அந்நாளில் காங்கிரஸ் பேரியக்கமாக பரிணமித்து இருந்தாலும் முழு சுதந்திரம் இந்தியாவிற்கு தோதுபடாது என்ற கருத்துகளோடு சில பலமான இயக்கங்களும் இருந்தன. அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கமும் இந்தியாவிற்கு பூரண சுதந்திரம் அளிப்பதில் உண்டாகும் சிக்கல்களைக் குறித்த எச்சரிக்கையில் இருந்தது. இந்த கருத்து வேற்றுமைகளுக்கு நடுவில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் மட்டுமே ‘பூரண சுதந்திரமே எமது இலக்கு’ என்று உறுதியாக நின்றது. காங்கிரஸின் தொடர்ந்த அழுத்தத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் மிக விஸ்தாரமாக ‘இந்திய அரசாங்க சட்டம் - 1935’ என்ற சட்டம் மூலமாக இந்திய அரசியலமைப்பிற்கு முழு வடிவம் கொடுக்க முனைந்தது. இதனை இன்றைய அரசிலமைப்ப் சட்டத்திற்கு முன்னோடி எனக் கூறலாம். அதில் காங்கிரஸ் எதிர்பார்த்த Bill of Rights (உரிமைப் பிரகடனம்) இடம் பெறவில்லை. இந்தச் சட்டத்தை முழுவதுமாக நிறைவேற்ற முடியாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் திணறியதில் இந்திய சுதந்திர போராட்டம் வலிமையடைந்தது.
தொடர்ந்து இந்தியர்களிடம் இந்தியாவை ஆளும் அதிகாரத்தை கையளிக்க முடிவு செய்து 1947ல் இந்திய சுதந்திரச் சட்டம் பிறப்பிக்கப் பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலையளிக்கப் பட்டாலும் இந்தியா ஒரு dominion அந்தஸ்துள்ள காமென்வெல்த் நாடாகத்தான் அங்கீகரிக்கப் பட்டது. மிச்ச சொச்ச பிரிட்டிஷ் முடியாட்சி பாரம்பர்யத்தை துண்டித்துக் கொண்டு 1950ல் இந்தியா தன்னை ஜனநாயக குடியரசாக பிரகடனப்படுத்திக் கொண்டது. பி ஆர் அம்பேத்கர் தலைமையிலான ஆறு சட்டறிஞர்கள் கொண்ட அரசியலமைப்பு வரைவுக் குழு தயாரித்த அரசியலமைப்பு சட்டத்தை கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் விவாதித்து செதுக்கி 1950ல் அமல்படுத்தியிருக்கிறோம்.
ஆங்கிலேயர்களின் இராணுவ மற்றும் பொருளாதார வலிமை குன்றிருந்த காலகட்டம் அது. இயற்கையாகவே காலனி ஆதிக்கங்கள் முடிவுக்கு வந்தவண்ணம் இருந்தன. இந்திய சுதந்திரம், தொடர்ந்து குடியரசாக மாறியது போன்றவைகள் அந்த நீரோட்டத்தில் அமைந்த இயல்பான நிகழ்ச்சிகள் என்றாலும், சுதந்திரம் கையளிக்கப்படுமுன்னரே பிரிவினைக்கு ஆளான ஒரு பிரதேசம் இத்தனை வருடங்களாக தொடர்ந்து ஒரு ஐக்கிய குடியரசாக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதுவும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வளர்ச்சிப் பாதையில் விரைந்து சென்று கொண்டிருக்கிறோம். பிறிதொரு காலத்தில் இந்தியாவின் பொற்காலத்தின் தொடக்கமாக நாம் இருக்கும் இந்த காலகட்டத்தை வரலாற்று் அறிஞர்கள் கண்டறியலாம்.
அண்டை நாட்டுடன் சுமுக உறவுகள், எல்லைப் பிரச்சினைகள், ஏழைகளின் வாழ்வாதார பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, குழப்பமான ஜனநாயக அரசியல், பண்பாட்டு பிரச்சினைகள், மதக்கலவரங்கள், பாதுகாப்பு பயமுறுத்தல்கள் என்று ஏகத்துக்கு இருக்கும் சிக்கல்களிடையே இந்தியா வெற்றிகரமாக ஒன்றிணைந்த குடியரசாக இருப்பது ஒரு சாதனையே. இந்திய குடிமக்கள் எல்லோருக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
8 மறுமொழிகள்:
இன்று முதல் இந்தியாவும் ஒரு சீனியர் சிட்டிஸனாகிவிட்டது என்று சிலர் சொல்லுகிறார்களே..?
இந்திய குடியரசு தின வாழ்த்துகள்.
வருடம் 365 நாட்களையும் சுதந்திர தினமாகக் கொண்டாடலாம்,தவறில்லை!
சுதந்திரம் எனப் அது காப்பாற்றிக் கொள்ளப் படவேண்டியது, விழிப்புடன் இருக்க வேண்டியது என்ற பிரக்ஞையும். தேர்ந்தெடுத்த அரசியல் பிரதிநிதிகள் ஒழுங்காகச் செயல்படுகிறார்களா என்பதைப் பார்க்கத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே கொண்டாட்டம் நிலைக்கும்!
இரண்டாவது மூன்றாவது பத்தியில் சொல்லப் பட்டிருக்கும் விவரங்கள் முழுமையானதோ, உண்மையோ இல்லை.
காங்கிரஸ் கட்சி பூரண சுதந்திரத்தைக் கோரிய கட்சியாக எப்போதுமே இருந்ததில்லை. கொஞ்சம் கூடுதலாக சலுகைகளை விண்ணப்பித்துக் கொள்கிறவர்கள் கட்சியாகவே அது ஆரம்ப முதல் இருந்தது.
காந்தியின் அரசியல் பிரவேசமும், ஜனங்களோடு இணைந்து அவர் எச்சரிக்கையாக முன்னெடுத்த போராட்டங்களுமே, ஒரு கட்டத்தில், அதுவும் எப்போது, 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கமாக உருவெடுத்தது. இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில், பிரிடிஷ்காரர்கள் தங்களுடைய காலணிகளை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலையாகவும் இருந்தது.
காமன்வெல்த் என்பது,எங்கள் சாம்ராஜ்யத்தில் சூரியன் அஸ்தமிப்பதே இல்லை என்று பீற்றிக் கொண்டவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக, ஒரு க்ளப் மாதிரித் தான் இருந்ததே தவிர அந்த அமைப்பினால் எவருக்கும் எந்தப் பயனும் இருந்ததில்லை.
இந்தியாவை ஒன்றிணைத்துக் கொண்டிருப்பது, அதன் அரசியல் சட்டமோ, குடியரசோ, அரசியல்வாதிகளோ இல்லை!
காலகாலமாகப் பண்பாடும் மரபும், வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிற இயல்புமே, இன்னமும் இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறது!
//இந்திய சுதந்திரம், தொடர்ந்து குடியரசாக மாறியது போன்றவைகள் அந்த நீரோட்டத்தில் அமைந்த இயல்பான நிகழ்ச்சிகள் என்றாலும், சுதந்திரம் கையளிக்கப்படுமுன்னரே பிரிவினைக்கு ஆளான ஒரு பிரதேசம் இத்தனை வருடங்களாக தொடர்ந்து ஒரு ஐக்கிய குடியரசாக ஜனநாயக முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது//
நல்ல பகிர்வுகள் ......வாழ்த்துக்கள்.
1929 பிறகுதான் பூரண சுதந்திரம் தேவை என்று காங்கிரஸ் போராட துவங்கியது
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
@chillsam
:)) நன்றி
@வெ. இராதாகிருஷ்ணன்
வாழ்த்துகளுக்கு நன்றிங்க.
@கிருஷ்ணமூர்த்தி
விரிவான பின்னூட்டத்திற்கு நன்றி.
//வருடம் 365 நாட்களையும் சுதந்திர தினமாகக் கொண்டாடலாம்,தவறில்லை!//
சுதந்திர தினமோ, குடியரசு தினமோ ஒரு அடையாளம்தானே. நாம் தினமும் சுவாதித்துக் கொண்டிருந்தாலும், பிறந்த தினமென்று ஒரு தினத்தை கொண்டாடுவது ஒரு அடையாளம்தானே.
//இரண்டாவது மூன்றாவது பத்தியில் சொல்லப் பட்டிருக்கும் விவரங்கள் முழுமையானதோ, உண்மையோ இல்லை//
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு என்பது ஒரு ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு. ’இது பொய்’ என்று நீங்கள் சொல்லும்படி எதுவும் பதிவில் எழுதப்படவில்லை. :)
//இரண்டாவது மூன்றாவது பத்தியில் சொல்லப் பட்டிருக்கும் விவரங்கள் முழுமையானதோ, உண்மையோ இல்லை//
1930-ல் பூர்ண சுவராஜ் தீர்மாணம் நிறைவேற்றப்பட்டு நேரு லாகூரில் இந்திய தேசிய மூவர்ணக் கொடி ஏற்றினார் என்று எழுதியிருக்கிறேன். இங்கே விக்கியிலும் நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். பொத்தாம் பொதுவாக சொல்வதற்கு முன்னர் சரியான முறையில் வரலாறு படித்துவிட்டு வரலாமே.
//காந்தியின் அரசியல் பிரவேசமும், ஜனங்களோடு இணைந்து அவர் எச்சரிக்கையாக முன்னெடுத்த போராட்டங்களுமே, ஒரு கட்டத்தில், அதுவும் எப்போது, 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கமாக உருவெடுத்தது.//
1930க்கு முன்னால் காந்தி காங்கிரசில் இல்லை என்று சொல்ல வருகிறீர்களா?
சொல்லப் போனால் பூர்ண சுவராஜை ஆதரித்தது நேருவும், சுபாஷ் சந்திர போஸும். காந்தி அதை முதலில் ஆதரிக்கவில்லை. புகழ்பெற்ற கல்கத்தா தீர்மாணத்தை பற்றி நான் முன்னர் அளித்த சுட்டியில் படித்துப் பாருங்கள்.
In December 1928, Congress held in Calcutta, Mohandas Gandhi proposed a resolution that called for the British to grant dominion status to India within two years. If the British failed to meet the deadline, the Congress would call upon all Indians to fight for complete independence. Bose and Nehru objected to the time given to the British - they pressed Gandhi to demand immediate action from the British. Gandhi brokered a further compromise by reducing the time given from two years to one. Jawaharlal Nehru voted for the new resolution, while Subhash Bose told his supporters that he would not oppose the resolution, and abstained from voting himself. The All India Congress Committee voted 118 to 45 in its favor (the 45 votes came from supporters of a complete break from the British).
------
//அந்த அமைப்பினால் எவருக்கும் எந்தப் பயனும் இருந்ததில்லை//
கனடா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து போன்ற நாடுகள் dominion அந்தஸ்தோடு பிரிட்டிஷாரின் ஆதரவில் பல வருடங்கள் இருந்திருக்கிறார்கள். அதானால் அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பிரயோஜனமும் இருந்தது.
இரண்டாம் உலகப் போர் இறுதியில்தான் டொமினியன் அந்தஸ்து காலாவதியாகியது.
//காலகாலமாகப் பண்பாடும் மரபும், வேற்றுமையிலும் ஒற்றுமை காண்கிற இயல்புமே, இன்னமும் இந்தியாவை ஒன்றுபடுத்திக் கொண்டிருக்கிறது!//
இந்தியாவிற்கு என்று ஒரே பண்பாடு என்றுமே இருந்ததில்லை. உதாரணத்திற்கு, வடமாநிலப் பகுதிகளில் அந்த காலத்தில் ‘சதி’ என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம் உண்டு. நமது பகுதிகளில் அப்படிப்பட்ட பழக்கம் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடையாது. பண்டைய தமிழ் கலாச்சாரத்தில் பெண்களுக்கு மறுமணம் கூட செய்யும் பழக்கம் இன்றும் கிராமப்புறங்களில் ‘அறுத்து கட்டும்’ வழக்கமாக இருந்து வருகிறது. விதவைகளை வைதவ்ய கோலத்தில் வைப்பது கூட தமிழ் குடும்பங்களில் பெரும்பாலும் இருப்பதில்லை. கலாச்ச்சாரம் பண்பாடு நிறைய மாறுதல்களைக் கொண்டது.
மிகக் கவனமாக இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்பு சட்டம் நம்மை ஒன்றுபடுத்த மிகவும் உதவியது. அதற்கு முன்னர் மதுரையிலிருந்து தஞ்சைக்கு போர் முரசுக் கொட்டி சென்றவர்கள்தாம் நாம்.
இந்தியாவை முழுவதுமாக ஒருங்கிணைத்து ஐக்கிய குடியரசாக மாறுவதற்கு பிரிட்டிஷ் அரசாங்கம் மிகவும் உதவி செய்தது. அதை பின்னர் வந்த சுதந்திர அரசாங்கங்கள் நன்காகவே பாதுகாத்து வந்தன. எமர்ஜெண்ஸி காலம் மட்டுமே சற்று பிசகிய காலம்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
வாங்க சாமுவேல்!
//நல்ல பகிர்வுகள் ......வாழ்த்துக்கள்.//
நன்றி :)
வாங்க அரவிந்த்!
//1929 பிறகுதான் பூரண சுதந்திரம் தேவை என்று காங்கிரஸ் போராட துவங்கியது
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
//
பூர்ண சுவராஜ் பற்றிய குறிப்புகளை மேலே ‘கிருஷ்ணமூர்த்தி’க்கு அளித்த பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
சிப்பாய் கலகத்திற்கு பிறகுதான் ’இந்திய அரசாங்கம்’ என்ற நிலையையே பிரிட்டிஷார் எடுக்கிறார்கள். அரசாங்கத்தில் இந்தியர் பங்கெடுக்க ஆரம்பித்ததே பிறகுதான்.
லாகூர் கூட்டத்தைப் பற்றி விரிவாக படிக்கும் போது நமக்கு நிறைய புரிதல்கள் உண்டாகின்றன.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Post a Comment