இந்தப் போட்டியில் பங்கேற்ற அநேகமான கதைகளைப் படித்த பொழுது, இணைய சிறுகதைகளுக்கென்று தனி வடிவம் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. போட்டி முடிந்தபின்னால் இதைப் பற்றி விவரமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். நடுவில் ட்விட்டரில் இணைய எழுத்துகள் மேம்போக்கானவையா என்ற விவாதமும் கொஞ்சம் நடந்தது. ப்ளாக் போன்ற ஒரு வடிவத்தில் சிறுகதைகள் எழுதுவதில் நிறைய சௌகரியங்கள் இருக்கின்றன. பின்னூட்டங்களோடு பதிவுகளைப் படிப்பது ஒரு தனி அனுபவம். சந்திரஹாஸ் சௌத்ரியும் அதையேத்தான் சொல்கிறார். இணையம் மூலமாக வாசகர்களுடன் நேரடி கருத்து பரிமாற்றம் ஏற்பட்டதால் என்னுடைய எழுத்து மேலும் வளர்ந்தது என்கிறார் சௌத்ரி. எழுத்தாளனின் எழுத்தில் வாசகனின் பங்களிப்பு எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறது. வாசகனை நோக்கி எழுதப்படுவதுதானே எலலா படைப்புகளும். சமீபத்தில் சுஜாதாவின் ஒரு சிறுகதை தொகுப்பாக ‘மத்யமரை’ வாசித்தபோது ஒவ்வொரு கதைக்கும் முடிவில் வாசகர் கடிதங்களையும் வெளியிட்டிருந்தார்கள். கல்கியில் தொடராக வெளி வந்த போது கதை எழுதப்பட்டதற்கும், வாசகரின் விமர்சனம் சுஜாதாவை அடைந்ததற்கும் இருக்கும் கால இடைவெளி ஓரிரு வாரஙக்ளுக்கு மேலேயே இருந்திருக்கலாம். ஆனாலும் சிலரது கருத்துகள் எழுத்தாளரை பாதித்திருப்பது உணர முடிகிறது. உதாரணமாக ஒரு சிறுகதையில் பெண்ணை சினிமாவில் நடிக்க வைப்பதற்காக அம்மா மிகவும் பிரயாசைப்படுகிறாள். வாய்ப்பு கேட்கப் போகும் இடத்தில் அந்த சினிமா டைரக்டரின் கண் பார்வை அம்மா மேல் விழுகிறது. எல்லா விலையும் கொடுத்து சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்று விடுகிறாள் தாய். தொடர்ந்து வாசகர் கடிதங்களில் பலரும் பொங்கி எழுந்திருப்பது தெரிகிறது. நடுத்தர மக்கள்தான் மானமிக்கவர்கள். சுஜாதா எப்படி அவர்களை இப்படி கீழ்த்தரமாக சித்திரிக்கலாம் என்கிற ரீதியில் சில காட்டமான கடிதங்கள். அதேத் தொடரில் அடுத்ததாக தாய்மையின் தியாகத்தையும் உயர்த்தி காண்பிக்கிற மாதிரி ஒரு கதையை எழுதி விடுகி்றார்.
இணைய வடிவத்தில் உடனடி பின்னூட்டங்கள் நல்லதொரு வசதிதான். ஆனால் பெரும்பாலோருக்கு இரண்டு பக்கங்கள் மேல் படிக்க பொறுமை இருப்பதில்லை. சிறுகதைகள் என்றால் மூன்று பக்கம். தொடர்கதை என்றால் நான்கு அத்தியாயம் என்ற ஃபாஸ்ட்ஃபுட்டாக படிக்க விரும்புவர்கள் அதிகம். ஜெஃப்ரி ஆர்ச்சர் ஒரு சிறுகதைக்கு மூன்று வித்தியாசமான முடிவுகளோடு கொடுத்திருப்பார். கிட்டத்தட்ட இருபது பக்கங்களுக்கு மேலிருக்கும் சிறுகதைதான் அது. இந்தப் போட்டியில் சில கதைகள் அவ்வாறு இலகுவான வாசிப்பிற்கு ஏற்றவாறு இருந்தது. ‘இருள் என்னும் கறுப்புப் போர்வையை கிழித்துக் கொண்டு கிளம்பிய சூரியக் கதிர்கள் அதிகாலை பனியை ஆவியாக்கிக் கொண்டிருக்க, அவள் ‘தப் தப்’என ஓடிக் கொண்டிருந்தாள்’ போன்ற வர்ணனை முகாந்திரங்கள் பெரும்பாலும் இல்லவே இல்லை. இலகுவாக இருந்தாலும் இரசிக்கும்படியாகவே இருந்தன பெரும்பாலான கதைகள்.
வெளியிடுமுன்னரே நண்பர்கள் வெட்டிப்பையல், பினாத்தல் சுரேஷ் போன்றவர்களின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. இதிகாசங்களை வைத்து ஏதாவது எழுதலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்த வேளையில் வெட்டிப்பையல் மகாபாரத பின்னணியில் ஒரு கதை எழுதியிருந்தது ஆச்சர்யமாக இருந்தது. முடிவுகள் வெளியானபிறகு இணையத்தில் நிறைய விவாதங்கள் நடந்தன. கே. ரவிஷங்கர் கூட்டாஞ்சோறு RV போன்றோர் சளைக்காமல் பல பதிவுகளில் பின்னூட்ட விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்தார்கள். முடிவுகள் வந்தவுடன் சுடச்சுட சுமஜ்லா என்ற பதிவர் அலசல் பார்வையை வெளியிட்டிருந்தார்.
இம்மாதிரியான போட்டிகளைத் தொடர்ந்து சிறுகதை வடிவத்தின் மேல் வலைப்பதிவர்களிடையே நல்லதொரு ஆர்வம் ஏற்பட்டிருப்பது தெரிகிறது. இதனைத் தொடர்ந்து புதிய உத்திகளோடும், உள்ளடக்கத்தோடும் நல்ல படைப்புகள் தொடர்ந்து வந்தால் மகிழ்ச்சியே.
தமிழ் வெகுஜனப் பத்திரிகைகளில் வரும் கதைகளில் அதிகமான பரீட்சார்த்த முறைகள் இருப்பதில்லை. சிற்சில உத்தி மாற்றம் இருந்திருக்கிறது. கடிதம் மூலமாக, ஃபோன் உரையாடல் மூலமாக (லசரா ஒரு அநாமதேய பெண்ணின் ஃபோனை வைத்து கதை எழுதியிருப்பார். பெயர் மறந்துவிட்டது) என்று சில கதைகள் உண்டு. ஆனால் இணையத்தில் இதற்கு சாத்தியங்கள் அதிகமென்று நினைக்கிறேன். நான் முதலில் எழுதிய படைப்பு வலைப்பதிவு வடிவத்தை ஒட்டி அமைந்தது. வலைப்பதிவுகள் மூலமாக ஒரு காதல் கதையை சொல்லிப் பார்த்த முயற்சி அது. அதைப் போல் எழுதப்படாத கதையை வைத்து எழுதிய ஒரு கதையும் உண்டு. பின்னூட்டங்கள் மூலமாகவே கதை சொல்லிப் பார்க்கும் ஒரு வடிவத்தை யோசித்துக் கொண்டு இருந்தேன். ஏனோ அது முழுமையடையவில்லை. ட்விட்டரில் ஒரு குட்டி அறிவியல் புனைவை எங்கோ பார்த்ததாக நினைவு. இரண்டே இரண்டு ட்வீட்டுகள்தான்.
முதலில் ஒரு ட்வீட்.
வாவ்! இது நன்றாக வேலை செய்கிறது.
about 2 minutes ago from web
அடுத்ததாக இன்னொரு ட்வீட். இப்பொழுது பழைய ட்வீட்டோடு சேர்த்து இரண்டு ட்வீட்டுகள் நீங்கள் பார்ப்பீர்கள்.
Flex Capacitor தயார். டைம் மெஷினை வெள்ளோட்டம் பார்த்துவிடலாம். 5 நிமிடங்கள் பின்னோக்கி பயணிக்கப் போகிறேன்.
about 1 minute ago from web
------------------------------------------------------
வாவ்! இது நன்றாக வேலை செய்கிறது.
about 6 minutes ago from web
இரண்டையும் சேர்த்துப் படித்தால் ஒரு புன்முறுவல் வருகிறதில்லையா?
10 மறுமொழிகள்:
ஏகப்பட்ட லிங் குடுத்துயிருக்கீங்க.. முடியலலலல!
//வெளியிடுமுன்னரே நண்பர்கள் வெட்டிப்பையல், பினாத்தல் சுரேஷ் போன்றவர்களின் படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு கிட்டியது. //
வெட்டிபயலுக்கும், பினாத்தலாரின் லிங்கை குடுத்து இருப்பதில் ஏதேனும் உள்குத்து, நுண்ணரசியல் இருக்கா? :))
(வந்த வேலை முடிந்தது) :p
வாங்க கலையரசன்!
லிங்குக்கு நடுவுல கொஞ்சம் செய்தியும் இருக்குங்களே. முயற்சிப் பண்ணி படிச்சிருங்க. :) இணைய வடிவத்தைப் பத்தி எழுதும்போது ஹைப்பர் லிங்க் இல்லாமலா எழுத முடியும்? :))
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
வாங்க அம்பிண்ணா!
//வெட்டிபயலுக்கும், பினாத்தலாரின் லிங்கை குடுத்து இருப்பதில் //
அப்படியா? லிங்க் சரியாத்தானே இருக்கு? நல்லாப் பாருய்யா
//(வந்த வேலை முடிந்தது) //
அதெல்லாம் டாமேஜ் கண்ட்ரோல் பண்ணிருவோம்ல :))
உஙக் வருகைக்கும் கருத்துகும் மிக்க நன்றி.
---பின்னூட்டங்கள் மூலமாகவே கதை சொல்லிப் பார்க்கும் ஒரு வடிவத்தை யோசித்துக் கொண்டு இருந்தேன்.---
கதை என்று பகுக்க முடியாவிட்டாலும், இந்த மாதிரி ஒன்றை பெயரிலி எழுதியிருந்தார். இன்னும் இரண்டு இடத்திலாவது இந்த ஃபார்மாட்டை பார்த்த ஞாபகம்.
நான் கூட எழுதியிருக்கிறேன்: Nothing New: August 2005
(அடியில் இருந்து ஆரம்பிக்கவும்)
இந்த கடைசியில குடுத்திருக்குறது சூப்பரப்பு!
நல்லா தொகுத்திருக்கீங்க. ஒரு விதத்தில், இணையத்தில் எழுதும் பாதிபேருக்கு சுஜாதாவின் தாக்கம் லேசாகவேனும் இருக்கத்தான் செய்கிறது இல்லையா?
நல்ல தொகுப்பு.
நானும் எவ்வளவோ யோசித்தும்(?) நாலு வரிகூட வர மாட்டேங்குது, இந்த சிறுகதை. என்ன பண்ணலாம்?
வாங்க பாபாஜி!
//நான் கூட எழுதியிருக்கிறேன்: Nothing New: August 2005//
உங்க கதையையும் படிச்சேன் பாலாஜி. கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கியிருந்தீங்க. ஆனா கதையை என்னால சரியானபடி அர்த்தப்படுத்திக்க முடியல இன்னமும். :) மீண்டும் முயற்சிக்கிறேன்.
பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தலைவரே :)
வாங்க வெங்கிராஜா!
//எழுதும் பாதிபேருக்கு சுஜாதாவின் தாக்கம் //
பாராட்டுக்கு நன்றி! :)
பத்திரிகையிலேயே அப்படி ஒரு கூட்டம் இருந்தது. அது போலத்தான் பாலகுமாரனை ஒட்டி நிறைய பேர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
நாம் வேண்டுமென்றே வேறு யாரையாவது காப்பி அடித்தாலும் கூட ’சுஜாதாதான்’ என்று யாராவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். இணையத்தில் அவர் பிரபலமாக இருப்பதால் கூட இருக்கலாம் :)
உங்க வருகைக்கு மிக்க நன்றி!
வாங்க ஜெய்ஹிந்த்புரம் aka மகபூப் பாளையம்!
//நாலு வரிகூட வர மாட்டேங்குது//
கம்மியா வந்தா நல்லதுதானே. அப்படித்தானே எல்லாரும் விரும்புறாங்க :)
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி பீர்.
அந்த கடைசி ட்விட் கதை நன்றாக வந்திருக்கிறது. :)
நானும் உரையாடல் போட்டிக்கு ஒரு கதை (என் முதல் கதை :) ) எழுதினேன். அதற்கான சுட்டி போட்டி பக்கத்தில் கொடுக்கப்படாததால் (கடைசி நாள் அனுப்பியதால் இருக்கலாம்) அனேகமாக அது வாசிக்கப்படவில்லை. வழமையான சிறுகதை வடிவத்திலிருந்து விலகி முயற்சித்திருந்தேன். படித்துவிட்டு சொல்லவும்.
http://angumingum.wordpress.com/2009/06/30/collage_story/
- சித்தார்த்
வாங்க சித்தார்த்!
கொலாஜ் முறையில் ஒரு கதை. நல்ல உத்தி. அங்கேயே விரிவாக பதிலிடுகிறென்.
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
ட்விட் கதை புன்முறுவலை வரவழைத்து விட்டது. Flexஆ? Fluxஆ?(எனக்கு கொஞ்சம் குழப்பம்!)
Post a Comment