August 18, 2009

பார்த்ததில் பிடித்தது - 3

பழைய பார்த்ததில் பிடித்தது பட்டியல்

Benhur - The tale of the Christ
இந்தப் படத்தைப் பற்றி எழுதுவது என்பது பூக்கடைக்கு விளம்பரம் செய்வது போல்தான். பலரும் பலவகையிலும் ஆய்ந்து தோய்ந்து விவரித்தப் படம். 1959-ல் பதினொன்று ஆஸ்கர்களை அள்ளிச் சென்றது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்த திரைப்படத்திற்கு நிகராக ஆஸ்கர் அவார்டுகளை அள்ளிச்சென்ற ஒரே படம் டைட்டானிக் மட்டுமே. Danny Boyle -ன் Slumdog Millionaire எட்டு ஆஸ்கர் விருதுகளை வென்றது என்று சொல்லிக் கொண்டாலும் ஏனோ பென்ஹர், டைட்டானிக் வரிசையில் அது வருமா என்று எனக்கு உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. இந்திய நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அதிகமாக பங்காற்றினார்கள் என்பதால் நெஞ்சத்திற்கு கொஞ்சம் நெருக்கமானது என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

பென்ஹரை இதுவரை பார்க்கவில்லையென்றால் அதன் பிரும்மாண்டத்திற்க்காகவது ஒருமுறை பார்த்துவிடுங்கள். புளு மேட், ரெட் ஒன், அகேலா கிரேன், உடனடி எடிட்டிங், கிராஃபிக்ஸ் என்று பல தொழில்நுட்ப உத்திகள் கொண்டு, நமது கண் முன்னே இன்று படைக்கப்படும் கனவுலகத்தை 50 வருடங்களுக்கு முன்பே பெரும்பாலும் மனித உழைப்பினாலேயே செய்து காட்டியிருக்கிறார்கள். ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதாப் போத்தன் சொன்னார் ஆர்ட் டைரக்‌ஷன் எனப்படும் சினிமாவின் கலை சிருஷ்டிகளின் பொற்காலம் நேற்றையது (Yesteryears). அதற்கு பென்ஹர் ஒருச் சான்று.

ஜெருசலேமின் குறுகிய வீதிகளில் நடைபெறும் படை அணிவகுப்பாகட்டும், ரோம் நகரத்தின் சர்க்கஸில் நடக்கும் பிரம்மாண்ட ரதப் போட்டி ஆகட்டும் எள்ளளவும் கூடாமல் குறையாமல் யதார்தமாக படம்பிடிக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்தின் தொழில்நுட்பத்தை தவிர என்னைக் கவர்ந்த இதர அம்சங்கள்:

- அன்றைய ஜெருசலேமில் அரேபியர்களும், யூதர்களும் ஒன்றாக ரோமானியர்களை எதிர்த்து நிற்கிறார்கள். அரேபியரான இல்தெரிம் யூதரான ஜூடா பென்ஹரை ரதப் போட்டியில் தன்னுடைய ரதத்திற்கு சாரதியாக இருக்க வேண்டுகிறார். டேவிட்டின் நட்சத்திரத்தை ஜூடாவிற்கு அணிவித்து, இந்த மண்ணின் பெருமையை ரோமானியர்களை உணர வைக்க வேண்டுமென்று உணர்ச்சி பொங்க கூறுகிறான். யூதரான யேசு, கிறிஸ்துவாக அறியப்படும் ஆரம்பக் காலத்து ஜெருசலேமைப் பற்றியும் அந்த மண்ணிலிருந்த வெவ்வேறு இனங்களைப் பற்றிய நல்லதொரு ஆவணமாக இந்தப் படம் இருக்கிறது என்று சொல்லலாம்.

- மெஸ்ஸையாகவாக வழிபடும் யேசுவின்பால் யூதர்களுக்கு ஏற்படும் ஈர்ப்பை இயல்பாக காட்டுகிறது. எஸ்தர் கண்கள் விரிய ஜூடாவிடம் யேசுவைப் பற்றி விவரிக்கும் காட்சிகள் நல்ல உதாரணம். யேசுவின் அற்புதங்கள் பேசப்படுகின்றன தவிர, யதார்த்ததை மீறிய காட்சியாக காட்டப்படவில்லை - இறுதிக் காட்சியைத் தவிர. ஆனால் அதற்கும் ஒரு உள்ளார்ந்த விளக்கம் படத்தில் சொல்லப்பட்டது போல் இருந்தது. அதைப்பற்றி அடுத்த பத்தியில் விரிவாக.

- தொழுநோய் எவ்வளவு கொடியதானதாக இருந்திருக்கிறது என்பதற்கு அந்தக் காலகட்டத்தில் நிறைய கதைகள் உண்டு. ஜூடா பென்ஹரின் பால்ய நண்பனும் பின்னாள் எதிரியுமான மிஸ்ஸேலாவினால் சிறையில் அடைக்கப்படும் ஜூடாவின் தாய் மரியமும், தங்கை தெரசாவும் தொழுநோயால் பீடிக்கப்படுகிறார்கள். இறுதிக் காட்சியில் யேசு சிலுவையில் அறையப்படும்போது அவர்கள் சொஸ்தமாகிறார்கள். தொழுநோயின் அவலமாக படத்தில் காண்பிக்கப்படுவது விகாரமடைந்த உடலை அல்ல. தொழுநோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக பள்ளதாக்கிற்கு துரத்தும் விகாரமான சமூகமாக காண்பிக்கிறார்கள். அந்த இருண்ட பள்ளதாக்கில் இருக்கும் தொழுநோயாளிகளுக்கு உணவைக் கூட மலை மேலிருந்து கயிறு கட்டி தட்டில் வைத்து அனுப்புகிறார்கள். வாழ்வின் மேல் சுத்தமாக நம்பிக்கையற்றுப் போகும் நிலையில் உடலை விட மனம் அதிவேகமாக நொய்ந்து உள்ளுக்குள்ளேயே செத்துப் போகிறார்கள் அந்த நோயாளிகள். ஜூடாவின் தங்கை ஒரு சாக்கு மூடிய சின்ன படுக்கையறையில் அடைந்து கிடக்கிறாள். யேசு சிலுவையில் அறையப்படும்போது எளியோரின் துயரங்களை தான் சுமந்து செல்வதாக சொல்கிறார். அது மரியமுக்கும், தெரசாவிற்கும் மிகவும் நம்பிக்கையளிக்கிறது. அதன் தொடர்ச்சியாக மின்னல் ஒளியில் அவர்கள் ஒருவரையொருவர் நன்றாக பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களது விகாரம் மறைந்து அவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அந்த நம்பிக்கைதான் யேசு அவர்களுக்கு தந்த மருந்தாகவும் கொள்ளலாம்.

- அரேபிய குதிரைகளுடன் இல்தெரீமும், பென்ஹரும் உரையாடும் காட்சிகள் கவிதை. எங்கிருந்து பிடித்தார்கள் இப்படி கொள்ளை அழகான வெள்ளைக் குதிரைகளை? ரதத்தை ஓட்டி குதிரைகளுக்கு பயிற்சி கொடுக்கும் காட்சி ஒன்று வருகிறது. தாறுமாறாக ஓடும் ரதத்தைத் குதிரையில் துரத்தும் பயிற்சியாளர், ரதத்தில் தாவியேறி லகானை கையில் பிடித்தவுடன் குதிரைகள் சட்டென்று அடங்கி வேகம் குறைந்து நின்றுவிடுகின்றன. ஒரே ஷாட்டில் வெட்டி ஒட்டாமல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சி அது.

- இறுதிப் போட்டியில் மிஸ்ஸேலா ரதத்திலிருந்து கீழே விழுந்து குதிரைகளின் காலில் இடறி, புரண்டு, மிதிபட்டு, உதைபட்டு, உருண்டு... அப்ப்ப்ப்பா எவ்வளவு நேரம். உறையவைக்கும் அந்தக் காட்சியை எடுத்த ஸ்டண்ட் டைரக்டர் யாகிமா கானட். அவருடைய மகன் அந்த காட்சியில் இறந்து விட்டதாக புரளியெல்லாம் கிளம்பியது பினனாளில்.

- Galley என்று சொல்லப்படும் பாய்மரக்கப்பலில் அடிமையாக ஜூடா மூன்று ஆண்டுகள் இருக்கிறான். மாசிடோனிய கடற்க்கொள்ளையர்களை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளில் நம்மை உறைய வைக்கின்றன. கப்பல் தாக்குதலுக்குள்ளானவுடன் அடிமைகளை விலங்கிட்டு விடுகிறார்கள். மூழ்கும் கப்பலிலிருந்து அந்த அடிமைகள் தப்பிக்க முயல்வதும், சிலர் கால், கைகளை வெட்டிக் கொண்டு தப்பிப்பதும்.. அப்பப்பா. ஜூடா பென்ஹரை விலங்கிட வேண்டாம் என்று படைத்தளபதி க்விண்டஸ் அர்ரியஸ் சொல்லிவிட ஜூடா தன்னால் இயன்றவரை அடிமைகளை காப்பாற்றுகிறான். கூடவே அர்ரியஸையும் காப்பாற்றி அவருடைய நன்மதிப்பைப் பெற்று ரோம் நகரத்திற்கு கௌரவமாக கொண்டு செல்லப்படுகிறான்.

- Casting என்று சொல்லப்படும் நடிகர் தேர்வு அடுத்த சிறப்பம்சம் என்று சொல்லலாம். மிஸ்ஸேலாவிடம் காணப்படும் தீவிரமும், ஜூடாவிடம் தெரியும் ஒரு வெகுளித்தனம் கலந்த வீரமும், இல்தரீமிடம் தெரியும் ஒரு வியாபார குயுக்தியும், பழுத்த கிழமாக சீஸரிடம் கம்பீரமும் கதைக்கு பெரும் பலம். இல்தெரீமாக வரும் Hugh Griffith கனகச்சிதமாக செய்திருந்தார்.

இந்தப் படத்தை நான் பார்க்கும்போது மனதில் அதிகம் வந்து போனது மெல் கிப்ஸனின் The Passion of the Christ யேசு சிலுவையை சுமந்து செல்லும்போது ஜூடா பென்ஹர் அவருக்கு தண்ணீர் தர முயலும் காட்சி அந்தப் படத்திலும் இடம் பெற்றிருக்கும். ஜெருசலேம் மக்கள் யேசுவின் சொற்பொழிவுகளால் கவரப்பட்டு கிறிஸ்துவை விசுவாசித்து கிறிஸ்துவர்களாக மாறும் காலகட்டம் அது. பல நுட்பமான வரலாற்று தகவல்களை பதிந்து, பார்வைக்கும் விருந்தாக இருக்கக் கூடிய மிகச் சிறந்தப் படம்.

பென்ஹருக்கு இணக்கமாக ஒரு குறும்படம் கீழே. ரோமானியர்களுக்கு பதிலாக ஜெர்மானிய நாஜிகளைக் காட்டுகிறார்கள்.



துக்கடாவாக சில ஹிட்ச்காக் டிராமாக்கள் பார்த்தேன். சில கதைகள் ஏற்கெனவே பழக்கப்பட்ட மாதிரி தெரிந்தது. அதன் குறிப்புகள் சில:

Hitchcock Presents

The case of Mr. Pelham - - சுஜாதாவின் நாவலான ‘நில்லுங்கள் ராஜாவே’ ஞாபகப்படுத்தியது. தன்னை மாதிரியே இன்னொருவன் இருக்கிறான், அவன் தன் குடும்பத்தை, வேலையை அபகரித்துவிட்டான் என்பது போன்ற கதை.

The Man Who Knew Too much - ’மூன்று நிமிஷம் கணேஷ்’ நாவலில் வரும் யக்ஷகானம் நினைவிருக்கிறதா? ’நிமிஷா நிமிஷா நிமிஷா’ என்ற வசனம் வரும்போது வெடிகுண்டு வெடிக்குமாறு செட்டப் செய்திருப்பார்கள். ஹிட்ச்காக்கில் ஒரு குறிப்பிட்ட ட்ரம்ஸ் பீட் வரும்போது துப்பாக்கியால் சுட்டுவிடுவார்கள். சத்தம் கேட்காமல் இருக்க. நடுவில் காணாமல் போன குழந்தையைக் கண்டுபிடிக்க பியானோ வாசித்துக் கொண்டே அம்மா பாடுவாள். முந்தைய காட்சிகளில் அம்மா அதேப் பாடலைப் பாட கூடவே பையன் சீட்டியடித்து விளையாடுவதை காட்டியிருப்பார்கள். இம்முறை கடத்திக் காவலில் வைக்கப்பட்ட பையன் அம்மாவின் பாடலுக்கு பதிலாக சீட்டியடிக்க பையனைக் கண்டுபிடித்துவிடுவார்களாம். கைதி கண்ணாயிரம் தொடங்கி, ப்ரியா வரை நாம் இந்த லாஜிக்கை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தோம் அல்லவா.

The Portrait of Jocelyn - சிவாஜியின் ’புதிய பறவை’ இதே கதைதான்.

2 மறுமொழிகள்:

ambi said...

//தாறுமாறாக ஓடும் ரதத்தைத் குதிரையில் துரத்தும் பயிற்சியாளர், ரதத்தில் தாவியேறி லகானை கையில் பிடித்தவுடன் குதிரைகள் சட்டென்று அடங்கி வேகம் குறைந்து நின்றுவிடுகின்றன. //

இதையே தான் தேவிகாவை காப்பாத்த சிவாஜி சார் கர்ணன் படத்துல மலை மேலே இருந்து ஜம்ப் பண்ணி ரத்துல குதிச்சு லகானை பிடிச்சு குதிரையை நிப்பாட்டுவாரு. :)

கர்ணன் எந்த வருஷம் வந்தது, இந்த படம் எந்த வருஷம்?னு கம்பேர் பண்ணினா தெரியும் சங்கதி. :))

நம்மாட்களுக்கு எப்பவுமே வெள்ளைகாரன் சொன்னது தான் வேதவாக்கா தெரியும். பொதுவா சொன்னேன், நீங்க ஒன்னும் பீல் பண்ணாதீங்க. :p

Sridhar Narayanan said...

வாங்க தல!

//இதையே தான் தேவிகாவை காப்பாத்த சிவாஜி சார் கர்ணன் படத்துல மலை மேலே இருந்து ஜம்ப் பண்ணி ரத்துல குதிச்சு லகானை பிடிச்சு குதிரையை நிப்பாட்டுவாரு. :)//

:))

நம்ம கேப்டனோ, இல்ல அக்கட பூமி பாலையாவோ செய்யற ஸ்டண்டு பத்தியெல்லாம் கூட ஆவணப் படுத்திரனும்னு திட்டம் இருக்கு. நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிடறீங்களா?