November 23, 2009

குட்டிசாத்தானும் மாயச் சங்கிலியும்

’என்ன அப்புடி பாக்குறே? செட்டுல சேரனும்னா மாஜிக் தெரிஞ்சிருக்கனும். நாங்கள்லாம் நெறய மாஜிக் பண்ணுவோம்’ டட்லி மிஸ்ஸோட கிளாஸ்ல இருக்கும்போதுதான் சிட்டி ஓவியாவை சீண்டறான்.

ஓவியாவும் சளைக்காம பதிலுக்கு கேக்கிறா,

’என்னா மாஜிக்கு பண்ணுவீங்க’

சிட்டி ஸ்டைலாப் பேசற நெனப்புல ‘உர்’ர்ருன்னு மூஞ்ச வச்சிகிட்டுப் பேசுறான்.

‘நெறய... கார்ட்ஸ்ல நீ நெனக்குற கார்டை கண்டுபிடிச்சிருவேன். ஒன் ருப்பி காய்னை உங்கண்ணு முன்னால காணாம போக வைக்கட்டா?’

’அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்’ ஓவியா நோட்டுப் புத்தகத்துல கணக்குப் போடறாப்புல திரும்பிகிட்டா. தீவாளிம்போது வீட்டுக்கு வந்தாரே சாய்ராம் அங்கிள், அவரு நெறய குட்டி குட்டி மேஜிக்குல்லாம் செஞ்சாரு அப்ப. இப்பதைக்கு ஓவியாக்கு ஒண்ணும் தெரியாட்டினாலும் சிட்டி ரொம்பத் தொணப்பினா சாய் அங்கிள்கிட்ட கேட்டு அடிச்சு விட்டுர்றலாம்ல. அந்த தைரியம்தான்.

ரேவதி மிஸ் வந்து கண்ணைக் காட்டினவுடன் டட்லி மிஸ் காப்பி குடிக்க எழுந்து போனாங்க. ‘யேய்... பெசாசுங்களா... சத்தம் போடாம ஹோம்வொர்க் செஞ்சிட்டு இருங்க. வந்திர்றேன்’ அவங்க வெளில போன நேரத்துல திரும்பவும் தொடங்கிருச்சு மேஜிக் செட்டு பத்தி பேச்சு.

‘இவனப் பாத்தியா? இவன் உண்மைல ஒரு மேஜிக் பென்சில்’ ராக்கியைக் காமிச்சு சொல்றான் சிட்டி. ராக்கி பாக்க ஒல்லியா பென்சிலாட்டம்தான் இருப்பான்.

‘எங்க பென்சிலக் காட்டுப் பாப்பம்’

ஓவியாவுக்கு எப்படியும் அந்தப் பசங்களோட மேஜிக் குரூப்புல சேந்திரனும்னு கழுத்து மட்டும் ஆச. ஆனா அதுக்காக பாய்ஸ்கிட்ட ஒரேயடியா சரண்டர் ஆயிற முடியுமா என்ன? முடிஞ்சவரைக்கும் முனைப்பா கேள்வி கேட்டு வெறுப்பேத்திகிட்டு இருக்கா.

சிட்டி மர்மச் சிரிப்போடச் சொல்றான் ‘அவனேதான் மேஜிக் பென்சில். தலகீழா நின்னு அவன் படம் வரஞ்சா அப்படியே அந்த சாமான் நெசத்துல வந்திரும்’

ராக்கி தலகீழா நின்னு காமிக்கிறான். அப்படியே பேலன்ஸ் பண்ணி மேல கீழ நடக்குறான்.

‘என்னடா பண்ணுற?’

ராக்கி திரும்பவும் நேராகிட்டு கீழ தரையில காமிக்கிறான். பெரிய சோழி கணக்கா ஒரு கூழங்கல்லு தரையில இருக்கு.

‘பாத்தியா? நான் தலையால கூழாங்கல்லு வரஞ்சேன். இதோ வந்திருச்சு. நீ மேஜிக் பண்ணு பாப்பம்’

‘ஹே... நோ கேர்ள்ஸ்... ஐ டோல்ட் யூ நோ’

அஜி வந்திட்டான் இப்ப. அவன் எப்பவும் இங்கிலீஷ்தான். கேர்ள்ஸ் பாத்தாலே அவனுக்கு புடிக்காது. அவனும் சிட்டியும் ட்வின்ஸ். கார்பன் காப்பி போல அச்சு அசலா ஒரே மாறி இருப்பாங்க.

‘மேஜிக் செட்ல ஒன்லி பாய்ஸ்தான். ராக்கி, அஜி & சிட்டி RAC குரூப்’

ஓவியாவுக்கு லைட்டா அழுகை வர்ற மாதிரி இருக்கு. சட்டுன்னு நெனப்பு வந்த மாதிரி சொல்றா

‘என்னா பெரிய மேஜிக் செட்டு. நான் முகுந்த் வீட்டுல இருக்கற குட்டிசாத்தான் செட்டுல சேந்துக்கறேன்’

ரோஷமா திரும்பி ஒக்காந்துகிட்டா. டட்லி மிஸ் வாயைத் துடச்சிட்டே பஜ்ஜி ஏப்பத்தோட உள்ளாற வர்றாங்க. மேஜிக் செட்டு சட்டுனு கலைஞ்சிட்டுது.

ஸ்கூல் விட்டு திரும்பும்போது சிட்டி ஓவியா பக்கத்துலயே சைக்கிள்ல ஓட்டிவந்து ‘நிசமாவா சொன்ன? முகுந்த் வீட்டுல குட்டிசாத்தான் இருக்கா?’

ஓவியா வேகமா சைக்கிள அழுத்தறா. இந்தப் பாய்ஸ் எப்பவும் இப்படித்தான். நோ கேர்ள்ஸ்னு சொல்லிட்டு என்னாத்துக்கு இப்ப வந்து பேசறான்?

சிட்டி சட்டுன்னு சொல்றான் ‘ஏய்... நில்லு.. நில்லு.. மேஜிக் செட்டுக்கு பேரு மாத்திட்டோம். RACO – ராக்கி, அஜி, சிட்டி, ஓவியா. ஓக்கேவா? இப்பச் சொல்லு. குட்டிச் சாத்தான் நெசமாவே இருக்கா?’

ஓவியா பயங்கர சந்தோசமா குட்டி சாத்தான் பத்தி நிறய்ய கதை சொல்றா.

‘எங்க வீட்டு டெர்ரெஸ்லேந்து பாத்தா முகுந்த் வீட்டு மாடி ரூம் ஜன்னல் ரொம்ப பக்கமாத் தெரியும். அங்கதான் குட்டி சாத்தான் இருக்கு. எங்கம்மா அந்த பக்கமே போகக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. பெரிய குத்து விளக்கு வச்சிருப்பாங்க. முகுந்த் தாத்தா உக்காந்து பூஜை பண்ணிட்டே இருப்பாரு’

சிட்டி ஒரு மாதிரி நம்பினாலும், அஜிக்கு நம்பிக்கையே வர மாட்டேங்குது.

’ஐ காண்ட் பிலீவ் இட். குட்டிசாத்தானுக்கு பூஜ எல்லாம் பண்ண மாட்டாங்க. உடுக்கைதான் அடிக்கனும்’

உடனே சிட்டி ஆமாம்னு மண்டைய ஆட்டனதோட விடாம் ‘டுரிங்ங்ங்... டுரிங்ங்ங்...’னு வாயிலேயே உடுக்கை அடிச்சுக் காமிக்கிறான்.

’இப்படி கோடாங்கி உடுக்கை அடிச்சாத்தான் குட்டி சாத்தான் நேர்ல வரும். முகுந்த் தாத்தா உடுக்கைல்லாம் வச்சிருந்தாரா?’

ஓவியாக்கு உடுக்கையப் பத்தி தெரியல. எப்புடி இருக்கும் அது? அவ பாத்ததெல்லாம், பக்கத்து வீட்டு தந்தேசுவர ராவ் செவப்பு வேட்டி கட்டிகிட்டு அவங்க வீட்டு மொட்டை மாடில கெழக்கால இருக்கற ரூம்ல கண்ணை மூடி உக்காந்திட்டு மந்திரம் சொல்லி ஜெபிச்சிட்டு இருப்பார். ஓவியாவோட மம்மி சொல்லிருக்காங்க.

‘அங்கெல்லாம் எட்டிப் பாக்கக்கூடாது. அது குட்டி சாத்தான் பூஜை’ன்னு.

சிட்டி ஸ்டைலா சொல்றான்,

‘ராக்கி ஒரு மேஜிக் செயின் வரஞ்சு வச்சிருக்கான். உன் குட்டிச் சாத்தானெல்லாம் அது போட்டு ஈஸியா கட்டிர்றலாம்.’

‘குட்டி சாத்தான் இஸ் வெட்டி சாத்தான்’ அஜியும், ராக்கியும் சொல்லி சொல்லி சிரிக்கிறாங்க. ஓவியாக்கு கோவம் வந்திருச்சு.

‘குட்டி சாத்தானை அப்படி எல்லாம் பிடிக்க முடியாது. முகுந்த் தாத்தா உங்களைக் கட்டித் தூக்கி பானைக்குள்ளப் போட்டிருவாரு’

ஃப்ரைடே ஈவ்னிங் ஓவியா வீட்டுல ‘பாட் லக்’னு நிறய கெஸ்ட்ஸ் வர்றாங்க. எல்லாரும் ஒரு டிஷ் பண்ணிக் கொண்டு வந்து சேந்து உக்காந்து சாப்பிடறதுக்கு பேருதான் ‘பாட் லக்’. அஜியும், சிட்டியும் கூட வந்திருக்காங்க. நர்மதா ஆண்ட்டி ஓவியாக்கு புடிச்ச சிக்கன் நக்கட்ஸ் பண்ணி கொண்டு வந்திருக்காங்க. டின்னர் முடிஞ்சு மாடியில ஓவியா ரூம்ல மீடியா கேம்ஸ் வெளயாட ஃப்ரெண்ட்ஸை எல்லாம் கூட்டிட்டுப் போறா. அவங்களோட ராக்கியும் வர்றான்.

‘நாந்தான் மேஜிக் பென்சிலை சட்டைப் பையில வச்சு எடுத்திட்டு வந்திட்டேன்’னு சொல்றான் சிட்டி. ஆ... இம்புட்டுப் பெரிய பையனை எப்படி சட்டைப் பையில வச்சிட்டு வர்ற முடியும்? ஆனா சிட்டி அப்படித்தான் எப்பவும் சொல்றான்.

‘நான் குட்டி சாத்தானை பேக் குள்ள வச்சு ஸ்கூலுக்கு கொண்டு வருவேன்’னு ஓவியாவும் பதிலுக்கு சொல்றா.

’எப்படி? எப்படி?’ சிட்டியும், அஜியும் ஓவியாவைப் போட்டு நெருக்கறாங்க. வீறாப்பா சொல்லிட்டாலும் ஓவியாக்கு அவங்கள சமாளிக்க முடியல.

சிட்டி சொல்றான். ‘நீ குட்டி சாத்தானைக் காமி. நாங்க மேஜிக் செயினை வச்சு கட்டி உன் பேக்ல வச்சிடறோம்’

ஓவியாக்கு சிலீர்னு முதுகு தண்டுல ஐஸ் வச்ச மாறி ஆயிடுது. ஸ்கூல் பேகுல டெடி பேர் வச்சிக்கலாம். ஐஃபோன் வச்சிக்கலாம். குட்டி சாத்தான்லாம் கூட வச்சிக்கறது? அது என்னமாச்சும் சேட்டை பண்ணி ஸ்கூல்ல மாட்டி வச்சிருச்சுன்னா?

‘அதெல்லாம் நடக்காது. குட்டி சாத்தானை மேஜிக் செயின்ல எல்லாம் புடிக்க முடியாது. நெறய மந்திரம் சொல்லித்தான் புடிக்க முடியும். நான் பாத்திருக்கேன்... இம்ப்புட்டு உசரம் இருக்கும். தாத்தா நீள நீளமா மந்திரம் சொல்லி கைய காத்துல வரஞ்சுல்லாம் பூஜை பண்ணுவார்’

அஜி சொல்றான் ‘மே பி யு ஆர் டாக்கிங் அபவுட் முகுந்த். அவந்தான் குண்டா குட்டி சாத்தான் மாதிரியே இருக்கான் பாக்குறதுக்கு’

அஜியும் ராக்கியும் சேந்து ரவுசு உடறாங்க ‘லையர் லையர் யுர் ஸ்கர்ட் ஆன் ஃபயர்’

ஓவியாக்கு மானமே போயிடற நெலம. இந்தப் பசங்களுக்கு எப்படியும் ப்ரூவ் பண்ணிறனும்னு ‘நீ மேஜிக் செயினைக் காட்டு. நானும் டெர்ரஸுக்கு கூட்டிட்டுப் போய் குட்டி சாத்தானைக் காட்டறேன்.’

ராக்கி பையிலேந்து நீளமா ஒரு சங்கிலி எடுத்துக் காட்டறான். ‘இதான் மேஜிக் செயின்’

அதப் பாத்தா சூட்கேஸ் பூட்டற செயின் லாக் மாதிரிதான் இருக்கு. ஆனா சிட்டியும் அஜியும் அடிச்சு சொல்றாங்க அதான் மேஜிக் செயின்னு. குட்டிசாத்தான் மேல தூக்கிப் போட்டா அப்படியே கட்டி தூக்கிட்டு வந்து பேக்ல வச்சிரும். சூப்பர் செயின் அது. இதுன்னு ஆச காட்டறாங்க. ஸ்கூல் பேக்ல குட்டி சாத்தானை வச்சிகிடறது பயமாத்தான் இருக்கு. ஆனா மேஜிக் குரூப்புல சேந்து RACOன்னு பேரு வேற வச்சாச்சே. அதுவும் பாய்ஸ் முன்னாடி பயம்னு காட்டிக்க முடியுமா? தைரியமா டெர்ரஸுக்குப் போறா. கூடவே மேஜிக் குரூப்பு மொத்தமும் போகுது. பௌர்ணமிங்கிறதுனால நிலா முழுசா வானத்துல இருக்க, மொட்டை மாடி நல்லா வெளிச்சமா இருக்குது.

மாடியில ஓவர்ஹெட் டாங்க்குக்கு பக்கத்தில கைப்பிடிச் சுவர்கிட்ட எக்கிட்டுப் பாத்தா முகுந்த் வீட்டு மொட்டைமாடி ரூம் தெரியுது. ஜன்னல்ல மேல்பக்கம் தொறந்திருக்க காத்துல ஸ்க்ரீன் ஆடுது. உள்ள வெளக்கு வெளிச்சம் கம்மியா இருக்கறதுனால ஒண்ணும் சரியாத் தெரியல. ஓவியா எதிர்பாக்காத நேரத்துல சிட்டி மாமரக் கிளையைப்புடிச்சு முகுந்த் வீட்டு மொட்ட மாடிக்குப் போயிட்டான். அந்தப் பக்கம் இருக்கற ஜன்னல் கிட்டக்கப் போயி நின்னுகிட்டு எட்டி எட்டிப் பாக்குறான். ஓவியா பதறிப் போய் அவனத் திரும்பி வரச் சொல்றதுக்குள்ள அஜியும், ராக்கியும் மாடியைத் தாண்டிப் சிட்டியோட போய் சேந்துகிட்டாங்க. மூணு பேரும் முண்டியடிச்சு ஜன்னல் வழியா எட்டி எட்டிப் பாக்குறாங்க. ஓவியாக்கு ஒரே பயமாயிடுச்சு. தந்தேசுவர ராவோ இல்ல அவர் பூஜை பண்ற குட்டிச் சாத்தானோ எட்டிப் பாக்குறவங்கள கண்டுபிடிச்சிருச்சின்னா?

இவ பதறுதப் பாக்கிற பசங்களுக்கு சிரிப்பு சிரிப்பா வருது. சிட்டி அங்கிருந்து இவளப் பாத்து என்னமோ சொல்றான். ராக்கியானா செயினை எடுத்து தலைக்கு மேல வச்சு சுழட்டி சுழட்டிக் காமிக்கிறான். அய்யோ நெசமா செயினை வச்சு குட்டி சாத்தானை கட்டிட்டு வந்திருவாங்களா? ஓவியா பயந்தடிச்சிட்டு அவ ரூமுக்கு போய் உக்காந்துகிட்டா. அங்கியும் நிம்மதி இல்லாம கீழ ஹாலுக்குப் போய் அப்பாகிட்ட ஒக்காந்துகிட்டா. ஹால்ல எல்லாரும் கூடி ஒக்காந்துகிட்டு டிவியில ஏதோ படம் போட்டு பாத்துகிட்டிருக்காங்க. அய்யோ அங்கேயும் ஒரு பேய் வந்து கதவையெல்லாம் ஒடைக்குது. அம்மாகிட்டக் கேக்கறா

‘இதுதான் குட்டி சாத்தானா?’

அம்மா சொல்றா ‘இது பெரிய பெசாசு. குட்டி சாத்தான் குட்டியா இருக்கும். ஆனா சேட்டை நிறயப் பண்ணும். நம்ம சிட்டி மாதிரி’ சொல்லிட்டு சிரிக்கிறா. நர்மதா ஆண்ட்டியும் சிரிக்கிறாங்க. அந்தப் படத்துல ஒரு ப்ரீஸ்ட் கையில வேல் வச்சிட்டு ஓடறாரு. பேய் வேல்கிட்ட நெருங்க முடியாம தவிக்குது. பூம் பூம்னு நெருப்பு பந்து போல வந்து பேயையே பயமுறுத்துது. டக்குன்னு ஓவியாக்கு ஐடியா வருது. பூஜை ஷெல்ஃப்ல ஒரு குட்டி முருகன் சிலை வேலோட இருக்கும். அத நைசா எடுத்திட்டு வேகமா மாடிக்கு ஓடிப் போறா. பயந்துட்டே ஸ்கூல் பேக்கை தொறந்தா நல்லவேளை குட்டி சாத்தான் எதுவும் பையில இல்ல. ஜாமெட்ரி பாக்ஸுக்குள்ள முருகன் வேல் வச்சு மூடி பேக்குள்ள வச்சப்புறம்தான் மூச்சே வருது. அப்பாடின்னு திரும்பினா பின்னாடியே பசங்க மூணு பேரும் உள்ள வர்றாங்க.

அஜி சொல்றான் ‘வேஸ்ட் ஆஃப் டைம். குட்டி சாத்தான இஸ் கான்’

‘தூங்கிட்டு இருக்குமோ என்னவோ. உடுக்கைய வச்சு...’ வாயிலேயே ‘டுர்ரிங்...டுர்ரிங்’னு சத்தம் கொடுத்து ‘இப்படி அடிச்சிருந்தா எழுந்திட்டிருக்கும். உன் குட்டி சாத்தான் சோம்பேறி’

‘என்னடா ஆச்சு? என்ன பாத்தீங்க?’ன்னு கேக்கறா.

’ரொம்ப நேரம் நின்னோம். தாத்தா மந்திரம் சொல்லிட்டே இருக்கார். ஆனா குட்டி சாத்தான் வரவேயில்ல’

ராக்கி டல்லா இருக்கான்.

‘மேஜிக் செயின் அங்க ஜன்னல்ல சிக்கிகிருச்சு’

செயினை தலைக்கு மேலே சுழட்டிகிட்டே இருந்தான்ல அப்படியே ஜன்னல் கம்பியில சுத்திகிட்டு உள்ளாற கொக்கியில சிக்கிட்டுச்சாம். ஓவியாக்கு பயம் திரும்பி வந்திடுச்சு.

‘அது குட்டி சாத்தானை கட்டி இழுத்திட்டு வந்திருமா?’

சிட்டி சிரிச்சிகிட்டே சொல்றான்

‘உன் குட்டி சாத்தான் ஒரு dumbo. தூங்குமூஞ்சி’

ஓவியாக்கு நைட்டு தூக்கமே வர்ல. மேஜிக் செயினும் குட்டி சாத்தானும் கண்ணுக்கு முன்னாடி நின்னுகிட்டே இருக்கு. பேய்ப்படம் முடிஞ்சவுடன சிட்டி, அஜி, ராக்கி எல்லாம் வீட்டுக்குப் போயிட்டாங்க. அம்மாவோட சிவப்பு சால்வையை ரகசியமா எடுத்து முக்காடு போட்டுகிட்டு திரும்பி மொட்டை மாடிக்குப் போறா. இப்ப நிலா நல்லா மேற்கே மேல வந்திருச்சு. நிலாவுல இருக்கற பாட்டி காலை நீட்டிகிட்டு இட்லி சுட்டுகிட்டு இருக்காங்க. சிட்டி போன வழியில மாமரக் கிளையைப் புடிச்சு முகுந்த் வீட்டு மொட்டை மாடியில ஈஸியா இறங்கிட்டா. தந்தேசுவர ராவ் பூஜை பண்ற ரூமுக்கு கிட்ட வந்து ஜன்னல்கிட்ட எட்டி எட்டிப் பாக்குறா. ஜன்னல்கிட்டக்க எதுவும் மேஜிக் செயின் இல்ல. ஜன்னலுக்குள்ளாற போட்டிருப்பானோங்கிறதுக்காக எட்டிக் கம்பியைப் புடிச்சு எம்பிப் பாக்குறா...

உள்ள தந்தேசுவர ராவ் பஞ்சலோக மேரு சக்கரம் முன்னாடி பத்மாசனத்துல உக்காந்துகிட்டு மந்திரம் சொல்லிட்டு இருக்காரு

த்ரம் த்ரிம் க்லிம் ப்ளம் ச
யம் ரம் லம் வம் சம்

அதுதான் ஸ்ரீ வித்யா உபாசனையில கடைசிப் படி. ஒவ்வொரு திசையா திரும்பி சொல்லிட்டிருந்தவர் மேற்கு திசைல திரும்பி சத்தமா ‘தம் தம் அம் ஹ்ரீம்’னு சொல்லிட்டே கண்ணைத் திறந்து பாத்தா,

பூர்ண சந்திரன் பின்னாடித் தெரிய செவப்புக் நெறத்துல மேலாடை போட்டுகிட்டு ஜன்னலுக்கு வெளில நிக்கறது யாரு? சின்னப் பொண்ணு மாதிரி தெரியுதே... ஆஆ... சாட்சாத் அந்த பாலா திரிபுரசுந்தரியேதானா? ராவ்-க்கு மண்டை கிர்ருன்னு சுத்துது.

‘அம்மா பாலா சுந்தரி, லீலா விநோதினி’ன்னு பரவசமா சொல்லிகிட்டே தடால்னு தரையில விழுந்திட்டாரு. அன்னிக்கு பூஜை ரொம்ப நேரம் இழுத்திருச்சுப் போல. ராவ்-க்கு லோ-ஷுகரோ பசி மயக்கமோ அப்படியே கெறங்கிப் போய் கெடக்காரு.

ஓவியா சத்தம் போடாம மேஜிக் செயினை எடுத்துகிட்டு வீட்டுக்குப் போயிட்டா. மறுநாள் ஸ்கூல்ல RACO குரூப்பு ரகசிய மீட்டிங்ல அந்த செயினை ராக்கிகிட்ட கொடுத்திட்டு சொன்னா ‘நான் நேத்து நேர்லயே குட்டி சாத்தானைப் பாத்தேன். இந்த செயினை பாத்ததும் பயந்து தாத்தாவை தள்ளி விட்டுடுட்டு ஓடிருச்சு’ சிரிச்சிகிட்டே சொல்றா.

பாய்ஸ் மூணு பேரும் ஆ-ன்னு பாக்கறாங்க. ஓவியாக்கு பெருமை தாங்கலை. ‘லெட்ஸ் கோ ஃபர் த நெக்ஸ்ட் அட்வெஞ்சர்’னு சொல்றா.





**************



இது ஒரு வளரும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் எழுதியதை இன்ஸ்பிரேஷனாக வைத்து நான் எழுதியது. அவரைப் பற்றி இங்கேயும் பார்க்கலாம்.

13 மறுமொழிகள்:

பைத்தியக்காரன் said...

ரொம்ப நல்லா இருக்கு ஸ்ரீதர்...

தோழமையுடன்
பைத்தியக்காரன்

pappu said...

நீங்க இப்படி வித்தியாசமா எழுதினா நான் கடைய மூடிட்டு போயிர வேண்டியதான்.

சென்ஷி said...

நல்லாயிருக்குண்ணே...

சென்ஷி said...

பிரசன்னா ஸ்ரீராம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

ambi said...

ம்ம், ஆர்.கே. நாராயண் அவர்களின் மால்குடி டேஸின் இன்ஸ்பிரேஷன் என்று கூட சொல்லலாம். அதில் நிறைய கதைகள் இதே சாயலில் இருக்கும். :))

ambi said...

இன்ஸ்பிரேஷன் என்ற வார்த்தையை படித்தவுடன் இந்த பேட்டி நினைவுக்கு வருது:

நீங்க ஏன் ஆங்கிலம் உடபட பிற மொழி இசையை சுட்டு தள்றீங்க?னு யாரோ ஒருத்தர் தேனிசை தென்றல் தேவாவிடம் கேட்க அதுக்கு அவர் சொன்னது:
"சுடறதுனு எதுக்கு சொல்றீங்க, அந்த இசை எனக்கு இன்ஸ்பிரேஷன்னு சொல்லலாமே!"

- இது எப்படி இருக்கு..? ;))

நோ! நோ! உங்க கதைக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை ஸ்ரீதர் அண்ணா. :))

pria said...

school bag la "iphone" vechikalam... nice one...

Sridhar Narayanan said...

நண்பர்கள் கடகம் ஆயில்யனும், பெனாத்தல் சுரேஷும் ட்விட்டரில் சொன்னது.

ஆயில்யன்
அது என்ன எதிர்கால எழுத்தாளர் - அதான் அல்ரெடி ஸ்டார்ட்டு பண்ணிட்டாரே :)

பெனாத்தல் சுரேஷ்
RT @aayilyan: @orupakkam அது என்ன எதிர்கால எழுத்தாளர் - அதான் அல்ரெடி ஸ்டார்ட்டு பண்ணிட்டாரே :)

Sridhar Narayanan said...

வாங்க வாங்க பிரியா சேகர்... ப்ளாக் தொடங்கிட்டீங்கப் போல. அப்படியே போஸ்ட் போட ஆரம்பிச்சுடுங்க. All the best!

அடுத்த மாசத்துலேந்து வேலை பெண்டு கழட்ட ஆரம்பிச்சுருவாங்க :))

அப்படியே எப்பப் பாத்தாலும் படிக்கிறேன்னு சீன் போடற சந்தியாவையும் எழுதச் சொல்லுங்க.

Sridhar Narayanan said...

அம்பிண்ணா!

//ஆர்.கே. நாராயண் அவர்களின் மால்குடி டேஸின் இன்ஸ்பிரேஷன் //

பெரிய பெரிய வார்த்தைல்லாம் சொல்றீங்க. சைலண்ட்டா லந்து விடறீங்களோன்னு மைல்டா ஒரு டவுட்டு இருக்கு :)

வாங்க பப்பு!

நீங்கதான் சாமி, கடவுள்னு வேற லீக்குல இறங்கிட்டீங்களே. அடிச்சு ஆடுங்க தலை.

Sridhar Narayanan said...

வாங்க சென்ஷி!

70 கதைகளையும் படிச்சு பயங்கர டயர்டா ஆயிருப்பீங்க :) உங்களோட குட்டி குட்டி விமர்சனம் சூப்பர்.

எப்பொழுதும் போல உங்கள் ஊக்குவிப்பிற்கு மிகவும் நன்றி.

வாங்க சிவராமன் (பைத்தியக்காரன்)

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.


ஆயில்யன் / பெனாத்தலார்,

அது உருபுத் தொகங்காணும். எதிர்காலத்தின் எழுத்தாளர்ன்னும் அர்த்தம் பண்ணிக்கலாம் :)

ambi said...

பிரசன்னா ஸ்ரீராம்க்கும் வாழ்த்துக்கள். நேத்து சொல்ல மறந்து போச்சு. :)

தொடர்ந்து எழுத சொல்லுங்க.

Sridhar Narayanan said...

அம்பி... வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. :)