December 30, 2009

மாஸ்டர்

சிறுவயதில் சில வருடங்கள் விருத்தாசலத்தில் இருந்தோம். அப்பொழுது படித்த பள்ளியில் பெரும்பாலும் பெண் ஆசிரியைகளே. அத்தனை ‘மிஸ்’களுக்குமிடையே ஒரே ஒரு மிஸ்டர் ‘மாஸ்டராக’ இருந்தார். அவரே ஹெட்மாஸ்டரும் கூட. ‘மாஸ்டர்’னா அப்பக் கொஞ்சம் டர்ர்ர்ருதான். அப்புறம் மதுரையில் படிக்கும் போதெல்லாம் பள்ளியில் ‘மாஸ்டர்’ புழக்கத்தில் இல்லை. விளிக்கும்போது ‘சாஆஆர்’ என்றும் மற்றவர்களிடம் குறிப்பிடும்போது ‘வாத்தியார்’ என்றே சொல்லி பழக்கப்பட்டாகிவிட்டது. PT மாஸ்டரைக் கூட ‘யாருடா உங்க பிடி வாத்தியார்’ என்றுதான் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். வள்ளிநாயகம் என்று ஒரு கராத்தே மாஸ்டர் எப்போதும் அணியும் இறுக்கமான சட்டைக்காக ஞாபகம் இருக்கிறார்.

December 22, 2009

பாட்லக்

நான்கு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்கு வீடு தேடும்போது பவுலா என்ற லீசிங் மானேஜர் தற்போது தங்கியிருக்கும் வீடை சுற்றிக் காண்பித்தார். நாசூக்காக கேட்பதாக நினைத்துக் கொண்டு ‘இந்தியர்கள் அதிகம் இருக்கிறார்களா இந்தப் பக்கம்?’ என்று கேட்டேன். சிஐஏ ஏஜெண்டிடம் கிளாசிஃபைட் தகவலைக் கேட்டது போல் துணுக்குற்றவராக, ‘அதெல்லாம் சொல்ல எனக்கு அதிகாரம் இல்லை. சொல்லவும் கூடாது’ என்று சொல்லிவிட்டார். போதாதற்கு பதிவர் சீமாச்சு அவர்கள் இந்த ஊரில் முன்பே தங்கியிருந்த விவரம் பொது நண்பர் ஒருவர் மூலமாக தெரிந்து கொண்டு அவருக்கும் தொ(ல்)லை பேசி இங்கு இந்தியர்கள் ஜனத்தொகை பற்றி புள்ளிவிவரம் எல்லாம் கேட்டு தொந்தரவு செய்து கொண்டிருந்தேன். புதிய இடம், புதிய Neighbourhood என்ற தயக்கங்கள் அதிகமாக இருந்தது.

December 20, 2009

பயணம் செய்கிறேன்!

ஒரு ‘சுருக்’ கவிதை மற்றும் ‘நறுக்’ கதைக்கு முன்னே ஒரு நன்றியறிவித்தல்.

பதிவர் சர்வேசன் ஒரு சிறுகதை போட்டி நடத்தி முடிவுகளும் அறிவித்திருக்கிறார். நிமித்தகாரன் பெரும்பாலான நடுவர்களுக்கு பிடித்து முதலிடம் பிடித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இம்மாதிரி கதை போட்டிகள் நடத்துவதற்கு தேவைப்படும் உழைப்பு, நேரம், ஒருங்கிணைப்பு பிரச்சினைகள், நெகடிவ் விமர்சனங்களை எதிர்கொள்ளுதல் எல்லாம் தாண்டி ஒரு கிரியேட்டிவ் ஆர்வம் கண்டிப்பாக தேவை. அதற்காகவே சர்வேசனுக்கு ஒரு பெரிய நன்றி. நடுவர் குழுவில் இடம்பெற்றிருந்த வெட்டிப்பயல் பாலாஜி, சிவிஆர், சென்ஷி, ராமலஷ்மி முதலானோருக்கும் நன்றிகள். இறுதிச் சுற்றில் தேர்வு செய்ய வோட்டுப் பெட்டி வைத்துவிட்டு பின்னர் கழட்டி விட்டுவிட்டார்கள். அந்த நேரத்திற்குள் வோட்டுப் போட்ட நண்பர்கள் அனைவருக்கும் பெரிய எழுத்தில் நன்றி. விடாமல் ட்விட்டரில் மொக்கை போட்டு நண்பர்களை தொந்தரவு செய்ததற்கு பயனாக நிறைய நண்பர்கள் போனால் போகிறதென்று வாழ்த்தினார்கள். சிலர் காரணமே தெரியாமல் வாழ்த்திவிட்டு ‘என்ன மேட்டர்?’ என்று சாவதானமாக கேட்டுக் கொண்டார்கள். எல்லோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.