October 20, 2009

கனவுகளின் காதலி

பதிவர் உண்மைத்தமிழனின் இடுகையை தாமதமாகத்தான் படிக்க நேரிட்டது. திருவாரூர் மாவட்ட பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 2009-2010 என்கிற தலைப்பில் சிறுகதை / குறும்படம் போட்டி நடத்துகிறது. அக். 31க்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும். மேலதிக தகவல்கள் பலவும் உண்மைத் தமிழனின் இடுகையில் இருக்கிறது.

குறும்படம் எடுக்கும் ஆர்வம் / வசதி உள்ளவர்கள் விருப்பப்பட்டால் நான் தற்சமயம் எழுதி வைத்திருக்கும் (இன்னமும் வெளியிடாத) ‘கனவுகளின் காதலி’ என்ற கதையை படமாக எடுக்கலாம். எளிமையான, சற்றே Mystical தன்மை கொண்ட கதை. மூன்று பாத்திரங்களுடம் அதிகபட்சம் 10 நிமிடங்களுக்கு வரக்கூடிய கதைதான். அதிக லொக்கேஷன்கள், இசைக்கோர்வை போன்ற செலவுகள் பிடிக்காத, குறுகிய அவகாசத்தில் செய்யக்கூடிய, ஆனால் சுவாரசியமான படமாக வர வாய்ப்புள்ள கதை. விருப்பப்பட்டவர்கள் பின்னூட்டம் வழியாக உங்களைத் தொடர்பு கொள்ள தொலைபேசி / மெயில் ஐடி கொடுத்தால் உடனடியாக தொடர்பு கொள்கிறேன்.

இந்தப் பதிவில் கதையை வெளியிட்டால் போட்டி விதிகளுக்கு இடைஞ்சலாக இருக்கலாம் என்பதால் தற்சமயம் வெளியிடவில்லை. யாரும் தொடர்புகொள்ளாத பட்சத்தில் இந்தப் பதிவிலேயே சீக்கிரத்தில் இட்டுவிடுகிறேன்.

நான் ஏற்கெனவே எழுதியிருந்த ஒரு குறும்படக் கதை இங்கே காணலாம்.

இப்பொழுது நீங்கள் பார்க்க ஒரு அருமையான குறும்படம் - கீழே:

October 6, 2009

மேற்கிலிருந்து கிழக்கே - 4

மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6

இரண்டாம் நாள் - 26 ஜூலை 2009 - ஞாயிற்றுக்கிழமை

சென்ற பகுதியில் சொன்னது போல ஒரு தீவிர ஜென் கதை முயன்றுப் பார்க்கலாம். ஒரு ஜென் துறவியும், அவரது சீடரும் காரில் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கிறார்கள். நீண்ட நெடிய சாலையில் சென்றுகொண்டிருக்கும்போது சீடருக்கு ஒரு சந்தேகம். குருவிடம் கேட்கிறார் ‘இந்தச் சாலை எங்கேப் போகிறது?’ என்று. குரு பதில் சொல்லவில்லை. இன்னமும் கொஞ்ச தூரம் பயணிக்கிறார்கள். வந்த பாதையை திரும்பி பார்க்கும் சீடருக்கு இன்னொரு சந்தேகம் வருகிறது. இப்பொழுது குருவிடம் கேட்கிறார். ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறது?’. குரு மௌனமாக இருக்கிறார். சட்டென சீடருக்கு ஞானோதயம் பிறக்கிறது. குருவிடம் சொல்கிறார் ‘இந்தச் சாலை எங்கிருந்து வருகிறதோ, அங்கேயேதான் போகிறது’. இதைக் கேட்டவுடன் ஜென் குரு சீடரை குண்டுகட்டாக தூக்கி காரிலிருந்து கீழே போட்டுவிடுகிறார்.

ஜென் கதைகளுக்கு தத்துவ விளக்கங்கள் எல்லாம் சொன்னால் அதன் வசீகரம் போய்விடும் என்பதால் நாம் பயணத்திற்கு மீண்டும் வருவோம்.

முதல் நாளிரவு உறங்கச் செல்லும்போது இன்னமும் இரண்டாயிரம் மைல்கள் செல்ல வேண்டுமே என்ற மலைப்பாக இருந்தது. அடுத்த நாள் செல்ல வேண்டியது நெப்ராஸ்கா (Nebraska)மாநிலத்தின் ஒமாஹா (Omaha) நகரம். வாரன் பஃபே-வின் ஊர். ஞாயிற்றுக்கிழமை பஃபே-யின் ஊரில் தங்கினால் யதேச்சையாக எங்கேயாவது அவரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்து போகிற போக்கில் அவரும் பெர்க்‌ஷைரில் ஒரு நூறு பங்குகளை பரிசாக... ம்ஹ்ம்ம்ம் முடியாது. உப்பேரியிலிருந்து (Salt Lake City) ஒமாஹா தொள்ளாயிரத்து மைல்கள் சொச்சம். ஒரே நாளில் அவ்வளவு தூரம் பயணிப்பது சாத்தியப்படாது என்பதால் ஒமாஹாவிற்கு ஐம்பது மேல்கள் மேற்கே நெப்ராஸ்காவின் தலைநகரம் Lincolnல் தங்கலாம் என்று முடிவு செய்தேன். அங்கே தேடிப் பார்த்ததில் I-80 நெடுஞ்சாலைக்கு அருகிலேயே Econo Lodge ஓரளவிற்கு கட்டுபடியாவது போல் இருந்தது. மறுநாள் இரவுக்கு அறை முன்பதிவு செய்துவிட்டு படுத்தேன். மரக்கட்டை போல் சரியான தூக்கம்.

ஞாயிறு காலை ஒன்பதரைக்குத்தான் புறப்பட முடிந்தது. அமெரிக்க காலையுணவாக ஆங்கிலேய மஃபினையும், எருமைக் கண் (bull's eye) அரைவேக்காடு முட்டையும், காப்பியும் சாப்பிட்டுவிட்டு அடுத்த இலக்கை நோக்கி பயணத்தை தொடங்கினேன். கனரக வாகனங்களும், மலைப்பாம்பு போல் நீண்ட ட்ரக்குகளும் சுற்றி வர நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்தேன். அந்த நெடுஞ்சாலையின் அதிகபட்ச வேகமே எழுபத்தைந்து மைல்கள்தான். அடுத்த லேனில் வந்து கொண்டிருந்த முப்பத்தியிரண்டு சக்கரங்கள் கொண்ட நீண்ட டாங்கர், எண்பது மைல் வேகத்தில் விரட்டிக் கொண்டு வந்தது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்கின் டூயல் (duel) படம் ஏனோ ஞாபகத்திற்கு வந்து பயமுறுத்தியது. சிறிது தூரத்தில் தனது சகாவான இன்னொரு ட்ரக்கை சந்தித்ததும் சமர்த்தாக வலதுபக்க லேனிற்கு மாறி ஊர்ந்து செல்லவாரம்பித்தார். ஆங்காங்கே ‘மான்கள் ஜாக்கிரதை’ என்று அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். வலது பக்கம் மலை முகடும், இடது பக்கம் சமவெளியுமாக அருமையான இயற்கை காட்சி கண்முன்னே விரந்தது. மலைக்காட்டில் மான்கள் சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கும். அவற்றின் வசிப்பிடத்தில் நாம் சாலைகளால் ஊடுருவியிருப்பது தெரியாமல் சிலசமயம் சாலைக்கு குறுக்கே வந்து வாகனங்களில் அடிபட்டுவிட வாய்ப்பு உண்டாம். வழியில் ஆறேழு இறந்த மான் உடல்கள் கிடந்ததை பார்க்க நேரிட்டது. பெரிய ட்ரக்குகளில் அடிபட்டால் வண்டியை நிறுத்திவிட்டு ஓரமாக இழுத்துப் போட்டுவிட்டுப் போய்விடுகிறார்கள். சிறிய கார்களின் மேல் இருநூறு பவுண்டு மான் வந்து மோதினால் என்னாவது? நல்லவேளை, அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ’வாழ்க நீ எம்மான்’ என்று அம்மான்களை வாழ்த்திவிட்டு, யூட்டாவை (Utah)கடந்து வயோமிங் மாநிலத்தில் நுழைந்தேன். பெரிய நிலபரப்பும், குறைந்த மக்கள்தொகையும் கொண்ட மாநிலம்.

cruise controlல் அதிகபட்ச வேகத்தை அமைத்துக் கொள்ளாததினால் என்னையறியாமலேயே ஆக்ஸிலேட்டரை அழுத்திக் கொண்டு மணிக்கு தொண்ணூறு மைல் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தேன். வையோமிங்கின் எல்லைப்பகுதியில் வரிசையாக கார்களை தாண்டிக் கொண்டே ஐயோவா (Iowa)விற்குள் நுழையும் நேரம் ஒரு காவலர் சிவப்பு/நீல விளக்குகள் சுழலவிட்டுக் கொண்டே காரில் துரத்திக் கொண்டு வந்தார். ஆஹா... ஆப்பு ஆலவட்டம் போட்டுகிட்டு வருகிறதே என்று வண்டியை ஓரம் கட்டினேன்.

என்னைத் தாண்டி சென்ற போலிஸ் வண்டி சில நூறடிகளில் நின்று, அரைவட்டக் கண்ணாடியும், முழு மொட்டையுமாக இளவயது போலிஸ்காரர் ஒருவர் இறங்கினார். வண்டி பக்கத்தில் ஒயிலாக நின்றுகொண்டு விரலை அசைத்து என்னை அருகில் வரச் சொன்னார். அமெரிக்க போலிசாரிடம் ஒரு விசயத்தில் நல்ல அனுபவம் உண்டு. வண்டியை நிறுத்தச் சொன்னால் நிறுத்திவிட்டு கூடுமானவரை இருக்கையிலேயே (சீட் பெல்ட்டோடு) இருந்து விடவேண்டும். சலாமடிக்கிறேன், வணக்கம் சொல்கிறேன் என்று காரிலிருந்து தடால் புடால் என்று இறங்கினால் நாம் ஏதோ எதிர்ப்பு காட்டுகிறோம் என்று பரபரப்படைந்து கச்சா முச்சாவென்று கத்துவார்கள். மதுரையில் ஒருமுறை பைக்கிலிருந்து இறங்கி நின்று பதில் பேசவில்லையென்று போலீஸ்காரர் ‘துரைக்கு இறங்கி நின்னு பேசத் தெரியாதோ’ என்று மிரட்டியது ஞாபகம் வந்தது. இந்தப் போலிஸ்காரர் விரலை ஆட்டி ’வா அருகே’ என்றது என்னையல்ல, காரைத்தான் என்று ஒரு மாதிரி புரிந்து கொண்டு அவரை நோக்கி சில அடிகள் உருட்டிச் சென்றேன். போதும் என்று சைகை செய்துவிட்டு காரருகே நடந்து வந்தார். இடுப்பைச் சுற்றி சலங்கையோடு இருக்கும் அரைஞாண்க் கொடி போல கைக்காப்பு, குறுந்தடி, வாக்கி டாக்கி, துப்பாக்கி என்று எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கோடு பெல்ட் அணிந்துகொண்டு, கிளிண்ட் ஈஸ்ட்வுட்டின் படங்களில் காணப்படும் கௌபாய் தொப்பியோடு அருகில் வந்தவர் சம்பிரதாய வசனங்களில் நான் அதிகபட்ச வேகத்தின் அளவை மீறி வண்டி ஓட்டி சென்ற குற்றத்தைக் கூறினார். ஒருமாதிரி தந்தியடித்துக் கொண்டே நான் crosscountry ஓட்டிக் கொண்டு செல்கிறேன் என்பதை கூறி முடித்தேன். கொஞ்சம் சமாதானமானவர் ‘இருந்தாலும் இப்படி இருபது வண்டிகளை ஒருசேர ஓவர்டேக் செய்வது ரொம்பவும் ஓவர்’ என்றுச் சொல்லி ஒரு டிக்கெட் கொடுத்துவிட்டார். ஊருக்குப் போய் அபராதத் தொகையை ஒழுங்காக மணியார்டர் செய்து விடவேண்டும். அசந்து மறந்து கட்டத் தவறினால் அரெஸ்ட் வாரண்ட் போட்டு விடுவார்கள். அமெரிக்க கோர்டுகள் நின்று கொல்லும் தெய்வம் மாதிரி. முப்பது வருடங்கள் கழித்தும் எப்பொழுதாவது வயோமிங் மாநிலத்தில் நுழைந்தால், இதே போலிஸ்காரர் எல்லையில் கைவிலங்கோடு காத்துக் கொண்டிருக்கலாம்.

பிரயாணத்தின் இந்தப் பகுதி பெரும்பாலும் பசுமையாகவே இருந்தது. நெப்ராஸ்காவின் கிழக்குபகுதி CST Timezoneல் வருவதால், இன்று இன்னொரு மணி நேரம் பறிபோனது.

லிங்கனை அடைந்து எக்கோனா லாட்ஜை அடையும்போது இரவு மணி பத்து. வரவேற்பு மேசையில் இருந்த இந்தியர் ’உங்களுக்கு தவறுதலாக புகைக்கும் அறை பதிவு செய்துவிட்டார்கள். உங்களுக்கு எதுவும் ஆட்சேபணை உண்டா?’ என்றுக் கரிசனத்தோடு கேட்டார். ஓரிரவு தங்குவதில் எந்த அறையாக இருந்தால் என்ன என்று மிதப்பாக ‘பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டேன். பிறகுதான் தெரிந்தது புகைக்கும் அறை என்பது சுருட்டு கோடவுன் போல நாற்றமடிக்கும் அறை என்று. அதில் படுக்கை விரிப்புகளில் நெருப்பு பொத்தல்கள் வேறு. மறுநாள் ஓஹையோவின் டொலீடோவில் தங்குவதற்கு சிவப்பு கூரை விடுதியில் (Red Roof Inn) முன்பதிவு செய்துவிட்டு படுக்கையில் விழுந்தேன்.

மேற்கிலிருந்து கிழக்கே - 1
மேற்கிலிருந்து கிழக்கே - 2
மேற்கிலிருந்து கிழக்கே - 3
மேற்கிலிருந்து கிழக்கே - 4
மேற்கிலிருந்து கிழக்கே - 5
மேற்கிலிருந்து கிழக்கே - 6

October 5, 2009

தமிழில் கிரந்தம்

சில நண்பர்களுடன் ட்விட்டரில் ’தமிழில் கிரந்தம்’ பற்றி உரையாடும் வாய்ப்பு கிடைத்தது இன்று. நிறைய புதிய விஷயங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பும் கிடைத்தது. ரவிசங்கர் போன்றோர் தமிழ் விக்கிபீடியாவில் இணைந்து பல்வேறு தன்னார்வ முயற்சிகள் மூலமாக தமிழில் அறிவுக் களஞ்சியம் உருவாக்க பாடுபட்டு வருகிறார்கள். தமிழ் விக்கிபீடியா சார்பில் தமிழில் கிரந்த எழுத்துகளின் பயன்பாடு பற்றிய கருத்துகளைப் பற்றி சிற்சில கருத்து பரிமாற்றங்களை ரவியுடன் செய்ய முடிந்தது. இம்மாதிரியான திறந்த விவாதங்கள் நன்மை பயக்கக் கூடியதே.