December 22, 2009

பாட்லக்

நான்கு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு வீடு தேடும்போது பவுலா என்ற லீசிங் மானேஜர் தற்போது தங்கியிருக்கும் வீடை சுற்றிக் காண்பித்தார். நாசூக்காக கேட்பதாக நினைத்துக் கொண்டு ‘இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்களா இந்தப் பக்கம்?’ என்று கேட்டேன். சிஐஏ ஏஜெண்டிடம் கிளாசிஃபைட் தகவலைக் கேட்டது போல் துணுக்குற்றவராக, ‘அதெல்லாம் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. சொல்லவும் கூடாது’ என்று சொல்லிவிட்டார். போதாதற்கு பதிவர் சீமாச்சு அவர்கள் இந்த ஊரில் முன்பே தங்கியிருந்த விவரம் பொது நண்பர் ஒருவர் மூலமாக தெரிந்து கொண்டு அவருக்கும் தொ(ல்)லை பேசி இங்கு இந்தியர்கள் ஜனத்தொகை பற்றி புள்ளிவிவரம் எல்லாம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தேன். புதிய இடம், புதிய Neighbourhood என்ற தயக்கங்கள் அதிகமாக இருந்தது.

தெருவோடு நடந்து போகும்போது தெரியும் இந்திய முகங்கள், வீட்டுக் கதவுகளை கடந்து போகும்போது கேட்கும் தமிழ்க் குரல்கள் என்று புதிய தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்தோம். இரண்டாவது கட்டிடத்தில் ஒரு தமிழ் நண்பரின் அறிமுகம், மூன்று மைலில் இருக்கும் கோவிலில் ஒரு தமிழ் நண்பரின் ஃபோன் நம்பர் என்று ஒன்றிரெண்டு தொடர்புகளைத்தான் தேற்றிக் கொள்ள முடிந்தது. இணையத்தைத் தாண்டி என்னுடைய நெட்வொர்க்கிங் திறமை கிட்டத்தட்ட பூஜ்யம்தான் இதுவரை.

கடந்த வாரம் திடீரென்று வீட்டில் ஏதோ ஜீனி (Genie) வந்துவிட்டுப் போனது போல பளிச் சமையலறையும், முறிச் பாத்ரூமும் பார்த்து பரவசமாகி மனைவியிடம் ‘என்னம்மா மேட்டர்? வீட்டில் ஏதும் உள்-வாடகைக்கு விட ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறாயா?’ என்று கேட்டபோதுதான் தெரிந்தது வீட்டில் பாட்லக் பார்ட்டிக்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார் என்று. இந்த பாட்லக்கில் ஒரு சௌகரியம் என்னவென்றால் நமக்கு பிடித்ததோ பிடிக்காததோ ஏதாவது ஒரு பதார்த்தத்தை மட்டும் நிறைய செய்துகொண்டு பார்டிக்குப் போனால் அங்கே பல பதார்த்தங்களை ருசிப் பார்க்கலாம். பார்டிக்கு வருகிற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ஐட்டம் செய்து கொண்டு வருவார்கள். பலவகை சமையலை ஒரே இடத்தில் ஒரு வெட்டு வெட்டலாம். அட! ஆயிரக்கணக்கானோர் புழங்கும் இடத்தில் தினமும் பொட்டி தட்டறதா பாவ்லா செய்யும் நமக்கே இதுவரை ஐந்து இந்தியர்களைத்தான் பழக்கம் ஆயிருக்கிறது. அதிலும் மூன்று மலையாளிகள், இரண்டு தெலுங்கர்கள். மாதரசிகளின் மாநாட்டிற்கு என்ன பெரிய வரவேற்பு இருக்கப் போகிறது என்று சற்றுப் பொறாமையோடு ‘எவ்ளோ பேரு வரப்போறாங்க’ என்று கேட்டால் பத்து பேராவது வருவார்கள் என்று எரிச்சலில் எண்ணெய் வார்த்தார்.

மகளிர் மட்டும் கலந்து கொள்ளும் பார்ட்டி என்பதால் காலையிலேயே நமக்கு கல்தா கொடுத்து வேலைக்கு துரத்திவிட்டார்கள். கிட்டத்தட்ட பதினாறு இல்லத்தரசிகள் குழந்தைகளோடு ஒன்று கூடி, வாகாக அன்று ஒரு தோழிக்கு பிறந்த நாள் வேறு அமைந்ததால் கும்மாளமாக கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தார்கள். அன்றைக்கு என்று பார்த்து வீட்டில் ஏதோ ரிப்பேர் வேலை செய்ய வந்திருந்த பெயிண்டருக்கு பாவம் ரஷ்யன் மட்டும்தான் தெரியுமாம். இந்தியப் பெண்களின் கூட்டு கூக்குரலை கண்டு பயந்து அவர் தனது வேலையை அடுத்த அபார்ட்மெண்ட் வளாகத்திற்கு மாற்றிக் கொண்டு விட்டார் என்று கேள்வி.

சும்மா சொல்லக் கூடாது. சூப்பர் கலவையாக ஸ்ப்ரிங் ரோல், வெஜிடபிள் புலவ், சாம்பார் இட்லி, ராஜ்மா தால், உளுந்து வடை என்று நல்ல வெயிட்டான் மெனு. இந்தியப் பெண்களிடையே ஒரு சீனரும் தனது பையனோடு இந்திய ஸ்பைசி உணவை ருசி பார்க்க கலந்து கொண்டார். இம்முறை பாட்லக்கில் சைவ உணவு வகைகள் மட்டும் என்று முடிவு செய்துவிட்டதால், பாவம் அவருக்கு ஸ்கோப் கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் நன்கு அனுபவித்தார். புதிய ருசிகளோடு, புதிய நட்புகளையும் உருவாக்கிக் கொடுக்கும் இந்த பாட்-லக் பார்டிகள் ஒரு அருமையான வழி என்பது உண்மை. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் தமிழ் சமூகம், உலகத்திற்கு அளித்த கொடையாக இந்த பாட்லக் இருக்கும் என்பது என் கணிப்பு :)

நடந்து முடிந்த பார்டியில் நிறைவேறிய ஒரு முக்கிய தீர்மாணமாக அடுத்த முறை அரங்கேறும் பாட்லக்கிற்கு (இம்முறை வேறு ஒருவர் வீடாக இருக்கும்) ஆண்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க யோசித்து வருகிறார்களாம். பின்னே பார்டி முடிந்தபிறகு குப்பைகளை கொண்டு வெளியில் கொட்ட, சோஃபாவை, கார்பெட்டை துப்புரவு செய்ய ஆட்கள் வேண்டியிருக்கறதாமே?

19 மறுமொழிகள்:

sriram said...

அன்பின் ஸ்ரீதர்
வெட்டிப்பயல் பாலாஜி உங்களைப் பற்றி நிறைய சொல்லி கேட்டிருக்கிறேன் (நல்ல விதமாத்தான்), இப்பத்தான் முதல் முறை உஙக பக்கம் வந்திருக்கிறேன், பழைய பதிவெல்லாம் படிச்சிட்டு வர்றேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இலவசக்கொத்தனார் said...

நம்ம பக்கம் அடிக்கடி நடக்கும் மேட்டர்தான். வீட்டிலும், அலுவலகத்திலும்.

(ஆளுக்கொரு டிபன்பாக்ஸ் கொண்டு போய் கலந்து கட்டி அடிப்பது நமக்கு பள்ளி முதல் பழக்கமானதுதானே. இதுக்குப் பதிவா?)

ஆயில்யன் said...

//நமக்கு பிடித்ததோ பிடிக்காததோ ஏதாவது ஒரு பதார்த்தத்தை மட்டும் நிறைய செய்துகொண்டு பார்டிக்குப் போனால் அங்கே பல பதார்த்தங்களை ருசிப் பார்க்கலாம். பார்டிக்கு வருகிற ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு ஐட்டம் செய்து கொண்டு வருவார்கள்//

கேக்கவே செம டெரரா இருக்கே :)

எனிவே இனிமே வர்ற பாட்லக் பார்ட்டீகளில் நீங்களும் கலந்துக்கிட்டு கலக்கப்போறதுக்கு வாழ்த்துக்கள் :))

ஆயில்யன் said...

//இலவசக்கொத்தனார் said...
(ஆளுக்கொரு டிபன்பாக்ஸ் கொண்டு போய் கலந்து கட்டி அடிப்பது )///

இ.கொ ஸ்கூல்ல/காலேஜ்ல நொம்ப்ப சமர்த்து போல ! நாங்கெல்லாம் டிபன் பாக்ஸ் எடுத்துக்கிட்டு போகாமலே கலந்து கட்டி அடிப்போமாக்கும் :)

pappu said...

பாட்லக் நா? புச்சா இருக்கே! அந்த ஊரு வழக்கமா?

மதுரையம்பதி said...

நல்லாத்தான் இருக்கு, ஆனா நான் கொத்ஸ் கட்சி, பள்ளிக்கூடத்திலிருந்து நமக்கு இது தெரிஞ்சதுதானே.....:)

ஆமா, அதென்ன 'தமிழ்ச் சமூகம், ஆங்கில சுற்றுச்சூழல்' என்றல்லாம் எழுத ஆரம்பிச்சுடீங்க? உலகத் செந்தமிழ் மாநாட்டுக்கு வருகை புரியும் எண்ணமிருக்கிறதா? :).

ambi said...

//தீர்மாணமாக//

தீர்மாமாக

(இந்த எழுத்துப்பிழை வாத்தியார்கள் தொல்லை தாங்க முடியலைப்பானு சொன்னாலும் பரவாயில்லை.) :))

பாட் லக்கில் பஞ்சாபி உணவு வகைகள் கிடைத்தால் ஒரு கை பாக்கவும். என்ன மணம், என்ன சுவை. :))

@ஹலோ ஸ்ரீராம், சில கதைகளை படிச்சு மண்டையை பிச்சிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :p

@யோவ் கொத்ஸ், சும்மா குறுக்கெழுத்து போட்டு ஒப்பேத்தறதுக்கு இந்த மொக்கை எவ்ளோவோ பரவாயில்லை. :))

Sridhar Narayanan said...

வாங்க பாஸ்டன் ஸ்ரீராம்!

//பழைய பதிவெல்லாம் படிச்சிட்டு வர்றேன்//

ரொம்ப நேரமா படிக்கறீங்கப் போல. இதோ வர்றேன்னு அப்படியே அப்ஸ்காண்டா? இப்பப் புரியுது பாலாஜி என்ன சொல்லிருப்பார்னு :)

உங்க வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

வாங்க இலவசம்,

//இதுக்குப் பதிவா?//

இந்த மாதிரி எழுதிக்கறதுக்குதான் ப்ளாகாமே :)

உங்க வருகைக்கு மிக்க நன்றி!

வாங்க ஆயில்யன் சார்!

//கலந்துக்கிட்டு கலக்கப்போறதுக்கு //

‘கலக்கறது’ எல்லாம் வேற பார்ட்டிகள்ல. இப்பல்லாம் அந்த பக்கம் ஒதுங்கறதில்ல :)

//இ.கொ ஸ்கூல்ல/காலேஜ்ல நொம்ப்ப சமர்த்து போல //

அப்ப ப்ளாகில, ட்விட்டர்ல அசடாட்டம் இருக்காரா? ஹிஹி... இந்த நுகபிநி போட ஒரு சான்சாவது கிடைக்காதாக்கும் :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.

//அந்த ஊரு வழக்கமா//

வாங்க பிரபுகுமார். நம்மூரிலேயும் இப்ப நிறைய வந்திருக்கு. நிலாச் சோறுன்னு ஆத்தங்கரைக்கு போய் சாப்பிடற பழக்கம் உண்டு. அது இதே வழக்கம்தான் :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

Sridhar Narayanan said...

//சமூகம், ஆங்கில சுற்றுச்சூழல்'//

வாங்க மௌலி அண்ணா!

அதெல்லாம் அதுவா வர்றதுண்ணா. :) நாங்களும் ரவுடின்னு ஃபார்ம் ஆயிட்டோம்ல. கொலை வெறியோட எழுதி கும்மிடலாம்னா, அம்பி வந்து எழுத்து பிழையை எடுத்துப் போட்டு கும்மிடறார் :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிண்ணா!

வாங்க அம்பி!

//சும்மா குறுக்கெழுத்து போட்டு ஒப்பேத்தறதுக்கு இந்த மொக்கை எவ்ளோவோ பரவாயில்லை//

இதில யாரை டேமேஜ் பண்ணிருக்கீங்கன்னு யோசிக்காமலேயே புரியுது. புரியுதுண்ணே புரியுது.

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்பி :))

param said...

நான் மலேசியன். இங்கு நாங்களும் ‘பாட்லக்’ முறையில் வீட்டுக்கு ஒரு சமையல் என்று எடுத்துச் சென்று கொண்டாடுவதுண்டு. மாதம் ஒரு முறையோ, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையோ இப்படி கலந்து கொண்டு சந்தோஷமாக இருப்போம்,குடும்பமாகத்தான்.[பெண்கள் மட்டும் என்று இல்லை]

Sridhar Narayanan said...

வாங்க பரம்!

//குடும்பமாகத்தான்//

ஆமாம்! அலுவலகத்திலும் நடப்பதுண்டு.

இந்த பார்டி சும்மா மகளிருக்கு மட்டும் என்று வைத்திருந்தார்கள். ஆண்களுக்கு ஒதுக்கீடு கேட்டிருக்கிறோம். நடக்கும் என்று நம்புவோம் :))

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

krish said...

dear sahalai,

read ur blog. As said, this Padlog ( or patlog) we have enjoyed during school days, with more or limited friends. Mostly during bachelor days, if any one of us in our group got married & his wife goes to her house on a long visit , Padlock becomes a mandatory. tiruvarur & kumbakonam i have experienced. with regards,
krish.

தென்றல் said...

/ பாட்லக்கில் ஒரு சௌகரியம் என்னவென்றால் நமக்கு பிடித்ததோ பிடிக்காததோ ஏதாவது ஒரு பதார்த்தத்தை மட்டும் நிறைய செய்துகொண்டு பார்டிக்குப் போனால் அங்கே பல பதார்த்தங்களை ருசிப் பார்க்கலாம். /

அட தேவுடா..!

/பின்னே பார்டி முடிந்தபிறகு குப்பைகளை கொண்டு வெளியில் கொட்ட, சோஃபாவை, கார்பெட்டை துப்புரவு செய்ய ஆட்கள் வேண்டியிருக்கறதாமே?/

எல்லா 'பாட்லக்கிலும்' ஒரே நோக்கம்தான... நம்மள மாதிரி இன்னும் கொஞ்சம் ஜீவன்கள் இருக்குறதா பார்த்தா சந்தோஷமா இருக்கு..;)

கெக்கே பிக்குணி said...

//பளிச் சமையலறையும், முறிச் பாத்ரூமும் பார்த்து பரவசமாகி மனைவியிடம் ‘என்னம்மா மேட்டர்? வீட்டில் ஏதும் உள்-வாடகைக்கு விட ப்ளான் போட்டுக் கொண்டிருக்கிறாயா?’ என்று கேட்டபோதுதான்// இந்த பளிச்சையும் முறிச்சையும் நீங்களே ஒழுங்கா முதல்ல செய்திருந்தா, "குப்பைகளை கொண்டு வெளியில் கொட்ட, சோஃபாவை, கார்பெட்டை துப்புரவு செய்"ய்யும் வேலையோடு, சாப்பிடும் வேலையும் கிடைக்கும்:-)

இதில் மனைவியின் தோழியின் கணவர்களோடு ரொம்ப ஒட்டாமல் பேசும் கணவர்களின் பாடு திண்டாட்டம் வேறு (கடைக்கண்ணில் இதையும் பார்த்துக் கொண்டு தானிருப்போம்)

Prabhu Rajadurai said...

நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை...பாட்லக், ஆங்கிலத்தில் எப்படி எழுத வேண்டும்?

Sridhar Narayanan said...

வாங்க கிருஷ்ணன்!

நம்ம பதிவையும் படிக்க ஆரம்பிச்சிட்டீங்க. இனி நாந்தான் ஜாக்கிரதையா எழுதனும் போல :)

//Mostly during bachelor days, if any one of us in our group got married & his wife goes to her house on a long visit //

ஆகா! அந்த காலத்தை ஏங்க ஞாபகப்படுத்தறீங்க. நீங்க என்றும் பேச்சிலர்தானே. ஜமாய்ங்க.

ஒரு சின்ன திருத்தம். நம்மூட்டுல நடந்தது ‘சரக்கி’ல்லாதா சாதாரண பாட்லக்தான் :)

மேலும் பாட்லக் பத்தி விக்கியில இருக்குப் பாருங்க. இங்கே க்ளிக்கவும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கிருஷ்ணன் :)


வாங்க தென்றல்,

//எல்லா 'பாட்லக்கிலும்' ஒரே நோக்கம்தான//

இது யுனிவர்சல் பிரச்சினை போல இருக்கே :))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தென்றல்!

வெ.இராதாகிருஷ்ணன் said...

:) ஆண்களாக சேர்ந்து ஒரு மாநாடு போட்டுவிட வேண்டியதுதானே.

Sridhar Narayanan said...

வாங்க கெபி அக்கா,

//சாப்பிடும் வேலையும் கிடைக்கும்:-)//

கணவன்மார்கள் சாப்பிடுவதையும் ஒரு வேலையாக நீங்கள் நினச்சிருப்பத உணரும்போது ரொம்ப பெருமையா இருக்குக்கா. ஐ மீன் - மிஸ்டர். ராஜாமணியை சொன்னேன் :p :p

//இதில் மனைவியின் தோழியின் கணவர்களோடு ரொம்ப ஒட்டாமல் பேசும் கணவர்களின் பாடு//

அவன் மெள்ளத்தான் வருவான். பச்சக்கல்லு தோடு, ஜாக்கெட் டிசைன்னு சட்டுன்னு ஒட்டிக்கிறதுக்கு எங்களுக்குள்ள அம்புட்டு மேட்டர் இல்லீங்களே. ஆனாலும் வந்திருவான் சீக்கிரம்.

//கடைக்கண்ணில் இதையும் பார்த்துக் கொண்டு//

ஷாப்பிங் செய்யும்போது கடையையே முழுக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தால் பாவம் ராஜாமணியை கடைக்கண்ணில்தான் பார்க்க முடியும். :))

Sridhar Narayanan said...

வாங்க பிரபு.

பாட்லக் பத்தி விக்கிபீடியா செய்தி இங்க இருக்குப் பாருங்க.

Wikipedia - Potluck

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி!