July 8, 2009

உஷ்! சைலன்ஸ்!

’Silence' என்ற பலகையை பெரும்பாலும் நூலகத்திலும், ஆஸ்பத்திரிகளிலும்தான் பார்க்க முடியும். சிறு வயதிலிருந்தே நூல்களோடு பரிச்சயம் அதிகம் இருந்தாலும், நூலகங்களோடு அதிகப் பரிச்சயம் இல்லை. காரணம் எனது மாமா வீட்டிலேயே பீரோ பீரோவாக பைண்ட் புத்தகங்களாக பெரிய நூலகமே வைத்திருந்தார். எல்லா வார / மாத இதழ்களும் வீட்டிலேயே கிடைத்ததனால் நூலகம் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டதேயில்லை. ஆனாலும் நூலகங்கள் மேல் ஓர் ஈர்ப்பு இருந்து கொண்டே இருந்தது. முக்கியமாக அங்கே அமலிலிருக்கும் கட்டாய அமைதி அலாதியானது.

சிறு வயதில் நான் படித்தது ஒரு தனியார் மிஷனெரி பள்ளியில். அங்கே நல்ல அருமையான நூலகமும் உண்டு. ஆனால் லைப்ரரியனாக இருந்த லில்லி மிஸ் ரொம்பவே கெடுபிடியானவர். சக ஆசிரியைகளோடு சிரித்து பேசுபவர் எங்களைப் போல மாணவர்களை கண்டாலே சட்டென ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிடுவார். அந்த நூலகத்தில் அருமையான ஆங்கில காமிக்ஸ் புத்தகங்கள் எல்லாம் இருக்கும். ஆனால் அந்த காமிக்ஸில் வரும் வேதாளரைப் பற்றியோ, அவரது வீரதீர பிரதாபங்களைப் பற்றியோ நண்பர்களோடு அளவளாவ முடியாது. ஏதாவது பேசினால் புத்தகத்தைப் பிடுங்கி வைத்துக் கொண்டு லைப்ரரி விட்டு வெளியேற்றி விடுவார். ஆசிரியைகளின் குழந்தைகளுக்கு விதிவிலக்கு உண்டு.

மதுரை மத்திய நூலகம் நல்லப் பெரியதாக இருக்கும். அண்ணன் இரண்டு லைப்ரரி கார்டுகள் வைத்து பந்தாவாக போய் புத்தகம் எல்லாம் எடுத்து வருவான். பெரும்பாலும் வீட்டிலேயே இருந்துதான் படித்திருக்கிறேன். ஓரிரு சமயம் நானும் ஒட்டிக் கொண்டு போய்வருவேன். அங்கே முன் ஹாலில் நாளிதழ்கள் எல்லாம் வைத்துப் படித்துக் கொண்டு இருப்பார்கள். அதுதான் வீட்டிலேயே வந்து பேப்பர் போடுகிறார்களே அப்புறம் எதற்கு லைப்ரரி வந்து படிக்கிறார்கள் என்று ஆச்சர்யமாக இருக்கும் :). வரவேற்பறையில் ஒரு விஸிட்டர் புக் வைத்து அதில் பெயரெழுதி கமெண்ட் எல்லாம் எழுதச் சொல்வார்கள். ஒருமுறை கூட நிஜப் பெயரை எழுதியதில்லை. அது ஒரு விளையாட்டுப் போல மனதுக்கு தோன்றிய பெயர்களை கிறுக்கி வைப்பது வழக்கம். லெனின் ஆவி என்றெல்லாம் எழுதியிருப்பார்கள் சிலர். நீளமாக மேஜைப் போட்டு நிறைய பேர் சேர்களில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருப்பார்கள். ஏதோ ஒரு குரும்பூர் குப்புசாமி கதையை அந்த அமைதியான சூழலில் உட்கார்ந்து படிக்கிறேன் என்று ஆரம்பித்து ஐந்து நிமிடங்களில் தூக்கம்தான் வந்தது.

காமராசர் பல்கலைகழகத்தில் அருமையான நூலகம் ஒன்று இருக்கிறது. மிட்டாய்கடையைப் பார்த்த குழந்தையைப் போல வாயைப் பிளந்து கொண்டு பார்த்திருந்திருக்கிறேன். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிகையின் நடுப்பக்கத்தில் நேர்த்தியாக அச்சிட்டிருக்கும் விளையாட்டு வீரர்களின் படங்களை எல்லாம் வெளிச்சுவரில் ஒட்டியிருப்பார்கள். லைப்ரரி உள்ளே இருக்கும் எல்லா பிரதிகளிலும் உத்த்ரவாதமாக நடுப்பக்கப் படங்கள் இருக்காது. அதுதவிர ரெஃப்ரென்ஸ் பகுதியில் என்று தடிதடியாக புத்தகங்கள் வைத்திருப்பார்கள். இருப்பதிலேயே பெரிய புத்தகத்தை வைத்து ஏதோ முக்கியமான குறிப்புகள் எடுப்பது போல ஸீன் எல்லாம் போட்டுப் பார்த்தும் எந்தப் பெண்ணும் வந்து பேனா கூடக் கடன் கேட்கவில்லை.

பள்ளி விடுமுறைகளில் மாமா வீட்டிலிருந்து மூட்டை மூட்டையாக புத்தகங்களை கட்டி எடுத்துக் கொண்டு போய் நாள் முழுவதும் விடாமல் படிப்பது ஒரு ‘விடாப்’ பழக்கம். அதுவும் சாண்டில்யனின் ஜலதீபத்தைப் படித்தால், தொடந்து ராஜதிலகம், ராஜமுத்திரை, கடல்புறா, யவனராணி, விஜயமகாதேவி என்று வரிசையாகப் படிக்க வேண்டும் என்ற பழக்கம். அதிலும் யவனராணி மொத்த அத்தியாயங்களும் ஒரே புத்தகமாக பைண்ட் செய்யப்பட்டதால் அதை ஜாக்கிரதையாக கையாண்டு படிக்க வேண்டியிருக்கும். அடுத்து சுஜாதாவின் மூன்று நிமிஷம் கணேஷ், பாதி ராஜ்யம், நைலான் கயிறு, ஏறக்குறைய சொர்க்கம்... தொடர்ந்து பாலகுமாரனின் தாயுமானவன், கரையோர முதலைகள், கண்மணித் தாமரை, கல்கியின் பொன்னியின் செல்வன், தேவனின் சாம்பு (கோபுலுவின் படங்களுடன்) இன்னபிற... இப்படி கோடை விடுமுறை முழுவதும் புத்தகங்கள் புத்தகங்கள்தான்.

தாத்தா வீட்டில் அவ்வளவு பெரிய கூடத்திற்கு ஒரே ஒரு நாற்பது வாட்ஸ் பல்ப்தான் எரியவிடுவார். ட்யூப்லைட் போட்டால் மின்சாரக் கட்டணம் அதி்கமாகி விடும் என்பதனால் அவ்வளவு சிக்கனமாம். அந்த தம்மாத்தூண்டு வெளிச்சதில் பைண்ட் செய்யப்பட்ட பழைய புத்தகங்களின் மக்கிப் போன தாளில் உற்று உற்றுப் படித்தும் இன்னமும் கண்ணாடி அணிய தேவையில்லாமல் இருப்பது ஒரு ஆச்சர்யம்தான். தாத்தா மட்டும் தண்டி தண்டியாக இருக்கும் ஆங்கில ராமாயணப் புத்தகத்தை படிக்க பெரிய ட்யூப் லைட் போட்டுக் கொள்வார்.

அழையா விருந்தாளியாக ரூபவாஹினியும், தூர்தர்ஷனும், சன் டீவியும் வந்து வீட்டுக் கூடத்தை ஆக்கிரமிக்கும் வரை வீடே நூலகம் போல்தானிருக்கும். மளிகைக் கடை பொட்டல காகிதங்களில் உள்ள துணுக்குகளைக் கூட விடாமல் படித்துக் கொண்டிருப்போம். பின்னர் திடீரென்று ஆங்கில நாவல்கள் பக்கம் ஆர்வம் எழுந்தது. ஜெஃப்ரி ஆர்ச்சரின் கேன் & அபெல்-ல் ஆரம்பித்து ஜான் க்ரிஷெம், ஜேகே ரௌலிங், ஸிட்னி ஷெல்டன், மைக்கேல் க்ரைடன் என்று பல நாவல்கள் சோறு தண்ணியை மறக்கடித்தன. நடுவே கொஞ்சம் மில்ஸ் & பூன் வகையறாக்கள் படித்து இன்புற்றிருந்தது தனிக் கதை. அதே போல் பள்ளியில் எந்தப் பரிசு வாங்கினாலும் அது பெரும்பாலும் புத்தகங்களாகவே இருந்து வந்திருக்கிறது. அப்படி அண்ணனுக்கு கிடைத்த ஒரு புத்தகம் எல் சேஷாத்ரியின் ‘தி ட்ராஜிக் ஸ்டோரி ஆஃப் பார்டிஷன்’. வரலாற்றில் இருந்த ஆர்வத்தினால் மிகவும் சுவையாகவே இருந்தது. தினமணிக் கதிரிலி ரகமியும் சில அரிய தொடர்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பொழுது.

பிறகு வேலைத் தேடும் படலத்தில் கொஞ்சம் புத்தகங்களை மறந்திருந்தது உண்மைதான். அவ்வப்போது லாட்டரி டிக்கட்டில் பரிசு விழுவது போல் சில அறை நண்பர்கள் அருமையான புத்தகங்களை விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் தேர்ட் ரீய்ச், ஷெர்லக் ஹோம்ஸ், பெட்ரண்ட் ரஸ்ஸல், இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு, ஆர்கே லக்ஷ்மண், குஷ்வந்த் சிங், தி ஜாவின் சிறுகதைகள் இப்படி சில. முதல்முறையாக பெங்களூரிலிருந்து மதுரைக்கு திரும்பும்போது பை நிறைய புத்தகங்கள்தான் இருந்தன. வீடு வீடாக மாற நேர்ந்ததில் பல புத்தகங்களை பாதுகாக்க முடியாமல் போன வருத்தத்தில் புத்தகம் வாங்குவதில் நிறைய சுணக்கம் ஏற்பட்டது. தவிரவும் இணையத்தில் நிறைய புத்தகங்கள் கிடைக்க ஆரம்பித்த காலம் அது. திண்ணை போன்ற இணையப் பத்திரிகைகள் சுவாரசியமான பல தொடர்களையும் அளித்ததினால் காகித புத்தகங்களை அவ்வளவாக தேடியதில்லை.

அமெரிக்கா வந்த பொழுது மிக சொற்பமான புத்தகங்களைத்தான் கொண்டு வந்தேன். பார்ன்ஸ் & நோபிள்ஸ் போய் ஒரு காபியை வாங்கி உறிஞ்சிக்கொண்டே கைக்கு கிடைத்த புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்துவிட்டு பேசாமல் வீட்டுக்கு வருவதும் சௌகரியமாகத்தான் இருந்தது. சமீபத்தில் சாண்டா கிளாரா நூலகம் போனபோதுதான் அவதானித்தேன். புறச் சூழல் அமைதியாக இருந்தாலும் பலரும் தங்களது ஐபாட், லாப்டாப் சகிதமாக வந்து தங்கள் இஷ்டத்துக்கு வேண்டிய சத்தங்களை ஹெட்போன் அணிந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். சத்தமில்லாமல் பேசுவதற்கு வசதியாக மெசஞ்சர்கள் வேறு. ஆகா... இதுவல்லவா பூலோக சொர்க்கம்.

தேடி அலசி சுஜாதாவின் மத்யமர் தொகுதியும், உள்ளம் துறந்தவன் என்ற இணைய நாவலும் கூடவே அசோகமித்திரனின் 18வது அட்சக் கோடு-ம் எடுத்து வந்தேன். அசோகமித்திரன் இன்னமும் படிக்கவில்லை. மத்யமர் கதைகளை கல்கியில் தொடராக வந்தபோது படித்திருக்கிறேன். தொகுப்பாக வெளியிட்டவர்கள் கூடவே வாசகர் கடிதங்களையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். இது ஒருவகையில் பின்னூட்டங்களோடு கூடிய பதிவுகளைப் படிப்பது போல இருந்தது. சுஜாதா நேரடியாக பதிலளிக்கவில்லை என்றாலும் கதைகள் வழியாக அவ்வப்போது பதிலளித்துக் கொண்டிருந்தார் என்று புரிந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக ஒரு கதையில் தனது பெண் நடிகையாக வேண்டும் என்று ஆசைப்படும் தாய் ஒரு திரைப்பட இயக்குநரிடம் தன்னை இழக்கிறாள். உடன் வந்த கடிதங்கள் பலவற்றிலும் மத்தியதரக் குடும்பங்களின் மானம் காத்தலைப் பற்றி அதீத வியாக்கியானங்கள். ஏதடா வம்பு என்பது போல அடுத்து வந்த கதைகளில் பொலிடிக்கலி சரியாக எழுதி விடுகிறார். இந்த தொகுப்பிலிருந்ததைவிட சிறப்பான கதைகளை அவர் எழுத்தில் ஏற்கெனவே படித்திருக்கிறேன். தமிழில் சிறுகதை வடிவத்தை சிரத்தையாக அமைத்ததில் சுஜாதாவிற்கு முக்கிய பங்கு உண்டு. ‘மத்யமர்’ என்ற அந்த தலைப்பை எண்ணியே பலமுறை வியந்திருக்கிறேன்.

‘உள்ளம் துறந்தவன்’ அம்பல இணைய தளத்தில் தொடராக வெளிவந்ததாம். நான் படித்ததில்லை. அம்பலம் கட்டணதளமாக இருந்ததும் ஒரு காரணம். அதே காலத்தில் திண்ணை, காலச்சுவடு, ஆனந்தவிகடன், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இண்டியா எல்லாம் இலவசமாகவே இணையத்தில் இருந்ததினால் கட்டண தளத்திற்கு போகவேண்டிய அவசியம் எழவில்லை.

சுஜாதா பெரும்பாலும் தொடர்கதைகளை அதிகம் மெனக்கெடாமல் அநாயாசமாகவே எழுதிச் சென்றிருக்கிறார். இந்தத் தொடரில் ஒரு மர்ம முடிச்சை வைத்துக் கொண்டு மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பின்புலமாக வைத்துக் கொண்டு காதல், துரோகம், ஏழ்மை, பங்கு வர்த்தகம் போன்றவற்றைப் பின்னி கதை செய்திருக்கிறார். இதயமாற்று சிகிச்சையைப் பற்றி பல சுவாரசியமான தகவல்களை ஆங்காங்கே தூவி வைத்திருக்கிறார். புத்தகவடிவில் கூட சிற்சில தகவல் பிழைகள் காணப்பட்டன. ஓரிடத்தில் நாகரத்தினம் நாகலிங்கமாக இருக்க, மினர்வா ஆஸ்பத்திரி ஆரமத்தில் நெப்ட்யூனாக வருகிறது. வீராணம் குழாயில் வசிப்பவர்கள் டிவி எல்லாமா வைத்திருப்பார்கள்? அத்தியாயங்களின் முடிவில் வலிந்து புகுத்திய கொக்கிகளோடு உணர்ச்சி குவியலாக பாத்திரங்கள் வருகின்றன. சட் சட்டென மாறும் நிகழ்ச்சிகள் சில சமயம் டிவி மெகா தொடர்கள் போல் இந்தக் கதையும் பாதியில் வேறு பாதைக்கு திரும்பி விடுகிறது. திட்டமிட்டு செய்தாரா இல்லை என்று சொல்ல முடியவில்லை. சுஜாதாவின் நைலான் கயிறு மீண்டும் படித்து மனதை ஆற்றிக் கொள்ள வேண்டும்.

9 மறுமொழிகள்:

நட்புடன் ஜமால் said...

லைப்ரரி தான் எனக்கும் மிகவும் பிடித்த இடம்.

சிங்கைக்கு வேலைக்கு வந்து விஸா கிடைத்தவுடன் முதல் வேலையே லைப்ரரி போய் பதிவு செய்து கொண்டது தான்.

இருப்பினும் படிப்பதற்கு நமக்கு ட்ரெயின் அல்லது பஸ் தான் நல்ல இடம், வெகு விரைவாக படிக்க இயலும்.

சுரேஷ் கண்ணன் said...

//லைப்ரரி விட்டு வெளியேற்றி விடுவார்.//

பொதுவாக நூலகர்கள் சிடுமூஞ்சிக்காரர்களாகவும் உற்சாகத்துடன் வருபவர்களை தடை செய்கிறவர்களாகவுமே இருக்கிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.

வண்ணத்துபூச்சியார் said...

அருமையான பதிவு.

http://mynandavanam.blogspot.com/search/label/Popcorn%201

இதையும் பார்க்கவும்.

வண்ணத்துபூச்சியார் said...

ஆமாம் சுரேஷ் கண்ணன். சென்ற வாரம் கன்னிமாராவில் எனக்கு இதே நிலைதான்.

Sridhar Narayanan said...

வாங்க ஜமால்!

ஆமாம். நான் ட்ரெட்மில்லில் நடந்து கொண்டே படிப்பதும் உண்டு :))

வாங்க சுரேஷ்!

நூல்களை சரியாக கையாலாகத காட்டுமிராண்டிகள் என்று நம்மைப் பற்றி நினைத்துக் கொள்வதால் அவர்கள் சிடுமூஞ்சிகளாக இருக்கிறார்களோ என்னவோ. அதே போல் நூலகத்தில் பல புத்தகங்களில் கடைசி பக்கத்தை கிழித்தோ, அல்லது பக்கங்களில் கிறுக்கியோ வைக்கிறார்கள். அதுவும் லைப்ரரியனுக்கு பெரிய தலைவலிதான். :)

வாங்க வண்ணத்துபூச்சியாரே!

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

கோபிநாத் said...

நல்ல கொசுவத்தி ;))

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Sridhar Narayanan said...

வாங்க கோபிநாத்! :))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மிக்க நன்றி செய்திவளையம்.