January 28, 2010

சந்தன நிற ஷெர்வானி

புதுக்கோட்டையில் பெரியப்பா வீட்டில்தான் முதன் முதலில் ஷெர்வானி உடையைப் பார்த்தான் ஆவுடையப்பன். பெரியப்பா, தாத்தாவெல்லாம் அந்த உடையில் போட்டோ எடுத்து ஃபிரேம் போட்டு சுவரில் மாட்டியிருந்தார்கள். ஏனோ அந்த நீள அங்கி உடை ஆவுடையப்பனுக்கு அதி மயக்கத்தை கொடுத்தது. ஆவுடையப்பனின் தந்தை குருசாமி மதுரை ஆர்டிஓ அலுவலகத்தில் புரோக்கர் வேலை பார்த்து வந்தார்.

’ஆவுடை, தோ பிரௌன் ஃபேண்ட்டு பிட்டு கொணாந்திருக்கேன். கோபி கடையில போய் அளவு கொடுத்து தைக்க கொடுத்திருப்பா’ என்ற அளவிற்குதான் ஆவுடையப்பனுக்கு உடைத் தேர்வில் சுதந்திரம் கொடுத்திருந்தார். அவருக்கு அது எப்போதும் ஃபேண்ட்டுதான். ஒருமுறை பெரியப்பாவின் ஷெர்வானிப் பற்றி ஆவுடை பெருமையாகப் பேச குருசாமிக்கு செமர்த்தியான கோபம் வந்துவிட்டது. சொத்துப் பிரிக்கும்போது ஏற்பட்ட பழைய கசப்பில் கன்னாபின்னாவென்று திட்டினார்.

‘வீடு விக்கறதுக்கு மதுரைக்கு வருவான்ல. கையெளுத்துப் போடற கையில் நரம்பை கட் பண்ணிடறேன்’ என்று வெறியோடு சுற்றிக் கொண்டிருந்தார். ஆவுடையின் ஷெர்வானி ஆசைக்கு விடிவே வரவில்லை. மூக்கிற்கு மேல் புறப்பட்ட பூனைமயிரை சின்ன சீப்பால் வாரிவிட்டுக் கொண்டு, கனுக்கால்களில் ஏற்படும் ரோம வளர்ச்சியிலும், முகத்தில் முளை விட்டிருக்கும் பருக்களிலும் ஆளாகிவிட்ட அடையாளத்தை தேடிக் கொண்டிருந்த காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்தான் ஆணின் அடையாள்மாக அறியப்பட்டிருந்தது. ஆவுடைக்கு மட்டும் அவ்வப்போது தாத்தா கனவில் வந்து மிடுக்கான ஷெர்வானியை காட்டி ஆசைத்தீயை அணைந்து விடாமல் பார்த்துக் கொண்டார்.

யாதவா காலேஜில் ஜுவாலஜி படிக்கும்போது அசோக் போன்ற மார்வாரிப் பையன்கள் அணிந்து வரும் கனுக்கால்வரை நீளும் ஜிப்பாவும் கெண்டைக்காலைப் பிடிக்கும் இறுக்கமான கால்சராயும் பார்க்க மிக அழகாக இருக்கும். இருந்தாலும் ஆவுடைக்கு ஷெர்வானிதான் ராஜ உடையாக தெரிந்தது. குறுக்கில் அறுத்து நெடுக்கில் ஆராய்ந்த தவளைகளின் சாபமோ என்னவோ கல்லூரியில் கற்ற ஜுவாலஜி கைகொடுக்காமல், பார்ட் டைமாக படித்த கம்ப்யூட்டரை நம்பி பெங்களூருவிற்கு புலம்பெயர்ந்தான். பெங்களூருவிற்கு வந்ததில் ஒரு மறைமுக சந்தோஷம், புதுக்கோட்டை பெரியப்பாவின் பையன் தட்சிணாமூர்த்தி மதிக்கரேயில் ஒரு ஒற்றை அறை வீட்டில் குடியிருந்ததுதான்.

தட்சிணாமூர்த்தி மதிக்கரேயிலிருந்து இரண்டு பேருந்துகள் மாறி இரண்டு மணி நேரம் பிரயாணம் செய்து வொய்ட்ஃபீல்டில் ஒரு பெரிய நிறுவனத்தில் கணக்கெழுதிக் கொண்டிருந்தார். அதாவது கம்ப்யூட்டர் கணக்கு. ஆவுடையை இருகரம் நீட்டி வரவேற்று இரண்டே வாரத்தில் தனது கம்பெனியிலேயே காண்டிராக்டுக்கு கோடு எழுத ஏற்பாடு செய்துவிட்டார். ஓவியக் கோடு இல்லை. கம்ப்யூட்டர் கோட். ஒரு பின்னிரவு நேரத்தில் மெதுவாக பெரியப்பா வீட்டில் இருக்கும் ஷெர்வானி பற்றி பிரஸ்தாபித்த போது அப்பாவை விட மோசமாக

‘பெங்களூர்ல மட்டும் கால் வைக்கட்டும். குதிகால் நரம்பைக் கட் பண்ணிர்றேன்’ என்று பெரியப்பாவை திட்ட ஆரம்பித்து விட்டார். சொத்து பைசல் பண்ணுவதில் பெரியப்பாவிற்கு ஏகப்பட்ட பகை இருந்தது போல. வாரிசுகளும் கொலைவெறியோடு இருந்தார்கள்.

புவனேஸ்வரி அக்காவிற்கு கல்யாணம் நிச்சயமானபோது சம்பந்தி வீட்டார் ‘மாப்பிள்ளைக்கு வெயிட்டா டிரஸ் எடுத்துர்றோம். என்னா டிரஸ்ஸுய்யா வேணும்?’ என்று வாஞ்சையோடு ஆவுயடையைப் பார்த்துக் கேட்க, அப்பா அவசர அவசரமாய் ‘புஷ் கோட்டு, சூட்டு எடுத்திருங்க. அதான் அவனுக்கு ரெம்ப பிடிக்கும்’ என்று சொல்லிவிட்டார். அக்கா கல்யாணத்தின் போது கோட்டு சூட்டுப் போட்ட கம்ப்யூட்டர் ஆள் என்று நாலு பேர் பார்த்தால்தானே தம்பியின் மதிப்பு கலியாண மார்க்கெட்டில் கூடும்.. அவர் போட்ட கணக்கில் ஆவுடையின் ஷெர்வானி வாய்ப்பு சிதறிப் போய்விட்டது.

தட்சிணாமூர்த்தி சிங்கப்பூருக்கு வேறு வேலை கிடைத்துப் போய்விட, ஆவுடை கூட வேலை செய்யும் சேவியரின் குடித்தன பர்டனராக அல்சூருக்கு ஜாகை மாறினான். ஆவுடையின் கூச்ச சுபாவத்திற்கும் சேவியரின் கலகலப்பிற்கும் நன்றாக ஒத்துப் போனது. கலகலப்பாக இருந்தாலும் சேவியர் மிகவும் ஆழமான ஆளாக இருந்தான். அவனுக்கு சொந்த ஊர் நாகர்கோவில். சேவியர் மிகவும் தீவிரமாக காதலித்து வந்தான் என்பது அவன் நடவடிக்கையிலிருந்து தெரிந்தது. நைட் ஷிஃப்டில் வேலையை வைத்துக் கொண்டு பகலில் காதலியோடு நிறைய ஊர் சுற்றினான். சில நாட்கள் வீட்டில் கண்ணாடியில் இருக்கும் ஒட்டு பொட்டுகளை பார்த்து ஆவுடை வெட்கப்பட்டிருக்கிறான். காதலின் மிச்ச விவரங்கள் தெரிந்து கொள்ளும் அளவிற்கு இருவரும் நெருக்கமாகவில்லை.

தட்சிணாமுர்த்தி அண்ணன் முறை என்பதால் அடக்கமாக இருந்த ஆவுடைக்கு சேவியரோடு சேர்ந்தது சிறகடித்து பறப்பது போல் இருந்தது. பெங்களூருவின் பிரம்மசர்ய வாழ்க்கைதான் எத்தனை சுகமானது என்பது ஆவுடைக்கு சேவியரால்தான் புரிய ஆரம்பித்தபோது சந்தோஷம் நீடிக்காமல் வழக்கம்போல வில்லனாக குருசாமி வந்து சேர்ந்தார்.

‘கலெக்டர் ஆபிசுல காண்டீன் காண்டிராக்ட் எடுத்திருக்காரே மயில்சாமி... அவரு பொண்ணு இங்ஙனதான் படிக்குதாம். ராமையா காலேஜாம்ல. பரிசம் போட்டுரலாம்னு இருக்கோம். ந்தா ஃபோட்டோ பாத்து பொண்ணு புடிச்சிருக்கான்னு சொல்லு’ என்றார்

வாசனைக் கூந்தலோடு, எழுதிவைத்த புருவமும், சிவப்பு உதடுகளும், நேராகப் பார்த்து சிரிப்பதுமாக இருக்கும் பெங்களூருப் பெண்கள் என்றால் ஆவுடைக்கு அலர்ஜிதான். போட்டோவில் இருந்தப் பெண் மதுரை சாயலிலே இருந்த மாதிரிப் பட்டது. மேலும் அப்பா தன்னிடம் தலையாட்டல் மட்டுமே எதிர்பார்ப்பார் என்று தீர்மானமாய் தெரிந்து வைத்திருந்தான். மண்டையை ஆட்டி வைத்தான். ஆவணி பதினெட்டில் முகூர்த்தம், முதல் நாளே வந்துவிடு என்று சொல்லிவிட்டு குருசாமி பொண்ணு போட்டோவையும் பிடுங்கிக் கொண்டு வந்த வேகத்திலேயே ஊருக்குப் திரும்பிவிட்டார்.

’ஊமக் கோட்டானா இருந்திட்டு டக்குன்னு மேரேஜ் பண்ணி செட்டிலாகுறீயே. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. நம்ம ஆளுதான் லவ்வை வீட்டுல சொல்லவே டரியல் ஆகுது. எப்ப கல்யாணத்துக்கு கொடுப்பினை இருக்கோ’ என்றான் சேவியர்.

‘கவலைப்படாதே சேவியர். நான் உங்க லவ்வுக்கு கண்டிப்பா ஹெல்ப் செய்யறேன்’ என்று நிஜமான கரிசனத்தோடு சொன்னான்.

‘நன்றிப்பா. நம்ம ஆளு சைட் கொஞ்சம் அராத்து பார்டிங்கதான். அதான் கொஞ்சம் பயம். ஜாதி, சச்சரவு, அருவா, அரசியல்னு அவ ரொம்பவே பயப்படறா. அவ மட்டும் கொஞ்சம் தைரியமா இருந்தா இன்னும் சுளுவா டீல் பண்ணலாம். கண்டிப்பா உன்னோட ஹெல்ப்பு எல்லாம் தேவையா இருக்கும் ஆவுடை. அவ இல்லாத வாழ்க்கையை நினச்சுப் பாக்கவே கஷ்டமாத்தான் இருக்கு’ என்றுப் பேசிய சேவியரை உணர்ச்சிகரமாக பேசிய சேவியரை சந்தோஷபடுத்த தனி பேச்சிலர் பார்ட்டி எல்லாம் வைத்தான் ஆவுடை.

ஆவுடைக்கு ஒரு விஷயத்தில் மிகவும் சந்தோஷமாகிவிட்டது. கல்யாணத்திற்காவது ஒரு ஷெர்வானி தைத்துக் கொள்ள சந்தர்ப்பம் அமைந்துவிட்டதே என்று சந்தோஷம்தான். சேவியரோடு எம்ஜி ரோட்டிலிருந்த மிலானோ கடைக்குப் போய் சந்தனக் கலரில் ஒரு ஷெர்வானிக்கு ஆர்டர் கொடுத்தான். நல்ல கச்சிதமாக அளவெடுத்து, தோள்பக்கத்தில் பஞ்சு எல்லாம் வைத்து, கழுத்து பக்கம் பூவேலைப்பாடு, கைப்பட்டிக்கு பித்தளை பித்தான்கள் என்று நல்ல வடிவாக தைத்துக் கொடுத்தார்கள்.

சேவியர் அதிக அலுவல் மற்றும் வேறு பிரச்சினைகள் இருப்பதால் கல்யாணத்திற்கு வர இயலாது என்று சொல்லிவிட ஆவுடைக்கு ஒரு கையுடைந்த மாதிரி ஆகிவிட்டது. ஷெர்வானி, அதுக்கு ஏற்ற செருப்பு, உள்ளேப் போடும் ஜிப்பா, உடலில் தெளிக்கும் ஸ்பிரே, உடையில் தெளிக்க செண்ட்டு, சன் லோஷன், ஃபஏர்னெஸ் கிரீம் என்று ஏகத்துக்கு சேவியரின் அனுபவத்தை நம்பித்தான் திட்டம் போட்டிருந்தான்.

‘என்ன சேவியர்... மதுரைக்கு வரனும்னு ரொம்ப ஆர்வமா இருந்தியே. நம்ம ஃப்ரெண்ட்ஸ்ங்ககிட்ட சொன்னா அப்படியே கொடைக்கானல் எல்லாம் ஒரு ரவுண்ட் போயிட்டு வரலாம்யா நீயு.’

’இல்ல ஆவுடை, இப்ப டைம் ஒர்க்-அவுட் ஆற மாதிரில்ல. நிறய பிரச்சின இருக்கு’ விட்டேற்றியாகத்தான் பதிலளித்தான்.

என்னதான் சேவியர் வேலையைக் காரணம் காட்டினாலும், ஏதோ காதல் பிரச்சினைதான் என்பதை ஆவுடை யூகித்திருந்தான். சேவியரின் காதல் வெற்றிபெற தன்னால் இயன்றதை கண்டிப்பாக செய்வதாக மீண்டும் மீண்டும் வாக்களித்து ஒருவழியாக அவனையும் சம்மதிக்க வைத்து ஆவணியில் தாவணிக் கனவுகள் மற்றும் ஷெர்வானிக் கனவுகளோடு மதுரைக்கு ரயிலேறிவிட்டான்.

மயில்சாமி அரசியல் செல்வாக்குள்ளவர் என்பதால் தடபுடலாகவே ஏற்பாடுகள் செய்திருந்தார். தேனி எம்எல்ஏ தலைமை தாங்க, பொதுப்பணித் துறை அமைச்சர் தாலி எடுத்துக் கொடுக்க, வேங்கை ராஜா இசைக்குழு கச்சேரி என்று பிரமாதப் படுத்தியிருந்தார்கள். மதுரையிலும் கார்த்திகாவை நேரில் சந்திக்க அதிகம் வாய்ப்பில்லை. அடிக்கடி ஃபோனில்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். பெரும்பாலும் எனக்கு பிடிச்சது தோசை உனக்கு தேங்காய்குருமா பிடிக்குமா போன்ற ஆரம்பக் கால ரொமாண்டிக் வசனங்களைத்தான் பேசினான் ஆவுடை.

திருமண நாளன்று காலையில் சந்தனக்கலர் ஷெர்வானியை அணிந்து கொண்ட போது ஆவுடையின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. எம்எல்ஏ மற்றும் அமைச்சர் வருவதால் ஏகப்பட்ட கட்சிக்காரர்கள் வந்திருந்தார்கள். குடும்ப உறவுகள், தொழில் நண்பர்கள் என்று ஏகத்திற்கு மண்டபம் களைகட்டியிருந்தது. சேவியர் இரவுக் கொண்டாட்டத்தினாலோ என்னவோ பஞ்சடைந்த கண்களால் சுரத்தில்லாமல் இருந்தான். எவ்வளவு நாட்கள் காத்திருந்து இந்த கம்பீர உடையணிகிறோம் என்பதில் ஆவுடைக்கு பெருமை பிடிபடவேயில்லை.

திடீரென்று சேவியர் கேட்டான்.

‘இந்த செருப்பா போடப்போறே? பொண்ணு உன்னோட குறைஞ்சது அரையடியாவது உயரமா இருப்பாளே. ஹீல் வச்ச மாரி ஏதாவது உசரமா போட்டுக்கப்பா’

‘இந்த டிரெஸ்ஸுக்கு இந்த செருப்புதாண்டா போடனும்... கோலாப்பூர் சப்பல்னு சிவாஜி நகர்ல தேடிப் பாத்து வாங்கினோமே’

‘பக்கதுல நின்னீங்கன்னா... நல்லாத் தெரியும்பா உசர வித்தியாசம். அதும் அவ ஹீல்ஸ் எல்லாம் போட்டுகிட்டு நிப்பா. கல்யாண ஃபோட்டோன்னு பாத்தா குள்ளமா நின்னா நல்லாவா இருக்கும். பேசாம நீ வழக்கமாப் போடற ஹை ஹீல்ஸ் ஷூ போட்டுக்க. ஓரளவிற்கு ஈக்குவல் ஹைட்டா வந்திருவீங்க ரெண்டு பேரும்’ என்றான்

மற்ற நண்பர்களும் ஆமோதிக்க ஆவுடை செருப்பைக் கழட்டி சேவியரிடம் கொடுத்துவிட்டு ஹைஹீல்ஸ் ஷூவிற்கு மாறினான். கார்த்திகாவை ஃபோட்டோவில் மட்டுமே பார்த்த சேவியர் எப்படி கரெக்டாக ஹைட்டு வித்தியாசத்தை கண்டுபிடித்தான் என்பது ஆவுடைக்கு ஆச்சர்யமாக இருந்தது. மேடையில் புன்னகையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்திருக்க நிரம்பி வழியும் கூட்டத்திடையே உள்ளூர் அரசியல் தலைவர்கள் நீளமாக அரசியல் பேசிவிட்டு சுருக்கமாக எம்எல்ஏ தலைமையில் அமைச்சர் தாலி எடுத்து கொடுப்பார் என்று அறிவித்தார்கள். கூட்டத்திடையே ஆரவாரமும் கூச்சலுமாக இருந்தது. அமைச்சர் ஆவுடையின் அருகில் வந்து தாலி எடுத்துக் கொடுக்கும்போதுதான் அது நடந்தது.

விர்ரென்று பறந்து வந்து ஆவுடையின் சந்தனக் கலர் ஷெர்வானியில் நீளமாக தீற்றிக்கொண்டு விழுந்தது ஒரு செருப்பு. அருகிலிருந்த அமைச்சர் படக்கென்று நகர்ந்து சமாளித்துக் கொண்டு அசட்டுப் புன்னகையுடன் ‘ஏய்..ஏய்... யாருப்பா அது? ஒத்த செருப்பை விட்டெறியறது..’ என்றார். சட்டென மண்டபமே பரபரப்பாகி விட்டது. பலரும் செருப்பு பறந்து வந்த இடத்தை நோக்கி குழப்பமும் பதட்டமுமாக முன்னேற... யார் எறிந்தார்கள் என்று உடனடியாகத் தெரியவில்லை. ஒரே களேபரம். மேடையில் இருந்த சிலர் முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி அணிவிக்க வேண்டும் என்று அவசரப்படுத்தினர். மேடையிலிருந்து அகற்றப்படும் செருப்பை பார்த்துக் கொண்டே ஆவுடை தாலி அணிவித்தான்.

அந்த செருப்பு ஆவுடை பெங்களூரில் வாங்கியிருந்த கோலாப்பூர் செருப்புப் போலவே இருந்தது. அதற்கு அப்புறம் ஆவுடைக்கு சேவியரை சந்திக்க வாய்ப்பேயிருக்கவில்லை. அப்புறம் ஷெர்வானி அணியும் ஆசையே எழவில்லை ஆவுடைக்கு.

8 மறுமொழிகள்:

புதுகைத் தென்றல் said...

புதுக்கோட்டைன்னு பேரைப்பாத்து ஓடிவந்தேங்க. (பிறந்த ஊரு பாசம்)
நல்லாயிருக்கு கதை. நட்சித்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்

Jayaradha said...

Good Story!
Nalla iruku
vaazthukkal

Anonymous said...

ஒரு முறை படித்தவுடன் புரியும்படி எழுதியமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள். சரி சேவியரின் காதலி மனைவியா மந்திரி மகளா?

ஜெயகாந்த்

ambi said...

கதை நல்லாருக்கு அண்ணாச்சி.

சேவியர் ஒரு தடவை கூட தன் காதலி பெயரை கூடவா ஆவுடையிடம் சொல்லாம இருந்து இருப்பான்..? :))

சரி விடுங்க, லாஜிக் எல்லாம் பாக்கலை. :p

Sridhar Narayanan said...

வாங்க புதுகை தென்றல்!

இனிமே அடிக்கடி புதுக்கோட்டைப் பத்தி எழுதிடலாம். காரண்டியா ஒருத்தர் படிக்கிறதுக்கு ரெடியா இருக்கீங்கப் போல :)

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

வாங்க ஜெயராதா!

நிஜமாவே நம்ம பதிவெல்லாம் படிக்கறீங்களா? சரிதான் :)

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

வாங்கண்ணே ஜெயகாந்த்ண்ணே!

நிஜமாவே புரியற மாதிரிதான் இருக்குப் போல. :) மிக்க நன்றிண்ணே.

வாங்க அம்பி சார்!

//சேவியர் ஒரு தடவை கூட தன் காதலி பெயரை கூடவா ஆவுடையிடம் சொல்லாம இருந்து இருப்பான்..? :))//

சொல்லியிருக்கலாம். அந்தப் பெயர் பொய்ப்பெயரா இருந்திருக்கலாம். சொல்லாமலே இருந்திருக்கலாம்.

புதுகைத் தென்றல் said...

இனிமே அடிக்கடி புதுக்கோட்டைப் பத்தி எழுதிடலாம். காரண்டியா ஒருத்தர் படிக்கிறதுக்கு ரெடியா இருக்கீங்கப் போல//
புதுக்கோட்டைக்காரங்க நாங்க நிறைய்ய பேரு இருக்கோங்க. புதுகை அப்துல்லா, சுரேகா எல்லோரும் புதுகைதான்.

நீங்க புதுகையா??

Sridhar Narayanan said...

வாங்க தென்றல்!

/நீங்க புதுகையா/

இல்லைங்க. நான் மதுரை. புதுகையில் நண்பர்கள் உண்டு :)

வல்லிசிம்ஹன் said...

ஒரே சஸ்பென்ஸா போச்சே.
மதுரைப் பொண்ணு சாயல்ல பங்களூர்ல அந்தப் பொண்ணு இருந்தாளா.
பாவம் ஆவுடை. ஷெர்வானி,செருப்பு,ஸேவியர் எல்லாமே அவனை ஏமாற்றிவிட்டதே.:)