யுவராஜ் சொன்ன கதை - 24 Sep 2009
’கணேஷ் & வசந்த்’ என்று இடது பக்கம் கண்ணாடியில் வர்ண ஸ்டிக்கர்களில் பெரிதாக எழுதியிருக்க வலது பக்கம் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தேன். முதல் நாள் என்பதால் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. மாயா கண்களாலேயே வரவேற்றுவிட்டு ஃபோனில் யாருடனோ தொடர்ந்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்து அறையில் ரகுராமனும், செந்திலும் ஏதோ ஆவணங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று பரபரப்பில் தெரிந்தது. இன்று அப்பாசாமி கேஸின் ஹியரிங் என்றுச் சொன்ன ஞாபகம். எனக்கு என்று அளிக்கப்பட்ட சின்னக் கூண்டு புதிய கணிணி, குறிப்பு புத்தகம், பேணா பென்சில் என்று எல்லாவித சாமக்கிரியைகளுடன் தயாராகவே இருந்தது. வழக்கறிஞனாகவோ, வழக்குரைஞனாகவோ சட்ட சூத்திரங்களில் ஜிலேபி சுற்றிக் கொண்டு சாதாரணமாக முடிந்து போயிருக்க வேண்டிய எனது முதல்நாள் திடீரென தடம் மாறியது மாயாவின் தொலைபேசி அழைப்பால்.