’நான் அவளை மீண்டும் பாத்தேன் இன்றைக்கு. வட்டவடிவமாக பிரகாசமான பொன் மஞ்சள் நிலவைப் போல் சிரித்த முகத்துடன் தோன்றினாள். அவள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம் தெரிந்தது.’
’ஓ! அந்த மஞ்சள் அழகியா. அவள் பெயர் கிம்னோ. இலியாஸிடம் முதுகுத்தண்டு சிகிச்சைக்கு வருகிறாள். இங்கு இருக்கும் வாளிப்பான தங்க மீன்களை எல்லாம் விட்டுவிட்டு உன்னைப் பார்த்து சிரிக்கிறாள் என்றால் அவள் பார்வையில்தான் கோளாறு. நீ ஒரு சோம்பேறி’
‘இல்லை. அந்த கூனன் ராகி அங்கே மேஜை மேலிருந்து காமவெறியோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்வை எனக்கு ஊசிகளாக குத்துகின்றன. அதான் பதுங்கிக் கொண்டிருக்கிறேன்’
‘அவனைத்தான் தண்ணீர் டிரம்மில் போட்டு சுற்றோ சுற்று என்று சுற்றி, புனுக்குக்காக பிதுக்கி எடுத்து விட்டானே இலியாஸ். ஒரு வாரத்துக்கு அவனால் நடக்கக் கூட முடியாது’
’நான் அவளை மீண்டும் பார்க்க வேண்டும்’
‘இங்கிருந்து சமுத்திரம் போகிற வழியில் எங்காவது அவள் முகம் தென்படலாம்’
‘சமுத்திரத்தில் என்ன இருக்கும்?’
‘பெரிய பிரம்மம் இருக்கும். நிறைய நீந்தலாம். ராகியிடமிருந்து உனக்கு விடுதலை கிடைத்துவிடும். பெரிய பெரிய செடிகள் கூட உண்டு. சரணம், சரணம் என்று சொல்லிக் கொண்டே போ’
‘கிம்னோவை மீண்டும் பார்க்க முடியும் அல்லவா?’
முங்கா தனது சிறிய வாலை துழாவிக் கொண்டே தொட்டியை சுற்றி சுற்றி வந்து கொண்டிருப்பதை கவனித்த இலியாஸ்ஸுக்கு மிகுந்த சந்தோஷம். நல்ல கருந்தேக்கு பலகையை வெட்டியெடுத்தது போல கட்டுக்கோப்பான உடலுடன் இருப்பான் இலியாஸ். வெள்ளைப் பற்கள் பளீரிட வட்டக் கண்ணாடி வழியே முங்காவைப் பார்த்துக் கேட்டான்.
‘எதற்காக பரபரப்பாக தொட்டியை சுற்றி சுற்றி வருகிறாய்? இவ்வளவு அவசரமாக?’
தான் சமுத்திரம் நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக சொன்னான் முங்கா. தொட்டியின் பக்கவாட்டில் மஞ்சள் வெளிச்சப் புகை நடுவே இருக்கும் ஃப்ளோரஸண்ட் விளக்குகளை காட்டி அது போல நூறு கோடி விளக்குகளைக் கடந்தால் சமுத்திரம் என்று அம்மா சொல்லியிருக்கிறாள் என்றான். லில்லிதான் விளக்குகளின் எண்ணிக்கைக்கு கணக்கு வைத்திருக்கிறாள். ஆனால் பிரச்சினை என்னவென்றால் அவளுக்கு பதினொன்றுக்கு மேல் எண்ணத் தெரியாது.
இலியாஸ் கிம்னோவிடம் பல்வேறு படிவங்களை கொடுத்து சம்பிரதாயங்களை பூர்த்தி செய்த பின்னர் சிகிச்சையைத் தொடங்கினான். சுற்றிலும் வகை வகையாக தசைகளை வலுப்படுத்தும் உபகரணங்களுக்கு நடுவில் ஒல்லியான மேஜையில் கிம்னோவைப் படுக்க வைத்து அவளுடைய முதுகில் மசாஜ் செய்தான்.
‘உனது முதுகெலும்பு படு மோசமாகிவிட்டது. பதினெட்டு மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்தே வேலை செய்கிறாய் என்று நினைக்கிறேன். நரம்பு மண்டலம் மொத்தமும் பாதிக்கப்பட்டு பொட்டலம் போல் சுருண்டு போய்விட்டது’ என்றான். திமிலில்லாத சிறிய காதுகளைக் கொண்ட ஜாக்வின் மாட்டின் வாலில் தினமும் நாலங்குலம் வெட்டியெடுத்து சூப் வைத்துக் கொடுத்தான். மூன்றே வாரத்தில் கிம்னோவின் முதுகெலும்பு பிரமாதமாக புத்தம் புதியதாகி மாட்டு வால் போல் வெளியே நீண்டு வளர்ந்திருந்தது. அவளால் இப்பொழுது பத்து மைல்கள் நிற்காமல் ஓட முடிகிறது. இரண்டு மணி நேரங்கள் நீச்சலடிக்க முடிகிறது. ஆனால் காதல் செய்ய முடியாமல் கடுமையான மூச்சிரைப்பு நோய் இருந்தது. அவளது நுரையீரலில் களிம்பாக சளி படிந்து இருக்கிறது.
தொட்டியின் அடியில் கற்களை புரட்டுவதும் கண்ணாடிச் சுவரை இடிப்பதுமாக இருந்த முங்காவை நிறைய வேடிக்கைப் பார்த்தாள்.
‘இலியாஸ் கைராசிக்காரந்தான். ஆனால் பெண்கள் என்றால் அதிகமாக வழிகிறான்’ என்று முங்காவிற்கு அதிகம் கோபமாக இருந்தது.
’நீ கிம்னோவை முத்தமிட விரும்புகிறாயா?’ இலியாஸ் வட்டக் கண்ணாடி வழியாக முங்காவைப் பார்த்துக் கேட்டான்.
‘பார்! நீ பிறந்த அதே குளத்தில்தான் நானும் தலைபிரட்டையாகப் பிறந்தேன். காங்கோ நாட்டு அழகி என்னை முத்தமிட்டாள். நான் இப்படியாகி விட்டேன்’ என்றான் இலியாஸ்.
’முத்தத்தின் மூலம் ஆயிரக் கணக்கான கிருமிகள் தொற்றிக் கொள்ளும்’ என்று சிடுசிடுத்தாள் கிம்னோ.
‘நீ புரட்டும் கற்களில் பச்சைக் கற்கள் தோன்றினால் எடுத்து வைத்துக் கொள். அதில் மாவாங் மூலிகைகள் இருக்கிறது. அந்தக் கற்களோடு நீ கிம்னோவை முத்தமிடலாம்’ என்றான் இலியாஸ்.
முங்கா தொட்டியை சுற்றிச் சுற்றி வந்து சிறிய சிவப்பு கற்களை முட்டை வடிவ வாயால் கவ்வி தள்ளித்தள்ளிப் பார்த்துக் கொண்டிருந்தது. அந்த முக்கியமான நாளில் முங்கா வாய் கொள்ளாமல் பச்சை கற்களை கொண்டு மேல்பரப்பில் சுற்றிக் கொண்டிருந்தான்.
சிறிய வலை மூலம் அவனைத் தூக்கிய இலியாஸ், அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த கிம்னோவின் குவிந்த உதடுகளுக்கு அருகில் கொண்டு சென்றான். கண்களை விரித்துக் கொண்டு கிம்னோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது, முங்கா காற்றில் எழும்பி பறந்தவாறே உற்சாகமாக கத்திக் கொண்டே திறந்திருந்த அவள் வாயினுள் விழுந்தான். பட்பட் என்று வாலை அடித்துக்கொண்டே கிம்னோவின் வயிற்றினுள்ளே வழுக்கிக் கொண்டு போனான்.
’முங்கா மூலிகைகளை உனது நுரையீரலுக்கு கொண்டு சேர்த்து விடுவான். இனி உனக்கு மூச்சிரைப்பே வராது’ என்று சொல்லியவாறே இலியாஸ் கிம்னோவின் உதடுகளை தனது உதட்டால் மூடினான்.
6 மறுமொழிகள்:
மிக அழகிய நடையில் எழுதி இருக்கின்றீர்கள்
எங்கோ மீன் வைத்தியம் செய்தார்கள் என படித்த ஞாபகம், அதை போன்றே இருக்கின்றது.
இரசிக்கும்படியாக இருந்தது.
வாங்க ஜமால்!
ஆம். உயிருள்ள மீன் மருத்துவம் சீனாவில் உண்டு. ஐதராபாத்தில் இன்றும் செய்கிறார்கள். பாதினி கோட் சகோதரர்கள் வம்சாவழியாக செய்து வருகிறார்களாம்.
கொஞ்சம் கஷ்டமாக போச்சு தல..ரெண்டு முறை படிச்சி புரிஞ்சிக்கிட்டேன்.;)
வித்தியாசமான கதை களம் தல...பாராட்டுகள் ;)
நல்லா வந்திருக்கு கதை. பெயர்கள் நல்ல தேர்வு.பெயர்களும் சரி கதை சொன்ன விதமும் சரி ஒரு அமானுஷ்ய தன்மையை கொண்டு வருகிறது. கருப்பு வெள்ளை தன்மை இல்லாதிருப்பது சிறப்பு...:):)
வாங்க கோபிநாத்!
//கொஞ்சம் கஷ்டமாக போச்சு தல..//
மன்னிக்கவும் :) இன்னமும் மொழி நடை சிறப்பாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வாங்க ராதா!
உங்கள் பாராட்டுகளுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//பெயர்கள் நல்ல தேர்வு.பெயர்களும் சரி கதை சொன்ன விதமும் சரி ஒரு அமானுஷ்ய தன்மையை கொண்டு வருகிறது. கருப்பு வெள்ளை தன்மை இல்லாதிருப்பது சிறப்பு...:):)//
ஊன்றி படித்ததற்கு மிக்க நன்றி. :)
//‘பெரிய பிரம்மம் இருக்கும். நிறைய நீந்தலாம். ராகியிடமிருந்து உனக்கு விடுதலை கிடைத்துவிடும். பெரிய பெரிய செடிகள் கூட உண்டு. சரணம், சரணம் என்று சொல்லிக் கொண்டே போ’//
நன்றாக இருந்தது. ரசித்துப் படித்தேன். பெயர்களும் வித்தியாசமாயிருந்தது.
`பேருந்து போட்டிக்கு`வாழ்த்துக்கள்!
Post a Comment