அடுத்த வாரம் கொஞ்சம் பரபரப்பு அதிகரித்திருந்தது ஓடெல் கேஸில். லென்னி தனது பத்திரிகையில் ஓடல் கொலைக் கேஸில் போலிஸ் வேண்டுமென்றே பிராஸ்ஸிற்கு சகாயம் காண்பிப்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சித்தார். லென்னியின் மறைமுக நோக்கம் என் மேல் இருக்கும் நம்பகத்தன்மையை குலைப்பது. இரண்டு வருடங்களில் நடக்கவிருக்கும் ஷெரீஃப் தேர்தலில் ஒரு ரிபப்ளிகன் வெற்றி பெறும் நிலைமை அவருக்கு உவப்பானதாக இல்லை.
ரிக்கி மேஜையில் அந்தக் கவரை வைத்துவிட்டு ‘ஆஸ்பத்திரியில் பிராஸ்ஸுக்கு ஆபரேஷன் செய்து குண்டை எடுத்து விட்டார்கள். இன்னும் நினைவு திரும்பவில்லை. எப்போது திரும்பு என்பது தெரியாதாம். டாக்டர் மெர்வின் சொன்னார்’ என்றான்.
‘என்ன வகை குண்டு? ஓடெல்லின் துப்பாக்கித்தானா?’
ரிக்கி ஆமோதிப்பாக தலையாட்டிவிட்டு திரும்பும்போது ‘வெய்ட்...’ என்று கூவினேன். இப்படித்தான் சில சமயம் சிக்கலின் நுனி சட்டென்று அகப்படும்.
‘ஓடெல் உடலிலிருந்த எடுத்த பழைய புல்லட்...’
’ஏன்? அது .45 ACP கார்ட்ரிட்ஜ் என்று நினைக்கிறேன். M1 பிஸ்டலிருந்து சுடப்பட்டு இருக்கலாம்..’
ஓடெல் வியட்நாமில் குண்டடிபட்ட செய்தி துணுக்கை தேடிப் பிடித்து மீண்டும் ஒரு முறை படித்தேன்.
‘வியட்நாம் கெரில்லா வீரர்கள் அதிகமாக உபயோகித்தது AKM அசால்ட் ரைஃபிள்கள், AK 47 ரைஃபிள்கள். அமெரிக்க ராணுவம்தான் அதிகமாக M1 துப்பாக்கிகள் பயன்படுத்தினார்கள் இல்லையா?’
‘அட... ஆமாம்... இதைக் கவனிக்கவில்லையே நான். ஒருவேளை Crossfireல் அமெரிக்கர்களின் குண்டு ஓடெல்லைத் தாக்கியிருக்குமோ?’
‘இங்கேப் பார். சைகான் சண்டையில் அமெரிக்கா கைப்பற்றிய அந்த அரசு கட்டிடம்.. அதன் உயரம்... சண்டையிட்ட நேரம் எல்லாம் கிடைக்குமா என்று தேடிப் பார். ஓடெல் சொல்லியிருப்பது போல் பக்கவாட்டிலிருந்து கார் மேலிருந்து எதிரி சுட்டிருந்தால்... உத்தேசமாக பன்னிரெண்டு அடி உயரமிருக்குமா? அவ்வளவு உயரத்திலிருந்து பாய்ந்து வரும் துப்பாக்கி குண்டு அவர் தொண்டையை துளைக்கு பட்சத்தில்... ‘
போர்டில் படம் வரைந்து காட்டினேன்
‘பின்னங்கழுத்தில் இந்தப் பக்கமாக வெளியேறியிருக்க வேண்டும். இல்லையா? ஆனால் நேர்க் கீழாக நுரையீரல் தாண்டி இதயத்துக்கு போக வேண்டும் என்றால் உயரமான கட்டிடம் மேலிருந்து சுட்டிருக்க வேண்டும். ஓடெல் எதிரியைப் பார்த்திருக்கிறார். ஆனால் சுட்டது வேறெங்கிருந்தோ என்று நினைக்கிறேன்.’
கொஞ்சமாக நிதானித்துக் கொண்டு
‘முக்கியமாக பிராஸ் சைகான் சண்டையில் இருந்தாரா... என்பதை விசாரி’
இப்பொழுது ரிக்கி முகம் சட்டென தெளிவடைந்தது. ‘அப்படியானால் பிராஸ்தான் வியட்நாமிலும் ஓடெல்லை சுட்டிருப்பார் என்று நினைக்கிறாயா சீஃப்?’
‘நான் எதுவும் சொல்லவில்லை இன்னமும்’
மனதில் மேகன் சொன்ன ‘சுட்டாச்சு சுட்டாச்சு’ என்ற வாக்கியம் தோன்றியது. ஆமாம். மேகனிடம்தான் முக்கிய ரகசியம் புதைந்து கிடக்கிறது. வேறு வழியில்லை இனி ஆட்டத்தை மாற்றித்தான் ஆட வேண்டும். அதற்கு முன்னால் பாப் ஸ்மித்தை சந்தித்துவிட வேண்டும். பாப் ஒரு தடயவியல் நிபுணர். தினத்தில் பாதி நேரம் ஜிம்மில் பயிற்சி செய்து உடம்பை ’கும்’மென்று வைத்து இருப்பார்.
’ஹேய்... என்னப்பா... ஓடெல் எப்படி இருக்கிறார்? உன்னைப் பற்றித்தான் நேற்று பாரில் பேசிக் கொண்டிருந்தோம். சட்டு புட்டென்று பிராஸ்தான் சுட்டார் என்று அறிக்கை விட்டுவிடு. எப்படியும் லென்னி உன்னை ஷெரிஃப் ஆக விடப்போவதில்லை’ என்று சிரித்துக் கொண்டே சிகரெட் பாக்கெட்டை நீட்டினார்.
கர்சீப்பால் வியர்வையை ஒற்றிக் கொண்டே ‘அது கஷ்டம் பாப். இரண்டு பேர் மேலும் துப்பாக்கி குண்டு காயமிருக்கிறது. ஆனால் ஒரு துப்பாகிதான் சுட்டிருக்கிறது. இன்னொரு குண்டு எங்கே, எந்த இடத்திலிருந்து சுட்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. நான் அந்த சம்பவத்தை மீண்டும் செய்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்’
பாப்பிற்கு கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அனுபவம். ஒரு தலைமுடியைக் கொடுத்தால் முழு ஆளையும் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிடுவார்.
‘செய்துவிடலாம். இரண்டு டம்மிகள் வைத்து முழு சீனையும் செய்து பார்த்துவிடலாம். சம்பவம் நடந்த போது இருந்த அவ்வளவு சாமான்களையும் கொண்டு வந்து விடு. முக்கியமாக இரத்தக் கறை படிந்தவைகள்... உடைகள்... பொருட்கள் எல்லாவற்றையும். அவைதான் நமக்கு முக்கிய ஆதாரங்கள் தருபவை.’ என்றார்
பிறகு அலுவலகத்திலிருந்து மேகனுக்கு ஃபோன் செய்தேன். அவர் குரலைக் கேட்கப்போகிறோம் என்பதே உற்சாகமாய் இருந்தது. போஸ்ட் ஆபிசில் சில வேலை இருப்பதாகவும் முடிந்ததும் மதியம் ஆபிசிற்கே வந்து சந்திப்பதாக கூறினார். ரிக்கியின் ஆச்சர்யப் பார்வையினூடே அலுவலக அறையின் சில அலங்கோலங்களை சரி செய்து வைத்தேன்.
‘சாதாரண சந்திப்பு என்று நினைத்தேன் கிறிஸ்’ என்றவாறே வருகை புரிந்தார் மேகன்.
’மன்னிக்கவும் மேகன். ஓரிரெண்டு விளக்கங்கள் மட்டும்தான். உங்களுக்கு வக்கீல் யாரும் கூட இருக்க வேண்டும் என்றால் சொல்லுங்கள்’ சம்பிரதாயாமகச் சொன்னேன்.
நேரே என் கண்களைப் பார்த்தவாறு சொன்னார். ‘தேவையில்லை கிறிஸ். எனக்கு தெரிந்ததைச் சொல்ல எந்த தயக்கமுமில்லை’
’கிட்டதட்ட முழு விசாரணையும் முடிந்துவிட்டது. மோட்டிவ் பற்றித்தான் சில சந்தேகங்கள் மேகன்’ என்று அந்த புத்தகத்தை எடுத்து மேஜை மீது வைத்தேன். மேகன் முகத்தில் இப்பொழுது உண்மையான அதிர்ச்சி.
0 மறுமொழிகள்:
Post a Comment