January 27, 2010

சுட்டாச்சு சுட்டாச்சு - 3

முந்தைய பகுதிகள் - 1, 2

ஓடெல் கொலை சம்பந்தமாக இன்று முதல் மீட்டிங் நடந்தது. பிராசிக்யூஷன் அலுவலகத்திலிருந்து வக்கீல் ஆண்ட்ரூ வந்திருந்தார். மரியோ மற்றும் ரிக்கி கூட இருந்தார்கள். வக்கீல்கள் எப்படித்தான் இவ்வளவு பக்கங்களுக்கு குறிப்புகள் எழுதிக்கொள்கிறார்களோ. ஆண்ட்ருவின் அனுமதியோடு அவருடைய மீட்டிங் குறிப்புகளை கீழே தந்திருக்கிறேன்.

கிறிஸ்ஸுக்கு கேள்வி: ‘அடாப்ஸி ரிப்போர்ட் வந்தாகிவிட்டதா? ஓடெல் இறந்தது துப்பாக்கி குண்டால்தானே?’

’துப்பாக்கி குண்டுதான். ஆனால் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. ஓடெல் தலையில் சுடப்பட்ட காயம் இருக்கிறது. ஆனால் குண்டு கபாலத்தின் மேலாக உராய்ந்தவாறே வெளியேறி விட்டது. உள்ளே போகவில்லை. ஆனால் அவர் உடலில் ஏற்கெனவே ஒரு துப்பாக்கி குண்டு புதைந்து இருந்திருக்கிறது. ‘

கிறிஸ் காண்பித்த எக்ஸ்-ரே படங்களில் பச்சை மார்க்கரில் நிறைய குறித்திருந்தார்கள்.

‘இங்கே பெரிகார்டியல் ப்ளூராவில் (pericardial pleura) குண்டு புதைந்து இருந்ததாம். எப்பொழுதோ பட்ட காயம் அது. அந்த புல்லட்டை எடுக்க முடியாது என்று விட்டுவிட்டார்கள் போல’

இந்த விஷயம் ஆச்சர்யமாக இருக்கிறது. ரிக்கி சைடல் காண்பித்த ஒரு பழைய நியூஸ் கட்டிங்கில் ரஷியாவில் இது போல ஒரு கேஸ் பற்றி குறிப்பு இருக்கிறது. சிலசமயம் சிக்கலான பிரதேசத்தில் நுழைந்த புல்லட்டை எடுத்தால்தான் பிரச்சினை என்று விட்டுவைத்துவிடுகிறார்கள். நாளடைவில் அது உடலின் ஒரு பகுதியாக மாறிவிடும். ஓடெலுக்கு எப்பொழுதோ ஏற்பட்ட புல்லட் காயம்தான் அது. ரிக்கி சைடல் மேலும் விவரங்கள் தேடிக் கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்.

கிறிஸ்ஸின் அப்ரோச்: ‘அன்று விட்டுவைத்த புல்லட் நேற்று நடந்த களேபரத்தில் அதன் இடத்திலிருந்து சற்றே வெளியேறியிருக்கிறது. இண்டர்னல் ஹெமரேஜ் அண்ட் கார்டியாக் அரெஸ்ட்.’

கிறிஸ்ஸுக்கு கேள்வி: ‘பிராஸ்ஸின் நிலை என்ன இப்பொழுது’

‘இன்னமும் நினைவு திரும்பவில்லை’

கிறிஸ்ஸுக்கு கேள்வி: ‘பிராஸ் சுட்டதற்கு சாட்சி வேண்டும். வேறு யாராவது இருக்கிறார்களா?’

’பிராஸ்தான் சுட்டாரா என்பது இன்னமும் தீர்மானமாகவில்லை’

கிறிஸ்ஸுக்கு கேள்வி: ‘பின்னே வேறு யார்?’

பதில் இல்லை.

மேலும் செய்ய வேண்டிய வேலைகள்.

அடாப்ஸி செய்த டாக்டரிடம் ஒரு டெஸ்டிமெனி வாங்க வேண்டும்.
ஓடெல் எக்ஸ்-ரே படங்களைப் பற்றி வல்லுநர் குறிப்பு வாங்கிக் கொள்ள வேண்டும்.
கிறிஸ்ஸின் அணுகுமுறை கேஸை சிக்கலாக்குகிறது. பிராஸ் சுட்டதினால் ஓடெல் இறந்தார் என்பது சரியான அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
அதற்கு மேல் நான் ஒண்ணும் சொல்லவில்லை. ஆண்ட்ரூ எழுதிக்கொண்டே இருந்தார். பிராசிக்யூஷன் அலுவலகத்தில் வரிக்கு வரி தகவல் போய்ச் சேரும் என்று தெரியும்.

அந்த எக்ஸ்-ரேயை திருப்பிக் கொடுத்தவர் ‘இந்த அடாப்ஸிக்கான எல்லா தகவல்களையும் பக்காவாக வைத்துக் கொள்ளுங்கள். யாரும் நம்மை கதைக் கட்டுகிறோம் என்று நினைத்துவிடக் கூடாது’

ஆனால் அப்படித்தான் நிகழ்ந்தது. அடுத்த ஞாயிறு ‘ஓடெல் கொலையில் கட்டுக் கதைகள்’ என்று லென்னி கட்டுரை எழுதிக் காய்ச்சி எடுத்தார். குறிப்பாக என்னையும் மரியோவையும் தாக்கி எழுதியிருந்தார். இத்தாலியர் என்பதால் பிராஸ் காப்பாற்ற ஓடெல் கேஸை திரிப்பதாக குற்றச்சாட்டு இருந்தது. பிராஸ்ஸின் ரெஸ்டாரெண்ட்டில் மரியோவின் சில நண்பர்கள் பங்குதாரராக இருந்ததும் தனிச் செய்தியாக வெளியிட்டிருந்தார்கள். லியனோர்ட் மேயர்ஸின் பத்திரிகை முறைகளைப் பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால் ஓடெல் கேஸில் அவருடைய செயல்பாடு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

இரண்டு நாட்கள் கழித்துதான் மேகன் ரெய்ல்லை சந்தித்தேன். அது ஒரு சனிக்கிழமை என்று நினைவு. மேகனைப் பற்றி சொல்வதென்றால் தனி ஒரு அத்தியாயமே ஒதுக்க வேண்டும். இந்த வயதிலும் அவரிடம் ஒரு புத்துணர்ச்சி இருந்தது. நன்கு கனிந்த கனி போல ஒரு நறுவிசு இருந்தது. தொடர்ந்து அடுத்த வாரமும் இருமுறை சந்தித்தோம். ஆம். அவருக்கும் எனது சந்திப்பு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்.

அவர் வாரந்தோறும் நடத்தும் ‘நம்பிக்கை செய்தி’ கூட்டங்கள் மிகவும் முக்கியமானது. கிழக்கு ஈஸ்டனின் எல்லையை ஒட்டி ஹெல்லர்டவுன், ரோசட்டோ போன்ற பரோக்களில் (Boroughs) அதிக போதை பழக்கங்கள் இருந்தன. குற்றங்களும், குற்றவுணர்வால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் தவறிழைப்பதும் அதிகமாக இருந்தது என்று நினைக்கிறேன். மேகன் அங்கம் வகிக்கும் ‘நம்பிக்கை செய்தி’ கூட்டங்களில் counselling ஏதும் செய்வதில்லையாம். மூடிய அறையில் கூடும் நபர்கள் தங்கள் வாழ்வின் இருண்ட பக்கங்களை பதிவு செய்கிறார்கள். கூட்டம் கூடுவதற்கு முன்னர் தங்கள் மனதை அரித்துக் கொண்டிருக்கும் செயல்களை, சம்பவங்களை தங்கள் அடையாளம் தெரியாமல் எழுதி வைத்துவிடுகிறார்கள். கூட்டத்தில் அவை பகிரங்கமாக வாசிக்கப்பட்டு மற்ற அங்கத்தினர்களின் கருத்தும் பதிவு செய்யப்படுகிறது. கூட்டம் கலைந்து போகும்பொது பங்குபெற்றவர் எல்லோரும் தங்கள் மனதின் இருண்ட மூலைகளிலிருந்து விடுபட்டு வெளிச்சத்தை நோக்கிப் போகின்ற நம்பிக்கையோடு செல்கிறார்கள்.

‘இதற்கும் சர்ச்களில் பெறும் பாவமன்னிப்பிற்கும் என்ன வித்தியாசம்?’ என்று ஒரு முறைக் கேட்டேன்.

‘கடவுளிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு இறைஞ்சுவதைவிட, இதில் சக மனிதர்களிடையே தவறுகளை வெளிபடுத்துகிறோம். அந்த தவறுகளைப் பற்றிய அவர்களின் பதிலும் தெரிந்துவிடுகின்றதே’

உண்மை. சில வாரங்கள் கழித்து நானும் அவ்வகை கூட்டத்தில் பங்கேற்ற போது எனக்கும் அதே அனுபவம் கிடைத்தது. நம் எல்லோருக்கும் இவ்வகை வெளிப்பாடுகள் தேவைப்படுகின்றதே.

மேகனுடன் நடத்திய விசாரணைகளின் சாராம்சம் இதுதான்.

ஓடெல், பிராஸ் மேகன் எல்லோரும் சிறு வயதில் நாசரேத்தில் அக்கம்பக்கத்தில் இருந்திருக்கிறார்கள். பள்ளிப் படிப்பு முடிந்து ஓடெல் தனது தந்தையுடன் மளிகைக்கடையில் உதவியாக இருந்திருக்கிறார். பிராஸ் கல்லூரிவரைப் படித்து இருந்தார். 70களில் இருவருக்கும் இராணுவப் பணி அழைப்பு வந்திருக்கிறது. வியட்நாமில் சில சண்டைகளில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள். சைகான் சண்டையின் போது ஓடெல் குண்டடிப்பட்டு நாசரேத்திற்கு திரும்பிவிட்டார். பிராஸ் 5 வருடங்கள் பணி முடித்து திரும்புகிறார். (இந்த இடங்களில் மேகன் முகத்தில் தெரிந்த சில உணர்ச்சி கலவைகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டும்). இருவர்களுடனும் மேகனின் நட்பு தொடர்ந்தது. இருவருடங்கள் கழித்து மேகன் பிராஸ்ஸை மனம்புரிகிறார்.


மூன்றாவது அமர்வின் போதுதான் நான் முக்கியம் என்று எண்ணியிருந்த அந்தக் கேள்வியைக் கேட்க முடிந்தது.

‘மேகன்! நீங்கள் என்றாவது ஓடெல்லை காதலித்தீர்களா?’


2 மறுமொழிகள்:

ambi said...

முதல்ல ஸ்டாரானதுக்கு வாழ்த்துக்கள். நேத்து தான் பாத்தேன். அமாவசைக்கு ஒரு தரம், பவுர்ணமிக்கு ஒரு தரம் பதிவு போடற ஆளு என்னடா தினமும் ஒரு திருக்குறள் மாதிரி எழுதி தள்ளீ இருக்காறேன்னு டவுடு வந்து பாத்தேன். :))

அடடா, உங்க காருண்யம் ததும்பும் போட்டோ எல்லாம் போட்டு.. :))

லேசா ஒரு வழுக்கை எல்லாம் குடுத்து, உங்களுக்கு நான் ஒரு உருவம் குடுத்து வெச்ருந்தேன்.

ஒத்துக்கறேன், நீங்களும் யூத்து தான். :)))

ambi said...

தொடர்ந்து படித்து வருகிறேன் அண்ணாச்சி.

கதை நல்லா போகுது. ஆனா ஆட்கள் பெயர்கள், இடம் எல்லாம் ரொம்ப அன்னியமா தெரியுது. கொஞ்சம் லோக்கலைஸ் பண்ணி இருக்கலாமோ? மொழிபெயர்ப்பு வாசனை அடிக்குது. :))

ரா.கி.ரங்கராஜன் மொழிபெயர்ப்புகள் படிச்சு இருக்கீங்களா? ட்ரேஸினு ஒரு கதை செம த்ரில்லரா இருக்கும். மொழியை ரொம்ப லாவகமா கையாண்டு இருப்பார்.

மற்ற பாகங்களுக்காக ஆவலுடன் வெய்டீஸ். கதையின் முடிச்சு லேசா அவுழுது போலிருக்கே. :))