மானம் போச்சு! மகுடம் போச்சு!
நம்பி வைத்த தனமெல்லாம்
கும்பி எரிய கொடுத்துப்புட்டேனே.
எண்ணி வச்ச எண் எதுவும்
எங்கண்ணிலேயே காணல.
கறுப்பி உன் ராசியால
திருப்பி வேணுமென் சொத்து
உருட்டிப் போடறேன் தாயத்து
விருப்பமா விழனும் எண் பத்து!
ஆகா! அரும ராசா!
விட்டத்தில மச்சத்தை சுத்தவிட்டு
திட்டம்போட்டு அடிச்சவன
கிட்டத்துல மால போட்டு
சட்டமா வீடு புகுந்த என்னய,
அண்ணந்தம்பி அத்தனபேரும்
கூசாம திட்டம் போட்டு
கூட்டமா பங்கு போட்டு
கொட்டம் அடிச்சீங்களே...
தரும பிரபு!
என்னாத்த நீதி நீயும் சொல்லி,
புண்ணாகிப் போச்சுது எம்மனசு.
ஆள அடிச்சுப்போடும் ஆன அவன்
வாள வீசும் வாளிப்பானவன் இவன்
காள குதிரை பாசைபேசும் கைகாரன்
நாள கோள நச்சத்திரத்த நம்பறவன்னு
கோளாறா ஒண்ணு சேந்து
கேளாம ஆண்டுப் போட்டீங்களே
கேப்பாரில்லயே அன்னிக்கு.
சூதுமதி கெட்டுப் போய்
சொத்தெல்லாம் தொலைச்ச
வெத்துவேட்டு ராசா!
உன்னைய சொக்கட்டான்ல
சிக்க வைக்கத்தான்
அன்னைக்கே திட்டம்போட்டு
சிரிச்சு வச்சேன்.
பொறாமைல பொசுங்கி,
ஆத்தமாட்டாம அலமோதி,
கன்னிப்போன மனசோட
தண்ணிமேல நடந்து
தத்தளிச்சு விழுந்த
உம்பங்காளிய உசுப்பிவிட்டேன்.
உன்மத்தம் புடிச்சவன
உம்மேல ஏவிப்புட்டேன்.
வெளங்காத கூட்டத்தில
வெடிச்சிருச்சு சர்ச்ச.
சட்டுபுட்டுன்னு தீந்திரக்கூடாது
இட்டுக்கறேன் ஒரு நேர்ச்ச.
ஏய்! அதிஸ்டங் கெட்ட தரித்திரமே!
அஞ்சு பேர் பாத்த தேகத்தை
அத்தன பேரும் பாக்கத்தான்
உடுத்திருககும் ஒத்த சேலயயும்
உருவிப் போட்டு நிப்பேன்!
நேந்திகிடறேன் இப்படியே
நீ தந்துப்பிடு ஒருவரம்.
பகடையில விழுது பார் பத்து
’பட்’டுன்னு அத மாத்திப் போடு!
என்ன பணயமா வச்சு
என்னவனும் தோத்துப்புட்டா
அழியாத பகையுமே வந்துசேரும்
அடிச்சிகிட்டு சாவானுங்க
அத்தன வாரிசும்!
குருவம்சம் மொத்தமும்
கருவழிஞ்சு போயிரும்!
சொன்னபடி என் நேர்த்திகடன
கண்ணன் கைதூக்கு முன்ன
திண்ணமா சபையில தீத்துபுடறேன்!
குறிப்பு1: மகாபாரதத்தில் திரௌபதிக்கு இன்னொரு பெயர் ’கிருஷ்ணை’ - ’கறுப்பி’.
குறிப்பு2: உரையாடல் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.
16 மறுமொழிகள்:
//குருவம்சமே குலையோட
கருவழிஞ்சு போவனும்!
அடிச்சிகிட்டு சாவனும்
அத்தன பேரும்!//
அய்யோ சாமி.. பயமாயிருக்கு!!
:-)
வார்தைகள்ல நெருப்பு.. நெருப்பு..
அட, இப்படியும் எழுதறீங்க!
//நாள கோள அறிஞ்ச நாலாமவன்
காள குதிரை பாசை தெரிஞ்சவன்னு//
சொற் குற்றமில்லை பொருளில் தான் குற்றமுள்ளது. (வந்துட்டானுங்க டா இணைய நக்கீரர்கள்).
நாளும் கோளும் அதன் சஞ்சாரமும் அறிந்தவன் சகாதேவனே (ஐந்தாமவன்).
குதிரைகளில் தேர்ச்சியுள்ளவன் நகுலன் (நாலமவன்).
எதுகை மோனைக்காக போட்டேன்னு சால்ஜாப்பு சொல்வீங்களே. இதிகாசம் முக்யம் அண்ணாச்சி. :))
பாடலில் கொஞ்சம் சந்தேகமா இருக்கு. திரவுபதி பாடுவதாக அமைத்து இருகீங்களா?
சகுனியின் பின்புலம் தெரியுமா? அந்த கண்ணோட்டத்தில் இந்த பாடலை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணினா சரியா வரும்னு தோணுது. எதுக்கும் ரெண்டாவது ரவுண்டுக்கு வரேன். :))
வாங்க கலையரசன்!
//நெருப்பு நெருப்பு//
தெக்கத்தி பக்கம் ‘நெருப்பு’க்கு வேற அர்த்தம் கூட உண்டுங்க. நீங்க நல்லவரு. அப்படியெல்லாம் திட்ட மாட்டீங்கன்னு நம்பறேன் :))
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
பப்பு!
//இப்படியும் எழுதறீங்க//
பாராட்டா சொன்னீங்கன்னே நினச்சுக்கறேன் (அப்படித்தானே? உன்ன நம்பமுடியாதேப்பா!)
உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பப்பு.
வாங்க அம்பிண்ணா!
சரியான பாய்ண்ட் சொல்லி காப்பாத்திட்டீங்க. ரொம்ப யோசிச்சு அந்த ரெண்டு வரியையும் மாத்திட்டேன் :)
மிக்க நன்றி!
பாடல் இரண்டு பகுதியா இருக்கு. முதல் பகுதி தருமர் புலம்பறதும்... இரண்டாவது பகுதி திரௌபதியின் விளக்கமுமாக.
குழப்பமாவா இருக்கு? ஹ்ம்ம்... பாப்போம்.
அழகா மாத்திட்டீங்க, நல்லாருக்கு. ரெண்டாம் தடவ படிச்சப்ப புரிஞ்சது.
//அத்தன பேரும் பாக்கத்தான்
உடுத்திருக்க ஒத்த சேலயயையும்//
இந்த இடத்துல பாக்கத்தானா?னு வந்திருக்கனுமோ?
நீங்க எழுதி இருக்கறத பாத்தா Intentionlaa திரவுபதி இப்படி(உடுத்திருக்க ஒத்த சேலயயையும்) செஞ்சு இருக்கற மாதிரி வருதே?
அப்புறம் என்னத்துக்கு கிருஷ்ணரை கூப்டனும்? லாஜிக் இடிக்குதே! :))
உடனடி வெரிஃபிகேஷனுக்கு நன்றி அம்பிண்ணா :)
கறுப்பி சொல்றதப் பாத்தா அவ தரித்திரத்துகிட்ட நேந்துக்கறா மாதிரி தெரியுது.
தருமன் கடைசியா அவள வச்சு சூதாடும்போதும் தோத்துப் போகனும்.
அப்படி தோத்துப் போனா துணியில்லாம எல்லார் முன்னாடியும் நிக்கறேன்னு வேண்டுதல் செஞ்சுக்கறா போல.
அவளோட பழய கோபம்தான் அந்த நேர்ச்சைக்கும் காரணமாம்.
அதுபடியே நடந்திச்சா அவளும் நேர்ச்சையை நிறைவேத்திடறாளான்னு இந்தக் கவிதையில தெரியல.
அப்படி நேர்ச்சை நிறைவேத்தினா அப்புறம் ஏன் கிருஷ்ணனை கூப்பிடனும்? அதயெல்லாம் பத்திக் கேட்டா அவ இன்னொரு கவிதை சொல்லுவாளே, பரவாயில்லையா? :))
****
இந்த இடத்துல பாக்கத்தானா?னு வந்திருக்கனுமோ?
****
அம்பி, உங்களுக்கு இந்த பாட்டுல முந்தின வரியைல்லாம் ஒண்ணுமே புரியலையா :)- பாவமைய்யா ஸ்ரீதர் !
வாழ்த்துக்கள் ஸ்ரீதர். இந்தமுறை அகநாழிகை பதிப்பகத்துக்கு லாபம் :)-
அடியே கறுப்பி ஆத்திரம் பிடிச்சவளே
எஞ்சோட்டு மக்களை முச்சூடா முடிக்கவா
உன்னோட குடும்பத்துல ஓராளா ஆனேன் நான்?
உன்னோட திட்டத்தை உருப்பட விடமாட்டேன்;
சேலையப் பறிப்பானோ? பறிச்சாலும் வளரவைப்பேன்,
அஞ்சுபேர் தவிர அன்னியன் பாக்கமாட்டான்.
பரம்பரையை ஒழிப்பியோ?பாத்துகிட்டு விடமாட்டேன்,
நூறை விட்டாலும் அஞ்சைத் தொடமாட்டேன்.
அஞ்சோட வாரிசு அத்தனையும் போனாலும்
உள்ளே இருந்தாச்சும் ஓருயிரைக் காத்திடுவேன்.
கறுப்பி உன் காண்டு கணக்கெல்லாம் தாண்டிருச்சு
கண்ணன் என் கணக்கை காணுவே காலம்வரும்.
//உள்ளே இருந்தாச்சும் ஓருயிரைக் காத்திடுவேன்.//
சூப்பரு :)
ஆனா அப்படி செஞ்ச கண்ணனோட யாதவகுலம் பூண்டோட அழிஞ்சு போனதாமே.
வரீங்களா இப்படியே பின்னூட்டத்திலேயே ஒரு ’உப பாண்டவம்’ எழுதிப்பிடலாம் :)
உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுரேஷ்.
//வாழ்த்துக்கள் ஸ்ரீதர்.//
மிக்க நன்றி மணி. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
அம்பி பாவங்க. அவருக்கு பிடிச்ச ஹீரோ கோபியர் சூழ்ந்திருக்கும் கிருஷ்ணர்தானாம். அடுத்து ‘ராசலீலா’ எழுதறதுக்கு திட்டம் போட்டுகிட்டு இருக்கார். :))
வாழ்த்துக்கள்
அட...!
வாழ்த்துக்கள்!!
போட்டு வாங்குறது அப்படீம்பாங்க
///உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சுரேஷ்////
இதுதான் கேட்டு வாங்குறதா?
அவரு எசப்பாட்டுக்கு எதிர்பாட்டு தானையா பாடியிருக்காரு :)
ரெண்டுமே நல்லா இருக்கு
எண்ணத்தின் வெளிப்பாடுகள் அழகிய கவிதை வடிவில் அருமை!....
வாழ்த்துக்கள் மென்மேலும் வளம்பெற......
Post a Comment