January 26, 2010

நீரும், நெருப்பும், நிலமும் மற்றும் சில பெண்களும்

குறிப்பு: ‘வார்த்தை’ இதழிற்காக திரைப்பட தொடர் ஒன்றிற்காக எழுதியது. இங்கேயும் பதிவு செய்கிறேன்.


ராதா, சீதா, சாந்தா, பப்பு, சூயியா, மதுமதி, கல்யாணி, சகுந்தலா என்று எத்தனை பெண்களை இந்த நெருப்பும், நிலமும், நீரும் சீரழித்திருக்கின்றன என்பதுதான் தீபா மேத்தாவின் திரைப்படங்கள் சொல்லும் செய்தி. இந்தியாவில் பிறந்து கனடாவில் குடியேறிய தீபா மேத்தாவின் மூன்று திரைப்படங்களான Fire, Earth மற்றும் Water முன்வைக்கும் பார்வைகள் பல்வேறு பரிமானங்களில், பல்வேறு காலகட்டங்களில் பாரதப் பெண்களை, அவர்கள் அனுபவித்த கொடுமைகளை, அடக்குமுறைகளை சித்தரிக்கின்றன. தேர்ந்த படைப்பாளிகள் அடுத்தடுத்த படைப்புகளில் வெவ்வேறு திசைகளில் நகர்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்று படைப்புகளில் அந்த படைப்பாளிகளின் பயணம் நம்மிடையே ஒரு முப்பரிமாண காட்சியை உண்டாக்குகிறது. 


1996ல் Fire திரைப்படம் வெளிவந்தபோது மீடியாவே தீப்பிடித்துக் கொண்டது போல் பரபரப்பு. அதற்கு முக்கிய காரணம் அந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ஓரினச் சேர்க்கை காட்சிகள். அதுவும் ராதா மற்றும் சீதா என்ற இரு பெண்களிடையே ஏற்படும் உறவைப் பற்றிய கதை. அதுவும் ஒரு மதத்துக்கு நெருக்கமான காப்பிய, தொன்ம பெயர்கள் கொண்ட பெண்களின் பெயர்கள். 1998ல் Earth திரைப்படம் வெளிவந்தது. பாப்ஸி ஸித்வா (Bapsi Sidwa) எழுதிய Cracking India என்ற நாவலின் அடிப்படையில் அமைந்த பொலிடிக்கலி சரியான படமாக இருந்தாலும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. தொடர்ந்து மேத்தாவின் மூன்றாவது படமான Water தயாரிப்பில் இருக்கும்போதே கலாச்சார காவலர்களின் கலவரங்கள் கரைபுரண்டு பொங்கி எழுந்துவிட்டது. திட்டமிட்டப்படி படத்தை காசியில் எடுக்க முடியாமல் வெகு காலம் கழித்து கனடாவில் எடுத்து 2005ல்தான் வெளியிட்டார். இந்த எளித மூன்றியல் (Element Trilogy) வரிசையில் சிறப்பான படமாக இருந்ததும் Water தான்.

இந்த திரைப்படங்களில் தீபா மேத்தா இந்திய சமூகத்தின் மூன்று வெவ்வேறு காலகட்டங்களை கச்சிதமாக காட்சியபடுத்தியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அடிச்சரடாக பெண்கள் மேல் தொடுக்கப்படும் அநீதிகள் பல்வேறு கோணங்களில் முன்வைக்கப்படுகிறது.

காதல், கல்யாணம், கைம்மை


எப்படிப்பட்ட பெண்கள் இவர்கள்? சாந்தா மிகவும் சுதந்திரமானவள். செல்வாக்கான, பணக்கார பார்ஸிகளின் வீட்டில் வேலை செய்யும் அவள் அக்கம்பக்கம் வேலை செய்யும் பல இளைஞர்களுடன் சகஜமாக பழகுகிறாள். அவளைச் சுற்றி பல ஆண்கள் – சீக்கியர்கள், இந்துக்கள், இஸ்லாமியர்கள் அவள் அழகால் கவரப்பட்டு அவள் மேல் பிரியமாக இருக்கிறார்கள். தில் நவாஸ் அவளுடன் நெருங்கி பழகுகிறான். திருமணம் செய்து கொள் என்று வெளிப்படையாகக் கேட்கிறான். ஆனால் அவள் மனமோ ஹாசன்பாற் கனிந்து விடுகிறது. ஹாசனும் சாந்தாவும் காதலில் உருகி கரைந்து முயங்கும்போது தில் நவாஸ் பார்த்துவிட அவளுடைய காதல் வாழ்க்கை நிர்மூலமாகி விடுகிறது. நட்பில் தொடங்கி காதலில் கனிந்து திருமணத்திற்கு முன்னரே முடிந்து விடுகிறது 1948 Earth திரைப்படம்.


சீதாவிற்கு திருமணம் ஆகி தேனிலவிற்கு கணவனோடு தாஜ்மகால் வருகிறாள். கணவனோ தனது பழைய காதலியின் நினைவில் மனைவியிடம் மனதளவில் நெருங்காமல் விலகியே இருக்கிறான். சீதாவின் கணவனின் அண்ணி ராதாவிற்கும் அதே நிலை. ராதாவிற்கு குழந்தை பாக்கியம் இல்லையென்பதால் அவள் கணவன் தனது ஆன்மிக குருவின் வழிகாட்டுதலால் தீவிர பிரம்மசாரியாகி விடுகிறான். அந்த முடிவை ராதாவும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது. ராதாவும் சீதாவும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக பற்றிக் கொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு தொடங்கும் கதை அந்த திருமணம் சிதைந்து இருமணம் ஒன்றாவதோடு முடிகிறது Fire திரைப்படம்.

எட்டு வயது சூயியாவின் கணவன் நோயில் இறந்துவிட தலை மழிக்கப்பட்டு கைம்பெண்ணாக மதுமிதாவின் விதவை இல்லத்திற்கு கொண்டு வரப்படுகிறாள். வாழ லாயகில்லாத பெண்களாக ஒதுக்கப்பட்டவர்களின் கதையாக துவங்கி சகுந்தலை சூயியாவோடு வாழ்க்கையின் அர்த்தத்தை தேடிச் செல்லும் பயணத்தோடு நிறைவடைகிறது Water திரைப்படம்.


விரகம், வேகம், வீழ்ச்சி


இந்தக் கதைகள் வெளிப்படுத்தும் உணர்சிகளும் மூன்று தளங்களில் இருக்கிறது. கணவனால் ஒதுக்கப்பட்ட ராதாவின் விரகதாபம் நெருப்பாக உருவகப்படுத்தப் படுகிறது. சீதாவின் முதலிரவில் காதலில்லாமல் கணவன் செய்த கலவியினால் அன்பிற்கு பதிலாக அதிர்ச்சியே ஏற்படுகிறது. சீதாவும் ராதாவும் ஒருவருக்கொருவர் அணைத்துக் கொள்ள அந்த விரகமும் அணைகிறது.

சூயியாவின் அறிமுகமே ஒரு நதியின் துள்ளலுடந்தான் ஆரம்பிக்கிறது. போகப் போக கரைபுரண்டு ஓடும் காட்டாறு போல் விதவைகள் விடுதியின் தலைவி மதுமதியையே எதிர்த்துப் போராடுகிறாள். கல்யாணியோடு உற்சாகமாக வலம் வருகிறாள். இறுதியில் சகுந்தலையோடு சங்கமித்து மகாத்மா காந்தியைத் தேடி பயணிக்கின்றாள். இன்னொரு விதவை கல்யாணியோ பல இரவுகள் விருப்பமில்லாமல் கங்கையை கடந்து அக்கரைக்கு சென்று திரும்புகிறாள். ஆனால் ஓரிரவு அவள் விருப்பப்பட்டு கடக்க விழையும்போது அவளால் முடியவில்லை.



இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பிளவுப்படும் நிலத்தினிடையே சிக்குண்டு சிதைந்து போன எண்ணற்றவர்களில் சாந்தாவும் ஒருத்தி. பொறுமைக்கும், பெண்மைக்கும் உருவகமாக சொல்லப்படும் பூமி தன் மேல் இரு நாடுகள் செலுத்தும் அதிகாரத்தை தாங்காமல் பிளவுபடுவது போல தில் நவாஸிற்கும், ஹாசனுக்குமிடையே சாந்தா சிக்கி சிதறிப் போகிறாள். லேனியின் சிறுவயது கதாநாயகனே ஐஸ்வண்டிக்கார தில் நவாஸ்தான். அவனை நம்பி சாந்தா தனது வீட்டினுள் மறைந்து இருப்பதை லேனி சொல்கிறாள். சொன்னபிறகுதான் தில் நவாஸின் நயவஞ்சகம் புரிகிறது நாம் நம்பியவர் துரோகம் செய்யும்போது பூமி இரண்டாக பிளந்து நம்மை விழுங்கிவிடக்கூடாதா என்று தோன்றுமே... ஆனால் லேனிக்கு பதில் அந்த பூமி சாந்தாவை விழுங்கிவிட்டது.


பிரிட்டிஷ் ஆட்சி, பிரிவினை, பிந்தைய இந்தியா


அடுத்த சரடாக இந்தியாவின் வரலாறு இம்மூன்று திரைப்படங்களிலும் பின்னணியில் காட்டப்படுகிறது. Water திரைப்படத்தில் பிரிட்டிஷ் அரசாங்கமும், அவற்றுக்கு எதிராக காந்தியின் விடுதலை புரட்சியும் காட்டப்படுகிறது. மதுமதியும் அவளது அல்லக்கை குலாபியும் மகாத்மா காந்தி விதவைத் திருமணத்தைப் ஆதரித்துப் பேசுவதை காழ்ப்புடன் விமர்சிக்கிறார்கள். இறுதியில் சீரழிக்கப்பட்ட சூயியாவை தூக்கிக் கொண்டு நிராதராவாக நிற்கும் சகுந்தலைக்கு காந்தியே கலங்கரை விளக்கமாக தெரிகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு வரும் இந்தியப் பிரிவினை பின்னணிதான் Earth திரைப்படம். இந்துக்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், இஸ்லாமியர்கள் என்று கலந்திருக்கும் சமுதாயம் இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் அதிர்ச்சிகுட்பட்டு மாறுகிறது. சீக்கியர்கள் அமிர்தசரஸுக்கு புலம் பெயர்கிறார்கள். செல்வந்தர்களான பார்ஸிக்கள் வெறும் Bum Lickers ஆக இருக்கும் நிலையும், பிழைப்பிற்காக இந்துக்கள் மதம் மாறுவதையும் காட்டுகிறது. ஹாசன் சாந்தாவின் மேலுள்ள காதலினால் இந்துவாக மதம் மாற முடிவெடுக்கிறான். இஸ்லாமியரால் கொல்லப்படுகிறான். தில் நவாஸின் சகோதரிகளோ இந்து தீவிரவாதிகளால் கொல்லப்படுகிறார்கள். தன் காதலை நிராகரித்த சாந்தாவை இறுதியில் பழி தீர்த்துக் கொள்கிறான்.


சுதந்திர இந்தியாவில் நடைபெறும் கதையாக Fire. இந்தக் காலகட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு நிகராக வியாபாரங்களில் ஈடுபடுகிறார்கள். கணவன் அடித்தால் திருப்பி அடிக்கும் அளவிற்கு தன்மானமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆண்களை சார்ந்தில்லாமல் சுயமாக முடிவெடுக்கக் கூடியவர்களாக தெரிகிறார்கள். ஆனாலும் ராதாவினால் பாரம்பர்ய குடும்ப சூழலை விட்டு சட்டென்று வெளியேற முடியவில்லை.


இராமாயண சீதை

Fire படத்தின் நாயகி மட்டுமல்ல... இம்மூன்று படங்களுக்கும் நாயகியாக இராமாயண சீதை இருக்கிறாள். இராவணனால் தூக்கிச் செல்லப்பட்ட சீதை அசோகவனத்தில் உயிரோடு சிறை வைக்கப் படுகிறாள். ஆனால் இராவணனை வென்ற இராமனோ சீதையை மீட்ட பிறகு அவளைத் தீக்குள் இறங்கச் செய்கிறான். கணவன் இல்லாமல் பெண்கள் தனியே உயிர் வாழ்தல் புனிதத்தன்மையற்ற செயல் அல்லவா. Fire படத்திலும் இராதா தன்மேல் வைக்கப்பட்ட நெருப்பை கடந்துதான் சீதாவோடு ஒன்று சேர முடிகிறது.

ஒரு வண்ணானின் பேச்சினால் மீண்டும் சஞ்சலமுறுகிற இராமன் சீதையை காட்டில் கொண்டு விடச் செய்கிறான். சகுந்தலா, மதுமதி, சூயியா, கல்யாணி எல்லாரும் வாழத் தகுதியற்றவர்களாக அப்படி தனித்து விடப்பட்ட பெண்கள்தான். கைம்பெண்கள் களர்நிலம் என்று கைவிடப்பட்டவர்கள்தானே. இறுதியாக இராமனை அடையும் சீதா மீண்டும் புனிதத்தன்மையை நிரூபிக்க வேண்டி பூமி பிளந்து மறைந்து போகிறாள். இந்திய பூமி பிரிக்கப்பட்டபோது சாந்தாவும் அலைக்கழிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டு அந்தப் பிளவினூடே மறைந்து போகிறாள்.


சீதாக்களின் பார்வையில் சொல்லப்பட்ட இந்த சித்திரங்களை எந்தவித சமரசமும் இல்லாமல் அழகுணர்ச்சியோடு பதிவு செய்திருப்பதுதான் தீபா மேத்தாவின் வெற்றி.

6 மறுமொழிகள்:

ஜமாலன் said...

விரிவாக கதையையும் வரலாற்றையும் இணைத்து சொல்லப்பட்டுள்ள விமர்சனம். சீதா என்கிற தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட உங்கள் வாசிப்பு பாரட்டப்படவேண்டியது.

சுரேஷ் கண்ணன் said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...

Let 'cultural guardians' aside. Film makers are so called 'cultural ambassadors'. Do they have only filth to show the world?

Sridhar Narayanan said...

ஜமாலன் அவர்களுக்கு,

இந்தக் கட்டுரையை நீங்கள் வாசித்ததற்கும்ம், உங்கள் கருத்திற்கும் மிக்க நன்றி :)

வாங்க சுரேஷ் கண்ணன்,

வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

வாங்க அனானி!

//Do they have only filth to show the world?//

இந்தப் படங்கள் குப்பைகளை மட்டும் காட்டவில்லையே. மிகவும் நுணுக்கமாகவும் அழகாகவும் எடுக்கப்பட்ட படங்கள். கட்டாயம் படங்களைப் பாருங்கள்.

Bags said...

உங்கள் இடுகை (என்னுடையதை விட) இன்னும் சிறப்பாக உள்ளது

குமரன் (Kumaran) said...

மூன்று படங்களும் தனித்தனியே காட்டும் குறியீடுகளை புரிந்து வைத்திருந்தேன். மூன்றிலும் செல்லும் சீதை என்னும் குறியீட்டைப் பற்றி இன்று தான் புரிந்து கொண்டேன்.