மின்சாரம் பாய்கின்ற ஒரு இரும்புக் கம்பியை உங்களைத் தொட்டுப் பார்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள்? மிகவும் ஜாக்கிரதையாக எச்சரிக்கையுடன் தொடுவீர்கள். ஆனாலும் அந்தக் கடைசி நொடியில் ஒரு தயக்கம் இருக்குமில்லையா? அதுதான் Instinct reaction. குற்ற விசாரணையில் இது பாலபாடம்.
ஓடெல்லை காதலித்தீர்களா என்றுக் கேள்விக்கு மேகன் சின்ன அதிர்ச்சியோடு பதிலளித்தார். இருந்தாலும் அந்தக் கேள்விக்காக அவர் காத்திருந்த மாதிரி ஒரு சிறிய மின்னல் அவர் கண்களில் தோன்றி மறைந்தது என்று நினைக்கிறேன். Instinct reaction.
‘எனக்கு காதலில் நம்பிக்கையே இல்லை கிறிஸ்’ என்றார்.
’காதல் இருந்ததில்லை’ என்று அவர் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொண்டேன். 15 வருடம் பிராஸ்ஸுடன் மணவாழ்க்கையில் இருந்தவர் காதலைப் பற்றி விரக்தியாகப் பேசுவது சற்றே ஆச்சர்யமான விஷயம்தான்.
‘ஓடெல் ஏன் திருமணமே செய்து கொள்ளவில்லை?’
‘தெரியவில்லை. டாக்டர்கள் வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக சொல்லியிருக்கிறார். வியட்நாம் சண்டையில் அவருக்கு ஏற்பட்ட காயத்தினால் அவர் எச்சரிக்கையாக தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால் மிகவும் நல்ல மனிதர். சுற்றுபுற சூழலில் அக்கறை கொண்டு சமூகப் பணிகள் செய்து வந்தார்’
விடைபெறுமுன் சாதாரணமாக கேட்பது போல் சட்டென் அந்தக் கேள்வியை வீசினேன்.
‘பிராஸ் ஓடெல்லை சுட்டிருப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?’
சில விநாடி மௌனத்திற்குப் பிறகு மேகன் சொன்னார் ‘அவர் மிகச் சிறந்த கணவர். அதற்கு மேல் எதுவும் சொல்லத் தோன்றவில்லை’
மீண்டும் கேட்டேன். ‘பிராஸ் சுட்டாரா?’
முகத்தை கையால் மூடிக்கொண்டு ‘சுட்டாச்சு... சுட்டாச்சு... இனியாவது இந்த உலகில் நிம்மதியான ஆன்மாக்கள் உலவட்டும்’ என்றார்.
ஆஃபிஸ் திரும்பியபோது ரிக்கி பல வருடங்களுக்கு முன்னர் நியுயார்க் டைம்ஸில் வெளிவந்த செய்தி குறிப்பைக் பிரதி எடுத்துக் கொடுத்தான்.
போர்கள ஆஸ்பத்திரியில் Machine-gunner ஓடெல் துர்மென் கண் விழித்துப் பார்த்த போது இராணுவ டாக்டர்கள் அவருடைய நிலைப் பற்றி ஆச்சர்யமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். ’எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் சைகான் அருகில் ஒரு கிராமத்தில் சண்டை நடந்து கொண்டிருந்தது. அந்த உயரமான அரசுக் கட்டிடத்தை அமெரிக்க இராணுவம் கைப்பற்றியிருந்தது. நான் இயந்திர துப்பாக்கியோடு அந்த கட்டிடத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது வலதுபக்கம் கட்டிடத்திலிருந்த காரின் மேல் ஒரு கெரில்லா நின்றுகொண்டு என் மேல் துப்பாக்கியை குறிவைப்பதைப் பார்த்தேன். அதற்கப்புறம் நான் கீழே விழுந்ததுதான் நினைவில் இருக்கிறது’ என்றார் ஓடெல் துர்மென்.
அந்த இளைஞர் ஆஸ்பத்திரியில் 13 நாட்கள் கழித்துதான் கண்விழித்துப் பார்த்தார். மூன்று மாதங்களுக்கு பிறகுதான் டாக்டர்கள் ஓடெல்லிடம் உண்மையைச் சொன்னார்கள். அன்று தாக்கிய புல்லட் ஓடெல்லின் தொண்டை வழியாக காலர் எலும்புகளை சிதைத்துக் கொண்டு நுரையீரலில் ஓட்டைப் போட்டுக் கொண்டு நேரடியாக இதயப் பகுதியில் சென்று இறங்கி விட்டது. அந்த புல்லட்டோடுதான் ஓடெல் தனது எஞ்சிய வாழ்நாளைக் கழிக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள்.....’
பேப்பரில் வெளிவந்திருந்த செய்தியை வைத்து அந்தக் காட்சியை மனதில் கற்பனை செய்து பார்த்தேன். இத்தனை வருடங்களாக மரணத்தை தனது உடலோடே சுமந்துகொண்டு இருந்திருக்கார் மனிதர்.
இந்தக் கொலையின் தொடக்க சுவிட்ச் எங்கோ இருக்கிறது. ஏதோ ஒரு உரசல், வாக்குவாதம், வருத்தம் சட்டென்று கோபபடுத்தியிருக்கிறது. அல்லது உள்ளே கனன்று கொண்டிருந்த கோபத்தை வெளியேக் கொண்டு வந்திருக்கிறது. என்னவென்றுதான் தெரியவில்லை.
ஓடெல் கொலையானதற்கு முந்தைய வாரயிறுதியில் நண்பர்கள் இருவரும் வேறு சில நண்பர்களோடு சேர்ந்து பிராஸ் வீட்டில் போக்கர் விளையாடி, பியர் குடித்து பொழுது போக்கியிருக்கிறார்கள். மேகனுக்கு உதவியாக அவருடைய ‘நம்பிக்கை’ குழுவின் பழைய பேப்பர்களை Recycle ஃபேக்டரிக்கு எடுத்து சென்றிருக்கிறார்கள். ஓடெல் Go Green இயக்கதில் தீவிர ஆர்வம் கொண்டவராம். சட்டென ஏதோ இடறியது. ஓடெல் சுடப்பட்ட நிலவறையிலிருந்த கொண்டு வந்த பொருட்களை மீண்டும் சரி பார்த்தேன். ஏதோ ஒரு விடுபட்ட கண்ணி அதன் இடத்தில் பொருந்துவது போல் தெரிந்தது.
பிராஸ் சுட்டாரா என்று கேட்டதற்கு இறுதியாக மேகன் சொன்ன ‘சுட்டாச்சு... சுட்டாச்சு’ இப்பொழுது புரிந்தாற்ப் போல இருந்தது.
2 மறுமொழிகள்:
ரைட்டு விடுங்க. அடுத்த பகுதியில் நிறைவடையுமா? :)
//ரைட்டு விடுங்க//
ரைட்டு விட்டுட்டேன் :))
ஆமாம். அடுத்த பகுதி இன்றைக்கே வந்திடும்.
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.
Post a Comment