June 18, 2009

காதோரமாய்

சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான் சந்துரு.

”ஷங்கி... உனக்குத் தெரியுமா... நீ செத்துப் போய்விட்டாய். நாலு மாசம் முன்னாடியே செத்துப் போய்விட்டாய். அது தெரியாம சுத்திட்டு இருக்கியா?”

உம்பர்டோ, மைக்கேல் ஜாக்சன், சர்ரியலிசம் என்று கலந்தடித்துக் கதைத்துக் கொண்டிருந்த வைத்தி திடீரென கையில் இருந்த பாட்டிலில் வோட்கா தீர்ந்துவிட்டதை உணர்ந்தான். ”இன்னும் கொஞ்சம் சரக்கு தேத்திக்கிடலாம் இவனே. இதை இப்படியே விட்டுடக் கூடாது. சூடோ மாரல்ஸ் பத்தி நெறயப் பேசனும்”

”ரூமில ஒரு ஷிவாஸ் ரீகல் இருக்கு. பாத்து எடுத்திட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்” பின்னிரவில் புல்வெளியில் படுத்துக் கொண்டு ஏகாந்தமாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தை கலைக்க விரும்பாமல் சொன்னேன். நல்ல குளிர் எடுக்க ஆரம்பித்திருந்தது.

”பாத்து தம்பி! மொசலைப் போட்டு கசக்கிறாதீங்க. காதைப் பிடிச்சு தூக்குங்க”

ஒரு பொட்டலம் போல் கம்பிளியைப் போர்த்திக் கொண்டு சுள்ளிகள் வைத்து நெருப்பு மூட்டிக் கொண்டிருந்தார் அந்தக் கிழவர். ஓட்டல் வாட்ச்மேனா என்று தெரியவில்லை.

“யாரும் வளக்கிறாங்களா என்ன?”

“ஆமாப்பா. தோ.. அந்த வெள்ளக்கார சாமி ஆசிரமம் இருக்குல்ல. அங்கதான் அந்தப் பொண்ணு நெறய வளக்குது. வாத்து கூட நெறய இருக்கும். காசுக்கு எல்லாம் விக்க மாட்டாங்க” அவர் கை காட்டிய திசையில் பச்சை நிறப் புல்வெளி சரிவுதான் தெரிந்தது. மறுபக்கம் எதுவும் இருக்கலாம்.

முயலை ஓட விட்டு ஓட விட்டுப் பிடித்துக் கொண்டிருந்த சந்துரு திகைத்து போல் நின்றுவிட்டான்.

”யார் ஜென்னி? ஜென்னியென்றா சொன்னார்?” சந்துருவிற்கு தமிழ் தெரியாது.

“ஜென்னியா? சரியாக் கேக்கல. ஏதோ பொண்ணு வளக்கிற முயல்லாம்பா. கீழே விட்று” கையிலிருந்து பிடுங்கி கீழே விட்டேன். அந்த முயல் சரிவை நோக்கிக் குதித்துக் கொண்டே ஓடிவிட்டது.

அந்தக் கம்பளிக் கிழவர் சந்துரு தலையை பிடித்து உலுக்கிக் கொண்டே “ஜென்னியா? ஜென்னி...” என்று மீண்டும் மீண்டும் கேட்பதைப் பார்த்துவிட்டு

”தம்பி ரெம்ப சாப்டுருச்சுப் போல. இந்த முசல்லாம் ஆசிரமத்துது தம்பி. அந்தப் பொண்ணு பாசமா வளக்குது”

இப்பொழுதுதான் இரண்டு மாதமாகியிருக்கிறது சந்துரு பெங்களூரிலிருந்து சென்னை வந்து. வாக்கியத்துக்கு ஐந்தாறு ஆங்கிலக் கெட்ட வார்த்தையோடு பேசும் ஹை-ஃபை ஆங்கிலம்தான் அவனுடைய மொழி.

”ஜென்னி உயிரோடு இருக்கிறாளா?”

இரவு வானத்தில் சிதறிக் கிடக்கும் நட்சத்திரங்களில் உர்சா மேஜரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த போது சந்துருவின் திடீர் மௌனம் உறுத்தவே ”என்னடா ஆச்சு? யார் ஜென்னி?” என்று கேட்டேன்.

”நீ கேட்கவில்லையா?” கிழவரைக் காட்டிச் சொன்னான். “அவள் உயிரோடுதான் இருக்கிறாள் ஜெய். அவள்தான் நான். நாந்தான் அவள். நான்கு மாதங்களுக்கு முன்னர் எல்லாரையும் சாகடித்துவிட்டார்கள். ஜென்னி, ஷங்கி எல்லாரையும்... எனக்கு இன்னமும் அவள் வாசனை ஞாபகமிருக்கிறது. ஆம்! அவள் இறக்கவில்லை. இதோ என் ஷங்கி இங்கு உயிரோடு இருக்கிறது. ஜென்னியும் உயிரோடுதான் இருக்கிறாள்”

அவனது பேச்சிலும் செயலிலுமே ஏதோ பெரிய வித்தியாசம் தெரிந்தது. சாதாரணமாக அவனது செயல்களில் எப்பொழுதும் ஒரு அதீத சுயக் கட்டுப்பாடு இருக்கும். இப்பொழுது வோட்கா அதிமாகிவிட்டதனாலோ என்னவோ அவன் சுதந்திரமாக உற்சாகமாக நின்று கொண்டு பேசினான். அவன் கண்களில் பிரகாசமான ஒளி தெரிந்தது போலிருந்தது.

சரிதான். பையனுக்கு சரக்கு இன்றைக்கு அதிகமாகி விட்டது.

”ஜெய்... நீ ஜென்னியைப் பார்த்திருக்கிறாயா? இல்லையா? அவள் எவ்வளவு அழகு தெரியுமா? நீ ஒருமுறை அவளைப் பார்த்தால் மயங்கிவிடுவாய் ஜெய்”

”டேய்.. படுத்தாதே. எங்கேயோ நான்கு மாதங்களுக்கு முன்னால் பெங்களூரில் செத்துப் போன உனது ஜென்னியும் முயலும் இந்த அர்த்தராத்திரியில் கொடைக்கானல் தமிழ்நாடு ஓட்டல் புல்வெளியில் உயிரோடு வரப்போகிறார்களா என்ன. பேசாமல் இரு. கொஞ்சுகிறேன் என்று முயலை கொடுமைப் படுத்தாதே. செத்துவிடப் போகிறது”

அலுவலக சகாக்கள் எல்லாரும் ஆளுக்கு கொஞ்சம் காசுபோட்டு வருடா வருடம் சுற்றுலா செல்வது வழக்கம். இம்முறை கொடைக்கானலில் மூன்று நாட்கள். நல்ல குளிருக்கு சூடா சரக்கேற்றிக் கொண்டு வழக்கம் போல் வைத்தியோடு விவாதித்துக் கொண்டிருந்தால் ஜென்னி, கென்னி என்று... சட்... இந்த வைத்தி வேற சரக்கு தேத்திக் கொண்டு வருகிறேன் என்று போனவன் ஆளையே காணோம்.

எங்கள் நிறுவனத்தின் அட்மின் சத்யாவின் உறவினனாகத்தான் சந்திரசேகர் என்னும் சந்துரு அறிமுகமானான். தாய்மொழி தெலுங்கு ஆனால் பிறந்தது வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. ஏனோ பெங்களூருவில் பொருந்தாமல் வேலை பார்க்க சென்னைக்கு வந்துவிட்டான். அவன் வீட்டில் ஏதோ பிரச்சினை என்றளவில் புரிகிறது. சத்யாவிற்கு அவன் மேல் ஏதோ வெறுப்பு இருந்தது நன்றாகவே தெரிந்தது. ”வசதிப்பட்டா உன் டீம்ல வச்சுக்க ஜெய்காந்த். பையன் மேல எனக்கு பெருசா நம்பிக்கை கிடையாது. அத்தைக்காகத்தான் பாக்குறேன். அப்புறம் என்னத் திட்டாத”.

சந்துரு ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவனாக, நவீன நகரவாசி நறுவிசாக, நாசூக்காய் இருப்பான். புருவம் எல்லாம் செதுக்கிக் கொண்டு, தோற்றத்திலும், உடல் மொழியிலும் அதீத கவனம் கொண்டிருப்பான். எப்பொழுதும் அவனிடம் ஒரு கவர்ச்சி இருக்கத்தான் செய்தது. முக்கியமாக அவன் குரலும் பேசும் முறையும். எங்கள் நிறுவனம் சிறிய, மத்திய தர, அதிகம் லாபம் ஈட்டாத, மென்பொருள் சேவை நிறுவனம். சொன்ன வேலையை முடித்துக் கொடுப்பதில் சந்துரு சூரன். கூட்டத்தில் அதிகம் கலக்க மாட்டான். ஆனால் எப்படியோ இரண்டு மாதங்களில் எங்கள் கூட்டத்தோடு ஒட்டிவிட்டான். வெள்ளிகிழமை இரவு மொட்டைமாடி கொண்டாட்டங்களில் ஐக்கியமாகி, வைத்தியும் நானும் விவாதிக்கும் விஷயங்கள் புரியாவிட்டாலும் உன்னிப்பாக கவனித்து வருகிறான். எப்பொழுதும் எதையோ தொலைத்து போல ஒரு சோகத்தைக் காட்டிக் கொண்டிருப்பான்.

வைத்தி காக்டெயில் கலையில் கில்லாடி. சைனா டீயில் ரம்மை கலந்து சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா? சிகரெட் பற்றவைக்க நெருப்புப் பெட்டி கேட்கலாம் என்று தேடினால் சந்துரு அவன்பாட்டுக்கு நடந்துப் போய்க் கொண்டிருந்தான். புல்வெளியைத் தாண்டி ஓட்டல் கேட்டை நோக்கி... வெளியிலா போகப் போகிறான்? அந்தக் கிழவன் ஏதோ ஆசிரமம் என்று கையைக்காட்டி சொன்ன திசை நோக்கி நடந்து போய்க்கொண்டிருக்கிறான் என்று நினைத்தேன். இதுதான் சின்னப் பசங்களோடு பானம் சாப்பிடும்போது பிரச்சினை. தேவையில்லாமல் உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறார்கள். அவன் நடையே வேறுவிதமாக இருந்தது. ஒருவழியாக அவனை மடக்கிப் பிடித்து ரூமிற்க்கு கூட்டி வந்தேன். பற்ற வைக்காத சிகரெட்டை வாயில் வைத்துக் கொண்டே வைத்தி கவுந்தடித்துப் படுத்து மட்டையாகியிருக்க, முரளி எழுந்து உட்கார்ந்து கொண்டிருந்தான்.

”என்ன மச்சி! தூங்கலையா இன்னமும்”

”டேய்... மணியப் பாருடா ஆறாகப் போகுது. விடிய விடிய குடிச்சிபிட்டு வந்து என்னைத் தூங்கலையான்னு கேக்கற... 7:30 மணிக்கு பிரேக்ஃபாஸ்ட் ரெடியாயிடுமாம். கெய்ஸர் போட்டிருக்கேன். ஒத்தொருத்தரா குளிச்சு கிளம்ப வேணாமா?”

விடுமுறை நாளில் கூட குளிக்க வேண்டும் என்று சொன்னதற்காகவே தனியாக இரண்டு பெக் அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். ஒருக்களித்து படுத்துக் கொண்டிருந்த சந்துரு முணுமுணுப்பாக ”ஜென்னி... ஜென்னி” என்று முனகிக் கொண்டு கைகளை தொடைக்கிடையில் செருகிக் கொண்டு சுருண்டு படுத்திருந்தான்.

”சின்னப் பையன ஏண்டா கெடுக்கறீங்க... ஓவராயிடுச்சுப் போல. பாரு புலம்பிட்டே இருக்கான்” என்றான் முரளி. யாரந்த ஜென்னி? இறந்துவிட்டாள் என்கிறான். பின்னர் இல்லை என்கிறான். ஏதாவது பழைய காதலின் மிச்ச சொச்சமாக இருக்கலாம்.

கொடைரோடு வரை ட்ரெய்னில வந்துவிட்டு அங்கிருந்து வோல்வோ பஸ் வைத்துக் கொண்டு கொடைக்கானல் வந்திருந்தோம். ஒம்போது மணிக்கு கும்பலாக எல்லாரும் பஸ் முன்னே சேர்ந்துவிட பேரிஜம் போய் சுற்றிப் பார்க்கலாம் என்று திட்டம் போட்டார்கள். எண்ணிப் பார்த்தால் சந்துரு மிஸ்ஸிங். சத்யா என்னிடம் ”நைட் செம டைட்டா ஜெய்? அவன ரொம்ப குடிக்க விடாத. அவன் ஒரு மாதிரி. இப்பத்தான் ரெகவர் ஆயிட்டு வர்றான். சரி அவன்பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கட்டும்... நாம ஈவ்னிங் வந்து பாத்துக்கலாம்” என்றான்.

நான் காலைச் சாப்பாட்டுக்கு சந்துருவை எழுப்ப முயற்சி செய்த போது மப்பு இன்னமும் தெளியவில்லை என்று தெரிந்திருந்தது. ஏனோ அவனைத் தனியா விட்டு செல்ல தயக்கமாக இருந்தது. ஜென்னி கென்னி என்று உளறிக் கொண்டிருக்கிறானே. யாரந்த ஜென்னி?

”இல்ல சத்யா... நீங்க எல்லாம் கிளம்புங்க. நான் அவன் தெளிஞ்சு எழுந்ததும் பில்லர் ராக்ஸ்-ல வந்து ஜாய்ன் பண்ணிக்கிறேன். தனியா விட்டுப் போறது சரியில்லப்பா”

நேற்றிரவு மாதிரி ஏதாவது ஆசிரமத்தை தேடி ஓடினாலும் ஓடிவிடுவான். ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மற்றும் இந்த பேரிஜம் ஏரியில் சுற்றிப் பார்க்க என்று ஒன்றும் கிடையாது. பேசாமல் ரூமில் கொஞ்ச நேரம் தூங்கலாம். சேத்தன் பகத்தை கொஞ்சம் புரட்டலாம். பிறகு சந்துருவை மெதுவாக கிளப்பிக் கொண்டு பில்லர் ராக்ஸ் போய் சேர்ந்து விடலாம் என்று ஒரு சோம்பல் திட்டம் போட்டேன். வைத்தி பஸ்சில் ஏற்கெனவே செட்டில் ஆகி தூங்க ஆரம்பித்திருந்தான்.

சத்யா தயக்கத்துடன் என்னை ஒரு மாதிரியாக பார்த்துக் கொண்டே பஸ்சிலேறிப் போனான். என்ன குடும்பத்தகராறோ... என்னவோ. பொதுவாகவே சங்கோஜியாக தெரியும் சந்துரு, சத்யா தலை தெரிந்தால் சுத்தமாக அமைதியாகிவிடுவான்.

ஒரு குட்டித் தூக்கம் போட்டுவிட்டு ஹிந்திப் பட நாயகன் போல மஃப்ளரை ஸ்டைலாக கழுத்தில் சுற்றிக் கொண்டு சந்துருவை மீண்டும் எழுப்பலாம் என்று அவன் அருகில் போனேன். தூங்காமல் முகத்தில் ஏதோ தவிப்போடு படுத்துக் கொண்டிருந்தான்.

”ஹேங் ஓவரா? சரி சரி... அப்படியே கிளம்பி ஒரு வாக் போனா தலை சுத்தமாகிவிடும். வா வா” என்று தோளைப் பற்றி உலுக்கினேன்.

என்னைப் பார்த்தவுடன் மின்சாரம் வந்தது போல் பளீரென்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறையில் புதிதாக ஏதோ நறுமணம்.

”என்னடா வாமிட் எதுவும் பண்ணி வைத்தாயா? பெஃப்யூம் எல்லாம் அதிகமாக இருக்கிறது” என்றேன்

மெலிதாக புன்முறுவல் செய்தான். இந்த இரண்டு மாதங்களில் இவ்வளவு பிரகாசமாக அவன் இருந்தது கிடையாது. செழுமையான கன்னமும், பளபள உதடுகளுமாய் முந்தைய இரவு நனைந்த கோழியாய் சுருண்டிருதவனா இவன்? சட்டென என் கைகளைப் பற்றி கட்டியணைத்துக் கொண்டான். ”ஜெய்... உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்”

”ஃப்ரெஷாகிக் கொண்டு வா. பில்லர்ஸ் ராக் போகலாம். மற்றவர்கள் எல்லோரும் அங்கே வந்திருப்பார்கள்” என்றேன்.

“ஜெய், நீ ஜென்னியைப் பார்க்க வேண்டாமா? என்னை நம்பு ஜெய். அவள் ஒரு அழகான தேவதை. ஆனால் அவளை சாகடித்து விட்டார்கள். எனக்கு இப்பொழுது நன்றாகத் தெரிகிறது அவள் உயிரோடுதான் இருக்கிறாள். நீ ஒருமுறை அவளைப் பார்க்க வேண்டும் கண்டிப்பாய்” தவிப்பான குரலில் பேசினான்.

”இங்க பார்... சந்துரு. உன்னோட ஜென்னி யாரென்று தெரியாது. அந்தக் கிழவன் ஏதோ உளறியதில் நீ குழம்பிப் போய்விட்டாய்”

சந்துரு நான் சொன்னதை கவனிக்கவே இல்லை. ”ஜென்னி சாகவில்லை ஜெய். நேற்று ஷங்கியை பாத்தாய்தானே நீ? எனக்கு இப்பொழுது எல்லாம் தெளிவாகிவிட்டது. நான் இருக்கறவரைக்கும் ஜென்னிக்கு சாவே கிடையாது” எனக்கு முத்தம் கொடுக்காத குறையாக கட்டிக் கொண்டான். முத்தமே கொடுத்துவிட்ட மாதிரிதான் இருந்தது.

”ஓக்கே! ஓக்கே! ஜென்னி சாகவில்லை. நீ முதலில் கிளம்பி அறையை விட்டு வெளியில் வா” என்று நெட்டித் தள்ளிக்கொண்டு வெளியில் வந்தேன்.

“நீ நம்புகிறாய் அல்லவா?” சந்துரு மிகவும் உற்சாகமாகிவிட்டிருந்தான். நடனமாடுவது போல் இடுப்பை ஆட்டிக் கொண்டே சுழன்று சுழன்று சென்று கொண்டிருந்தான். யாரந்தப் பெண? பெயரைக் கேட்டதும் இவ்வளவு குதூகலிக்கிறான்? ம்ம்ம்...

வைத்தி இருந்திருந்தால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தையும், டெஸ்டிரோன்ஸின் தூண்டுதலையும் பற்றி ஏதாவது புதிய மேட்டர் சொல்லியிருப்பான்.

”டேய்... டேய்... அந்தப் பக்கம் பாதை இல்லை. சரிவுதான் இருக்கிறது” என்று எச்சரிப்பதற்குள் சந்துரு சரிவில் இறங்கி நடக்க ஆரம்பித்திருந்தான்.

பச்சைப் புல்வெளி சரிந்து இறங்கி சட்டென நிமிர்ந்த போது எதிரில் பெரிய ஓட்டுக்கட்டிடம் ஒன்று தெரிந்தது. சந்துருவின் வேகத்திற்கு ஓடிப் போய் அவன் கையைப் பிடித்து ”எங்கேடா போகிறாய்”

”அங்கே பார்.” அவன் குரல் மிகவும் மென்மையாக மாறிவிட்டிருந்தது.

ஜோசஃப் ஸ்டான்லி என்ற ஐரிஷ்காரர் தங்கியிருந்த வீடு இப்பொழுது ஆசிரமம் போல் ஆகிவிட்டிருந்ததாக நுழைவு வாயிலில் போர்ட் சொன்னது. சந்துரு தலையை சாய்த்து என்னைப் பார்த்து சிரித்துவிட்டு அங்கே ஓடிக் கொண்டிருந்த முயல்களைக் காட்டினான். ஆகா! மறந்துவிட்டான் என்று நினைத்தால் மீண்டும் ஜென்னி மேட்டருக்கே வந்துவிட்டான் போலிருக்கிறது. சத்யா சொன்னது சரிதான். இவனைக் கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்க வேண்டும். ஒழுங்காக ஊருக்குக் கொண்டு சேர்க்க வேண்டுமே.

”இங்க உன் ஜென்னி இருக்கிறாளா என்று தெரிய வேண்டும். அவ்வளவுதானே? இல்லையென்றால் சமர்த்தாக திரும்பிவிட வேண்டும். ரொம்பப் படுத்தக்கூடாது” என்றேன்

உள்ளே சுற்றுலா பயனிகளும் சிலரும், தியானத்தில் திளைத்துக் கொண்டு சிலரும் இருக்க சந்துருவால் ஈர்க்கப்பட்டவன் போல் அவன் பின்னேயே நான் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுது செல்ஃபோன் அடிக்க எடுத்துப் பார்த்தால் சத்யா.

“எங்கேடா இருக்கீங்க? நாங்க பில்லர் ராக்ஸ் வந்தாச்சு”

“ஆங் சத்யா... நாங்களும் கிளம்பிட்டோம். உன் கஸிந்தான் ஜென்னின்னு... இங்க ஜோ ஆஸ்ரமம் பக்கமா வந்திட்டான். இதோ கூட்டிட்டு வந்திடரேன்”

“என்னது ஜென்னியா? ஓ மை காட்! இப்பத்தான் கொஞ்ச நாளா அதையெல்லாம் மறந்து நார்மலாயிட்டிருக்கான்னு நினச்சேன். ஜெய்.. இந்த மேட்டர் நமக்குள்ள இருக்கட்டும். நீ.. நீ... புரிஞ்சிப்பன்னு நினக்கிறேன். இங்க எப்படியாவது கூட்டிட்டு வந்திடு. எனக்கு சத்தியம்லாம் பண்ணிக் கொடுத்திருகான் அவன்’ அவன் குரலில் ஒரு மிரட்சி இருந்தது. இந்த விஷயத்தின் ஆழம் புரியாமல் மிகவும் குழப்பமாக இருந்தது.

“மச்சி... நான் அவனக் கட்டுபடுத்தத்தான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.“

சந்துரு எங்கே போய்விட்டான்? ஒரு பக்கவாட்டு கதவு வழியாக தோட்டப்பக்கமாக பாதை தெரிந்தது.

“நான் நேர்ல வந்து பேசறேன் சத்யா. நீங்க பில்லர் ராக்ஸ்லேயே இருங்க”

தோட்டத்திற்கு சென்ற போது அங்கே சிற்சில வலைக் கூண்டுகளும் அதனுள்ளே புஷ்டியான புஸுபுஸு முயல்குட்டிகள் சுற்றிக் கொண்டிருக்க அழகான ஆரஞ்சு கழுத்து ஃப்ளெமிங்கோக்கள் நீரில் திளைத்துக் கொண்டிருந்தன. அந்த சிமெண்ட் பெஞ்சில்தான் அவர்கள் இருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

அந்தப் பெண்ணைப் பார்த்தால் சுமாராக இருந்தாள். சிரித்தவாறே கையில் ஏதோ தாணியங்களை வைத்து முயல்களுக்குடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். இவள்தான் ஜென்னியா? அவளருகே சென்று

“ஹலோ... ஜென்னி?” என்றேன்

என் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்தவள் கண்களைச் சுருக்கிக் கொண்டு

“ஹலோ! என்ன வேணும்? சாமி மலைக்கு மேலே போயிருக்கு. நாளைக்கு வரும். சிலப்போ மேலேயே தங்கிடுவாரு. சிடி, கேஸட் எதுவும் வேணுங்களா?” என்றாள்

“இல்ல... நீங்க ஜென்னியா?” விஷயத்தை தெளிவாக்கி கொண்டுவிட்டால் இவனை சீக்கிரம் கொண்டு போய் சத்யாவிடம் விட்டுவிடலாம். நல்லவேளை இதுவரை அமைதியாகத்தான் உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

சற்று குழப்பமாக பார்த்தவள், சட்டெனத் தெளிவடைந்தவள் போல

“நான்... நான்... செல்வி. இவங்கதான் ஜென்னி. இப்பத்தான் வந்தாங்க” என்று பக்கவாட்டில் அவள் காட்டிய இடத்தில் பார்க்கும்போதுதான் சட்டென உறைத்தது.

தலைமுடியை சற்றே பின்னுக்கு தள்ளிக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்ததுக்கொண்டு, கூட்டினில் இருந்த விடுபட்ட பெண்மையாய், பேரானந்தமாய் அங்கே உட்கார்ந்திருந்தது அவன் இல்லை.

சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஜென்னி.

இந்த சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது. போட்டியில் பங்குபெறும் கதைகளின் பட்டியலை இங்குக் காணலாம்.

33 மறுமொழிகள்:

சென்ஷி said...

:)

சுட சுட படிச்சுட்டேன்!

சென்ஷி said...

விமர்சனம் கொஞ்ச நேரத்திற்கு பிறகு :)

சுரேஷ் கண்ணன் said...

ம்.... படிசு்சுட்டேன். நல்ல நடை. ஆனா கடைசிலதான் 'ஒரு குன்சா' புரியல. பயப்படாதீங்க. விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன். இது என்ன நீதிக்கதையா? கடைசில தெளிவா பொழிப்புரை எழுதறதுக்கு. படிச்ச அனுபவம் நல்லா இருந்துச்சு. அது போதும்.

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி!

சுடச்சுட விமர்சனம் எழுதலயெ நீங்க. அப்ப கதை அந்தளவு பிக்கப் ஆகலை போல. :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

வாங்க சுரேஷ்!

குன்சா புரியலையா...:) சரி விடுங்க. அடுத்த முறை சரியானபடி எழுதிடலாம் :))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

ஒரு மாதிரி நல்லா தான் இருக்கு...ஆனா...

Sridhar Narayanan said...

வாங்க வசந்த்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ஆம். ஆயிரம் வார்ததை லிமிட்டேஷனுக்காக கொஞ்சம் செதுக்கியதில் முழுமையாக வரவில்லை என்று நினைக்கிறேன். :)

Sridhar Narayanan said...

இதுவரை படித்த அன்பர்களுக்கு!

கதையில் vagueness அதிகம் இருப்பது போல் தோன்றியதால் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

இப்ப நல்லா இருக்கு. எனக்கே புரிஞ்சிடுச்சு..!!

Sridhar Narayanan said...

தமிழ்10! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி :)

வசந்த்!

உங்கள் இரு கமெண்டுகளும் கிடைத்தன. நீங்கள் சொன்னது சரிதான். இறுதி வரிகளை மாற்றிவிட்டேன் :)

தொடர்ந்து படித்ததற்கு மிக்க நன்றி.

ரீடரில் படித்தவர்களுக்கு இந்த மாற்றங்கள் சேருமா என்று தெரியவில்லை :)

வெட்டிப்பயல் said...

இப்ப தெளிவா புரியுது தல...

என்ன பண்ண நாங்க எல்லாம் கோனார் நோட்ஸ்ல தெளிவுரை, விளக்கவுரை படிச்சி வளர்ந்த பயபுள்ளைக :)

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

இப்ப மிகத் தெளிவாக விளங்குகின்றது.

சென்ஷி said...

பயந்து பயந்து யாராச்சும் கமெண்ட்ல ஏதாச்சும் சொல்லிட மாட்டாங்களானு தேடிட்டு இருந்தேன்.. நல்ல வேளை கதையில கொஞ்சம் மாற்றம் கொடுத்து என்னைய காப்பாத்திட்டீங்க.

Viji said...

Sridhar, your writings remind me of Sujatha:-). Your command over the language as well as the flow is commandable:-).You ,must try it out in a BIG way!

I did feel this one is a bit lengthy, though!

nchokkan said...

ஏகப்பட்ட டிராமாவுக்கு வாய்ப்புள்ள ஒரு கதைக்கருவை, மிக மென்மையாக, subtleஆகக் கையாண்டிருக்கிறீர்கள் - மிகவும் ரசித்தேன், பாராட்டுகள்!

ஆனா ஒண்ணு, சுஜாதா வாசனை ரொம்ம்ம்ம்ம்ம்ப ஜாஸ்தி - கவனமுங்கோ :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

Sridhar Narayanan said...

வெட்டிப்பயல், வசந்த், சென்ஷி!

உங்கள் மீள் வாசிப்புக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

விஜி!

சுஜாதாவின் வர்ணனைகள் எல்லாம் கிட்டேக் கூட போக முடியாது. கொஞ்சம் ஜனரஞ்சகமாக இருந்தால் அவர் நினைப்பு வரலாம். :)

உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சொக்கன் ஐயா!

ஆமாங்க... அவர் அநியாயத்துக்கு வாசகர்களை கெடுத்து வச்சிருக்கார். வாசனையை மாத்த முயற்சி பண்றேன். :))

ambi said...

என்னடா எல்லாம் ஒழுங்கா போயிட்ருக்கேன்னு நெனச்சேன். கடைசில உங்க டச்சை காட்டிடீங்க. :))

படிச்ச எனக்கு இப்ப வோட்கா அடிச்ச மாதிரி இருக்கு.

Sridhar Narayanan said...

வாங்க அம்பி!

:) வோட்காவோடத்தானே ப்ளாகே படிக்க ஆரம்பிச்சீரு. அப்புறம் வோட்கா அடிச்ச எஃபெக்ட் இருக்கத்தானேய்யா செய்யும்.

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

சங்கா said...

இப்பத்தான் படிச்சேன். அதனாலே குழப்பமில்லை. ஆனா, ஒரு சில இடத்திலே இலை மறை காயா சொல்லிருக்கீங்க, இல்ல? (பட்சி சொல்லிச்சு). திருத்துவதற்கு முன்னாலேயும் அப்படித்தானா?
//”என்னைப் பார்த்தவுடன் மின்சாரம் வந்தது போல் பளீரென்று சிரித்துக் கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறையில் புதிதாக ஏதோ நறுமணம்”, ”சட்டென என் கைகளைப் பற்றி கட்டியணைத்துக் கொண்டான்.” ”ஜெய்... உனக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்” “எனக்கு முத்தம் கொடுக்காத குறையாக கட்டிக் கொண்டான். முத்தமே கொடுத்துவிட்ட மாதிரிதான் இருந்தது” இதைப் படித்ததும் சட்டுனு முத வரிக்குப் போனா ”சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான் சந்துரு”. தன்னை,ஆம்பளைன்னு நினைக்கிறவன், இந்த மாதிரிக் கொஞ்சறது ரொம்ப கஷ்டம். Inhibitions?
வெற்றி பெற வாழ்த்துகள்.

சங்கா said...

”தன்னை,ஆம்பளைன்னு நினைக்கிறவன், இந்த மாதிரிக் கொஞ்சறது ரொம்ப கஷ்டம்”. இந்த வரியை இப்படி மாற்றிப் படிக்கவும்.
”தன்னை,ஆம்பளைன்னு நினைக்கிறவன், பொதுவில, நாலு பேருக்கு நடுவுல இந்த மாதிரிக் கொஞ்சறது ரொம்ப கஷ்டம்.”

Sridhar Narayanan said...

வாங்க சங்கர் சார்!

முதல் வெர்ஷனில் அவ்வளவு வெளிப்படையாக எழுதவில்லை. அதனால் குழப்பம் அதிகமாக இருந்தது என்று நினைக்கிறேன்.

//தன்னை,ஆம்பளைன்னு நினைக்கிறவன், இந்த மாதிரிக் கொஞ்சறது ரொம்ப கஷ்டம். Inhibitions?//

ஆஹா! சூப்பரா ஒரு கேள்வி கேட்டிங்க.

அவனுடைய இறந்த காலத்தின் பாதிப்பும் இருக்கிறதே. அதனால்தான் இடமாற்றம் ஆகி சென்னை வருகிற மாதிரியும் சொல்லப்பட்டிருக்கிறது. மற்றுமல்லாமல் போதையின்போது சுயக் கட்டுப்பாடும் இருக்காதே... ம்ம்ம் சரியாக வருகிறதா?

சங்கா said...

ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம், நன்று! நன்றி!
அன்புடன் சங்கா

நட்புடன் ஜமால் said...

எதிலோ

எங்கேயோ சஞ்சரித்தது போல் இருந்தது

அழகு நடை ...


வெற்றி பெற வாழ்த்துகள் ...

Sridhar Narayanan said...

நன்றி சங்கர்ஜி! :)

வாங்க ஜமால்... உங்க வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி!

வெண்பூ said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் ஸ்ரீதர் நாராயணன்

ரெஜோ said...

வாழ்த்துகள் நண்பரே ! :-)

சங்கா said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்! இங்கேயே இருந்திருந்தால் ஒரு பார்ட்டி கேட்டிருக்கலாம். ”கிழக்கு”க்குப் போயிட்டீங்க!

யோசிப்பவர் said...

கதை நன்றாயிருக்கிறது ஸ்ரீதர்!! இப்பொழுதுதான் படித்தேன். வெற்றி பெற்ற கதைகளை படிக்காமல் வெறுமனே வாழ்த்து மட்டும் சொல்வது ஏனோ பிடிக்கவில்லை. அதனால், எல்லா கதைகளையும் படித்துவிட்டே வாழ்த்துவது என்று ஒவ்வொன்றாக இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன்(ஆணி அதிகம்). போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்!!!

ஒன்றிரண்டு எழுத்துப் பிழைகளைப் பார்த்தேன்(ன/ண மாறுதல்). அப்புறம் இந்தக் கதைக்கு ஏன் “காதோரமாய்” என்று பெயர் வைத்தீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.

//சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான் சந்துரு.
...
சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஜென்னி.//
இங்கே இதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இந்த வரிகளே கதையை தெளிவுபடுத்தியதாக நான் உணர்ந்தேன்.

சூடோ மாரல்ஸ், சர்ரியலிஸம், உர்சா மேஜர்..... ஓகே ஓகே. நீங்களும் கொஞ்சம் நம்மள மாதிரிதான் போலிருக்கு!!;-)

சேரல் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நண்பரே! நல்ல சிறுகதை.

-ப்ரியமுடன்
சேரல்

Sridhar Narayanan said...

வாங்க வெண்பூ!

முடிவுகள் அறிவித்தவுடன், எல்லா பதிவுகளிலும் உங்கள் வாழ்த்துதான் முதலில் பதிவாகியிருக்கிறது. :) உங்களின் ஊக்கமளிக்கும் மனோநிலை மிகவும் பாராட்டுதலுக்குரியது. மிக்க நன்றி.

வாங்க ரெஜோ!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் வாழ்த்துகள்.

சங்கர்ஜி!

ட்ரீட்டுக்கு என்னங்க... எப்ப வேணாலும் வாங்க :) இந்த ஊரு எனக்கே புதுசா இருக்கு. துணைக்கு நீங்களும் இருந்தீஙகன்னா நிறைய எக்ஸ்ப்ளோர் பண்ணலாம்.

வாங்க சேரல்!

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. உங்களுக்கும் பதில் வாழ்த்துகள் தெரிவிச்சிக்கிறேன்.

Sridhar Narayanan said...

யோசிப்பவர்!

You made my day! :)

நிறைய பேர் புரியவில்லை என்றோ குழப்பமான கதை என்றோதான் விமர்சனம் செய்திருந்தார்கள். எனக்கே தவறாக செய்துவிட்டோம் என்று தோன்றிக்கொண்டேயிருந்தது.

ஒரு ஆணிலிருந்து பெண்மை வெளிப்படுவதை விவரிப்பதற்கு இன்னமும் காத்திரமான மொழிநடை தேவைப்படும். என்னால் முடிந்தவரை செய்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

உர்சா மேஜர் எல்லாம் சும்மா கதைக்கு கலர் கொடுப்பதற்காக சேர்த்த உட்டாலக்கடி. இதுதான் வாத்தியார்கிட்ட கத்துகிட்ட பாடம் :))

எழுத்துப் பிழைகள் - இந்த ‘ன’ ‘ண’கரம் என்னுடை Achilles குதிகால் மாதிரி துரத்துகிறது. இனி இன்னமும் கவனமாக இருக்கிறேன்.

இரவுப்பறவை said...

என்னால் இயன்றதை அளித்துவிட்டேன்
தகவலுக்கு நன்றிகள்..

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
கதை நன்றாக இருக்கிறது..

அந்த "காதோரமாய்"... என்ன காரணம் என்று எங்களுக்கும் சொல்ல கூடாதா?

" உழவன் " " Uzhavan " said...

பரிசு பெற்றமைக்கு என் இனிய வாழ்த்துக்கள் :-)