August 16, 2009

மேற்கிலிருந்து கிழக்கே - 3

மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6

முதல் நாள் - 25 ஜூலை 2009 - சனிக்கிழமை

ஏதோ ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்தக் கதை. ‘இந்த சாலை எங்கேப் போகிறது?’ என்று அரசன் கேட்க, வழிபோக்கன் சொல்கிறான். ‘இந்தச் சாலை எங்கேயும் போகவில்லை. நீதான் சாலை வழியே போய்க் கொண்டிருக்கிறாய்’. இதையே அப்படியே ஒரு ஜென் கதையாக மாற்றி குரு, சிஷ்யன் என்றெல்லாம் சேர்த்து ஓஷோ சொன்னதாக நினைத்துக் கொண்டால் இந்த கட்டுரைக்கு ஒரு தனி மதிப்பு வந்துவிடுகிறது. உண்மை அதுதான். சாலைகளுக்கு வரலாறு, பரம்பரை எல்லாம் இருக்கிறது. இந்த முழுப் பயணத்திலும் நான் பெரும்பாலும் சென்றது ஒரு சாலை வழியாகத்தான் I - 80. மேற்கே சான் ஃப்ராண்ஸிஸ்கோவிலிருந்து தொடங்கி கிழக்கே நியுஜெர்சி வரை சென்று முடிகிறது. கிட்டத்தட்ட இந்தச் சாலையை நான் முழுவதுமாக கடந்திருக்கிறேன். சோழ அரசர்கள் பாணியில் ‘ஐ எண்பது கொண்ட ஐக்கியவான்’ என்று ஏதாவது பட்டம் போட்டுக் கொள்ளலாம்.

காலை 6 மணிக்கு புறப்பட வேண்டும் என்று முடிவெடுத்து வழக்கம் போல் தாமதமாக 7 மணிக்கு புறப்பட்டேன். I 680, I 880 என்று கொஞ்சம் சுற்றிவிட்டு I 80 -ல் ஏறியாகிவிட்டது. முடிந்தவரை பயணித்துக் கொண்டே இருப்பதுதான் திட்டம். ஆங்காங்கே வயிற்றுப் பசிக்காகவும், வண்டிப் பசிக்காகவும் re-filling செய்ய மட்டுமே நிறுத்த வேண்டியது. கோடைப் பருவத்தில் இம்மாதிரி பயணம் செய்வது இலகுவானது. மற்றப் பருவக் காலங்களில் பயணத்தடைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

கலிஃபோர்னியா மாநிலம் பள்ளதாக்கிற்கும் பாலைவனத்திற்கும் இடையில் இருக்கிறதென்றால் நெவடா மாநிலம் சியர்ரா-நெவடா மலைத்தொடர்களை ஒட்டி இருக்கின்றது. போகும் வழியில் புதுப்புது வடிவங்களில் குன்றுகள், மலைகள் நிறையப் பார்க்கலாம். மலை முழுவதும் காய்ந்த புற்கள் படர்ந்து வைக்கோல் நிறத்தில் போர்வை போர்த்தியபடி இருக்கும். வசந்த காலத்தில் இதே புற்கள் பசுமையாக இருக்கும்போது மலையின் நிறமே மாறிவிடும் என்று ஒரு நண்பர் சொல்லியிருந்தார். வேறு சில மலைகளில் ஆங்காங்கே வட்டப் புள்ளிகள் போல புதர்கள் கிளைத்திருக்க, ‘மாம்பழக் கலரிலே புட்டாப் போட்ட, கோபுர அடுக்கு பார்டர் இருக்கிற’ பட்டுப் புடவை டிஸைன் எல்லாம் ஞாபகத்தில் வந்தது. ஆதிகால மனிதனுக்கு முதல் உறைவிடமாக இருந்தது மலைக் குகையும், அடர்ந்த காடுகளும்தான். நமது முன்னோர்களை விட்டு நாம் வெகுதூரம் விலகி வந்துவிட்டோம் என்று தெரிகிறது.

கிட்டத்தட்ட நான்கரை மணி நேரத்தில் நெவடாவின் எல்லைக்குள் நுழைந்தாகிவிட்டது. அதிக அளவில் வெள்ளிச் சுரங்கங்கள் இருப்பதால் ’வெள்ளி பூமி’ என்று சொல்கிறார்கள். நான் சில நிலக்கரி சுரங்கங்களைத்தான் வழியில் கண்டேன். அதைவிட பிரபலமானது சூதாட்ட விடுதிகள்தான். கேளிக்கைகளில் இந்திரபுரியாகவும், சூதாட்டத்தில் காசை இழக்கும் தந்திரபுரியாகவும் இருக்கும் Reno வை கடந்து யுடா (Utah) மாநிலத்தில் பிரவேசித்தேன்.

யுடா மாநிலம் மார்மானியர்களின் நிலம். இவர்களின் வரலாறு சுவாரசியமானது. மார்மானியர்களின் தலைமயகம் யுடாவின் தலைநகரமான உப்பேரியில் (Salt Lake City) இருக்கிறது. அங்குதான் முதல் நாளிரவு தங்க திட்டமிட்டிருந்தேன். மார்மானியர்கள் கிறிஸ்துவ மதத்திற்கும் அதன் மூலமான யூத மதத்திற்குமிடையே தங்களுக்கு என்று ஒரு மரபை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். பெரும் எதிர்ப்புக்கிடயே இல்லினாய் மாநிலத்திலிருந்து யுடாவிற்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டு துவக்கம் வரை மார்மனியர்கள் மத்தியில் பலதார மணம் என்பது ஒரு புனித மரபாக அங்கீகரிப்பட்டு வந்திருக்கிறது.

நெரிசல் இல்லாத அமைதியான வீதியில் வண்டி ஓட்டிச் செல்லும்போது எத்தனை மைல் வேகத்தில் போகின்றோம் என்பதில் கருத்தாக இருக்க வேண்டியிருக்கிறது. அதிகபட்ச வேகமாக 75 மைல்கள் குறிப்பிட்டிருந்தால் அதைத்தாண்டாமல் இருப்பது நலம். எங்கிருந்தாவது கொண்டையில் நீல, சிவப்பு விளக்குகள் சுழல போலிஸ் காப்கள் பாய்ந்து வந்து பிடித்துகிறார்கள். Recession நேரத்தில் அபராதங்கள் இரு மடங்காக வசூலிக்கிறார்கள் என்று வேறு பயமுறுத்தி இருந்தார்கள். இந்த அதிகபட்ச வேகத்தை தாண்டாமல் இருப்பதற்கு Cruise Control மிகவும் உதவியாக இருந்தது.

ரயில் பயணங்களில் அமையும் சக பயணிகள் போல சில சமயம் கார் பயணத்திலும் அருமையான பார்ட்னர்கள் கிடைக்கிறார்கள். என்ன ‘எந்தூருக்குப் போறீங்க’ என்றெல்லாம் சம்பாஷனைகள் துவங்க முடியாது. ஒரு குழுவாக சேர்ந்து கொண்டு விர்ரென்று போனால் அதிகபட்ச வேக அளவாவது ஒண்ணாவது. ஒரு செட்டாக பறக்க வேண்டியதுதான். நெவடா முழுவதும் ஒரு செவி டாஹோ (Chevy Tahoe) கூடவே பயணித்தார். பெட்ரோல் நிரப்பும் வேளையில் காணாமல் போய்விட்டார். ஒரு வழியாக 12 மணி நேரம் பயணித்து 750 மைல்கள் கடந்து உப்பேரியில் Baymont Inn என்னும் விடுதியை மாலை 7 மணிக்கு அடைந்தேன். ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் நீங்கள் மார்மானியரா என்று கேட்கும் ஆசையை அடக்கிக் கொண்டு முன்பதிவு செய்திருந்த அறையின் சாவியை வாங்கிக் கொண்டு திரும்பினால் விடுதி கடிகாரம் 8 மணி என்று காண்பிக்கிறது. ஆம். யுடா மாநிலம் வேறு டைம் ஜோன் என்பதால் கலிஃபோர்னியாவில் 7 மணி என்றால் இங்கு 8 மணி. இந்த பண்ணிரெண்டு மணி நேர பிரயாணத்தில் சிறிது சிறிதாக ஒரு மணி நேரத்தை இழந்திருக்கிறேன். ஆயிரக்கணக்கான மைல் வேகத்தில் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும் பாதையில் எங்கோ என்னுடைய ஒரு மணி நேரம் காணாமல் போய்விட்டது.

பேமாண்ட் விடுதி நன்றாகவே இருந்தது. கொஞ்சம் எக்ஸ்பென்ஸிவ் என்றாலும் நல்ல சௌகரியமான உறக்கம். இழந்த ஒரு மணி நேரத்தை மீட்கவாவது மேற்கை நோக்கி பயணம் செய்யும் வாய்ப்பு அடுத்தமுறை கிடைக்க வேண்டும்.

மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6

10 மறுமொழிகள்:

சங்கா said...

கலக்குதுங்கோ! ஐ 5 பெரும்பாலும் பொட்டல் வெளி. ஐ 80 நான் பார்த்தவரை தொடர்ச்சியாக ஊர்களும், மலைத்தொடரும் கூட வரும்! நெவாடாவில் வெறும் மொட்டைப் பாறைதானா?

என்கூட ஒரு மார்மானியர் வேலை பார்த்தார். பலதாரம் இல்லை. ஆனால் வரிசையா அஞ்சு ஜீனியர்ஸ். கடைசியாப் பேசும்போதுகூட பெண்டாட்டி இன்னொன்ணு வேணும்னு அடம்பிடிக்கிறாள்னு சொன்னார்!

nchokkan said...

//இழந்த ஒரு மணி நேரத்தை மீட்கவாவது மேற்கை நோக்கி பயணம் செய்யும் வாய்ப்பு அடுத்தமுறை கிடைக்க வேண்டும்//

அழகு :)

- என். சொக்கன்,
பெங்களூர்.

ambi said...

இந்த பகுதி கொஞ்சம் பரவாயில்லை.

மாமனியர்களை பற்றி இப்படி சிறுகுறிப்பாக வரையாமல் விரிவாக ஒரு பக்க கட்டுரை வரைந்து இருக்கலாம். அதான் நிறைய மேட்டர் (அதாவது விஷயம்) இருக்கே. :))

Sridhar Narayanan said...

வாங்க சங்கா!

I-5 லும் குளிர்காலங்களில் பனிப்பொழிவு இருக்குங்க. ஒரு முறை பனி அதிகமாகி பாதையை மூடிவிட சுற்றி வளைத்துக் கொண்டு போக வேண்டி இருந்தது.

:) ஆமாம். ஒரு வெள்ளைக்கார அங்கிளுக்கு 7 குழந்தைகள்.

வாங்க சொக்கன்! ஒத்துக்கிறேன். நீங்க பதிவைப் படிச்சிட்டுத்தான் வந்திருக்கீங்கன்னு ஒத்துக்கிறேன். :) உங்க ‘அழகு’ கமெண்டுக்கு நன்றிங்கோவ்.

வாங்க அம்பி அண்ணே!

//இந்த பகுதி கொஞ்சம் பரவாயில்லை. //

டாங்க்ஸுங்க. சட்டியிலிருக்கறதுதானே அகப்பையில வரும். :)

//அதான் நிறைய மேட்டர் (அதாவது விஷயம்) இருக்கே. :))//

பாய்ண்டுக்கு வந்திட்டீங்கப் பாருங்க. உங்க நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு அம்பிண்ணா! :)

பெரிய கதையே எழுதலாம் போல. பாப்போம் :))

Boston Bala said...

ரீனோ ஸ்பெல்லிங்கை ஏன் மாற்றி இருக்கிறீர்கள்? ஏதாவது வேண்டுதலா?

---சில சமயம் கார் பயணத்திலும் அருமையான பார்ட்னர்கள் கிடைக்கிறார்கள்---

:) கொஞ்சம் ஓய்ந்தாலும், உசுப்பி, மீண்டும் களத்திற்கழைத்து, அழைத்து செல்பவர்கள். மினியாபொலிசில் இப்படி சென்றபோது முன்பின் அறியாத எங்கள் ஐவரையும், ஐந்து வண்டியில் துரத்தி சீட்டுக் கொடுத்தது தனி சோகம்.

---ரிசப்ஷனில் இருக்கும் பெண்ணிடம் நீங்கள் மார்மானியரா ---

இந்த ஊர்க்காரங்க இந்த மாதிரி கேள்வி கேட்பதில் வஞ்சனையே வைப்பதில்லை.

Sridhar Narayanan said...

வாங்க பாபாஜி!

Reno கூடவே wiki லிங்கும் கொடுத்ததினால கவனிக்காம விட்டுட்டேன். இப்ப திருத்திட்டேன் :) நன்றி.

//மினியாபொலிசில் இப்படி சென்றபோது முன்பின் அறியாத எங்கள் ஐவரையும்//

நமக்கும் ஒரு டிக்கெட் கிடைச்சதுல்ல. அடுத்த பகுதியில அதைப் பத்தியும்... வருது. :)

//இந்த ஊர்க்காரங்க இந்த மாதிரி கேள்வி கேட்பதில் வஞ்சனையே வைப்பதில்லை.//

அது உண்மையே. அவர்களின் சுவாரசியத்திற்கு சமயத்தில் நம்மை ஊறுகாயாக ஆக்கிவிடுவார்கள். :))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

pappu said...

இதனால டைம் லாக் னு ஒரு ப்ரொப்ளம் வரும்னு சொல்றாங்களே! பயாலஜிகல் க்ளாக் டிஸ்டர்ப் ஆகுமா?

Sridhar Narayanan said...

வாங்க பப்பு!

நிச்சயமாக பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் சரியாகும் :)

வெட்டிப்பயல் said...

//ஏதோ ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் படித்தக் கதை. ‘இந்த சாலை எங்கேப் போகிறது?’ என்று அரசன் கேட்க, வழிபோக்கன் சொல்கிறான். ‘இந்தச் சாலை எங்கேயும் போகவில்லை. நீதான் சாலை வழியே போய்க் கொண்டிருக்கிறாய்’. இதையே அப்படியே ஒரு ஜென் கதையாக மாற்றி குரு, சிஷ்யன் என்றெல்லாம் சேர்த்து ஓஷோ சொன்னதாக நினைத்துக் கொண்டால் இந்த கட்டுரைக்கு ஒரு தனி மதிப்பு வந்துவிடுகிறது. //

வந்தார்கள் வென்றார்கள்ல இதை பீர்பால் அக்பரிடம் சொல்வதைப் போல வரும். அதுதான் அவர்களுக்கான அறிமுகம்.

மதுரையம்பதி said...

முதல்ல நான் அமெரிக்கால வேலை பார்த்தது சால்ட் லேக் சிட்டில தான். ரொம்ப இல்லை 4 மாசம்...போதும்-போதுமுன்னு ஆயிடுச்சு... :)