ஆனந்த விகடனில் வந்த ஒரு நகைச்சுவை நாடகத்தின் பாதிப்பில் என்னுடைய டைரியில் முதலில் ஒரு நாடகம் எழுதினேன் என்று நினைக்கிறேன். எனக்கு நினைவிருக்கும் அளவிற்கு எனது குடும்பத்தாருக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை. உற்சாகமான சம்பவம் அது. பின்னர் எட்டாம் வகுப்புப் படிக்கும்போது கவிதையெல்லாம் எழுதுகிறேன் என்று நிறைய பேரை மிகவும் இம்சித்திருக்கிறேன். பிறகு ஆங்கில நாவல்கள் படித்த பாதிப்பில் கல்லூரி விழா மலருக்கு ஒரு ஆங்கிலக் கதை ஒன்று எழுதிக் கொண்டு போய்க் கொடுத்தேன். கேர்ள் ஃப்ரெண்டுடன் பைக்கில் போன ஒரு கல்லூரி மாணவன் போலிஸ் கமிஷனரின் ஜீப்பில் மோதிவிட அவர் கூப்பிட்டு ரோட்டில் நிறுத்தி விசாரணை செய்யும் ஒரு கதை. நகைச்சுவையாக முயன்றிருந்தேன் (ஹே.... நிஜமாப்பா). ஏனோ ஆண்டு மலர்க் குழுவினர் அதைக் கண்டுகொள்ளவேயில்லை. படித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான். அப்புறம்தான் புரிந்தது, எழுதினால் மட்டும் போதாது, அதை தன்முனைப்போடு எடுத்துச் சென்று பலருக்கும் அறிமுகப் படுத்தவேண்டும் என்று. இன்று வரை எனக்குச் செய்ய வராத, செய்யத் தெரியாத ஒன்று அது.
பிரசன்னா ஸ்ரீராமை ஊக்குவிக்கும் விதமாக ஒரு ப்ளாக் தளம் அமைத்து அதில் அவருடைய முதல் கதையை பதிப்பித்து இருக்கிறேன். தொடர்ந்து அவர் அந்த தளத்தில் எழுதுவது அவருடைய மற்றும் அவருடைய பெற்றோரின் விருப்பமும் முனைப்பும் பொருத்தது.
முன்பொருமுறை குழந்தை இலக்கியங்கள் சிலது எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஒரு சிறுவர்க் கதையைப் பதிந்திருந்தேன். இப்பொழுது பிரசன்னாவின் கதையை மூலமாக வைத்து ஒரு தமிழ்க் கதை இங்கே எழுதியிருக்கிறேன். அவர் கதையில் உள்ள ஒரு புத்துணர்ச்சி எனது கதையில் இல்லாதது போல்தான் தோன்றியது. மூலத்தின் ஆசிரியருக்கு தமிழ் படிக்கவருமா என்பது சந்தேகம் என்பதினால் நாளை ஏதும் காப்பிரைட் பிரச்சினை வராது என்று நம்புகிறேன். இருந்தாலும் முன்னெச்சரிக்கையாக அவர் தந்தையிடம் அனுமதி கோரியிருக்கிறேன்.
உபரிச் செய்தி: பிரசன்னா ஸ்ரீராமின் தந்தை எனது மூத்த சகோதரரும் ஆவார். ஹிஹி... அதான் அந்த முதல்வரி பில்டப்பு.