஐக்கியமாயிட்டா போச்சி...! ;)

தென்றல் said...

பரிசல் - சென்ஷி பதிவ படிச்சிட்டு தனியா சிரிச்சிகிட்டு இருந்தேன்..(வீட்டிலதான்!!)..

என் பக்கம் said...

பதிவுலக நன்பர்களே - இந்த விவாதத்தில் நீங்களும் கலந்து கொள்ளுங்களேன் - 1

இதுவரை நான் சந்தித்த சமுகத்தின், படித்த/அறிந்த விசயங்களில் தாக்கத்தில் எனக்கென்று சில கருத்துகள் அல்லது குழப்பங்கள் உருவாகி இருக்கிறது. இதில் சரியானவை அல்லது பெருபாண்மையானவருக்கு நன்மை ஏற்பட கூடியவை பற்றி அறியும் சிறு முயற்ச்சி தான் இந்த பதிவு.

http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.html

ambi said...

நல்லா பழி வாங்கறாங்க பா! கொஞ்சம் டைம் குடுங்க. எழுதறேன். :))