முதலில் முக்கிய உரிமை துறப்பான்:– நான் மாற்றங்களை வரவேற்கும் மனப்பாண்மை உடையவனே. ஆனால் கேள்விகளோடு, அதற்கான பதில்களை தேடும் விழைவோடு மாற்றங்களை வரவேற்க விரும்புகிறவன். கண்களை மூடிக் கொண்டு அல்ல.
தூத்துகுடியை டூட்டுகோரின் என்றோ, திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றோ அழைப்பதில் எனக்கு நிச்சயம் உடன்பாடில்லை. துருக்கி, சீனா என்றே உச்சரிக்க வேண்டுமே தவிர டர்க்கி, சைனா என்று சொல்வது சரியல்ல. அந்த வகையில் ஒரு அயல்சொல்லை தமிழ் மொழிக்கு கொண்டு வரும்போது விக்கி குழுமத்தினர் மிகவும் சிரத்தை எடுத்துக் கொண்டே ஆய்வு செய்கின்றனர் என்பதில் மகிழ்ச்சியே.
தமிழ்மொழியில் கிரந்த எழுத்துகளின் தேவை என்ன? அது தமிழை வளப்படுத்துகிறதா இல்லை சீரழிக்கிறதா? ரவி போன்றோர் வைக்கும் விவாதத்தின் மைய்ப்புள்ளிகளாக இருப்பது தமிழ் மொழியின் வளர்ச்சியும், அதனுடைய பயன்பாடுகள் அதிகரிப்பும் என்பது புரிகிறது. ஆனால் புரியாத விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட இடைச் சங்க காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்து வரும் எழுத்துகளை இடது கையால் ‘இந்த எழுத்துகள் தேவையில்லை’ என்று ஒதுக்குவது. அதுவும் பல நூறு வருடங்களாக வழக்கில் இருக்கும் எழுத்துகளை, பல வரலாற்று ஆவணங்களில், கல்வெட்டுகளில் உபயோகப்படுத்தப்பட்ட சொற்களை ‘சீரழிவு’ என்று ஒதுக்குவது புரியவில்லை.
ஒரு மொழியின் இயல்பாக அதன் ஒலிப்பு முறை அமைகிறது என்பதில் மாற்று கருத்தில்லை. கிரந்த எழுத்துகளை முற்றிலுமாக களைவது என்பது தமிழ் வளர்ச்சிக்கு உதவி செய்யுமா என்பது விவாதக்குரியதே. மேலும் ரவி போன்றோர் தீவிரமாக நம்புவது ’தமிழ் மொழிக்கு, தட்பவெப்ப நிலை, மக்களின் வாழ்க்கை முறை இதுக்கு இந்த ஒலிகள் போதும் என்கிற கூர்ந்த அவதானிப்பில் உருவானவை தமிழ் எழுத்துகள்..’ ஏன் போதும்? உதாரணத்திற்கு, இன்று தமிழரின் வாழ்க்கையில் ‘ஜ’ என்று எழுத்து அந்நியமாகவா இருக்கிறது? முதலமைச்சர் குமாரசாமி இராஜா, இராஜாஜி, காமராஜர், ஜீவானந்தம் தொடர்ந்து எத்தனை பிரபலங்களை தமிழர்கள் ‘ஜ’வோடு தொடர்புபடுத்தி தெரிந்து வைத்திருக்கிறார்கள்? இல்லையில்லை அந்தப் பெயர்களை முறையே குமாரசாமி ராசா, இராசாசி, காமராசர், சீவானந்தம் என்று மாற்றித்தான் தமிழர்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று வாதிடலாம். அப்படி தமிழர்களுக்கு நெருக்கமான உச்சரிப்பில்தான் தமிழ்மொழி எழுத்துகள் ஒலிக்க வேண்டும் என்றால் என்றால், சிறப்பு ‘ழ’கரம் தமிழ் சொற்களில் இடம்பெறுவது சந்தேகமே. ரவி போன்றோர் ஆய்தஎழுத்தை (ஃ) எவ்வகையில் இன்றைய காலகட்டத்தில் உபயோகப்படுத்துகிறார்கள்?
ஞ, ழ போன்றவற்றை ஆங்கிலத்தில் எழுதும்போது அதற்குண்டான ஒலிப்பான்களாக ஞ – Gna என்றும், ழ – zha என்றும் கவனத்துடன் கையாள்கிறோம் அல்லது அடுத்தவரை கையாளுமாறு வேண்டுகிறோம். அதே போல் ‘ட’விற்கும், ‘த’விற்கும் ஆங்கிலத்தில் ஒரே எழுத்து முறையாக ‘ta’ இருந்தாலும் அதனை உச்சரிக்கும் முறைக்கு கீழே புள்ளி வைத்து சுட்டிக் காட்டும் முறை உண்டு. தமிழை ஒரு தொடர்பு மொழியாக, அறிவுக் களஞ்சிய மொழியாக மாற்ற முனையும்போது இம்மாதிரியான அடிப்படை சிக்கல்களை களைவது முக்கியமில்லையா? புத்தகத்திலும், புத்தரிலும் வரும் ‘த்த’ ஒரே மாதிரியாக உச்சரிக்கப் படுவதில்லையே. புத்தர் தமிழர்களுக்கு அந்நியராக இருந்தாலும் அவரைப் பற்றி அறியாமலா இருக்கிறார்கள்? இடைச்சங்க காலத்திலோ, பல்லவர் காலத்திலோ புதிய பலுக்கல் முறைகளை தமிழில் அறிமுகப்படுத்த உள்வாங்கிக் கொள்ள கிரந்த எழுத்துகளை உருவாக்கிக் கொண்டனர். அதனால் தமிழின் இலக்கணம் சிதைந்துவிடவில்லை என்பது எனது துணிபு.
இந்த இடத்தில் வறட்டுவாதமாக தமிழின் ‘ழ’கரம் ஆங்கிலத்தில் இருக்கிறதா என்று கேள்வியும் கேட்கப்படுவதை கவனித்திருக்கிறேன். ஃப்ரெஞ்சு வழியாக அமெரிக்க ஆங்கிலத்தில் நிறைய இடங்களில் ‘ழ’கரம் உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் எழுத்து அடிப்படையில் அதற்கு [ɻ]ஒலிகுறிப்பானும் இருக்கிறது. தமிழுக்கு மட்டுமே சிறப்பான ‘ழ’கரம் ஃப்ரெஞ்சு, எஸ்பானியோலிலும் ஒலிக்கத்தான் செய்கிறது.
தொல்காப்பியத்திலிருந்து, நன்னூல்வரை திசைச் சொற்களையும், வடச் சொற்களையும், கிரந்த எழுத்துகளையும் உள்வாங்கி இலக்கணத்தினை சிதைக்காதவாறு மொழியாளுமை வளர கதவுகளை அகலவே திறந்து வைத்திருக்கின்றன என்பது எனது புரிதல்.
கம்பர் இராமாயணத்தில் தசரதன், இலக்ஷ்மணன், கும்பகர்ணன், விபீஷணன் போன்ற மணிப்பிரவாள பெயர்களை தூய தமிழில் தயரதன், இலக்குவன், கும்பகருணன், வீடணன் என்று மாற்றியதும், தொடர்ந்து பல நாயன்மார்கள், ஆழ்வார்கள் அதே முறையில் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்க உதாரணங்கள். அதே போல் அருணகிரிநாதர் போன்றோர் கிரந்த எழுத்துகளை தாராளமாக பயன்படுத்தியிருக்கும் உதாரணங்களும் உண்டு. சமண காப்பியங்களில் வடச்சொற்கள் இருக்கத்தானே செய்கின்றன.
மொழி வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரோ, அல்லது ஒரு குறிப்பிட்ட காலவரையிலோ நடந்தேறியது இல்லை. அது பரினாம வளர்ச்சியா mutation-ஆ என்று ஒருவர் தீர்ப்பு எழுத முடியாது. ’வட்டல் எழுத்துக்கு’ மூலமாக ‘தமிழ்-பிராமி’யும் அதற்கு மூலமாக இலத்தீனின் சகலையான அராமிக்கும் இருந்ததாக வரலாறு சொல்கிறது. மாற்று கருத்துகள் இருக்கலாம்.
பிறமொழி ஒலிப்புகளை தமிழ்படுத்துவதின் மூலம் தமிழ் வளரும் என்று ஒரு வாதமும், புதிய மொழி ஒலிப்புகளை ஏற்றுக் கொள்வதன் மூலம் மொழி வலிமையுறும் என்று ஒரு வாதமும் இருக்கிறது. இன்றைய தேவை என்ன என்பதில் தமிழ் விக்கிபீடியா குழுமம் தெளிவாக இருத்தல் அவசியம். தூயதமிழில் கலைச் சொற்களை உண்டாக்குவதில் தமிழ் விக்கிபீடியா போன்றோரின் பங்கு அவசியம். ஆனால் ஜானுக்கும், சாணுக்கும் எழுத்தில் ஒலிக்கும் முறையில் உள்ள வித்தியாசத்தை காட்டுவதும் முக்கியம். ஹிருதயத்தை இருதயமாக் வழங்குவதில் பிரச்சினையில்லை. ஹாரிப் பாட்டரை, காரி குயவனாக்கினால் அது முழுமையான களஞ்சியமாக இருக்க முடியாது. ’அழகிய ஞானசேகரன்’ என்ற பெயரை ஆங்கிலத்தில் ஆவணப் படுத்தும் போது அதன் ஒலிப்புக்கேற்ற phonetic குறிகளோடுதான் அந்தப் பெயரை எழுதி வைப்பார்கள். அதே போல் தமிழிலும் வேற்று மொழிச் சொற்களை சரியான முறையில் வழங்க கிரந்த எழுத்துகளையோ அல்லது சரியான் ஒலிக் குறிப்புகளையோ பயன்படுத்துங்கள் என்பதுதான் தமிழ் விக்கிபீடியா குழுவினருக்கான வேண்டுகோள்.
27 மறுமொழிகள்:
//தமிழுக்கு மட்டுமே சிறப்பான ‘ழ’கரம் ஃப்ரெஞ்சு, எஸ்பானியோலிலும் ஒலிக்கத்தான் செய்கிறது.// புதிய தகவல். ழகரத்தை சரியாக உச்சரிப்பவர்கள் மலையாளிகள்!
ம்ம், மிகவும் கவனமாக வார்த்தைகளை தேர்ந்தெடுத்து, ஒரே ஒரு எழுத்துப் பிழையுடன் (என் கண்ணுல அவ்ளோ தான் பட்டது) எழுதி இருக்கீங்க ஸ்ரீதர் அல்லது சிரிதர் அல்லது ஸ்ரிதர். :))
இது கொஞ்சம் ஆபத்தான டாபிக். ஆரியம்-திராவிடம், கைபர் கணவாய் எல்லாம் ஜகஜமாய் பேசப்படும். அடுத்த ரவுண்டுக்கு வரேன். :))
1) ஜெயலலிதாவில் வரும் ஜெவை கவனமாய் தவிர்த்து இருப்பதன் நுண்ணரசியல் என்ன? :p
2) ரஜினியில் வரும் ஜவை தவிர்த்து இருப்பதால் நீர் ஒரு கமல் ரசிகர் என பறைசாற்றிக் கொள்வதை மென்மையாக கண்ணடிக்கிறேன், சே! கண்டிக்கிறேன். :))
//தூத்துகுடியை டூட்டுகோரின் என்றோ, திருவனந்தபுரத்தை ட்ரிவாண்ட்ரம் என்றோ அழைப்பதில் எனக்கு நிச்சயம் உடன்பாடில்லை. துருக்கி, சீனா என்றே உச்சரிக்க வேண்டுமே தவிர டர்க்கி, சைனா என்று சொல்வது சரியல்ல.//
ஆங்கிலேயேர் பெயர்களை மாற்றி உச்சரித்ததற்கு இரண்டு காரணங்கள்: 1. அவர்கள் வாயில் நுழையவில்லை 2. தேவையான சில எழுத்துகள் அவர்களிடம் இல்லை. உலகின் எல்லா மொழிகளும் இந்தக் காரணங்களுக்காகப் பிற மொழிப் பெயர்களை தங்கள் இயல்புக்கு ஏற்ப மாற்றி எழுதுகின்றன. துல்லியமான ஒலிப்புகளைக் காட்டுவதற்காக புதிய எழுத்துகளைப் பெறுவதில்லை. தமிழுக்கும் இந்த உரிமை, வசதி உண்டு. கிரந்தம் கலந்தாவது ஒலிப்பைத் துல்லியமாக எழுதிக் காட்ட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.
ஆனால், ஆங்கிலத்தில் டர்க்கி, சைனா என்றிருப்பதால் தமிழிலும் அப்படித் தான் எழுத வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதா? germany, spain ஆகியவற்றின் உள்நாட்டுப் பெயர்களான டாயிட்சுலாந்து, எசுப்பானியா ஆகியவற்றை எழுதுவதை "தனித்தமிழ் விமர்சகர்கள்" ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நாடுகளிலேயே வாழும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் எசுப்பானியா, டாயிட்சுலாந்து என்று எழுதினாலும் தமிழ்நாட்டில் germany, spain என்று ஒலிப்புப் பிசகாமல் எழுதத் தான் வேண்டுமா? உண்மையில், தனித்தமிழுக்கும் உள்நாட்டுப் பெயரை எழுதுவதற்கும் தொடர்பே இல்லை ! கிரந்த எழுத்துகளுக்கான தேவை பெரும்பாலும் ஆங்கில வழிச் சிந்தனையின் விளைவே. மூல மொழி ஒலிப்புகளை நோக்கினால், பல இடங்களில் கிரந்தத் தேவை குறையும்.
//ஆனால் புரியாத விஷயம் என்னவென்றால் கிட்டத்தட்ட இடைச் சங்க காலத்தில் இருந்து பயன்பாட்டில் இருந்து வரும் எழுத்துகளை இடது கையால் ‘இந்த எழுத்துகள் தேவையில்லை’ என்று ஒதுக்குவது.//
அதே இடைச்சங்க காலம் முதல் ஆழ்வார்கள், நாயன்மார்கள், கம்பர், அண்மைய கவிஞர்கள் வரை கிரந்தம் விடுத்து எழுதி உள்ளார்கள் என்றும் நீங்களே கூறி உள்ளீர்கள். கிரந்தம் விடுத்து எழுதுவது புதிய கண்டுபிடிப்போ திணிப்போ அல்ல.
//‘ட’விற்கும், ‘த’விற்கும் ஆங்கிலத்தில் ஒரே எழுத்து முறையாக ‘ta’ இருந்தாலும் அதனை உச்சரிக்கும் முறைக்கு கீழே புள்ளி வைத்து சுட்டிக் காட்டும் முறை உண்டு. தமிழை ஒரு தொடர்பு மொழியாக, அறிவுக் களஞ்சிய மொழியாக மாற்ற முனையும்போது இம்மாதிரியான அடிப்படை சிக்கல்களை களைவது முக்கியமில்லையா? //
முக்கியம் தான். International phonetic alphabet மாதிரி தமிழிலும் ஒலிப்புகளைக் காட்டுவதற்கான குறிகளைக் கொண்டு வருவது பற்றி நெடு நாளாகவே அறிஞர்கள் உரையாடி வருகிறார்கள். ஒலிப்புக் குறிகள் வேறு, கிரந்தம் போன்ற முழு எழுத்துகள் வேறு. முக்கியமாக, இந்த ஒலிப்புக் குறிகள் கலைக்களஞ்சியங்கள், அகரமுதலிகள், மொழிநூல்களிலேயே கூடுதலாக காணக் கிடைக்கின்றன. ஒரு மொழியின் எழுத்தாகவே மாறி பள்ளிக்கூடங்களில் சொல்லித் தர வேண்டிய அளவுக்கு வருவதில்லை. சராசரியாக ஆங்கிலம் தெரிந்த ஒருவனுக்கு ஆங்கில எழுத்துகள் 26 மட்டுமே. IPA கற்றுக் கொள்ளத் தேவை இல்லை.
//இடைச்சங்க காலத்திலோ, பல்லவர் காலத்திலோ புதிய பலுக்கல் முறைகளை தமிழில் அறிமுகப்படுத்த உள்வாங்கிக் கொள்ள கிரந்த எழுத்துகளை உருவாக்கிக் கொண்டனர். அதனால் தமிழின் இலக்கணம் சிதைந்துவிடவில்லை என்பது எனது துணிபு. //
புதிய எழுத்துகள் அறிமுகத்தால் இலக்கணம் சிதைவதில்லை என்பது பிழையான புரிதல். ஒரு எளிய எடுத்துக்காட்டு: தமிழில் முதலில் மெய்யொலி வராது.
ஸ்நேகிதன் - பிழை; சிநேகிதன் - சரி
ஹ்ருதயம் - பிழை; இருதயம் - சரி
//இந்த இடத்தில் வறட்டுவாதமாக தமிழின் ‘ழ’கரம் ஆங்கிலத்தில் இருக்கிறதா என்று கேள்வியும் கேட்கப்படுவதை கவனித்திருக்கிறேன். ஃப்ரெஞ்சு வழியாக அமெரிக்க ஆங்கிலத்தில் நிறைய இடங்களில் ‘ழ’கரம் உச்சரிக்கப்படுகிறது. இலத்தீன் எழுத்து அடிப்படையில் அதற்கு [ɻ]ஒலிகுறிப்பானும் இருக்கிறது. தமிழுக்கு மட்டுமே சிறப்பான ‘ழ’கரம் ஃப்ரெஞ்சு, எஸ்பானியோலிலும் ஒலிக்கத்தான் செய்கிறது.//
ஒலி வேறு. ஒலிக்குறிப்பு வேறு. எழுத்து வேறு. தமிழிலும் ஜ ஒலி வரும் (பஞ்சு, நெஞ்சு..) ஆனால், ஒரே எழுத்து அது வரும் இடத்தைப் பொறுத்து வெவ்வேறு ஒலி தருவது போல் அறிவியல் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ழ ஒலி வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் 27ஆவதாக ஒரு எழுத்தைக் கொண்டு வந்தார்களா என்பதே கேள்வி.
//தொல்காப்பியத்திலிருந்து, நன்னூல்வரை திசைச் சொற்களையும், வடச் சொற்களையும், கிரந்த எழுத்துகளையும் உள்வாங்கி இலக்கணத்தினை சிதைக்காதவாறு மொழியாளுமை வளர கதவுகளை அகலவே திறந்து வைத்திருக்கின்றன என்பது எனது புரிதல்.//
கிரந்த எழுத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தொல்காப்பியம், நன்னூலில் எந்ந வரியில் குறிப்பிட்டிருக்கிறது? உள்வாங்குவதல் என்பது தமிழின் எழுத்துகளுக்கு ஏற்ப மாற்றீடு செய்தல். இதை எந்த இலக்கணமும் படிக்காமலே ஊர்ப்புற மக்கள்செய்கிறார்கள். swaminathan - > சாமிநாதன், சுவாமிநாதன்; raj - > ராசு.
//கம்பர் இராமாயணத்தில் தசரதன், இலக்ஷ்மணன், கும்பகர்ணன், விபீஷணன் போன்ற மணிப்பிரவாள பெயர்களை தூய தமிழில் தயரதன், இலக்குவன், கும்பகருணன், வீடணன் என்று மாற்றியதும், தொடர்ந்து பல நாயன்மார்கள், ஆழ்வார்கள் அதே முறையில் எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்க உதாரணங்கள். அதே போல் அருணகிரிநாதர் போன்றோர் கிரந்த எழுத்துகளை தாராளமாக பயன்படுத்தியிருக்கும் உதாரணங்களும் உண்டு.//
ஆமாம், இரு வழக்குகளுக்கான எடுத்துக்காட்டுகளும் உண்டு. அதனால், கிரந்தம் விடுத்து எழுதுவதற்கும் உரிமை உண்டு தான் என்று சொல்கிறோம். கிரந்த எழுத்து என்று ஒன்று இருப்பதற்காக கண்டிப்பாக எல்லா இடங்களிலும் அதைப் பயன்படுத்தி எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது, அப்படி எழுதினாலே "தீவிரவாதி, வெறுப்பு" என்று முத்திரை குத்துவதும் தான் பிரச்சினை. கம்பன், ஆழ்வார்கள் எல்லாம் தீவிரவாதிகளா?
//சமண காப்பியங்களில் வடச்சொற்கள் இருக்கத்தானே செய்கின்றன. //
100% மொழித் தூய்மை சாத்தியமற்றது. தேவையற்றது. அதை யாரும் இங்கு கோரவில்லை. ஆனால், பிற மொழிச் சொல்லை எழுதுகிறேன் பேர்வழி என்று அதற்காக புது எழுத்துகளைக் கொண்டு வருவது தவறு. 99% உலக மொழிகள் இப்படி செய்வதில்லை. குறிப்பாக, தமிழைப் போன்ற செம்மொழிகள்.
//ஹாரிப் பாட்டரை, காரி குயவனாக்கினால் அது முழுமையான களஞ்சியமாக இருக்க முடியாது.//
கற்பனையான பிழைகளைச் சொல்லி நியாயமான செயல்பாடுகளை முடக்க வேண்டாமா..
//’அழகிய ஞானசேகரன்’ என்ற பெயரை ஆங்கிலத்தில் ஆவணப் படுத்தும் போது அதன் ஒலிப்புக்கேற்ற phonetic குறிகளோடுதான் அந்தப் பெயரை எழுதி வைப்பார்கள். அதே போல் தமிழிலும் வேற்று மொழிச் சொற்களை சரியான முறையில் வழங்க கிரந்த எழுத்துகளையோ அல்லது சரியான் ஒலிக் குறிப்புகளையோ பயன்படுத்துங்கள் என்பதுதான் தமிழ் விக்கிபீடியா குழுவினருக்கான வேண்டுகோள்.//
எல்லா முதன்மைக் கட்டுரைகளிலும் ஆங்கிலம், மூல மொழிகளில் ஒரு பெயரை எப்படி எழுதுகிறார்கள் என்று காட்டுகிறோம். பெயரை ஒலித்துக் காட்டும் ஒலிப்பதிவுகள் கூட சேர்க்கலாம். அடைப்புக்குறியில் கிரந்தம் கலந்து கூட எழுதிக் காட்டலாம். IPA போல ஒலிப்புக் குறிகள் கொண்டு வருவதற்கான தேவைகள் நிறைய உள்ளன. உரையாடல்கள் நடக்கின்றன. ஒலிப்பைச் சுட்டுவது தான் தேவை என்றால் அதற்கு கிரந்தம் மட்டுமே ஒரே வழி அல்ல. உலக மொழி வழக்கங்களுக்கு ஏற்பவும், நுட்பங்களைப் பயன்படுத்தியும் செய்யலாம்.
புத்தருக்குப் பிற மொழிகளில் வழங்கும் பெயர்கள்:
Sṳt-kâ-mèu-nì
Thích-ca Mâu-ni
Śākyamuni
Buda
http://en.wikipedia.org/wiki/Gautama_Buddha பக்கம் பாருங்கள்.
buddha என்று எழுதினால் கூட ஆங்கிலேயன் பூடா என்று ஒலிப்பதுண்டு. இதை விட தமிழில் dh ஒலிப்பு வராதது பிரச்சினை?
ஒரு பெயர்ச்சொல் பல உலக மொழிகளில் பல்வேறு பெயர்கள், ஒலிப்புகள் கொண்டிருப்பது இயற்கை. ஒலிப்புக்காக மொழியை மாற்றத் தேவை இல்லை.
சூடான விஷயம், இந்த கிரந்த எழுத்துக்கள்னு சொல்றதை, பள்ளி நாட்களிலேயே கற்றுக் கொடுத்தாங்க. அதைப் பயன்படுத்தினால் என்ன தப்பு? ஏன் ஸ்டாலின் பெயருக்கு மட்டும் "ஸ்" போடலாமா? ச்டாலின் அப்படினு எழுதினால் என்ன?? புரியலை, போகட்டும், இதனாலேயே விக்கியில் எழுதறதைக் குறைச்சிருக்கேன். ஸ, ஜ, ஹ, ஷ, க்ஷ இல்லாமல் எழுத வரலைங்கறது தான் முக்கியக் காரணமே.
நல்ல ஆராய்ச்சி! பிரஞ்சில் jவை ழவாக உச்சரிப்பர்.
//விக்கிபீடியா - விக்கிப்பீடியா//
கிரந்தத்தை இடது கையாலும் ஒதுக்கவில்லை வலக்கையாலும் தழுவவில்லை. கிரந்தமில்லாமல் எழுதலாம் என்பதை சிலர் செய்து காட்டுகின்றனர். ஆனால் அவ்வாறு எழுதுபவர்கள் எல்லாம் தனித்தமிழ் தாலிபான்கள் என்று தரக்குறைவாக மதிப்பீடுப் போடும் கும்பல் தான் உண்மையில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தா-வில் பல்லாயிரக்கணக்கில் உள்ள கட்டுரைகளை கிரந்தமின்றி செய்வது முடியாத செயலும் கூட. பட்டம் கொடுக்கும் அன்பர்கள் இதனை மனத்தில் நிறுத்த வேண்டும்.
-முரளி.
ravi, like you said, it is not fair to stamp people as terrorists if they forsake the use of these letters. But the usage of tamil wikipedia is to make sure that a lot of these articles are available in tamil for people to read and they only read if it is easy to do. Do you agree/understand that ? Offcourse, i am not questioning yours/friends commitment in getting things done in tamil but only the priority.
கீதா சாம்பசிவம் அவர்களுக்கு,
கண்டிப்பாக நீங்கள் கிரந்த எழுத்துக் கொண்டு எழுதலாம் விக்கியில் யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள். நான் கிரந்த எழுத்துக் கொண்டு எழுதியும் வருகிறேன். உங்களுக்கு உண்மையில் என்ன பிரச்சனையிருந்தது என தெளிவு படுத்தவும்.
-முரளி
கீதா சாம்பசிவம்,
தமிழ் விக்கிப்பீடியாவில் உங்களுக்கு எப்படி எழுத வருகிறதோ அப்படியே எழுதலாம். கிரந்தம் கலந்து தான் எழுத வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்த எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள் பட்டியலைக் கீழே காணலாம். இவை தவிர, கட்டுரை உரைகளில் ஆயிரக்கணக்கான இடங்களில் கிரந்தம் இருக்கிறது.
தமிழ் விக்கிப்பீடியாவில் ஸ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் ஷ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் ஹ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் ஜ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் ஸ்ரீ என்ற எழுத்தில் தொடங்கும் கட்டுரைகள்
தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம்
மணிகண்டன்,
//But the usage of tamil wikipedia is to make sure that a lot of these articles are available in tamil for people to read and they only read if it is easy to do. Do you agree/understand that//
ஒத்துக்கிறேன்.
கிரந்தம் நீக்கி எழுதுவது தமிழ் விக்கிப்பீடியர்களின் முன்னுரிமை இல்லை. இப்பவும் பலர் தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கலந்து தான் எழுதுறாங்க.
தமிழ் விக்கிப்பீடியாவில் கிரந்தம் கட்டுரை சில விசயங்களைத் தெளிவுபடுத்தும்னு நம்புறேன்.
"தனித்தமிழ் வெறியர்கள்" என்று கிளப்பி விடுபவர்களுக்குத் தமிழ் விக்கியில் பல பிரச்சினைகள். சோவியத் யூனியனை சோவியத் ஒன்றியம் என்று எழுதினால் கூட தனித்தமிழ் வெறி என்கிறார்கள். இவர்களிடம் என்ன உரையாட?
சும்மா ஒரு மறுமொழி. மறுமொழிகளை மின்மடலில் பெற.
ஒரு சாதாரண தமிழனாக ,
ஸ்பெய்ன் பற்றி அறிய நான் ஸ்பெய்ன் என்றுதான் கூகுளிடுவேன் , இசுபானியா என்று நீங்கள் எழுதினால் விக்கியின் நோக்கமே அடிபட்டு போகிறதே ,
மொழி வளர்ச்சிக்கு பின்னால் போவதுதான் தீர்வா ?
மதி இண்டியா,
ஸ்பெயின் என்று தேடினாலும் அந்நாட்டைப் பற்றிய கட்டுரை விக்கிப்பீடியாவில் வரும். எத்தனையோ பக்கங்களில் ஸ்பெயின் என்ற சொல் உண்டு.
english - ஆங்கிலம்
egypt - எகிப்து
என்பது போல் ஒவ்வொரு நாடு / மொழி / இடத்துக்கும் உள்ளூர்ப் பெயர், ஆங்கிலம் அல்லது உலகப் பெயர், தமிழ்ப் பெயர் என்று மூன்று பெயர்கள் உள்ளன. சீனா, எகிப்து போன்ற நாடுகளுடன் ஆங்கிலேயர் வரவுக்கு முன்பே நமக்குத் தொடர்பு இருந்ததால் அந்தந்த நாடுகளின் உள்ளூர்ப் பெயர்களை ஒட்டி நம் தமிழ்ப் பெயர்கள் அமைந்திருந்தன. இப்போது உலகின் பல நாடுகளிலும் தமிழர் வாழ்ந்து நேரடித் தொடர்புகளைப் பேணுகையில் ஆங்கிலப் பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.
செருமன் நாட்டில் 50,000+ தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் டாயிட்சுலாந்து என்று தான் செருமன் நாட்டைக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில், தமிழ் விக்கிப்பீடியாவில் டாயிட்சுலாந்து, டாயிட்சு மொழி என்று எழுதக் கூடாது என்று சொல்வது சரியா? பல காலம் Deutsche bank என்ற பெயரைக் கேள்வி பட்ட எனக்கு செருமன் நாடு போகும் வரை Deutsche என்றால் செருமன் என்று தெரியாது. இது தான் நாம் தமிழரிடம் வளர்க்க விரும்பும் உலக அறிவா? ஆங்கில / உலகப் பெயர்களைப் பயன்படுத்தும் அதே வேளை தகுந்து இடங்களில் உள்ளூர்ப் பெயர்களையும் அறிமுகப்படுத்துவது நன்று.
நிற்க. நாடுகள் / மொழிகள் / இடங்கள் தொடர்பில் உள்ளூர் பெயர் பயன்படுத்தலாமா என்பது குறித்த விக்கி கொள்கை உரையாடலின் ஒரு படியாகவே எசுப்பானியம் என்ற பெயர் பயன்பாட்டில் இருக்கிறது. இது போல் ஒவ்வொரு நாட்டின் பெயரையும் மாற்றிக் கொண்டிருக்கவில்லை. இது போல் விக்கியில் பல கொள்கை உரையாடல்களும் அதற்கென ஓரிரு மாதிரிக் கட்டுரைப் பக்கங்களும் உள்ளன. தயவுசெய்து, ஒரு கொள்கை உரையாடலுக்கான எடுத்துக் காட்டுப் பக்கத்தைக் கொண்டு ஒட்டு மொத்த விக்கி பற்றி தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நன்றி.
வாங்க ராபின்!
உங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வாங்க அம்பி சார்!
//ரவுண்டுக்கு வரேன். :))//
வாங்க வாங்க :) மிக்க நன்றி!
// நீர் ஒரு கமல் ரசிகர் // அவரை கமல்காசனா மாற்றாம சுருக்கிச் சொல்லி நீங்களும் ஒரு விசிலடிச்சான் குஞ்சுன்னு காட்டிக்கிட்டீங்களே :)
வாங்க ரவி!
உங்களுடைய கருத்துகள் மிகவும் முக்கியமானவை. பகிர்தலுக்கு மிக்க நன்றி.
//தமிழுக்கும் இந்த உரிமை, வசதி உண்டு. கிரந்தம் கலந்தாவது ஒலிப்பைத் துல்லியமாக எழுதிக் காட்ட வேண்டும் என்று கட்டாயம் இல்லை.//
வலிந்து புகுத்த வேண்டிய கட்டாயம் இல்லைதான். ஆனால் இருக்கும் வசதியை மறுப்பது தேவையா? மறுப்பது உங்கள் நிலைப்பாடு இல்லையென்று பின்னர் தெரிவித்து இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி!
//கிரந்தம் விடுத்து எழுதுவது புதிய கண்டுபிடிப்போ திணிப்போ அல்ல.//
அதே போல் கிரந்தம் சேர்த்து எழுதுவதும் புதிய கண்டுபிடிப்பு இல்லையே. பல நூற்றாண்டுகளாக இருக்கும் கல்வெட்டுகளையும், ஆவணங்களையும் மறுக்கத்தான் முடியுமா? விக்கிபீடியா போன்ற பொதுக் குழுமத்தின் நிலை என்ன என்று தெரிந்து கொள்வதே விழைவு.
//ஒலிப்புக் குறிகள் வேறு, கிரந்தம் போன்ற முழு எழுத்துகள் வேறு.//
உண்மை. IPAல் இருக்கும் அத்தனை ஒலிப்புகளையும் பயில வேண்டியத் தேவை இல்லை.
ஆனால் பல நூற்றாண்டுகளாக தமிழில் புழங்கிவரும் அயற்சொற்களை கூடவே தெரிந்துகொள்வதில் குறையிருக்கிறதா?
//ஸ்நேகிதன் - பிழை; சிநேகிதன் - சரி
ஹ்ருதயம் - பிழை; இருதயம் - சரி//
சரியே! நிலப் பத்திரங்களிலும், உயில்களிலும் ‘அடியிற்க் கண்ட ஸ்தாவர ஜங்கம சொத்துககளை மனுதாரர்’ என்பன போன்ற சிக்கலான பிரயோகங்களை எளிமைப்படுத்துவதை வரவேற்கிறேன்.
இராஜாஜி - இராசாசி என்று மாற்றுவதில் உள்ள பிழையும் உண்மைதானே. தமிழ் விக்கிப்பீடியாவில் இராஜாஜியில் உள்ள இறுதிச் எழுத்தான ‘ஜி’ என்பது இந்தியில் மரியாதை நிமித்தமாக வழங்கப்படும் ஒரு எழுத்து. பல நூற்றாண்டுகளாக ‘ஜி’யை நன்றாக ஒலிக்கத் தெரிந்த ஒரு தமிழன் இன்று ஏன் ‘சி’ என்று ஒலிக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை. இதில் இலக்கணப் பிழை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
//ழ ஒலி வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் 27ஆவதாக ஒரு எழுத்தைக் கொண்டு வந்தார்களா என்பதே கேள்வி.//
உண்மை.
//கற்பனையான பிழைகளைச் சொல்லி நியாயமான செயல்பாடுகளை முடக்க வேண்டாமா..//
முடக்குவதல்ல நோக்கம். தெளிவு பெற வேண்டும் என்பதே விருப்பம்.
//swaminathan - > சாமிநாதன், சுவாமிநாதன்; raj - > ராசு.//
சாமிநாதன், சுவாமிநாதன் வரையில் பிரச்சினையில்லை. ஜ், ஷ் போன்ற எழுத்துகளை தமிழ்படுத்தும்போது சில உச்சரிப்பு பிரச்சினைகள் இருக்கின்றன. அதனைப் பற்றிய கவலைப்படத் தேவையில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள். யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
//ஒலிப்பைச் சுட்டுவது தான் தேவை என்றால் அதற்கு கிரந்தம் மட்டுமே ஒரே வழி அல்ல. உலக மொழி வழக்கங்களுக்கு ஏற்பவும், நுட்பங்களைப் பயன்படுத்தியும் செய்யலாம்.//
ஒருவேளை இது நடைமுறைப் படுத்தப்பட்டால் அது நல்லதே. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நம் முன்னோர்கள் இதே காரணத்திற்காக சில ஒலிப்பான்களை எழுத்துவடிவமாக கொண்டு வந்தார்கள். அதற்கு மாற்றாக வேறு முறைகளை நீங்கள் பரிந்துரைக்கிறீர்கள். தமிழில் சீரிய உச்சரிப்புகள் சேர்க்கப்பட்டால் மகிழ்ச்சிதான். அது தமிழர்களின் தொடர்பு வலையை (networking) பலப்படுத்தும் என்பது எனது அவதானிப்பு.
//ஆங்கிலேயன் பூடா என்று ஒலிப்பதுண்டு//
அதனால் அது சரியென்று சொல்வீர்களா? ஆங்கிலேயர், இத்தாலியர், ஐரோப்பியர், பார்சி என்று ஒவ்வொருவர் ஒலிக்கும் முறையைப் பற்றிய பிரச்சினையில்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் ‘புத்தரை’ குறிக்கும்போது அதன் ஒலிப்புகளை சரியான முறையில் குறித்து வைப்பது நல்லதே. ’வ’ இல்லாதது வங்காளிகளுக்கு பிரச்சினையே. மற்றவர்களோடு கலந்துரையாடும் வங்காளிகள் அவரளவிற்காவது ‘வ’ உச்சரிப்பை பழக்கிக் கொள்கிறார் என்பது எனது அவதானிப்பு.
//கிரந்தமில்லாமல் எழுதலாம் என்பதை சிலர் செய்து காட்டுகின்றனர். //
நல்ல முயற்சிதான் முரளி.
//எல்லாம் தனித்தமிழ் தாலிபான்கள்//
அப்படி சொல்வதில் எனக்கும் ஒப்புதலில்லை.
ஜெயபாரதன் போன்றவர்கள் தன் பெயரை சிதைப்பதைப் பற்றியும் விக்கியில் விவாதம் செய்திருந்தார்.
//பல்லாயிரக்கணக்கில் உள்ள கட்டுரைகளை கிரந்தமின்றி செய்வது முடியாத செயலும் கூட//
ஒத்துக் கொள்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி முரளி :)
வாங்க கீதாம்மா!
//ஏன் ஸ்டாலின் பெயருக்கு மட்டும் "ஸ்" போடலாமா?//
அதைப்பற்றியும் விக்கியில் பெரிய விவாதமே நடந்திருக்கிறது. ரவி சொல்லியிருப்பது போல் ‘தமிழில் முதலில் மெய்யொலி வராது’ என்ற வகையில் அது தவறான பயன்பாடு. ஸ்நேகாவை - சிநேகா என்று சொல்வது போல் ஸ்டாலினுக்கும் ஒத்த தமிழ்பெயர் இருக்கிறது - இசுடாலின் (அ) சிடாலின். ஆனால் அதை அந்தப் பெயரின் சொந்தக்காரர் அனுமதியின்றி விக்கி போன்ற பொதுத்தளத்தில் செய்யலாமா என்பதில் சற்றே குழப்பம் மிஞ்சுகிறது.
சேதுபதி பள்ளியில் நான் 1984லிருந்து 1990வரை படித்தேன். :)
வாங்க மணிகண்டன். உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. ரவி பதில் சொல்லிட்டார்ப் போல :)
ரவி! மணிகண்டனுக்கு அளித்த பதில்களுக்கு நன்றி.
//தனித்தமிழ் வெறியர்கள்" என்று கிளப்பி விடுபவர்களுக்குத் தமிழ் விக்கியில் பல பிரச்சினைகள். சோவியத் யூனியனை சோவியத் ஒன்றியம் என்று எழுதினால் கூட தனித்தமிழ் வெறி என்கிறார்கள். இவர்களிடம் என்ன உரையாட?//
:((
//ஆங்கில / உலகப் பெயர்களைப் பயன்படுத்தும் அதே வேளை தகுந்து இடங்களில் உள்ளூர்ப் பெயர்களையும் அறிமுகப்படுத்துவது நன்று.//
மிக்க சரியே!
//ஒரு கொள்கை உரையாடலுக்கான எடுத்துக் காட்டுப் பக்கத்தைக் கொண்டு ஒட்டு மொத்த விக்கி பற்றி தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். நன்றி//
புரிகிறது. அப்படியே செய்கிறேன். நன்றி!
////ஆனால் அதை அந்தப் பெயரின் சொந்தக்காரர் அனுமதியின்றி விக்கி போன்ற பொதுத்தளத்தில் செய்யலாமா என்பதில் சற்றே குழப்பம் மிஞ்சுகிறது.///
எசுடாலின் :
தோற்றம் :1898; மறைவு : 1953
அவர் திரும்ப வந்து அனுமதி மறுக்க மாட்டாரு..தைரியமா உபயோகிங்க.
இசுடாலின், எசுடாலின்,சுடாலின் இப்படி எது வேணா எழுதலாம். ஆனா படிக்கிறவனுக்கு புரியுமா தெரியலை.தமிழ்ல ஏதோ சொல்றாங்க ஆனா என்ன சொல்றாங்க தெரியலை அப்படீன்னு தமிழன் தெகச்சுப் போய் நிக்கப் போறான் :)
Perhaps they are afaird of M.K. stalin. Soviet Union is easily understood where as Soviet Onrium
may be confusing if one does not know what Onrium is. Panchayt Onrium means Panchyat Union.So one can use Soviet Onriyum but has to explain that Onrium here means
Union and what is meant by Union in this context.One can also state that in court cases it is always
Union of India vs. or X vs. Union
of India, and not India vs X or X vs. India. Union has a specific meaning which is lost if one thinks
that Onrium means something like Panchayat Union.Unfortunately persons like Ravi Shankar have no pateience for nuances in understanding and in contextualizing the significance of meanings and words. In 'Fair and Lovely' the meaning of Fair is
linked to color and not to fairness as justice where as in Fair Trade the word Fair signifies Justice . Ravi Shankar
and his guru Ira.Ramki translated
this without understanding the differences. I have no patience to argue with those who care more for 'purity' of the language than with the right understanding.For me
understanding cannot be sacrificed in the alter of pure language.
//ஆனா படிக்கிறவனுக்கு புரியுமா தெரியலை.தமிழ்ல ஏதோ சொல்றாங்க//
கிரந்த எழுத்துக்களை தமிழ்படுத்தி உபயோகிப்பது வழக்கம்தான். லக்ஷ்மணனை - இலக்குவன் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் செய்கிறோம். இன்று கம்ப் இராமாயணம் படிப்பவர்கள் அதை ஒரு குறையாக எண்ணுவதில்லையே.
ஆனால் பிரச்சினை எங்கு வருகிறது என்றால் - ஸ்டாலின், எம்ஜிஆர், ரஜினிகாந்த் என்று வெகுஜன ஊடகங்கள் தொடர்ந்து உபயோகபடுத்திக் கொண்டு வரும் நேரத்தில், விக்கி போன்ற தகவல் ஊடகங்கள் ‘கிரந்த எழுத்துகளை விலக்கி விட்டோம். ‘ஹ’ எல்லாம் எங்கள் கிராமத்தில் ஒலிப்பதில்லை. தமிழ் மொழிக்கு அது தேவையில்லை’ என்று பிரகடனபடுத்துவது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.
இன்றும் கிராம்ப்புறங்களில் ‘சொன்னாஹ’, ‘வந்தாஹ’ என்று ‘ஹ’ ஒலிப்பை அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தத்தான் செய்கிறார்கள். ‘ஷ’, ‘ஜ’ எல்லாம் வெகு பரவலாக உபயோகிக்கப் படுகிறது. எங்களுக்குத் தேவையில்லை என்று சொல்வது சரியான செயல் அல்ல என்று சுட்டிக் காட்டுவதே இந்த இடுகையின் நோக்கம்.
வாங்க அனானி நண்பரே,
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.
//persons like Ravi Shankar have no pateience for nuances in understanding and in contextualizing the significance of meanings and words.//
இப்படிச் சொல்வது சரியாக இருக்காது என்றே நினைக்கிறேன். ஏதேனும் குறிப்பிட்ட பயண்பாட்டில் பிரச்சினை என்றால் அதனைச் சுட்டிக் காட்டியே கேள்வி எழுப்பலாம். அதுதானே முறை. பொத்தாம் பொதுவாக குறை சொல்வது தன்னார்வலர்களை ஊக்குவிப்பது போல் இருக்காதே. அவரும் ஒரு பதிவிட்டிருக்கிறார். அங்கே சென்று உங்கள் கேள்விகளை எழுப்பினால் பொறுமையாக பதிலளிப்பார் என்றே நம்புகிறேன்.
சோவியத் ஒன்றியம், இந்திய ஒன்றியம் என்று உபயோகிப்பதில் எனக்கு பிரச்சினைத் தோன்றவில்லை. ஒருகாலத்தில் பேருந்து, மிதிவண்டி போன்ற வார்த்தைகள் நகைப்பிற்கிடமாக இருந்தன. இன்று சொல்லப்படும் மகிழுந்து கூட எனக்கு நல்லச் சொல்லாகத் தெரிகிறது.
ஒன்றியம் போன்றச் சொற்களில் எதுவும் பாரிய வேறுபாடு இருந்தால் அதையும் நீங்கள் விக்கிக் குழுமத்திடம் எடுத்துச் சொல்லுங்கள். விவாதம் தோன்றினால் நல்ல விடை கிடைக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துகள்.
Post a Comment