January 29, 2010

செத்த மொழி பேசும் இரு சித்திரங்கள்

குறிப்பு:- கடந்த வருடம் ‘வார்த்தை’ இதழில் வெளியான இந்தக் கட்டுரையை இங்கே மீள்பதிவு செய்கிறேன்.

திரைப்படம் போன்ற காட்சி ஊடகங்களில் பேசப்படும் மொழி அதன் இலக்கு நேயர் (target audience) வட்டத்தை தீர்மானிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. நீளமான, நாக்கு தள்ளும் செவ்வியல் வசனங்களுக்காகவே நாடகங்களும், திரைப்படங்களும் வெற்றி பெற்ற காலம் மலையேறிப் போய் யதார்த்த சினிமாக்கள் கோலோச்சும் காலத்தில் ’இறந்த’ மொழியில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அதிக ஆர்வத்தை உண்டு பண்ணுகின்றன. நமது தாய்மொழியல்லாத பிறமொழி படங்கள் என்றால் பெரும்பாலும் உதவி-வசன எழுத்துகள் (sub-titles) தேவைப்படுகின்றன. அதுவும் அராமைக், சமஸ்கிருதம் போன்ற மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்றால் கொஞ்சம் ’கிர்’ரடிக்கத்தான் செய்யும்.




கணபதி வெங்கட்ராம ஐயர் – சுருக்கமாக ஜிவி ஐயர். இவர் இயக்கத்தில் 1983-ல் ஆதி சங்கராச்சாரியாரின் வாழ்க்கையை திரைப்படமாக தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் (NFDC) தயாரித்தது. ஆதி சங்கரர் வேத மரபை மீட்டெடுத்து நிறுவுவதை விவரிக்கும் இப்படத்தில் முழுவதும் சமஸ்கிருதத்திலேயே பேசுகிறார்கள்.


மெல் காம்-சிலி ஜெரார்டு கிப்ஸன் (Mel Com-Cille Gerard Gibson) 2004ல் எடுத்த ’கிறிஸ்துவின் துன்பம்’ (‘The Passion of the Christ’ ) திரைப்படம் பேசுவது செமிட்டிக் மொழியான அராமைக் (Aramaic) - வடமேற்கு பகுதி செமிட்டிக் மொழிக்குழுமத்தில் ஒரு மொழி. ஆங்காங்கே ரோமானிய கதாபாத்திரங்கள் இலத்தீன் மொழியையும் பேசுகிறார்கள்.

இந்த இரு திரைப்படங்களும் மதத் தலைவர்களை, போதகர்களை தனது பேசுபொருளாக கொண்டிருந்தாலும் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் தெரிகிறது. பேசுமொழி மட்டுமில்லாமல், திரைக்கதை அமைப்பு, அழகியல், குறியீட்டு காட்சிகள், மிகையில்லாத தேர்ந்த நடிப்பு, கச்சிதமான பின்னணி இசை என்று பலவகையில் இரு திரைப்படங்களும் வெவ்வேறு திசையில் உச்சத்தை தொடுகின்றன.


முதன்முதலாக பேச்சுவழக்கில் இல்லாத மொழியில் படம் எடுத்தவர் ஜீவி ஐயராகத்தான் இருக்கும். அவருமே இரண்டு பாத்திரங்களில் திரையில் தோன்றுகிறார். காளிதாசர் போன்ற சமஸ்கிருத கவிகள் செவ்வியல் மொழியில் இலக்கியங்கள் புனையும்போது, அதில் உள்ள சாதாரண பாத்திரங்கள் பேச்சு வழக்கு மொழியான பிராகிருதத்திலே உரையாடுவார்கள். அதை உத்தியை ஐயரும் செய்கிறார். இளநீர் திருடுபவர் மலையாளம் பேசுகிறார். வைசூரி வந்தவனை காட்டில் விட்டுவிட்டு குளத்தில் முங்கி குளித்துவிட்டு செல்லும் வழிபோக்கர்கள் ‘தாய் மூகாம்பிகையே சரணம்’ என்று தமிழில் பேசுகிறார்கள். சங்கரர் வடக்கு நோக்கி பயணிக்கும்போது ஆங்காங்கே பின்னணியில் இந்தியில், மராட்டியில் பாராட்டுகிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேர இளவல் இளங்கோ தீந்தமிழில் சிலப்பதிகாரம் இயற்றிருக்கும்போது ஏழாம் நூற்றாண்டில் சேர நாட்டில் சமஸ்கிருதம் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மலையாளமும் முழுவதுமாக உருவாகியிருந்திருக்காது. சங்கரர் சமஸ்கிருதத்தில் நூல்கள் பல இயற்றியிருந்தாலும் கேரளத் தமிழில்தான் உரையாடியிருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் ஐயர் வேதாந்த வியாக்கியானங்களுக்கு சமஸ்கிருதம் ஏற்றது என்ற முடிவில் அந்த மொழியை தேர்வு செய்திருக்கிறார்.


மெல்கிப்ஸனின் ‘இயேசுவின் துன்பம்’ இயேசு கிறிஸ்துவின் சீடர்களான மார்க்கு, லூக்கா மற்றும் மத்தேயு இயற்றிய Synoptic Gospels என்றுச் சொல்லப்படும் ஒத்த சுவிஷேஷங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இயேசு வாழ்ந்த காலத்தில் செவ்வியல் மொழியாக கிரேக்கமும், ஹீப்ருவும் இருந்திருக்க ஏசுவும் அவரது சீடர்களும் அராமைக்கில் பேசியிருக்கிறார்கள் என்பதால் அந்த மொழியிலேயே படத்தை எடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஹீப்ருவை நவீனப்படுத்தி யூதர்கள் மீட்டெடுத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இயேசு என்று நமக்கு அறியப்பட்ட யேஷ்வா நசரேயனை கைது செய்ததிலிருந்து, அவருடைய வழக்கை விசாரித்து, அவரை சித்திரவதை செய்து, பின்னர் சிலுவையில் அறைந்து கொல்ல, அவர் மூன்றாம் நாள் உயிர்த்தெழும் வரை உள்ள சம்பவங்களே இயேசுவின் துன்பமாக (Passion) கிறிஸ்துவ வழக்கில் சொல்லபடுகிறது. இயேசுவின் சீடர்களின் இறைசெய்திகளின் வழியாக இந்த துன்பச் சம்பவ தொகுப்பை அந்த காலகட்டத்தின் பேசுமொழியான அராமைக் மொழியில் உருவாக்கித் தரும்போது நாமே அந்தச் சூழலில் பயணிக்கிற உணர்வு ஏற்படுகிறது.

மெல்கிப்ஸன் தனது திரைப்படத்தின் வரையறையை தீர்மானமாக வைத்துக் கொள்கிறார். இயேசு ஆலிவ்ஸ் மலையடிவாரத்தில் கெத்செமனித் தோட்டத்தில் இறைவனைப் பிரார்த்தனை செய்வதிலிருந்து அவர் சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறக்கும் வரையிலான 12 மணிநேரத் துன்பம்தான் திரைப்படம். இயேசுவின் உயிர்த்தெழுதல் இறுதியில் ஒரு காட்சியாக வருகிறது.


போன்ஷியஸ் பைலட்டின் நீதி விசாரணை காட்சிகள் மிகவும் அருமையாக சித்திரிக்கப் பட்டிருக்கின்றன. யூத குருமார்கள் கோபாவேசமாக இயேசுவின் மேல் குற்றஞ்சாட்ட கூட இருக்கும் கூட்டம் இயேசுவிற்கு எதிராக ஆர்பரிக்கிறது. முதலில் சித்திரவதை தண்டனை மட்டும் விதிக்கும் பைலட் பிறகு குருமார்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி சிலுவையில் அறைய உத்தரவிட்டு கைகழுவி விடுகிறார். மொத்தம் பதினாலு நிலைகள் கொண்ட இயேசுவின் இறுதி பிரயாணத்தை துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்கள். ஐந்தாம் நிலையில் சைரீனில் இருந்து வந்த சைமன் என்கிற யூதர் இயேசுவிற்கு உதவியாக சிலுவையை சுமக்கிறார். ஆறாம் நிலையில் வெரோனிகா தனது முகத்துணியை இயேசு முகம் துடைக்கத் தருகிறார். இப்படி அந்த பண்ணிரெண்டு மணி நேரத்தில் நடந்ததாக இறைசெய்தியில் சொல்லப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நுண்ணிய அழகியலோடு திரைப்படத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.


ஜீவி ஐயரோ ஆதிசங்கரரின் முழு வாழ்க்கையையும் விவரிக்கிறார். கிட்டத்தட்ட முப்பத்தியிரெண்டு ஆண்டுகள். தெற்கு பாரதத்தில் சேர நாட்டின் காலடி என்னும் ஊரில் கிபி 7-ம் நூற்றாண்டு பிறந்த சங்கரர் முப்பத்தியிரண்டு ஆண்டுகள் பாரதத்தின் பல இடங்களுக்கு பயணித்து இந்து சனாதன தர்மத்தை நிலைநிறுத்த பாடுபடுகிறார். தனக்குப் பின்னர் அத்வைத கொள்கையை தொடர்ந்து பரப்ப தனது சீடர்களின் தலைமையில் நான்கு திக்குகளிலும் மடம் நிறுவி பெரிய பாரம்பர்யத்தை தொடங்கி வைக்கின்றார். வைதீக மதம் நலிவுற்று பௌத்தமும், சமணமும் வலிமையுடன் இருந்த காலத்தில் உத்வேகத்துடன் சங்கரர் அத்வைதம் போதிக்கிறார்.

புனிதர்களின் சரித்திரம் எப்பொழுதும் பல அற்புதங்கள் உள்ளடக்கி படிப்பவர்களுக்கு ஒரு மாயத்தோற்றம் தரவல்லது. பல்வேறு தொன்மக் கதைகள் ஆங்காங்கே உருவாகி புனிதர்களின் பெயர்களை உள்வாங்கி பின்னர் ஒன்றாக இணைந்து ஒரு வரலாறாக மாறி நிற்கும். இன்று மிகவும் பிரபலமான சங்கர மடமாக வழங்கப்படும் காஞ்சி மடம் ஆதி சங்கரர் நிறுவியதாகச் சொல்லப்படும் நான்கு மடங்களில் இல்லை. காஞ்சி மட கணக்குப்படி சங்கரர் காலம் கிறிஸ்துவிற்கு முன்னதாக சென்றுவிடுகிறது. அது போல மண்டல மிஸ்ரரின் மனைவி உபயபாரதி சங்கரரை இல்லற சாஸ்திரத்தைப் பற்றி வாதிட அழைத்ததும் சங்கரர் ஒரு அரசன் உடலில் பரகாய பிரவேசம் செய்து ’மேற்படி’ சங்கதியெல்லாம் கற்றுக் கொண்டு வந்து வெற்றி பெற்றார் என்று ஒரு தொன்மக் கதை உண்டு. இப்படியாக பல தொன்மக் கதைகள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வரலாறாக மாறிவிடுகிறது. ஜீவி ஐயர் மிகக் கவனமாக இவ்வகை திசைதிருப்பல்கள் இல்லாமல் நேர்க்கோட்டிலேயே ஆதி சங்கரரின் திரைக்கதையை அமைத்திருக்கிறார். காலடியில் உஞ்சவிருத்தி செய்துவரும் சங்கரன் நம்பூதிரிக்கு அவன் ஆசான் மூலம் சந்நியாசம் பற்றிய ஆவல் ஏற்படுகிறது. வைதீக மதம் நசிந்து வருகிறது என்று கவலையுடன் சொல்லப்படுகின்றது. கோவிந்த பகவத்பாதர் பெயர் அறிமுகம் கிடைக்கிறது. தொடர்ந்து நர்மதைக் கரையில் கோவிந்த பகவத்பாதரை சந்தித்து சீடராகிறார். அங்கே வியாசர் எழுதிய பிரம்மசூத்திரம் சிதிலமடைந்து இருக்கிறதைப் பார்க்கிறார். அதற்கு உரையெழுதுகிறார். அதைக் கொண்டு போய் பிரயாகையில் குமரில பட்டரிடம் காண்பித்து கருத்துக் கேட்கிறார். இப்படி சங்கரரின் வாழ்க்கையில் நடந்த சரித்திர சம்பவங்களை படம் பார்க்கும் நேயர்கள் தடுமாறாதவாறு திறம்பட தொகுத்தளிக்கிறார் ஐயர். சங்கரர் பாரதம் முழுவதும் பிரயாணம் செய்யும்போது காஞ்சியில் ஒரு சிறுவனுக்கு சந்நியாச தீட்சை கொடுப்பது போல் ஒரு காட்சி வைத்து காஞ்சி மடம் நிறுவப்பட்டது யாரால் என்ற சர்ச்சையை சற்றே சமாளிக்கிறார். மண்டல மிஸ்ரரின் மனைவி உபயபாரதி ’என் கணவரை மட்டும் வென்றால் போதாது. என்னையும் ஜெயிக்க வேண்டும்’ என்று சொல்லும்போது சங்கரர் அவரைத் தனது தாய் ஆர்யாம்பாளாக உருவகித்துப் பார்ப்பது போல் காட்சி அமைக்கிறார். ‘அனுபவம் அறிவைவிட சிறந்தது தாயே’ என்று சொல்லி உபயபாரதியையும் தனது சீட கோஷ்டியில் இணைத்துக் கொண்டுவிடுகிறார்.



திரைப்படங்களில் அழகியல் என்பதை இயக்குநர்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை. திரைப்பட நேயர்களிடையே அது எவ்வளவு அழுத்தமான பாதிப்பு தரவல்லது என்பதும் முக்கியம். மெல்கிப்ஸனை பொறுத்தவரை இயேசுவின் துன்பத்தையே அழகியலாக முன்னிறுத்துகிறார். அதைத் துல்லியமாக பதிவு செய்வதில் முழு வெற்றி பெறுகிறார். இயேசுவை சித்ரவதை செய்யும் காட்சிகளை இவ்வளவு தீவிரமாக திரைப்படங்களில் சித்தரித்து பார்த்ததில்லை. மாமிச மலைகள் போன்ற இரு ரோமானிய வீரர்கள் இயேசுவை கம்பை வைத்து கைவலிக்கும்வரை அடிக்கிறார்கள். கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டு அடுத்த கோட்டாவாக முட்கள் பதித்த சாட்டையை எடுத்து அவரை விளாசுகிறார்கள். அந்த முட்கள் அவர் உடலில் பதிந்து சாட்டை சிக்கிக் கொள்ள, அப்படியே சுண்டியிழுக்கிறார்கள். தசையை பிய்த்துக் கொண்டு இரத்தம் பீரிடுகிறது. அடித்து துவைத்து இரத்தம் ஆறாக ஓடியிருக்க இயேசு குப்புற விழுந்து கிடக்கிறார். சித்திரவதைக் கூடத் தலைவன் அடிப்பவர்களை நிறுத்தச் சொல்லிவிட்டு எழுந்து நிற்கிறான். குப்புற கிடப்பவரை நிமிர்த்தி படுக்க வைத்து தொடர்ந்து அடிக்குமாறு சைகையில் கட்டளையிட்டுவிட்டு அமர்கிறான். சித்திரவதை தொடர்கிறது. பார்ப்பவரின் முதுகு தண்டை சில்லிட வைக்கும் சம்பவங்கள். தேவகுமாரன் என்றும், யூதர்களின் அரசன் என்றும், மெஸ்ஸையா என்றும் பிரகடனப்படுத்திக் கொண்ட இயேசு எந்த அற்புதங்களும் செய்யாமல் அந்த பண்ணிரெண்டு மனி நேர துன்பத்தை உலக மக்களுக்காக தாங்கிக் கொள்கிறார் என்ற நம்பிக்கையை ஆழமாக படம் பார்ப்பவர்களிடம் கொண்டு செல்கிறது. இந்த துன்பியல் நிகழ்வுகளிடையே ஆங்காங்கே இயேசுவின் இனிமையான, அன்பான வாழ்க்கையின் சில சம்பவங்களை காட்டுவதால் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ள முடிகிறது. இயேசு அன்னை மரியமுடன் கலகலப்பாக பேசுகிறார். தண்ணீர் தெளித்து விளையாடுகிறார். சீடர்களுக்கு போதிக்கிறார். இறுதி விருந்து கொடுக்கிறார். இந்த உணர்ச்சி கலவை படத்தின் மிகப் பெரிய பலம்.


ஜீவி ஐயரின் படைப்பில் உணர்ச்சிக் குவியலான காட்சிகள் அதிகம் இல்லை. சங்கரரின் தந்தை சிவகுரு தான் மரணிக்கப் போகிறோம் என்று தெரிந்ததும் சிறுவனான சங்கரனுக்கு அதைக் குறிப்பால் உணர்த்திவிட்டு கால்நீட்டிப் படுத்தவாறே உயிர் விட்டுவிடுகிறார். சங்கரரின் தாயின் மரணமோ இன்னமும் சுருக்கமாக நடந்து சந்நியாசி ஈமகிரியை செய்யலாமா என்ற பிரச்சினையில் முடிகிறது. ஓரிடத்தில் சங்கரர் உறங்கும் சீடர்களை கண்டு உள்ளம் நெகிழ்கிறார். சந்நியாசியான சங்கரர் தனது சீடரான ஹஸ்தமலகரை உச்சி முகர்ந்து முத்தமிடும் காட்சியில் ஐயர் மின்னல் தீற்றலாக கவிதை ஒன்றைத் தீட்டுகிறார்.

இயேசு சிலுவையை தூக்கிக் கொண்டு பயணப்படும்போது தடுக்கி விழுகிறார். அவர் தாய் மேரிக்கு சிறுவயது பாலகனாக இயேசு கீழே விழுந்தது நினைவிற்கு வருகிறது. ஓடிச் சென்று தூக்க வேண்டும் என்ற பதைபதைப்போடுச் வருகிறாள். குழந்தை இயேசுவை அள்ளி அணைத்து தூக்கி நிற்கும் அன்னை மரியமைப் பார்க்கிறோம். அந்த பிம்பம்தான் இன்றும் கிறிஸ்துவ தேவாலயங்களில் காணும் அன்னை மரியம். தனது குழந்தையிடம் தாய் சொல்லும் நம்பிக்கையாக ‘நான் இருக்கிறேன்’. அதையே இயேசு உலக மக்களுக்கு செய்தியாகச் சொல்கிறார். இயேசுவின் ’எதிரிக்கும் அன்புசெய்’ போதனைகளை ஆங்காங்கே செருகியிருந்தாலும், மெல்கிப்சனின் படம் கிறித்துவ போதனைகளுக்கானப் படம் அல்ல.

மாறாக ஐயரின் திரைப்படத்திலோ இந்திய தத்துவ வரலாற்றை முழுமையாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் சண்டோக உபநிஷத்திற்கு அருமையான விவரணப் படம் அமைத்திருக்கிறார். குழந்தை பிரசவிக்கப்படும் காட்சியை முத்தாய்ப்பாக வைத்து உச்சத்தை தொட்டிருக்கிறார். பூர்வ மீமாம்சம் அதன் நீட்சியாக பிரும்ம சூத்திரம் எனப்படும் உத்தர மீமாசம் போன்றவற்றை பின்புலமாக வைத்துக் கொண்டு சங்கரரின் ஆளுமையை நன்றாகவே திரையில் தீட்டிவிடுகிறார். கனகதாரா தோத்திரம், பஜகோவிந்தம், நசிகேத புரானம், ரைகவ்ய வரலாறு, சத்யகாமர் ஜாபாலி கதைகள் என்று சாமர்த்தியமாக அதனதன் இடத்தில் பொருத்துகிறார். சமஸ்கிருத வசனங்கள் பல இடங்களில் திரைக்கதைக்கு பலமாக துணை நிற்கிறது.

இரண்டு காட்சிகளில் சாத்தான் வந்து இயேசுவோடு உரையாடிவிட்டுச் செல்கிற மாதிரி அமைத்திருக்கிறார் மெல் கிப்ஸன். முதல் காட்சியில் தன்னைச் சுற்றி நிகழும் சதிவலையை உணர்ந்து மனம் உடைந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார் இயேசு. சாத்தான் தொடர்ந்து இயெசுவை அதைரியபடுத்த வருகிறது. இரண்டாம் ஆதாமான இயேசுவின் மனசைக் கலைக்க பாம்பை அவர் நோக்கி அனுப்புகிறது சாத்தான். இயேசு அந்தப் பாம்பை மிதித்துக் கொன்றுவிடுகிறார். பரலோகத்தில் இருக்கும் பிதாவின் மேல் தனக்கு இருக்கும் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தும் குறியீடு காட்சியாக இருக்கிறது. தொடர்ந்து இயேசுவை சித்திரவதை செய்யும்போது உச்சக்கட்டமாக அவரை புரட்டிப் போட்டு அடி பின்னுகிறார்கள். அப்பொழுது சாத்தான் ஒரு குழந்தையோடு அங்கே மக்கள் கூட்டத்தில் நின்று வேடிக்கைப் பார்க்கிறது. இயேசுவின் வீழ்ச்சியில் சாத்தானின் அடுத்த தலைமுறை உருவாகப் போவதை குறிப்பால் உணர்த்துகிறது. வயதான தோற்றத்தில் இருக்கும் அவலட்சண குழந்தை இன்னொரு குறியீடு.

ஜீவி ஐயர் இந்தக் குறியீட்டு முறையை பலமாகவே பின்பற்றுகிறார். சங்கரரின் தந்தை இறக்கும்போதே அவருக்கு மரணத்துடன் பரிச்சியம் ஏற்பட்டு விடுகிறது என்று காண்பிக்க மரணம் ஒரு தோழனாக அவரருகே வந்து அமர்கிறது. பிறகு பிரக்ஞானமும் அவருக்கு தோழனாக வருகிறது. காவியுடை சந்நியாசிகளுக்கு மத்தியில் மரணமும், ஞானமும் நம்பூதிரி தோற்றத்தில் சங்கரரின் ஆன்மாவாக (Alter EGO) கூடவே பயணிக்கின்றன. அவருடன் தர்க்கம் புரிகின்றன. அவருக்கு ஆறுதல் சொல்கின்றன. கோபித்து சண்டை போடுகின்றன. ஒரு சமயத்தில் சுகவீனமான சங்கரரை கவனித்துக் கொள்கின்றன. இறுதியில் சங்கராச்சாரியார் தனது நண்பர்களான ஞானத்தையும் மரணத்தையும் ஆலிங்கனம் செய்து மோட்சம் அடைகிறார்.


இந்த இரு பிரம்மச்சாரிகளின் வாழ்க்கையிலும் அவர்களின் அன்னையைத் தவிர இன்னொரு பெண் இடம் பெற்றிருக்கிறாள். ஜெருசலேம் மக்களால் கல்லடிபடும் மேரி மக்தனீலை காக்க இயேசு அபயக்கரம் நீட்டுகிறார். தொடர்ந்து இயேசுவின் இறுதிப் பயணம் வரை அவள் இயேசுவைத் தொடர்ந்து வருகிறாள்.

பிரயாகையில் மீமாம்ச தரிசனத்தில் சிறந்தவரான மண்டல மிஸ்ரரை வாதத்திற்கு அழைக்கிறார் சங்கரர். அப்பொழுது சங்கரரின் ஆல்டர் ஈகோவான பிரக்ஞானம் மிஸ்ரரின் மனைவியான உபயபாரதியிடம் உரையாடுகிறது. கூண்டுகிளிக்கு மிளகாய்க்கு பதில் திராட்சை கொடுக்கவேண்டும் என்று சொல்கிறது. வாதில் ஜெயித்து மண்டல மிஸ்ரரை சீடராக ஏற்றுக் கொள்ளும்போது உபயபாரதியும் சங்கரரின் கூட்டத்தில் இணைகிறார். ‘நான் மூவுலகையும் சுற்றி வருவேன்’ என்று சங்கரர் சொல்லும்போது, ‘நீங்கள் எங்கு சென்றாலும் உங்களை நான் பிந்தொடர்வேன்’ என்கிறார் உபயபாரதி.

பின்னர் சிருங்கேரியில் சங்கர மடம் நிறுவும்போது அதை சாரதா பீடம் என்றுச் அமைத்து உபயபாரதி சரஸ்வதி அவதாரம் என்று கதைகள் உருவாகின்றன.

இரு திரைப்படங்களிலும் புனிதர்களின் அற்புதங்கள் இடம்பெறுவதில்லை. மெல் கிப்ஸனின் படத்தில் ஒருக் காட்சியில் மட்டுமே ரோமானிய வீரர்களுடன் சண்டை இடும் பேதுருவால் காயமடைந்த ஒரு வீரனின் காதில் இருக்கும் காயத்தை சொஸ்தபடுத்துகிறார். அவ்வளவே. ஆதி சங்கரர் படத்தில் அதுவும் இருப்பதில்லை.

அன்றைய இஸ்ரேல், நாசரேத், ஜெருசலேம் பகுதிகளின் வாழ்க்கை முறையை பதிவு செய்ய மெல் கிப்ஸனுக்கு வாய்ப்பு குறைவு. ஜீவி ஐயர் ஓரளவிற்கு சனாதன மரபின் ஏற்றத்தாழ்வையும், மூட பழக்கவழக்கங்களையும் கோடிட்டு காண்பிக்கிறார். வைசூரி வந்த நோயாளியை காட்டில் கொண்டு விட்டுவிடுகிறார்கள். மரம் முறிந்து ஒருவன் தலைமேல் விழுகிறது. அது துர்சகுணம் என்று நம்பி அவனைக் கல்லால் அடித்துக் கொன்று போடுகிறார்கள். தீண்டத்தகாதவர் என்றுச் சொல்லப்படும் ஒருவர் வழியில் எதிரில் வர சங்கரர் அவரை ’விலகிப் போ’ என்கிறார். ‘எதை விலகச் சொல்கிறாய்? இந்த உடலையா? இந்த ஆன்மாவையா?’ என்று அவர் எதிர்க்கேள்வி கேட்க சங்கரர் தெளிவடைகிறார். சடங்கு சாஙியங்களிலிருந்து விடுபட்டு சங்கரர் ஞான மார்க்கத்தை தேடுவதை இயல்பாக சொல்கிறது.

மெல்கிப்ஸன் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பத்தின் உச்சகட்டத்தை மிக பிரும்மாண்டமாகவும் துல்லியமாகவும் பதிவு செய்கிறார். ஜீவி ஐயரோ பிரும்மாண்டமான ஞானத்தேடலை எளிமையாகவும், செறிவாகவும் சித்திரபடுத்துகிறார்.

18 மறுமொழிகள்:

கோவி.கண்ணன் said...

//எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சேர இளவல் இளங்கோ தீந்தமிழில் சிலப்பதிகாரம் இயற்றிருக்கும்போது ஏழாம் நூற்றாண்டில் சேர நாட்டில் சமஸ்கிருதம் புழக்கத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.//

சிலப்பதிகாரத்தில் 'மாமுது பார்பனன் மறைவழி காட்டிட' என்ற திருமணச் சடங்கு பற்றிய செய்யுள் வரி உண்டு.
மறைவழி திருமணம் என்றால் வடமொழியில் ஓதி இருக்கலாம் என்று கருதவும் வேண்டி இருக்கிறது. எனவே புழக்கத்தில் இல்லை என்று சொல்வது ஊகம் தான்.

மற்றபடி சிலப்பதிகாரத்தின் காலம் 3 ஆம் நூற்றாண்டோ அதற்கு முற்பட்டதோ என்றோ சொல்கிறார்கள்.

சந்தனமுல்லை said...

/கிறிஸ்துவின் துன்பம்’ (‘The Passion of the Christ’ ) /

இங்கு passion என்பது அன்பு என்ற அர்த்தம் கொண்டு வருவதாக நினைக்கிறேன்.

Sridhar Narayanan said...

வாங்க கோவி கண்ணன்,

செவ்வியல் / பேச்சு மொழிகள் அந்த வட்டாரத்தை பிரதிபலிக்கிறது. வால்மீகி, காளிதாசர் எழுதிய காவியங்களில் சமஸ்கிருதம் / பிராகிருதம் கலந்து இருக்கும். காலடியில் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆதி சங்கரர் பற்றி சரித்திரத்தில் வரலாற்று ரீதியாக சமஸ்கிருதம் ஒத்து வராது. அந்த முரண்பாட்டை குறிக்கவே சொன்னேன்.

ஆனால் ஜீவி ஐயர்... வேதாந்த விளக்கங்களுக்கு சமஸ்கிருதம் ஏற்றது என்று முடிவு செய்திருக்கலாம். அதுவும் புரிந்துக் கொள்ளக்கூடியதே.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

வாங்க சந்தனமுல்லை,

Passion of the Christ என்பதற்கு கத்தோலிக்க விளக்கம் The suffering of the Christ at Crucification என்பதே.

Passion என்ற சொல்லுக்கு துன்பம் என்ற அர்த்தமும் உண்டு.

விக்கிபீடியாவில் நிறைய ஆதாரங்களும், விளக்கங்களும் இருக்கின்றன பாருங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

வித்யாஷ‌ங்கர் said...

ireally proud of ur view luckily iwas working as assistant in that movie with g.v.iyer-durai

பினாத்தல் சுரேஷ் said...

அடுத்த கம்பேரிஸன் என்ன? கோழி கூவுது வெர்ஸஸ் ஜேம்ஸ் பாண்ட் தானே?

Sridhar Narayanan said...

வாங்க வித்யாஷங்கர்!

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

ஆதிசங்கராச்சார்யா படம் நன்கு ரிசர்ச் செய்து எடுக்கப்பட்ட படம்.

வாங்க பினாத்தல்,

//அடுத்த கம்பேரிஸன் என்ன? கோழி கூவுது வெர்ஸஸ் ஜேம்ஸ் பாண்ட் தானே?//

:)) செய்யலாம். யாருக்குத் தெரியும்?

நீங்க ஏதோ கடுப்புல கிண்டல் பண்ணுகிறது போலத்தோன்றுகிறது. தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

இந்த இரு படங்களையும் நான் பார்த்தபோது ஏற்பட்ட மன எழுச்சியும், வரலாறு, தொன்மக் கதை போன்றவற்றைக் காட்சிபடுத்த கடைபிடிக்கும் முறைகள், குறியீடு காட்சிகள் என்று நிறைய கட்டுரையில் இருக்கிறது. பொறுமையாகப் படித்துப் பாருங்கள். பிடிக்கவில்லையென்றால் மன்னிதது விட்டுவிடுங்கள் :)

Anonymous said...

ஸ்ரீதர்,

நல்ல தலைப்பு. இது அறிவுஜீவிகளுக்கு எழுதியது போல் இருக்கிறது. என்னை போன்ற எளியோருக்கும் புரியும் வகையில் தொடராக எழுதி இருக்கலாம். இந்த இரு படங்களையும் பார்க்காத என் போன்றோருக்கு புரிவது கஷ்டம்.

நன்றி,
ஜெயகாந்த்

Prabhu Rajadurai said...

very interesting...

புருனோ Bruno said...

ஒப்பிடல் அருமை

சாமுவேல் | Samuel said...

//மெல் கிப்ஸனின் படத்தில் ஒருக் காட்சியில் மட்டுமே ரோமானிய வீரர்களுடன் சண்டை இடும் தனது சீடரின் காதில் இருக்கும் காயத்தை சொஸ்தபடுத்துகிறார். //

சீடரின் காதில் இருக்கும் காயமாக இருந்திருக்க வாய்ப்பில்லை..,,அது அவரை கைது செய்ய வந்தவர் காதை தான் குணப்படுதுவ்வர். குறை சொல்லனும்னு எழுதலை, நீங்களும் சரி பார்த்து கொள்ளுங்கள்.

இடுகையை முழுக்க படிக்கல , சினிமா ஆர்வம் கம்மி, இருந்தாலும் இதை மருக்கா முழுவதும் படிக்கணும்னு தோணுது.

சாமுவேல் | Samuel said...

//Passion of the Christ// இப்பேற்பட்ட துன்பங்களும் பாடுகளும் இருக்கும்னு அவருக்கு தெரிந்தும், அதை விட்டு விலகாமல் அதை அவர் மீது ஏற்று கொண்டார்..

agree with சந்தனமுல்லை......as many christians believe in this context also..(not saying I disagree with catholic definition and wiki)

வல்லிசிம்ஹன் said...

வெகு நிதான நடையில் அருமையாக ஒப்பிட்டு இருக்கிறீர்கள். ஜிவி ஐய்யரின் சங்கரர் பாத்திரத்தை ஏற்றவரின் முக அமைப்பும் அமைதியும் அவரை டைரக்ட் செய்தவரின்ஆற்றலை உறுதிப் படுத்துகிறது.
ஆகாசாத் பிரதிதம் தோயம்....வரிகள் மனதைவிட்டு அகலாதபடி படம்பிடித்த ஐய்யரின் ஆற்றலை மிக மெச்சவேண்டும்.
மெல் கிப்சன் படத்தை நான் பார்க்கவில்லை. துயரம் தோய்ந்த பன்னிரண்டு மணித்துளிகளை ப் பார்ப்பதும் சிரமமே.

மிகவும் நன்றி ஸ்ரீதர் நாராயணன்.

Sridhar Narayanan said...

ஜெயகாந்த்!

// என்னை போன்ற எளியோருக்கும் புரியும் வகையில் தொடராக எழுதி இருக்கலாம்//

குழப்பமா இருக்குன்னு நாசூக்கா சொல்றீங்க. ரைட்டு :) நெக்ஸ்ட் டைம் கரெக்ட் பண்ணிக்கறேன் ஜெய்.

வாங்க பிரபு,

உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி!

வாங்க புருனோ,

மிக்க நன்றி :)

வாங்க சாமுவேல்!

//அது அவரை கைது செய்ய வந்தவர் காதை தான் குணப்படுதுவ்வர்.//

மிகச் சரி. பேதுரு கத்தியால் தாக்கும் ரோமானிய வீரனின் காயத்தையே குணமாக்குகிறார். சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இடுகையில் திருந்த்தி விட்டேன்.

வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் மிக்க நன்றி சாமுவேல்.

வாங்க வல்லியம்மா!

//ஆகாசாத் பதிதம் தோயம்//

ஆம். அந்த வரிகளைக் கேட்கும்போது நல்ல அனுபவமாக இருக்கும். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மதுரையம்பதி said...

நல்ல இடுகை ஸ்ரீதர்...

ஒரு சின்ன தகவல்...ஆதி சங்கரர் கி.மு என்பதற்கான சான்றுகள் இருக்கின்றன. காஞ்சி மற்றும் பூரிமடத்து ஆசார்ய பரம்பரை கி.முவில் இருந்து தொடர்வதாக (சங்கரரிலிருந்து அடுத்தடுத்த ஆசார்யர்களது பெயர் மற்றும், வருடங்கள் பற்றிய குறிப்புக்கள் உண்டு)....

மேற்சொன்ன சான்று தவிர கடபசங்க்யை என்று ஒரு முறையில் முற்காலத்தில் அரசர் மற்றும் மஹான்களது காலத்தை, முக்கிய நிகழ்வுகளை ஸ்லோகமாகச் செய்து வைத்திருக்கிறார்கள்...இதன்படியும் சங்கரரது காலம் கி.முவே!.

மணிகண்டன் said...

தமிழ்மண நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள். இந்த வார இடுகையை பொறுமையாக படிக்க போகிறேன்.

Sridhar Narayanan said...

வாங்க மௌலி,

//காஞ்சி மற்றும் பூரிமடத்து ஆசார்ய பரம்பரை கி.முவில் இருந்து தொடர்வதாக (சங்கரரிலிருந்து அடுத்தடுத்த ஆசார்யர்களது பெயர் மற்றும், வருடங்கள் பற்றிய குறிப்புக்கள் உண்டு)....//

ஆமாம். நிறைய தகவல்கள் இருக்கின்றன. மீமாம்சம் பற்றியும் சங்கர பட்டர் எழுதிய ஒரு புத்தகம் இருக்கிறது.

தொடர்பு சிதையாத ஆச்சார்ய பரம்பரை குறிப்புகள் சிருங்கேரி மடத்திறுகு இருப்பதால் அவர்களோட காலக் குறிப்பு அதிகம் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்று நினைக்கிறேன்.

மேலும் குமரில பட்டர் புத்த துறவிகளோடு வாதில் வென்றது போன்ற சமபவங்களுக்கும் இந்த கால வரையறை சரியாக ஒத்து வருகிறது. இல்லைன்னா புத்தரின் காலகட்டத்திற்கும் முந்தி போய்விடுகிறது.

இந்தப் படத்தில் சிருங்கேரி மடத்தின் வரலாற்றை ஒட்டி கதை அமைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

வாங்க மணிகண்டன்,

சீக்கிரம் படிச்சிட்டு வாங்க. ட்விட்டர்ல சண்டை போடலாம் :))))

உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க.

Anonymous said...

THE WHOLE comparison misses a main point. The bible is not even 200 years old and Vatican is not even 100 years old.

the adi sankara is history and Jesus is HIS-Story.

How did Christians celebrate new year mass and Christmas in mid night . The clock is only 100 years old and only for past few decades many has a clock.

There is no historical proof beyond 200 years for Jesus or Islam.

How a kid will not believe that mobile phone did not exist a decade back Jesus has been marketed so well for Tamils to believe Jesus and Bible are His Stories not real stories.

Anonymous said...

hi I was luck to search your Topics in yahoo
your Topics is superb
I obtain a lot in your blog really thanks very much
btw the theme of you site is really outstanding
where can find it