’ஓடெல் ஓய்ந்து விட்டார்’ என்ற ஃபோன் செய்தியோடு அந்த நாள் விடிந்தது. மரியோ ஆண்டிரைட்டின் சிக்கனமான செய்தி.
‘யார் ஓடெல்?’
‘ஓடெல் துர்மன் (Odel Thurman). தெற்கு ஈஸ்டனில் இருக்கும் புனித சூசை ஆலயத்தின் நிலவறையில் கொலை நிகழ்ந்திருக்கிறது. உடனே புறப்பட்டு வா’ பரபரப்பில்லாத செய்தி சொல்லும் குரல். மரியோ மிகவும் எளிமையான அதே சமயம் ஆழமான போலிஸ்காரர். சிசிலியனுக்கேயுரிய பல கரடுமுரடு குணாதிசயங்களோடு மிகவும் விசுவாசமானவர். ஒருவனை நண்பன் என்று நம்பிவிட்டால் போதும் உயிரையும் கொடுக்க துணிந்துவிடும் முரட்டுக் குழந்தை அவர்.
அவ்வளவு காலையில் ஒரு கொலைச் செய்திப் பற்றி தெரிந்து கொள்வது சங்கடமானதுதான். நார்தம்ப்டன் கவுண்டி (Northampton County) பொதுவாக அமைதியான பிரதேசம். இதற்கு முன்னால் நீங்கள் படித்த வில்ஃபர் டிரேனிகா கொலை நடந்து நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. செய்ண்ட் ஜோசஃப் சர்ச் கறுப்பர்களுக்கான கத்தோலிக்க சர்ச். ஓடெல் அங்கே பாஸ்டராக இருந்து வந்தார். பர்சனல் வாழ்க்கையைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் சமூகப் பிரச்சினைகளில் ஓரளவு இந்தக் கவுண்ட்டியிலேயே பிரபலம்தான்.
காரில் சென்று கொண்டிருக்கும்போது இருபக்கமும் பழுப்பு இலைகள் உலர்ந்து, உதிர்ந்து கொண்டேயிருக்க லெனேர்ட் மேயர்ஸிடமிருந்து அடுத்த ஃபோன். எக்ஸ்பிரஸ் டைம்ஸின் முதலாளி மற்றும் ஆசிரியர். இந்தக் கேஸின் முக்கியத்துவத்தைப் பற்றி மனதிற்குள் அப்பொழுதே மணியடித்துவிட்டது.
‘கிறிஸ்... என்ன செய்து கொண்டிருக்காய்’ லென்னி எப்பொழுது நேரடியாகத்தான் பேசுவார்.
‘ஓடெல்லைப் பார்க்கத்தான் போய்க் கொண்டிருக்கிறேன். எதுவும் செய்தி இருக்கிறதா?’
‘இல்லை. ஸ்பாட்டில் இருப்பது மரியோவா? கார் ஃபோன் எடுக்கவில்லை’
‘காரில் உட்கார்ந்து கொண்டா துப்புதுலக்க முடியும்?’ என்று கேட்க நினைத்தேன். ஆனால் அமர்ந்த இடத்திலிருந்தே செய்திகளை சேகரிக்கும் லென்னியின் சாமர்த்தியம் புரிந்தது.
‘இன்று மாலை சந்திப்போமா?’ என்றார்.
சில்லிஸில் மார்ட்டினியைச் சப்பிக் கொண்டே (ஆமாம். லென்னி மார்ட்டினியை சப்புக் கொட்டிக் கொண்டேதான் சாப்பிடுவார்) பேசலாம் என்று முடிவானது. கொலை நிகழ்ந்த சில மணிகளிலேயே பரபரப்பான எக்ஸ்பிரஸ் டைம்ஸ் பத்திரிகையின் முதலாளி தொலைபேசுகிறார் என்றால் ஓடெல் ஒரு ஜனநாயகக் கட்சிக்காரராகத்தான் இருந்திருக்க வேண்டும். லென்னி ஒரு ஹார்ட்-கோர் டெமாகிரெட்.
சர்ச்சை அடைந்த போது மரியோ ஓரளவிற்கு குற்ற நிகழ்வினைப் படம் பிடித்து விட்டார். இறந்தது ஓடெல் மட்டுமல்ல. அவருடைய நெடுநாளைய நண்பர் பிராஸ் ரெய்ல்-ம் (Brass Rail) சுடப்பட்டிருக்கிறார். ஓடெல் தலையில் சுடப்பட்டு இறந்துவிட்டார். பிராஸ் நெஞ்சில் சுடப்பட்டு நினைவிழந்து விட்டார். ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று விட்டார்கள்.
‘நெடுநாளைய நண்பர்கள் என்றால்?’ மரியோவிடம் கேட்டேன்.
‘ஒரே பள்ளி, ஒரேக் கல்லூரி, ஒரே நேரத்தில் ஆர்மியில் சர்வீஸ் செய்திருக்கிறார்கள். வியட்நாம் போர். 74-75ல் ஈஸ்டனில் செட்டில் ஆகி ரொட்டீன் வாழ்க்கை. வாரயிறுதியில் மான் வேட்டையாட, மீன் பிடிக்க...’ மரியோ காட்டிய திசையில் சிலர் நின்றிருந்தார்கள். லோக்கல் மக்களாயிருக்கலாம். அவர்களிடமிருந்துதான் மரியோ செய்திகளை சேகரித்திருப்பார். இந்தக் காலம் போல இண்டர்நெட், சர்ச் இஞ்சின் இல்லாத காலம் அது. உடனடி தேவை தகவல்கள். சர்ச் ஃபோனிலிருந்து ரிக்கிற்கு தொலைபேசினேன்.
‘சொல்லு சீஃப்’ என்ற குரல் கேட்டவுடன் ‘ஓடெல் தூர்மென். பாஸ்டர், செய்ண்ட் ஜோசஃப் கத்தோலிக்க சர்ச்’ என்றேன்.
நான் சொல்லி முடிக்கு முன்னர் அவன்
‘இன்றுக் காலை சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகப் பட்டியலில் முதல் நபர் அவர் நண்பர் பிராஸ் ரெய்ல். தற்பொழுது ஆஸ்பத்திரியில் நினைவிழந்த நிலையில். பிராஸிற்கு நினைவு வந்தவுடன் விவரங்கள் தெளிவாகும்’ என்று கூறி முடித்தான்.
‘ஓடெல் பற்றிய விவரம்?’ எல்லாரைப் பற்றியும் எல்லா சம்பவங்களைப் பற்றியும் ரிக்கிடம் கேட்கலாம். அவன் அலுவலக அறையில் சுவர்களே கிடையாது. ஆளுயுர ஃபைல் கட்டுகள் மட்டுமே கூரையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும்.
‘இருக்கிறது. அப்பொழுதே எடுத்து வைத்துவிட்டேன் தல. மாலை உன் செலவில் பியர் உண்டல்லவா?’ என்றான். சுவாரசியமான நண்பன்.
‘எக்ஸ்பிரஸ் டைம்ஸில் நாளை சூடாக செய்தி போட்டு விடுவார்கள். அதற்குள் நாம் ஹோம்வொர்க் செய்து விடவேண்டும்’ என்று சொல்லிவிட்டு, ஃபோனை வைத்தேன்.
’என்ன நினைக்கிறாய் மரியோ? பிராஸ்க்கு நினைவு திரும்பினால் எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும் இல்லையா?’
மரியோ மௌனமாக தலையாட்டினான். இந்த நேரத்தில், இந்த நிலையில் பார்த்தால் இது ஒரு ஓப்பன் & ஷட் கேஸ் போலத்தான் தெரிகிறது.
இல்லை போலிருக்கிறது. மறுநாள் அடாப்ஸி ரிப்போர்ட் பார்த்ததும் தலை சுற்றியது.
2 மறுமொழிகள்:
fast moving .!
இந்த சீரிஸை மொத்தமா பொறுமையா படிக்கலாம்னு இருக்கேன். தொடருங்க. :)
Post a Comment