யுவராஜ் சொன்ன கதை - 24 Sep 2009
’கணேஷ் & வசந்த்’ என்று இடது பக்கம் கண்ணாடியில் வர்ண ஸ்டிக்கர்களில் பெரிதாக எழுதியிருக்க வலது பக்கம் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். முதல் நாள் என்பதால் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. மாயா கண்களாலேயே வரவேற்றுவிட்டு ஃபோனில் யாருடனோ தொடர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் ரகுராமனும், செந்திலும் ஏதோ ஆவணங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பரபரப்பில் தெரிந்தது. இன்று அப்பாசாமி கேஸின் ஹியரிங் என்றுச் சொன்ன ஞாபகம். எனக்கு என்று அளிக்கப்பட்ட சின்னக் கூண்டு புதிய கணிணி, குறிப்பு புத்தகம், பேணா பென்சில் என்று எல்லாவித சாமக்கிரியைகளுடன் தயாராகவே இருந்தது. வழக்கறிஞனாகவோ, வழக்குரைஞனாகவோ சட்ட சூத்திரங்களில் ஜிலேபி சுற்றிக் கொண்டு சாதாரணமாக முடிந்து போயிருக்க வேண்டிய எனது முதல்நாள் திடீரென தடம் மாறியது மாயாவின் தொலைபேசி அழைப்பால்.
‘யுவி! ஒரு கிளையண்ட் விசிட் பாத்துடறியா? அஷோக் நகர்ல தேர்டு அவென்யூ ஷேடோஸ் கார்னர்னு ஒரு பங்களா இருக்கு. கிளையண்ட் பேரு அட்ரஸ் இமெயில் அனுப்பியிருக்கேன். ஏதோ அஃபிடவிட் ஃபைல் பண்ணனுமாம். டீடெய்லஸ் கலெக்ட் பண்ணிட்டு வா’
அந்த பங்களாவை கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. ரதன் கங்கோத்ரி சென்னையின் தலை பத்து பணக்காரர்களில் ஒருவர். நந்தனம் சிக்னலில் பெரிய நகைக்கடை வைத்து சினிமா கம்பெனிகளுக்கு லேவாதேவி விட்டுக் கொண்டு இருக்கும் பணம் காய்ச்சி மரம் அவர். வீட்டினுள்ளே ஹாலில் அந்தப் பெண் எதிர்பட்டாள். தேனினும் இனிய தெள்ளியக் குரலில் ’ஐயாம் டாக்டர் சங்கமித்ரா!’ என்றாள்.
‘நான் லாயர் யுவராஜ்’ ஆரம்பத்தில் லாயர்ன்னு அடைமொழி வைத்து சொல்லிக் கொள்வதற்கு கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது.
‘ஓ! வசந்த் வரலையா?’ அவள் குரலில் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தது போல தெரிந்தது. வசந்த்தின் ராசி அப்படி.
’நானும் லாயர்தாங்க. இன்னிக்குத்தான் ஜூனியரா சேந்திருக்கேன்’ சொன்னபிறகு அப்படி சொல்லியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. என் ராசி இப்படி. சமாளிக்கும் விதமாக,
’கிரிமினல் சிவில் எல்லாம் செய்யறோம் மேடம். ப்ராபர்டி லா, சர்வீஸ் லா, டாக்ஸேஷன், இன்ஷூரண்ஸ் இப்படி நிறைய. உங்களுக்கு என்ன பண்ணனும்?’ ஆர்வத்தின் உச்சியில் கேட்டேன்.
‘எனக்கு ஒண்ணும் பண்ண வேண்டாம்’ கத்தரித்தாற்ப் போல் சொன்னாள். எங்கிருந்துதான் இந்த attitude வருகிறதோ பெண்களுக்கு.
‘ஷியாம் கங்கோத்ரி என் தாத்தாதான். லாயர்கிட்ட பேசனும்னு சொன்னார். ஏதோ அர்ஜெண்டா லீகல் கண்சல்டேஷன் பண்ணனுமாம். மருந்து எடுத்துக்க மாட்டேங்கிறார். அதான் கூப்பிட்டேன். பட்...’ சங்கமித்ரா என்னைப் பார்த்த பார்வையில் சுத்தமாக நம்பிக்கையில்லை என்று தெரிந்தது. எனது உள்ளங்கை வியர்த்து வழுக்கிய பையை கையில் பிடித்துக் கொண்டு
‘நோ பிராப்ளம் மேடம். நான் பாத்துக்குறேன்’ என்றேன். முதல் நாள், முதல் கிளையண்ட். சொதப்பாமல் இருக்க வேண்டுமே என்ற பயம் இருந்தது.
‘கொஞ்சம் பேச்சுக் கொடுங்க. நாங்க செடேடிவ்ஸ் போட்டுறோம். ரொம்ப distressல இருக்கார். நியூட்ரிஷியன் இன்பாலண்ஸ்.’
‘ஓ...’
’தாத்தா! தாத்தா... வக்கீல் ஆபிஸிலிருந்து வந்திருக்கார்’
அந்த அறையின் மூலையில் இருந்த சின்னப் படுக்கையில் ஜிப்பா அணிந்து சாய்ந்து அமர்ந்திருந்தவரைப் பார்த்ததும் எனது ஆறாம் வகுப்பு தமிழாசிரியர் சீனுவாசன்தான் ஞாபகம் வந்தார். அவரும் இதே போல்தான் புடைத்த ப்ரஷ் போல நரைத்த மபொசி மீசை வைத்திருப்பார். மருந்துகள் நிரம்பிய பக்கவாட்டு மேஜையொட்டி ஒரு வெள்ளுடை நர்ஸ் நின்று கொண்டு சங்கமித்ராவிற்க்காக காத்துக் கொண்டிருந்தாள். சிவப்பான நீள்வட்ட நக நுனிகளால் அவரைச் சுட்டிக் காட்டி கண்களாலேயே விசாரிக்கச் சொன்னாள் சங்கமித்ரா.
‘ஹலோ சார்! ஹவ் மே ஐ ஹெல்ப் யூ’
எழுபது வயதிற்கு மேல் இருக்கும். வயோதிகத்தினால் சோர்வுற்றிருந்த கண்களால் என்னைப் பார்த்தவர் ’லாயர் வரலையா’ என்றார். அவர் கண்களில் தொற்றிக் கொண்டிருந்த ’இவன் என்ன கூரியர் பையனா?’ போன்ற கேள்விகளை தவிர்த்துவிட்டு, நல்ல அகலமான நோட்புக் புதுப் பேனாவெல்லாம் எடுத்துக் கொண்டு, டிக்டஃபோனைக் இயக்கிக் கொண்டே...
’சொல்லுங்க சார்’ என்று தொடங்கினேன்.
ஆயாசமுடன் கண்களை மூடிக் கொண்டவர் ‘இன்னமும் பதினஞ்சி நாள்தான் இருக்கு. அதுக்குள்ள செய்துடனும் சரியா?’
‘என்ன சார் செய்யனும்?’
சங்கமித்ராவிடம் ’கணேஷ், வசந்த் பத்தில்லாம் நிறையப் படிச்சிருக்கேன். நிறைய சாகசங்கள் செய்திருக்காங்க. ராஜராஜன் கிணறு, யவனிகா...’ என்றார். அவர் என்னை கவனித்தாரா என்று சரியாகத் தெரியவில்லை. தனக்குள்ளேப் பேசிக் கொள்வது போல்தான் பேசிக் கொண்டிருந்தார். வாயில் ஏதோ மெல்லுவதைப் போல, கன்னக் கதுப்புகள் அதிர அதிர தாடையை அசைத்துக் கொண்டிருந்தார்.
‘பீஷ்மர் செத்துப் போகும்போது என்ன சொன்னார் தெரியுமா?’
சங்கமித்ரா கருமமே கண்ணாக இஞ்செக்ஷனைத் தயார்படுத்திக் கொண்டே ‘ஒரே ஒரு ஊசிதான் தாத்தா. நைட் ஃபுல்லா தூங்கவேயில்லையாமே நீங்க. அனு கொஞ்சம் பிடிச்சுக்கமமா’ என்றாள்.
‘இந்த அம்புகள் எதுவும் சிகண்டியோடது இல்லை. இது அர்ஜுனனின் அம்புன்னு சொல்லிட்டே செத்துப் போயிட்டார். ஏன்?’ பிறகு பக்கத்து டேபிளில் இருந்த ஒரு பேப்பர் கத்தையை தொட்டுக் காட்டி ‘எனக்கும் வேற வழி தெரியல. இதை கோர்ட்ல தாக்கல் பண்ணி கெஜட்ல கொடுத்திருங்க. புரசீஜர் சரியாத் தெரியல. வெரி வெரி அர்ஜண்ட்’ என்றார்.
சரிதான். சுலபமான வேலை என்று நினைத்துக் கொண்டே பேப்பரைப் பிரித்தேன். நல்ல தெளிவான ஆங்கிலத்தில் விலாவரியாக எழுதியிருந்தார் ஷியாம் கங்கோத்ரியான நான் ரதன் கங்கோத்ரி என்பவரை எனது மகன் என்னும் ஸ்தானத்திலிருந்து விடுவிக்கின்றேன். எனக்கு வாரிசு என்று யாரும் கிடையாது. பதினைந்து நாளில் தனக்கு முடிவு சம்பவிக்க இருப்பதாகவும், தனது மகனே தன்னைக் கொன்று விட சாத்தியங்கள் இருப்பதாலும் தான் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக விவரித்திருந்தார். கொஞ்சமாக தலை கிறுகிறுப்பது போல் இருந்தது. இது என்னடா வம்பா போய்விட்டது என்று பார்த்தால் அதற்குள் சங்கமித்ரா அவர் புஜத்தில் ஊசியை ஏற்றி விட்டாள். தவறான இடத்தில் தவறான நேரத்தில் வந்த தவறான நபர் நான்தானோ?
‘வெயிட்.. வெயிட்... இது என்ன சார்? எதுவும் வாரிசு உரிமை பிரச்சினையா?’ என்று கேட்டேன்.
‘பீஷ்ம பரம்ப்ரா தெரியுமா? வேற வழியில்லை எனக்கு. ஐ டிஸ்-ஓன் (dis-own) மை சன்.’ தடுமாற்றமாகத்தான் பேசினார்.
ஆட்காட்டி விரலால் நெற்றி ஓரத்தில் வட்டம் போட்டு பெரியவரின் மனநிலையைப் பற்றி கோடிட்டு காண்பித்தாள் சங்கமித்ரா.
‘பாருங்க சார்! எனக்கு சரியாப் புரியல. உங்க பையன் பயலாஜிக்கல் சன்னா? இல்ல தத்து எடுத்திருக்கீங்களா? வாரிசு இல்லைன்னு ஒரு கெஜட் விளம்பரம் கொடுத்திட்டாப் போதுமான்னு தெரியல. கொஞ்சம் ரெஃபர் பண்ணனும். என்னப் பிரச்சினைன்னு டீடெய்ல் சொல்லுங்க.’ கொஞ்சம் தயங்கிவிட்டு ‘எதுக்கு கொலை செஞ்சிடுவாருன்னு எல்லாம் எழுதியிருக்கீங்க?’ பெரிய வில்லங்கமா இருக்கே.
அவர் சுட்டிக் காட்டிய திசையில் மேஜையில் பல வண்ணங்களில் மாத்திரைகள், மருந்துக புட்டிகள், காலி மருந்து ட்யூப்கள் நிறைய இருந்தன. பக்கத்திலேயே ஒரு பைண்ட் செய்யப்பட்ட புத்தகம் ‘பீஷ்ம பரம்ப்ரா’ என்ற தலைப்புடன் இருந்தது. பதிப்பிக்கபடாத இறுதி வடிவ மேனுஸ்க்ரிப்ட் போல் இருந்தது.
‘கங்கோத்ரி வம்சம் பற்றிய அதிகம் அறியப்படாத வரலாறு. என்னுடைய அஞ்சு வருஷ ஆராய்ச்சி அது’ வாயினுள் சற்று பொருந்தாமல் இருந்த பல்செட்டை சரிசெய்து கொண்டேப் பேசினார். சிரமத்தோடு பேசியது போல் இருந்தது.
’சபிக்கப்பட்ட வம்சம். சபிக்கப்பட்ட பீஷ்மர்.’ முனகலாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
‘என்ன பிரச்சினை டாக்டர்? தொடர்பில்லாம பேசறாரே. ஏதேதோ...’ மெதுவாக சங்கமித்ராவின் அருகில் சென்று கேட்டேன். காதின் தொங்கட்டான்கள் ஆட மையமாகத் தலையாட்டினாள்.
‘நியூட்ரிஷியன் இம்பாலண்ஸ். உடம்புல காப்பர் ரொம்ப கம்மியாயிடுச்சு. அதோட distress வேற. Hypocupremiaன்னு நினைக்கிறேன். மினரல் சப்ளிமெண்ட் டயட் எடுத்துக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறார். எதைக் கேட்டாலும் பீஷ்ம பரம்பரை இப்படித்தான் இருக்கும்னு டயலாக்’
அறை வாசலில் நிழலாடியது. சற்றே குள்ளமாக வழுக்கைத் தலையுடன் உப்புமிளகு தூவிய தாடியுடன் அவர் நின்றிருந்தார். அவர்...அவர்... ரதன் கங்கோத்ரியேதான். இயல்பாக கண்ணாடியை ஏற்றிவிட்டபடியே உள்ளே நுழைந்தவர்.
‘ஹேய் மித்தி! ஹவ் ஆர் யூ! எப்படி இருக்கார் தாத்தா?’ என்னை ஓரக்கண்களால் பார்த்துவிட்டு நேரேப் பெரியவரிடம் நடந்து சென்றார். இவர்தான் கொலை செய்துவிடுவார் என்று பெரியவர் சந்தேகப் படுகிறாரா? கண் முன்னேயே கொலை செய்துவிட்டால் நான் என்ன செய்ய வேண்டும் என்று வேகமாக மனதில் திட்டம் ஓடியது.
சங்கமித்ரா மெதுவாக ‘செடேடிவ்ஸ் போட்ருக்கேன் மாமா. நைட்டு எல்லாம் தூங்கவே இல்லையாம். அந்த மேனுஸ்க்ரிப்டை வச்சுகிட்டு பேசிட்டே இருந்ததா அனு சொன்னாங்க. லாயர் ஆஃபிசிலிருந்து வரச் சொன்னாராம்.’ என் பக்கம் திரும்பி ‘இது யுவ்ராஜ் ஃப்ரம் லாயர் ஆஃபிஸ் மாமா’ என்றாள்.
‘ஓ! நைஸ் டு மீட் யு யங் மேன்.. ஹவ் இஸ் கணேஷ் அண்ட் வசந்த்? ரொம்ப பிஸியாயிட்டாங்கப் போல. தம்புசெட்டி டொக்கு சந்திலேந்து கிண்டி போயிட்டீங்களோ? நோ நியூஸ் ஃப்ரம் தம் ஃபர் லாங் பீரியட். இல்ல மித்தி?’ மீண்டும் என்னைப் பார்த்து ‘இதுக்கு முன்னாடி உன்னயப் பாத்ததில்லையே’
‘நியூ ஜூனியர் சார். இன்னிக்குத்தான் சேந்தேன்’ சட்ட்... ஒவ்வொரு முறையும் எதற்கு இதை முந்திரிகொட்டையாக எல்லாரிடமும் சொல்லிக் கொண்டிருக்கேனோ.
‘ஓ! என்னது அது கைல? அப்பா கொடுத்தாரா?’
நடுக்கத்தை மறைத்துக் கொண்டு இயல்பாக நீட்டினேன். ‘ஏதோ வாரிசு இல்லைன்னு அஃபிடவிட் கொடுக்கச் சொல்றார்’
கண்ணாடியை ஏற்றிவிட்டுக் கொண்டு படித்தவர் ‘ஓ...’ என்று கண்களால் அளவிடுவது போல் பார்த்துவிட்டு ’எக்ஸ்யூஸ் மி! கொஞ்சம் கீழே ஸ்டடி ரூம்ல வெயிட் பண்றியா... மித்தி! கூட்டிட்டுப் போயேன் ப்ளீஸ்’ என்றார்.
ஸ்டடி ரூம் என்று சொன்னால் தப்பு. ஒரு லைப்ரரி ரேஞ்சிற்கு பிரமாதமாக இருந்தது. பல புத்தகங்கள் அலமாரிகளில் ரகவாரியாக அடுக்கப்பட்டு, அடையாள சுட்டிகளுடன் இருந்தன. கம்ப்யூட்டர் எல்லாம் வைத்திருந்தார்கள். இணைய வசதியோடு. அரை மணி நேரம் பொழுது போக்கிக் வலையில் மேய்ந்து கொண்டிருந்தேன். ட்விட்டரில் மத்திய மந்திரி ஷஷி தாரூர் பேசுவதெல்லாம் உடனடி நியூஸ் ஆகி மீடியாவில் போட்டுக் கும்மிக் கொண்டிருந்தார்கள். சேலத்திலிருந்து ஒரு டாக்டர் சுவாரசியமான மருத்துவ அனுபவங்கள் என்று சில அனுபவங்களை எழுதியிருந்தார். பாதி படித்துக் கொண்டிருக்கும்போது மூக்குக் கண்ணாடியின் பின்னாலிருந்து கீழ்க்கண்களால் பார்த்துக் கொண்டே உள்ளே நுழைந்தார் ரதன். பின்னாலேயே சங்கமித்ரா.
‘பை தி வே... நாந்தான் ரதன்’ என்று கை கொடுத்தார்.
‘தெரியும் சார். நிறைய ஃபங்ஷன்ல பாத்திருக்கேன். போன வாரம் சத்யம் தியேட்டர்ல...’ நான் சொல்வதை கவனிக்காமல்
‘அப்பா கொஞ்சம் மெண்டல்லி அன்பேலன்ஸ்டா இருக்கார். மித்தி கொஞ்சம் அவசரப்பட்டு கூப்பிட்டுட்டாப் போல. கணேஷ்கிட்ட சொல்லிடு. நத்திங் டு வொர்ரி. நான் பாத்துக்கறேன்’ என்றார். அவர் நின்றிருந்த தோரணையைப் பார்த்தால் பேட்டி முடிந்துவிட்டது. இடத்தை காலி பண்ணு என்கிற மாதிரிதான் இருந்தது. மனதில் லேசாக சஞ்சலமாக இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு
‘ஏதோ கொலை கிலைன்னு எல்லாம் எழுதியிருந்தார் சார். ஹோப் ஹி வில் பி சேஃப்’ கண்டிப்பாக அந்த நேரத்தில் அதிகப்பிரசங்கியாக ஏன் அப்படிப் பேசினேன் என்றுத் தெரியாது. கண்களை விலக்காமல் என்னையேப் பார்த்துக் கொண்டிருந்த ரதன், சட்டென அடிபட்டவரைப் போல விலுக்கென நிமிர்ந்தார்...
‘என்னப்பா என் மேல சந்தேகமா இருக்கா?’
‘ஐயோ! இல்ல சார்... சீனியர்ஸ் ஸ்டேட்டஸ் கேப்பாங்களேனு..’
கையை உதறிக் கொண்டே தாடியை தடவியவாறே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவர். ‘அஃப்கோர்ஸ் நீ நினைக்கிறதிலேயும் நியாயம் இருக்கு. அப்பா ஒரு அருமையான மனிதர். ஹிந்துஸ்தான் காலேஜில ஹிஸ்டரி டிபார்ட்மெண்ட்ல புரஃபசரா வேல பாத்துட்டு அஞ்சு வருசம் முன்னாடிதான் ரிடயர் ஆனார். ஏதோ சரித்திர ஆராய்ச்சின்னு, அது இதுன்னு இருந்தவர் இப்ப இப்படி ஆயிட்டார். ஹி பிகம் வெரி சிக் நவ்’ என்றவர் நடப்பதை நிறுத்திவிட்டு ‘பீஷ்ம பரம்ப்ரா பத்தி சொன்னாரா உன்கிட்ட?’
‘இல்ல சார். ஏதோ ஆராய்ச்சின்னு சொல்லிட்டிருந்தார். ஒரு டௌட்டு சார். பீஷ்மர்தானே வாழ்க்கை முழுக்க செலிபஸியா இருக்கேன்னு சபதம் போட்டவராச்சே. பிரம்மச்சாரிக்கு ஏது சார் பரம்ப்ரா?’
லேசாக சிரித்துக் கொண்டே ‘அதெல்லாம் புராணக் கதைப்பா. ஆக்சுவலி கங்கோத்ரிகள் - நாங்கதான் - பீஷ்ம பரம்பரைன்னு சொல்லிக்குவோம். அதிகம் தெரியப்படாத கதைகள் அது. அப்பாவும் அதைப்பத்திதான் ஆராய்ச்சி பண்ணிகிட்டிருந்தார்’
கண்ணாடியை துடைத்துப் போட்டுக் கொண்டே கோர்வையாக அந்தக் கதையை சொன்னார்.
’பீஷ்மர் பொறக்கும்போதே சாபத்தோடுதான் பிறந்தவர் தெரியும்ல? அவருக்கு முன்னாடி பொறந்த ஏழு குழந்தைகளும் பிறந்தவுடனே மோட்சம். ஆனா இவருக்கு மட்டும் ரொம்ப நாளைக்கு பூமியில இருந்திட்டு சாகனும்னு சாபம். அதுவும் எப்படிப்பட்ட சாவு தெரியுமா?’
‘அம்பு படுக்கையில படுத்திட்டே உயிர விடறதுதானே?’
‘அதில்ல. அவர் பையன் கையாலத்தான் சாகனும்னு அவருக்கு ஒரு சாபம் உண்டு. அது நடக்காம இருக்கனும்னுதான் அவர் பிரம்மச்சர்ய விரதம் எல்லாம் இருந்தார். ஆனா விதி யாரை விட்டது. துரதிர்ஷ்டவசமா அவரால அம்பைக்கு கல்யாணம் நடக்காமப் போயிடுது. தெரியும்ல? இங்கதான் ட்விஸ்டு வருது. எங்க நம்பிக்கைப்படி பீஷ்மர் அம்பையைக் காந்தர்வ கல்யாணம் பண்ணிகிட்டார். நாலு வருசம் அஸ்தினாபுரத்துல குடும்பம் நடத்திட்டு குழந்தை பிறந்தப்புறமா வெட்டி விட்டுட்டார். அந்தப் பையந்தான் சிகண்டியா வளர்ந்து பின்னாடி பீஷ்மரையேக் கொன்னுடறான்’
ஏதோ அம்புலிமாமா கதை கேட்பது போல் கேட்டுக் கொண்டிருந்த நான் இங்கே கொஞ்சம் குழம்பிவிட்டேன். சிகண்டி பெண்ணாக பிறந்து யக்ஷன்கிட்ட ‘முக்கிய’ உறுப்புகள் கடன்வாங்கி ஆணா மாறிட்டதாகத்தானே டிவியில் காட்டினார்கள்.
‘நான் புதுசா சொல்லலப்பா. தலைமுறை தலைமுறையா எங்க பரம்பரைல சொல்லப்படற கதைகள்தான். அப்பா சில பிராமி லிபி ஓலைச்சுவடி எல்லாம் வச்சுருக்கார். குருக்ஷேத்ரா பேட்டில் ஃபீல்டில சிகண்டிய பார்த்த உடனே பீஷ்மருக்கு தெரிஞ்சிடுது. ஆனா வெளில சொல்ல முடியல. சண்டையும் போட முடியல. அதான் பெண்ணாப் பிறந்து ஆணா மாறிடான்னு டகால்டி அடிச்சிட்டாங்க. சிகண்டியோட அம்பால கொல்லப்பட்டோம்னு உண்மையை மறைக்கத்தான் சாகும்போது கூட ”என் உடலில் சிகண்டி அம்பு எதுவுமில்லை, எல்லாம் அர்ஜுனனோடதுன்னு” சொல்லிட்டேதான் செத்துப் போனார். அதுக்கு ஒத்து ஊதத்தான் சிகண்டி அம்பையின் மறுபிறப்பு அப்படி இப்படி கதை எழுதி சேத்திட்டாங்கன்னு அப்பாவோட வாதம். புரியுதா?’
’ஓ!’ இப்படி எல்லாம் கூடவா கதை இருக்கும்?
‘இந்த சாபம் எங்க பரம்பரை முழுதும் இருக்குன்னு நம்பறார். நிறைய கங்கோத்ரிகள் - மை ஆன்செஸ்டர்ஸ் மர்மமான முறையில செத்திருக்காங்க. அவங்க வாரிசுகள் மேல சிலதடவ பழியும் விழுந்திருக்கு. இந்த தலைமுறைல அவர் இறக்க நான் காரணமாயிடக்கூடாதுன்னு இந்த மாதிரி dis-owning அப்படி இப்படின்னு. யூ நோ... ஹி ஹேட் ஜஸ்ட் கான் நட்ஸ்’ என்றார் பெருமூச்சு விட்டுக் கொண்டே.
’நியூரோ டெஃபிஷியன்ஸின்னு மித்தி சொன்னாங்க’என்னையறியாமலேயே சங்கமித்திராவின் பேரைச் சுருக்கி விளித்து விட்டேன்.
‘ஆமாம். என்ன காரணம்னே தெரியல. ஆறு மாசமா ரொம்பவே க்ராங்கியா இருக்கார்’
எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக குழப்பம் தெளிந்து ஒரு தெளிவான படம் உருவாகியது போல் இருந்தது. பெரியவரின் இடைவிடாத ஆராய்ச்சியும், அவருடைய மன அழுத்தமும், உடல் குறைபாடுகளுமாய் சேர்ந்து அவரை வாரிசு துறக்கும் நிலைக்கு துரத்தியிருக்கிறது. எத்தனை மருந்து பாட்டில்கள், மாத்திரைகள், மருந்து ட்யூப்கள் அவரைச் சுற்றி. வயோதிகத்தினாலோ, பொருந்தாத பல்செட்டினாலோ பேசவே முடியாமல்... இருங்கள்... இருங்கள்... சற்று முன் நான் இணையத்தில் படித்த சேலம் டாக்டரின் அனுபவங்கள்... அதிலும் இதே பல்செட்டு பற்றி வருமே...
‘சார் ஒரு சந்தேகம். இதே மாதிரி ஒரு கேஸ் பத்தி இப்பத்தான் ட்விட்டரில் ஒரு டாக்டர் எழுதியிருந்தார். இதே மாதிரி ஒரு நியூட்ரிஷியன் டிஃபிஷியண்ஸி கேஸ் பத்தி சொல்லிருக்கார். உங்க அப்பாக்கு ஆறு மாசமா மனநிலை பாதிப்புன்னு சொல்றீங்களே... அவர் பல்செட்டு எப்ப மாத்தினார்?’
‘வாட்? பல்செட்டா?’ உனக்கு பெரியவர் தேவலை என்பது போல ஒரு பார்வை பாத்துவிட்டு... ‘ஞாபகம் இல்லையே’ என்றார்.
‘இங்க பாருங்க’ என்று அவரை கணிணி திரைக்கு இட்டுச் சென்று அந்தக் கட்டுரையைக் முழுவதும் படித்துக் காட்டினேன். படித்து முடிக்கும்போது ரதனின் முகம் முழுவதும் பிரகாசமாகிவிட்டிருந்தது.
‘யு ஆர் ப்ரில்லியண்ட்’ என்றார். உடனே டெலிஃபோனை நோக்கி நகர குழப்பத்துடன் இருந்த சங்கமித்ரா ‘என்னாச்சு மாமா? நீங்களாவது சொல்லுங்க யுவி’ என்றாள். வாவ்... அவளும் பெயரை சுருக்கிவிட்டாள் பாருங்கள்.
‘உன் தாத்தா பல்செட்டினால் கஷ்டப்படுவதை பார்த்தாய் இல்லையா? ஈறுகள் சுருங்கிவிட்டதால் அவருடைய பல்செட்டு சேரவில்லை. பேசும்போது அவர் சிரமப்படுவது தெரிகிறதா?’
‘ஓஹோ. ஆனால் அவர் நிறைய டெண்டல் அட்-ஹெசிவ் யூஸ் பண்றார் இப்பல்லாம். ஒருவாரத்திற்கு மூன்று நான்கு ட்யூப்கள் ஆகுது’
’அதான் பிரச்சினை. அந்த டெண்டல் க்ரீம்களில் zinc என்னும் துத்தநாகம் இருக்கு. பொதுவாக துத்தநாகம் உடலில் சரியான அளவில் இருந்தால் பிரச்சினையில்லை. ஒரு மாதத்திற்கு ஒரு ட்யூப் என்ற ரீதியில் நியூட்ரிஷியன் பேலண்ஸை பாதிக்காது. ஆனால் உங்கள் தாத்தா கேஸில் பொருந்தாத பல்செட்டினால் கிட்டத்தட்ட இரண்டு நாளைக்கு ஒரு ட்யூப் தேவைப்படுதில்லையா. அதீத துத்தநாகம் உடலில் காப்பர் அளவை பெரிதும் குறைத்து விடும்’ மீண்டும் டாக்டரின் கட்டுரையை சுட்டிக் காட்டினேன். ‘ Mental Retardation Hypocupremia. அதுதான் உங்கள் தாத்தாவின் பிரச்சினை’ சற்று இடைவெளிவிட்டு...
‘உங்கள் தாத்தாவிற்கு தேவை வக்கீல் இல்லை. புது பல்செட்டு கட்ட நல்லதொரு டெண்டிஸ்ட். பாருங்கள் ஒரே மாதத்தில் சுகப்பட்டுவிடுவார்’ என்றேன்.
சங்கமித்ரா முகத்தில் சந்தோஷத்தின் பிரதிபலிப்புகளும், எப்படி இதை தவறவிட்டோம் என்ற சங்கடமுமாய் கலந்த உணர்ச்சி கலவைகள். சட்டென இதுதான் சந்தர்ப்பம் என்று ‘ஒரு முக்கியமான கேள்வி மித்தி’ என்றேன்.
இப்பொழுது அவள் பார்த்த பார்வையில் மரியாதையோடு மேலும் பல குறிப்புகளும் தெரிந்தன.
’உங்கள் காதில் இருக்கும் தொங்கட்டான்கள் மிக அழகாக இருக்கின்றன’ அவள் கன்னங்கள் சிவப்பாவதை ரசித்தபடியே ‘அந்த தொங்கட்டானுக்கு இணையான அழகு முகத்தை எங்கிருந்து பெற்றீர்கள்?’
குறிப்பு: பின்வரும் உரையாடல் கதை சொன்ன யுவராஜிற்கும் எனக்கும் இடையே நடந்த உரையாடல்.
‘அது ஏன் சினிமா நாயகர்கள் போல் வக்கீலாக இருந்து கொண்டு நீயே மருத்துவ தீர்வுகள் எல்லாம் சொல்ல வேண்டுமா என்ன... அந்த அவசர அவகாசத்திலேயும் கரெக்டா காதல் அப்ளிகேஷன் போட்டுட்டியே’ என்றேன்.
யுவராஜ் சங்கோஜமாக சிரித்துவிட்டு ‘பெரியவர் நன்றாக தேறிவிட்டார் இப்பொழுது. பீஷ்ம பரம்ப்ராவை பெங்குயின் பப்ளிகேஷன்ஸ் வெளியிடப் போகிறது. அதுக்கும் லீகல் அட்வைசிங் நாங்கதான். அப்படியே கல்யாண அறிவிப்பும் சேர்த்து கொடுத்திடலாம்னு ரதன் அங்கிள் சொல்லியிருக்கார்.’ முகத்தில் அவ்வளவு பூரிப்பு.
‘பீஷ்ம பரம்ப்ரா படிக்க ஆவலோடு காத்திருக்கேன்’ என்று அவனை வாழ்த்திவிட்டு கிளம்பினேன்.
யுவராஜோடு முதல்நாள் அனுபவம் மாதிரியே வீரபாண்டியனோட இறுதி நாள் அனுபவமும் சுவாரசிய்மானது. அவர் சொன்ன கதை நாளை
35 மறுமொழிகள்:
so nice story
keep it up.
make the ganesh and vasanth living now
:)
//’ஐயாம் டாக்டர் சங்கமித்ரா!’ என்றாள்//
டாக்டர் என்பதுக்கும் சங்கமித்ரா என்ற பெயருக்கும் உள்ள தொடர்பை அதாவது உமது நுண்ணரசியலை மிகவும் ரசித்தேன். :))
ம்ம், உண்மைய சொல்லனும்னா இன்னும் பெரிசா, விவரமா எதிர்பார்த்தேன் ஸ்ரீதர்.
மித்துவே ஒரு டாக்டர், கண்டிப்பா டயாக்னஸ் பண்ணீ இருப்பாங்க. இருந்தும் ஒரு ஜுனியர் வக்கீல் எப்படி..?
சரி விடுங்க, Zinc எப்படி காப்பர் லெவலை குறைக்கும்? ஏன்னா ரெண்டுமே மென்டலீப் பீரியாடிக் டேபிள்ல டி பிலாக்ல (பிளாக் இல்லை) எலிமென்டுகள்(தனிமம்?) தான்.
ஒரு வேளை ப்ளூரைடுனு(flouride) இருந்து இருக்கனுமோ?
எதுக்கும் ஒரு தடவை என் பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி நினைவுகளை தட்டி பாக்கறேன்.
சரி இப்படி பி நா வானாவா சிந்திக்கறத நிப்பாட்டிக்கறேன், கதை நல்லா இருந்தது. :))
போன தடவை த்ரவுபதி கதை சொல்றதா சுப்புலக்ஷ்மி சொல்லி இருந்தாங்க, எங்கிருந்து யுவராஜ் வந்தான்? :))
அட்டகாசமான அதே பழைய்ய பாணி :)
(பீஷ்ம பரம்ப்ரா கதை புதுசு!)
my god!சான்ஸே இல்ல! செ,அயா இருந்துச்சு! அதுவும் கணேஷ் வசந்த் ட்ரீட் எதிர்பாக்கல! வித் ச்ப்டில் ஹிஸ்டோரிகள் ஃபிக்ஷ்ன். எப்படி இதெல்லாம்?
Zinc and copper are mutually related with each other in human body. ஒத்துக்கறேன். ஆன காப்பர் குறைஞ்சா நட்டு கழறாதாம், அனீமியா வருமாம், முடி கொட்டுமாம். டையரியா வருமாம்.
வாங்க யாசவி!
உங்க கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி! :)
வாங்க அம்பி!
:) உங்கல் கமெண்டுகள் மிகவும் ரசிக்க வைக்கின்றன. சொல்லப் போனா அடுத்த கதையை உடனே எழுதனும்னு தூண்டற அளவுக்கு ஜூப்பரா இருக்குப்பா. ரொம்ப டாங்க்ஸு :)
////’ஐயாம் டாக்டர் சங்கமித்ரா!’ என்றாள்//
என்ன நுண்ணரசியல்? புரியற மாதிரி சொல்லேன். ப்ளீஸ் :)
//பிஎஸ்ஸி கெமிஸ்ட்ரி //
ஓ! அப்படியா? அப்புறம் எப்படி இங்க போட்டி தட்ட? சரி விடு... கணக்க படிச்சிட்டு நான் மட்டும் என்ன கால்குலஸா போட்டுகிட்டிருக்கேன் :)
//பி நா வானாவா சிந்திக்கறத //
அப்படி ஒரு நினப்பு வேறயா? :)
//காப்பர் குறைஞ்சா நட்டு கழறாதாம், அனீமியா வருமாம்//
:) லட்சத்துல ஒரு கேஸ்ப்பா. இதுக்கு முன்னாடி இப்படி நடந்ததில்லையாமாம்.
சரி விடு! ஏதோ புடிச்சிருந்ததுன்னு சொன்ன மாதிரி இந்தது :)
ஆய்வுகள்க்கும், பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி. அடுத்த கதையை சீக்கிரமா போட்டுடறேன் அம்பி சார் :)
வாங்க சென்ஷி!
வருகைகும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. நி்னைத்த அள்விற்கு வ்ரலைப் போல. அம்பியும் அதையேதான் சொல்லியிருந்தார். அடுத்தது எப்படி அமையுதுன்னு பாப்போம். :)
வாங்க பப்பு!
//அதுவும் கணேஷ் வசந்த் ட்ரீட் எதிர்பாக்கல!//
பேரைச் சொன்னதுக்கே சந்தோஷமாயிட்டீங்களா :) உங்க பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
அம்பி!
சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம்.
போன கதையில் அடுத்ததா ஒரு மகாபாரத வழக்கு அரைகுறையா வருதுன்னுதானே சொல்லியிருந்தேன். வழக்குங்கிறதுனாலதான் வக்கீல் யுவராஜ் வந்திருக்கார். :)
திரௌபதி பத்தின ரெஃபரென்சு வேற காண்டெக்ஸ்டாச்சே :)
இந்த வாட்டி எழுத்துப் பிழை எதுவும் இல்லப் போல :) நன்றி!
//என்ன நுண்ணரசியல்? புரியற மாதிரி சொல்லேன். ப்ளீஸ்//
போட்டு வாங்கறீங்களா? இல்ல தெரியாமத் தான் கேக்கறீங்களா?
சரி, பெங்களூர்க்கு ஆட்டோ வராதுனு நம்பி சொல்றேன்:
மருத்துவர் அய்யாவின் பேத்திகளில் (அன்புமணியின் புதல்விகளில்) ஒருவர் பேர் சங்கமித்ரா.
இன்னொருவர் பேரும் ஏதோ மித்ரா.
டெல்லி பப்ளிக் ஸ்கூலில், அதாவது தமிழை மொழிப் பாடமாக கொள்ளாத, ஹிந்தி மட்டுமே சொல்லி தருகிற பள்ளியில் படிக்கறாங்க. :))
வாழ்க தமிழ்குடி தாங்கிகள்.
(நான் எதுக்கும் மூனு நாள் தலைமறைவா இருக்கேன்)
நல்லாத்தான் போய்கிட்டிருந்தது கதை. ரொம்ப யோசிக்காம ஏதோ பல்பு எரிஞ்சு ஈசியா முடிச்சா மாதிரி ஒரு ஃபீலிங் :) பாருங்களேன், கதைன்னா டாக்டர்களுக்குத் தெரியாததுகூட வக்கீல்களுக்குத் தெரியுது! நவீனமாக் காட்ட டுவிட்டர் :)
என்னமோ போங்க. கொஞ்சம் ஏமாத்தம்தான்.
என்னது எழுத்துப் பிழைகள் இல்லையா... அப்ப ஒற்றுப் பிழைகள்லாம் எழுத்துப் பிழைகள்ல வராதா :) :)
அடியேன் இளங்கலை கெமிஸ்ட்ரி, முதுகலை எம்சிஏ. அதான் பொட்டி தட்டிங்க். :))
MSc chemistry படிச்சு இருந்தா இப்படி பிளாக் படிக்க முடியாது, பிப்பட்டுல திரவம் கலக்கிட்டு இருந்திருப்பேன்.
இந்த வாட்டி எழுத்து பிழை இல்லைன்னு நான் சொல்லவேயில்லையே! :p
நிறைய எடத்துல ரெண்டு சுழி 'ன'வுக்கு பதிலா மூனு சுழி 'ண' வந்து இருக்கு. :))
சரின்னு நானும் விட்டுடேன். கொத்தனார் வந்திருந்தா கொத்தி இருப்பார். :))
//அப்புறம் எப்படி இங்க போட்டி தட்ட?//
U mean பொட்டி..? :))
சொல்ல விட்டு போச்சு:
சங்கமித்ரா என்பது தூய சம்ஸ்கிருத பெயர்.
(எனக்கு கண்டிப்பா இருக்கு)
//அப்ப ஒற்றுப் பிழைகள்லாம் எழுத்துப் பிழைகள்ல வராதா//
:))))
சுஜாதா பாணியில் விறுவிறுப்பாக இருந்தது. நல்ல தொடக்கம்.ஆனாலும்,பீஷ்மர் கதைல இன்னும் பலமா எழுதி ட்விஸ்ட் கொடுத்திருக்கலாம்னு தோணுது.
வாழ்த்துக்கள்.
ஸ்ரீதர், நல்லா இருக்கு ஸ்ரீதர் :)- எனக்கு இந்த பீஷ்ம பரம்பரை கதை புதுசு. நல்ல வேகமான நடை.
ஆனாலும் பேருல இவ்வளவு அரசியல் கூடாது :)- அம்பி சொல்லாட்டி புரிஞ்சி இருக்காது !
//மருத்துவர் அய்யாவின் பேத்திகளில் (அன்புமணியின் புதல்விகளில்) ஒருவர் பேர் சங்கமித்ரா. //
ஓஹ்ஹ்.. நான் கூட அசோகர் ஸ்ரீலங்காவிற்கு அனுப்பிய மகிந்தர், சங்கமித்ரா பற்றி சொல்றீங்களோன்னு நினச்சிட்டேன். பாலிடிக்ஸ் பண்றதுனாலும் நாங்க சரித்திர காலத்திலேந்துதானே துவங்குவோம் :))
//என்னமோ போங்க. கொஞ்சம் ஏமாத்தம்தான்.//
எனக்கும்தான். கொஞ்சம் மாத்திருக்கேன். சரி விடுங்க அடுத்தது எப்படிப் போகுதுன்னு பாக்கலாம் :)
உங்கள் வருகைக்கும், கருத்துகளுக்கும் மிக்க நன்றி.
//நிறைய எடத்துல//
முடிஞ்சா சொல்லுங்க. சரி செய்ய முயற்சிப்போம்.
எழுத்துப் பிழைகள், சந்திப் பிழைகள் இல்லாம எழுதனும்னுதான் ஆசை. சில சமயம் லாப்டாப் கீபோர்டு காலை வாரிடுது. திரும்பி திரும்பி ப்ரூஃப் பாக்கப் போனா கதையையே மாத்தி எழுதிடறேன் :))
உங்க உதவிக்கு மிக்க நன்றி அம்பி சார்.
//அப்புறம் எப்படி இங்க போட்டி தட்ட//
நீர்தானே நியூஸ்பேப்பர் மேல பஞ்சாபி பெண்ணை தூக்கிகிட்டு போட்டிக்கு ஆடினது? அப்புறம் என்னய்யா கேள்வி புதுசா? :))
போட்டியில் சந்தேகம் கிளப்பிய நீர் தட்டிங் பற்றி ஒத்துக்கொண்டதின் நுண்ணரசியல் என்னவோ? (அப்பாடி... இந்த வார்த்தையை சொல்லியாச்சு). கேபிஎஸ் கில் கேஸ் ஞாபகம் இருந்தா சரி :))
//சங்கமித்ரா என்பது தூய சம்ஸ்கிருத பெயர். //
சமஸ்கிருதமே தூய மொழிதானேய்யா. அத என்னிக்குமே பேசினது இல்லையாமே.
அப்புறம் ’பிராமி லிபி’ பத்தி ஒண்ணுமே சொல்லலயே :)
//பீஷ்மர் கதைல இன்னும் பலமா //
வாங்க கிரிதரன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பீஷ்மர் கதை பெருசாப் போயி மெயின் கதைலேந்து digress ஆயிடுமோன்னு குறைச்சிட்டேன். அதைத் தனியாவே எழுதலாம்னு ஒரு சிந்தனை கூட இருக்கு.
//எனக்கு இந்த பீஷ்ம பரம்பரை கதை புதுசு//
வாங்க மணிகண்டன். அந்தக் கதை எனக்குமே புதுசா உதிச்சதுதான் :)
//அம்பி சொல்லாட்டி புரிஞ்சி இருக்காது//
அம்பி சொல்லியும் புரிஞ்சிருச்சா? :))
பாருங்க அம்பி! நீங்க எவ்வளவு குழப்பியும் மணிகண்டன் புரிஞ்சிருச்சின்னு சொல்லி உங்கள ஓட்டியிருக்கார். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.
ஆரம்பத்துல கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும், போகப் போக நல்ல இருந்துச்சு..
எத்தனைப் பேர், என்றுச் சொன்ன... தயவுசெய்து சந்திப் பிழைகளைத் தவிருங்கள்.
உங்க கதையில் எனக்கு ஒரு அனாமதேய ரோல் கொடுத்ததிற்கு நன்றி ஸ்ரீதர்.
அம்பி: Sridhar has based the story on this article from the New York Times. Though extremely rare, this is plausible.
கணேஷ் வசந்தை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்ததற்க்கு நன்றி. சுஜாதா பாணியில் எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள். முதல் முயற்சி என்பதால் மன்னிக்கலாம். கதையில் ஏகப்பட்ட ஓட்டைகள். முதல் நாள் வேலைக்கு போனவருக்கு ஆபிசில் உள்ள அத்தனை பேரையும் எப்படி தெரியும்?
லாயர் மெடிக்கல் அட்வைஸ் கொடுப்பதில் தப்பில்லை. ஆனால் reasoningதான் கொஞ்சம் அரை வேக்காடாக இருக்கிறது. கதையை இன்னும் ஸ்வாரஸ்யமாக உ.ம்: மறுநாள் அவரை பார்க்க சென்றபோது வாயில் லேசான நுரை தள்ளி, தலையை பக்கவாட்டில் சரித்து மூச்சு விட மறந்து போயிருந்தார் என்கிற ரீதியில் சங்கமித்ரா மேல் சந்தேகம் வருகிற மாதிரி கொண்டு போய் வேறு விதமாய் கதையை முடிப்பீர்கள் என்று நம்பிக்கொண்டிருந்தபோது மூன்றாம்தர தமிழ் சினிமா மாதிரி காதல் கதையாக தடம் மாறிப்போனது கொஞ்சம் சப்பென்றாகிவிட்டது.
கணேஷ் வசந்த் என்றால் ஒரு கொலையாவது விழவேண்டும் என்கிற ஆதார விதியை மீறியதால் borderline passதான். நீங்கள் ஒருவேளை, கதையில் கூட யார் உயிரும் போய்விடக்கூடாது என நினைக்கும் அப்பாவியோ!
நிறைய எதிர்பார்த்து விட்டேனோ?
வாங்க பட்டிகாட்டான்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
வாங்க அனானி!
//சந்திப் பிழைகளைத் தவிருங்கள்.//
முடிந்தவரையில் கவனமாகவே எழுதுகிறேன். சில சமயம் தட்டச்சும் வேகத்தில் விசைப்பலகையின் தவறுகளால் சில தவறுகள் நிகழ்ந்துவிடுகின்றன. இனி சரி செய்ய முயல்கிறேன்.
வாங்க டாக்டர் விஜய்!
//Though extremely rare, this is plausible.//
:) சுட்டிக்கு மிக்க நன்றி. முதலில் கதையிலெயே அந்த சுட்டியை தர வேண்டும் என்றுதான் திட்டமிட்டிருந்தேன்.
வாங்க டகிள் சார்!
//சுஜாதா பாணியில் எழுத முயற்சி செய்திருக்கிறீர்கள்//
அப்படி எல்லாம் திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை. கணேஷ் / வசந்த் என்ற பெயரை உபயோகிப்பதால் ஒரு சட்ட நிறுவனத்தை சுலபமாக உருவகப்ப்படுத்தி விடலாம் என்பதால் மட்டுமே அந்தப் பெயர்கள். சுஜாதா கதைகள் பரிச்சயம் இல்லாதவர்களுக்கு கூட கதையில்ந்த் இழப்பும் இருக்காமல்தானே சொல்லியிருக்கிறேன்.
//ஆபிசில் உள்ள அத்தனை பேரையும் எப்படி தெரியும்?//
முதல்நாள் வேலை என்றாலும் அலுவலகம் பரிச்சயமானதாகவே இருக்குமில்லையா... நேர்முகத்தேர்வு, சந்திப்புகள் நடத்தாமல் வக்கீல் அலுவலகத்தில் ஜூனியராக யாரை சார் சேர்த்துக் கொள்வார்கள்? :)
//மூன்றாம்தர தமிழ் சினிமா மாதிரி காதல் கதையாக தடம் மாறிப்போனது கொஞ்சம் சப்பென்றாகிவிட்டது.//
:)) சரி விடுங்க. அடுத்த கதை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.
//நிறைய எதிர்பார்த்து விட்டேனோ?//
அடுத்தமுறை உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்திசெய்ய கண்டிப்பாக முயல்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
ஸ்ரீதர் அண்ணாச்சி
இன்னா ஷொல்ரதுன்னே பிரில்ல..கதை சுமார் ரகம் அப்படீன்னு மட்டும் சொல்லி நிப்பாட்டிக்கிறேன்.
வெளிப்படையா விமர்சனம் பண்ணுனதை தப்பா எடுத்துக்க மாட்டீங்க அப்படீன்னு நம்புறேன்.
///
ambi said...
MSc chemistry படிச்சு இருந்தா இப்படி பிளாக் படிக்க முடியாது, பிப்பட்டுல திரவம் கலக்கிட்டு இருந்திருப்பேன்.///
ஸ்ரீதர் எழுதும் கதையெல்லாம் படிக்க நேர்ந்திருக்காது என்று சொல்லும் உங்கள் நுகபிநி
//வெளிப்படையா விமர்சனம் பண்ணுனதை தப்பா எடுத்துக்க மாட்டீங்க அப்படீன்னு நம்புறேன்.//
வாங்க வாங்க. அட நீங்க எப்பவும் வெளிப்படையாத்தான் சொல்றீங்கன்னு நினச்சுகிட்டிருக்கேன். அப்ப இதுக்கு முன்னாடி பாராட்டா சொன்னதெல்லாம் டுபாக்கூரா? :)) புரியுது புரியுது.
//பிப்பட்டுல திரவம் கலக்கிட்டு இருந்திருப்பேன்.///
ஸ்ரீதர் எழுதும் கதையெல்லாம் படிக்க நேர்ந்திருக்காது என்று சொல்லும் உங்கள் நுகபிநி//
பிப்பட்டுல திரவம் கலக்கிட்டிருக்கும் ஃபிகரை கலக்கிகிட்டு இருப்பேன்னு சொல்ல வந்திருப்பார் சங்கர்ஜி. அதுக்குள்ள நுகபிநின்னுட்டீங்களே :))
Murali here, romba leta than padithen, Starting nallathan erunthathu, anal finishing than ..... viruviruppaha irunthathu. Enathu parattukkal. Nijamahave Beeshma paramparai appadithana? (next time Tamil fontla ezhutharen) Murali
இந்தியாவை விட்டு வந்தப்புறம் நான் விரும்பும் கதைக்களங்கள் தேடி அலைந்து கொண்டிருந்தேன்.... மிகவும் இயல்பாக சுஜாதாவின் கோடிட்ட இடங்களை நிரப்ப முயற்சி செய்து அதில் குறிப்பிடும் அளவு வெற்றியும் பெற்றிருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!
Post a Comment